ரிஷி மூலம்




அவன் அந்த பார்க்கில் மரத்தடியில் அமர்ந்திருந்தான்.
காலையிலிருந்து, பார்க் பூட்டும் நேரமான இரவு வரை அப்படியே அதே நிலையில் அவனைப் பார்த்த வாச்மேன் அவ்விடம் விட்டு போகும்படி கூறவும் அவன் எழுந்துகொண்டான்.
அவன், கைசெயின்,கழுத்தில் செயின், வாச், எல்லாம் அணிந்திருந்தான். எங்கே போகப்போகிறாய் ? என்று வாச்மேன் முத்து கேட்க அவன் தெரியாது எனக்கூறவே, ஐயோ பாவம் என நினைத்த முத்து,தன் வீட்டிற்கு அழைத்துப்போனார்.
வீட்டில் முத்துவின் மனைவி இரக்கப்பட்டு சோறு போட்டாள். நன்றாக சாப்பிட்டான்.
எதைக்கேட்டாலும் பதிலே பேசாமலிருந்த அவன், மறுநாள் முத்து வேலைக்குப்புறப்பட்டபோது அவர் கூடவே புறப்பட்டு பார்க் வந்தான். அதே இடத்தில் அமர்ந்துகொண்டான். அதே கதை தினமும் தொடர்ந்தது.
முத்து தனக்கென எடுத்துவந்த சாப்பாட்டை அவனுடன்பகிர்ந்துகொள்வார், ஒரு நாள் அங்கு நடமாடிய இரண்டு முரடர்களை அவனுக்கு காட்டி உன் செயின் மற்றது எல்லாம் பத்திரம் என்று முத்து எச்சரித்தார். உடனேயே அவன் அவற்றை எல்லாம் கழற்றி முத்துவிடம் கொடுத்துவிட்டான்.
இப்படியாக, சாமி, முத்துவின் குடும்ப உறுப்பினன் ஆனான். முத்து எப்போதோ ஐயப்பன் மலைக்கு போனபோது கட்டிக்கொண்டு போன ஐய்யப்ப வேஷ்டி சாமிக்குத் தரப்பட்டது. முத்துவோடு சாப்பிட்டான். முத்துவோடு வேலைக்கு வருவது போல வந்து அதே மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான்.
ஓரிருமுறை அங்கு அவனைப்பார்த்த பெண்கள், சாமியார் போலும் என நினைத்து விழுந்து கும்பிட்டார்கள். எதையும் கண்டுகொள்ளாமலிருந்த அவன், ஒரு முறை தன் கால்களைக் கட்டிக்கொண்டு அழுத பெண்ணிற்கு இரங்கி “எல்லாம் நன்றாக நடக்கும் போ” என்று சொல்ல; “பார்க் சாமியார் ” என ஊரில் பேசப்பட்டார். அவன் என்று பேசப்பட்டவர் சாமியார் என மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
தினம் பார்க்கில் நடைப்பயிற்சிக்கு வரும் அடுத்த தெரு தனவந்தர், சாமியிடம் ஏதோ கேட்க சாமியும், தன்னை விட்டால் போதும் என வாய்க்கு வந்ததை சொல்லி வைக்க அதுவே நடந்ததில் அந்த செல்வந்தர் மகிழ்ந்து போனார். அவர் டி.வி யில் ஆன்மீக விஷயங்களைப் பேசுகையில் பார்க் சாமியார் பற்றி குறிப்பிடவே மற்ற டீ.வி சானல்களிலிருந்தும் சாமியை பேட்டி எடுத்துப்போக வந்தனர். சாமி எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
பூர்வத்தில் சாமியாரின் தந்தையாகப்பட்டவர் டிவியில், அவரைப்பார்த்துவிட்டு, அவரைத் தேடி பார்க் வந்துவிட்டார்.
என்ன கூப்பிட்டும் தந்தையுடன் போக மறுத்ததுடன், மறுநாளே சாமி காணாமல் போய்விட்டார்.
பிற்பாடு கேரளாவில் அடர்ந்த காட்டுக்குள் ஒரு நதிக்கரையில் அமர்ந்திருந்த அவரை அங்கிருந்த பழங்குடியினர் ரிஷி என அழைத்தனர் அவர்களுக்கு அந்த ஓடும் நதிமூலமும் தெரியாது. இந்த ரிஷி மூலமும் தெரியாது.
ஆடு மேய்க்கும் சிறுவர்கள் எப்போதாவது தரும்பழங்களை ஏற்றுக்கொள்வார். இங்கு,ரிஷி பேரானந்தத்தில் திளைதுக்கொண்டிருக்க; மக்கள் கூட்டம் அங்கும் கொஞ்சம் கொஞ்சமாக சேரத்தொடங்கியது. அவர்களுக்கு அவர் போதிக்கத்தொடங்கினார்.
ஒருநாள் அவரது போதனை “யாரையும் வெறுக்கக்கூடாது என்பது பற்றியும் எல்லாம் அவன் செயல்” என்பது பற்றியுமான போதனையாக இருந்தது.”சூட்சுமத்தில் எல்லாம் நடந்துவிட்டபிறகே உண்மை உலகில் அதுவே நடைபெறுகிறது. அவரவர் கர்மாவினால்தான் அவரவர் செயல்கள் நடைபெறுகிறது. ஒருவனால் ஒருவன் கொலை செய்யப்படுகிறான் என்றால் கொலையாளியும் கொலை செய்யப்படுபவனும் கர்மாவினால்தான் செயலாற்றுகிறார்கள்…. என்று சொல்லிக்கொண்டிருந்தபோது போலீஸ் அவரை சுற்றி வளைத்து கைது பண்ணி அழைத்துப்போனது.
ம்ம்ம்.அவரது கர்மவினை. அவர் செய்த கொலைக்காக கைது பண்ணப்பட்டார்.