கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 476 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாருதத்தனுக்கு மனதை வலித்தது. பக்குவத்தை காணத் துடித்துக் கொண்டிருக்கும் அவனது ‘கலட்டிக்கா மனம்’ வாணலில் அகப்பட்ட ‘கடுகுப் பொரி’ போல் வேதனை கண்டது. குளிர்ந்த இரவிலும் அவனுக்கு உறக்கம் வருவதாயில்லை. நிம்மதியாய் உறங்கிப் பலநாட்களாகி விட்டன. அந்த நச்சுச் செய்தி காதில் விழுந்ததிலிருந்து சாருதத்தன் நெருப்பில் விழுந்த மீனாகத் துடித்துக் கொண்டிருந்தான்.

குருகுலத்தின் அத்தனை ஜீவன்களும் கவலை மறந்து உறங்குகின்றன. வித்யா பீடத்தில் நெய் நிறைந்த ‘சரவிளக்கு’ அசையாது நின்று எரிகிறது. சாருதத்தனுக்கு உலகமே பொய்யாகத் தோன்றியது. விளறிய சுடராக எரியும் அந்த நெய் விளக்கும், அடர்ந்த தபோவனமும், ஆசிரமமும், குருதேவர் புலகரும் அவர் கற்றுத்தரும் வேதாகமங்களும் பாலுக்குள் மறைந்து கிடக்கும். நெய் போல் வேதாகமத்துள் கலந்து நிறைந்து கிடக்கும் தனித்துவப் பொருளும்பொய்யென்ற இருட்டில் அழிந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

சராசரங்களும், சர்வபரமாத்மாவும், பகலும், இரவும், தென்றலும், மழையும் உண்மையானால், புனிதமே உருவான இந்த ஆச்சிரமத்தில் அந்தப் பாவகாரியம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது. காரியம் தோன்றிவிட்டது. இனிக் காரணத்தைத்தான் கண்டறிய வேண்டும்.

மெல்லிய தென்றற் பெண்ணாள் மேனியெங்கும் தவழ்ந்து ‘ஊடல்’ செய்வதால் சாருதத்தனின் மெய்யெங்கும் செறிந்து, பரந்து வளர்ந்து கிடக்கும் மயிர்க்கற்றைகள் விறைப்போடு தலை நிமிர்ந்து ஆண்மை கொள்கின்றன. அவனுக்குத் தூக்கம் வருவதா யில்லை. பர்ணசாலையில் அந்தப் பேதை சம்புகியும் உறங்கியிருக்க மாட்டாள். பத்தொன்பது குரு குல மாணவர்களில் அந்தப் பாவம் செய்தவனுக்கு தூக்கமா வரும்? குரூர சுபாவமுடைய தஸ்யுக்கன் மட்டுமே செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்தவனும் மற்றவர்களுடன் படுத்துக் கொண்டு உறங்குவதாகப் பாவனை செய்து கொண்டிருப்பான். பேடி ! நியதிக்குக் களங்கம் பூசிய புல்லன். வேதத்திற்கு வாள் வீசிய அறிவிலி. நான் என்னும் ஆணவத்தைத் தொலைப்பதற்காக வந்தவன். அந்த நான் என்னும் ஆணவத்திற்கே அடிமையாகிவிட்டான். புழுவிற்கு கீழானவன், அதமன் ! புனிதமே உருவான புலகரின் வளர்ப்புப் பெண்ணிற்கு களங்கத்தை உண்டாக்கியவனுக்கு நரகத்திலும் கேடு கெட்ட அதலபாதாளம்தான் பிராயாச்சித்தமாகக் கிட்டும் ! ஆனால் அந்த மதியிலி, மூடன் யாராக இருக்குமென்பதுதான் விடியாத இருட்டைப் போல பூடகமாக இருந்தது.

ஜன்ம ஜன்மங்களால் கூட ஈடு செய்யமுடியாத அந்த ஈனச் செயலை குரு நிந்தையை யார் செய்திருக்க முடியும். மலருக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் ‘மணம்’ வீசத்தானே செய்யும். அப்பொழுது ‘குற்றவாளி’ யாரென்பதை அறிந்துகொள்ளலாம். ஆனாலும் சாருதத்தனின் மனம் சாந்தி கொள்ளவில்லை. உண்மையைத் தேடும் ஆவலில் சகமாணவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் நினைவில் நிறுத்தினான்.

அச்வபாலன், அவனாக இருப்பானோ? வருங்காலத்தில் மன்னனாக இருக்க வேண்டியவன், சின்ன முகத்தினன், அவனது பூனைக் கண்களும், சிரிக்கும் போது தெரியும் முயற்பற்களும், கபடமற்ற பாவமும் இம் மாதிரி ஒரு ஈனச் செயல் செய்வதற்கான அறிகுறியாக இல்லை. சொல்வதற்கு, மயக்குவதற்கு, சுவீகரிப்பதற்கான வியாக்கியானங்கள் நிரம்பிய ‘அதர்வ வேதத்தை’ அவன் விரும்பிக் கற்றுவருகிறான். என்பதற்காக அவனிடம் குற்றங் காண விளைவது பேதமை. அடுத்து, ரூடவர்மன் – குலத்தால் உயர்ந்தவன். சந்திரிய குலச் செம்மல். பார்வையில் கொடூரமானவனாக த் தென்பட்டாலும் பசுபோல் சாந்த குணமுடையவன். சீலமிக்கவன், செம்மை உள்ளம் பெற்றவன், தோற்றத்தைக் கொண்டு ஒருவனை மதிப்பிட முடியாது. என்பதற்கு ரூடவர்மன் ஓர் உதாரண புருஷன். அவனும் இந்தப் பாதகத்தை செய்திருக்க முடியாது. ரிஷி கேசன் வருண முனிவரின் ஆசிரமவாசி. அவன் பெண்களை ஏறெடுத்தும் பாராத பண்பினன். அவன் சம்புகியை நேருக்கு நேர் கூட பார்த்ததில்லை என்று கண் கலங்கினான். பிறகு சம்வரணன், சாருதத்தன், யயாதி, கிரீடி, புஷ்பபாலன், அதிதிக்வன், ரசீகன் எல்லோருமே நல்லவர்களும் நம்பத் தகுந்தவர்களும் தாம். அப்படியென்றால் . யார் யார்…? யார்தான் செய்திருக்க முடியும். இந்த நீங்காத பழியால், அழிக்க முடியாத அவமானத்தால் ‘அறிவொளி’ சுடர்விடும் தபோவனம் இருள் பொதிந்த குகைபோல் ஆகிவிட்டது. இயற்கை சம்புகியை ஊமைப் பெண்ணாகப் படைத்திருந்தும் பருவம் அவளை பழிவாங்கிவிட்டடதே!

சம்புகி மட்டும் ஊமைப் பெண்ணாக இல்லாமிலிருந்திருந்தால் எப்படியும் அவளிடமிருந்து உண்மையை அறிந்திருக்கலாம். அவளோ செய்தி அறிந்த நாளிலிருந்து பிடிவாதம் கொண்ட மர்மயோகிபோல எதையும் வெளியிடாமல் உலவுகிறாள். நிர்ப்பந்தமாக ஏதேனும் அறிய முனைந்தால் கண்ணீர் பெருக்கிக் கொண்டு எழுந்து போய் விடுகிறாள். குருதேவர் புலகர் தர்மபுரி கேள்விக்குச் சென்றவர் இன்னும் திரும்பிவிரவுமில்லை. அவர் வந்தால் வெடிக்கப் போகும் எரிமலையை எண்ணியபோது ஆச்சிரமத்தின் கண்காணிப்பாளன் என்ற முறையில் சாருதத்தனின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாகவே ஆயிற்று. புகையும் எண்ணங்களில் முடிவுகாண முடியாத சாருதத்தன் பீடத்தை விட்டெழுந்து வெளியே வந்தான். அர்த்த ஜாமப்பொழுது கழிந்துவிட்டிருக்க வேண்டும். கிழக்கே உயர்ந்த மலைப்பிரதேசத்திலிருந்து பனிக்காற்று வீசியது. தேவதாருவும், விருட்சிணியும், அகிலும், அசோகமும், சந்தனமும் நெடிது வளர்ந்து தலைவிரிகோலமாக கிளைகளையும் பரப்பிக் கொண்டு இருளில் தனித்து நிற்கின்றன. தாழ்வரையில் எங்கோ பூத்திருந்த நீலோற்பலத்தின் மெல்லிய மணம் பனிக்காற்றோடு கலந்து வந்தது.

குருகுலத்தின் ஈசான மூலையின் ‘பலிக்கல்லில்’ வந்து அமர்ந்த சாருதத்தனின் நினைவுகள் தெளிவுறுவதாக இல்லை.

கண்முன்னால் ஆச்சிரமத்து மலர் வனம் இருட்டிலே துாங்கி வழிகிறது. கொன்றையும், மந்தாகினியும், பவளமல்லியும் இரவிலே பூக்கின்றன. இருட்டு பூக்களை மறைத்திருந்தாலும் காற்று அவைகளின் மணத்தை ஏந்தி வருகிறது. காற்றும் வேதனை கொண்ட பிறவிதான். இரவிலே அது துாங்குவதில்லை. பகற்பொழுதுகளில் சம்புகி இங்கேதான் மலர்ச்செடிகளுடன் பூங்கொடிபோல் உலவிவருவாள். கணவரின் பர்ணசாலையில் சகுந்தலையைப் போல அவள் முல்லையையும், பிச்சியையும், தன் உடன் பிறப்புகளாக எண்ணி பேணி வந்தாள். அவைகளுக்கும் வாய் மொழி இல்லை. அவள் பிறவி ஊமை. இயற்கைக்குக் கருணை இதயமிருந்தால் அவளை அழகியாகப் படைத்துவிட்டு பேசமுடியாத ஊமையாகச் செய்திருக்குமா? அந்த மொழி பேசாப் பேதைமீதுதான் யாரோ களங்கம் செய்து விட்டார்கள். வருஷகாலத்துக் காட்டருவி போல சலசலத்துத் திரிந்த சம்புகி, மண்டூங்கள் நிறைந்த காட்டுக் கிணறு போல இருளில் ஆழ்ந்துவிட்டான்.

ஆச்சிரம பாலிகையான கிழவி சாருமதி முதன் முதலில் அந்தச் செய்தியை அவனிடம் சொன்னபோது அவனால் நம்பத்தான் முடியவில்லை.

“சம்புகி கர்ப்பவதியாக இருக்கிறாள். எப்படி நேர்ந்ததென்ற கேட்டால் கண்ணீரைத் தவிர அவளிடம் பதிலில்லை.”

“சாருதத்தன் அயர்ந்து போனான். உண்மையை நேரில் கண்டறிந்தபோதுதான் அந்தப் பாவத்தின் பயங்கரம் தெரிய ஆரம்பித்தது. இனிச் செய்வது என்ன?

சம்புகி ஊமைப்பெண்ணாக இருந்தாலும் ஆச்சிரமத்தின் அத்தனை நியமநிஷ்டைகளையும் அறிந்தவள். குரு புலகருக்கு அவள் இல்லாவிட்டால், எந்தக் கர்மங்களும் சரிவரச் செய்த திருப்தி ஏற்படாது. குருகுலத்தில் எந்த மாணவனும் அவருக்கு இதமான பணியைச் செய்ய முடிவதில்லை. காலையில் எழுந்து சரஸ்வதியில் நீராடிவிட்டுக் குடத்து நீருடன் ஆச்சிரம வேலைகளில் மூழ்கிவிட்டால் பிறகு இரவு, மாணவர்களும் குருசிரேஷ்டரும் துயில் செல்லும் வரையில் சம்புகிக்குப் பணிகள் இருந்து கொண்டேயிருக்கும். குருதேவருக்கு பூசைக்கு ‘அர்க்கியங்கள்’ தயார் செய்வதும், வனத்திலிருந்து சமித்துக்கள் சேகரித்து வருவதும் அந்த ஊமை சம்புகிதான். இப்படி எறும்புபோல அமைதியாக, அடக்கமாக வாழ்ந்தவள். பாவத்தின் சின்னமாவதென்றால்? இத்தனைக்கும் சம்புகி அனாதையாக வந்தவள்.

ஒரு சமயம் புலகர் வேள்வி ஒன்றிற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில் ‘பூரணி’ ஆற்றங்கரையில் பிறந்த மணம் மாறாமல் ஈயும், எறும்பும் மொய்த்துத் தாளாத துடிப்புடன் மண் தரையில் கிடந்த ஒரு பெண் குழந்தையை ஆச்சிரமத்திற்கு எடுத்து வந்தார். பத்தொன்பது ஆண்டுகளுக்கு முந்திய கதை அது ! அன்று சாருதத்தனுக்கு ஏழு வயதின் காலம். ஆசிரமப் பணிமகளாக இருந்த அவன் தாய் கச்வனிதான் சம்புகியையும் வளர்த்தாள். இன்று அவன் தாய் இல்லாவிட்டாலும், உடன் பிறந்த பிறப்புப் போல பாசத்தின் பிணைப்பில் அவனை இழுத்திருந்தாள் சம்புகி. அவள் அவனை விடச் சின்னவளாக இருந்தாலும் பெருமைமிக்கவள். புத்திகூர்மையுடையவள்…

அந்தப் பெருமைமிக்க வாழ்வில் பூவில் புழு அரித்தது போல இப்படியொரு பொல்லாங்கு நேருவதென்றால், சாருதத்தனால் பொறுக்கமுடியவில்லை அந்தப் பேரதிர்ச்சியை…

சாருதத்தன் இரவை மறந்து தவிப்பில் புதைந்தான்.

“பெருமைமிக்க குருகுல மாணவர்களே ! இந்தக் களங்கத்தின் காரண கர்த்தா நம்மிடையேதான் இருக்கின்றான். பர்ணசாலையின் பரந்த வெளியிலே கந்தர்வர்களோ, பரபுருஷர்களோ நுழைவது என்பது அசாத்தியமான காரியம். நமது குருதேவரின் ஆச்சிரம வட்டத்தில் இதுவரை அந்நியர் நுழைந்ததில்லை. ‘தஸ்யுக்கள்’ கூட நமத பசுக்களுக்கோ, நமது ஆசிரம ஜீவிகளுக்கோ தீங்கிழைக்கப்பட்டுப் பலகாத துாரத்திலேயே வசிக்கிறார்கள். அப்படியிருக்க சம்புகிக்கு இந்தக் குற்றத்தைப் புரிந்தவன் நம் கூட்டத்தவனே என்பது என் முடிவான தீர்மானம். நாளை அஸ்தமனப் பொழுதில் தர்ம புரியிலிருந்து திரும்பும் நமது குருமுதல்வருக்கு நாம் என்ன சமாதானத்தைத்தான் சொல்லமுடியுமோ? ஆகவே குற்றவாளியை நாமே கண்டு பிடிப்பதும், அவனுக்கத் தன் குற்றத்திற்கு தண்டனையை காண்பதும் நமது கடமையாகும். குற்ற வாளியை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதற்கும், அவனுக்கு என்ன தண்டனையைத் தரலாம் என்பதற்கும் உங்களது கருத்துக்ககளை, ஆலோசனைகளை அறிய ஆவலுடையவனாக இருக்கிறேன். “வித்யா பீடத்தின் நெய்விளக்கின் முன்னால் சாருதத்தனின் முகம் பலவித உணர்ச்சி பாவங்களின் போர்க்களமாக காட்சியளித்தது. சிறிது நேரம் மாணவர்களிடையே ஆழ்ந்த மௌனம் நிலவியது. மறுகணம் அச்வபாலன் எழுந்து நின்றான்.

“குருபீட முதல்வன் சாருதத்தனுக்கு இருப்பது போன்ற துயரம் நம் அத்தனை பெருக்கும் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். சம்புகி ஆசிரமபாலிகை ஆயினும் நம் குரு தேவரின் வளர்ப்புப் பெண், அன்புக்குப் பாத்திரமானவள். அவளுக்கு ஒரு தீமை வந்ததென்றால் அது நம் குருவுக்கு வந்த தீமை போன்றதல்லவா? குற்றவாளி யாராயினும் முகத்தாட்சண்யமின்றி தக்க தண்டனை அளிக்கவேண்டுமென்பதே என் அபிப்பிராயம்….”

கம்பீரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசி ய அச்வபாலனின் கூற்றை மாணவர்கள் அத்தனை பேரும் ஆமோதித்தனர். அவர்களிடையே நெடிது உயர்ந்தவனும், அகோரமான உருவமுடையவனுமாகிய ரூடவர்மன் அதுவரையில் எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்த காரணத்தினால் எல்லோருக்கும் அவன் பால் ஒரு கண் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரூடவர்மன் எழுந்து நின்றான்.

“நண்பர்களே! நடந்தது நடந்துவிட்டது. குற்றவாளி நம்மிடையே ஒளிந்திருக்கிறான். அத்தனை பேர் முகத்திலும் வேதனை ரேகை படர்ந்திருப்பதால் யார் குற்றவாளி என்பதை அறிய முடியவில்லை. ஆகையால் நாளை இந்த வித்யா பீடத்தில் நாம் அத்தனை பேரும் இருக்க குருதேவர் முன்னிலையில் நமது சம்புகியை அழைத்துவந்து குற்றவாளியைச் சுட்டிக்காட்டச் செய்ய வேண்டும். பிறகு தர்மத்தின் முகத்தில் கரி பூசிய அந்த அதமனுக்கு நமது தபோவன வழக்கப்படி ஆள் உயரத்திற்கு உமிக்குழி இப்பொழுதே தயாராகட்டும்.”

ஒரு கணம் எல்லோரின் முகத்திலும் அசைவற்ற மௌனம் நிலவியது. மறு கணம் எல்லோரும் ஏக காலத்தில் ரூடவர்மன் அபிப்பிராயமே சரி என்று கூக்குரல் எழுப்பினர்.

உமிக்குழி தயார் செய்வதற்காக எல்லோரும் கலைந்து சென்றனர்.

கானகம் விழாக்கோலம் கொண்டிருந்தது. பர்ணசாலையும், குருகுலத்திடலும், மலர்களாலும், தோரணங்களாலும் அலங்காரஞ் செய்யப்பட்டிருந்தன. குரு குல மாணவர்களும் ஆச்சிரமப் பணி மகளிரும் புத்தாடையும், புதுமலரும் புனைந்து யாகம் மீண்டு வரும் குருதேவரை வரவேற்க ஆயத்தமாயினர்.

சரஸ்வதி ஆற்றின் அக்கரைத்திடல் வரையில் தர்மபுரியின் படைநாயகர்கள் புலகரைச் சிவிகையில் வைத்து அழைத்து வந்தனர். பிறகு ஆசிரமத்து மாணவர்கள் தங்கள் குருதேவரை மூங்கில் படகொன்றில் அமர்த்தி பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றனர். சரஸ்வதி அன்று மலர் ஆறாக மணத்துக் கொண்டு ஓடிற்று. தபோவனத்தின் பூமரங்கள் பூமாரி பொழிந்து குருதேவரை வரவேற்றன. மான்கள் மகிழ்ச்சி திளைப்பிலே துள்ளித்திரிந்தன. மயில்கள் தோகை விரித்து சாமரம் வீசின. புறாக்கள் கட்டியம் கூறி வருபவை போல கிந்திக் கிந்தி நடை பயின்றன….

பர்ணசாலை வாசலில் சாருமதியும், மற்றொரு பணி மகளும் முனி சிரேஷ்டருக்கு ஆரத்தி சுற்றி வரவேற்றனர். அங்கே குருதேவர் யாரையோ தேடிக் காணாததால் முகம் குனிந்தார்.

குருகுலத்தின் எல்லைப்புற மூலையில் ஆள் உயரத்திற்கு உமிக்குழி தயாராகியிருந்தது. அச்வபாலன் குழியில் உமியிட்டு நிரப்புவதில் ஈடுபட்டிருந்தான். குரு தேவர் வந்து விட்டார். வேதங்களிலிருந்து மந்திர வாழ்த்துப் பாடல்கள் உரத்த குரலில் பாடப்பட்டன. வித்யாபீட நெய் விளக்குகள் குளித்தெழுந்த பெண்டிரைப் போல புதுப் பொலிவுடன் சுடர் விட்டுப் பிரகாசித்தன. குண்டல மணிகள் ஓம்! ஓம்! என்று முழங்கின. தர்மபுரியில் இருந்து பாதகாணிக்கைகளாக வந்த முத்தும், பவளமும், பட்டும், பொன்னும், தாமிரத்தில் செய்த யாக பாத்திரங்களும், சொர்ணவிளக்குகளும், பீலிக்குஞ்சுகளும், பீடத்தின் முன்வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

மூலவிக்கிரகத்தின் முன் எரியும் விளக்கைத் தூண்டிவிட்டவாறு பாதகுறடுகளை விட்டிறங்கிய குருதேவர் புலகர் வித்யாபீடத்தில் வந்து அமர்ந்தார். அருள் நிறைந்த அந்த ரிஷியின் முகத்தில் கற்றுத் தேர்ந்த அறிவின் துலக்கமும் யாகத்தின் வெற்றிப் பெருமிதமும் அமைதியான புன்னகை ஒன்றை நிறைந்திருந்தது. ஆசிரமவாசிகளும் குருகுல மாணவரும் நிறைந்த வித்யாபீடத்தில் முதன் முதலாகப் பேசினார்.

“குழந்தைகளே! நீண்ட நாட்கள் சேயைப் பிரிந்து தாய் போல் இருந்துவிட்டு உங்களைக் காணும்போது மகிழ்ச்சியால் என் உள்ளம் நிறைகிறது.”

ஆசிரம வாசலில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி, “குரு தேவா” என்று கூறிவிட்டு மிரள, மிரள விழித்தது எங்கோ “குக்கூ” என்று குயில் ஒன்று கூவிற்று.

குருதேவர் மெல்ல அத்திசையைத் திருப்பிப் பார்த்துவிட்டு, புன்சிரிப்புடன் மீண்டும் பேச ஆரம்பித்தார். தர்மபுரியில் தன் வேள்வியின் வெற்றி பற்றியும், அங்கே அரசன் நடத்தும் ஆட்சிபற்றியும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். பிறகு அந்திவேளைக் கடனுக்காகக் கூட்டம் கலைந்தது.

நடு இரவிற்கு மேல் வித்யா பிடத்தில் கூட இருக்கும் நீதி விசாரணை பற்றிப் பேசவும், சம்புகியைப் பற்றிய செய்தியை குருதேவருக்கு உணர்த்தவும் சாருதத்தன் குருவுடன் நிஷ்டை சாலைக்குச் சென்றான்.

இரவு வெகு நேரமாகிவிட்டது. வித்யா பீடத்தில் மாணவர்கள் அத்தனை பேரும் குழுமி அவரவர் இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர். சம்புகியும் அடுத்த அறையில் பணிமகள் சாருமதியுடன் அமர்ந்திருந்து கண்ணீர் விட்டவளாக – மெளனத் துயரில் மூழ்கியிருந்தாள். சந்தடியற்ற இரவு பயங்கரத்தைச் “சூல்” கொண்டிருந்தது. குரு தேவர் இன்னும் வரவில்லை. சாருதத்தன் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்ததிலிருந்தே அவர் மனநிலை கலக்கமடைந்ததை அவன் மாணவர்களுக்கெல்லாம் சொன்னான். இரவில் வித்யா பீடத்தின் நீதிமன்றத்தில் சந்திப்பதாக மட்டும் பதில் சொன்னானேயன்றி, அது பற்றி வேறெதுவுமே அபிப்பிராயம் சொல்லவில்லையாம். துயரம் அத்தனை துாரம் அழுந்தியிருக்க வேண்டும்.

பொழுது கரைந்துகொண்டிருந்ததது. குருதேவர் பர்ணசாலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. ஒரு வேளை துயர அழுத்தத்தில் துாங்கிக்கொண்டிருப்பாரோ? யாரேனும் போய் பார்த்து விட்டு வந்தால் என்னும் கருத்து எல்லோர் முகத்திலும் பிரதிபலித்தது.

சாருதத்தனே எழுந்தான். “நானே போய் குருதேவரை அழைத்து வருகிறேன். ஒரு வேளை நிஷ்டையில் இருக்கிறாரோ என்னமோ?”

போன வேகத்திலே சாருதத்தன் வித்யாபீடத்திற்குத் திரும்பி வந்தான்.

குருதேவர் பர்ணசாலையில் இல்லை.

“எங்கேபோயிருப்பார்?”

அத்தனை பேரின் உள்ளங்களும் கேள்வியின் குறியாக வளைந்தன. குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்திற்கு வருகிறேன் என்றவர் இந்த அகாலப் பொழுதில் எங்கே போயிருப்பார்? எங்கே சென்றாலும் வந்துவிடுவார் என்ற குறிப்பில் அனைவரும் நிழல் பதுமைகள் போல குருதேவருக்காக காத்திருந்தனர்.

எங்கோ புலர் கோழி கூவிற்று. இராப் பறவையொன்று விடிவை எண்ணிப் பயந்தவாறு தெற்கே பறந்து போயிற்று. விடியலின் குளிர் காற்று மிதந்து வந்தது.

இனியென்ன செய்வது. பொழுது விடியப் போகிறது. “மாணவர்கள் எல்லோரும் கலைந்து போய் காலைக் கடன்களுக்கு ஆயத்தமாகுங்கள். நீதி விசாரணையை பின் குருதேவர் விரும்பிய நேரத்தில் வைத்துக்கொள்வோம். சாருதத்தன் கூறியதும் மாணவர்கள் சரஸ்வதி ஆற்றங்கரையை நோக்கி நடந்தனர்.

சற்று நேரத்தில் ஆச்சிரமத்தின் தெற்கு வாயிலிலிருந்து மாணவனொருவன் ஓடோடி வந்தான்.

“எல்லோரும் வாருங்கள், நாம் குவித்திருந்த உமிக் குழியில் யாரோ ஒருவன் தன்னைப் புதைத்துக் கொண்டு மூழ்கியிருக்கிறான். இருட்டில் யாரென்று தெரியவில்லை. “வந்தவன் பயத்தால் நடுங்கிக் கொண்டே கூறினான்.

ஆற்றுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் எல்லோரும் உழிக்குழியை நோக்கி ஓடினர்.

விடிவெள்ளி எழுந்திருந்தது. அந்த மயங்கிய ஒளியிலே புகையும் உமிக்குழியில் தலைமட்டும் தெரியும் உருவத்தை மாணவர்கள் கூர்ந்து பார்த்தபோது…

“ஹா……. நம் குருதேவர் !” எல்லோரது குரலும் வியப்பிலும் வேதனையிலும் வெடித்தது.

சாருதத்தன்தான் தைரியமாக முன் வந்தான். குருதேவர் எப்பொழுதோ தானாக ஸ்தித்துக் கொண்ட தண்டணையால் இவ்வுலகை விட்டு உயிர் நீத்திருந்தார். விடிந்த போது உமிக்குழியிலிருந்த ஓலைச்சுவடியிலே குருதேவர் புலகரின் குரல் பேசிற்று.

“என் அருமந்த சிஷ்யர்களே ! நான் நீங்கள் கண்ட தண்டனையை ஏற்றுக் கொண்டேன். குற்றவாளியே நீதி பதியாக இருக்க விரும்பாததால் இரவிலேயே நான் உமிக் கழியில் இறங்கித் தீயிட்டுக் கொண்டேன். நான் கற்றுத் தந்த நேர்மை உங்களை காப்பாற்றட்டும்.

ஆரையம்பதி தங்கராசா 

ஈழத்தின் மூத்தபடைப்பாளியான ஆரையம்பதி ஆ. தங்கராசாவின் ‘ரிஷிமூலம், சருகு தளிர்த்தது, அவளுக்கு வயது வந்தபோது, இரவு விடிந்தது. ஒரு பசு’ ஆகிய சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கிழக்கிலங்கையின் சமூகத்தின் பல்வேறு உணர்வுகளை ஆரையம்பதி ஆ. தங்கராசா தனது சிறுகதைகளில் காட்டியுள்ளர்

– 20.01.1966, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *