ராஜத்தின் கூந்தல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 223
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நம் உள்ளத்தில் களிப்பு இருந்தால், நாம் பார்க்கும் பொருள்களிலெல்லாம் மகிழ்ச்சி நிறைந் திருப்பதாகத் தோன்றுகிறது; நம் உள்ளம் துக்கமா யிருந்தால், உலகமே விசனக்கடலில் ஆழ்ந்திருப்பது போல் காண்கிறது. ராஜம்மாள் விஷயத்தில், தற் போது இது மிகவும் உண்மையாய் இருந்தது.
தோட்டத்திலிருந்து புஷ்பவாசனையைத் திரட்டிக் கொண்டுவந்த மந்தமாருதம் அவளுக்கு இன்பமளிக்கவில்லை. புத்தகங்கள் வெறும் புலம் பலாய்த் தோன்றின. வீணையை மீட்டிப் பார்த்தாள். அதன் கீதம் அழுகுரலாய் ஒலித்தது.
“ராஜம்மா, ஒருவிதமாய் இருக்கிறாயே இன்று; ஏன் இப்படி?” என்று வினவினாள் சுந்தரம்.
“சுந்தரம் – சுந்தரம்” என்று திக்கித் திக்கிப் பேசிய ராஜம், “இதோ பார்!” என்று அவிழ்ந்து தொங்கிய தன் கூந்தலை எடுத்து விசிறினாள். அவளுடைய சுந்தரக் கண்களினின்றும் ‘பொல பொல என்று கண்ணீர்த் துளிகள் சிந்தின.
ராஜம் ஒரு பிராம்மண விதவைப் பெண். அறிவு வராத காலத்திலேயே அவள் கைம்பெண் ஆகி விட்டாள். செல்வக் குடும்பத்தில் பிறந்த ராஜம் துன்பமறியாமல் வளர்ந்தவள். இப்போது அவளுக்கு வயது வந்து விட்டது. இனிமேல் அவள் தலையில் கூந்தல் கூடாதாம். இந்த அலங்கோலச் செயலுக்கு அவளுடைய அண்ணனும் உடன்பட்டான். அண்ணனின் ஆதரவில் தான் அவள் தற்சமயம் இருந்து வந்தாள்.
“சுந்தரம், இந்தத் தலைமயிர் என்ன பாவத்தைச் செய்தது? ஐயோ! நினைத்தால் நடுங்குகிறதே!” என்றாள் ராஜம்.
அவளுடைய தோழி சுந்தரம் அளவிறந்த வேதனை அடைந்தாள். ராஜத்துக்கு அவள் என்ன ஆறுதல் சொல்லுவாள்? சொல்ல முடியும்? திடீரென்று அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
“ராஜம், உனக்கு இந்த வீடு எதற்கு? இவர்கள் உன் பந்துக்கள் அல்ல; சத்துருக்கள்!” என்று சம்பந்தம் இல்லாமல் என்னவோ ஆத்திரத்துடன் சொன்னாள்.
சுந்தரத்தின் முகத்தை ராஜம் உற்று நோக்கினாள். அவள் வாய் ஒன்றும் பேசவில்லை.
சுந்தரத்தின் கணவன் தாராள சிந்தையும் சீர் திருத்தக் கருத்துக்களும் உள்ளவர். இளம் விதவை களுக்கு மறுமணம் செய்விப்பதில் சாதகமான அபிப் பிராயம் கொண்டவர். இதைப்பற்றித் தன் அருமைத் தோழியிடம் பிரஸ்தாபிக்க வேண்டுமென்று சுந்தரம் பலநாள் எண்ணியதுண்டு. ஆனால், ஒருவிதக் கூச்சத் தால் இதுவரையிலும் சொல்லாமல் இருந்தாள். இப்போது சொல்லலாம் என்று நினைத்தாள்; சொல்லிவிட்டாள்.
கொடுமையும் செருக்கும் கலந்த ஒரு குறுநகை புரிந்தாள் ராஜம். சிறிது சிந்தித்துப் பின்பு நெடு மூச்செறிந்தாள். “மறுமணமா? – சுந்தரம்! – இல்லை, இல்லற சுகம் எனக்கில்லை. – இந்த ஜன்மத்தில் இல்லை – எனக்கு வேண்டாம்” என்று அழுத்தமாய்ச் சொன்னாள். சற்று நின்றாள். மறுபடியும் சொன்னாள்:
“நான் வேண்டுவது அதுவல்ல. என்னை அலங் கோலம் செய்யாமல் விட்டால் போதும். என்புத்தகம், என் வீணை, என் சிறு தொழில்கள் இவை களுடன் என் வாழ்நாள் முழுதும் கன்னிகழியாமலே இருந்து நிம்மதியாய்க் காலங் கழிப்பேன். இதற்கு உன் புருஷனின் உதவி கிடைக்குமா?” என்று கேட்டாள்.
ராஜத்தின் பிடிவாத குணத்தைச் சுந்தரம் நன்கறிந்தவள். தன் கணவர் என்ன செய்வாரென்று திட்டமாய்ச் சொல்லவும் அவளால் முடியவில்லை. பந்துக்களும் உடன் பிறந்த சகோதரனுங்கூடப் பரம ‘சத்துரு’க்கள் ஆகிவிட்ட ராஜத்துக்கு, அவர்களுடைய விரோதத்தின்மேல் சுந்தரத்தின் கணவர் என்ன உதவி செய்ய முடியும்? சட்டந்தான் இடங் கொடுக்குமோ, என்னவோ? இருந்தாலும் பக்கத்து நகரில் இருந்த அவருக்கு எழுதிக் கேட்கலாமென்று இருவரும் கலந்து முடிவு செய்தார்கள்.
சுந்தரம் தன் கணவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதைப் படித்துப் பார்த்து ராஜம் ஒப்பம் வைத்தாள். கடிதத்தைத் தபாலில் அனுப்பாமல் ஆள்மூலம் அனுப்புவதென்று தீர்மானித்தார்கள். ராஜம் அதற்குக் குப்பனைக் குறிப்பிட்டாள்.
“குப்பனா? யாரது? உங்கள் குடியானவன் தானே! அவனை நம்பலாமா?” என்று விசாரித்தாள் சுந்தரம்.
“நன்றாய் நம்பலாம். அவன்தான் என்னைச் சிறு குழந்தை முதல் தூக்கி வளர்த்தவன். அவனுக்கு ஒரு பெண் குழந்தை இருந்து தவறிவிட்டது. மனைவியும் காலமானாள். இன்றைக்கும் நாளைக்கும். என்னிடம் அவனுக்கு அளவற்ற வாஞ்சை. இந்த உலகத்தில் அவனுக்கு யார் இருக்கிறார்கள்? என்னைப் போல் அவனும் ஓர் அகதி” என்று ராஜம் கனிவுடன் சொன்னாள்.
“ஆனால், அவன் குடிகாரனாயிற்றே?” என்று சிறிது வெறுப்புடன் கேட்டாள் சுந்தரம்.
“சில வேளை அவன் குடிக்கிறான் என்பது உண்மைதான். ஆனால், எப்படி அம்மா அவன் அதை விடமுடியும்? மாயாத போதைத் தொலைக்க/ உனக்கும் எனக்கும் படிப்பு உண்டு; பாட்டு உண்டு; அழகிய சித்திர வேலைகள் உண்டு. கள் வெறியைத் தவிர, அவனுக்கு வேறே என்ன உண்டு?” என்று கேட்டாள் ராஜம்.
“ஆமாம்! அதோடு, இப்படிப்பட்ட ஆட்களுக்குக் கள்ளு, சாராயம் இல்லையானால், நாம் இடும் வேலை களை அவர்களால் செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமும் வேண்டு மல்லவா?” என்று சுந்தரம் ஒப்பமிடுவதுபோல் சொன்னாள்.
“நான் அப்படி நினைக்கவில்லை” என்று சுருக்க மாய்ப் பதில் சொன்ன ராஜம், “அவனிடந்தான் இந்தக் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். அவன் குடித்தால் என்ன? அவனுடைய வாத்ஸல்யம் அல்லவா பெரிது?” என்றாள்.
உண்மையிலே குப்பன் ராஜத்திடம் அளவற்ற பிரியம் உடையவன். தன் துக்கத்தை அவனிடம் அவள் தெரிவித்தபோது, அவன் பெரிதும் வருத்தப் பட்டான். ஆனாலும், அது பாப்பாரச் சாத்திர மாயிற்றே என்று அவன் கொஞ்சம் தயங்கினான். ராஜம் பெரிதும் சமாதானம் சொன்ன பின்புதான், அவளுக்கு ஒத்தாசை புரிய அவன் இசைந்தான்.
குப்பன், விடிய நான்கு நாழிகைக்கு எழுந் திருந்து, நகரை நோக்கிப் புறப்பட்டான். நகரம் சுமார் பத்து மைல் தூரத்தில் இருந்தது. நாகரிக மான கப்பி ரஸ்தா கிடையாது: மண்சாலைதான்.
மெல்ல மெல்ல நடந்து சென்றான். ஏழாவது மைலில் ஒரு சிறு தோப்பு; அதற்குள்ளே ஒரு குடிசை.
அவன் வாலிபமாக இருக்கையில், அந்தத் தோப்பைக் கண்டாலே அவனுக்கு ஒரு வெறுப்பு வந்துவிடும். அதே தோப்பு இப்போது அவனுக்குத் தேவலோகத்தைக் கண்டதுபோல் ஆனந்தம் தந்தது. ஏன்? அந்தக் குடிசை ஒரு கள்ளுக்கடை. பாவம்! அவன் அதற்கு இப்போது அடிமையாகிவிட்டான். வழிச் செலவுக்குக் கொண்டுவந்த காசில் ஒரு பகுதி அங்கே தீர்ந்தது. குடிசையிலிருந்து திரும்பியபோது, அவன் கால் தள்ளாடியது. ரஸ்தாவுக்கு வந்து சேர்ந்து ஒரு மரத்தடியில் தொப்பென்று விழுந்தான். அமிதமாகக் குடித்ததால் ஏற்பட்ட மயக்கம் அது.
மயக்கம் நன்றாய்த் தெளியவில்லை. தள்ளாடித் தள்ளாடிக் கொண்டு எழுந்தான். எதிரே ஒரு வண்டி வருவதைக் கண்டான். அதிலிருந்த ஆளை மட்டும் அவனுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது.
அந்த ஆள் ராஜத்தின் சகோதரனே. குடிமயக்கத்தில் நிதானமில்லாத குப்பனுக்கு ஒரு வெறி உண்டா யிற்று. வண்டியின் எதிரே போய் நின்றுகொண்டு, “இது யார் வண்டியடா? இதோ வந்திருக்கிறேனடா காட்டு ராஜா. என் ராஜத்தை மொட்டையடிக்க உன்னால் ஆகுமாடா? இதோ பார்டா?” என்று கனைத்து, வண்டியின் மூக்கணையைப் பிடித்துப் பல மாக அசைத்தான். இதனால் மருண்டமாடு ஒன்று அவனை முட்டித் தள்ளிவிட்டது.
குப்பனின் பிதற்றல் ராமுவுக்குப் பரிதாபமா யிருந்தது. மாடு முட்டியதால் கீழே விழுந்து போதையினால் பிதற்றிக் கொண்டு புரண்ட குப்பனை அவன் உற்றுப் பார்த்தான். அவன் மடியிலிருந்து ஒரு கடிதம் தரையில் விழுந்திருக்கக் கண்டான். அதை எடுத்துப் பிரித்துப் படித்தான். அவன் முகம் கறுத்தது. சாதிக் கட்டுப்பாடு, சமூக பகிஷ்காரம், ஊர்வம்புப் பேச்சு, அவமானம் முதலியவை அவன் மனக்கண்முன் தோன்றின. குப்பனைச் சாலையின் ஒரு புறமாய்ப் புரட்டித் தள்ளிவிட்டு வண்டியிலேறி விரைவாக ஓட்டச் சொன்னான்.
அதற்கும் ஒரு நாள் – ஒரு கன்னியின் தலைமயிரை எடுக்கவும் ஒரு நாள் -பார்த்திருந்தார்கள். பொழுது விடியவில்லை. ராஜம் ‘சிறை’ இருந்த அறையில் ராமு போய்ப் பார்த்தான். அவளுடைய அழகான வீணை மென்னி முறிந்து கிடந்தது; புத்தகங்கள் சாம்பராகி இருந்தன; மணிகளும் பட்டு நூலும் சிதறிக் கிடந்தன; சில அரும்புகளையும் மலர் களையும் அங்கும் இங்கும் கசக்கி எறிந்திருந்தது.. ராஜத்தை மட்டில் அங்கே காணவில்லை. ராமு இரைந்தான்; கூக்குரல் போட்டான். ஆனால், பலன் ஒன்றுமில்லை அங்குமிங்கும் ஓடினான். வீடு முழு வதும் பரபரப்பு. தோட்டத்தில் ஒரு மரத்தடியில் ராஜத்தின் அழகிய மேனி கிடந்தது. அவள் அருகே ஓர் ஆள் நின்றான். ஈனஸ்வரத்தில், “குப்பா! குடி வெறியிலே நீ எனக்குச் செய்த உபகாரத்தை நான் தேவலோகத்திலும் மறக்கமாட்டேன்” என்றாள் ‘கன்னி கழியாத’ ராஜம்.
குப்பன் முகத்தில் அறைந்துகொண்டு. “ஐயோ! ராஜம். உன் முகத்தையும் இழந்துவிட்டேனே – ஐயோ!” என்று கதறினான்.
“ராஜத்துக்கு விஷக் கிழங்கு கொண்டுவந்து கொடுத்த குற்றத்துக்காகக் குப்பன் இப்போது கடுஞ் சிறைவாசம் புரிந்துகொண் டிருக்கிறான். அது எவ்வளவு உண்மையோ, நமக்குத் தெரியாது. ஆனால் ராஜத்தின் தற்கொலைக்குத் தானே காரணம் என்று குப்பன் ஒப்புக்கொள்கிறான்.
‘பாழுங் கள்ளைக் குடித்தேன் அல்லவா பாவி!’ என்று அடிக்கடி புலம்புகிறான். இனிப் புலம்பி என்ன பயன்? நடந்தது நடந்து விட்டது.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.