ரசனை – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,098
சங்கீத உலகின் மஹாராணி என்றழைக்கப்படும் காயத்ரி பத்மநாபன் தான் இருக்கும் அபார்ட்மெண்ட்டிற்கே குடிவந்தது ஆனந்துக்கு. பேரானந்தத்தைத் தந்தது.
முறையாக சங்கீதம் கற்கா விடினும், அவ்வப்போது ஆர்கெஸ்ட்ராவில் பாடுவான் ஆனந்த். தன்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்தி பேசி
வந்ததை தனது மனைவி வித்யாவிடம் பெருமை பேசிக்கொண்டே இருந்தான்.
“சரிங்க… எனக்கு தூக்கம் வருது! நாளைக்கு பேசிக்கலாம்!’ என்ற வித்யாவிடம்… “ஜடம்…ஜடம்…. ஒரு ரசனை இருக்கா உனக்கு? சங்கீதத்தைப்
பற்றி என்ன தெரியும் உனக்கு…!?’ என கோபமாய் எரிந்து விழுந்தான் ஆனந்த்.
ஒருநாள் காலை! காலிங்பெல் ஒலிக்க… கதவின் லென்ஸ் வழியாகப் பார்த்த ஆனத்துக்கு இன்ப அதிர்ச்சி!
“யேய்… வித்யா, காயத்ரி மேடம் என்னைப் பார்க்க வந்திருக்காங்க! அவங்க முன்னாடி உன் திருவாயைத் திறந்து ஏதாவது உளறி வைக்காதே!’ – என்ற ஆனந்த், பரபரப்பாய் கதவைத் திறந்து வரவேற்றான்.
உள்ளே வந்த காயத்ரி பத்மநாபன்…
“தினமும் அருமையான கோலமா போடரயேம்மா! எல்லோருக்கும் இந்தக் கலை வந்திடாது! கோலத்தைப் பார்த்திட்டே இருக்கலாம் போல இருக்கு! என் வீட்டுக்கு ஒருநாள் வாம்மா!’ என வித்யாவைப் பாராட்டிச் சொல்ல…
ரசனை இழந்த ஆனந்தின் முகம் அவனுக்கே அலங்கோலமாய்த் தெரிந்தது.
– கோவை. நா.கி.பிரசாத் (நவம்பர் 2012)