ரகு என்ன செய்து விட்டான்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 164 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரகுவுக்கு பதினெட்டு வயசு. அவன் அப்பா போன மாசம்தான் அவனுக்கு ரேஸர் வாங்கிக் கொடுத்திருந்தார். அவருக்கு மத்திய சர்க்கார் காரியாலயத்தில் உத்தியோகம். கார் வைத்திருந்தார்.

ரமாவுக்கு பதினாறு வயசு. தாவணிபோட ஆரம்பித்து இரண்டு, மூன்று வருஷங்களாகி விட்டன. அவள் அப்பாவுக்கும் மத்திய சர்க்கார் காரியாலயத்தில் உத்தியோகம். பெண்ணைப் பெற்றுவிட்ட காரணத்தினால், கார் வைத்துக் கொள்ளவில்லை.

ரகுவின் அப்பாவும் ரமாவின் அப்பாவும் சைக்கிளின் முன்னால் ‘டிபன் காரியரை’ தொங்க விட்டுக்கொண்டு காரியாலயம் சென்றது முதல் சினேகம். ரகுவின் அப்பா கார் வாங்கிவிட்ட பிறகும்கூட இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையோடு இருந்து வந்தன. ரகுவின் அம்மா எவ்வளவு பண்புடையவள் என்று இதிலிருந்து அறியலாம்.

ரகுவும், ரமாவும் சிறு வயதிலிருந்தே சண்டைபோட்டுக் கொள்ள போட்டுக்கொள்ள, இருவருடைய பெற்றோர்களுக்கும் சந்தோஷம். இரண்டு வயசுதான் வித்தியாசம் என்று இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டார் ரகுவின் அப்பா.

ரகு ‘ரேஸர்’ உபயோகிக்க ஆரம்பித்ததிலிருந்து தன்னிடம் அதிகம் பேசுவதில்லையென்று ரமாவுக்குப்பட்டது. கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு தலைமயிரை அவன் இப்படியும் அப்படியும் சுருட்டிவிட்டுக்கொள்வது அவளுக்கு வேடிக்கையாக இருக்கும். ரமாஉள்ளே வந்தால் அவன் நிறுத்திவிடுவான். ஒரு சமயம் அவன் எரிந்துகூட விழுந்தான்; ‘உள்ளே வந்தால் சொல்லி விட்டு வந்தால் என்ன?’ ரகுவின் அம்மா அவனை கோபித்துக் கொண்டாள். ‘என்னடா,அவள் அன்னிய மனுஷியா சொல்லிண்டு வர?’ ரமாவுக்கு ரகுவின் போக்கு புரியவில்லை.

ஆல் இந்தியா ரேடியோ ஏற்பாடு செய்திருந்த ஒரு நாட்டிய – நாடகத்துக்கு ரகுவின் அப்பாவுக்கு ‘பாஸ்’ வந்தது. அவர் ராஞ்சிக்கு உத்தியோக விஷயமாகப் போக வேண்டியிருப்பதால், ரகுவை எல்லாரையும் அழைத்துப் போகும்படிச் சொன்னார். ரகுவுக்கு இஷ்டமில்லை. அவனுக்கு நாட்டியமென்றாலே பிடிக்காது.

நாட்டியத்தை ரஸிப்பதாகச் சொல்பவர்கள் யாவரும் ஜம்பத்துக்காகச் சொல்கின்றார்கள் என்பது அவன் அபிப்பிராயம். முதலில் முடியாது என்று சொன்னான். ஆனால் ரமாவின் அப்பாவுக்கு கார் ஓட்டத் தெரியாது. தர்மசங்கடமான நிலைமை என்று சொல்லிக்கொண்டே ஒப்புக்கொண்டான்.

இரவு 9-30 மணிக்கு நாடகம். திடீரென்று ரகுவின் அம்மாவுக்கு தலைவலி வந்தது. தான் வரவில்லையென்று சொல்லிவிட்டாள். மாமிக்குத் துணையாக தான் இருப்பதாக ரமா கூறினாள். ஆனால் ரகுவின் அம்மா அவளை போகும்படி வற்புறுத்தினாள். தான் இருந்துவிடுவதாக ரமாவின் அம்மா கூறினாள். இந்த மனசாட்சிப் பிரச்னைகள் ஒரு வழியாகத் தீர்ந்த பிறகு ரமாவின் குடும்பத்தைக் காரில் அழைத்துக் கொண்டு ரகு புறப்பட்டான்.

கார் கதவை படீரென்று சாத்தினாள் ரமா.

“கதவு இரும்பால் செஞ்சதல்ல …” என்றான் ரகு.

“பின்னே எதுதான் இரும்பாலே செஞ்சிருக்கு'” என்று கேட்டாள் ரமா. ரகுவின் அலட்சிய போக்கைக் கண்டு அவளுக்கு அசாத்திய கோபம்.

ரகு பதில் சொல்லவில்லை. ரமாவின் பெற்றோர் அவளுக்கு மிகவும் ‘இடம்’ கொடுத்து வருகிறார்களென்று அவன் அபிப்பிராயம்.

கல்கத்தாவிலிருந்து வந்த ஒரு குழுவினரின் நாட்டிய நாடகம். உடைகளும், ஜோடனைகளும் கண்ணுக்குக் குளர்ச்சியாக இருந்தன. ரகுவின் மனசு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியால் நிறைந்தது.பாஷை புரியாத காரணத்தால், காதால் இல்லாவிட்டாலும், கண்ணால் ரஸிக்கலாம் என்று அவனுக்குப்பட்டது.

“ஸ்டேஜ் டொகொரேஷன் ஜோராயிருக்கு” என்றாள் ரமா.

“டெகோர்” என்று அவளை எரிச்சலுடன் திருத்தினான் ரகு. இந்த மாதிரிச் சின்ன விஷயங்களில்கூட அவனுக்குக் கோபம் வந்துவிடும். சரியாகத் தெரியாவிட்டால் என்ன பாவனை வேண்டிக் கிடக்கிறது என்பது அவன் வாதம்.

“டெகொரேஷன்” என்று வீம்புடன் மறுபடியும் சொன்னாள் ரமா.

இப்பொழுது அவளைத் திருத்த அவன் விரும்பவில்லை. தன்னுடைய அலட்சியமே அவளுக்கு பாடம் கற்பிக்கட்டுமென்று நிறுத்திவிட்டான்.

ரகு பின்னால் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நண்பன் கேசவன் வந்திருந்தான், அந்தப் பெண் உஷாவுடன். உஷா கேசவனுக்கு ‘தத்துபித்தென்று’ இரண்டு மூன்று கடிதங்கள் எழுதினாள். அவற்றை ‘கெமிஸ்டிரி’ புத்தகத்தில் ஒளித்து வைத்துக்கொண்டு, ரகுவுக்கு வகுப்பில் படித்துக் காண்பித்தான் கேசவன். கேசவனுக்கு அலை அலையாக சுருட்டை மயிர். அந்த மயிரைப் பற்றியும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள் அந்த அசட்டுப் பெண் உஷா.

“கேசவன் பக்கத்திலே யாரு அந்தப் பொண்ணு?” என்று கேட்டாள் ரமா.

ரகு பதில் சொல்லவில்லை. தான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை ரமா கவனித்துவிட்டாள் என்பது அவனுக்குச் சிறிது ஆத்திரத்தைத் தந்தது. தான் அப்படிப் பார்த்தது அவளுக்குக் கண்ணியமாகப் படவில்லை; அதனால் தான் இந்த ஆத்திரம்.

“யாராயிருந்தால் என்ன, உனக்கேன் இந்த விவகாரம்?” என்றான் ரகு.

“விவகாரமா?” என்று கேட்டுவிட்டு சிரித்தாள் ரமா.

ரகு அவளை கோபத்துடன் பார்த்தான். அவள் அப்பாவித் தனமான பார்வையுடன் நாடகத்தில் லயித்திருந்தாள். அவள் மிகவும் அழுத்தமானவள் என்று அவன் அம்மா அடிக்கடி கூறுவாள். அது வாஸ்தவம்தான். சொல்வதையும் சொல்லிவிட்டு என்ன பாவனை!

கேசவனையும் உஷாவைப் பற்றியும் அவனால் மறுபடியும் நினைக்காமலிருக்க முடியவில்லை. காலேஜ் ‘காரிடாரி’ல் கேசவனைச் சுற்றி வளைந்து வளைந்து அவள் வருவாள். ‘வெட்கங்கெட்டவள்’ என்று ரகு வாய்விட்டு முணுமுணுத்தான்.

ரமா அவனை திரும்பிப் பார்த்தாள். தான் சொன்னது அவள் காதுகளில் விழுந்திருக்குமோ?

ரமா புன்னகை செய்தாள். ரமா நல்ல அழகு என்று ரகுவுக்குப் பட்டது.உஷாவுக்கு வேஷம்தான் … ‘பெண் கால், அலங்காரம் முக்கால்’ என்று அவன் அம்மா யாரையோ பற்றி ஒரு தடவை சொன்னாள். உஷாவைப் பொறுத்த வரையில் அது உண்மைதான்.

நாற்காலி கைப்பிடியின் மேல் அவன் கையை ஊன்றிய போது ஏற்கெனவே அவ்விடத்தில் ஒரு கை இருப்பதை உணர்ந்தான். மிகவும் மிருதுவான, புஷ்பம் போன்ற கை. ரமாவின் கைக்கு

இவ்வளவு மிருதுத் தன்மை இருக்கும் என்று அவன் இதுவரை எண்ணியதில்லை. ரமா தன் கையை இழுத்துக் கொள்ளவில்லை.

நாடகத்தில் ஏதோ கனவுக்காட்சி ரமாவின் கவனம் அதிலிருந்தது. கையை கூப்பிக் கொண்டு ஒரு பெண் கீழே குனிந்தவாறிருந்தாள். அவள் கண்கள் மூடியிருந்தன. அவள் முகத்துக்கு மட்டும் காட்டப்பட்ட சிவப்பு ஒளி வெள்ளம், அந்தச் சூழ்நிலைக்கு இன்னும் அழகு கூட்டிற்று.

ரமாவின் கையின் மீதிருந்த அவன் கை தானாகவே இன்னும் அழுந்திற்று. அப்பொழுதும் ரமா தன் கையை இழுத்துக் கொள்ளவில்லை.

ரகு விரல்களோடு சேர்த்து அவள் கையைப் பிடித்துக் கொண்டான். இதைச் செய்ய துணிவதற்கு முன்னால் அவன் சற்றுத் தயங்கினான். ஆனால், ஒரு வேகத்தில் செய்து விட்டான். ஆனால் அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ரமா இதை உணராமலிருக்க முடியாது. ஆனால் அப்பொழுதும் அவள் தன் கையை இழுத்துக் கொள்ளவில்லை.

உலகம் சுவாரஸ்யம் நிறைந்ததாகத் தோன்றிற்று ரகுவுக்கு. அவன் திரும்பிப் பார்த்தான். கேசவன் பக்கத்தில் மிக நெருக்கமாக உட்கார்ந்திருந்தாள் உஷா. ‘வெட்கங்கெட்ட பெண்’ என்று அவசரப்பட்டு முணுமுணுத்திருக்க வேண்டாம் என்று பட்டது அவனுக்கு. திடீரென்று தனக்கும் கேசவனுக்குமிடையே ஒரு அத்யந்தமான பந்தம் உருவாகிவிட்டதென்று அவன் உணர்ந்தான். அடுத்தநாள் கேசவனைப் பார்த்து ஏதேதோ சொல்ல வேண்டுமென்று அவன் நினைத்தான். அவனை அறியாமலே அவன் முகம் சிவந்தது.

நாடகம் முடிந்து திரும்பும்போது ரமாவின் அப்பாவும் அம்மாவும் அதைப்பற்றி வாதித்துக்கொண்டு வந்தனர். ரகுவும் பேசவில்லை. ரமாவும் பேசவில்லை. ஆனால் இருவருடைய மௌனமும் அவர்களிருவருக்கு மட்டும் புரியக்கூடிய பாஷையாகவிருந்தது.

“நாடகம் எப்படி இருந்தது?” என்று ரகுவைக் கேட்டாள் அவன் அம்மா.

‘ஒரு கனவு காட்சி வந்தது. ரொம்ப நன்னாயிருந்தது’ என்றான் ரகு. அவன் மனத்துக்குள் சிரித்துக்கொண்டான்.

ரகுவுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. நாடகத்தில் அந்தப் பெண் கைகளைக் கூப்பிக்கொண்டு நிற்கிறாள். மலர்மாரி. இந்தக் காட்சியைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டான். ரமா தூங்கியிருப்பாளோ? பெண்களுக்கு அவ்வளவாகக் கற்பனை கிடையாது என்பது அவன் கருத்து. வீதியில் சௌக்கிதார் ‘டொக்’ ‘டொக்’ என்று கழியினால் சப்தம் செய்துகொண்டு போனான். எத்தனை நேரம் விழித்திருப்பது என்று தீர்மானம் செய்து திரும்பிப் படுத்தான். அப்பொழுது அவன் சித்தி போன வருஷம் சென்னையிலிருந்தபோது சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘எனக்குத் தூக்கம் வரல்லேன்னா உங்காத்துப் பசங்க பேரெல்லாம் ஞாபகப்படுத்திப் பார்ப்பேன் … தூக்கம் தானாக வந்திடும்’ அவன் சித்திக்கு பதினொன்று குழந்தைகள்.

அவனுக்கு கண்விழிப்பு ஏற்பட்டபோது இன்னும் புலர வில்லை. எழுந்திருந்து மணியைப் பார்த்தான். மணி 5-30.

குளியலறைக்குச் சென்று முகத்தை கழுவிக்கொண்டு திரும்பினான். ரமாவும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். “என்ன, பால் வாங்கவா?” “ஆமாம்…”

“நானும் வரட்டுமா?”

ரமாவும் இரவு சரியாகத் தூங்கியிருக்க மாட்டாள் என்று அவனுக்குத் தோன்றிற்று. தான் கதவைத் திறந்து கொண்டு வந்த சப்தம் கேட்டுத்தான் அவளும் வந்திருக்கிறாள்.

பால்புட்டிகளையும், கூப்பன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ரகு. ரமாவும் அவனைப் பின்தொடர்ந்தாள். ரமா தினந்தோறும் வருவதில்லை. அவள் அப்பாதான் வருவார். சில சமயங்களில் அவர் தூங்கிக்கொண்டிருந்தாரானால் ரமா வருவாள். ஆனால் அதற்கும் அவள் அம்மா அவளை எழுப்பி வற்புறுத்தி அனுப்பவேண்டும். இப்பொழுது ரமாவாகவே புறப்பட்டு வருகின்றாள் என்று ரகுவுக்குத் தோன்றிற்று.

அவர்கள் குடியிருந்த இரண்டு பகுதிகளுக்கும் உள்ளே செல்ல ஒரே பொதுக்கதவு. பால் வாங்கச் செல்லும் போகும்போது வெளியே தாளிட்டுக்கொண்டு செல்வது வழக்கம். தூங்குகின்றவர்களை எழுப்ப வேண்டாமல்லவா? ரமா கதவை வெளிப்பக்கமாகத் தாளிட்டாள்.

மாடிப்படி விளக்கைப் போடாமலே ரகு கீழே இறங்கினான். ரமாவும் போடவில்லை. இரண்டு படிகள் இறங்கியதும் ரகு திரும்பிப் பார்த்தான். ரமாவும் அவனை நோக்கினாள்.

ரமா அவன் மூக்குவரை வளர்ந்துவிட்டாள் என்பதை அறிந்ததும் ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் வளர்ந்துகொண்டே போவாளோ?

”கார் கதவு இரும்பாலே செஞ்சதில்லேன்னியே, எது இரும்பாலே செஞ்சுருக்குன்னு தெரிஞ்சுடுத்து” என்றாள் ரமா. “எது ?”

“உன் கை” என்றாள் ரமா. ரகு விலகி நின்றான். அவன் கீழே வைத்திருந்த பால் புட்டிகளை மறுபடியும் எடுத்துக் கொண்டான். ஒன்றும் பேசவில்லை.

வெளியே ஒரே பனிமூட்டம். ரமா அவனருகில் வந்து ஒட்டிக்கொண்டாள்.

டிப்போவில் இன்னும் பால் வரவில்லை. “பால் வண்டிக்கு உடம்பு சரியில்லை” என்று சொல்லிவிட்டு தம் ஹாஸ்யத்தைத் தாமே அநுபவித்தவாறு ஒருவர் சிரித்தார். ரகுவும் உபசாரத்துக்காக சிரித்தான்.

“இப்படி காலாறப் போவோமா?” என்று கேட்டான் ரகு.

“ஹும் …”

பக்கத்தில் மௌனமாக வரும் பெண்ணுடன் எவ்வளவு தடவை சண்டை போட்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தான் ரகு. அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

“ஏதாவது பேசேன்…” என்றான் ரகு.

“எனக்கு பயமா இருக்கு….” என்றாள்.

திடீரென்று ரகுவையும் பயம்பற்றிக் கொண்டது. தவறு செய்துவிட்டோமோவென்று ஒருகணம் நினைத்தான். அவளுக்கு ஆதரவாக இருக்கட்டுமென்று அவள் கையைப் பற்றினான். அவள் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்.

“ஏன்” என்று கேட்டான் ரகு.

“ரகு அம்மாவுக்குத் …தெரிஞ்சா?” அவள் குரல் அடைத்துக்கொண்டது.

“ஒண்ணும் குடிமுழுகிப் போயிடவில்லையே?”

உண்மையாகப் பார்க்கப்போனால் அவனுக்கும் பல சந்தேகங்கள். கேசவனைக் கேட்கவேண்டுமென்று நினைத்தான். கேசவனுக்கு அநுபவம் ஜாஸ்தி. ஆனால் தனக்கும் எல்லாம் தெரியுமென்று அவனிடம் காட்டிக்கொள்ள வேண்டுமென்பது அவன் விருப்பம்.

கேசவனை ஏதாவது கேட்டால் அவன் சும்மாவிடமாட்டான். அவன் முரடன். முரட்டுத் தனமான ஹாஸ்யம்தான் அவனுக்குப் பிடிக்கும். ஒன்றுமில்லாததை பெரிசுபண்ணி எதற்காக அசட்டு பட்டத்தைச் சுமக்கவேண்டும்?

ஆனால் ரமா பயப்படுகிறாளே!

“திரும்பிப் போகலாமா?” என்று கேட்டான் ரகு.

“ஹும்”


அவர்கள் பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது ‘பால்கனியில்’ ரமாவின் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். இருவரையும் ஒரு விநாடி ஏறிட்டு நோக்கினார். பிறகு ‘பேப்பரில்’ மூழ்கிவிட்டார்.

அவருக்கு எல்லாம் தெரிந்திருக்குமோ? சாதாரணமாகப் பேசுவாரே …! ரகுவுக்கு தான் புன்னகை செய்திருக்கலாமென்று தோன்றிற்று! தான் புன்னகை செய்யாமலிருந்தது அவருக்கு விசித்திரமாகப் பட்டிருக்கலாம்.

‘ஏண்டா ரகு இவ்வளவு நேரம்?’ என்று கேட்டாள் ரகுவின் அம்மா. அவள் குரலில் சந்தேகம் நிழலிட்டுக் கொண்டிருப்பது போல் ரகுவுக்குப் பட்டது.

அவன் பதில் சொல்லவில்லை. படிப்பதற்காகப் பேப்பரை எடுத்தான்.

அம்மா உள்ளே போனாள்.

அவன் மனம் பேப்பரில் லயிக்கவில்லை. பக்கங்களைப் புரட்டிவிட்டு விட்டெறிந்தான்.

“படிச்சாச்சுன்னா அவ்வளவு அலட்சியமா? மடிச்சுவையேண்டா …” என்றாள் அம்மா. அவனெதிரே அவள் காப்பியை வைத்தாள்.

காப்பியை சாப்பிட்ட பிறகு பீரோகண்ணாடியெதிரே நின்று தன் முகத்தை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. நேற்றைக்கு இருந்தமுகம் இன்றில்லை போல் அவனுக்குத் தோன்றிற்று.

அவன் குளியலறைக்குச் சென்று வெந்நீர் கொண்டு வந்தான். பீரோவைத் திறந்து ‘ரேஸரை’ எடுத்தான். கேசவன் அப்பாவிடம் ‘எலக்ட்ரிக் ரேஸர்’ இருக்கிறது. அவர் ஜெர்மனியிலிருந்து வாங்கிக்கொண்டு வந்தார். உஷாவைத் தவிர, கேசவன் பேசும் மற்றொரு விஷயம், அவன் ‘எலக்ட்ரிக் ரேஸரை’ உபயோகப் படுத்துவது.

“என்னடா இவ்வளவு சீக்கிரம்?” என்று கேட்டாள் அம்மா.

“சும்மாத்தான்…”

அவன் தன் கன்னத்தைத் தடவிப்பார்த்துக் கொண்டான். ரேஸர் வழவழப்பைக் கொடுக்குமே தவிர, நேற்றைய முகத்தைத் திருப்பித் தராது.

“என்ன ‘ஷேவ்’ பண்ணிக்கிறயா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேஷாத்திரி. அவன் இப்படித்தான் ஏதாவது அசட்டுத் தனமாகக் கேட்டுக்கொண்டு வருவது வழக்கம். அவன் பெரிய ‘போர்’ என்பது ரகுவின் அபிப்பிராயம் ஆனால் படிப்பில் கெட்டிக்காரன். கேசவன் போன்ற மாணவர்களைக் கண்டால் நெருப்பிடமிருந்து விலகுவதுபோல் ஓடிவிடுவான். ரகுவிடம் அவன் ஒரு தடவை சொன்னான்: ‘கேசவனோடு சேராதேடா அவன் இம்மாரல்’ ‘இம்மாரல் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டான் ரகு. ‘பொம்மனாட்டிப் பசங்களோட பேசறது’ என்று தயக்கமின்றி விடையளித்தான் சேஷாத்திரி.

“ஏண்டா இவ்வளவு சீக்கிரம்..?” என்று கேட்டான் சேஷாத்திரி.

தான் ‘ஷேவ்’ செய்து கொள்வதில் சேஷாத்திரிக்குக் கொஞ்சம் பொறாமை கூட இருக்கலாமென்று பட்டது ரகுவுக்கு. ஆண்மை அவன் முகத்தை இன்னும் அண்டவில்லை. பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த படியில் இருக்கிறவர்களுக்கு மயிர் வளரவே வளராது என்று சேஷாத்திரி அதற்குச் சமாதானம் கூறுவான். ‘பாவம், சின்னப் பையன்’ என்று தன் மனத்துக்குள் கூறிக்கொண்டான் ரகு.

சேஷாத்திரியின் வருகை ரகுவுக்கு ஆறுதலாக இருந்தது. அவன் மனசை ஏதோ உறுத்திக் கொண்டிருந்தபோது, பாடத்தைத் தவிர உலகத்தில் வேறு விஷயங்களும் இருக்கின்றன என்று அறியாத சேஷாத்திரியின் பேதைமையில் அவன் இளைப்பாற விரும்பினான். ‘அல்ஜீப்ராலே கொஞ்சம் சந்தேகம். சொல்லித்தரயா’ என்று கேட்டான் ரகு.

சேஷாத்திரிக்கு ஒரே ஆச்சரியம். பாடத்தைப் பற்றிப் பேசினால் ரகுவுக்கு எப்பொழுதும் கோபம் வரும். இப்பொழுது அவனாகவே பாடத்தில் சந்தேகம் கேட்கிறான்!

“கொண்டா” என்றான் சேஷாத்திரி.

சேஷாத்திரி என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான். ரகுவின் மனம் ‘அல்ஜீப்ரா’வில் இல்லை. சேஷாத்திரியும் ரகுவுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதாகத் தோன்றவில்லை. அழகை உபாசிக்கும் ஒரு ரஸிகனைப்போல் அவன் உணர்ச்சி வயப்பட்டுப் பேசிக் கொண்டே போனான்.

“சரி புரிந்தது போறும்” என்றான் ரகு. கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்னால் கேசவனைப் பார்க்க வேண்டுமென்பது அவன் எண்ணம்.

ரகுவுக்கு ஒன்றும் புரியவில்லை என்று சேஷாத்திரிக்குத் தெரிந்தது. அதுவும் ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில் ரகு இடைமறித்தது பற்றி அவனுக்குக் கோபம்.

கேசவனுடன் சேர்ந்து சேர்ந்து ரகுவும் கெட்டுப் போகிறான் என்று அவன் நினைத்தது சரியாய்ப் போயிற்று. ‘அல்ஜீப்ரா தெரியாத மண்டு’ என்று தன் ஆத்திரம் தீர உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் சேஷாத்திரி.

“சரிடா காலேஜ்லே பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து போனான். கல்லூரியில் ‘காண்டீன்’ பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் கேசவன். ரகுவைக் கண்டதும் வாயிலுள்ள சிகரெட் கூட ஆடாமல் அவன் முணுமுணுத்தான்: “ஹல்லோ யார்”

இந்த ‘யாரை’க் கண்டால் ரகுவுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. பஞ்சாபி இளைஞர்கள் தங்களுடைய பேச்சில் அடிக்கடி பரிமாறிக்கொள்ளும் வார்த்தை இது. அர்த்தம் கிடையாது.

“ஹல்லோ …” என்றான் ரகு.

“ஸோ ஏர்லி, யார்?” என்றான் கேசவன். “உன்னைத்தாண்டா பார்க்க வந்தேன்.’

“ரியலி யார்?…அதோ உஷா வராடா …”

ரகுவுக்கு எரிச்சலாக வந்தது. இவனிடம் போய் ஒன்றையும் விவாதிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பதில் சொல்லாமல் அவ்விடத்திலிருந்து புறப்பட்டான்.

‘ஏண்டா போறே?”

“உன் இன்ட்ரெஸ்ட் தாண்டா உனக்கு” என்றான் ரகு கோபத்துடன்.

“ஸாரி யார்… ஹல்லோ உஷா….”

உஷா ரகுவைப் பார்த்து புன்னகை செய்தாள். ரகுவும் பதிலுக்குப் புன்னகை செய்தான்.

“உன்னை ‘லஞ்ச்’ போது பார்க்கிறேண்டா…”

ரகு பதில் சொல்லவில்லை. ஆனால் கேசவனும் அவன் பதிலை எதிர்பார்க்கவில்லை. உஷாவுடன் அவசரமாகப் புறப்பட்டு விட்டான்.

ரகுவுக்கு திடீரென்று தொண்டை அடைத்துக் கொண்டது. அழுகை வந்துவிடுமோவென்று ஒருகணம் பயந்தான். கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.

கேசவனை மறுபடியும் சந்திக்க விரும்பவில்லை. யாரிடம் போய் அந்தரங்கமாக விவாதிக்க முடியும்? விஷயம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தான் சொல்வதை அநுதாபத்துடன் கேட்பவனாக இருக்க வேண்டும். சேஷாத்திரி ஒரு குழந்தை. சே…தானும் அவனைப் போல் இருந்திருக்கக் கூடாது? அப்படித் தானே இருந்தோம்! எல்லாம் இந்தக் கேசவனின் சகவாசதோஷம்தான் … கடவுளே, சேஷாத்திரிக்கு அல்ஜீப்ராவி லுள்ள சுவாரஸ்யம் தனக்கேன் இல்லை?

அவனுக்கு அப்பொழுது ஞாபகத்துக்கு வந்தது. முன்பொரு தடவை கேசவன் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டான். அதில் எல்லா விஷயங்களும் ‘பச்சையாக’ச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று கண்ணைச் சிமிட்டிக்கொண்டே அவன் சொன்னான். அவன் கண்ணைச் சிமிட்டியபோது ரகுவுக்கு அறையலாம் போலிருந்தது. அந்தப் புஸ்தகம் தனக்குக் கிடைக்குமானால்? அவனுக்கு அதைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வமில்லை. ஆனாலும் ரமா இப்படி பயப்படுவது நியாயமா இல்லையா என்று அந்தப் புஸ்தகத்தைப் படித்தால் ஒரு வேளை தெரியும் …

காலையில் நடந்த நிகழ்ச்சியை அவன் மறுபடியும் மனத்திரையில் போட்டுப் பார்த்தான். பயப்படுவது வீண் பிரமை என்று அவனுக்கு இப்பொழுது தோன்றத் தொடங்கியது. பயம் குறையக் குறைய, ‘இன்னொரு தடவை அது நடந்தாலென்ன’ என்ற எண்ணம் திருடனைப்போல் மனசில் நுழைந்தது. இவ்வுணர்ச்சி தலை தூக்கியதும் அவனுக்கு வெட்கமாகப் போயிற்று. கேசவனைப் போல் தானும் கெட்டவன் தான் என்ற எண்ணம் அவனுக்கு உறுதிப்பட்டது. ஒருவரையும் பார்க்காமல் ஓடிவிட்டால் என்ன என்று அவன் நினைத்தான். அவன் கெமிஸ்டிரி’ பரிசோதனை செய்து கொண்டிருக்கும்போது ஆபீஸிலிருந்து செய்தி வந்தது. ‘போன்’ வந்திருப்பதாக. எங்கிருந்து வந்திருக்கும் ? … ஒருவேளை ரமாவின் அப்பாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதோ? அவரிடம் எப்படிப் பேசுவது? ‘மாற்றுக்குறையாத தங்கம் ரகு’ என்று அவர் அடிக்கடி கூறுவார். அப்பொழுதெல்லாம் அவனுக்கு கூச்சமாக இருக்கும்; கூச்சமாகக் கோபமும் வரும். இப்பொழுது அவர் தன்னுடன் எதற்காகப் பேச விரும்புகிறார்? என்ன அசட்டுத்தனம், தானாகவே அவர்தான் பேசக் கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அவஸ்தைப்படுகிறோமே!….

ஆபீஸ் அறைக்குள் நுழைந்ததும், அவன் சற்றுத் தயங்கினான். சாதாரணமாக மாணவர்களுக்குப் ‘போன்’ வந்தால் கூப்பிட மாட்டார்கள். ஏதாவது முக்கியமான அவசரச் செய்தியாக இருக்க வேண்டும்.

‘போன்’ ஹெட் கிளார்க் டேபிலருகே இருந்தது. அவன் ‘ரிஸீவரை’க் கையிலெடுத்தான்.

“எஸ், ரகு ஹியர்…’

இரண்டு, மூன்று விநாடிகள் பதிலில்லை.

“எஸ், ரகு ஹியர்.”

“ஹும்”… பெருமூச்சொன்று வெளிப்பட்டது. ரகுவுக்கு யாரென்று தெரிந்து விட்டது.

“என்ன ரமா?”

”பயமாயிருக்கு ரகு …”

“என்ன பயம்?’… அவன் வரவழைத்துக் கொண்ட அலட்சிய பாவத்துடன் பேசினான். ஆனால் அவனையறியாமல் குரலில் நடுக்கம் கண்டது.

“ஒரே பயமாயிருக்கு ரகு” என்றாள் ரமா மீண்டும்.

“என்ன திரும்பத் திரும்ப அதையே சொல்றே! எங்கேயிருந்து பேசறே?”

“எங்க பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலிருக்கிற போஸ்டாபீஸி லிருந்து.நீ வரயா இங்கே?”

“நானா?”

“இரண்டு பேருமா எங்கேயாவது ஓடிப்போயிடலாமா?”

“என்ன பைத்தியமா இருக்கே! ஒண்ணும் நடக்கலே இப்படிப் படபடக்கறியே?”

“ஹும் … ஒண்ணுமே நடக்கலியா? நிச்சயமா?”

“ஆமாம்… ஒண்ணுமே நடக்கல்லே …” இப்பொழுது அவன் குரலில் ஒரு உறுதி தென்பட்டது. தான் சொல்வதைத் தானே நம்பவேண்டுமென்ற ஆவேசம்.

“காலம்பற நீயும் பயப்பட்ட மாதிரி இருந்தாயே …” “ஒண்ணுமில்லே… நான் உன்னைப்போல குழந்தையில்லே… எனக்கு எல்லாம் தெரியும்”…

“பொய் சொல்லாதே … காலம்பறே உன்கை நடுங்கித்து?”

“குளிரினாலே இருக்கும் … சரி, சரி சமத்தா வேலையைப் பாரு… அனாவசியமா நீயா அலட்டிக்காதே”…

“நிஜமாகவா ரகு? … உன்னை நம்பலாமா!”

“சத்தியமா” இப்பொழுது அவன் திடீரென்று இரண்டு, மூன்று வருஷங்கள் பெரியவனாகி விட்டாற்போன்ற ஒரு உணர்வு. அசட்டுத்தனமாக கேசவனைக் கேட்போமா, புஸ்தகம் படிப்போமா என்றெல்லாம் நினைத்தோமே என்று அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“இப்போ… பயமாயிருக்கா?” என்று கேட்டான் ரகு.

“இ ல்… லே…”

“சரி, நாளைக் காலம்பற பால் வாங்கப் போறச்சே பேசலாம்” என்று சொல்லிவிட்டு போனைக் கீழே வைத்தான் ரகு.

– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *