யாருக்குப் பெருநாள்





(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெஞ்சில் ஏதோ ஒன்று அடைத்தது.
வீரிட்டு அலறிய குழந்தை தான் தனிமையிலிருப்பதை உணர்ந்து வெம்பி வெம்பி ஓய்ந்தபின் தன் தாயைக் கண்டதும் எப்படி அழுகையை வெளிப்படுத்துமோ… அதைப்போல
அவரைப் பார்த்ததும் – அந்த மங்கிய ஒளியில் கனிவு ததும்பும் அவர் முகத்தைப் பார்த்ததும் – வெம்பல் விசும்பலாக மாறியது வாய்விட்டு ஒருமுறை ஆசை தீர அழுதுவிட வேண்டுமென்ற நினைப்பு – ஆனால் முடியவில்லை. அவரது உறக்கம் தடைப்படக்கூடாது.
புரண்டு படுத்தார் போர்வை விலகியிருந்தது. முகம் என்னை நோக்கித் திரும்பியிருந்தது. அதில் தான் என்ன கனிவு என்ன சாந்தம ஆனால் எத்தகைய ஏழ்மை உப்பி உப்பி என்னை மயக்கிய கன்னங்களா இவை? தாடையெலும்புகள் துருத்திக்கொண்டு நின்றது மங்கிய வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது.
சூடான கண்ணீர்த் துளிகள் என் கைகளில் விழுவதை உணர்ந்தேன். நான் அழுகிறேனா? பலூனுக்குள் அடைபட்டுக் கிடந்த காற்று அதன் வாய் வழியாக வெளியேறுவதை போல்… வாயைப் பலவந்தமாக அமுக்கி அமுக்கி அழுகையை என்னுள்ளேயே புதைத்தேன். முடியவில்லையே. குப்புறப் படுத்துக்கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதேன். ஆசை தீர ஆழுதேன். தலையணையெல்லாம் ஈரம் மூக்கை அடைத்தது. அழுகை ஓய்ந்து விசும்பலாக மாறியது .’சோ’ வெனப் பொழிந்த மழையின் ஓய்வு நிலை!.
மீண்டும் புரண்டு படுத்தார் அவர். போர்வை நன்றாய் விலகியிருந்தது. சிரமப்பட்டு முதுகை நோக்கிக் கையை வளைத்துச் சொறிந்தார். பதறினேன், நான் அவரது முதுகை வருடினேன். சிரித்தார் அவர். என்னென்ன கனவு காண்கிறாரோ? ஏழ்மைக்கும் கிரிப்புக்கும் எவ்வளவு தூரம துன்பத்தையுணரும் நிலையையா ஏற்படுத்துகிறது தூக்கம். கோடி கோடியாகக் கொட்டி வைத்திருந்தும் என்ன பயன். கூழுக்கும் வழியற்றவர்களின் தூக்கத்தல் உள்ள நிம்மதியுண்டா? தூக்கமே ஓர் வகை மரணம் தானே. பகலெல்லாம பாடி ஆடிப் பயங்கர உருவெடுக்கும் இவ்வுடல் இரவின் அணைப்பிலே… இந்தத் தூக்கத்தின் இன்பம் சொகுசு. இப்படியே எழும்ப விடாமல் ஆகிவிட்டால் நாளை இந்த உடல் நாறும். அழுகி நாறும். அலங்கோலப்பிண்டம் இது. உலகில் உள்ள வாசனைத் திரவியங்கள் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டட்டுமே. ஊஹும்…
சே! என்ன இழவுக் கற்பனை. அவரது காலைப் பற்றிப் பிடித்தேன். கண்ணீரைச் சொரிந்து அதைக் குளிப்பாட்டினேன். பாழும் மனம் அப்போதும் அமைதியுறவில்லையே.
காலை இழுத்துக்கொண்டு விழித்தார் அவர் ‘இன்னும் உறங்கவில்லையா நீ?’
காலை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு அழுதேன் ‘என்னை மன்னித்து விடுங்கள். என்னை… மன்னித்து… மன்னித்து…’
அவர் உரத்துச் சிரித்தார் ‘பைத்தியமே! இன்னுமா அதை நினைத்துக் கொண்டிருக்கிறாய். நான் எப்போதோ மறந்துவிட்டேன்.’ அவர் நலலவர், மறந்துவிடுவார் ‘ம்.. ம்.. தேவையற்ற சிந்தனைகளை விட்டு விட்டுப் படுத்துறங்கு.. உன்னை எனக்குத் தெரியாதா..’
ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டபடி படுக்கையில் சாய்ந்தேன்.
அவர் உறங்கி விட்டார். சாமக்கோழியொன்று கூவியது. இது இரண்டாம் சாமம். எவ்வளவு நேரமாகி விட்டது. அது சிறகை அடிக்கும் ஒலி என் சிந்தனைச் சிறகின் படபடப்பில் கேட்கவில்லை.
நான் அவரைக் காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டேன். உயிர்த்துடிப்புள்ள காதல். அதனால்தான் தொல்லைகள் எல்லாவற்றையும் துச்சமாக மதிக்க முடிந்தது.
நான் பகட்டுக்காரியல்ல. படாடோப வாழ்க்கை எனக்குப் பிடிக்காது. சாதாரண ‘வொயில்’ சாரி ஒன்றே போதும். இடைக்கிடையே ‘நைலெக்ஸ்’, ‘நைலோன்’ என்று ஆசைகள் தோன்றினாலும் அடக்கிக்கொள்ளுவேன். ‘பூச்சு’ வகைகள் ஒன்றும் பிடிக்காது. அவரும் திருமணம் செய்யுமுன் கொஞ்சம் நாகரீகமாகத் திரிந்தாலும் இப்போது முற்றாக மாறிவிட்டார்.
வாழ்க்கை சீராகத்தான் சென்றது. ஒரு ஆசிரியனுடைய சம்பளத்தில் ஒரு குடும்பம் வாழ்வதென்பது.. கேட்டதை வாங்கித் தருவார். சில வேளைகளில் திணறுவார். நான் கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டேனா என வருந்துவேன்.
மூன்று குழந்தைகள்.
எளிய முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு என் சின்னச் செல்வங்களின் கள்ளச் சிரிப்பும் மழலை மொழியும் எம் வறுமையை விரட்டும் சக்தி பெற்றிருந்தன. ஆனால்…
மாஜிதா; என் பள்ளித் தோழி; பகட்டுக்காரி. ஆனால் பண்புமிக்கவள். படாடோப வாழ்க்கையில் ஆவல் கொண்டவள். என் எதிர் வீடுதான். மாடிவீடு மலர்ச்சோலையின் நடுவேயுள்ள மாபெரும் பங்களா மஞ்சத்தில் புரளும் பஞ்சவர்ணக்கிளி அவள். ஐதுரூஸ் ஹாஜியாரின் மகள். பெரிய வியபாரி. அவர் பணத்தைக் கட்டிப் புரள்பவர்.
அவளுக்கும் எனக்கும் குன்றுக்கும் குப்பை மேட்டுக்கும் உள்ள வித்தியாசம் உயிர்த்தோழி அவள். ஓடியாடுவோம் உதைத்தும் விளையாடுவோம். வீட்டுக்கு அழைப்பாள். செல்வேன். மொட்டை மாடியில் ஏறியிருந்து பள்ளாங்குளி விளையாடுவோம். தடுக்கவில்லை அவள் தந்தை.
பகலில் பழஞ்சோற்றை விழுங்கிவிட்டு அவளிடம் ஓடுவேன் நான். உப்பிய வயிற்றுடன் இடியப்ப புரியாணி ஏப்பம் விடுவாள். அவள் எனக்கும் தருவாள் அவள் தாய். தடுக்கவில்லை ஹாஜியார்.
நாற்றம் பிடித்த அழுக்குப் பாவாடையுடன் அவளது ‘நைலெக்ஸ்’ ஸின் மேல் விழுந்து புரளுவேன். தடுக்கவில்லை அவள் தந்தை,
ஆனால் தடுத்தார் ஒருமுறை. தடுத்தே விட்டார். அன்று மறந்தேன் அவள் வீட்டை.
ஏன் தடுத்தார் என்று எனக்குத் தெரியாது நான் தவறு செய்தால் தானே! பிறகுதான் புரிந்தது.
அவர் மகன் லாபீர் என்னை விரும்புகிறானாம். என்மேல் உயிராம். இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளோமாம்.
அபாண்டம்! வீண்பழி!
விரக்திச் சிரிப்புத்தான் எனக்கு ஏற்பட்டது. பசியினால் சுருண்டிருந்த எனக்கு இப்போது தேவைப்பட்டது பிரமுகர்கள் அருந்தும் நூடில்சும் பட்டருமல்ல. ஒரு கவளம் சோறு தான்.
அவன் என்மேல் உயிராம் நான் என்ன செய்ய, உயிர்த் தோழி துடித்தாள்.
அவ்வேளையில்தான் புயலில் சிக்குண்ட சின்னஞ்சிறு படகு அலைகளுக்கிடையில் சிக்கிப் பரிதாப ஓலமிடும் அந்த வேளையில்தான் அவர் வந்தார். ஆதரவு தந்தார். ஊர் நம்பவில்லை. உம்மா, வாப்பா உட்பட ஒருவருமே நம்பவில்லை. நான் நம்பினேன்.
சீதனம் வேண்டாமென்றார். ஏதே உள்ளத்தைக் கொடுத்தோம். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றினார்.
மாஜிதா வந்தாள். வாழ்த்திச் சென்றாள் அடிக்கடி… அடிக்கடி…
என் கணவர் நல்லவர்; அவளைவிட. அதனால் நிம்மதி. ஆனால் அவள் ஆசைத்தீயையல்லவா மூட்டி விட்டுச் செல்கிறாள்.
ஒருநாள் ‘நைலக்ஸ்’ அணிந்து வருவாள். மறுநாள் ‘காஞ்சிபுரத்’ தில் நிற்பாள், பிறிதொருநாள் ‘ஒளவையார்’ ஆவாள். வேறொருநாள் ‘பெனாரஸ்’ ஸுக்கே போய்விடுவாள். சினிமாவுக்கு அழைப்பாள்; அவருக்குப் பிடிக்காது என்று சொல்லிவிடுவேன், ‘காணிவலு’க்குக் கூப்பிடுவாள்; மறுத்து விடுவேன். நாடகத்திற்கு அழைப்பாள், பின்பு அவன் மட்டும் தான் போகவேண்டி நேரிடும்.
என்னிடம் அவளுக்குச் சலிப்பு வளர ஆரம்பித்தது. எனக்கு ஆவல் வளர ஆரம்பித்தது.
நாடகம்; சினிமா; நல்ல சாறிகள் ஊஹும்… ஒன்றிற்குமே வழியில்லையே! அதைப்பற்றிக்கூட நான் அவ்வளவு கவலைப்பட்டது கிடையாது! ஆனால் வருடா வருடம் வருகின்ற பெருநாளுக்காவது நல்ல சாறிகள் – அதைக் கூட வாங்கித்தர வழியற்றவர் என் கணவர் என்பதை உணர முடிந்த போதுதான் ஆத்திரத்தையும் மீறிக் கொண்டு அழுகைதான் முன்னணியில் நின்றது.
சென்ற பெருநாளுக்கு ஒன்றும் வாங்கித்தரவில்லை, எனக்குத்தான்! என் குழந்தைகளுக்கல்ல. அவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வந்துவிடுவார். ஆனால் அவை நடுத்தரக் குடும்பம் கூட அணிய வெட்கப்படும் ஆடைகளாகத்தான் இருக்கும். ஏனையோர் ‘ஒரு மாதிரி’ யாகப் பார்த்துக் கேலி பண்ணுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் அந்த ஆடைகளை அணிந்து மகிழும் என் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மகிழ்ச்சி அளவிடக்கூடியதா? அந்த ஆடைகள் கூட ‘விடிந்தால் பெருநாள்’ என்ற நிலையில்தான் மிகச்சிரமப்பட்டு என் வாசல் படி ஏறும். சென்ற பெருநாளிலும் இல்லை. அதற்கு முன்பும் இல்லை! என்னைத்தான் சொல்கிறேன் நான்தான் ஏதும் வற்புறுத்துவதில்லையே!
இந்தப் பெருநாளைக்கு ஒரு தரம் குறைந்த ‘நைலக்ஸ்’ ஸாவது வாங்கி அணிந்து கொண்டு தொழச் செல்ல வேண்டுமென்பது எனது திட சங்கற்பம். அது கூட ஜதுரூஸ் ஹாஜியாரின் மகள் மஜீதாவின் தூண்டுதலினால் ஏற்பட்ட தட சங்கற்பமே! ஆனால் நடந்தது என்ன? நான் வாய் விட்டுக் கேட்டு விடுவேன் என்று யோசித்துத்தானோ என்னவோ ஒரு ‘சாறி’யை அவர் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். கடனுக்கு, ஆன ‘நைலக்ஸ்’ அல்ல. ‘வாயில்’ வெறும் ‘வாயில்’.
சாறியைக் கண்டதும் வெடித்துக்கொண்டு பீறிட்டதே! அழுகையல்ல! ஆத்திரந்தான். எவ்வளவு ஆசை. பாசம் ஆவல் ததும்ப, ‘சாறி’யை என் கையில் தந்தார். என் மிருக உணர்வு அப்படி ஒரு உள்ளம் என்னிடம் இருக்கிறதா? இல்லாவிட்டால் அப்படி ஒரு காரியத்தை நான் செய்திருப்பேனா? ‘சாறி’ யை ‘வெடுக்’ கென பிடுங்கி சுழற்றி…
கொல்லைப்புறத்தை நோக்கி – வெகுவேகமாக எறிந்தேன் அவர் உள்ளத்தையும் சேர்த்துத்தான். சாறி ‘சளார்’ என்று கொல்லைப்புறச் சேற்றில் புரண்டு அழுக்கானது! என் உள்ளம் மட்டுமல்ல அவரது உள்ளமும் அழுக்கானது.
மௌனம், இருவருக்குமிடையில் எந்தவித உரையாடலுமில்லை. அவர் படுத்துக் கொண்டார். கோபத்தில் வெளியேறிவிடும் பழக்கமெல்லாம் அவருக்கு இல்லை. நானும் படுத்துக்கொண்டேன்.
மீண்டும் மீண்டும் அதே சம்பவத்தை அசைபோட்டவாறு அவரது கால்களைப் பற்றினேன், மீண்டும் விழித்துக் கொண்டார்…
எதிர் வீட்டில் விளக்கெரித்தது. இந்த நேரத்தில் விளக்கெரிகிறதே, ஏன் ஹாஜியார் கூட மக்காவுக்குப் போய் விட்டாரே…
அடடா! காலையில் பெருநாளல்லவா அதற்குள் மறதியா?
எழுந்து நின்று பார்த்தேன். ‘குசு குசு’ வென்ற ஒலிகள் எனக்குப் புரியவில்லை. மாஜிதாவின் நிழல் தெரிந்தது.
“மாஜிதா” அழைத்தபடி வாசலுக்கு விரைந்தேன்.
விசும்பியபடி அவள் ஓடி வந்தாள். சோர்ந்து துவண்டு தொய்யும் நிலை.
”என்ன? என்னடி?” பதறினேன் நான். மெதுவாய் முணுமுணுத்தாள்.
“அதை ஏண்டி கேக்கிறா. வாப்பாவைத் தங்கம் கடத்தினார்ணு போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டாம். போன் போன் வந்தது.”
என் மார்பில் முகத்தைப் புதைத்தாள். விம்மினாள்
“மாஜீதா” லாபீரின் கடூரக் குரல். “அங்கென்ன வேலை இப்போ?” அவமானம் வெளிப்படுமே என்ற அச்சமா?
அவள் ஓடிவிட்டாள்.
எனது மனம் தெளிந்திருந்தது. குளிர்ந்திருந்தது. ஓடிச் சென்றேன் வீட்டுக்குள். அவரின் கால்களைப் பற்றினேன். கண்ணீரால் குளிப்பாட்டினேன். முத்தி முத்தி முத்தி மகிழ்ந்தேன்.
என் இன்பமே! நாம் கூழைத்தான் குடிச்சாலும் உள்ளம் நெறஞ்சிருக்கு என் ராஜா! அது ஒன்றே போதும்.
அவரின் காலடியிலேயே கிடந்தேன்.
அவர் முகம் மலர்ந்திருந்தது. நான் பார்க்கவில்லை. ஏன் என்றும் மலர்ந்திருக்கும் முகந்தானே அது!
– 08-03-1968, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.