யாருக்குச் சொந்தம்?





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோர்ட்டில் நிற்க ஆறுமுகத்திற்கு வெட்கமாக இருந்தது. நாலா பக்கமும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்திருக்கும் சனத்திரளைக் கண்டதும் தலையை கவிண்டு கொண்டான்.
சின்ன வயதிலிருந்தே போலிஸ், கோடு வழக்கு எதுவுமே அவனுக்குப் பிடிக்காது. பார்வையாளராகக்கூட கோர்ட்டையே எட்டிப்பார்க்காத – கோர்ட்டுப்படி ஏறாத ஆறுமுகம் கடந்த மூன்று நாலு மாதங்களாக கோர்ட்டு, வீடு என்று மாறி மாறி அலைகிறான். ஓ! இத்தனைக்கும் அவன் உழைப்பின் பெரும்பங்கை விழுங்கிவிட்ட வீடு தானே காரணம்?
அது ஒரு கிரிமினல் வழக்கல்ல. சிவில் வழக்குத்தான். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஆறுமுகத்தின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் சுப்பிரமணியம், இப்போது ஆறுமுகத்திற்கு வீடு தேவையென்ற நிலையில்கூட எழும்ப மறுத்தான். சுப்பிரமணியத்தின் மீது வழக்குத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தனக்கு விருப்பமில்லாத கோர்ட்டை நாடினான் ஆறுமுகம்.
வழக்கு ஆரம்பித்த நாளிலிருந்து மாறி, மாறித் தவணை போடப்பட்டதால் ஆறுமுகத்தின் பாடு திண்டாட்டமாகிப் போய் விட்டது. ஒவ்வொரு தவணைக்கும் அலுவலகத்திற்கு லீவு போடவும், அலையவும், பிரயாணத்திற்கும் சட்ட வல்லுனருக்குமாகச் செலவழிக்கவும் அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.
பாவம்! அவனும் பிள்ளை குட்டிக்காரன். கலியாண வயதில் இரண்டு பெண்கள், உயர் வகுப்பில் படிக்கும் மகன், வருத்தக்கார மனைவி இப்படிப் பல பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் அவனுக்கு இப்போது வழக்குச் செலவு இன்னொரு புறம்; தவியாய்த் தவித்தான் ஆறுமுகம்.
ஒவ்வொரு தவணைக்கும் சட்ட வல்லுநருக்கு ஏதோ சிறு தொகை அளக்காவிட்டால் அவர் தகராறு பண்ணுவார். இந்த வீட்டு வழக்கையே நம்பித் தன் சொந்த வீட்டிற்கு அத்திவாரமும் போட்டு விட்டார் வழக்கறிஞர்;. சும்மா விடுவாரா?
தவணைகள் வந்து கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் சட்ட வல்லுனர்கள் பாடு கொண்டாட்டம். பாவம்; வழக்காடுபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
மனிதர்களின் நல்வாழ்வுக்காக வகுக்கப்பட்ட சட்டம் சில வேளைகளில் அவர்களுக்கே தீமையாக அமையும் சந்தர்ப்பங்களை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்.
வழக்கு ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால் ஆறுமுகம் ஒரு ஓரமாக நின்றபடி யோசித்தான். மன உழைச்சலும், உடல் அலைச்சலும் சேர்ந்து அவனுருவை மாற்றியிருந்தது. அவன் இளைத்துக் கறுத்துப் போயிருந்தான். கண்களில் சோர்வும் சோகமும் புலப்பட்டன. கீழ் இமைகளுக்கடியில் கருமை படிந்திருந்தது. இந்த வழக்கின் மையப்பொருளான வீட்டைக்கட்ட அவன்பட்ட சிரமங்கள் திரைப்படம் போல் மனத்திரையில் தோன்றிய போது அவன் இதயத்தின் அடியிலிருந்து ஒரு நீண்ட பெரு மூச்சு வெளிப்பட்டது.
ஆறுமுகத்தின் தந்தை இவ்வுலகை விட்டுப் பிரிந்த போது ஆறுமுகத்திற்குப் பதினெட்டே வயதுதான். அப்போது அவர்களுக்கு இருந்த சொத்தெல்லாம் ஒரு சிறிய வீடுதான் குடும்பப் பொறுப்பு அவன் தலையில் விழவே அவன் மேற்படிப்பை நிறுத்திவிட்டு அரசதிணைக் களம் ஒன்றில் இலிகிதராகச் சேர்ந்தான்
எந்தச் சோதனை வந்தாலும் சமாளிப்பேன் என்ற மன நம்பிக்கையும், விடாமுயற்சியும் அவனை வாழ்வில் முன்னேற்றியது.
வாழ்வு என்பது ஏதோ கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைவதல்ல! ஆற்றில் மிதக்கும் சிறு துரும்பின் கதியல்ல வாழ்க்கை. காற்றடிக்கும் திசைத் கெல்லாம் சாய்ந்தால் வாழ்வில் முன்னேற முடிய யாது. சுய தேவைகளை அடைய தன்னம்பிக்கையுடன் வாழ்வில் செய்யவேண்டும் என எங்கோ எப்போதோ முயற்சி படித்தது ஆறுமுகத்தின் மனதில் ஆழமாகப்பதிந்திருந்தது.
தனக்கென்று ஒரு பொறுப்பு வந்து விட்டால் தான் ஒருவனது உண்மையான திறமையை உணர முடியும். சுயமாக இயங்க முடியாதவன் என ஆறுமுகத்தைப்பற்றித் தப்புக் கணக்குப் போட்டவர்கள் மூக்கில் விரல் வைத்து வியக்கும் வண்ணம் வாழ்வில் முன்னேறினான் ஆறுமுகம். அதிக சேமிப்பு என்று எதுவுமில்லா விட்டாலும் அக்குடும்பத்தைப் பீடித்திருந்த ஏழ்மைபைப் பறக்கடித்தான்.
சகோதரிகளுக்கு மணம் முடித்துக்கொடுத்த பின் தனக்கென்றும் ஒரு துணையைத் தேடிக் கொண்டான்.
வீட்டு நிலையறிந்து மனைவி மல்லிகாவும் சிக்கனமாக நடந்து வந்ததால் ஆறுமுகத்திடம் சிறிது பணம் பதுங்க ஆரம்பித்தது. கையில் சேர்ந்த பணத்தைக் கொண்டு புதிய வீட்டிற்கு அத்திவாரமிட்டான் ஆறுமுகம்.
சிக்கனத்தை முன்னிட்டு குழந்தை வேண்டாம் என்று நினைத்திருந்த தம்பதிகளுக்கு நாளடைவில் அது பெரும் மனக்குறை ஏற்படுத்தவே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு முழுக்குப் போட்டனர்.
நாட்கள் நகர்ந்தன. மல்லிகா மடி நிறைந்து மகள் ஒருத்தியை பெற்றுக் கொடுத்தபோது ஆறுமுகம் பூரித்துப் போனான். ஆனால் அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்ததால் செலவீனங்கள் அதிகரித்தபோது ஆறுமுகம் ஆடிப் போனான். இதற்கிடையில் தாயின் மரணம், மனைவியின் நோய் எனப் பல இழப்புகள் ஏற்படவே கட்டிய வீடு பாதியிலேயே நின்றது.
இந்த நிலையில் அவனது வேட்கை அதிகரித்தது. வீடொன்றைக் கட்டி முடிக்கவேண்டுமென்ற வேட்கையில் வங்கியிலும். இலாக்காவிலும், நண்பர்களிடமும் சிறு தொகையாகவும் பெருந்தொகையாகவும் கடன் பட்டான் வீடு ஒருவாறு பூர்த்தியாகியது.
இதற்கிடையில் அவனைக் கொழும்புக்கு மாற்றியிருந்தார்கள். கட்டிய வீட்டில் ஒருசில மாதங்கள் தான் குடியிருக்கக் கொடுத்து வைத்தது அவனுக்கு.
கடனுக்குக் கழிப்பது போக சிறிய தொகையே சம்பளமாக அவனது கையில் கிடைத்தது. இந்த நிலையில் தான் கொழும்பிலும், குடும்பம் யாழ்ப்பாணத்திலும் என்பதனால் – இருந்தால் செலவுக்குக் கட்டுபடியாகாது மனைவி மக்களையும் கொழும்புக்குத் தன்னுடன் அழைத்துச் சென்றான். கொழும்பில் அவர்கள் வாடகை வீட்டில் குடியிருக்க, ஊரில் சொந்த வீடு பூட்டிக்கிடந்தது.
அப்போதுதான் சுப்பிரமணியம் ஆறுமுகத்தின் வீட்டை வாடகைக்குக் கேட்டு வந்தான். சுப்பிரமணியம் கிடைக்கும் ஓரளவு அறிமுகமானதாலும் வாடகையாகக் பணம் கடனை அடைக்க உதவும் என்பதாலும், வீடு பாழாடையாமல் விளக்கு வைப்பதற்கு ஒருவர் தேவை யென்பதாலும் ஆறுமுகம் சம்மதித்தான்.
வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி கொள்வதூ அவ்வளவு சுலபமல்ல. அதில் வெற்றி பெற அன்பும் வலிமையும், அறிவும் திறமையும் கொண்டு செயற்பட்ட ஆறுமுகத்தின் வாழ்வு ஏதோ தடங்கலின்றித் தொடர்ந்தது.
படமின்றி, பகட்டான செலவின்றி, குடி சிகரெட் இன்றி சிக்கனமாக வாழ்ந்து கடனைச் சிறுகச்சிறுக அடைத்தான் ஆறுமுகம்.
பதினான்கு வருடங்கள் வெளியூர்களில் சேவை செய்த பின் ஆறுமுகத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் கிடைத்தது. மாற்ற உத்தரவைக் கண்டதும் ஆறுமுகத்திற்கு ஒரே மகிழ்ச்சி.
‘ஊருக்குப் போனால் சொந்த வீட்டில் குடியிருக்கலாம்; தோட்டம் செய்யலாம்: கோழி வளர்க்கலாம்; அதிக அலைச்சல் கிடையாது’ என எண்ணிய ஆறுமுகத்திற்கு ஒருவித நிம்மதி.
வீட்டில் மாற்றத்தைப் பற்றிக் கேட்டதும் அனைவருக்கும் மனம் நிறைந்த திருப்தி.
தான் மாற்றத்தில் ஊருக்கு வருவது பற்றியும், வீட்டைக் காலிசெய்து தரும்படியும் சுப்பிரமணியத்திற்குக் கடிதம் எழுதி இரண்டு வாரமாகியும் பதில் வராததால் ஆறுமுகம் மீண்டுமொரு கடிதம் எழுதினான்.
அதற்கும் பதிலில்லை.
வேறு வழியின்றி ஆறுமுகம் ஊருக்குப் போய் சுப்பிரமணியத்துடன் கதைத்தான்.
‘ஓய் காணும், உமக்குச் சட்டம் தெரியுமெல்லே பத்து வருஷத்துக்கு மேல் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருந்தால். வீடு குடியிருந்தவருக்குத்தான் சொந்தம்’ என சுப்பிரமணியம் எக்காளமிட்டான்.
“நீர் பேசறது உமக்கே நல்லாயிருக்கா?” என்று கேட்டான் ஆறுமுகம். சுப்பிரமணியம் மௌனம் சாதிக்கவே ஆறுமுகம் தொடர்ந்தான்.
“அப்ப நீர் வீட்டைக் காலி பண்ண மாட்டீரோ?” சூடாக வார்த்தைகள் வெளியாகின.
”ஓம்… நீர் செய்யுறதைச் செய்யும்” என்றான் சுப்பிரமணியம். ஆறுமுகத்தின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்தன.
இது பெரிய அநியாயம் – வேதனையாலும் ஆத்திரத்தாலும் ஆறுமுகத்தால் பேச முடியவில்லை. அவனுக்கு நெஞ்சை அடைத்தது. ஆனால் சுப்பிரமணியம் விட்டுக் கொடுக்கவே இல்லை.
ஆறுமுகத்தின் பக்கம் நியாயம் இருப்பதைக் கண்ட ஊர்ப் பெரியவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சுப்பிரமணியம் கேட்கவில்லை.
இறுதியில் ஆறுமுகம் கோர்ட்டுப் படியேறினான்.
“ஆறுமுகம்…ஆறுமுகம்… ஆறுமுகம்…” கோர்ட்டில் அவனைக் கூப்பிட்டதும் சுயநினைவுக்கு வந்தான் ஆறுமுகம்.
வழக்கு விசாரணை தொடர்ந்தது.
தீர்ப்பு ஆறுமுகத்திற்குச் சார்பாகவே அமைந்தது.
சுப்பிரமணியம் பொறி கலங்கிப் போனான்.
சுப்பிரமணியம் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ஆனால் சரியான செலவாளி. அவனது மனைவி சிவபாக்கியமும் சரியான “ஷோக்” பேர்வழி, பரம்பரைச் சொத்துகளை விற்றுச் செலவிட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு வந்து இன்று நடுத் தெருவில் நிற்கவேண்டிய நிலைக்கு வந்து விட்ட நிலையில் செய்வதறியாது திகைத்தான். கடன் கொடுத்தவர்கள் அவனை நெருக்க ஆரம்பித்தனர். கடன் பட்டு வழக்காடியதாலும் தோல்வி. சுப்பிரமணியம் நடைப்பிணமானான்.
மறுநாள் அவனது உடல் பலாமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
அவனது முடிவு ஆறுமுகத்திற்கும் வேதனையைக் கொடுத்தது, ஆனாலும் அது அவனாகத் தேடிக் கொண்ட முடிவு. யார் என்ன செய்ய முடியும்?
இதற்கிடையில் வழக்கிற்காக ஆறுமுகத்திற்குக் கடன் கொடுத்தவர்களும் அவனை நெருக்கினர்.தனது வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கி, கடன்களை அடைக்க வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டான் ஆறுமுகம்.
கோர்ட்டுப் படி ஏறியவர்கள் உருப்பட்டதில்லை என்று யாரோ சொன்னது ஆறுமுகத்திற்கு நினைவுக்கு வந்தது.
ஆறுமுகத்தின் வழக்கறிஞரின் புதுமனை புகுவிழாவிற்கு ஆறுமுகத்திற்கும் அழைப்பு வந்திருந்தது.
– தீபம்
– மீன்குஞ்சுகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1994, மல்லிகைப் பந்தல், கொழும்பு.