யானை வைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 1,341 
 
 

கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் வந்துவிட்டவனுக்கு குழந்தை வளர்ப்பு ஒரு சவாலாக இருந்தது. ‘நீ எப்படி பிள்ளைய வளர்க்கிறேனு பார்க்கிறேன்?’-என்று அம்மா விட்ட சவால் அவனுக்கு அச்சுருத்தலாகவே இருந்தது. மனைவி சாந்தாவின் வேலை நிமித்தமாக நடந்த விவாதத்தில் மனைவியின் சொல் கேட்டு ஜாகை மாறியிருந்தான் சாமிநாதன். தடுப்புச் சுவருக்கு அப்பால் இருக்கும் கிருஷ்ணவேனி அக்காதான் சாந்தாவுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவாள். கடந்த சில நாட்களாக தன் மூன்று வயது சிறுவன் சதா அழுது கொண்டே இருந்தான். அதன் காரணம் ஊமையின் கனவு போல் இருக்கிறது. சொல்லத் தெரியாத குழந்தை.முதலில் குழந்தைக்கு வாந்தியும் பேதியும் ஆனது. நகரில் இருக்கும் குழந்தைகள் நலன் மருத்துவரை அணுகி பண்டுவம் பார்த்தார்கள். சில நாட்களில் பேதி ஆவது நின்று போனது. ஆனால், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. இது போன்ற நேரங்களில் அம்மாவும் அன்னியும் உடன் இருந்தால் உதவியாக இருந்திருக்கும். பகைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு உறவினர்களின் உதவி துண்டிக்கப்பட்டுவிட்டது. மொட்டைச் சுவற்றில் அமர்ந்து கரையும் காகத்தையும் வானத்து நிலவையும் காட்டி சமாதானம் செய்யும் போதெல்லாம் சற்று அழுகை மட்டுப்படும். அவ்வளவே.மீண்டும் அழத் துவங்கிவிடுவான். 

குழந்தைகளின் பீத் துணிகளை துவைத்து மாடியில் காயப் போட வேண்டாம் எனவும் மாலை கருக்கலில் மேலே பறக்கும் பறவையின் எச்சம் அதன் மீது பட்டால் குழந்தைக்கு ஆகாது. தோசமாகிவிடும், பச்சை பச்சையாக மலங்களிப்பான் எனவும் கிருஷ்ணவேனி அக்கா சாந்தாவிடம் சொல்லியிருந்தாள். 

சாந்தா,சாமிநாதனின் ஒரே ஆண் குழந்தை டார்வின். எப்போதும் துரு துருவென இருப்பவன் சில நாட்களாக முகம் வாடி ஒடுங்கி போய் இருந்தான். இருவரும் அலுவலகத்துக்கு சிப்டு முறையில் விடுப்பு எடுத்துக் கொண்டு குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

                  தனது இத்தனை ரோகத்திலும் தொலைக்காட்சியில் யானையை பார்த்தால், ‘அப்பா, ஆன!’-என்று உற்சாகமாக பேசுவான். பெருமாள் கோவில் உற்சவத்தில் வண்டியின் மீது பவனி வரும் யானையை நிஜ யானை என்று நம்பி குதூகலிக்கும் குழந்தை. நகரத்தின் மையத்தில் இருக்கும் அரசு சிறுவர் பூங்காவில் ராமன் எனும் யானை பார்வைக்கு வளர்க்கப்படுகிறது. அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்மென சாந்தாவிடம் சொல்லி வைத்தான் சாமிநாதன். 

குழந்தைக்கு முடியவில்லை என தன் மாமியிடம் பேசினாள் சாந்தா. ‘எல்லாம் முடியும்னுதானே தனிக்குடித்தனம் போனீங்க அனுபவியுங்க’-என்று மாமி சொன்னதை சாமிநாதனிடம் அவள் சொல்லவில்லை. இரவு பன்னிரெண்டு மணிக்கு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து அழுதது குழந்தை. நள்ளிரவு என பாராமல் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார்கள் சாந்தாவும்,சாமிநாதனும். நகரத்தில் படுக்கை வசதி கொண்ட மிகப் பெரிய மருத்துவ மனை அது. அதன் இரண்டு வாயில்களிலும் இருக்கும் இரவுக் காவலர்களுக்கு பதில் சொல்லிவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு போனார்கள்.பனி கொட்டும் அந்த இரவில் கூட முதல் வாயிலில் குறவர்களின் கூட்டம் இருந்தது.அவர்களில் யாருக்காவது உடல் நலமற்றிருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டான் சாமி.அவசர பிரிவில் குழந்தையை காட்டி மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த சாமிநாதனின் கண்ணில் அந்த காட்சி பட்டது. ஐம்பது வயது மதிக்கத்தக்க குறவருக்கு கடும் காய்சல் என்பதால் ‘டிரிப்ஸ்’-ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவரது மனைவி இருந்தாள். தன் குழந்தையின் முடியாமையின் மன வலியிலும் குறவர்களின் குடும்ப ஒற்றுமையை நினைத்து நெகிழ்ந்தான். பெரியவருக்காக அவர்கள் அத்தனை பேரும் மருத்துவ மனை வந்திருந்தது மனித நேயம்தானே. 

சுவற்றுக்கு அப்பாலிலிருந்து கிருஷ்ணவேனி அக்கா கேட்டாள்-“சாந்தா,குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கு?”. “நல்லா தூங்குறான்.முழிச்சாதான் தெரியும்மக்கா”-என்றாள் சாந்தா. “இனியும் அழுதா நாட்டு வைத்தியம்தா பாரு”-என்றாள் கிருஷ்ணவேனி அக்கா.

தர்காவுக்கு சென்று மந்திரித்தும், தொப்புழை சுற்றி பேர் சொல்லா வேர் அரைத்து தடவியும் பார்த்தாகிவிட்டது. இதுக்கும் மேல் என்ன பார்க்க வேண்டும் என்பது போல் அக்காவின் முகத்தை பார்த்தாள் சாந்தா. 

“ஒரு வேளை குழந்தைக்கு வயிறு வலிச்சா, தொக்கம் எடுத்துப் பாரு”-என்றாள் கிருஷ்ணவேனி. சாந்தாவும் சாமிநாதனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு ‘தொக்கம்’ எடுப்பது என்றால் என்னவென்று நன்றாக தெரியும். ஒரு நிமிடம் விழித்துக் கொண்டவள் போல் சாமிநாதனிடம் தொக்கம் பற்றி சொன்னாள் சாந்தா.சற்று யோசித்த சாமிநாதன் நகரத்தில் யாருக்கும் தொக்கம் பற்றி தெரியாது என்று சொன்னான். இருவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு போகலாம் என்று ஆலோசனை சொன்னாள் சாந்தா. அதில் சாமிநாதனுக்கு உடன்பாடு இல்லை. ஆனால்,பள்ளியில் படிக்கும் காலத்தில் கிராமத்தில் தனக்கு தொக்கம் எடுத்ததை நினைவுபடுத்திக் கொண்டான். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் வீரப்ப அய்யனார் கோவிலுக்கும், அதன் அருகில் ஓடும் பனசல் ஆற்றுக்கும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் குழுவாக சென்று வருவான் சாமி. ஸ்படிகமாக ஓடும் மூலிகை தண்ணீரில் மணிக் கணக்காக விழுந்து நீந்திக் கொண்டிருப்பான். மதியம் இரண்டு மணி வரை தண்ணீரில் கிடப்பவர்களுக்கு பசி காதை அடைக்கும். அகோர பசி அது. அய்யனாரின் துணை சாமி கருப்பனுக்கு நேர்த்தி செய்பவர்கள் கிடா வெட்டி கறிச் சோறு போடுவார்கள். அந்த மலைப் பிரதேசத்தில் ஆட்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆற்றில் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு அழைப்பு கேட்கும். பந்திக்கு முந்திச் சென்று அவசர கதியில் வயிறு முட்ட உண்பான் சாமிநாதன். ஆட்டுக் கறியில் உள்ள எலும்புத் துண்டுகளை தவறி விழுங்கிவிட்டால்..,வயிற்று வலி..,தொக்கம் எடுத்தல் என்று அம்மாவின் வசையுடன் நடக்கும்.அன்னஞ்சி ஊருக்கு செல்லும் வழியில்தான் தொக்கம் எடுக்கும் தாத்தா இருக்கிறார். மிகவும் பிரபலமானவர். வலியில் சுருண்டு கிடப்பவனை அம்மா அணைத்து பிடித்துக் கொள்வாள். தாத்தா அவன் வாயை திறக்கச் சொல்லி அதில் குழாயை வைத்து உறிஞ்சி எடுப்பார். இரண்டு நாளுக்கு முன் உண்ட எலும்பு பிசிறுகள் வந்துவிடும். வெத்தலை பாக்கும் இரண்டு ரூபாயும்தான் காணிக்கையாக கொடுப்பாள் அம்மா. தொக்கம் எடுக்கும் தாத்தாவுக்கு பூர்விக தொழில் மண்பாண்டங்கள் செய்வது. உடலில் கொப்புளங்கள் வந்தாலும் செம்மண் கரைத்து கோழி இறகால் அதன் மீது தடவிவிடுவார். அதற்கு அக்கி எழுதுதல் என்று பெயர். 

இப்பவும் குழந்தை அழுது கொண்டேதான் இருக்கிறது. எப்போதெல்லாம் யானையை தொலைக் காட்சியில் பார்க்குமோ அந்த நேரம் தவிற மற்ற நேரங்களில் அழுகையும் சமாதானங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. “தம்பி,ஹாஸ்பிடலுக்கு இனிமே போகாதீங்க. நான் சொல்றத கேளுங்க “-கிருஷ்ணவேனி.  முகம் சோபை இழந்து அக்காவை நிமிர்ந்து பார்த்தான் சாமி. அடுத்த கட்ட வைத்திய முறைகளை சாந்தாவின் காதில் சொன்னாள் கிருஷ்ணவேனி. அதை வெளிப்படையாக சொன்னால் பலிக்காது என்றும் பீடிகை போட்டாள். சாந்தா,சாமிநாதனின் காதில் சொன்னாள். அதை நடைமுறைப்படுத்த முடிவாகியது. இது யானை வைத்தியம். 

அன்றே நகரத்தின் மையத்தில் இருக்கும் அரசு சிறுவர் பூங்காவுக்கு சாந்தாவும் சாமிநாதனும் குழந்தையை தூக்கிக் கொண்டு போனார்கள். ஒரு ஆலமரத்தினடியில் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு முன்னும் பின்னுமாக நகர்ந்து கொண்டிருந்தது-யானை. பாகன் அதற்கு சோற்றுக் கவளத்தை உருட்டி உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்தான். சற்று தொலைவில் இருந்து எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். டார்வினும் உற்சாகமாக இருந்தான். “ஏன்டா,இப்ப மட்டும் அழுகைய காணோம். அதுக்காக இங்கேயே இருக்க முடியுமா?”-செல்லமாக குழந்தையை கடிந்து கொண்டாள் சாந்தா.டார்வின் தன் ஆள் காட்டி விரலால் யானையை காட்டி, “ஆன! ஆன!”-என்று கத்தினான். யானை பாகனிடம் சாமிநாதன் ரகசியமாக பேசிவிட்டு ஐம்பது ருபாயை பாகனிடம் தந்தான். யானையின் வாலையும் பிருஷ்ட பாகத்தையும் தடவிக் கொண்டிருந்துவிட்டு சிறிது நேரம் கழித்து சாமிநாதனிடம் தந்தான் யானைப் பாகன். அது யானையின் வாலிலிருந்து எடுக்கப்பட்ட மயிற் என்று சொன்னான் பாகன். 

சாமிநாதன் அதை தாயத்தில் அடைத்து டார்வின் கையில் கட்டிவிட்டான். அந்த தாயத்திற்குள் யானை இருப்பதாகவும் நீ இனிமே அழக் கூடாது எனவும் குழந்தையிடம் சொல்லி வைத்தான் சாமிநாதன். தனக்கு யானை பலம் வந்துவிட்டதாக குழந்தை நினைத்துக் கொண்டது.குழந்தையின் அழுகையும் ஓய்ந்துவிட்டது. 

சில நாட்களுக்கு பின் பாகனை பார்த்து நன்றி சொல்ல புறப்பட்டான் சாமிநாதன். அந்த பூங்காவின் நடுவில் இருந்த ஆலமரத்தின் கீழ் யானை இருந்தது. ஆனால்,வேறொரு பாகன்தான் இருந்தான். அதை நீர் பாய்ச்சி குளிக்க வைத்துக் கொண்டிருந்தான்.சாமிநாதன்,முதலில் இருந்த பாகனைப் பற்றி கேட்டான். ‘ஏன்’-என்பதுபோல் ஏறிட்டு பார்த்துவிட்டு சாமிநாதனை புரிந்து கொண்டவனைப் போல் பேச தொடங்கினான் பாகன். யானையின் முடியை எடுத்து விற்பது குற்றம் எனவும் அதிலும் எருமையின் முடியை யானை முடி என்று பொய் சொல்லி ஏமாற்றுவது அதனினும் குற்றம் எனவும் அதனால் முந்தைய பாகனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டது எனவும் சொன்னான். சாமிநாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. யானை வைத்தியமும் பொய் வைத்தியமாக ஆகிவிட்டதை நினைத்து வருந்தினான். அதை சாந்தாவிடமும் கிருஷ்ணவேனியிடமும் சொல்லவே இல்லை.

இப்போதெல்லாம் டார்வின் அழுவதே இல்லை!

யானையின் பலம் இருக்கு தும்பிக் கையிலே. 
மனிதனோட பலம் இருக்கு நம்பிக்கையில்!

– ‘சிறுகதை’, காலாண்டிதழில் பிப்ரவரி 2024ல் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *