மௌனம் பேசியதோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 410 
 
 
செந்திலுக்கு  நெஞ்சு கொள்ளாக்குறை. அவனது அபிமானத்தலைவர் தன்னை கட்சித்தொண்டனாகவே  வைத்திருக்கிறாரே தவிர  அவரது அந்தரங்கச் செயலளாராக நியமிக்கவில்லையே  என்று.
தேர்தல் நெருங்கும்  காலத்தில் சீட்டுக்குலுக்குவதுபோல  தன் தொண்டர்களைக்குலுக்கி எடுத்தவர் அவரது கட்சிக்காக  ராப்பகலாய் உழைக்கும் தனக்கு எப்போதும் அவர் அருகிலிருந்து பணிபுரிகிற மாதிரியான  ஒரு பதவியைத் தருவார் என எதிர்பார்த்தான்.கிடைத்தது ஏமாற்றமே..
அந்தரங்கச்செயலாளராய் தலைவர்  நியமனம் செய்திருக்கிற  தீபக்  ஒன்றும் நல்லவனே இல்லை. எதிர்கட்சியில் ஏழெட்டு வருடங்கள் இருந்து  அங்கிருந்து  வெட்டிக்கொண்டுவந்தவன். இவன் விசுவாசமாய் இருப்பானா  என்ன!
செந்தில்  அன்று மாலை மாநாட்டிற்குப்புறப்படும் முன்பாக மனைவியிடம் மனத்தாபத்தைக்கொட்டித்தீர்த்துவிட்டான்.
அவளும்,”போகுது விடுங்க..  நீங்க  தலைவர் கட்சிக்குவிசுவாசமா இருக்கீங்க.. அவரு எங்க கூட்டம்போட்டாலும்  முன்னாடிபோயி  எல்லா ஏற்பாடும் செய்யறீங்க…அதைவிட  அந்த தீபக்கைவிட  நீங்க வயசில் மூத்தவரு. தீபக்குக்கு  இருந்திருந்து இருபத்திநாலுவயசுதான் இருக்கும். ஆனா  முப்பத்தி அஞ்சுவயசுல  கட்சிக்காக  முழுமூச்சா  பத்துவருஷமா உழைக்கிற  உங்க அருமை அவருக்குத்தெரியாம இருக்காது  ஆனாலும் .. எனக்கும் இதுல வருத்தம் தான்..” என்றாள் நெகிழ்ச்சியான  குரலில்.
“தலைவர்  நம்ம வீட்டுல  பையன் பொறந்த நாளுக்குவந்திருக்கிறாரு.. பொண்ணு டான்ஸ் அரங்கேற்றத்துக்குவந்து  தலைமைதாங்கி இருக்காரு…  எங்கப்பாவோட மணிவிழாக்குவந்தவரு  “செந்தில்மாதிரி உண்மையான விசுவாசமான இளைஞன் எனக்கு கட்சிக்குக்கிடச்சிருக்கிறது நான் செய்தபுண்ணியம்’னு   மைக்கில் எல்லாம் புகழந்தாரே.. ஆனா  என்னை அவர் பக்கம் நெருங்கவிடலையே… இன்னிக்கு மாநாட்டில்  அவர்பக்கத்துலபோயி நின்னு தேவையனாதை எடுத்துக்கொடுக்கப்போறது அந்த தீபக் தான். நான் மேடைக்குக்கீழேகூட்டத்தோடகூட்டமாய் உக்காந்திருக்கணும்.. வருத்தமா இருக்கு பத்மா”
“வருத்தப்பட்டு என்னங்க செய்யறது நடக்கறதுதான் நடக்கும்..”
செந்தில் குறைமனத்துடனேயே  மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்தான்.
தீபக்  செந்திலைப்பார்த்து  நக்கலாய்,” என்ன கும்பலில் கோவிந்தா போடப்போறியா?” என்றான்.
“போட்டாலும் ஒரே ஆளுக்குத்தான் போடுவேன் உன்னைமாதிரி பச்சோந்தி ஆளு கிடையாது நான்..” செந்திலும் சீறினான். சாய்ந்து விழ இருந்த கட்சிக்கொடியின் கம்பத்தை  நிமிர்த்துவைத்துவிட்டு  வந்தவர்களை கைகூப்பி அமர வைத்தான்.
“இந்தவாட்டி  இவருதான் தேர்தலில் ஜெயிக்கணும்..நல்ல மனம்கொண்டவரு. மக்கள் அபிமானம் இவர் மேல இப்போ நிறையத்திரும்புது. அதிகம்  பேசமாட்டார் ஆனா ஆழ்ந்துயோசிக்கிறமாதிரிதான் அவரது பேச்சும் செயலும் இருக்கும்..” மேடைக்குகீழ்  நாற்காலியில் அமரவந்த ஒரு வயதானவர் தன் தலைவரைப்புகழ்வதைக்காதாரக்கேட்டு குளிர்ந்துபோனான் செந்தில்.
“தமிழகம்  தழைக்கணும்.. அமைதிப்பூங்கா  ஆகணும்.  அடிக்கடி இங்கு நடக்கிற கலவரங்கள் அடங்கணும்..அதுக்கு தலைவா  நீ  வரணும்”  என்று  தன்னைமறந்து  உரக்கவே  சொல்லிக்கொண்ட செந்தில்  தூரத்தில் காரினின்றும் தலைவர் இறங்குவதைக்கண்டான்.
சட்டென கைகுவித்தான். இத்தனைக்கூட்டத்திலும் தலைவர் தன்னைக்கண்டுகொண்டு கை அசைத்தது சற்று நிம்மதியாய் இருந்தது.”என்ன செந்தில் எப்போ வந்த மாநாடு பணியெல்லாம் வழக்கம்போல்  சிறப்பா செய்துவிட்டாய் போலிருக்கிறதே சபாஷ்” என்றெல்லாம் வாய்விட்டுப்பாராட்டமாட்டார். அவர் கண்பேசும். இத்தனை நாளாய் அதுவே போதும் என்றிருந்த செந்திலுக்கு சமீபமாக தீபக்கை அந்தரங்க செயலாளராய் அவர் நியமித்த  நாள்முதலாய்த்தான்  நெஞ்சில் ஒரு நெருடல்.
மாநாடு மேடையில் தலைவருடன் விழாவில் பேசவந்த பிரமுகர்களும்  நாற்காலிகளில் அமர  தமிழ்த்தாய்வாழ்த்துடன் விழா ஆரம்பமானது.
தீபக்  ஏதோ  கட்சியையும் தலைவரையும்  தான் தாங்குவதுபோல  பரபரப்புடன் மேடையில் குறுக்கும் நெடுக்கும்நடந்துகொண்டிருந்தான்.
விழாவிற்குவந்தவர்களை  வரவேற்கும் விதமாய் ஒருவர் மைக் அருகில் வந்து நின்றார்.
தலைவர் மேடையினின்றும்  தன்னை தீட்சண்யமாய்ப்பார்ப்பதை  செந்தில் உணராமல் இல்லை.  சட்டென   தன் மொபைலில்  தலைவர் யாருடனோ மெல்லப் பேசிவிட்டு  மேடையில்  கவனமானார்.
வரவேற்புரை முடிந்தது. அடுத்து  விழாவிற்குவந்த ஒருப்ரமுகர் பேச  எழுந்தார்,
அப்போது,
மேடையில்  விண்ணைப்பிளக்கும் சத்தம்.  டமால்   என    வேட்டுபோட்டதுபோல காதைப்பிளந்தது. தீப்பொறி எழுந்தது.
ஐயோ அம்மா என்று அலறல்கள்.
“எவனோ மேடையில்  குண்டு வச்சிட்டான்  பாவி …”  யாரோ வீறிட்டார்,
செந்தில்  அதிர்ந்து மேடைக்கு ஓடினான்..தீபக் உடல் எரிந்தபடி மேடைக்குக்கீழேவிழ  தலைவர்  மேடைமூலையில் ரத்தவெள்ளத்தில்கிடந்தார்.
அங்கங்கே  நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
கூட்டம் சிதறியது கூக்குரல்கள்  கிளம்பின. ஓலங்கள்.
செந்திலின் போன் அலறியது, எடுத்தான்,
பத்மா என்றது திரை.
“என்னடி இந்த நேரத்தில்  இங்கெ தலைவரு..” என்பதற்குள் அவள்,”கொஞ்சமுன்னாடி தலைவரு எனக்கு போன் செய்தாரு ’அம்மாடி பத்மா…உன் புருஷன் எனக்கு  பெத்த மகன் மாதிரி.. அவனை காக்கவேண்டியது என் கடமை. காலம் அவனுக்கு அதைப்  புரியவைக்கும்’னாரு..  எனக்கு ஒண்ணூம் புரியல.. இப்ப டிவில  மாநாடு லைவ் பாக்குறேன். பதட்டமா  இருக்கு…என்னாச்சு? மேடையில் குண்டுவெடிப்புன்னு  நியூஸ் வருதே…  தலைவரைக்காப்பாத்துங்க..” என்று கதறினாள்.
செந்தில்  ’தலைவா ’என்று  பெரியகுரலில்  வீறிட்டு  நெருப்பு புகை நடுவே அவர் அருகே ஓடினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *