கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2025
பார்வையிட்டோர்: 636 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இதிலை முக்கியமான. விஷயம் என்ன தெரியுமோ?…-என்று கேட்டான், ரகு. 

“என்ன?” என்றது ஜெயா. 

“…ஒண்டை எடுத்த உடனை மற்ற இரண்டையும் விரிக்காமல் கிழிச்சு எறிஞ்சு போட வேணும்…”

“ஏனப்பிடி?” 

“அப்பதான் பலன் சரியாயிருக்கும்…” 

எனக்கு ரகுவில் ஆத்திரமாயிருந்தது. கொஞ்சம் அருவருப்பாயும். வாய் ஓயாமல் பகுத்தறிவு பற்றிப் பேசுகிற பயல் திருவு ளச் சீட்டுப் போட வழிமுறை சொல்லிக் கொடுக்கிறான்! 

“இப்ப ஒருக்கா எடுப்பமா, சித்தப்பா?” ஜெயா கேட்டது. 

“ஓ!…”

கடதாசித் துண்டு வெட்டிக்கொண்டு வர அவள் போன தும் ரகு சொன்னான். 

“அத்தான், புராணக் கதைகளிலை தவம் எண்டு படிச் சிருக்கிறம். ஆனா, இப்ப எங்கட பிள்ளைகள் யூனிவசிற்றி என்றன்சுக்குப் படிக்கிறதைப் பாக்கேக்குள்ளைதான் தவம் எண்ட சொல்லு வடிவா விளங்குது…” 

“அது சரி, இது என்ன?.” 

“வாற பதினெட்டாந் தேதி எக்ஸாம் தொடங்குது. என்ன நடக்குமெண்டு இது இரண்டு தரம் சீட்டுப் போட் டுப் பார்த்திருக்கு…… இரண்டு தரமும் ஃபெயில்….” ரகு முடிக்கமுன் ஜெயா திரும்பி வந்தது. 

“…கொண்டு வா, நான் எழுதுறன்” என்று கையை நீட்டினான். 


மூன்று சின்னச் சுருள்களையும் கைக்குள் குலுக்கிக் கொண்டு ஜெயாவிடம் சொன்னான். “ஒண்டிலை யூனிவசிற்றி. மற்றதிலை பாஸ், மூண்டாவதிலை ஃபெயில். ஆரை எடுக்கச் சொல்லப் போறாய்?” 

“மாமா எடுக்கட்டும்…” என்றது ஜெயா, என்னைப் பார்த்து. 

எனக்கு முன்னால் மேசையில் ரகு குலுக்கிப் போட்டதை வேண்டாவெறுப்பாக எடுக்கக் கை நீட்டும்போதே ஜெயா பரபரத்தது. 

“இந்தா, பிடி…” 

ரகு மற்றிரண்டையும் கிழித்தெறிந்தான். 

நான் கொடுத்த சுருளை பதட்டம் மாறாமலே விரித்தது, ஜெயா. பார்த்து விட்டுக் கீச்சிட்டது. 

“இஞ்ச பாருங்கோ…”

யூனிவசிற்றித் துண்டு. 

ரகு சிரித்தான். “பாத்தியா, இப்ப சரிதானே?”

“இன்னொருக்கா எடுத்துப் பாப்பம்……” ஜெயா ரண்டாந்தரம் கடதாசி வெட்டப் போனது. 

“அத்தான், ஜெயா மெடிக்கல் என்றன்ஸ் எடுக்குது. ஆனா, அதனுடைய நம்பிக்கைகளைப் பாத்தீங்களா? இந்தப் படிப்புக்களாலை என்ன பிரயோசனம்?” 

“அதுக்கு நீ என்ன செய்கிறாய்? இதுக்கும் பகுத்தறி வுக்கும் என்ன சம்பந்தம்?” 

“பரீட்சைகளே பகுத்தறிவுக்கு மாறான விஷயந்தானே…” ரகு சிரித்தான். 

திரும்பி வந்த ஜெயாவைப் பார்த்து, “இங்க தா…” என்று கையை நீட்டினான். இந்தத் தடவை, ஜெயா தானே எடுத்தது. விரித்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை. 

“இனி யோசியாமல் போய்ப் படி….” என்றான் ரகு, சிரித்துக் கொண்டு. 

அவள் போன பிறகு அவன் சொன்னான் 

“ஜெயா படிக்கிற உசாரைக் கூட்ட ஒரு பூஸ்ரர் தேவைப்பட்டுது…” 

“அதுக்கு?” 

“அவளுக்குச் சொல்லிப் போடாதையுங்கோ – மூண்டு துண்டிலும் யூனிவசிற்றி எண்டுதான் எழுதினேன்…”

– மல்லிகை, 1982.

– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *