மோகவாசல்




தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள்.
விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று.
இறைவனின் இதழ்களில் குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.

“தேவ தேவா!…எமைக் காத்தருள்க…” என தேவர்கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த சமுத்திரங்களின் குமுறல்களும் தோற்று அடங்கின.
இறைவன் மதனை அழைத்துவர பூதகனங்களை ஏவினான். கரும்பு வில்லும் பஞ்சமலர்களும் மணம் பரப்ப மதனம், அவனுடன் குளிந்த சிரத்துடன் ரதியும் வந்தனர்.
இறைவன் இதழ்களில் குமிண்சிரிப்பு மேலும் சற்றே விரிந்தது. ரதி நடுங்கினாள். தன் நாதனுக்காக ஏங்கினாள்.
விசுவாமித்திரன் சினத்தை ஈரேழு உலகமும் அறியும்.
அவனது தவத்துக்கு பெண்களால் குந்தகம் ஏற்பட ஏற்பட அவனது கோபாக்கினி கொழுந்துவிட்டு ஜ்வாலித்தது.
தேவர்கள் விடாப்பிடியாக முயன்றனர். ரிஷிகள் அதற்கு நெய் வார்த்தனர்.
சகல சம்பத்துகளம், நால்வகைச் சேனையும் விசாலித்த தேசத்தையும் உடைய கெளசிகராஜன் பிரம்ம ரிஷி என பட்டமும் பெற்ற விடுவானாகில்….
வசிஷ்டன் கர்வபங்கம் செய்யப்படுவான் என அவர்கள் ஏங்கினர்.
பெண்களால் உலகில் கலகம் விளையும் என்பது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது. என்ன தான் ஒரு பசுவேயாயினும், சபலையும் ஒரு பெண்ணினம் அன்றோ? அவளை மோகித்து, வசிஷ்டனிடம் இச்சித்ததனால் அல்லவா கெளசிகராஜன் கடும் விரதம் அனுஷ்டிக்க விதியுண்டாயிற்று.
விசுவாமித்திரனுக்கு பெண்களை எண்ண எண்ண சினம் பொங்கிற்று.
தேவர்கள் சளைத்து விடாமல் அப்சரஸ¤களை மாறி மாறி ஏவினர். முனிவனம் தன்வயமிழந்து சபித்தல் தொடர்ந்தது. நீண்ட நெடுங்காலமாக தபஸ் இருந்து தான்பெற்ற ஆற்றல்களையெல்லாம் விசுவாமித்திரன் நொடிப் பொழுதுகளில் இழந்தான்.
மீண்டு பூரக ரேசக முதலிய அட்டவாயுக்களையும், ஐம்புலன்களையும் மிகமுயன்று அடக்கி நிர்ச்சிந்தையாக லயிக்க முயன்றான்.
தேவர்கள் மறுபடி மறுபடி இறைவனிடம் ஓடினர்.
இறைவன் மேனகையை அழைத்துவர பூதகணங்களை ஏவினான்.
வனத்தில் வசந்தம் பூத்துக் குலுங்கிற்று. மலர்களின் நறுமணமும், தேறலின் போதையும் தித்திப்பும் எங்கும் நிறைந்தன. காட்டுப்பட்சிகளின் உல்லாசமிருந்த கூவல் ஒலிகளும், வனவிலங்குகளின் வேட்கை ததும்பும் கனைப்பு ஒலிகளும் எங்கும் எதிரொலித்தன.
முனிவனது சிந்தை தடுமாறிற்று. மதன் தருணம் அறிந்து குறிபிசகாமல் கணை தொடுத்தான்.
கூடவே, மின்னல் ஒன்றைப் பற்றியவனாய் மேனகை பூமியில் குதித்தாள்.
அவளது தேகத்தை தழுவிய காற்றைச் சுவாசித்ததுமே, முனிவன் சிலிர்த்தான். மிருக வேட்கையினால் அலைப்புற்றான். முன்னே, ராஜனாயிருந்த காலத்தில் போகசமுத்திரங்களில் சளைக்காது நீந்தித் திளைத்தவனல்லவா?
தாபத்துடன் ‘மேனகா’ என முனிவன் கூவி அழைத்தான்.
தேவர்கள் கனிகொண்டு துள்ளினர். விழிகளில் விஷக்கிறக்கம்.
ரதிதேவி ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். தன் நாதன் தோள்களில் சாய்ந்தாள்.
கீழே பூமியில்; மேனகை முனிவனை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
முனிவனது விரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. ஈவிரக்கமற்ற அவனது உண்மைதேடல் தளர்த்தப்பட்டது. ஒரேவிதமான சலிப்பூட்டும் தடத்திலே அவனது வாழ்க்கை செல்லலாயிற்று. திகட்டும் வரை மேனகையை அவன் தழுவிக் கிடந்தான்.
ஞானத்தை எய்துவதற்கு பதில், குழந்தையை ஏந்த வேண்டிய வனானான் முனிவன்!
முனிவனின் காய்த்துப் போன கரங்களில் குழந்தை வீரிட்டழுதது. விதி சிரித்தது. கானகம் மானிட வாழ்வின் விசித்திரங்களை தா¢சித்ததில், பெருமூச்செறிந்து ஓய்ந்தது.
மேனகைக்கு முனிவனிடம் சலிப்புத் தட்டிற்று. முனிவனது தழுவல்களில் முன்புபோல மூழ்கடிக்கும் ஆவேசம் இருக்கவில்லை. தவிர, தேவலோகத்தின் செளகர்ய வாழ்வு எங்கே, கிழங்கையும், கனியையும் புசித்து தர்ப்பையின் மீது உறங்கும் இந்த மானிடன் எங்கே?
போகப்போக முனிவனின் உடலில் இன்ப வேட்கை குன்றிற்று. ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருந்த இந்திரியங்கள் பீரிட்டுப் பாய்ந்து சென்றதும், முனிவனுக்கு பெண்ணைக் கூடுவதில் ஒருவிதமான யந்திரீகப் பாங்கு மேலோங்கிற்று. மேனகையின் மேனியில் புதுமை எதுவுமில்லாமல் போவதாகத் தெரிந்தது. அவள் ஒர சாதாரண பெண்ணே போன்று தோன்றினாள். அவளைக் காண்பதில் சலிப்பும், வெறுப்பும் தோன்றியது.
முனிவன் ‘திருதிரு’ வென விழித்தான்.
வீணை ஒலி தூரே கேட்டது. நாதனின் மிதியடிகளின் ஓசையும் கலந்து வந்தது.
கிண்டலுக்கும், கலகத்துக்கும் பெயர் பெற்ற நாரதன்…
முனிவன் கூனிக் குறுகி நின்றான். அதலபாதாளத்தில் வீழ்ந்து புரள்வதாய் உழன்றான்.
ஒரு பொறி தட்டிற்று.
மோகம் என்பது ஒருவாசல் தான். கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அலங்காரமான மாயாவாசல். அந்த வாசலை ஒருதரம் நிதானமாக கடந்துவிட்டால் அதற்குமப்பால் பெரும் அதிசயங்கள் ஒன்றும் நிகழக்காத்திருக்கவில்லை, என முனிவன் உணர்ந்தான். மேகவாசலைக்கடக்கும் தருணத்தில் ஏற்படும் கணநேரச் சிலிப்புக்காக, ஆண்டாண்டு காலமாக கட்டி வளர்த்த தனது தேஜஸை இழந்து விட்டோமே எனக்கலங்கினான்.
வசிஷ்டனின் பரிகாசத்துக்கு ஆளாவோமே எனவெண்ணி ஏங்கினான்.
முனிவன் மேனகையை கடைசித் தடவையாக அழைத்தான். அவனது குரலில் வழமைக்கு மாறான ஏதோ ஒன்று இருந்தது.
மேனகை அஞ்சினாள். சாபத்தை எதிர்கொள்ள, நடுங்கும் இதழ்களுடன் காத்து நின்றாள்.
முனிவனோ, ஒரு சிசுவை ஏந்துதல் போன்று அவளை மென்மையாகத் தழுவி நேத்திரங்களிலும், நுதலிலும் முதத்தமிட்டான்.
“போய் வா மேனகா!…ஞானத்தின் வாசற்கதவை நீ எனக்காகத் திறந்து விட்டாய்!!”
மேனகையை அழைத்துச் செல்ல மின்னல்கள் இறங்க ஆரம்பித்தன.
ஸ்வாமி…தங்களது குழந்தை….?”
“குழந்தை என்னுடையதல்ல பெண்ணே….அது பூமியின் புத்திரன்….. பூமி அவனைக் காக்கட்டும்.” என்று மிகத்தெளிவுடன் பதில் சொன்னான் விசுவாமித்திரன்.
முனிவன் தனது பயணத்தை மீண்டும் மிக நிதானத்துடன் ஆரம்பித்தான். மிகவடர்ந்த கானகங்களையும் பனிபடர்ந்த மலைகளையும் நோக்கி அவன் சென்றான்.
மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள். அவனது பாததூளியை எடுத்து சிரசில் தரித்துக் கொண்டு, பிரகாசமான ஒரு மின்னலுடன் மறைந்தாள்.
நிராதரவாக விடப்பட்ட குழந்தை அழுதது. வாழ்க்கை எதிரே நின்று அதைப் பயமுறுத்தியது. அழட்டும்! பூமியில் பிறந்தவர்கள் அழாமல் இருத்தல் கூடுமா?
விசுவாமித்திரனின் உறுதி மிக்க பயணத்தைக் கண்டு தேவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ரிஷிகள் இடிந்தனர்.
“ஹே!…முனிசிரேஷ்ட, உனது இஷ்டசித்தியை நீ அடைவாய்” என ஒரு அசரிரி முழங்கிற்று.
தேவலோகம்.
இறைவன் முகத்தில் சதா குமிண்சிரிப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
இறைவிக்கு ஒரே வியப்பு. கூடவே சந்தேகம்.
“நாதா, தாங்கள் முனிவனுக்கு உதவி செய்தீர்களா, அல்ல தேவர்களுக்கா?”
“யாருக்கும் எனது உதவி தேவையில்லை, உபத்திரவமும் தேவையில்லை. அவரவர் அவரவருக்குரிய பாதையில் செல்லட்டும். இடையிடையே நான் கொஞ்சம் விளையாடுவேன். அதிலொரு இன்பம்! பொழுது போகாதே!!” என அலுத்துக்கொண்டான் இறைவன்.
நிசப்தம்.
– மோகவாசல் – ரஞ்சகுமாரின் சிறுகதைகள் (நன்றி: http://www.projectmadurai.org/)
– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.