கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 1,055 
 
 

நான்கு பிரதான சாலைகள் வெட்டிக் கொள்ளும் நாற்சந்தியில்தான் நாயர் டீக்கடை எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இரு சாலைகளுக்கு நிழல் தரும் பருத்த தூர் கொண்ட தூங்கு மூஞ்சி மரத்தின் நிழலில் ‘வேம்புலி அம்மன் பாரம் ஏற்றும் இறக்கும் தொழிலாளர்கள் சங்கம்’-கீற்று கொட்டாயில் எப்போதும் ஆடுபுலி ஆட்டத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

‘லூசு’, என்ற அழைச் சொல் கொண்ட மில்லர், நாயர் கடையில் கழுவுவதும், துடைப்பதும், பக்கத்து எதிர் கம்பனியில் தண்ணீர் எடுத்து வந்து தொட்டியை நிரப்புவதும் என ஒரு நாள் முழுக்க சளைக்காமல் செய்யும் பணி அவனுடையது.

“மாஸ்டர், ஒரு டீ போடுங்க”

இன்றைய மாவட்ட செய்திகளை தினசரியில் புரட்டும் போது நேற்று மாலை இதே இடத்தில் நடந்த சம்பவம் அது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுனர் அரசு மருத்துவ மனையில் இறந்தும் போனார் என்ற செய்தியை படித்த போது மனம் கனத்துப் போனது.

டீக்கடை-சுமைதாங்கும் மண்ணின் மைந்தர்கள்-லூசு-பரபரப்பான பாதசாரிகள்-சற்று நேரத்திற்கு முன் என்ன நடந்தது என அறியாமல் யதார்த்தமாக தெரியும் வெளி-வானத்தில் வட்டமிடும் பட்சிகள் இவையெல்லாம் ஒரு கும்பல் கொலைக்கு முக்கிய சாட்சிகளாக இருந்தும்…

போதுமான ஆதாரங்கள் இல்லையென முதல் தகவல் அறிக்கையிலே நின்று போனது வழக்கு.

தேனீரை சுவைக்க மனம் வரவில்லை.

“நாயரே, ‘பற’னா மலையாளத்துல என்ன அர்த்தம் சொல்லு?”  

“நீ டீக்கு கூட காசு தர வேணாம் இடத்த காலி பண்ணு!”

நேற்று மாலை 5.30 மணிக்கு….

பிரதான சாலையில் டயர் தேயும் சப்தம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

“பாத்துப் போயா”

“எந்தா பறையிது”

” ……………..”

“பறடா பற!”

தண்ணீர் குடத்தை சாலையில் கவிழ்த்திவிட்டு கொட்டாயிக்கு ஓடினான் லூசு.

“அண்ணே! என்ன பறையன்னு சொல்றான் அந்த டிரைவரு”

நின்றது ஆடுபுலி ஆட்டம். கொட்டாயின் கம்புகள் உருவப்பட்டது.இருக்கையில் இருந்த ஓட்டுனரின் பிடரியை நெட்டித் தள்ளியதும், காலால் போட்டு மிதித்தனர்.பின்பு, அருகில் உள்ள கால்வாயில் முக்கி வெளியே எடுத்துப் போட்டு, உலவம் பஞ்சு மெத்தையை தட்டுவது போல் தட்டி, மீண்டும் தூக்கி ஓட்டுனர் இருக்கையில் போட்டுவிட்டு சென்றது கும்பல்.

ஆட்கள் அற்றுப் போன பேருந்துள் ஓட்டுனரின் ஓலம் மட்டும் ஈனஸ்வரமாக கேட்டது.வானத்தில் வட்டமிடும் கழுகுக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டும் தூர தேசத்தில் உள்ள தாயின், மனைவியின்,மற்றும் குழந்தைகளின் அலறல் சப்தம்.

எல்லாம் முடிந்த பின் எப்போதும் போல் தாமதமாக வந்த காவல் வாகனம் சாட்சிகளை ஒதுக்கிவிட்டு நடந்தது சாலை விபத்தென்று சிருஷ்டிப்பு செய்தது.

சில நிமிடங்களுக்குள்ளேயே ஒன்றும் நடக்காதது போல் வாகனாதிகள் ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டிருந்தது.!

– ‘மலர்வனம்’ மின்னிதழில் ஜூன் 2021ல் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *