மையத்து முகம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 1,151
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அது ஒரு திங்கட்கிழமை காலை 7 மணி.
அவன் அந்த வீதியின் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் நீண்ட நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறான்.
வெள்ளை வெளேரென்று சீருடை, மின்னும் கறுப்புச் சப்பாத்து. அன்றைய தேவைக்கு வேண்டிய பாடநூல்களும் குறிப்புப் புத்தகங் களும் அடங்கிய ஒரு சிறு கையடக்கப்பை.
இவைகளால் ஏற்படும் கல்லூரி மாணவ கோலத்துடன் வழக்கம் போல் அந்தரப்பட்டுக் கொண்டிருக்கிறான் பஸ்ஸுக்காக.
தலைநகரின் ஒரு பிரபல சர்வதேசக் கல்லூரிக்கு, நேரத்திற்குச் செல்ல வேண்டிய உந்துதல் அவனுக்கு, பாடவேளைகளைத் தவற விடக் கூடாதே என்ற தவிப்பு!
சரியாகப் பதினைந்து நிமிடங்கள் வெறுமனே ஊர்ந்து சென்று விட்டன. பேருந்துகளைத்தான் காணவில்லை.
தொழிலுக்குச் செல்லும் ஆண், பெண் தொழிலாளர், பாடசாலைச் சிறுவர்கள், உயர்வகுப்பு மாணவர்கள் என்று ஒரே சந்தடி. கூட்டம் பெருகப் பெருக….
கிழக்கிலிருந்து காலைக் கதிர்கள் சுட்டெரிப்பதற்காகவே உதயமாகி முன்னேறிக் கொண்டிருந்தன தம்பாட்டிற்கு.
சொல்லப் போனால் அந்தப் பாதையில் ஸ்ரீலங்கா போக்கு வரத்துச் சபையின் சேவை சரியான நேர ஒழுங்கிற்குக் கட்டுப்படுவ தில்லை என்பது என்னவோ உண்மைதான். பிரயாணிகளின் அவசரம் பற்றிய சிந்தனை அவற்றிற்குக் கிஞ்சித்தும் கிடையாது. பெரும்பாலும் நோகாமல் தனியார் பேருந்துகளுக்காக விட்டுக் கொடுக்கும் தாராள மனப்பான்மை . அப்படியும் ஒன்றையும் காணோம். தாமதமாகி…. தாமதமாகி….
பொறுமை இழந்து பையிலிருந்த கடிகாரத்தை எடுத்து நோட்டமிடுகின்றான்.
இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள் கல்லூரி வளவிற்குள் சமூகமளித் திருக்க வேண்டும். முதலாவது பாடவேளை வர்த்தகமும் கணக்கியலும்.
சில ஆட்டோக்காரர்கள் ஆட்டோவை நிறுத்தி ‘போவமா?’ எனத் தலையசைத்துப் பிரயாணிகளைக் கேட்டடிபடி ஆமை வேகத்தில் ஆட்டோவை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
அவனைப் பொறுத்தவரையில் ஆட்டோவில் போவதென்றால் நூறு ரூபா தேவை. கையில் அன்றைய தேவைக்கு அவன் கொண்டு வந்ததே அறுபது ரூபா மட்டுந்தான்!
சட்டைப்பையில் இருந்த கொஞ்ச நாணயக் குத்திகள் சலசலவென்று நகைத்துக்கொண்டிருந்தன.
இந்த அவசரத்திலும் அவன் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு பெரியார் அவனை ஈர்த்தார்.
அவனைப் போலவே அவரும் அங்கும் இங்கும் நடந்து தனது ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னைப் போன்ற பிரயாணியே அவருமென்பதை அவன் அறிந்து கொண்டான்.
அவனைப் போலவே அவருக்கும் ஒரு பெரிய அவசரம் அல்லது அவசியம் இருக்குமாப் போலத் தோன்றியது. அவரவரது அவசரமும் அவசியமும் அவரவருக்கு முக்கியந்தானே!
‘இந்த வயதிலும் அவர் எங்கே போகப் பதட்டப்படுகிறார்….?’
அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது கேள்வியொன்று.
ஒருவேளை எங்கேயோ கிராமப்புறத்திலிருந்து இங்கே வந்து அலுவல் முடிந்த கையோடு ஊருக்குத் திரும்பிப் போகப் போகிறாரோ…? அல்லது வேறு ஏதும் அவசரமோ ….?
கல்யாண வீடு…. மையவீடு…. என்று ஏதாவது? அப்படி இருக்காது. உடுத்தியிருக்கும் உடுப்பு அப்படிக் காட்டவில்லை.
அப்படியாயிருந்தால் தூர இருந்து இப்பதான் மாநகருக்கு பிரசன்னமாகி வழிகள் புலப்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாரோ….?
‘ஏன் சும்மா அதையும் இதையும் கற்பனை பண்ணி சும்மா மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும்…..?’
அவனுக்கு எங்கிருந்தோ ஒரு துணிச்சல் வந்தது. நேரடியாகக் கேட்டுவிட்டால் சரிதானே!
ஒரு கணம் யோசித்துவிட்டு, மிகவும் மரியாதையாக –
“ஐயா….. அவசரமோ ….?”
அவன் குரலில் மிகுந்த ஆர்வம் தொனித்தது.
இரண்டு முறை பேச்சுக் கொடுத்தான்.
ஒரு பதிலும் இல்லை !
‘ஏன் இப்படி…?’
அவன் குரலை அவர் காதால் உள்வாங்கினாரோ…? அல்லது செவிப் பறையும் அடைத்துக் கொண்டதோ….? வயது காரணமாக…. அல்லது இந்த இளசு நையாண்டி செய்கிறான்’ என்று நினைத்துத் தவிர்த்துக் கொண்டாரோ…..
அதற்கு மேல் அவனும் அலட்டிக் கொள்ளவில்லை.
‘சரிதான்’ என்று விட்டுவிட்டான்.
ஆனாலும் பெரியவரில் அவனுக்கு அலாதியானதொரு பிரியம், பற்று, பாசம் அவரை மென்மேலும் அவதானிக்க வேண்டும் என்றொரு உந்துதல் மட்டும் அவன் மனதில் பெருகிற்று.
எப்படியும் அறுபத்தைந்து எழுபது மதிக்கலாம். உயரம் ஐந்தடியைத் தாண்டி சற்றுச் சில அங்குலங்கள் கூடியிருக்கும்.
புதிய உடைகள் கூட….! ‘இந்தக் கிழடா என்னை தரித்துக் கொள்ள விரும்புகிறது…. சே! வெறுப்பாயிருக்கு’ என்று மறுத்துவிட்டதோ…..?
மடிப்புக் கலையாத பழைய அரைக்கை புஷ்கோட்….’ கோப்பிக் காலத்துப் பிசங்கிப் போன நீட்டுக் காற்சட்டை…. நிறங்களுக்கு அடங்காத ஏதோ ஒரு புதிய நிறம்… வயதைப் போல அதன் நிறமும் மங்கிப் போய்விட்டது. ஆனால் அதன் மடிப்புகளையும் சுருக்கங்களையும் உன்னிப்பாகப் பார்த்தால் ஏதும் அவசரப் பயணங்களுக்கு மட்டுந்தான் பெட்டியிலிருந்து எடுத்துத் தூசு தட்டிக் கொள்வார் என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.
கமகமவென்று கற்பூர வாசனை வீசியிருக்க வேண்டும். ஓரிரு நிமிடங்களுக்கு. இனி அவற்றிற்கும் குப்பைக் கூடைக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது!
‘இப்ப என்ன அப்படி அவசரப் பயணமோ ? யாருக்குத் தெரியும்…?’
எண்ணெய்ப் பசை மின்னும் கேசத்தின் அரைவாசியை, வெள்ளை நிறம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. சீப்பால் மேலே வாரிவிட்டிருக்கிறார். சீப்புக்கு அடங்காத இரண்டொரு அடங்காப்பிடாரி வெள்ளி முடிகள் வெயிலில் உலர்ந்து காற்றில் பறந்து காதுகளில் ஏதோ இரகசியம் சொல்கிறது.
ஆள் சாதாரண பொது நிறம்தான். மூக்குக்கண்ணாடி வேறுவயதைக் கூட்டிக் காட்டுகிறது.
கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது ஓர் அளவான பிரயாணப் பை.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அவர் வாழ்க்கை வறுமைக் கோட்டில்தான் நிற்கிறது.
இளைஞனுக்கு இப்பொழுது கல்லூரிக்குப் போவதைவிட முதியவரை அவதானித்துக் கொண்டிருப்பதிலேயே பொழுது போய்க்கொண்டிருக்கிறது.
அப்பாடா நீண்ட இடைவெளிக்குப் பின் அவனுக்கு ஆறுதல் கிடைத்தது. கோடை வெயிலில் நடந்தவனுக்கு மரநிழல் கிடைத்தது போல்….!
பேருந்து வந்து நின்றது.
வௌவால்கள் தொங்கிக் கொண்டிருப்பது போல் அதில் பிரயாணிகள்.
ஒரு காலையேனும் ஊன்றிப் பதித்துக் கொள்ள வேண்டும். தரிப்பில் ஒருவரைத் தள்ளிவிட்டு இருவரை ‘இறுக்கிக் கொண்டு சென்றுவிட்டது பஸ்.
பெரியவரின் அவசரத்திற்குப் படுதோல்வி.
அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தே வெறுப்படைந்த நிலையில் மீண்டும் பெரியவரைப் பார்த்தான். ஆர்வம் காரணமாகப் பேச்சுக் கொடுத்தான்.
ஒரு விரக்தியான புன்முறுவல் மின்வெட்டுப் போல தோன்றி மறைகிறது.
அவனுக்கோ அவர் ஆயிரம் சொற்கள் பேசியது போல் பெருமகிழ்ச்சி. புளகம்.
அந்தப் புன்னகை, என்ன அற்புதம்!
பல நிமிடங்களாக ஒன்றும் பேசாதிருந்தவன், மீண்டும் குரல் கொடுத்தான். ஒரேயொரு கேள்வியை மட்டும் கேட்டு வைத்தான். முன் பின் அறிமுகமில்லாத ஒருவரைப் பார்த்து அப்படிக் கேட்பது நாகரிகமல்லத்தான். இருந்தாலும் மனம் கேட்கவில்லை. கேட்டுவிட்டான்.
“ஐயா, எங்கே போகோணும்….?”
“தம்பி நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தன். நீயும் என்னோட பேச எவ்வளவோ தெண்டிச்ச…. நான் சும்மா இருந்திட்டேன்னு நினைக்காத. உன் னோட பேசத்தான் எனக்கும் ஆசை. ஒருவர் பேசினா மறுமொழி சொல்லணும் அதுதானே மரியாதை! ஆனா உனக்கு கோபம் வருதான்னு பார்க்கத்தான் இப்படி செஞ்சன். உண்மைய சொல்லப் போனா நான்தான் உன்னோடு பேச மிச்சம் ஆவலாய் இருந்தேன். நீ என்னோட பேசத் தெண்டிக்கிற போதெல்லாம் நா உன்ன பார்க்காத மாதிரி…. உன்னோட எப்படி பேசறது என்று யோசிச்சிக்கிட்டு இருந்தேன்…”
இதைக் கேட்டதும் அவனுக்கு மனம் பூரித்துப் போய்விட்டது.
அவர் செவிடு அல்ல. அவன் கேள்விகளைக் காதாரக் கேட்டுக் கொண்டுதான் இருந்தாரென்பதை உணர்ந்தான்.
“நான் பெரியவங்கள மதித்து மரியாதை கொடுப்பவன்…. எனக்கு கோபம் வராது பெரியவர்….”
“நா அத புரிஞ்சிக்கிட்டன் தம்பி…. இனி பெரியவர் என்று சொல்லாத, விரும்பினா அங்கிள் என்றே சொல்லு”
அவர்களுக்கிடையே ஓர் ஆழ்ந்த நட்புறவு, அந்யோன்யம் முகிழ்த்தது.
பல வருடங்களாகப் பேசிப் பழகியது போல் நெருக்கமான சிநேக மனப் பான்மை மிளிர்ந்தது.
நேரம் போய்க்கொண்டிருக்கிறதே என்று அவர்கள் கவலைப்படவில்லை.
நீடித்த மௌனத்தை உடைத்துக் கொண்டு –
“தம்பி…. வா டீ குடிச்சிட்டு வருவம்…”
அந்த அன்பு நிறைந்த அழைப்பை மீற முடியவில்லை அவனால்.
மூத்தவரும் இளையவரும் பலதும் பத்தும் பேசிக் கொண்டே, சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய தேநீர்க்கடைக்குள் புகுந்தனர்.
தேசத்தில் மூண்ட போரின் இழப்புகளை வகைப்படுத்தினால், கொல்லப் பட்டவர்கள், அங்கவீனர்களானவர்கள், விதவைகள், காணாமற் போனவர்கள், ஆரோக்கியமான மனநிலைகளை இழந்தவர்கள், நெருங்கிய உறவுகள் பொருளாதாரம், காணி பூமி, வீடு வாசல்களை இழந்தவர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்……
பெரியவரைப் பொறுத்தவரையில் நோய்வாய்ப்பட்டவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
வவுனியாவில் ஒரு வியாபார ஸ்தாபனத்தில் தொழில் செய்யும் பெரியவரின் மூத்தமகனுக்கு சிறு பிரச்சினை என்று செய்தி வந்ததும், எப்படிப் பதறிப் போனார்!
மகனை வீட்டுக்குக் கொண்டு வருவதிலும், தோட்டத்திலேயே ஒரு தொழிலைப் பெற்றுத் தருவதிலும், சொந்தத்திற்குள்ளேயே மூத்தமகள் கதீஜாவுக்குப் பேசி வைத்திருந்த திருமணம், போக்குவரத்துச் சிக்கல் காரணமாகத் தாமதமாகிக் கொண்டிருந்ததாலும்….
பெரியவரை இருதய நோயாளியாக்கி விட்டிருந்தது.
“தம்பி, என்ன சாப்பிடறே…?”
“நான் காலைச் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறன் அங்கிள்…” என்று கூறிக் கொண்டே புத்தகப் பையைத் துழாவிக் கொண்டிருந்தான்.
“என்ன…கொண்டுவர மறந்துட்டியா?”
“எடுத்துவச்ச டிபன் கரியரை போட மறந்திட்டேன் போலிருக்கு”
“சரி…சரி…அதனால பரவாயில்ல… இடியப்பம் சாப்பிடுவம்”
இருவரும்…கறியுடன் இடியப்பம் சாப்பிட்டுவிட்டு ஆவி பறக்கும் தேநீர் அருந்தினர்.
சிறிது நேரம் மனம் விட்டுப் பேசத் தொடங்கி… முகவரி, தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டனர்.
“தம்பி…நா உன்னிடம் ஒரு உதவி கேட்கலாம் என்று யோசிக்கிறன்…”
“என்ன உதவி…. முடிஞ்சா கட்டாயம் செய்வன்தானே அங்கிள்…”
அவன் உள்ளத்தில் முகிழ்ந்து கொண்டிருந்த பாசம் அவன் குரலில் பிரவகித்தது.
“நீ செய்வே, அது எனக்குத் தெரியும். ஆனா இண்டக்கி, உன்ட பாடசாலை படிப்பு வீணாப் போய்டுமே என்றுதான் யோசிக்கிறன்…”
“…என்ன உதவி எண்டு சொல்லுங்க…”
“…நா ரத்தினபுரியிலிருந்து வந்து ரெண்டு மூணு நாளாகுது. புறப்படுற நேரம், என்ட மருந்து மாத்திரைகள கையோடு எடுக்காம மறந்துட்டன். இப்ப என்னடான்னா தலையை சுத்திக்கிட்டு இருக்கு, உடம்பை என்னவோ செய்யுது….. இந்த லட்சணத்தில பஸ்ஸில அவ்வளவு தூரம் தனியே போக முடியுமோ எண்டு யோசனயா கிடக்கு…. அதான் நீமுடிஞ்சா என்ன வீட்டில் கொண்டு போய் விட்டிட்டு வரமுடியுமா…? பெரிய உதவி…”
அவன் ஆழ்ந்த யோசனையில் மூழ்கத் தொடங்கிவிட்டான்.
ஒரு நோயாளி இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளார். அவருக்கு உதவுவது தர்மந்தானே!
“இன்டக்கி என்னமோ.. பஸ்வண்டி லேட், இப்பவே இரண்டு பாடவேளை சும்மாவே போய்க்கொண்டிருக்கு…”
“என்ன தம்பியோசிக்கிற…..?”
“எங்கள இப்படி இணைச்சு வெக்கத்தான் பஸ் இன்னும் வராம இருக்கோ….?” பிரச்சினை இல்ல அங்கிள் வாங்க வீட்டுக்குக் கொண்டு போய் விட்டிட்டு வாறன்”
“சந்தோஷம் தம்பி…! பெரிய உதவி” என்று சொல்லி முடிப்பதற்குள் நா தழுதழுக்க பெரியவரின் பேச்சு இறப்பரைப் போல இழுபட்டது. தடுமாறிப் போய்விட்டார்.
முகத்தில் மட்டும் அலாதியானதொரு புன்னகை மலர்ந்தது.
சற்று நேரம் நிலவிய மௌனத்தை உடைத்துக் கொண்டு மூத்தவர் பில்; கட்டினார்.
“ஹோல்ட்டுக்கு போவோமா?” மூத்தவர் இளையவரைக் கேட்டார்.
“அங்கிள் ஒங்களுக்கு தலைச்சுத்து, வெயில் வேறெ ஏறிக்கிட்டு இருக்கு… கூரை இல்லாத தரிப்பிடத்தில் நிற்கிறது கூடாதுதானே….?”
மீண்டும் அந்த அலாதியான புன்னகை.
“என்ன செய்யிறது எப்படியும் போகத்தானே வேணும்… தம்பி! ஒங்கிட்ட ஒன்னு கேட்கட்டா? இந்த உலகமே ஒரு ‘நாடக மேடை’ன்னு சொல்லி யிருக்காங்க…. நீ கேள்விப்பட்டிருக்கிறியா?”
“கேள்விப்பட்டிருக்கிறன் அங்கிள். அப்படியாயிருந்தா நாங்க எல்லாரும் நடிகர்களா…?”
“நிச்சயமா…இப்பவும் நாங்க நடிச்சிக்கிட்டுத்தான் இருக்கிறோம்… வேண்டிய ஆட்டத்தை ஆடிப்பாடி…. கூத்தாடி போய்ச் சேர வேண்டியதுதான்… ஆட்டம் துக்கமாக இருக்கலாம், சந்தோஷமாக இருக்கலாம்…. அதெல்லாம் நியதிப்படி நடக்கும்…”
“உண்மைதான் அங்கிள்… இப்பதானே விளங்குது”
“ஆனா தம்பி… ஒரு திருத்தம். நாடக மேடை எண்டு சொல்றதும் சரிதான். அதைவிட தரிப்பிடம் எண்டு சொல்றதுதான் பொருத்தம் போலிருக்கு”
“சரியா சொன்னீங்க அங்கிள்… உலகம் ஒரு தரிப்பிடம்தான்… சந்தேகமில்ல.”
இருவரும் மீண்டும் பஸ் தரிப்பிடத்திற்கு நடந்தனர்.
சற்றுக் களைப்பாக இருந்தாலும் பெரியவர் மீண்டும் உணர்ச்சிவசப்படாமல் சாதாரணமாகப் பேசினார்.
இருவரும் தரிப்பில் வந்ததும் பெரியவர் வானத்தை வெறித்துப் பார்த்தார். வானம் நீலமாய்த் தெளிவாக இருந்தது.
அந்தப் பார்வையில் தனது மூத்தமகள் கதீஜாவுக்குத் திருமணம் நடந்து சந்தோஷமாக வாழ்வதும் ஒரு கற்பனையாக நிழலாடியது.
அந்த மகிழ்ச்சியில் – அவர் முகம் புன்னகையில் ஜொலித்தது.
தரிப்பிடத்தில் ஒவ்வொருவரது கவனமும் சூடு பிடித்துக் கொண்டிருந்தது.
‘பயணம் சுணங்கிப் போகுதே’
‘ஒரு வண்டியையும் காணோமே’ என்ற எண்ணங்களில் லயித்துப் போய் வெறுப்படைந்திருக்கிற அந்தப் பொல்லாத நேரத்தில்தான் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
பெரியவர் என்ன நினைத்தாரோ, விசாலமான அந்தச் சாலையின் மறுமுனைக்குப் போக குறுக்காகக் கடந்திருக்கிறார்.
தண்ணீர் வசதியுடன் மறுமுனையிலுள்ள மலசல கூடத்திற்குப் போக எத்தனித்திருக்கலாம். அந்த நேரத்தில் அவதியுறும் பிரயாணிகளின் மனக் கிடக்கையை நன்கு உள்வாங்கிக் கொண்டது போல் இலங்கை போக்குவரத்துச் சேவை பேருந்தொன்று வேகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தது.
பல்வேறு யோசனைகளுடன் குறுக்காக நடந்த பெரியவர் இதைக் கவனிக்க வில்லை. மோதித் தள்ளிவிட்டது. மோதுண்ட பெரியவர் சாலையின் பள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
வண்டி ஸ்தம்பித்து நின்றதும் மளமளவென்று பிரயாணிகள் இறங்கிக் கூட்டம் போட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரே இரைச்சல்.
அவன் மனம் சுக்கு நூறாக உடைந்து போய் பொறுப்பற்ற ஜடங்களுக்கு மத்தியில் மிகுந்த அக்கறையுடன் இயங்கினான். ஓட்டுனருடனும், நடாத்துனருடனும் சுறுசுறுப்பாக ஒத்துழைத்தான்.
ஒரு நிமிடமேனும் தாமதிக்காமல் இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த பெரியவரைத் தூக்கி அவசர அவசரமாக ஒரு ஓட்டோவில் ஏற்றி அவனும் நடாத்துனரும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு மேற்கொண்டும் அலுவல்களில் ஈடுபட்டார்கள்.
நாடகத்தில் அவரது நடிப்புக்குத் திரை விழுந்துவிட்டது. தரிப்பிடத்தில் பிரயாணச் சீட்டு கிடைத்துவிட்டது. வைத்தியர்களின் பிரயத்தனம் வெற்றியளிக்கவில்லை .
சில முக்கிய கடமைகளில் அவனும் ஒரு சாட்சியாக இருந்து கருமங்களை நிறைவேற்றினான்.
இனி உறவினர்கள் வந்து அடையாளங்களைக் காட்டி ‘ஜனாசாவை எடுத்துச் செல்ல வேண்டும்.
கண்டக்டர் பெரியவரின் சட்டைப்பையைத் துழாவி அடையாள அட்டையையும் தொலைபேசி எண்களையும் எடுத்து அவனிடம் நீட்டினார்.
சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுருக்கமாக அந்தச் சோக சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டுவது போல…அறிவித்தபோது எதிர்முனையில் தோன்றிய அலறல் அவன் காதுகளைத் துளைத்துவிட்டது.
உறவினர்கள் உடனே புறப்பட்டு வந்து செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார்கள் என்று உறுதியளித்தார்கள்.
சே! ஒரு குற்ற உணர்வு அவன் நெஞ்சை அழுத்தியது.
பேருந்து தரிப்பிடத்தில் அவருடன் மகிழ்ச்சியாக உரையாடியும் இரத்தின புரிக்கு அவருடன் வருவதாக வாக்களித்து ஒரு செக்கனில் அவன் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சாலையைக் கடந்திருக்கிறாரே! அவனும் பிரயாண வெறுப்பால் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டானே.
ஒரு சில மனிதரைப் பார்த்ததும், அவருடன் ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டும்… முடிந்தால் உதவ வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது இயற்கை தானே! பெரியவர் ஒரு வழிப்போக்கராய் இருந்தும் அவர்களிடையே ஒருவகைப் பாசமும் புரிந்துணர்வும் பீறிட்டது.
நினைத்துப் பார்த்து இனி என்ன செய்வது? வாழ்க்கை இப்படித்தான்! போன வண்டிக்குக் கைகாட்டி என்ன பிரயோசனம்….?
அவன் கல்லூரி வளவிற்குள் காலடி வைத்தபோது எத்தனை பாட வேளைகளுக்கு விடை கொடுத்தான் என்பது அவனுக்குத் தெரியாது. சோகம் அவன் மனதை அப்பிக்கொண்டிருந்தது.
அறிவிப்பு எதுவும் இல்லாமல் சுணங்கி வந்ததற்கு ஒழுக்காற்று நடவடிக்கை அதிகாரியிடமிருந்து உரிய தண்டனையைப் பெற்று வகுப்பறைக்குள் நுழைந்த போது சகவகுப்பு மாணவர் கிண்டல் செய்தனர்.
“வணக்கம்…வணக்கம் இப்பதான் வாரார்….பகுதிநேர விரிவுரையாளர்…”
என்னென்னவோ நடந்துவிட்டது. தொடர்ந்த பாடங்கள் மனதில் பதிய வில்லை.
“முவாத் என்னடா மச்சான்? என்னடா நடந்தது…..? முகமெல்லாம் வாடிப் போய் கிடக்கு. இப்ப இடைவேளை மணி அடிக்கப் போகுது…. வா கன்ரீனுக்குப் போகலாம்…” என்று பரிவுடன் அவனை அழைத்துச் சென்றான் நண்பன் நூறுல்.
சிற்றுண்டிச்சாலையின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்ததும் நடந்த சம்பவத்தை முழுமையாக ஒப்புவித்தான்.
பொறுயைாகக் கேட்ட நண்பன் நூறுல் ஆழ்ந்து சிந்தித்துவிட்டுக் கூறினான்.
“நீ கட்டாயம் நல்லடக்கத்தில் கலந்து கொள்ள வேணும் முவாத்”
“அப்படித்தான் நானும் முடிவெடுத்திருக்கிறன்…நூறுல் நீ வருவியா என்னோட….?”
“கட்டாயம்….ஒரு மய்யத்தில் கலந்து கொள்வது எவ்வளவு நன்மை….நா வருவேன்”
தற்கால இளைஞர்களில் இவன் மானுடநேயம் மிகுந்து மூத்தவர்களைக் கனம் பண்ணும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தான்.
பட்பட்டென்று தொலைபேசி எண்களைத் தட்டினான் முவாத். இதற்கென்றே ஒருவரை தொலைபேசியுடன் இணைத்து வைத்திருப்பார்களோ!
அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘மையத்’ விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
“என்னவாம்…?” நூறுல் அவசரப்பட்டான்.
“மையத் இன்னும் பிரேத அறையிலிருந்து போகவில்லை… நாலரை மணிக்கு எதிர்ப்பார்க்கிறார்கள். ‘ஜனாசா’ அடக்கம் பிந்தும். எதுக்கும் இப்பவே தயாராகி, போனால்தான் இரத்தினபுரிக்குப் போய்ச் சேரலாம்… நூறுல்.”
ஒரு முக்கியமானவரின் பிரிவு என்று காரணம் காட்டி உப அதிபரிடம் விடுமுறை பெற்றுக்கொண்டு வெளியேறி மின்வேகத்தில் இல்லங்களுக்குச் சென்று ஆயத்தங்களைச் செய்து கொண்டார்கள்.
இருவரும் கடுகதியில் புறப்பட்டுச் சில மணித்தியாலங்களில் இரத்தினபுரி நகரில் இறங்கினார்கள்.
இன்னும் எவ்வளவு தூரமோ. இறப்பர் காட்டுக்குப் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது –
ஒரு மினிபஸ் முன்னால் வந்து, “மைய வீட்டுக்கா…..?” வண்டியிலிருந்து ஒருவர் கேட்டார்.
முவாதும், நூறுலும் ஏறிக்கொண்டார்கள்.
அதுமைய வீட்டுக்கும் நகருக்குமாக இலவச சேவை செய்து கொண்டிருந்தது. ஆட்களைக் கொண்டு போவதிலும், கொண்டு வருவதிலும்.
அவர்கள் வீட்டை அடைந்தபோதுதான் மையங்களை எடுத்துச் செல்வதற் காகவே இலவசமாக பணிபுரியும் ஒரு பிரபலஸ்தாபனத்தின் வண்டி வந்திருந்தது. வந்து சில நிமிடங்கள்.
வீட்டுக்குள் இருந்து ‘ஓ’வென்று கிளம்பிய அழுகைச் சத்தங்கள் சூழலைப் பிளந்தது.
முவாத் உள்ளே போக முயன்றான்.
“இப்பதான் வந்திருக்கு கொஞ்சம் இருந்து விட்டுப் போ…”
அவர்கள் சற்றுப் பொறுத்திருந்து பெரியவரின் மகனிடமும், மூத்த மகளிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது எல்லாருமே நன்றியுடன் கண்ணீரும் கம்பலையுமாகப் பல தகவல்களை வெளியிட்டார்கள். அப்புறம் மளமளவென்று உள்ளே சென்று அழுது வடியும் பெரியவரின் மனைவியைக் கண்டு… தயாராகக் கொண்டு வந்திருந்த ‘வெள்ளைக் கவரை’ அவரது இரு கைகளிலும் திணித்துவிட்டு முன் அறைக்குத் திரும்பினான் முவாத்.
“மையத்தைக் குளிப்பாட்டும் கடமைகளில் எங்களையும் சேர்த்துக் கொள்வீர்களா…?”
அவன் பணிவாகக் கேட்டான்.
அவர்கள் மௌனம் சாதித்தே நிராகரித்தார்கள்.
அவனது கோரிக்கை கணக்கெடுப்படவில்லை.
அவன் இரண்டு முறை முயற்சி செய்தும் அதே நிலைமைதான்.
“இனியும் கேட்கவேண்டாம்” நூறுல் அபிப்பிராயப்பட்டான். அதற்குப் பின் முவாத் எதுவும் பேசவில்லை.
காவோலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கும் காலகட்டத்தில் முவாத் பெரியவர் மீது எவ்வளவு இரக்கப்பட்டான்.
பல தசாப்தங்களுக்கு முன் இனவாதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு மன நிம்மதியைத் தொலைத்துவிட்டு இரத்தினபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஒரு இறப்பர் தோட்டத்திற்குக் குடியேறியது பெரியவர் குடும்பம்.
பார்க்கப் போனால் காலங்காலமாக சோகங்களையே தாங்கித் தாங்கிப் பழகிப் போன ஓர் இந்திய வம்சாவழிப்பிரகிருதி அவர். ‘இந்திய வம்சாவழி’ என்று ஆழமாகப் பச்சை குத்தப்பட்டிருக்கிறது.
அவருடன் வந்த உறவுக்காரர்கள், மதார்சா, ஹசனம்மா, மீராசா குடும்பங்கள் கொத்மலை கட்டபூலா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களாகப் பதிவு செய்து கொண்டனர்.
பெரியவர் மூன்று நாட்களுக்கு முன் கொழும்புக்குப் போய், அங்கிருந்து நெடுக கட்டபூலா எஸ்டேட்டுக்குப் போயிருக்கிறார்.
அங்கு சுப்பவைசராகக் கடமையாற்றும் உறவுக்கார இளைஞரை திருமணம் செய்து கொள்வதில் தன் மகளுக்கோ, குடும்ப அங்கத்தவர்களுக்கோ எந்தவித மறுப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவே அவர் இந்த சம்பிரதாயப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
மகளின் திருமணத்தை இடக்கு முடக்கு இல்லாமல் எல்லாவற்றையும் சுமுகமாகப் பேசிவிட்டு, உச்சிகுளிர்ந்து கொழும்புக்குத் திரும்பியவர்தான். நாட்டில் போக்குவரத்துச் சிக்கல்கள் தோன்றியிருக்காவிட்டால் இந்தத் திருமணம் எப்போதோ நடந்திருக்கும்.
எல்லாம் சுமுகமாக முடிந்தும் இப்பொழுது இரத்தினபுரிக்குப் போக முடியாமல் விதி தன் பொல்லாத சிறகை விரித்துவிட்டது.
உறவினர்கள் பிரேதத்தைக் குளிப்பாட்டி புதிய வெள்ளைத் துணியால் உடுப்பாட்டி (கபன் செய்து) ஆட்கள் பார்ப்பதற்காக ‘வராந்தவில்’ வைத்திருந்தார்கள்.
மையத்தை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. புதிய மாப்பிள்ளை சுப்பவைசர் சிக்கந்தரின் தலைமையில் கட்டபூலா உறவுகள் வந்து சேர்ந்தன.
இனி உறவினர்கள் எல்லாரும் வந்து பார்த்தாயிற்று. இனியும் சுணக்க ஏலாது என்ற நிலை ஏற்பட்டதும் பிரதேத்தை சந்தூக்கில் (சவம் தூக்கி வைத்து கழுத்துவரை உடுப்பாட்டியிருந்த வெள்ளைத் துணியை இழுத்து முகத்தை மூடிவிட வேண்டியதுதான்.
முவாதும் நூறுலும் பிரேதத்திற்கு அருகே நெருங்கிச் சென்றார்கள்.
முவாத் அந்த முகத்தை உற்று நோக்கினான்.
பகீரென்று ஓர் அதிர்ச்சி.
முகத்தை மூடிவிட்டு எல்லாருமாகச் சேர்ந்து ‘சந்தூக்கை’ அசைக்காமல் மையவண்டியில் ஏற்றினார்கள்.
அது மெல்லமாக மையவாடியை நோக்கி ஊர்ந்தது. மையவாடி மூன்று மைல் தூரம் என்பதால் இந்த வண்டி ஏற்பாடு.
வழிநெடுக ஓங்கி உயர்ந்து நின்ற இறப்பர் மரங்கள் எல்லாம் தம்மைப்பாத்தி கட்டி, விதைத்து, கன்றுகளாக்கி, தம் பிள்ளைகளைப் போல் வளர்த்து பாதுகாத்த பெரியவருக்குச் சிரம் தாழ்த்தி இறுதி மரியாதை செலுத்தின.
கோடையிலும் குளிரிலும் தம்மோடு இத்தனை நாள் பரிச்சயமாய் இருந்த மேஸ்திரியல்லவா…!
இன்று பிரதேமாக தம்மைக் கடந்து செல்லும் போது நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்து சோகமாய் வழியனுப்பி வைக்கின்றன. மரங்களோடு மரங்களாய் சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்.
இரத்தினபுரி இறப்பர்த் தோட்டமொன்றில் தசாப்தங்களாக ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாக வாழ்க்கையை அர்ப்பணித்த பெரியார் இப்ராஹிம் முஹம்மது அவர்களின் இறுதி ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது.
சவம் தூக்கியில் மையத்தைக் கிடத்தி வெள்ளைத் துணியை இழுத்து முகத்தை மூடுவதற்கு முன் முவாத் அதிர்ச்சியடைந்து, ஸ்தம்பித்துப் போய் அவர் முகத்தை இறுதியாக நோக்கினானல்லவா?
ஆனால் இப்பொழுதுதான் அவனுக்கு மின் வெட்டுகிறது.
அவன் அன்னாரை தரிப்பிடத்தில் பார்த்தபோது, மின்னலைப் போல் தோன்றி மறைந்த அந்தப் புன்னகை மீண்டும் அவர் முகத்தில் எப்படிப் பளிச்சிட்டிருந்ததோ, அந்த முகத்தை அவன் அப்படியே கண்டான். அந்த ஆத்ம சங்கமத்தோடு அவன் திரும்பி நடந்து கொண்டிருக்கிறான். அந்த ஆத்ம சங்கமம் காலத்தாலேனும் அழியக் கூடியதோ? அவனது அடிமனம் மீண்டும் நெகிழ்கிறது.
– ஞானம் ஏப்ரல்-2012
– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.