மூத்தோர் வார்த்தை
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு வயசானவரு இருந்தாரு. அவருக்கு ஒரே மக. பெரியவரு, சாகப் போற சமயம் வந்திருச்சு. சாகுறபோது, மகனுக்கு புத்திமதி சொல்றாரு. இந்த ஒலகத்ல பலமாதிரியான ஆளுக இருப்பாங்க. அவங்க கூட பழகுறது, எப்படி இருக்கணும்ண்டு பெருசு சொல்றாரு. எப்டிண்டா,
அரமண கிட்டச் சேராத,
புதுவகுசி வந்தவங்கிட்ட கடன்வாங்காத,
பழய வகுசி வந்தவங்கிட்ட கடன் வாங்கு,
காட்டு மடத்ல படுக்காத,
பொஞ்சாதி கிட்ட உத்த வாத்த சொல்லாத
பருத்திக்குள்ள இருக்கு பணம் – ண்டு
புத்திமதிகளச் சொல்லிட்டு, செத்துப் போறாரு. செத்துப் போகவும், புத்திமதிகள மக சிந்திச்சுப் பாத்தர். அப்ப: செத்தபெறகு, ஒவ்வொண்ணா பரிச்ச பாக்கணும்ணடு நெனக்கிறா.
நெனச்சுக்கிட்டு, அரமணகிட்டச் சேராதங்கற புத்திமதிய பரிசோதன பண்றர். எப்டிண்டா, போயி – அரமண ஆளுங்ககிட்டப் பழகுறர். புதுசா அரமணக்கி வந்ததுனால எல்லாருகிட்டயும் நல்ல மரியாத. எல்லாரும் இவ் மேல அம்பா (அன்பா) இருக்கவும், பழய வேலக்காரங்க பொறாமப் பட்டாங்க. இவனப் பத்தி அரசங்கிட்டப் போயி, கோளுச் சொன்னாங்க. நெறயப் பேரு கோளு சொல்லவும், இவன, அரமணய விட்டு வெலக்க நெனச்சாரு.
இப்டி இருக்கயில, ஒருநா, அரமண, மயிலப் (மயில்) புடுச்சிட்டு வந்து, மேவீட்ல அடச்சு வச்சிட்டர். அண்ணக்கி, ஒரு கோழி வாங்கி அடிச்சு, கறியப் பொண்டாட்டிக்கிட்டக் குடுத்து சமைக்கச் சொன்னர். ஏது? கறிண்டு பொண்டாட்டி கேட்டா. அவகிட்ட, அரமண மயிலப் புடுச்சு அடிச்சேண்டு சொன்னா.
இருக்கயில, அரமணயில, மயிலக் காணம்ண்டு தேடுறாங்க. மயிலப் புடுச்சு, மேவீட்ல அடச்சு வச்சப்ப இருந்து, இவ அரமணக்கிப் போகல. போகாம இருக்கவும், இவ மேல சந்தேகப்பட்டாங்க. உம்மயக் கண்டு புடிக்கிறதுக்கு அரமண ஆளுகள நியமிச்சாங்க.
அண்ணக்கி ராத்ரி, புருசனுக்கும், பொண்டாட்டிக்கும் சண்ட வந்திருச்சு. சண்ட வரவும், அடி போட்டுட்டா. அடிபோடவும், அரமண மயிலப் புடுச்சு திண்டுபிட்டு, சொன்னதுக்கு, என்னயப் புடுச்சு அடிக்கிறாண்டு சத்தம் போட்டுட்டா. சத்தம் போடவும், அந்தப் பாதவழி போன அரமணக்காரங்க கேட்டுட்டுப் போயி, ராசாகிட்டச் சொல்லிப் பிட்டாங்க. போயி -, அவன இழுத்துக்கிட்டு வாங்கடாண் ராசா சொல்லிப்பிட்டாரு. வந்ததும், கையக் காலக் கெட்டி இழுத்திட்டுப் போயிட்டாங்க. பொண்டாட்டிகிட்ட உத்த வாத்த சொல்லக் கூடாதுண்டு, அப்ப சொன்னது சரியாப் போச்சு. இதுக்குள்ள, புதுவகுசி வந்தவங்கிட்டயும், பழயவகுசி வந்தவங்கிட்டயும் கடன் வாங்கி உரில போட்டு வச்சிருந்தா.
இவன, அரமணக்கி இழுத்திட்டுப் போகயில, கடங்குடுத்தவங்க ரெண்டுவேரும் எதுக்க வந்தாங்க. வந்து, எங்கடன குடுடாண்டு புதுவகுசி வந்தவ கேட்டா. பழய வகுசி வந்தவ, பேசாம இருக்கர். பழய வகுசிக்கார், புது வகுசிக்காரங்கிட்ட, அந்த ரூவாய நாந்தரே. அவங்கிட்டக் கேக்காதடாண்டு சொன்னா.
சொல்லவும், நம்ம அப்பன் சொன்னது உம்மயாப் போச்சுண்ட்டு, என்னயவிடுங்கடா அரமண மயிலப் புடுச்சுத் தாரேண்ட்டு, வீட்டுக்கு வந்து, அரமண மயிலப் புடுச்சுக் குடுத்திட்டா. உரில் இருந்த ரூவாய எடுத்து புதுவகுசி வந்தவனுக்குக் குடுத்திட்டர்.
கடசில, காட்டு மடத்ல படுக்காதண்டு சொன்னாரே, அதப் பாப்போம்ண்ட்டு, ஒரு காட்டு மடத்ல போயி படுத்தர். இவ் படுத்திருந்த அண்ணக்கிப் பாத்து, களவாணி வந்து, இவ் வச்சிருந்த சாமாங்களப் பறிச்சிட்டுப் போயிட்டாங்க. போயிறவும், காட்டு மடத்ல படுக்காதண்டு அப்ப சொன்னாரு, சரியாப் போச்சு. உசுரு தப்பிச்சதே போதும்ண்டு வீட்டுக்கு வந்தா.
வந்தவ, பருத்திக்குள்ள இருக்குதடா பணம்ண்டு, அப்பா, சொன்னத நெனச்சுக்கிட்டே வாரர். வந்ததே சரிண்டு, நெலத்த உழுது பருத்தி வெதச்சா. பருத்தி, நல்லா வளந்து, நெறயா காய்க்காம, காச்சிருந்திச்சு. காயிக, பெருசு பெருசா இருந்திச்சு. இருக்கயில, வெவசாயப் பொருளு, வீட்ல வளக்குற கோழி, ஆடு, மாடுகளுக்கு பரிசு தரதா அரமணயில சாட்டுனாங்க. சாட்டவும், எல்லா ஊர்ல இருந்தும், ஆடு மாடுகளப் புடுச்சிட்டுப் போறாங்க. இவனும் என்னா செஞ்சா, பருத்திக் காயப் புடுங்கிட்டுப் போறா.
கொண்டு போயி, வருசயா வச்சு இருக்காங்க. வச்சிருக்கயில, ராசா பாத்துக்கிட்டே வாராரு. வரயில, பருத்திக் காயி இருக்க எடத்துக்கு வாராரு. வந்து; பருத்திக் காயப் பாத்திட்டு, ராசா ஆச்சரியப்பட்டு, இந்தப் பருத்திக் காயிக்குப் பரிசு தரச் சொன்னாரு.
சொல்லிட்டு, அதுல ஒரு காய எடுத்து ஒடச்சுப் பாக்கயில, உள்ள ஒரு சோதி முத்து இருக்குது. இப்டி, எல்லாக் காயிலயும் இருக்கவும், பரிசுகள, இவனுக்கே குடுத்திட்டு ராசா போயிட்டாரு. பரிசுகள வாங்கிட்டு வீட்டுக்குப் போனவ், பருத்திக்குள்ள இருக்குடா பணம்ண்டு அப்ப சொன்னத நெனச்சுக்கிட்டே நல்லாப் பொளச்சானாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.