முள்ளும் ரோஜாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 451 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிராசுதார் ராமநாதனுடைய மனைவி கமலம் நல்ல அழகு. அழகுப்போட்டி நமது தேசத்திலிருந்தால் முதற் பரிசு அவளுக்கே கிடைக்கும். அதனுடன் கூர்மையான புத்தி, தங்கமான குணம். தற்காலத்துப் பெண்கள் பல ரைப்போல் அசட்டுத் தமிழ் நாவலில் ஏறக்குறைய நூறா வது படித்திருந்தாள். எனவே பின்னால் வந்த கோளா றுக்கு முதல் வேர் அவைகளிடையில் பிறந்திருக்கவேண்டு மென்று நினைத்தால் அது பிசகாகாது. 

ராமநாத சாஸ்திரியோவெனில், பார்வைக்கு விகா ரந்தான்; சந்தேகமில்லை. போதாக்குறைக்குப் பெரியம் மையின் சேஷ்டையால் பழய கோலிபோல் சொள்ளை மூஞ்சி. ஈசுவரன் போட்ட முடிச்சினால் இருவரும் சதிபதி யானார்கள். முழுமுதல் குயவனுடைய மூளை மயக்கத் திற்காவது கைப்பிழைக்காவது மஹமாயித் தாயாரின் கூத்துக்காவது ராமநாத சாஸ்திரியா ஜவாப்? இந்த அல்ப விஷயம் கமலத்தின் மனதில் படவில்லை.உடலழகு என்னும் பொய்ப்படுதா கண்ணை மறைத்தது. தவிர ராமநாத சாஸ்திரிக்கு வேண்டிய அளவு ஐவேஜியும் மேல் நாட்டுப் படிப்பும் உயர்ந்த குணமும் இருந்தும் அவர் சற்று கர்நாடகமாக நடை உடையில் இருந்துவந்தது பொய்ப்படுதாவுக்கு வர்ணம்வேறு பூசியதுபோலாயிற்று. 

இந்த நிலையில் புருஷனுடைய ஆத்ம வனப்பை அறி யும் சக்தி மனைவிக்கில்லையென்றால் அது இளமையின் இயல்பு அன்றி வேறென்ன ? 

மற்றொரு பிசகு என்னவென்றால், எதிர்வீட்டில் ஜகந் நாதன் (செல்லப்பெயர் ஜகம்) வசித்ததுதான். அவன் சங்கீதப் பிரியன். சொக்கிய கண்களையுடையவன். ஊருக் குள் அழகுக்கு உதாரணம். பார்க்கப்போனால் அதனால் கூட தோஷமில்லை; பெரும் பிசகென்னவென்றால் இம் மூவர்களும் பால்ய சிநேகிதர்களாக இருந்ததுதான். வயது முதிர்ந்தும்கூட இவர்கள் நட்பு தொடர்ந்து வந் தது. கமலத்திற்குச் சில நூதன கீர்த்தனங்கள் சொல் லிக்கொடுக்கும்படி ராமநாதன் தன் நண்பனைக் கேட்டுக் கொண்டது சற்று முன்யோசனையற்ற காரியந்தான். பின் னால் நடந்ததைக் கவனிக்கும்பொழுது கமலத்தின் மன உறுதி நாள்படவே பலவீனப்பட்டிருக்கவேண்டு மென்று நினைக்கவேண்டியிருக்கிறது. 

ஏதோ ஒருநாள் மாலை. ராமநாதனைப் பார்ப்பதற் காக ஜகந்நாதன் வந்தான். நண்பன் ஊரிலில்லை என்று தெரிந்ததும் திரும்பிப்போக எத்தனித்தான். 

‘என்ன அவசரம்? உட்காரு, போகலாம். எனக்குப் போது போகவில்லை. பாரதி பாட்டு என்கிறார்களே; ஒன்று பாடு கேட்போம்’ என்றாள் கமலம். 

‘தொண்டைகூடச் சரியாக இல்லை’ என்று மறுத்துப் பேசினான். கமலம் நட்பின் சலுகையால் பிடிவாதம் செய் தாள். சரியென்று ஆரம்பித்ததும் அவன் வாயில் வந்தது, 

‘சுட்டும் விழிச்சுடர்தான்–கண்ணம்மா 
சூரிய சந்திரரோ ? 
வட்டக் கரிய விழி-கண்ணம்மா 
வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம் 
நட்ட நடுநிசியில்-தெரியும்
நக்ஷத்திரங்கௗடீ!’ 

என்னும் பாட்டு. 

பாட்டின் ஓரடி முடியுமுன்னமே ஜகந்நாதனுடைய தொண்டை கரகரவென்றது. ஓரடி முடிந்ததும் பாக்குச் சீவலை வாயில் போட்டுக்கொண்டான். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவினான்; கொஞ்சம் அதிகமாகவே தடவி விட்டான். 

‘என்னப்பா! சங்கராந்திக்குச் சுண்ணாம்பு அடிப்பது போல் இருக்கிறதே!’ என்று சொல்லிவிட்டுக் கமலம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பிட்டுக் கொடுத்தாள். எதிர் பாராமல் அவள் கை ஜகத்தின் கையின்மேல் பட்டது. அவனுள்ளத்தில் குபீலென்று ஒரு திகில் பிறந்தது. மறு கணம் அது மாறி மறைந்துவிட்டது. கமலத்தின் மன நிலை எப்படியோ–கடவுளுக்குத்தான் வெளிச்சம்! ஒரு கால் அப்பொழுதுதான் உள்ள உறுதியின் நடுக்கதவு திறக்கப்பட்டதோ என்னவோ ! 

பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல் ஜகம் ஏதேதோ சிந்திக்கலானான். விஷயங்களையெல்லாம் புது வியாக்யானத்துடன் மனனம் செய்தான். ‘அன்று என் மேல் சரிகை முந்தாணி வீசவில்லையா, அது என்ன? மூன் றாம் நாள் கோணலாகச் சிரித்தாளே, அதற்குப் பொருள் என்ன? அனாவசியமாய்க் கால் மெட்டிகளின் பொன் னோசை உரத்துக் கூவுவானேன்? கைவளை குலுங்கு வானேன்?’ 

மௌனமாய் ஐந்து நிமிஷங்கள் சென்றன. வீட்டிற் குப் புறப்படும் அறிகுறியாக மேல்வேஷ்டியை எடுத்து உதறினான். ‘இரு, போகலாம்; என்னவேலை வீட்டில்?’ என்றாள் கமலம். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மண்ணைக் காலால் கிள்ளினான். முற்றத் தைப் பொருளின்றி நோக்கினான். தன்னைச் சுருக்கிலிட் டுப் பழிசுமத்தவென்றே ஆரவாரித்துவந்த கோடையிடி யையும் மழையையும் பார்த்து நாடி ஒடுங்கினான். 

அதற்குள் பல்லாங்குழியை எடுத்துவந்து, ‘மழை தான் பெய்கிறதே. இரண்டாட்டம் போடுவோமா? என்று கேட்டாள் கமலம். இரண்டோர் ஆட்டம் விளை யாடு முன்னமே விளையாட்டில் ஈடுபட்டுவிட்டான் ஜகந் நாதன். தன்னை அறியாமலே, 

‘சோலை மலரொளியோ- உனது 
சுந்தரப் புன்னகைதான் ?
நீலக் கடலலையோ- உனது
நெஞ்சி லலைகளடீ ? 
கோலக் குயிலோசை–உனது
குரல் இனிமையடி!’ 

என்று பாட்டின் இரண்டாம் பாகமும் வந்துவிட்டது. தன் குரலையும் பாட்டையும் கேட்டுத் திடுக்கிட்டான். அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பாட்டும் தன் தீங்குரலும் பொருத்தமற்றனவென்று நினைத்து அரைகுறையாய் அப் படியே நிறுத்தினான். தன்னைப்பற்றி ஒருகால் கமலம் தப்பு அபிப்பிராயம் கொண்டிருக்கலாமோ என்று அறிய வேண்டித் தலைநிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அதே சமயத்தில் ஏங்கிய கண்களுடன் அவளும் பார்த் தாள். உணர்ச்சி உலகில் இருவரின் உள்ளமும் கலந்தன. 

‘கமலம்!’ என்றான். 

‘ஜகம்!’ என்று விம்மினாள். 

இடியும் மழையும் திடீரென்று நின்றன.எங்கிருந் தோ வந்து ஒரு நெருப்புக்காற்று வீசிற்று–அல்லது வீசி யதுபோல் தோன்றிற்று. தன் சித்தத்தின் சீர்கேடான நிலையை மறுபடி உணர்ந்தான். மறு பேச்சின்றி சரேலென எழுந்து வீட்டிற்குப் போய்விட்டான். 

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் அஸ்தமனமான பிறகு ஜகமும் கமலமும் எவருக்கும் தெரியாமல் பட்ட ணத்திற்குப் போகப் புறப்பட்டார்கள். ரயில்வே ஸ்டே ஷனை அடைந்ததும் ஒரு பெரிய தூண் நிழலில் கமலத்தை நிறுத்திவிட்டு டிக்கெட் வாங்கப் போய்விட் டான் ஜகம். கமலத்தின் மார்பு படக்படக்கென்று பயத் தினால் அடித்துக் கொண்டது. அதற்கேற்ப இரண்டு மூன்று நிமிஷங்களுக்குள் ரயில்வே போலீஸ்காரன் ஒரு வன் வந்தான். 

‘யாரம்மா நீங்கள்? இருட்டில் நிற்பானேன்?’ என்றான், 

அவளுக்கு மூச்சே நின்றுபோய்விட்டது. தலை சுழன் றது. கண்கள்முன் பஞ்சுபோல் பறந்தன. நாக்கு உலர்ந்து போய்விட்டது. அந்த ஒரு நிமிஷம் ஆயிரம் யுகங்களாக இருந்தது. 

‘என்னம்மா! ஊமையா, செவிடா நீங்கள்? ஸ்டேஷ னில் திருட்டு, பட்டப்பகலிலேயே நடக்கிறது. இராக் காலத்தில் பெட்டி பேழை உஷார்’ என்று எச்சரிக்கை செய்துவிட்டுத் திரும்பிப் பாராமல் அவன் போய் விட்டான். 

அவ்வார்த்தைகளைக் கேட்டபிறகு போன உயிரில் பாதியும் சுயப்பிரக்ஞை முழுவதும் திரும்பிவந்தன. அதனுடன் தன் செய்கை முறையற்றது, அழகற்றது, பட்டப்பகல் திருட்டைப்போன்றது என்ற எண்ணம் பறையடித்துக்கொண்டு அகத்தினுள் நுழைந்தது. கற்பிற் கும் பொய்க் காதலுக்கும் பெரிய வாக்குவாதம்- பெரிய சண்டை. முடிவில் கமலத்தின் கண்களினின்று வெளியழகு என்னும் பொய்த்திரை கழன்று விழுந்தது. அவளுடைய மனத்தினுள் ஒரு யுகம் புரண்டு கற்பின் காலையொளி ஜயத்துடன் மின்னிற்று. அதுவரையி லிருந்த கமலம் மாறிப் புதுக் கமலம் பிறந்தாள். 

அதற்குள் நண்பன் திரும்பிவந்துவிட்டான். தன் உள்ளத்தில் பொங்கி எழுந்த எண்ணங்களை பளிச்சென்று அவனிடம் சொல்லிவிடுவதென்று கமலம் முயற்சி செய்தாள். உடல் பதட்டத்தால் துடித்தது; நாக்கு எழவில்லை. 

எனவே ரயில் ஸ்டேஷனுக்குள் வந்ததும் இருவரு மாகப் போய் இரண்டாவது வகுப்பு வண்டியில் அமர்ந் தார்கள். வண்டி ஸ்டேஷனைவிட்டுக் கிளம்பியதுதான் தாமதம்; இந்தப் பிரயத்தனத்தைத் தூண்டிய ஆர்வம் ஜகத்தின் முகத்தைவிட்டு அகன்றது. நட்பின் தூய தன் மைக்கும் வெறும் எழிலின் போதைக்கும் பெரும் போர் தொடங்கிற்று. ‘நம்பிக்கை மோசமே பொல்லாது. அதிலும் நண்பனுக்குத் துரோகமென்றால்..?’ என்று மனச்சாட்சி ஜகத்தைக் கழுவிலேற்றியது. தற்கொலை யின் ஞாபகம்கூட வந்திருக்கும். அது தடைபட்டதற்குக் காரணம் மூன்றாவது வகுப்பு வண்டியிலிருந்து சோகம் பழுத்துத் ததும்பும் குரலில் ஒரு பிச்சைக்காரி, 

‘இந்திரன் கெட்டதும் பெண்ணாலே–அந்தச் 
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே’ 

என்று பாடியது அரைகுறையாய் அவன் காதில் விழுந் தது தான். கமலத்தைக் குறைகூறுவதுபோலப் பாடிய வளை ஓர் அறை அறைந்தால் திருப்தி உண்டாகும் என் பதுபோன்ற உணர்ச்சி எழுந்தது.இரண்டு கையும் சேர்த் தால்தானே சப்தம்? எனில் பிசகு தன்பேரிலா என்றால் அதுவுமில்லை என்று நிச்சயமாய் விளங்கிற்று. ‘சரி ஒரு வர் பேரிலும் பிசகில்லை. விஷ வேளை. இருக்கட்டும். பின் போகும் வழிதான் என்ன?’ என்றால் அதுதான் புரியாமல் திண்டாடினான். 

ரயிலோ கிளம்பிவிட்டது. அதற்குப் பிறகு இறங்கி விடும் பேச்சேது? அது வேண்டாம். பட்டணத்திற்குப் போனவுடன் திரும்பிவிடுவதென்றால், ஊரார்கள் ஆயி ரம் நாக்கிற்கு எப்படி இரையாக முடியும்? அதற்கு வேண்டிய துணிவு உண்டா? அல்லது திரும்பிவந்து, கட வுள் சாட்சியாய்க் கற்பிற்குப் பழுது வரவில்லை, செய்கை மாத்திரம் மூடத்தனமானது என்று ஒப்புக்கொண்டு பேசினால் கலியுகத்தில் யாராவது நம்புவார்களா? 

இவ்வளவு சஞ்சலங்களுக்கிடையில் இருவர் மனமும் ஊசலாடிக் கொண்டிருந்தன. ரயில் மாத்திரம் அலக்ஷிய மாய்ப் போய்க்கொண்டிருந்தது. 

மறுநாள் காலை திருவல்லிக்கேணியில் ஜகந்நாதன் ஒரு ஜாகை அமர்த்தினான். ஒவ்வொருவரும் மற்றவ ருடைய மனதில் நடந்ததையும், நடப்பதையும், படத் தில் புத்தகத்தில் கண்ணாடியில் காணுவதுபோல் தெளிவாய் உணர்ந்தார்கள். ஆனால் ஒருவர் முகத்தை மட்டும் ஒருவர் நேராகப் பார்க்கக்கூடவில்லை. மௌனி கள்போல் பகல் முமுவதும் காலம் கடத்தினார்கள். 

இரவாயிற்று. வெள்ளிக்குடம் ஜலத்தில் மிதப்பது போல் மரங்களின் மேலாகப் பூர்ணசந்திரன் தவழ்ந்து சென்றான். எட்டாக் கையினின்று சமுத்திரராஜன் ஆயிரம் குரல்கொண்டு ஓலமிட்டான். முற்றத்தின் ஓரத் தில் சுழலில் அகப்பட்ட துரும்புகள்போல் இருவரும் உட்கார்ந்திருந்தனர். இருவர் மனதிலும் ஆறாத்துயரின் அலைகள் தாறுமாறாய்ப் பொங்கி எழுந்தன. என்ன செய்வார்கள் பாவம்! 

ஜாமக்கோழி கூவுமளவும் அப்படியே உட்கார்ந் திருந்தனர். பிறகு தலை சுற்றுகிறதென்று சொல்லி விட்டு ஜகந்நாதன் கடற்கரைப்பக்கம் போய்விட்டான். கமலத்திற்குக் களைப்பு மேலிட்டு தலை துவண்டு கண்கள் சோர்ந்தன. இரண்டொரு நிமிஷங்களுக்குள் வெகு நேரம் அழுதுவிட்டு தூங்கும் குழந்தையைப்போல் கண் ணயர்ந்தாள். 

கண்ணயர்ந்ததில் கனவொன்று கண்டாள்; வானுச் சியில் இரண்டு புறாக்கள் உல்லாசமாய்க் காலை வெயி லில் பறந்து கொண்டிருந்தன; இரண்டு ராஜாளிகள் திடீரெனத் தோன்றி புறாக்களைத் துரத்தின; வைரிகள் கையில் இரண்டும் சிக்கவில்லை; ஆனால் ஒரு புறா போன இடம் தெரியவில்லை; மற்றொன்று மட்டும் ஒரு ஆலமரப் பொந்தில் வந்து இளைப்பாறி ஓர் இரவு தங்கிவிட்டு, மறு நாள் தான் வசிக்கும் கூண்டிற்குப் போய்விட்டது. 

கனவு கலைந்து கமலம் கண்விழித்தாள். ஜகம் வர வில்லை. வெளியே சூர்யன் உதயமாகி ஜகஜ்ஜோதியாய்ச் சுடர்விட்டுக்கொண்டிருந்தான். கமலத்தின் இருதய வெளியிலும் ஒரு நவ ஒளி பரவி மனதை நிர்மலமாக் கிற்று. ‘ஊருக்குத் திரும்பிப் போவதா அல்லது தனியா கப் பிச்சைக்காரியைப்போல்-ஏழைச் சந்நியாசினியைப் போல் ஏங்கிச் சாவதா` என்ற பிரச்னை எழுந்தது. இரண் டாவது யோசனை நியாயமெனப்பட்டது; வலிவடைந்தது. 

உடனே வீட்டைவிட்டுக் கிளம்பி, எங்கு செல்வது எதற்காகச் செல்வது, என்ன செய்வது என்று தெரியா மலே பல தெருக்களைத் தாண்டிச் சென்றாள் கமலம். கடைசியாகக் கால் ஓய்ந்தபொழுது ஒரு திண்ணையின் மேல் உட்கார்ந்தாள். வெயிலின் கொடுமையாலும் களைப்பினாலும் மயக்கமடைந்தாள். 

சிறிது நேரம் கழித்து அந்த வீட்டுச் சொந்தக்காரப் பாட்டி வெளியிலிருந்து வந்தபொழுது இவளைப் பார்த் தாள். கண்டதும் அவள் மனம் உருகிவிட்டது. பாவம்! யாரோ அநாதை. ரதிபோல் இருக்கிறாளே! பசியினால் மூர்ச்சையோ என்னவோ? என்று எண்ணி அவளை எழுப்பினாள். ‘ நீ யாரம்மா? எந்தத் தெரு? ஏன் ஒண்டியாக இப்படிப் படுத்துக்கொண்டிருக்கிறாய்!’ என்று ஒரு அடுக் குக் கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்கா மலே உள்ளே அழைத்துச் சென்றாள். 

கிழவியின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாமா, கூடாதா என்ற சந்தேகம் கமலத்திற்கு. பாட்டியின் முகத்தைப் படித்துப் பார்த்தால் ஏதாவது விளங்குமோ என்பது போல் உற்று நோக்கினாள். அப்பார்வை கிழவி யின் உள்ளத்தில் விஷம் தோய்த்த வேல்போல் பாய்ந் தது.நைந்த குரலில் கிழவி சொன்னாள். 

‘அம்மா! பயப்படாதே. நானொரு மகா பாபி. ஏனக்கு வந்திருக்கும் துக்கம் மலைபோன்றது. இப்படித் தான் உன்னைப்போலப் பதினாறு வருஷம் வளர்த்தபெண் ணைப் பதினாறு நாழிகையில் வாரிக் கொடுத்துவிட்டேன். மனித ஜன்மம் எடுத்து மாடுபோல் கவலையின்றி வாழ்ந்த எனக்குக் கடவுள் பெரிய குட்டுப்போட்டார். கஷ்ட சுகம் அறியும் சக்தி இப்பொழுதுதான் வந்திருக்கிறது. என்னைப் பார்த்து பயப்படாதே. சும்மா சொல்லு. என் னாலானதைச் செய்கிறேன். 

மறுபடியும் கிழவியின் முகத்தைக் கமலம் கவனித்த பொழுது பாட்டியின் கண்களினின்று நீர் மலமலவென்று பெருகியது. அந்தரங்கத்தைத் தாயாரிடம் ஒளிக்காமல் சொல்லுவதுபோல், தன் விருத்தாந்தம் முழுவதையும் உள்ளது உள்ளபடியே கமலம் சொல்லி முடித்தாள். பரி வின் மிகுதியால் கிழவி அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு தலையையும் முதுகையும் தடவிக் கொடுத்தாள். 

கமலம் வீட்டைவிட்டுப்போன இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே ராமநாதன் தன் மனைவி வீட்டில் காணாததைக் கவனித்தான். சந்தடி செய்யாமல் அங்கு மிங்கும் தேடினான் ; பிரயோஜனப்படவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் திகைப்படைந்தான். மனைவி ஓடி விடுவாளென்று அவன் கனவிலும் கருதிய தில்லை. தனக்கும் கமலத்திற்கும் நடுவில் குறுக்கிட்டு நின்றது ஆதிக்கொத்தன் வைத்த சுவர்தானே? அது மனிதனால் அழிக்கக் கூடியதல்லவே? இருந்தாலும் தன் னுடைய உயர் குணத்தால், ஆத்ம வனப்பால், அதைக் கூட மறைத்துவிடலாமென்ற உறுதிகொண்டிருந்தான். அவ்வெண்ணங்கள் யாவும் திடீரென இடிந்து விழுந்து மண்ணாய்ப்போனதும் ராமநாதன் உள்ளம் உடைந்து விட்டது. ஆனால் உத்தம குணமுடையவனாதலால் இச் சோக நெருப்பைத் தனக்குள்ளேயே வளர்த்தான். ஊரா ரெவரிடமும் இந்த விஷயங்களைப்பற்றிப் பிரஸ்தாபிக்க வில்லை. மனைவி எங்கே என்று கேட்டவர்களுக்குத் தாயார் வீட்டிற்குப் போயிருப்பதாகக் கூறினான். 

நாட்கள் செல்லச் செல்ல ஊரில் வசிப்பதில்-ஏன், உயிர் வாழ்வதில் என்றுகூடச் சொல்லலாம்-ராமநாத னுக்கு வெறுப்புத்தட்டிவிட்டது. கடவுள், குடும்ப வாழ்க்கை, நற்குணம் என்பவையெல்லாம் பெருத்த மோசடி, ஏமாற்றம் என்ற எண்ணங்கள் சிலசமயம் உதித்தன. மற்றும் சில சமயங்களில் பிரமம் கொண்ட முகத்தோடு உண்ணுவதும் உறங்குவதுமாய்க் காலத் தைக் கடத்தினான். 

இரண்டு மாதங்கள் சென்றன. பட்டணத்தில் தன் னுடைய அப்பீல் ஒன்று எடுபடப் போவதாக தந்தி வந்தது. ராமனாதன் ஊரைவிட்டுக் கிளம்பினான். பட்ட ணத்திற்கு வந்ததும் ஜாகை எங்கே வைத்துக்கொள்வது என்பதைப்பற்றி யாதொரு கவலையுமில்லை. ஏனெனில் வெகு வருஷங்களாகப் பள்ளிக்கூடத்திலும் கலாசாலை யிலும் படித்தபொழுது சாப்பிட்டுவந்த கிழவியின் வீடே போதுமென்று தீர்மானித்தான். 

கிழவியின் வீட்டில் கமலத்தைப் பார்த்த நிமிஷம் முதல் ராமநாதனுடைய மனதில் சஞ்சலமும் சந்தேக மும் குடிகொண்டன. தன் மனைவி தானென்று நிச்சய மாகத் தெரியவில்லை. அறிமுகமாக மட்டுமிருந்தது. அவள் நடை, உடை, சாயல் எல்லாம் தன் மனைவியி னுடைவற்றை ஒத்திருந்தன. ஆனால் முகம்? ‘இவ்வளவு பொலிவில்லாமல் இருக்க நியாயமில்லையே. கன்னத்தின் மேலே எலும்புகள் ஒட்டகையின் திமிலைப்போல் அவ்வ ளவு உயர்ந்து விகாரமாக இருக்காதே. தலை மயிர் கோரையாகாதே. போகட்டும். மனைவி என்றால் ஒரு வார்த்தையாவது பேசமாட்டாளா? சரிதான் இவள் கிழவியின் பெண்ணல்லவா?…’ என்று ஒரு புறம் எண்ணினான். 

மற்றொருபுறம் மனைவியாயிருந்தால் திரும்பத் தன் னுடன் சேர்த்துக்கொள்ளலாமா? ஊர்ப்புரளிக்குச் சித்த மாக இருக்கமுடியுமா? என்னும் விஷயங்களைப்பற்றிச் சர்ச்சைசெய்து பார்த்தான். புத்தி மேன்மேலும் குழப்பம் அடைந்ததேயன்றி ஒருவித முடிவிற்கும் வரவில்லை. 

கமலத்திற்கோவெனில், அங்கே சாப்பிடுவது தன் கணவன் என்று தெரியும். மனச்சாட்சியைப் பற்றிய வரையில் கடவுள் சாட்சியாய் மன்னிக்கக்கூடாத பிச கொன்றும் செய்துவிடவில்லையென்று நிச்சயமாகத் தெரியும். ஊரை விட்டுக் கிளம்பியது க்ஷணப் பைத்தி யத்தின் கூறு என்று முந்தியே முடிவுகட்டியிருந்தாள். ஆனால் கணவரிடம் இவைகளை எப்படிச் சொல்லுவது? சொன்னதும் அவர் நம்பவேண்டுமே? ஓர் அக்ரமத்தை மறைக்க மற்றொரு பொய்யைக் கற்பிப்பதாக நினைத் தால்? இத்தகைய பல சிந்தனைகள் அவள் மனதை அறுத் தன. அடுப்பில் விழுந்த புழுப்போல் துடித்தாள். 

ஒரு வாரம் கழிந்தது. ஓர் இரவு ராமநாதனுடைய உள்ளம் வெடித்துவிடும் எல்லையைத் தொட்டது. அந்த ரத்தில் தொங்குவதைக் காட்டிலும் அனாயாசமான மர ணம் பிரும்மானந்தமானது என்ற எண்ணம் எழுந்தது. கிழவியை அணுகி, ‘ஏன் பாட்டி! இங்கே இருக்கிறது உங்கள் பெண்தானே? வந்ததுமுதல் விசாரிக்கத் தெரிய வில்லை, பாருங்கள். எனக்குத் தெரிந்த மரியாதை!’ என்றான். 

‘அந்த வயிற்றெரிச்சலைக் கிளப்பாதே என்று சொல் லியபடியே கிழவி தன் துக்கத்தைத் தெரிவித்தாள். 

‘ஆனால் அந்தப் பெண் ஏதாவது உறவா?’ 

கிழவி முன்பின் யோசியாமல் கமலத்தின் விருத்தாந் தம் முழுமையும் சொல்லி முடித்தாள். 

ராமநாதன் நெஞ்சில் துக்கம் குமுறிற்று. அவனு னுடைய இருதயம் தனிக்காட்டில் போய் ஓயும் காற் றைப்போல் பெருமூச்செறிந்தது. தூரத்தினின்று வந்த சமுத்திரத்தின் ஓய்வு உறக்கமற்ற அழுகை உள்ளத்தை நீராக்கிற்று. ராமநாதனுடைய கண்களில் புல் நுனியி லுள்ள பனித்துளிபோல நீர் தளும்பிற்று. வீட்டுக் கூட த்தை நோக்கி இரண்டடி எடுத்துவைத்தான். கால்கள் துணிபோல் துவண்டன. 

அங்கிருந்தபடியே ‘கமலம்!’ என்றான். 

‘ஏன்’ என்று எதிரே வந்தாள் கமலம். 

அப்பொழுதுதான் மனைவியின் முகத்தை நேராக அவன் பார்த்தான். அவள் முக வனப்பு, துயரத்தால் முற்றிலும் சாம்பலடைந்திருந்தது. இன்னது சொல்வ தென்று தெரியாமல் மரம்போல் நின்றான். ஒரு கணம் ஒரு யுகமாயிற்று. நல்லவேளையாக அந்த யுகமும் முடிந்தது. 

‘பாட்டி சொல்வது உண்மையா?’ 

‘உண்மை.’ 

‘முழுவதும் உண்மையா? 

‘முழுவதும் உண்மை.’ 

‘சந்திர சூரியர்கள் சாக்ஷியாக?’ 

‘சந்திர சூரியர்கள் சாக்ஷியாக.’ 

பிறகு மௌனம். வெறும் மௌனம்-மௌனமே அஞ்சும் நிசப்தம். 

‘கமலா!’ என்றான். 

பதிலில்லை. 

‘ஆனால் போகலாமா?’ என்று பொருத்தமில்லாமல் கேட்டான். கமலம் தேம்பி அழுதாள். 

நல்ல சமயத்தில் விண்ணினின்று இரண்டு நட்சத் திரப் பொறிகள் சீறிப் பாய்ந்து வெளியிடையில் கலந் தன. பிறைச்சந்திரன் புன்னகை பூத்தான். 

சதிபதிகளின் தோள்கள் கண்ணீருடன் ஒன்றாயின. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிழ விக்கு ஒருகணம் ஒன்றும் விளங்கவில்லை. விளங்கியதும் கண்ணீர் நின்றபாடில்லை. 

இப்பொழுது கிழவி பள்ளிக்கூட மாணவர்களுக்கு சாதம்போடும் தொழிலை நிறுத்திவிட்டாள்.  புது மாப்பிள்ளையை கண்டு பிடித்துவிட்டாளல்லவா? கட வுளின் கருணையால் கமலமும் கற்பும், ராமநாதனும், கிழவியுமாய் திருவல்லிக்கேணியில் இன்பமாய்க் காலம் கழித்து வருகிறார்கள். கடற்கரைப்பக்கம் போன ஜகந்நாதன் விஷயம் என்ன ஆயிற்றோ?

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *