கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 241 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மன் கோவில் குளத்துக்குள்ளிருந்த ஐந்துதலை நாகம், பள்ளிக்கூட விளையாட்டிடத்தடிக் கொய்யாப் பற்றைக்குள் ளிருந்த ‘முள்ளுப் பண்டி–இவைகளெல்லாம் இப்போது எங்கே போயினவோ, தெரியவில்லை. இவைகளுடன், செல்லர் வளவுப் ‘பாண்கிணற் ‘ றடி நெல்லி மரத்தில் ஒரு. முனியும் அந்த நாட்களில் இருந்தது. இந்தப் பாண்கிணற்று* முனியிலும் பார்க்க, அதற்குள்ளிருந்த பாம்புகள்தான் எங்களை அதிகம் பயமுறுத்தியிருந்தன. பள்ளிக்கூடப் பிள்ளைகளை வாத்தியார், கோவிலுக்கும் விளையாட்டு இடத் துக்கும் என்று தங்களுடன் அழைத்துக்கொண்டு போகிற நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில்-அதிலும் முக்கிய மாக மத்தியானம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு – மேலே சொன்ன இந்தப் பயங்கரங்களெல்லாம் உலாவ வெளிக்கிட்டு விடுமென்றும்; சின்னப் பிள்ளைகளைத்தான் அவை தேடித் திரியு மென்றும்; அநேகமாக எங்களெல்மேலோருக்கும் வீடுகளில் சொல்லியிருந்தார்கள். பள்ளிக்கூடம், மத்தியானம் ஒரு மணிக்குத்தான் அப்போது விடுவது வழக்கம் என்பதை. நினைத்துப் பார்க்கையில், இந்தப் பிராணிகளெல்லாம் ஏன் பன்னிரண்டு மணிக்குப் பிற்பட்ட நேரத்தைத் தமது வாலாய வேளையாகக் கொண்டிருந்தன என்று இப்போது புரிகிறது. என்றாலும், மூன்றாம் வகுப்புத் தாண்டிய கையிலிருந்தே. இந்தப் புரிதல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருக்கவேண்டும். 

எப்படியிருந்தாலும் பெரிய விக்கினி இரண்டு ‘விக்கினி’ கள் எங்களோடு ஐந்தாம் வகுப்புவரை படித்தார்கள்: (பெரிய விக்கினி’ என்ற விக்கினராசாவும், ‘சின்ன விக்கினி’ என்ற விக்கினேசுவரனும், – துணிச்சல்காரன்தான். மூன்றாம் வகுப்பில் படித்தபோதே, ஒரு நாள், அந்தப் பாண் கிணற்றுக்குள் நீர்மட்டத்தில், சுவர்க் கரையோடு நீந்திக் கொண்டு கிடந்த பெரிய பாம்பொன்றை, நிலத்தில் நின்றே குறிதவறாமல் கல்லால் எறிந்து கொன்றான். அதிலிருந்து எங்களுக்குள் அவனை ஒரு விண்ணனாக நாங்கள் ஒப்புக் கொண்டோம். 

எங்கள் பள்ளிக்கூடத்துப் பெயர், கல்விக் கந்தோரி லும், முன்சுவரில் வாசலுக்கு மேலும், ‘பாரதி வித்தியாசாலை’, ஆனால் அந்தப் பெயரை ஊருக்குள் யாராவது சொல்லி, நான் கேட்டதில்லை. 

‘தம்பி எங்கை படிக்கிறாய்?’ என்றால், 

‘பொன்னையா பள்ளிக்குடத்திலை….’ என்றுதான் மறுமொழி வரும். பொன்னையர் தான் பாரதி வித்யாசாலையை நிறுவியவர்; எப்போதோ செத்துப் போய்விட்டவர். எங்களூர்க்காரர்கள் நன்றி மறவாதவர்களாய் இருந்தார்கள். 

2 

இராசலிங்கம் வாத்தியார் சிரித்ததை, அவரிடம் வடித்த ஐந்து வருடகாலத்திலும். ஒரேயொரு முறைதான் யார்த்ததாக ஞாபகமிருக்கிறது. இதைச் சாதித்தவன் கனகநாதன். 

இராசலிங்க வாத்தியார்; நாலாம் வகுப்பில் எங் களுக்கு இங்லீஷ் எடுத்தார். ஸ்பெல்லிங் முடிந்து, புத்தகங்கள் வாசிக்கிற கட்டம். வாத்தியார்,எங்களின் உச் சரிப்பில் அதிக அக்கறை காட்டினார். ஓருநாள் சொல்லித் தந்த மூன்று வசனங்கள்: 

I am a boy 

You are a girl

This is my book 

இதை ஒவ்வொருவராக எழுந்து சொல்ல வேண்டும். ‘கலவன்’ பாடசாலையிற் கலவன் வகுப்பு ஆதலால், ஆட்களுக்கேற்றபடி, Boyயும் Girlலும் முதலிரு வசனங் களிலும் இடம் மாறும். கனகநாதனின் முறை வந்தபோது, அவன் இவ்வசனங்களை, லீலாவதியைப் பார்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. கனகநாதன் வண்டுறுட்டி போலக் கட்டைக் கறுத்தப் பொடியன். லீலாவதி நெடுத்த பெரிய பெட்டை. அவன். பயப்படாமல் எழுந்து நின்று உசாராகச் சொன்னான், 

“I am a boy: 
You are my girl-” 

இதற்குமேல் அவனைச் சொல்லவிடவில்லை, வாத்தியார், ‘போதும்,….! இரடா மடையா!’ என்றவர், விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஒரு சின்னப்பிழை விட்டால் கூட, கையிலுள்ள கொய்யாத்தடியால் வெளுத்து வாங்குகிற இராசலிங்க வாத்தியார் சிரிப்பதைக்கண்ட மகிழ்ச்சியிலேயே அன்று, எங்களிற் பலர், பகிடி என்னவென்று விளங்கா விட்டாலும்கூட, சேர்ந்து சிரித்தோம் என்று நினைக்கிறேன் 

பள்ளிக்கூடத்தில், இராசலிங்க வாத்தியார் இரண் டாவது பெரியவர். முதல் வாத்தியாருக்கு அடுத்தவராக இருந்தார். 

என்றாலுங் கூட, இராசலிங்க வாத்தியாரின் அடிக் காடுமை தாங்காமல் நாங்களெல்லோரும் ஒருநாள் கூடி ஆலோசிக்க நேர்ந்தது, ‘சிங்கமும் முயலும்’ கதையில் காட்டு மிருகங்கள் கூடி ஆலோசித்தது போல. ஆனால், நாங்கள் *பெட்டைய’ளைச் சேர்க்கவில்லை. அவளவையை நம்பவும் முடியாது: அதோடு இராசலிங்க வாத்தியார் பெட்டை வளுக்குக் கை நீட்டுவதுமில்லை. 

பெரிய விக்கினிதான் ஒரு யோசனை சொன்னான். 

‘உவருக்கு ஒரு நல்ல வேலை செய்யலாம்….’ 

‘சொல்லன்ரா?” 

‘கிட்ட வாங்கோ…’ 

தலைகளை நீட்டினோம்: 

‘என்ன?’

‘ஒரு செய்வினை செய்யலாம்’ 

‘செய்வினையோ?!….’ எங்களுக்குப் பயம் முளைத்தது.

‘வெருளாதையுங்கோடா’ என்ற பெரிய விக்கினி எல்லாம் விளக்கமாகச் சொன்னான்: 

வாத்தியாருடைய காலடி மணலைக் கவனமாக அள்ளுவது தான் முக்கியமான வேலை. அதை அள்ளி மண் சட்டியொன்றில் போட்டு வறுத்து, அந்த மணலைப் பாண் கிணறொன்றில் கொட்டிவிட வேண்டும், அவ்வளவுதான்! அடுத்த நாள் ஆள் பள்ளிக்கு வர ஏலாது! கால் இரண்டு பாதமும் தோல் வெடிச்சுப் புண்ணாய்ப் போகும்! 

மணலை இரகசியமாக வறுத்துக் கொண்டு வருவது தன்னால் முடியுமென்று பெரிய விக்கினி சொன்னான்; பாண் கிணறு தேடத் தேவையில்லை; அது எங்களருகிலேயே இருக் கிறது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. 

எங்களுடைய வகுப்பு அப்போது நாலு. ‘பள்ளி கூட்டுற’ முறைநாள், செவ்வாய்க்கிழமை. பெட்டையள் தும்புக் கட்டோடு வகுப்புகளெல்லாம் கூட்டுவாளவை.. பெடியள், விளக்குமாறுங்கடகமுமாய் முற்றம், பக்கம், கோடி எல்லாங் கூட்டுவோம். பெரிய விக்கினியின் திட்டத்தின் பிறகு, அடுத்த செவ்வாய்க்குக் காத்திருந்தோம். 

வழமைக்கு மாறாக, முற்றத்திலிருந்து கோடிவரை போகாமல் கோடி, பக்கமெல்லாம் முடித்துவிட்டு, பிறகு, வாசலடிக்கு வந்தோம். இராசலிங்க வாத்தியார் வருகிற நேரத்திற்குக் கொஞ்சம் முன்னால் முற்றம் கூட்டப்பட வேண்டும். பெரியவிக்கினி, ஒரு பெரிய கடதாசித் துண்டைத் தன் கழுசான் பொக்கற்றுக்குள் ஆயத்தமாய் வைத்திருந்தான். 

நாங்கள் கூட்டிக் குவிக்கவும் வாத்தியார் பள்ளிக் கேற்றடியில் சைக்கிளால் இறங்கவும் சரியாயிருந்தது. பின்னி நெளிந்திருந்த சைக்கிள் சில்லு அடையாளத்தினருகில் செருப்புப் போடாத வாத்தியாரின் காலடிகள் பளிச்சென்று திந்திருந்தன. பெரிய விக்கினி, ஒன்றுக்கு இரண்டுபாதமாக -அள்ளிக்கொண்டான். அள்ளின அடைளாளந் தெரியாமல் இருக்க, தேவராயன் விளக்குமாற்றை அதன்மேல் போட்டு இழுத்தபடி போனான். 

மத்தியானம் பள்ளி விட்டதும் எல்லாப் பெடி பெட்டை கயளுங் கலையுமட்டும் பேய்க்காட்டிவிட்டு, பெரிய விக்கினி மணசரை வைத்திருந்த இடத்திற்கு மெல்லப் போனோம். 

‘போச்சடா!’ என்று பெரிய விக்கினி கத்தினான், 

மதில் ஓட்டைக்குள் மறைவாய் அவன் ஒளித்து வைத்திருந்த சரையில், கடதாசிமட்டும் கிழிந்து ஓட்டை யாகிக் கீழே கிடந்தது. 

‘சனியன் காகம்!……..’ 

‘மூதேசி!….’ 

வயிற்றெரிச்சலுடன் மீண்டும் அடுத்த செவ்வாயை எதிர்பார்க்கலானோம். 

முதல் வாத்தியாருடைய அறை எப்போதும் பூட்டித் தானிருக்கும். அவர் அந்த அறைக்குள்ளிருப்பது வழக்க வில்லை. மண்டபத்து நடுவில் மேசையைப் போட்டுவிட்டு, எல்லா வகுப்புகளும்- அல்லது எல்லா வகுப்புகளுக்கும் – கண்ணிற் படுகிறமாதிரி இருந்து கொள்வார். அறைக்குள் ஒரு அலுமாரி,கால் உடைந்த பெரிய மேசை ஒன்று ஒன்றின் மேலொன்றாய்க் கொஞ்ச வாங்குகள் இப்படிச் சில சாமான் களிருந்தன. மேசையின்மேல் ஒரு பெரிய. சரஸ்வதி படமும் இலேசாக மங்கிப்போன ஒரு பூகோள உருண்டையும், அலுமாரியின்மேல், தேசப்படமொன்றும், உலகப் படமொன் றும் சுருட்டப்பட்டுக் கிடக்கும். இவைத்தவிர, இன்னொரு கிழிந்துபோன இலங்கைப் படம், சுவரில் தொங்கிக் கொண்டு கிடந்தது. அலுமாரிக்குள், சோக்கட்டிப் பெட்டிகள், டாப்பு இப்படி…. 

இவ்வளவற்றையும் பார்க்கிற சந்தர்ப்பம், அந்த அறையைத் துப்புரவு செய்யச் சொல்லி எங்களிற் கொஞ்சப் பேரை முதல் வாத்தியார் பிடித்து ளிட்டபோது கிடைத்தது. பின்பக்கம் போனால், கக்கூஸ், ஒரு பக்கம் பெடியள், மற்றப்பக்கம் பெட்டையள். பள்ளிக்கூடத்தின் பாதி தாண்ட முதலே, தன் இருப்பை உணர்த்திக் கொள்ள சக்தி வாய்ந்த. கக்கூஸ் அது. 

அதற்கு முன்னால், பெரிய பெரிய இலைகளை விரித்தபடி. பரந்து நிற்கும் ஈரப்பலா மரம். ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்குப் போய், புத்தகங்களை வாங்கில் வைத்த கையோடு முதல் காரியமாய் இந்த ஈரப்பலாவடிக்கு ஓடி வந்து, விழுந்து கிடக்கிற பழுத்த இலைகளைப் பொறுக்கிக் காம்பை முறிப் போம். – பென்சில் எழுத்தை அழிரப்பர்’ அழிப்பது போல இந்த இலைக்காம்பு சிலேற்றை அழிக்கப் பெரிதும் உதவியா யிருந்ததை, யாரோ ஒரு முன்னோன் எங்களுக்காகக் கண்டுபிடித்து வைத்திருந்தான். 

ஈரப்பலாவிலை இல்லாத நாட்களில், கிணற்றடிப் பள்ளத்து இடுக்கில் சணைத்துக் கொழுத்திருந்த, ‘தண்ணிப் புல்லு’ எங்களுக்குப் பயன்பட்டது. இவ்விரண்டும் இருந்துங்க கூட, கன பெடியன்களின் சிலேற் எச்சில் மணத்தது. 

இந்த இலைக்காம்பு பொறுக்குகிற சண்டையால் மூன்றாம் வகுப்புக் கடைசித் தவணையில் ஒருநாள், நான் இராசலிங்க வாத்தியாரிடம் அடிவாங்கினேன். 

5

எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போவதென்றால் றோட்டுக்குப் போகத் தேவையில்லை. ஒழுங்கையாலேயே போய் விடலாம். மழைகாலங்களில் வெள்ளம் ஓடி, வாரடிக் கிற வெள்ளைமணல் ஒழுங்கை. வளவுகளும், வடலிகளும் பனங்காணிகளும் பற்றைகளும் மாறி மாறி வரும். பற்றை. களுக்குள், ஒன்றில் காண்டை நிற்கும். அல்லது கொய்யா நிற்கும், அல்லது இரண்டுமே நிற்கும் உள்ளே நுழைந்தால், தின்னுவதற்கு எப்போதும் ஏதாவது தரக்கூடிய பற்றைகள், கொய்யாப் பழமோ காண்டைப் பழமோ இல்லாவிட்டால் கொய்யாக் குருத்து அல்லது காண்டைக்காய் இருக்கும். காண்டை நித்திய கல்யாணி. காய் இல்லாத காலமே கிடையாது. 

இந்தக் கொய்யாவுக்கும், காண்டைக்கும் அப்பால் தேவராயன் இன்னொரு சாமானை எங்களுக்குக் காட்டித் தந்தான். பாக்குவெட்டிச் செடியின் குருத்தைப் பனங்குருத் தோடு சேர்த்துச் சப்பினால். வெற்றிலை மாதிரி வாய் சிவக்குமாம். இந்த ஆசையில் பாக்குவெட்டிக் குருத்து நுள்ளப்போன கனகநாதனுக்கு ஒருநாள் பிசுங்கான் ஓடு வெட்டிப் பெருகிய இரத்தம், இன்னமும் நினைவில் சிவப்பா யிருக்கிறது. 

கனகநாதன் ஏழெட்டு நாள் பள்ளிக்குக் கள்ளம் போட்டது பற்றிய விசாரணை, தேவராயன் இராலிங்க வாத்தியாரிடம் பிரப்பம்பழம் தின்றதில் முடிவடைந்தது. 

காலையில் ஒருகும்பல் சேரும். என்னோடும் எனக்குக் கீழும் படிக்கிற அயலட்டைக் குஞ்சு குருமனெல்லாம் ஒன்றாகப் போவோம். இந்தப் பட்டாளத்திற்கு நான் பல நாட்கள் தலைவனாயிருந்திருக்கிறேன்; நான், கனகநாதன், அவன் தம்பி தருமநாதன், தேவராயன், சிவலிங்கம், ராசேசுவரி, செல்வராணி இப்படி…….. 

போகப் போகப் பட்டாளம் பெருகும். படலைக்குப் படலை கூப்பிடுவதும் உண்டு. 

இந்தத் தினசரிப் பயணத்தில் முக்கிய இடம் வகித் தது, கதிரவேலர் வீட்டு நாய். சரியான கடியன். ஒவ்வொரு நாளும் எங்களைத் துரத்தி அதற்கு அலுப்பதில்லை. துரத்துவதென்றால், வேலிக்கு அந்தப் பக்கந்தான். கதிரவேலர் நல்ல மனுசன்; புத்திக்காரனும். பெடியள் பள்ளிக்குப் போகிற நேரத்தில் தன்னுடைய வீமன் சொறி தேய்க்கும் என்று உணர்ந்தவர். நாயை உள்ளே விட்டு, படலையைப் பூட்டித்தான் வைப்பார். வேலியின் கீழ் வரிச்சு நல்ல பதிவு. பொட்டுகளுமில்லை. எனவே நாய்ப்பிள்ளை வெளியே வரமுடியாமல், நாங்கள் ஒழுங்கையால் நடக்கும் போதுதான் வளவுக்குள் குரைத்தபடி வேலிநீளம் ஓடிவரும். “எப்பிடியெண்டாலும், வெளியாலை வந்துதெண்டா…?’ என்ற பயம் எங்களுக்கு நித்திய கண்டமாயிருந்தது. 

நாய்க்குப் பயந்து நாங்கள் பேச்சை நிறுத்தி நடந் தாலும், எங்களோடு வருகிற பெட்டைகளின் ‘தையல் பெட்டி கள்’, ‘கிலுக்குக் கிலுக்’கென்று கிலுங்கி எங்கள் வரவை நாய்க்கு அறிவிக்கும். இந்தத் தையல்பெட்டி இல்லாத பெட்டையை நான் அப்போது கண்டதில்லை. ஒவ்வொருத்தி யும் மூடி நெளிந்த, கிறுக்குப்பட்ட ரொஃபிப் பெட்டி ஒன்று வைத்திருப்பாள்.அது இல்லா தவளிடம் வெறும் பவுடர் ரின்னாவது இருக்கும். இதற்குள், நூல்பந்து, அதில் குத்தப் பட்ட ஒன்றிரண்டு தையல்ஊசி, ‘கிளிப்பர்கள், ஆட்டுப் பிழுக்கைப் பென்சில் துண்டுகள், அழிரப்பர், காப்புகள், முட்டை ஊசிகள், தடிதண்டுகள், காண்டைப் பழங்கள் என்று என்னென்னவோ போட்டு வைத்திருப்பார்கள். 

இவர்களுக்கு, தையல்பாடம் என்று தனியாக ஒரு யாடமி ருந்தது. தையலம்மா ரீச்சர் ஒரு கதிரையிலிருந்து ஏதோ தைக்க, இதுகளும் சுத்தி நின்று குத்திப்பிடுங்குகிற வேளைகளில், நாங்கள், பெடியள் ‘பன்ன வேலை’ செய்வோம். தையலம்மாவுக்குப் பெயரே அதுதானோவென்று, கனகாலம் ஐமிச்சப்பட்டேன். ஆனால், பிறகு ‘தையலக்கா’ என்று இன்னொரு ரீச்சர் கொஞ்சம் வயது குறைவு வந்ததும் என் ஐயந் தீர்ந்தது. 

இரண்டு மூன்று வருடம் படித்த பன்னவேலையில், உருப்படியாக ஒரு பெட்டி கூட நான் இழைக்கவில்லை. ‘மூலை திருப்புகிற’ வேலை, எனக்குப் பிடிபடாமலே இருந்தது. இந்தச் சிக்கல் பெரிய விக்கினிக்கும் இருந்தது, எனக்குத் தெரியும். மூன்றாம் வகுப்புக் கடைசியில், வகுப்பேற்றச் சோதனைக்குப் பெரிய விக்கினி மூலை திருப்ப முடியாமல், கனகபூசணி-எப்போதும் ஒரு பெரிய சாம்பல் பூசணிக்காயை நினைவுபடுத்துகிறவள் – கனகநாதனின் தமக்கை, எங்களுக்கு ஒரு வகுப்பு மேலே படித்தவள் யிடம் இரகசியமாகக் கொடுத்து ‘மூலை திருப்பிக் காட்ட’த் தெண்டித்த போது, அநியாயமாய் இராசலிங்க வாத்தியாரிடம் அகப்பட்டுக் கொண்டான். சவிள் அடி விழுந்தது. 

7 

காலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புக்குச் சங்கீதம் முதற்பாடமாயிருக்கும். தன்னைச் சூழ எல்லோரை யும் வட்டமாக நிற்க வைத்துவிட்டு, ஐயர் வாத்தியார், சரிகமபதநிச’ சொல்லிக் கொடுப்பார். பிந்தி வருகிற வேளைகளில், பள்ளிக்குக் கால் கட்டை தள்ளியிருக்கிற மதவடியில் வரும்போது இந்தச் சங்கீதம் காகில் விழும். நேரம் பிந்தி யதை ஞாபகப் படுத்தி, இராசலிங்கம் வாத்தியாரின் கொய்யாத்தடியை நினைவுக்குக் கொண்டுவருவதால், இந்த ‘சரிகமபதநிச ‘ இன்றுங்கூட சில வேளைகளில் எனக்கு, ஒரு பயத்தையும் பதட்டத்தையும் தருகிறது. 

கனகநாதன், இந்த விஷயத்தில் பல நாட்கள் இராசு லிங்க வாத்தியாரின் வாடிக்கையாளனாக இருந்தான். 

தனது ஞானத்தை உணர்ந்தோ, அல்லது தன் சீடப் பிள்ளைகளின் ஞானத்தை அறிந்தோ, ஐயர் வாத்தியார், இந்த சங்கீத பாடத்தை, நல்ல காலமாக சரிகமபதநிசவுக்கு மேலே போகவிடவில்லை. நான்கூட, இரண்டு வருஷம் அவரிடம் இந்தக் கலையைப் பயின்றேன், பள்ளிக்கு நேரத் துக்குப் போன நாட்களில். 

‘சரிகமபதநிச ‘ வில், ‘நிச’ வை இழுத்து இழுத்து ‘நி, சா….’ வாக அழுத்தி அழுத்தி, வாத்தியாரைப் பார்த் தபடி வலுஉற்சாகமாக நாங்கள் பாடுவோம். 

அணில், ஆடு, இலை, ஈ, உறி, ஊசி, எலி, ஏணி, ஐயா, ஒட்டகம், ஓலை, ஒளவை இதுகளெல்லாம் எப்படி இன்னமும் சிலையிலெழுத்தாக இருக்கின்றன? 

அ, ஆ படிப்பித்த தையலம்மாவின் முகமும், படம் என்ற பெயரில் புத்தகத்தில் கறுப்புக் கறுப்பாக அச்சு மை அப்பிக்கிடந்த திட்டுக்களுங்கூட, இன்னமும் இந்த அணில், ஆட்டுடனும்; கொக்கு, சங்கு, பூச்சி, குஞ்சுடனும் நினைவுக்கு வருகின்றன. இதற்குப் பிறகு நெஞ்சில் முளைப்பது, ‘கரடி காட்டு மிருகம்….’ தான். ‘…கண்ணைத் தோண்டும், பொல்லாத மிருகம்’ என்று கரடி புராணம் முடிகிறபோது, இராசலிங்க வாத்தியார் திரும்பவும் நினைவுக்கு வருகிறார். 

‘கந்தசாமி நல்ல சிறுவன்’ என்று தொடங்கி,‘….பிள்ளை களே, நீங்களும் கந்தசாமியைப் போல நல்ல பிள்ளைகளா, யிருக்க வேண்டும்’ என்று முடிகிற பாடத்தைப் படிப்பித்தவர், முதல் வாத்தியார். அவர் படிப்பதற்கென்றே எழுதப் பட்டது போல அமைந்திருந்த பாடம், அது. ‘பிள்ளையள்…. பெடியள்….’ என்று ஒவ்வொருதரமும் எங்களை அழைக்கும் முதல் வாத்தியார், ஒரு தடவை அப்படி அழைத்தது இன்னமும் இந்தக் கந்தசாமியைப் போல் நினைவில் நிற்கிறது. அந்த அழைப்புடன் கந்தசாமியும் முதல் வாத் தியாரும் மட்டுமில்லை; இராசலிங்க வாத்தியாரும் பெரிய விக்கினியுங்கூட நினைவுக்கு வருகிறார்கள். எல்லோருள்ளும், பெரிய விக்கினி தான், பெரிதாய் நினைவுக்கு வருகிறான். 

‘பிள்ளையள்……..’ என்று முதல் வாத்தியார் எங்கள் வகுப்புக்கு வந்து எங்களைக் கூப்பிட்டார். அது அவர் பாட வேளை அல்ல. ஒருவியாழக்கிழமை, நாங்கள் மண் அள்ளிய செவ்வாயை அடுத்து வந்த வியாழன். முதலாம் பாடம் தேவாரம் முடிந்து, ‘அரஹரமஹாதேவா’ சொல்லிவிட்டு, ‘த வேரூ இங்லீஷ்’ஐயும் இராசலிங்க வாத்தியாரையும் எதிர் பார்த்து நெஞ்சு படபடக்க, மூத்திரம் முட்ட, அந்தரித்துக் கொண்டிருந்த வேளை. 

முதல் வாத்தியார் கூப்பிட்டதும், நிமிர்ந்து பார்த் தோம். இராசலிங்க வாத்தியாருக்குப் பதில் முதல் வாத்தி யாரே இங்லீஷ் எடுப்பதில் எங்களுக்கு வலுவிருப்பந்தான். ஆனால் அவர் பாடமெடுக்க வரவில்லை. சொன்னார்: 

‘….. சத்தம் போடாமை இருந்து படியுங்கோ. இண்டைக்கு இராசலிங்க வாத்தியார் வரமாட்டார்…’

எங்களுக்கு அவர் சொன்னது மண்டையில் உறைக்கு முன்னரே, முதல் வாத்தியார் மிச்சத்தையுஞ் சொன்னார். நேற்றுப் பின்னேரம் அவரைக் கார் தட்டிப் போட்டுது… தோட்டவெளி றோட்டிலை சைக்கிள்லை போகேக்கை அவரை ஆரோ காராலை அடிச்சுக் கையை முறிச்சுப்போட்டான்…. வாத்தியாரை இப்ப பெரியாஸ்பத்திரியிலை வைச்சிருக்கினமாம்’ 

‘முதல் வாத்தியார் சொல்லி முடிக்க முன்னரே, யாரோ விக்கி விக்கி அழத் தொடங்கிய சத்தங் கேட்டுத் திரும்பிப் பார்த்தோம். 

பெரிய விக்கினி. 

– மல்லிகை, நவம்பர் 1976.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *