முத்துமாலை





(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜிலு ஜிலு வென்று காற்றடிக்கும் வெளி வரார்தாவில் கண்ணை மூடி அரைத் தூக்கத்தில் ஆழ்த்திருந்தான் ரகு. விடியற் காலம் மங்கின நிலா வொளி அவன் படுத்திருந்த வராந்தாவுக்கு அடுத்த அறையின் ஜன்னல் வழியாக விழுந்து அங்கு போட்டிருந்த கட்டில்மேல் யாரும் இல்லை என்ற அறிவித்தது. ஒரு தரம் கண்ணைத் திறந்து மனதில் எற்பட்ட பிரமையை நினைத்துச் சிரித்துக் கொண்டான் ரகு. லேசான மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்ட முத்துமாலை ஒன்றை அணிந்து கொண்டு விஜயம் – இறந்து போன அவன் மனைவி எதிரில் வந்து நிற்பது போல் இருந்தது. முத்துக்களின் நிறம் அவள் வெண்மையான கழுத்தில் படிந்து அதற்கு ஒரு சோபையைக் கொடுத்தது. விஜயம் இறந்து இரண்டு தினங்கள் தான் ஆகியிருந்தன.கீழே அவள் தாயாரும் மூன்று வயதுப் பெண்ணும் படுத்திருந்தார்கள். மூன்று தினங்களுக்கு முன்பு நொடிக் கொருதரம் ‘லொக் வொக்’ சென்று இருமி அவனுக்கு வேதனை அளித்து வந்த விஜயம் இன்று இல்லை. ரகு ஜேபியிலிருந்து விஜயத்தின் முத்து மாலையை எடுத்தான். அதை ஜேபியிலேயே வைத்திருப்பதால் அவன் மனதுக்கு ஒரு சாந்தி ஏற்பட்டு வந்தது. கண்களிலிருந்து இரண்டு துளிக் கண்ணிர் மூத்தமாலையின் மேல் விழுந்த கீழே தெறித்தது. ரகு பழைய நினைவுகளில் ஈடுபட்டான்.
***
ரகு பணக்காரக் குடும்பத்தில் பிறந்த போதிலும் ஒரு சீர்திருத்தவாதி. பால்ய விவாகம், வரதக்ஷணைக் கொடுமை முதலியவற்றைப் பலமாக எதிர்ப்பவன். கலாசாலை நண்பர்களிடம் தான் ஒரு ஏழைப் பெண்ணை மணந்து எல்லோருக்கும் பாடம் கற்பிக்கப் போவதாக அடிக்கடி கூறுவான். அவன் விருப்பத்தைப் போலவே அவன் வீட்டில் விஜயம் வளர்ந்து வந்தாள். திக்கற்ற விதவை மீனாக்ஷி, விஜயம் ஐந்து வயதாக இருக்கும்போது ரகுராமன் வீட்டில் சமையல் கேலைக்கு அடைக்கலம் புகுந்தாள். ரகுவுக்கு அப்போது வயசு பத்து. விஜயம், தன் வீட்டுச் சமையற்காரியின் பெண் என்பதையே அவன் மனம் நினைக்க வில்லை. விஜயம் வளர்ந்து பெரியவளான பிறரு ரகுவின் சகல வேலை களையும் அவளே கவனித்து வந்தாள். அவன் அறையைப் பெருக்குவது, புஸ்தகங்களை ஒழுங்காக வைப்பது, துணிகளை மடித்து வைப்பது எல்லாம் விஜயம்தான். ஆனால், முன் போல் அவள் ரகுவுடன் கலகலப்பாகப் பேசுவது இல்லை, அவன் எதாவது கேட்டாலும் தலையை குனிந்து கொண்டே பதில் சொல்லுவாள்.
ரகுவுக்குப் பல இடங்களிலிருந்தும் ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. போட்டியாக நான், நீ என்று பெண் கொடுக்க அநேக பணக்காரர்கள் வந்தார்கள். ரகுவின் தகப்பனார் பெண் தேடுவதில் முனைந்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் ரகு ஒரு தினம் திடீர் யென்று அவன் தாயாரிடம் கூறினான், விஜயத்தைத் தவிர வேற யாரையும் தான் மணக்கப் போவதில்லை என்று. தாயார் திகைத்து நின்றாள்.
“என்னடா இது? அவ அனாதையாக விட்டுவிடப் போகிறோமா, என்ன?. அவளுக்கும் நல்ல இடமாகப் பார்த்த இந்த வருஷம் கல்யாணம் பண்ணிவிட்டால் போகிறது. அதற்கு நீதானா அகப்பட்டாய்?” என்ற அவள் கேட்டாள்.
“இதில் என்ன பிசகு இருக்கிறது, அம்மா? விஜயம் என்ன அழகில்லாதவனா? பணம் ஒன்று இருந்து விட்டால் போதுமா?” என்ற வாதித்தான் ரகு.
அப்பொழுது கூடத்தில் கண்ணாடிக்கு எதிரில் விஜயம் தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். பால் போன்ற உடல் நிறத் துக்கு ஏற்றபடி கறுப்புப் புடவை கட்டியிருந்தாள், கை நிறையப் பச்சைக் கண்ணாடி வளையல்கள். எடுப்பான மூக்கும், கலைந்த புருவமும், நீண்ட கண்களும் விஜயம் நல்ல அழகி என்று தெரிவித்தன. அவளுக் ஸ்திரிதனமாக வரக்கூடிய பொருள் ஒன்றும் இல்லை. வெகு காலமாக அவள் தாயார் அணிந்திருந்த முத்து மாலை ஒன்று தான் அவருக்கு ஆபரணம். அது ஒன்றே அவள் சங்கு போன்ற கழுத்துக்குப் போதுமானது. கருப்பு நூலில் கோத்திருந்த அந்த முத்துக்களின் மஞ்சள் கலந்த நீலம் அவள் கழுத்துக்கு அழகை அளித்தது.ரகு அவளைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே யிருந்தான்.
“உனக்குப் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது, ரகு!” என்று அவன் தாயார் ராஜம் சற்றுக் கடினமாகவே கூறினாள்.
ரகு புன்னகை புரிந்தான், அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக் குப் புரியவில்லை.
“நம் விஜயத்துக்கு வெளியே வரன் ஒன்றும் பார்க்கப் போகிறதில்லை. அவளை நானே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அம்மா!” என்றான் ரகுராமன்,
அதைக் கேட்டு விட்டுத் தான் சாரம் அவனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக கூறினாள். ரகுவின் தீர்மானம் ஸ்திரமானது என்பதை அவள் உணர்ந்தபோது அதனால் ரகுவின் தகப்பனாருக்கு ஏற்படப் போகும் கோபத்தை நினைத்து வருந்தினாள்.
பெரிய இடங்களிலிருந்து வந்த பெண்களை யெல்லாம் உதறி விட்டு ரகு விஜயத்தை மணக்கப் போவதாகத் தகப்பனாரிடம் அறிவித்தான்.
தகப்பனாருக்கும், பிள்ளைக்கும் பலத்த மனஸ்தாபத்திடையே விஜயம் ரகுவின் வாழ்க்கைத் துணைவியானாள்.
***
வாழ்க்கையில் மனிதன் கருத்த திட்டப்படி அநேகமாக ஒன்றும் நிறைவேறுவதில்லை. தகப்பனரிடம் விரோதித்துக் கொண்ட ரகுவின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. சீர்திருத்த வாதியான ரகுவின் மனதில் கிவேசம் குடி கொண்டது. விஜயம் தன்னுடன் ஸ்திரிதனமாகக் கொண்டு வந்திருந்தது அவள் முத்துமாலை ஒன்றுதான். வியாகமான ஒரு வருஷகாவத்துக்குள் மீனாக்ஷி இறந்து விட்டாள். பரம்பரையாக இருந்த அந்த முத்து மாலையை அவள் ஒன்றும் செய்யக் கூடாது என்று விஜயத்திடம் அவள் தாயார் கூறியிருந்தாள். ரகு ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலையில் அமர்ந்தான். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் இல் வாழ்க்கை இன்பமாகத்தான் இருந்தது. கல்யாணமான ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு தினம் இரவு சாப்பாடு முடிந்ததும் விஜயம் தன் புருஷன் அருகில் வந்து உட்கார்ந்த கொண்டாள். வஸந்த காலம். தெருவில் மூலை முடுக்குகளிலிருந்து நாதஸ்வரத்தின் இனிமையான நாதம் காற்றில் தவழ்ந்து வந்தது. தாம்பூலம் தரித்த சிவந்த உதடுகளைக் கோணலாக மடித்து, ” என்ன? யோசனை பலமாக இருக்கிறதே!” என்ற கேட்டாள் விஜயம்.
“யோசனைதான், விஜயம்! நீ மூன்று மாதக் கர்ப்பிணி. உனக்குத் தாயாரும் இல்லை. என் தாயார் அனுப்பிய நூறு ரூபாயையும் அப்பாவின் மேலுள்ள கோபத்தால் திருப்பி அனுப்பி விட்டேன். உனக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஒன்றும் செய்யாவிட்டாலும் எழுத்தில் போட்டிருக்கிறாயே முத்து மாலை, அதையாவது தங்கத்தில் கட்டிப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது!”
“அதிஷ்டம் இருந்தால் கிடைக்கிறது. அதற்காக யோசனை செய்து ஏன் மனதைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்!”
” மனதைக் கெடுத்துக் கொள்ள வில்லை யே? ஆசைதானே படுகிறேன்!”
விஜயம் சிரித்துக் கொண்டே கணவன் முகத்தை பார்த்தாள்.
***
விஜயம் ஒரு பெண் குழந்தைக்கும் தாயானாள். யுத்தக் கொடுமையால் சாதாரண வருவாயிலுள்ள குடும்பத்தினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள், அம்மாதிரி குடும்பங்களில் ரகுராமனின் குடும்பமும் ஒன்று.
ஐம்பது ரூபாய் சம்பளத்தில் விலைவாசிகளைச் சமாளிக்க முடியாமல் ரகு கஷ்டப்பட்டான். இந்த நிலையில் விஜயத்தின் மனம் மாறுதல் அடைய ஆறம்பித்தது. கணவன் கை நிறையச் சம்பாதிக்கவில்லையே என்றே குறை அவள் மனதை உறுத்திற்று. ஒவ்வொரு நாளும் புதுப் புது நகைகள் மீதும், ஆடைகள் மீதும் ஆசை கொண்டாள். கழுத்தில் நூலில் கோத்த முத்து மாலைப் பார்க்கும்போதெல்லாம் கணவன் விவாகமான புதிதில் கூறிய மொழிகள் அவள் நினைவுக்கு வந்தன. ரகுராமன் அவற்றை அடியோடு மறந்து விட்டான். விஜயம் அவனிடமிருந்து திரும்பவும் அந்த வார்த்தைகளைக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். நிலவு பொழியும் இரவு ஒன்றில் பசுமையான தங்கச் சாடில் கோத்த முத்து மாலையை அவள் கழுத்தில் ரகு அணிவிப்பதாகக் கற்பனை செய்து கொண்டாள். கனவும் கண்டாள்.
ஆனால், ரகுவின் கவலை நிறைந்த மொழி களைத் தவிர வேறொன்றும் அவனிடம் எதிர் பார்க்க முடியவில்லை. விஜயத்தின் ஆத்திரம் பொங்கிக் கொண்டிருந்தது.அன்று எப்படியாவது தைரியத்தை வர வழைத்தக் கொண்டு கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு வரும் ரகு அன்று மணி எட்டாகியும் வரவில்லை. விஜயத்தின் ஆத்திரம் எல்லை மீறிப் போயிற்ற, இரவு மணி ஒன்பதரைக்கு ரகு வீடு வந்து சேர்ந்தான். தெருக் கதவைத் திறந்து விட்டு உள்ளே போய்ப் படுத்தக் கொண்டாள் விஜயம்.
“சாதம் போட வருகிறாயா?”
விஜயம் தடதட வென்ற எழுந்த இலையைப் போட்டுப் பரிமாறினாள். மார்கழி மாதத்தச் சிறு சிறுப்பில் ‘ஐஸ்’ போலச் சில்லிட்டிருந்தது சாதம். சாதத்தைப் பிசைவதில் ஈடுபட்டிருந்தான் ரகு.
“மோர்தான் வைத்திருக்கிறேன் ” என்றாள் விஜயம்.
“ஏன் வேறே ஒன்றும் இல்லையா?” என்று கேட்டான் பகு.
“இல்லை”
“ஏனாம்?”
“……”
“இந்த மாதத்தில் இப்படி மோருஞ் சாதம் சாப்பிட்டால் உடம்புக்கு ஏதாவது வந்தால் என்ன பன்னுவதாம்? நீயும், குழந்தையும் இதைத்தானா சாப்பிட்டீர்கள்?”
“ஆமாம், மார்க்ழி மாசத்துப் பனியில் இரவு பத்து மணி வரைக்கும் ஊர் சுற்றி விட்டு வந்தால் மட்டும் உடம்புக்கு ஆகுமா?”
ரகு அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்த முகத்தில் இருந்த கோபமும் துக்கமும் அவனால் சகிக்க முடியவில்லை.
“ஊர் சுற்றுகிறேனா?”
“இல்லை, சினிமாவுக்குப் போயிருப்பீர்கள்”
“எனக்குச் சினிமா ஒன்றுதான் குறைச்சல்! நாலு பேரைப் போல் சந்தோஷமாக இருக்கத்தானே நான் பிறந்திருக்கிறேன்?”
“நானும், குழந்தையும் எங்காவது தொலைந்து போகிறோம். சந்தோஷமாக வேறு பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு இருங்களேன், உங்கள் அப்பாவும் அதற்காகத்தானே காலணா ஒத்தாசை செய்யாமல் இருக்கிறார்”
“போதும், வாயை மூடிக்கொள். இலையில் சாதத்தைப் போட்டு விட்டு…..”
“வரவர உங்களுக்கு என் மேல் பிரியமே இல்லை. பிரமாதமாகச் செய்து விடப்போவதாக ஜம்பம் அடித்துக் கொண்டீர்கள்?”
“ஆமாம், ஜம்பம் அடித்துக்கொண்டேன்; செய்ய முடியவில்லை.”
“பத்துச் சிநேகிதர்களோடு சேர்ந்து கொண்டு ஊர் சுற்ற மட்டும் மூடிகிறதா?”
“வாயை மூடு, விஜயம்!” என்று இரைந்தான் ரகு.
“மூடிக்கொள்கிறேன். முத்து மாலை செய்து போட்டுக் கழுத்தில் பளபள வென்று மின்னுகிறதோ, இல்லையோ?”
“என்னால் முடியாது, விஜயம்! அவ்வளவு தான், நீயும் உன் முத்து மாலையும்…..”
விஜயம் சரசர வென்று உள்ளே சென்றாள். முத்து மாலையைக் கழற்றிப் பெட்டியில் வைத்தாள். அது கழுத்தில் இருப்பதால் தானே கணவனுடன் சண்டை போடும்படி ஆசையைத் தூண்டுகிறது? சனியன் ! கண் மறைவாகக் கிடக்கட்டும்!
அதற்குப் பிறகு விஜயத்தின் மனதில் ஆழ்ந்த கிவேசம் குடி கொண்டது. ரகுவை மணப்பதால் உலகில் மற்றப் பணக்காரப் பெண்களுடன் சரிசமமாக உலாவலாம் என்ற அவள் கண்ட கனவு தேய்ந்து போயிற்று. ரகுவும் விஜயத்தை மணப்பதால் சீர் திருத்தவாதிகளில் முதன்மை ஸ்தானம் வகிக்கலாம் என்ற எண்ணியதும் விணாயிற்று. இருவருடைய ஒன்றுபட்ட மனங்களுக்குமிடையே திரை ஒன்று விழுந்தது. ரகு விஜயத்துடன் அதிகம் பேசுவதில்லை. விஜயமும் ரகுயுடன் பேசுவதில்லை. மனதில் ஏற்பட்ட வருத்தத்தைத் தாங்கச் சக்தியில்லாமல் விஜயம் நோய்வாய்ப்பட்டாள். ரகுவின் கண்களுக்குத் திடீரென்று ஒரு தினம் விஜயத்தின் மெலிந்த உடலும், குழி விழிந்த கண்களும் தெரிந்தன. “விஜயம்! ஏன் இளைத்துப் போகிறாய்? உன் உடம்புக்கு என்ன?”
“உடம்பு சரியாகத்தான் இல்லை.”
“டாக்டரிடம் காட்டலாமா?”
“வேண்டாம், பார்த்துக் கொள்ளலாம்” என்றாள் விஜயம்.
நாளுக்குநாள் விஜயத்தின் உடம்பு இளைத்து துரும்பாகி விட்டது, படித்த படுக்கையாகப் படுத்து விட்டாள். விஜயம் வியாதிக்காரியாக மாறிய பிறகு தன் தவறை உணர்ந்தாள்.
“டாக்டர் செலவுக்குப் பணத்துக்கு என்ன பண்ணுகிறீர்கள்? என் முத்து மாலையாவது விற்றுச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றாள்.
“கூடாது விஜயம், உனக்கு உடம்பு தேரிய பிறகு அதைத் தங்கத்தில் கட்டிப் போட்டுப் பார்க்கப் போகிறோன் ”
விஜயம் லேசாகச் சிரித்துக் கொண்டாள்.
“என் சிரிக்கிறாய்?”
விஜயம் பேசவில்லை. ரகு அவள் முகத்தை வருடினான். உதடுகள் நீலமாக ஜில்லிட்டிருந்தன.
“விஜயம், விஜயம்!”
லேசான புன்சிரிப்புடன் கணவனின் ஆசையை அறிந்து கொண்டதும் இந்த உலகத்தை விட்டு விடுதலை அடைந்து விட்டாள் விஜயம்.
***
“அப்பா! தூக்கறயா ” என்ற மூன்று வயதுக் குழந்தை அவனை எழுப்பினாள். கண் மூடிப் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த ரகு கண் விழித்துப் பார்த்தான். எதிரில் அவனுடைய மூன்று வயதுப் பெண் கொண்டிருந்தாள்.
“காப்பி சாப்பிட்டாயா, அம்மா? இங்கே என் அருகில் வா!” என்று குழந்தையைக் கூப்பிட்டு அனைத்துக் கொண்டான்.
விஜயத்தைப் போலவே நீண்ட கண்களும் களை நிறைந்த முகமும் அவனுக்கு விஜயத்தின் உருவத்தை நினைவு படுத்தின. கையில் இருந்த முத்து மாலையைக் குழந்தையின் கழுத்தில் போட்டுவிட்டுக் கண்ணிர் உருத்தான் ரகு. குழந்தை மிகவும் பரிதாபமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.
– 14-04-1946, நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.