முட்டையிலிருந்து கோழி




வித்வான் சுவாமிநாதன் தன் பூஜையை முடித்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்தார். கீழே ஏதோ பாட்டுக் குரல் கேட்கவே தோட்டத்தை க் குனிந்து நோக்கினார். தோட்டக்காரன் மணியும் அவன் தங்கை கவிதாவும் ஏதோ பாடிக் கொண்டே புல் களைந்து கொண்டிருந்தனர்.
அவர்களை மேலே வரும்படி கூப்பிட்டார் சுவாமிநாதன். அவர்கள் இருவரும் உடனே மேலே ஓடி வந்தனர்.
*நீங்கள் இப்போது என்ன பாட்டு பாடிக் கொண்டிருந்தீர்கள்” என்று கேட்டார்.
அப்போது டிரைவர் மாணிக்கமும் கூடவே வந்தான்.
மாணிக்கம் சொன்னான். “இவங்க இப்படித்தான் எப்போதும் பாடிண்டே இருப்பாங்க” என்றான்
சுவாமிநாதன் சொன்னார்
“மணி, கவிதா நீங்கள் பாடின பாட்டை பாடி காண்பியுங்கள்” என்றார்.
பயந்துக் கொண்டே இருவரும் பாடினர். “ஆழ்வார்பேட்டைஆண்டவா வேட்டியை போட்டு தாண்டவா”…
சாமிநாதன் முழுமையாகக் கேட்டார். “இதில் காபி இருக்கிறது” என்றார்.
மணி உடனே “இல்லைங்க ஐயா. நாங்க டீ தான் குடிப்போம்” என்றான்.
“இல்லையப்பா, நான் ராகம் பெயர் சொன்னேன் என்றார். உங்கள் இருவர் குரலும் ரொம்ப இனிமையாக இருக்கிறது. உச்சஸ்தாயி பிசிறே இல்லை என்றார்”.
மணிக்கு ஒன்றுமே புரியவில்லை.
வேற பாட்டு பாடு என்றார்.
தயக்கத்துடன் பாட ஆரம்பித்தனர்.
*ஒட்டகத்தை கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட….”
டிரைவர் மாணிக்கம் தலையில் அடித்துக் கொண்டான்.
*என்ன மணி…ஐயாக்கு முன்னாலே இந்த பாட்டடை பாடலாமா…கொஞ்சமாவது அறிவு வேண்டாம்”. மாணிக்கம் மணியை கண்டித்தான்.
சுவாமிவாநன் சொன்னார்.
“இப்ப மணி என்ன தப்பு பண்ணிட்டான். எந்த பாட்டும் கேவலம் இல்லை. வார்த்தைகள் வித்தியாசப்படுகிறது. ஆனால் இதற்காக இசை அமைப்பதில் ஆகட்டும் அதை பாடுவோர் ஆகட்டும். சுருதியும் லயமும் கட்டுக்கடங்காமல் இருக்குமா. மற்றபாட்டுக்களுக்கெல்லாம் இருக்கும் அதே சிரமங்கள் இந்த பாட்டுக்கெல்லாமும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தர்மாவதி ராகத்தின் அடிப்படை இந்த பாட்டு” என்றார்.
“ஏம்மா கவிதா நீ ஒரு பாட்டு பாடேன்” என்றார்.
கவிதா உடனே ஃபோனை எடுத்துக் கொண்டு தாம் பாடப் போகும் பாட்டை வைத்துக் கொண்டாள்.
“கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா” முனைப்புடன் ஈடுபாட்டுடன் பாடினாள்.
உச்சஸ்தாயியும் ஸ்வர பிரயோகங்களும் பாடியது நித்யஸ்ரீயா கவிதாவா என்ற சந்தேகம் வரும்.
“நாளை முதல் நீங்கள் இருவரும் என்னிடம் பாட்டு கற்றுக் கொள்ள வாருங்கள்” என்றவுடன் இருவரும் ஐயோ என்று எழுந்தனர்.
“எங்களுக்கு படிப்பு இல்லேயே ஐயா” என்றனர்.
“நாங்கள் உங்கள் பிரிவை சேர்ந்தவர் இல்லையே”.
“எல்லாம் தெரிந்துதான் உங்களை வரச் சொல்கிறேன்” என்றார்.
“ஸர்வம் தாள மயம் சினிமாவை பார்த்து விட்டு வாருங்கள்.உங்கள் தன் நம்பிக்கை அதிகரிக்கும்” என்றார்.
இருவரின் முகத்தில் அவநம்பிக்கையை பார்த்தார்.
“இசைஞானி என்ன சொன்னார் தெரியுமா. இசை என்பது சிவசொத்து. அனைவருக்கும் பொது” என்றார்.
“உண்மைதான்”
“நாளை முதல் வாருங்கள” சொல்லி உள்ளே சென்றார்.
தினமும் இரண்டு வேளை தீவிர பயிற்சி. சரிகமபதநிஸ வில் இருந்து பாடம் எடுத்தார்.
பாட்டில் ஆர்வம் இருந்ததால் மணியும் கவிதாவும் வீட்டிலும் பயிற்சி செய்தனர்.
விரைவாக வருடங்கள் ஓடியது.
இதோ இன்று தமிழக அரசு விருது கொடுக்கப் போகிறது.
மேடையில் மணியும் கவிதாவும் நின்றனர்.
எங்களுக்கு விருது வேண்டாம் என்று சொன்னவுடன் சபை அதிர்ந்தது.
மணி காரணத்தை விளக்கினான்
“நான் ஒரு பாட்டு பாடசாலை ஆரம்பிக்கப் போகிறேன். சிறந்த குரல் வளம் கொண்டு படிப்பு இல்லாமல் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன். கர்நாடக சங்கீதம் பழமையானதும் நுட்பமானதும் கூட..படித்தவர் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்பதில்லாமல் எல்லா பிரிவினரும் கசடற கற்று வித்துவான்களாக வேண்டும். மும்மூர்த்திகள் கீர்த்தனை மட்டுமினறி தமிழ் பாட்டுகளையும் பிரபலப் படுத்த வேண்டும். பல வித்வானகள் உருவாகட்டும். அரசு விருதை நாங்கள் அப்போது பெறுகிறோம்”.
சபையில் முதல் கைதட்டல் சுவாமிநாதன் வித்வானிடமிருந்து எழுந்தது.
சிறப்பான கதை. இசை சிவபெருமான் தரும் சொத்து என்பது மிகவும் உண்மை. எழுத்தாளருக்கு என் பாராட்டுகள்.