முகமூடி மனிதர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 239 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலை ஆறு மணிக்கு றூமை விட்டு வெளியே வந்தேன். றோட்டு றோட்டாக இல்லை. ஊர்ந்து செல்லும் வாகனங்கள். பாய்ந்து செல்லும் மனிதர்கள் பந்தடிக்கும் சிறுவர்கள். காறித்துப்பும் முதுமைகள் துள்ளிச் செல்லும் இளசுகள்… 

மிக அவதானமாக மூக்கைப் பிடித்து நடந்து காலடி களைக் கூட மிக லாவகமாக வைக்க வேண்டியிருந்தது. 

ஏனைய மனிதர்களைப் போல பாய்ந்து செல்ல முடியவில்லை. எப்போதுதான் அவர்களைப் போல நடந்து பழகப் போகின்றேனோ…? 

நகரத்தின் சகல குளறுபடிகளும் அந்த றோட்டின் இரு புறங்களிலும் கடை விரித்திருந்தன. பைப் தண்ணீரில் தலையை நனைத்து உடலை தெளிக்கும் இளம் பெண்கள். சட்டி பானைகளைக் கழுவி நடுறோட்டில் ஊற்றும் குடும்பப் பெண்கள். றோட்டுக்கானில் காலை யில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யும் குழந்தை கள். அருகே தின்பண்ட வியாபாரம் செய்யும் நடை பாதை வியாபாரிகள். சீ… பார்க்க என்ன பின்னேரம் ஆறுமணியா? எந்த நேரம் பார்த்தாலும் இதே காட்சி தான். மனதில் வெறுப்பு அலை மோதியது. 

மிக அவதானமாக நடந்தும் பாய்ந்தும் வந்த நடுத்தர வயதுப் பெண் தோள் தெறிக்க இடித்து விட்டு பேசாமல் போனாள். 

என்ன மனிதர்கள் இவர்கள்…சந்திக்கு வந்தாகி விட்டது. முன்பை விட பரபரப்பான மனிதர்கள் கும்பல் கும்பலாக எங்கேயோ போட்டதை எடுக்கப் போவதைப் போல. 

ஒரே அமளி, ஒரே பரபரப்பு சந்தியில் சற்று நேரம் நின்று மேலும் நிற்க முடியாமல் சனங்கள் இடிக்க. 

இடது பக்கம் திரும்பி நடந்தேன். மிஸ்டர் சுந்தர லிங்கம் சந்திக்கு வந்து இடது பக்கம் தானே திரும்ப சொன்னவர். 

ப்ளூக் கலர் பெயின்ட் அடித்த கேற் நம்பர் செவன் லக்கி செவன் என்று சொன்னவர். நடந்தேன் நம்பர் ரூ… திறி… திறிஏ… நடந்து… நம்பர் செவன் மங்கிப் போன ப்ளூக் கலரில் கேற்… 


பஸ்சை விட்டு இறங்கி அந்த ஒவ்பீசை நெருங்கி னேன். காலை ஏழு ஐம்பத்தைந்து. ஒவ்பீஸ் அமைதியாக இருந்தது. 

இன்னமும் யாரும் வரவில்லை. வெளியே கதிரையில் அமர்ந்தேன். மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. 

சுய நினைவுக்கு வந்த போது எட்டு இருபத்தைந் தாகிவிட்டது. அப்பொயின்மன்ட் லெட்டரைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்து, வழக்கமான காரியங்களை முடித்து, அட்டென்டன்ஸ் றெஜிஸ்டரில் கையெழுத்து வைத்து என்னுடைய மேசையில் வந்து அமர்ந்தேன். 

சுற்றிவர மேசைகள் எதிரும் புதிருமாக சக ஊழியர் கள் சிலர் என்னை ஒரு மாதிரியாக, மெல்லிய புன்னகையுடன் பார்க்க வேறு சிலர் எதையுமே கவனிக்காமல் தம் பைல்களுடன் போராட எனக்கு சலிப்பாக இருந்தது. 


கேற்றை திறந்தேன். மெல்லியதாக கிரீச்சிட்டது இந்த றோட்டில் வித்தியாசமான் வீடு. வீட்டின் முன்னால் முற்றம் இருந்தது. அடர்த்தியாக புல்லுக்கிடை யில் மண் தெரிந்தது. முற்றம் முழுக்க ஒரே குப்பை. 

றோட்டு நாற்றம் பரவாயில்லைப் போல இருந்தது. இன்னுமொரு லேஞ்சி தேவைப்பட்டது. கேற்றடியில் நின்று வீட்டைப் பார்த்தேன். கதவு, யன்னல்கள் எல்லாம் வாயடைத்துப் போய் இருந்தன. மிஸ்டர் சுந்தர லிங்கம் வீட்டில் இல்லையோ… 

சா… அப்படியிருக்காது கட்டாயம் ஆறு மணிக்கு வரச்சொன்னவர். வரச்சொலிப் போட்டுப் போயிருக்க மாட்டார். அப்படியான ஆளாக அவர் இருக்க மாட்டார். 

திரும்பவும் வீட்டு முற்றத்தைப் பார்த்தேன் வருஷக் கணக்காக விளக்குமாறு படாத முற்றம் வாடிப் போன பூ மரங்கள்…. உடைந்து போன போத்தல் துண்டுகள். காகம் கொண்டு வந்து போட்ட நண்டுக் கோதுகள். நாய் கடித்த எலும்புத் துண்டுகள்… 

திரும்பிப் போவோமா? என்மனம் என்னிடம் கேள்வி கேட்டது. 

சரியில்லை கதவைத் தட்டிப் பார்ப்பம். நகரத்து ஆரவாரங்களுக்கும், றோட்டின் அமளிக்கும் பயந்து வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு இருக்கிறார்களோ? 

கேற்றை விட்டு உள்ளுக்குள் இறங்க பயமாக இருந்தது. எந்தப் பக்கத்தால் நடந்து வீட்டுக் கதவை அடைவது. 

கேற்றுக்கும் வீட்டின் முன் கதவுக்கும் இடையில் வழக்கமான பாதையில்லை என்றாலும் குப்பைக்குள் இறங்கினேன். 

கதவைத் தட்டப்போக உளேயிருந்து யாரோ அழுவதும் தடார்…படார் என்ற சத்தமுமாக…நான் கதவைத் தட்டவில்லை. 


பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

“இண்டைக்கு இப்படியே பைல்களைப் புரட்ட வேண்டியதுதான். இரண்டு மூண்டு நாளைக்கு இந்த மேசையில் இரும். பிறகு பார்ப்பம்” என்று கெட்கிளார்க் சொல்லியிருந்தார். 

பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க மனத்தின் வெறுமை போகவில்லை ஒவ்பீஸ் கலகலப்பான இயக்கத்துடன் இயங்க ஆரம்பித்திருந்தது. 

சிலர் வேலை செய்ய, சிலர் பேப்பர் வாசிக்க, சிலர் சிகரெட் குடிக்க, சிலர் கொட்டாவி விட வழக்கமான கவண்மென்ட் ஒவ்பீஸ்களில் வழக்கமான செயல்கள் நடைபெற 

என் முன்னால் ஒருவர் வந்து நின்றார். 

“ஹலோ தம்பி … நான்…” தன்னை அறிமுகப்படுத். திக் கொண்டார். தானும் என்னைச் சொல்ல…அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். 

அவரில் சென்ட் மணந்தது. வெகு – கவர்ச்சியான உடை. இடுப்பில் மூன்றங்குல பெல்ட், அடர்த்தியான மீசை. சிவந்தநிறம் மெல்லியதாக காதைமூடும் சுருண்ட மயிர் அவர் அழகாக இருந்தார். 

”இருங்கோ…” 

இருந்தார். 

“வேலை ஒண்டும் தரேல்லைப் போல…” நான் சிரித்தேன். 

“இரண்கு மூண்டு நாளைக்கு ஒரு வேலையும் இல்லா மல் இருக்கிறது நல்லதுதான். வேலையைப் படிக்க முதல் இந்த ஒவ்பீசில் இருக்கிற ஆட்களைப் படிக்க வேணும்.” 

“….”

“ஓம் தம்பி அதுதான் முக்கியம்” 

இந்த உலகம் கெட்ட உலகம். யாரையும் நம்பே லாது. வசதிப்பட்டால் ஒருத்தனின்ர தலையில் மற்றவன் மிளகாய் அரைப்பான். எல்லா மாதிரியான ஆட்களும் இந்த ஒவ்பீசில இருக்கினம். யாரையும் நம்பிப் பழகாதே யும். எல்லாரும் வெளியே நல்ல மாதிரி நடிப்பினம் உள்ளுக்கை வித்தியாசமான ஆக்கள். நான் “ரென்” போல வாறன். கன்ரீனுக்கு ரீ குடிக்கப் போவம்…” என்றார். 

நான் தலை ஆட்டினேன். 


கதவடியில் நிற்க ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே இருந்து அழுகை பெரிதாகப் வெளிப்பட்டது. 

இதென்ன கஷ்டகாலம். 

“போடி வெக்கம் கெட்டகழுதை, நீயும் ஒரு பொம்பிளையே…” சுந்தரலிங்கத்தின் சத்தம் பூட்டியிருந்த கதவைப் பிரித்துக் கொண்டு என் காதில் புகுந்து கொண்டது. 

“ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்யிறியள் நான் என்ன பிழை செய்தனான்…” பெண் குரல் அழுது கொண்டு விம்மியது. 

 “போடி பேசாமல்…” படார் என்ற சத்தத்துடன் அந்தவார்த்தைகள் வந்தன. 

“ஐயோ ஏனப்பா இப்பிடி செய்யிறியள்? உங்களுக்கு. சொல்லிப் போட்டுத்தானே கோயிலுக்குப் போனனான்” 

“வெளியில் சொல்லாதை வெட்கம்கெட்ட கதையை… கோயிலுக்குப் போனனியோ புருஷனை மதிக்கத் தெரியாத உங்களுக்கு என்ன கோயில்” 

“நான் உங்கள் மதிக்கேல்லையோ… நானோ ஏனப்பா இப்படி சொல்லுறியள்? என்ரை முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கோ. ஒரு நாளாவது உங்கடை விருப்பத்திற்கு மாறாக உங்கடை சொல்லை மீறி ஏதா வது செய்திருக்கிறேனே? இந்த வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு எப்போதாவது வெளியால் வந்திருக்கின்றேனே…” பெரிதாக அழுது கொண்டு பெண் கதறினாள். 

“நான் உன்னை வெளியால் கூட்டிக் கொண்டு போறேல்லை என்பதை மறைமுகமாக இப்படிக் காட்டுறியே. உன்னைப் போல பொம்பிளையை வெளியில் கூட்டிக்கொண்டு போறதை விட…” 

“நீங்கள் என்னதான் சொன்னாலும் எப்படித்தான் என்னை நடத்தினாலும் ஒழுங்கான பெண்சாதியாகத் தான் நான் இருப்பேன்…” 

“அப்ப நான் என்ன ஒழுங்கில்லாமலே இருக்கிறன்….உனக்கு அவ்வளவு வாய்க் கொழுப்பே …” தொடர்ந்து பல படார் படார். 

“ஐயோ என்ரை அம்மாளே…”

என் மனம் பொறுக்கவில்லை. படபடவெனக் கதவைத் தட்டினேன். 


முதலில் என்னைப் பார்த்து சிரித்த வலது புறத்திலிருந்த அந்த நடுத்தர வயதுப் பெண் மெல்லியதாகக் கதைத்தாள். 

“மிஸ்ஸிஸ் கந்தவனம்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். 

“நாலு வருஷமாய் இந்த ஒவ்பீஸ்ல வேலை செய்யி றன். நல்ல ஒவ்பீஸ் வேலை ஒண்டும் தரேல்லைப் போல…” 

“ஓமோம்…” 

“வ்வெஸ்ட் அப்போயின்மென்றுதானே” 

“ம்….” 

“நல்ல வடிவாய் வேலை பழக வேணும். புதுக்க புதுக்க எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கும். ஏன் பயமாகவும் இருக்கும். வேலையில் ஏதும் பிரச்சினை வந்தால் சொல்லும். நான் ஹெல்ப் பண்ணுறன்…” 

“தாங்ஸ்…” 

“வேலைகள் முடிஞ்சால் பழைய பைல்களை எடுத் துப் பார்க்கலாம். அப்பதான் ஒவ்வொரு பைலாக ஸ்ரடி பண்ணலாம்” 

“ஓம்…” 

“என்ன பிரச்சினை என்றாலும் நான் ஹெல்ப் பண்ணுவன். ப்ப கொஞ்சம் அவசரமான வேலை இருக்கு, பிறகு கதைக்கிறன்…” என்று சொல்லி விட்டு மிஸ்ஸிஸ் கந்தவனம் தன் வேலைக்குள் மூழ்கினார். 


பட்டென்று உள்ளே அமைதி பிறந்தது. சில நிமிடங்களின் பின்னர் கதவு திறந்தது. 

முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டேன். 

“ஹலோ தம்பி…” என் முகத்தில் முழுமையாக புன்னகை மலர்ந்து இதழ் விரிக்க…சுந்தரலிங்கம் என்னை வரவேற்றார். “வாரும் வாரும் எப்படி வீட் டைக் கண்டுபிடிக்க கஷ்டமாய் இருந்ததோ, இந்த ஏரியா சரியில்லாத ஏரியா. ஒரே பிரச்சினை. ஆட்களும் ஒரு ரைப்பான ஆக்கள். எந்த நேரமும் அமளியும் கூச்ச லும் குழப்பமும் தான், என்ன செய்யிறது எண்டு இந்த வீட்டில் இருக்கிறன். என்ன யோசினை இதிலை இரும்” என்று சுந்தரலிங்கம் தொடர்ந்து வெகுசீராகக் கதை சொல்லுபவர் போல சொல்லிக் கொண்டு போக எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

சில நிமிடங்களுக்கு முன்னர் எப்படி பாய்ந்து விழுந்து கொண்டிருந்த மனிதர் இப்படி. சுந்தரலிங்கத்தை ஆழமாகப் பார்த்தேன். 

எப்படி விரைவாக இவ்வளவு இவரால் மாறமுடிந்தது. “இருந்து கொள்ளும். நான் வெளிக்கிட்டுக் கொண்டு வாறன் வெளியால் போவம்….” என்று சொல்லிக் கொண்டு அவர் உள்ளே போக… 

நான் அந்த வீட்டிஸ் ஹாலில் தனிமையானேன். ஹாலின் சுவரில் தூசு படிந்த படங்கள் நடுவே மூலைக் கொன்றாக நாலைந்து கதிரைகள். அதில் நான் இருந் ததுதான் கொஞ்சம் பரவாயில்லை. தரையில் பல சிக் ரெட் கட்டைகள், கருகிப் போன நெருப்புக் குச்சிகள். 

நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். உள்ளே இருவர் ரகசியமாகச் கதைக்கும் சத்தம்… 

“இஞ்சை ஒண்டும் இல்லையப்பா. வரேக்கை வாங்கிக் கொண்டு வாங்கோ…” 

“நான் கடையில் சாப்பிடப் போறன் நீ ஏதோ பார்” 

சுந்தரலிங்கம் வந்தார். 

“அப்ப தம்பி போவமே…” 

இருவரும் றோட்டுக்கு வந்தோம். 


பத்து மணிக்கு கன்ரீனுக்கு ரீ குடிக்கப் போவம் என்று சொன்ன அந்த மூன்றங்குல பெல்ட் அணிந்தவர் வரவில்லை. 

நானே தனிய ரீ குடிக்கப் போனேன். கன்ரீனில் அறிமுகமான சிலர் சிரித்தார்கள். 

ரீ குடித்து விட்டு மறுபடியும் மேசையில் வந்து அமர்ந்தபோது வேறு சிலர் கதைத்தார்கள். இடதுபுற மேசைக்காரர் தன்னை பொன்னுத்துரை என அறிமுகப் படுத்திக் கொண்டு, 

“தம்பி வேலையில் ஏதும் பிரச்சினை எண்டா என்னைக் கேளும்” என்று வெகு ஆதரவாகச் சொன்னார். மனத்தில் பாரம் குறைந்தது போல இருந்தது. லஞ்ச் டைம் அந்த மூன்றங்குல பெல்ட்காரர் வந்தார். “வெரி சொறி தம்பி. அவசரமான வேலை ஒண்டு. அதால ரென்னுக்கு வரமுடியாமப் போச்சு. சாப்பாடு என்ன மாதிரி? வாருமன் கன்ரீனில் சாப்பிடலாம். 

இருவரும் நடந்தோம். 

சாப்பிடும்போது அவர் கதைத்தார் இரகசியமாக…

“மிஸ்ஸிஸ் கந்தவனம் கதைச்சவவோ…” என்று கேட்டார். 

“ம்…” 

“அவவோட கண்டபடி கதைக்காதேம. அவ ஒரு மாதிரி. உம்மைப் போல இளம் பெடியள் எண்டால் விட மாட்டா” 

நான் பதில் சொல்லவில்லை. 

“மனிசி ஒரு மாதிரி எண்டதாலை புருஷனோடையும் சரியில்லை. புருஷன்காரன் விட்டிட்டுப் போன மாதிரி, மனிசிக்கு வயது போகப் போகத்தான் இளமை திரும்புது. நீர் நல்ல பிள்ளை. அவ்வோட கவனமாய் இரும். நெடுகக் கதைக்கப் பாப்பா…” அவர் சிரித்தார். 

சாப்பிட்டு முடித்தோம். 


இருவரும் றோட்டில் நடந்தோம்… இருள் பரவி விட்டபடியால் மின்சார விளக்குகள் கண்களைச் சிமிட்டின. 

சனங்களின் ஆரவாரம் மாத்திரம் இன்னமும் குறைய வில்லை. எனக்கு எதிலும் மனம் செல்லவில்லை. சுந்தரலிங்கத்தின் வீட்டு நிகழ்ச்சி மனத்தை உறுத்தியது. 

“தம்பி வாருமன் ரீ குடிச்சிட்டு நடப்பம்…” என்று சொல்லிக் கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தார். 

வீட்டுக்கு வரச் சொன்ன மனிதர் வீட்டில் ரீ தராமல் ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போறதெண்டால் என்னவோபோல் இருந்தது. 

ரீ குடித்து விட்டு வெளியே வந்து… மேலும் கொஞ்ச தூரம் நடந்தோம். 

“தம்பி…” என்றார் சுந்தரலிங்கம். 

“என்ன…” 

”பழக்கம் இருக்கே…” 

“எது…” 

அவர் சிரித்தார். 

“வாருமன் ஒரு றாம் அடிப்பம். பனிக் குளிருக்கு நல்லாய் இருக்கும்” 

திடீர் என அதிர்ச்சி உண்டானது. 

“எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை…” வார்த்தைகள் தடுமாறி வெளிவந்து தடம் புரண்டன. 

அவர் தொடர்ந்து சிரித்தார். 

“இதெல்லாம் பழக வேணும். இண்டைக்கு நான் வேண்டித் தாறன். இன்னுமொரு நாளைக்கு நீர் வேண்டி தாருமன்…” 

“இல்லை. நான் ரூமுக்குப் போகப் போறன்…” 

“கொஞ்சம் பொறும். நான் உதில் போட்டு வாறன்” என்று சொல்லிக் கொண்டு சந்து ஒன்றுக்குள் புகுந்தார் சுந்தரலிங்கம். 

சில நிமிடங்களுக்குப் பின்னர் கண்கள் சிவக்க சிகரெட் புகைத்துக் கொண்டு வந்தார். 

“வாரும் போவம்…” 

நடந்தோம். 


இரண்டு மணிக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். முதலில் அம்மாவுக்கு. பிறகு என் பிரன்ட் எக்கவுன்டன் ஞானஸ்கந்தனுக்கு. 

சில நிமிடங்கள் கரைய, 

“ஹலோ என்ன தம்பி லவ் லெட்டரோ…” என்று கேட்டுக் கொண்டு மறுபடியும் மூன்றங்குல பெல்ட்காரர் என் முன்னால் வந்து அமர… 

“இல்லை” என்று சொல்லி தடுமாறி…கடிதத்தை மடிக்க அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். 

“இதுக்குப் போய் ஏன் இவ்வளவு தூரம் வெட்கப் படுகின்றீர். வெட்கப்படாமல் எனக்குச் சொல்லும்” 

”சா…” 

“லவ் லெட்டர் எழுதுவது அப்பிடி ஒண்டும் நடக்காத. விசியம் இல்லையே. பொழுதுபோக்காசு எல்லாரும் லவ் பண்ணுறதுதானே! நானும் கனக்க லவ் பண்ணினான்…” சிரித்துச் சொன்னார். 

“அப்பிடி ஒண்டும் இல்லை. என்னுடைய பிரண்டுக்குத் தான் கடிதம். பார்க்கப் போறீங்களே…” 

“இல்லையில்லை, வேண்டாம். நான் ஒரு விசியம் சொல்ல வேண்டும் எண்டு வந்தனான்…” 

“ம்…” 

“உமக்கு இடது பக்கம் இருக்கிறாரே பொன்னுத்துரை அவரோடயும் கவனமாய் இரும் தம்பி. ஆள் சரியான தண்ணிச்சாமி. மற்றவையிட்ட காசை தட்டிச் சுற்றி தண்ணி அடிப்பார்” 

“ம்…” 

“அதுதான் இந்த ஒவ்பீஸ்ல வேலையைப் படிக்க முதல் ஆட்களை படிக்க வேணும் என்று சொன்னனான். இப்ப விளங்குதே…” 


“நேரம் போட்டுது. நான் றூமுக்குப் போக வேணும்…” என்று சொல்லிக் கொண்டு சுந்தரலிங்கத் திடம் விடுபட முனைந்தேன். 

“என்ன தம்பி இப்பிடி இருந்தால் சரி வராது. ஒரு ஆண் இப்பிடிப் பயப்படலாமே. மெல்ல மெல்ல எல்லாம் பழக வேணும்” என்று சொல்லிக் கொண்டு அவர் என் கையைப் பிடித்தார். 

“எனக்குத் தலையிடிக்குது. நான் றூமுக்குப் போக வேணும்…” முன்னைவிட வேகத்துடன் கையை இழுத்து அவரின் பிடியில் இருந்து தப்பித் திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன். 

“தம்பி தம்பி…’ என அவர் கூப்பிட்டதைக் காது ஏற்கவில்லை. 

சற்று தூரத்தில்… 

இருவர் நடந்து வந்தனர். ஒரு ஆண் ஒரு பெண் தோளோடு தோள் இடிபட கைகளைக் கோர்த்துக் கொண்டு… 

அட மிஸ்ஸிஸ் கந்தவனம். 

“ஹலோ தம்பி எங்கை போட்டு வாறீர்…” என்றார் மிஸ்ஸிஸ் கந்தவனம். 

“சும்மா…இப்படியே…” வார்த்தைகளை முடிக்காமல் தடுமாற… 

“இஞ்சருங்கோ இந்த தம்பி எங்கடை ஒவ்பீசுக்கு புதிதாய் வந்திருக்கிறார்… இவர் என்னுடைய மிஸ்டர் என மிஸ்ஸிஸ் கந்தவனம்” என்னையும் அறிமுகப்படுத்தி தன்னுடைய கணவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். 

சிறிது நேரம் சின்ன உரையாடல் 

“வலு அமைதியான ஆள் போல…” மிஸ்டர் கந்தவனம் சொன்னார். 

நான் புன்னகைத்தேன். 

”ஒரு நாளைக்கு எங்கடை வீட்டுக்கு (லஞ்சுக்கு வர வேணும்” என்றார் மிஸ்டர் கந்தவனம். 

நான் தலையை ஆட்டினேன்… இருவரும் விடை பெற்று அப்பால் போனார்கள். 


அந்த மூன்றங்குல பெல்ட்காரர் திரும்பவும் மூன்றரை மணிக்கு வந்தார். 

”ஹலோ ரீ குடிக்க போவம்…” என்றார். 

மனத்தில் அமைதியில்லை. காரணம்… எனக்குப் புரிய வில்லை. 

மெளனமாக அவர் பின்னால் நடந்தேன். கன்ரீனில் ஒதுக்குபுறமாக அமர அவர் கேக்குடன் வந்தார். 

“சாம்பிடும் தம்பி..” 

சாப்பிடுவதாகப் பாவனை செய்தேன்… 

“நீர் ஒண்டுக்கும் யோசிக்காதேம். என்ன பிரச்சினை எண்டாலும் என்னட்டை. சொல்லும். அது ஒவ்பீசலாக இருந்தால் என்ன அண் ஒவ்பீசலா இருந்தா என்ன வெட்கப்படாதேயும்…” 

“ம்…” 

“இப்பிடி வாயை மூடிக் கொண்டு பழகாதேயும். நல்லாகக்கதைக்க வேணும். கதையாலேயே மற்ற ஆட்களை மடக்கப் பார்க்க வேணும்… அதுசரி பின்னேரம் வீட்டுக்கு வாருமன்…” 

”பாப்பம்…” 

“நீர் எங்கை இருக்கிறீர்…” 

சொன்னேன். 

“அட அதுக்குக் கிட்டத்தான் நான் இருக்கிறன். நீர் இருக்கிற றோட் வந்து ஒரு சந்தியில் ஏறுது தெரியுமே…” 

“ஓம்” 

”அந்தச் சந்திக்கு வந்து இடது பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் நடக்க நம்பர் செவன்தான் என்ரை வீடு நம்பர் செவன் எண்டா லக்கி செவன். ப்ளூ கலர் பெயின்ட் அடிச்ச கேற்… வருவீரே…” 

”பாப்பம்…” 

“கட்டாயம் பின்னேரம் ஆறுமணிக்கு வாரும் பாத்து கொண்டு இருப்பன். வீட்டை கண்டுபிடிக்க கஷ்டம் என்டால் சுந்தரலிங்கத்தின்ரை வீடு எங்கை என்டு விசாரித்தும் பாரும்…” 

”சரி..” 

“கட்டாயம் வர வேணும் பாத்துக் கொண்டு இருப்பன்.” 

“வாறன்…” 

– வீரகேசரி, 30-05-1982.

– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *