கதையாசிரியர்:
தின/வார இதழ்: சிரித்திரன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2025
பார்வையிட்டோர்: 155 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுடலை மாதிரி, பஸ் ஸ்ராண்டும் ஒரு நல்ல இடம், ஞானம் பிறப்பதற்கு என்று பட்டது. இந்த அவதி, இந்தப் போட்டி, இந்த இடிபாடு நெரிபாடு எல்லாம் எதற்கு? ஒவ்வொரு நாளும் இப்படி விழுந்தடித்துக் கண்டது என்ன? இந்த வேலை, இந்த வாழ்க்கை – எல்லாவற்றிலும் என்ன இருக்கிறது? கண்ட மிச்சம் என்ன? 

இந்தக் காலைப் பொழுதுகள் எவ்வ ளவு அழகானவை, அதிலும் இந்தக் கோடைக் காலக் காலைப் பொழுதுகள்? முக்கியமாக இந்த ஏழரை எட்டரைக் கிடைப்பட்ட நேரம்? இதை எப்போது அநுபவிக்க முடிந்திருக்கிறது? ஒவ்வொரு நாளும் முதல் நாள் அலுப்பில் ஆறு மணிக்குத்தான் எழும்ப முடிகிறது. அதுகூடப் பெரிய பாடு. எழும்பி, ஏழே காலுக்குள் புறப்பட்டுவிட வேண்டும் என்று பறக்கிறது. என்றாலும், வெளிக்கிட எப்படியும் ஏழரையாகி விடும். 

எந்தப் பாடுபட்டு ஓடினாலும் அரைவாசி நாட்களில் ரெஜிஸ்ரர் மூடப்பட்டு விடுகிறது; எட்டரைக் கோடு விழுந்து விடுகிறது. தான் வெளிக்கிடுகிற நேரத்தை ஏழேகால் ஆக்கிப் பார்த்தான். ஏழாக்கினால் கூடப் பலனீராது போலி ருந்தது.பஸ் நேரம் அப்படி. ஏழுக்குப் புறப்படுவதற்கும் அதற்கும் வித்தியாசமில்லை -அரை மணி நேரத்தை பஸ் ஸ்ரான்டில் வீணாக்குவதை விட. 

பழையபடி ஏழரைக்கே வெளிக்கிடத் தொடங்கினான்.


ஒரு நாளைக்காவது குளித்த புத்துணர்ச்சி கெடாமல், மற்றவர்களின் வியர்வையையும் எண்ணையையும் பூசிக் கொள்ளாமற் போக ஆசையாயிருந்தது. 

இன்றைக்கும் ஏழே முக்கால் ஆகிக்கொண்டிருக்கிறது. ஏழு முப்பத்தைந்து பஸ்ஸை இன்னமும் காணவில்லை. கியூ இல்லாமல் கும்பல். கழுத்தை வளைத்து தெருத்தொங்கலைப் பார்த்தபடி நிற்கிற சனங்கள். காலை வெயிலுக்கு எதிராக குடைகள். புத்தகங்கள், கைப்பைகள், கைகள். எல்லா பஸ் சுளும் போய்க்கொண்டிருக்கின்றன.. இந்த நம்பரைவிட 

இன்றைக்கு எத்தனை மணியானாலும் ஆறுதலாகப் போவோம் என்று திடீரென்று எண்ணம் வந்தது. நெரியாமல், ஆறுதலாக ஒரு ஜன்னலடி ஸீற்றில் இருந்து எதிர்க் காற்று முகத்திலடிக்க சந்தோஷமாய்ப் போவோம். 

அந்த ஏழு முப்பத்தைந்து பஸ் இவ்வளவு நேரமும் காத்து நின்றது – வந்தது; வழமைபோல நிரப்பி அடைத் துக்கொண்டு. ஏறாமல் நின்றான். நேரம் ஏழு ஐம்பது. ஆறு தலாகப் போகக்கூடிய பஸ் எத்தனை மணிக்கு வருமென்று தெரியாமலிருந்தது. எங்கிருந்தோ திடீரென்று கணேசன் ஓடி வந்தான். ஓடுகிற ஒட்டத்தில் “ஏன் போகேல்லையா?” என்றொரு கேள்வி. சொல்லுகிற மறுமொழி அவனுக்குத் தேவைப்படாது என்பதாலும், ஒரு புன்சிரிப்புடன் மட்டும் நிறுத்திக்கொண்டான். கணேசன் ஒற்றைக் காலில் தொற் றிக்கொள்ளவும், இவனில்லாமலே அந்த பஸ் புறப்பட்டுப் போனது. 

கூட்டம் குறையும் வரை இதிலேயே தூங்கிக்கொண்டு நிற்காமல் ஒரு ரீ குடித்துவிட்டு வரலாம் என்று போனான். கடையிலிருந்தும் பஸ் தரிப்பிடம் தெரிந்தது. இந்தப் போக் கில் ஆறுதலான பஸ் இப்போதைக்கு வராது என்று உணர்ந்தான். தேநீர் ஒரு ரூபா. வெறும் கழனி. 

புத்தகக் கடையுடன் கால் மணித்தியாலம் போக்கிய போது ஒரு யோசனை வந்தது. தெருவைக் கடந்து மற்றப் பக்கம் போனான். எதிர்த் திசையில் போகிற அவன் ரூட் பஸ் வந்து நின்றது. ரேமினஸ்ஸுக்கு ஒரு ரிக்கற். ஐம்பது சதம். 

அங்கு போய்ச் சேர்ந்தபோது எட்டேகால். 

“இது எத்தனை மணிக்குத் திரும்பி வெளிக்கிடும்?” 

“ஒன்பதுக்கு..” என்றான் கொண்டக்டர். 

மீண்டும் அநாவசியமாய் இன்னொரு தேத்தண்ணி. எட்டு ஐம்பத்தைந்துக்கு அதே பஸ்ஸில் ஏறியபோது, ஏற்கனவே இரண்டு பேர்தானிருந்தார்கள். வெய்யில் படாத பக்கமா கப் போய் உட்கார்ந்தான். ரிக்கற் எடுத்தபோது ‘எல்லா மாக மூன்று ரூபா வீண்’ என்று மனம் கணக்குப் போட்டது. 

கந்தோருக்குப் போய்ச் சேர்ந்தபோது, ஒன்பதே முக்கால். றெஜிஸ்ரர் இன்று அதிசயமாக மூடப்படாமலிருந்தது; எட்டேகால், எட்டரைக் கோடுகளில்லை. அந்த வெங்காயம் லீவாயிருக்க வேணும். ஒன்பதே முக்கால் போட்டுக் கையெழுத்து வைத்தான். அரை நாள் லீவு போட்டான். 

– சிரித்திரன், 1980.

– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *