கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 301 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்போ நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இந்த முடிவுக்கு வந்த பிறகு, என் மீது சில நாட்களாக நான் கொண்டிருந்த வெறுப்பும்,என்னில் ஏதோ ஒன்று தொலைந்து விட்டதான என் உணர்வும் மறைந்தே விட்டது. 

வங்கியில் இருந்து கொண்டு வந்த வைப்புப் பத்திரங்களை வகைப்படுத்தி, உரிய கோவைகளுக்குள் சேர்த்துக் கொள்கிறேன். காலை பத்து மணி தொட்டு ஒரு மணி வரை கோட்டையில் உள்ள எல்லா வங்கிக் கிளைகளுக்கும் ‘பாண்ட்கேசை’யும் திறந்து காட்டி, ஏறி இறங்கி அலைந்த போது எரிச்சலாகவே இருந்தது. இன்று காலை காரியாலயம் வந்ததும் நேற்றைய காசோலைகளை வைப்பிலிடுவதற்கான பத்திரங்களை நிரப்பும் போது உண்மையில் நான் நானாக இருக்கவில்லை. ஆயிரத்தெட்டு வெட்டுக் கொத்துகளுடன் ஏதோ கிறுக்கித்தள்ளி எல்லாக் காசோலைகளையும் வைப்பிலிட்டு விட்டு இங்கு வந்திருக்கிறேன். 

கடந்த இராத்திரி நடைபெற்ற சம்பவங்களின் பின்னால், தாக்கமே இல்லாது நான் கட்டிலில் புரண்டதும், காலையில் எழுந்து கடன்களை முடித்துவிட்டு ஆனந்திக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாது காரியாலயம் வந்ததும். 

அந்த நேரம் தொட்டு வங்கிகள் வழியே அலைந்த நேரம் உட்பட இப்போ வரை என் தீர்மானங்களை அட்டவணைப்படுத்தி, இப்போ நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். 

என் “கவுண்டரில்” இருந்தபடியே கந்தோரை ஒரு முறை கண்களால் வலம் வருகிறேன். ‘எக்கவுண்டன்’ கயல்விழியையும், ‘டைப்பிஸ்ட்’ பல்லவியையும் தவிர, மற்ற எல்லா இருக்கைகளுமே காலியாக இருந்தன. எல்லோருமே மதிய போசனத்துக்குச் சென்று விட்டார்கள். 

சுழலும் மின் விசிறிக்கு ஈடு கொடுக்க முடியாது என் மேசையில் இருந்த வங்கிக் கோவை ஒன்று தன் பக்கங்களைப் பின் நோக்கிப் புரள விடுகின்றது. 

1983 ஆடிக் கலவரத்தின் பின்னதாக கொழும்புக்கு மீண்டும் வேலைக்குத் திரும்பிய போது தான் எனக்கு பல்லவியின் அறிமுகம் கிடைத்தது. எந்தவித ஆயத்தங்களுமே இல்லாது ஒரு சில உடுப்புக்களுடன் மட்டுமே கொழும்பு திரும்பிய நான் சில நாட்கள் ‘கம்பனியிலேயே’ தங்க வேண்டி நேர்ந்தது. 

அந்தச் சமயங்களிலெல்லாம் சாப்பாட்டிற்கும், உடுப்புகளுக்கும் பெரிதும் கஷ்டப்பட்டு வந்தபோது, பல்லவி தான் தன் வீட்டிலிருந்து உணவுகளையும், உடுதுணிகளையும் வரவழைத்து எனக்கு பெரிதும் உதவினாள். 

சில நாட்களின் பின் சில நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுப்பிட்டியில் ஒரு வீட்டில் தங்க வசதி ஏற்பட்ட பின்பும் கூட, பல்லவி தன் உதவிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அந்தச் சந்தர்ப்பங்களில் தான் அவளின் பெருந்தன்மையையும், உயர்ந்த பண்பையும் நான் இனம் கண்டு கொண்டேன். விளைவு நாமிருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழக ஆரம்பித்தோம். 

1985ம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டில் பல்லவியின் போக்கில் ஒரு புது மாற்றத்தை நான் உணர ஆரம்பித்தேன். என் நட்பை நாடியவள், அதற்கு மேலாக. என்னுடனேயே வாழவும் ஆசைப்படுகிறாள் என்ற சங்கதி ஆரம்பத்தில் எனக்கு உணர்வதற்குச் சற்றுச் சங்கடமாகவே இருந்தது. 

விடயத்தை நண்பர்களின் காதில் போட்டு வைத்தேன். கிண்டல்கள், பாராட்டுக்கள், ‘அட்வைஸ்கள்’…….. இப்படிப் பல ரகங்களில் விமர்சனங்கள் வெளிவந்தன. 

இறுதியாக…கயல்விழி அக்காவை நாடி இது பற்றி அபிப்பிராயம் கேட்டேன். புற்றளை இந்துக்கல்லுாரியில் நான் இரண்டாம்தரம் பயின்ற போது கயல்விழி அக்கா ‘எஸ்.எஸ்.ஸி.’ படித்த அந்த நாளையிலிருந்தே அவவை எனக்கு நன்றாகவே தெரியும். அட்வான்ஸ் லெவலில்’ மூன்று முறையும் மட்டையடித்து விட்டு, எண்பதாம் ஆண்டு வேலை தேடி கொழும்புக்கு வந்த போது இந்தக் ‘கம்பனியில்’ காசாளராக நான் வேலையில் சேர்ந்து கொள்ள சிபார்சு செய்தது மட்டுமின்றி ‘யேஸ்’, ‘நோ’ தவிர ஆங்கிலத்தின் வாசனையே அற்ற எனக்கு, பயிற்சி தந்து, இந்தளவிற்கு நான் முன்னேற பக்கத்துணை நின்றவர் தான் இந்த கயல்விழி அக்கா. 

பல்கலைக்கழகம் சென்று, பயின்று, பின் என்னதான் ‘எக்கவுண்டனாகி’ பிறருக்கெல்லாம் மதிப்பிற்குரியவராக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை, கயல்விழி எனக்கு அதே அக்கா தான். 

எனது இந்த விடயம் பற்றி அக்காவின் அபிப்பிராயம் சற்று வித்தியாசமாகவே இருந்தது. பல்லவியின் நலிவுற்ற பொருளாதாரப் பின்னணி பற்றி நன்றாகவே அறிந்த அக்கா, வெற்றிகர எதிர்நீச்சல் மணங்கள் பல வற்றைப் பட்டியலிட்டுக் காட்டி, தன்னம்பிக்கையையும், தளராத மனவுறுதியுமே வாழ்க்கையின் முதலீடுகள் என வலியுறுத்திக் கூறினா. இலட்சாதிபதியாவதை விட, இலட்சியவாதியாக இறுதி வரை வாழ்வதே, இனிய வாழ்க்கை என இரத்தினச் சுருக்கமாகத் தன் அபிப்பிராயத்தைத் தந்தா. 

இந்த விடயம் புயலாக எனது பெற்றோருக்கும் எட்டியது. என் திருமணத்தைப் பற்றி அதுவரை எதுவுமே சிந்தித்திராத என் பெற்றோர், இதைக் கேள்விப்பட்டதும் விழுந்தடித்து பல சம்பந்தங்களை வலிந்து வரவழைத்தனர். இந்த வரிசையில் இறுதியாக வந்தது தான் ஆனந்தியின் இந்த ஏழு இலட்ச சம்பந்தம். 

ஆனந்தியின் சம்பந்தப் பேச்சு வார்த்தைகள் முளைவிட்ட சமயத்திலேயே சித்திரை வருடப் பிறப்பிற்கென ஊரிற்குச் சென்றிருந்த போது பல்லவியின் விடயமாகப் பெற்றோருடன் கதை தொடுத்தேன். என்னை நம்பியவளை ஏற்காது, உங்கள் விருப்பப் படி நடப்பது எப்படி நியாயம் ஆகும் என்றேன். நலிந்த பொருளாதாரப் பின்னணியில் நிறைவான வாழ்வமைக்க முடியாதெனப் பெற்றோர் விவாதித்தார்கள். பெற்றவர்களின் பிடிவாதங்கள், பேரவாக்கள், அபிலாசைகள் முன் என் நியாயங்களும், தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் நிராகரிக்கப்பட்டன. பெற்றோரை வெறுக்கவோ, எதிர்க்கவோ திராணியற்றவனாகவும், நம்பியவளை மோசஞ் செய்ய முடியாதவனாகவும் நான் தத்தளித்து, முடிவில் கொழும்பு திரும்பியதும், பல்லவிக்கு என் நிலவரத்தை எடுத்து முன்வைத்தேன். அவள் அதிர்ச்சியடைந்தாள். என் ஆளுமை பற்றிய தன் அபிப்பிராயமே ஆட்டங் கண்டு விட்டது என்றாள். ஆனாலும், என் மீது ஆத்திரப்படவோ, அதிகம் அலட்டிக் கொள்ளவோ இல்லை. தன் போக்குகளை, பழக்கங்களை மாற்றி என்னை விட்டு விலகத் தொடங்கினாள். 

“பல்லவியிடம் பசை இல்லை என்றதுமே பாவி மாறிவிட்டான். காதலிக்கிறது, காசில்லை என்றதும் கைவிடுகிறது. இவங்களெல்லாம் கதையள் சொல்லவும், சமூகத்தைத் திருத்தவுமெண்டு வெளிக்கிட்டுடுவாங்கள்.” அன்னியோன்னியமாகப் பழகிய நண்பர்களது நாவே என்னை நெருப்பாகச் சுட்டது. 

நாட்கள் செல்லச் செல்ல, ஆனந்தியின் சம்மந்தம் சரி வருவதாக நான் உணரவைக்கப்படும் போது…கொஞ்சம் கொஞ்சமாக என்னில் ஏதோ தொலைவதைப் போன்ற உணர்வு. எதிலுமே பிடிப்பில்லாத ஒரு பிரமை….. வாழ்க்கையே வெறுத்ததைப் போன்ற ஒரு தன்மை…முடிவில் ஒரு வெறுமை. 

வெறுமையாயிருந்த காரியாலயம் மீண்டும் களைகட்டத் தொடங்கியது. மதிய உணவிற்கு சென்றிருந்த ஊழியர்கள் யாவரும் இப்போது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால், இப்போ கயல்விழி அக்காவும், பல்லவியும் தமது கதிரைகளை காலியாக்கியிருந்தார்கள். 

கொம்பனி வீதியில் நண்பர் வீடொன்றின் ‘அனெக்ஸ்’ இல் ஆனந்தியுடன் என் வாழ்வின் முதல் அத்தியாயத்தை ஆரம்பித்தேன். 

இளமைக் காலங்களில் எப்படி எப்படியோ வாழ்க்கையை கற்பனை பண்ணிப் பார்த்த எனக்கு, நான் ஆரம்பித்த வாழ்க்கை எந்த விதத்திலும் ஒத்துப் போனதாக அமைந்திருக்கவில்லை. ஆனந்தியின் விரக்தியான போக்கும், ஒத்துழைக்காமையும், பாராமுகமும் என்னை மிகவும் வாட்டி வதை செய்தது. 

காணி நிலங்களையும், காசு பணங்களையும் என் பெற்றோர் ஏறக் கேட்டதால், இது அவளுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையாகலாம் போகப் போகச் சரியாகிவிடலாம் என்றெல்லாம் எண்ணி கடந்த நான்கைந்து கிழமைகளாக நான் அனுபவித்த வேதனைக்கு நானே சமாதானம் சொல்லி வந்தேன். வெளியில் இதுபற்றி எவரிடமும் அபிப்பிராயம் கேட்க என் மனம் ஏனோ இடம் தரவில்லை. ஆனால், நான் எண்ணியவற்றிற்கு மாறாக, இவளின் மரத்த நிலைக்கு உண்மையான காரணத்தை நேற்று நான் உணர்ந்த போது.. 

‘சோட் லீவில்’ நேற்று நான் சற்று முன்னராகவே வீடு திரும்பிய போது தான் அந்த அதிர்ச்சியான உண்மை எனக்குப் புலனாகியது. 

முன்பின் எனக்கு அறிமுகமே அற்ற ஆடவன் ஒருவனுடன் ஆனந்தி வீட்டில் மிக அன்னியோன்னியமாக இருந்ததும்.. என் திடீர் வரவால் இருவர் முகமும் விகாரமானதும், என்னுடன் எதுவுமே கதைக்காது உடனேயே அவன் நழுவியதும், ஆனந்தி கூட ஒன்றும் சொல்லாது கட்டிலில் போய் குப்புற விழுந்ததும் சட்டையை பிய்ந்தெறிந்துவிட்டு கொம்பனிவீதி நெடுஞ்சாலை நடுவே ஓடவேண்டும் போல் இருந்தது எனக்கு. 

சிறிது நேரத்தின் பின்…. ஆனந்தியிடம் நானாகவே பேச்சை ஆரம்பித்தேன். மனநோயாளியைப்போல் கொஞ்சநேரம் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், பின்னர் பார்வையைத் திருப்பி அறைக் கூரையைப் பார்த்தவாறே, கதை சொல்ல ஆரம்பித்தாள்!. 

இந்தக் கல்யாணத்திற்கு என்னைப் போல் ஆனந்தியும் பலாத்காரப்படுத்தப்பட்டிருக்கிறாள். 

ஆனந்திக்கும், வந்து சென்ற அன்ரனிற்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாகவே பழக்கம் இருந்திருக்கிறது. ஆனந்தியின் அண்ணன் ராஜனுடன் அன்ரன் ‘அட்வான்ஸ் லெவல்’ பயின்ற காலங்களில், அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கிறான். அந்தப் பழக்கம் நட்பாகி பின் ஒரு நெருக்கத்தை இவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. விடயத்தை ராஜன் உணர ஆரம்பித்ததும், அன்ரனை வீட்டுப் பக்கமே வரவிடாது தடுத்திருக்கிறான். தன் நட்பையும் முறித்திருக்கிறான். ‘அவன்ரை சாதியென்ன, சமயமென்ன?  ‘உனக்கென்ன கூட்டு’ என ஆனந்தியை ராஜன் கண்டித்திருக்கிறான். சில நாட்களின் பின்னர் ராஜன் உழைப்பதற்கென கப்பலிற்கு சென்றுவிட்டான். 

படிப்பை முடித்த அன்ரன் வெளிநாடு செல்ல ஆயத்தங்கள் மேற்கொண்டு வந்த போது, ஆனந்தி ‘ரவுணில் கம்பனி’ ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.எவருக்கும் தெரியாது, இவர்களின் தொடர்பு வெளியிடங்களிலுந் தொடர்ந்திருக்கிறது. 

வெளிநாடு சென்ற பின்பும் ‘கம்பனி விலாசத்திற்கு அன்ரன் தவறாது கடிதத் தொடர்பு கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழிந்த பின்னர் கப்பலில் இருந்து திரும்பிய ராஜனுக்கு இந்த விடயம் அம்பலமாகியிருக்கிறது. சினங் கொண்ட ராஜன் ஆனந்தியை கட்டிவைத்து அடித்திருக்கிறான். பல நாட்கள் அறையில் பூட்டிவைத்து, பிற இடங்களில் கல்யாணப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறான். 

பல நாட்கள் தொடர்புகள் இல்லாததால், கல்யாண விடயம் எதையும் அன்ரன் அறிந்திருக்கவில்லை. பின்னர் கொழும்புக்கு வந்த பின்னர் அன்ரனுக்கு விரிவாக சகலதையுமே எழுதியிருக்கிறாள். அக்கடிதம் கிடைத்ததுமே…அன்ரன் கனடாவில் இருந்து விலாசந் தேடி இங்கு வந்திருக்கிறான். 

ஒரே புழுக்கமாக இருந்தது எனக்கு. மின்விசிறியின் வேகத்தைச் சற்றே கூட்டிவிட்டு நிமிர்ந்து கயல்விழி அக்கா பக்கம் கண்களைத் திருப்புகிறேன். அப்போ தான் மதிய போசனத்தை முடித்துவிட்டு அவ தன் இருக்கையை நெருங்கிக் கொண்டிருந்தா. 

என் ‘கவுண்டரை’ இழுத்து மூடிவிட்டு, அக்காவின் முன்னால் போடப்பட்டிருந்த கதிரையில் சென்றமர்கிறேன். என்னையே அறியாமல் என் கண்கள் கலங்க ஆரம்பித்தன. 

“என்ன தம்பி இது? ‘லைக் ஏ சைல்ட்’. . . என்ன நடந்தது உனக்கு?” மேசைமீது பரந்திருந்த பத்திரங்களை ஒதுக்கி விட்டு, அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி மேசைமீது வைத்தவாறே அக்கா கேட்டா. 

சிறிது நேர மௌனத்தின் பின் ராத்திரி நான் கேட்டவற்றை அக்காவிற்கு ஒன்றுமே விடாது கூறி முடித்தேன். மேசை மீது வைக்கப்பட்டிருந்த ‘கிளாஸ்’ நீரை முழுக்கக் குடித்து முடித்துவிட்டு அக்கா கேட்டா. . . “இப்ப என்ன செய்கிறதா உத்தேசம்?” அவவின் முகம் சற்று இறுகியிருந்தது. 

“அக்கா நான் ஆனந்திக்கு அவள் விரும்பின வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கப் போறன். பலாத்காரப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவள் எனக்கு கழுத்தை நீட்டியிருக்கிறாள். ஆனாலும் இன்னமும் அவள் நினைவுகள் எல்லாம் அன்ரனைச் சுற்றினதாகவே இருக்கிறது. சில மணித்தியாலங்கள் அவனோட இருந்தாலும், சந்தோஷமாக தான் இருப்பதாக சொல்கிறாள். சதா அன்ரனையே உலகமாக எண்ணி இருக்கிறவளை, தாலி கட்டின ஒரு குற்றத்துக்காக மேலும் நான் சிறைப்படுத்த வேணு மெண்டு என்ன நியதி?” 

“தம்பி, நீ குழந்தைப் பிள்ளைத்தனமாய் கதைக்கிறாய். இத்தனை நாளாக உன்னோடை வாழ்ந்தவளை, இனியும் அன்ரன் ஏற்கத் தயாராக இருப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” 

“இன்னமும் தன்னை அன்ரன் அதே ஆழமாக, ஆத்மார்த்தமாகவே நேசிப்பதாக ஆனந்தி சொல்கிறாள். எந்த நிலையிலும் தன்னை அவன் ஏற்பான் என்பதை எனக்குணர்த்த, இதைவிட சுருக்கமான வார்த்தை வேறை தேவையில்லை எண்டு அவள் நினைத்திருக்கிறாள். எனக்கு ஒண்டுமே சொல்லாமலும், அவள் அவனோடு ஓடிப்போயிருக்கலாம். ஏதோ ஒரு மதிப்பு வைத்து எனக்கு இதைச் சொல்லியிருக்கிறாள். அக்கா, அவள் நிம்மதியாக வாழ வேண்டுமெண்டால், அவளையும், அவளது சொத்துக்களையும் துறப்பதைத் தவிர வேறெந்த வழியும் நியாயபூர்வமானதாக எனக்குத் தெரியவில்லை.” 

“இந்தத் தொடர்புகள் பற்றி முன்னரே உன்னுடைய வீட்டுக் காரருக்கு ஒண்டுமே தெரியாதா?” 

“எல்லாமே தெரியுமாம். வெறும் காகிதக் காதல் தானே, அதிலை பாதக மில்லை எண்டு சொல்லிப் பணத்தைக் கறப்பதிலையே என்ரை பகுதி குறியாக இருந்ததாக இவள் குற்றஞ் சொல்கிறாள். இலட்சங்களைக் கூட்டுறதிலை இருந்த அக்கறை பொம்பிளையின்ரை நடத்தை இலட்சணத்தைப் பாக்கிறதில இருக்கேல்லையாம்.” 

“உன் பெற்றோரால் உனக்கு வசதியைத் தேடித்தர முடிந்ததே தவிர, நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துத் தர அவர்களால் முடியவில்லை. ஓ.கே. ஆனந்தியை அன்ரனோட கனடாவுக்கு அனுப்பிப் போட்டு, நீ பிறகென்ன செய்யப் போகிறாய்?” 

“பழைய பிரம்மச்சரிய வாழ்க்கை தான். பணத்தை எதிர் பார்த்து தம் பிள்ளைகளது மணத்தை நிர்ணயிக்கின்ற பெற்றோருக்கு என்ரை வாழ்க்கை ஒரு படிப்பினையாக அமையட்டும். இதை நான் பிரச்சாரமாகச் சொல்லேல்லை. பிரச்சினைகளை விடுகின்ற பிழைகளை அவரவர் உணரவேண்டும் எண்டுறதுக்காகத் தான் சொல்லுறன்.” 

“உனக்கு வாழ்க்கைப்பட்டவளுக்கு அவள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைக்கிறாயே தவிர … இன்னமும் உனக்கொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ, அல்லது உன்னை நம்பியிருந்த பல்லவிக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவோ விரும்புகிறாய் இல்லையே தம்பி.” 

“இனியும் பல்லவியை நான் கைபிடிக்க நினைக்கிறதுக்கும், இன்னமும் அவளிட்டை அன்பை எதிர்பார்க்கிறதுக்கும் அருகதையற்றவன் அக்கா நான். அவளைப் பொறுத்தமட்டிலை என்னுடைய நிலை காலாவதியான காசோலை தான்.” 

“வட் டூ யூ மீன்…? நீ என்ன சொல்லுறாய்?’ 

“தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு தான் எங்களையே நாங்கள் உணரத் தலைப்படுறம். பெற்றோரது அபிலாசைகளுக்காக என்ரை கொள்கை இலட்சியங்களை இரண்டாந்தரமாகக் கணித்ததாலை தான் என்னாலை ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை முன்னரே அமைத்துக் காட்ட முடியாது, இப்ப செல்லாக் காசாகி இருக்கிறன். இன்னமும் பழமைகள், பாரம்பரியங்கள், மதங்களை மதித்ததாலை தான், ராஜன் ஆனந்தியை அன்ரனுக்குக் கட்டிக் கொடுக்கேல்லை. ஆக, தனித்தனி மனிதன் தங்கடை சொந்தங்களை,கௌரவங்களைத் தியாகம் செய்யத் துணியாததாலை தான் எங்கடை சமுதாயத்துக்கு இன்னமும் ஒரு விடிவு கிடைக்காமல் இருக்கு. புதிய சமுதாயம் காணத்துணியும் இளைஞர்கள், பழைய எல்லைகளை மீறிச் செல்ல வேணும். அப்போதுதான் புதிய யுகம் ஒன்றைப் பிரசவிக்க முடியும்.” 

“பல்லவியை நிராகரித்து, நீ ஆனந்தியை ‘மரி பண்ணின போது முதன்முதலாக உன்மீது எனக்கொரு வெறுப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போ உன்னுடைய நிலைமையைப் பார்க்கேக்க இந்த ‘கம்யூனிற்றியிலை’ தான் எனக்கு ஆத்திரமா இருக்கு. தாங்க முடியாத ஒரு வெறுப்பாயிருக்கு.” 

“நான் எடுத்த முடிவு பற்றி நீங்கள் என்ன சொல்லுறியள்?” 

“நீ கொண்டு வாற ‘வவுச்சர்களை’ ‘அப்புறாவ்’ பண்ண வேண்டியது என்னுடைய கடமை. ஏனெண்டால் அதுக்கு எனக்கு அதிகாரமிருக்கு. ஆனால், இது உன்னுடைய சொந்த விஷயம். இதை ஆதரிக்கலாமே தவிர, அனுமதிக்க எனக்கு அதிகாரமில்லை. ஆனாலும், உன்னுடைய நிலவரத்தை நன்றாகப் புரிந்த என்னாலை இந்த முடிவை ஆமோதிக்க முடிகிறதே தவிர, மாற்று வழி சொல்ல எனக்கெண்டால் எதுவும் தெரியேல்லை. ஆனால், உனக்கு நல்ல வழி காட்டுகிற உரிமை எனக்கிருக்கு அதையும் மறந்திடாதை.” 

மேசை மேல் இருந்த கண்ணாடியை அக்கா மாட்டிக்கொள்கிறா. 

தன் இருக்கையை விட்டெழுந்து ‘ரைப்’ செய்த பத்திரங்களோடு பல்லவி, அக்காவை நோக்கி வருவதையும், வெறுமையாயிருந்த என் ‘கவுண்டர்’ ‘கம்பனி வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிவதையும் அக்காவின் அந்த மங்கிய நிறக் கண்ணாடியூடாக முன்னால் இருக்கும் என்னால் இப்போது மிகத் தெளிவாகவே பார்க்க முடிகிறது. 

இப்போ அக்காவிடமிருந்து விடைபெற்று என் ‘கவுண்டரை’ நோக்கி நான் வேகமாக முன்னேறுகிறேன். 

– மல்லிகை

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *