மீனாச்சி ராஜ்யம்
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடிக்கடி அவளுக்குக் குழந்தை தேவையாக இருந்தது. அதற்கென்ன பஞ்சமா?
சமுதாயம் அவள் குறைபடாத அளவுக்கு சந்தானபாக்யம் அளித்தது. ஆனால், ஒரே சமயத் தில் அவளிடம் இரண்டு குழந்தைகள் இருந்ததே இல்லை!
‘பாரத மாதா’ ஒருத்தியை வெகுநாட்களாக எனக்கு தெரியும். அந்த ‘பாரத மாதா’ பாரதச் சிறுமியாக இருந் தது முதல் அவளை எனக்குத் தெரியும்.
ஆமாம்… அவள் ரத்தத்திலும் பாரதத்தின் புனிதம், கற்பு, வீரம், அனைத்தும் ஓடித்தான் இருக்க வேண்டும் காற்சிலம் பொடித்து மதுரை நகரைக் கருக வைத்த கண்ணகியின் கற்பும், ஜான்சிராணியின் வீரமும் அவளுக்கு மட்டும் இல்லாமல் போய்விட்டால் அவள் இந்த நாட்டில் பிறந்தவளாக இருக்க முடியாது. எனக்குத் தெரிந்த வரை மீனாட்சியோ அல்லது அவள் பெற் றோரோ அப்படி ஒன்றும் வேற்று நாட்டிலிருந்து வந்தவ ரல்லர்- ஆகையினால் அவள் பாரததேவியின் புத்திரிகளில் ஒருத்திதான்.
தினசரி அந்தப் பஸ் ஸ்டேண்டில் அவளைப் பார்ப் பேன். அவளை மட்டும் அல்ல; அவளைப் போன்று இன்னும் சிலரும் புடைசூழ பஸ்ஸுககாக காத்து நிற்பவர்களிடம், “ஸார்… ஸார்… ஸார்…” என்ற யாசக சூத்திரத்தை ஜெபித்துக் கொண்டு கையேந்தி நிற்பாள். அப்பொழுது அவள் ‘பாரதச் சிறுமி!’
அழுக்கின் கறை படிந்த நல்ல சிகப்பு நிறம்; மூக்கில் ஒழுகிக் கொண்டே இருக்கும். ஒரு கந்தல் பாவாடை; மேலே சில சமயங்களில் ஒரு பீத்தல் சட்டை… பரட்டைத் தலையுடன் நாள் முழுதும் பஸ் ஸ்டேண்டில் சுற்றித் திரிவாள்.
அநேக சமயங்களில் நான்கூட ஒரு காலணாவை அவளிடம் விட்டெறிந்து சென்றிருக்கிறேன்.
அதன் பிறகு…
அவளுக்கு வயது பதினான்கு இருக்கும். இப்பொழுதும் அதே நிலையில்தான் பஸ் ஸ்டேண்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கந்தல் சட்டைதான் உடுத்தியிருக்கிறாள் – பீத்தல் பாவாடை தான். மேலாக்கு ஒன்று அவள் மார்பை மறைத்திருக்கிறது. அவள் இளமை, கந்தல் சட்டையை நெருடுவதை அவள் உணர்ந்து விட்ட பருவம் அது.
இப்பொழுதெல்லாம் அவளை யொத்த சிறுவர்கள் அவளைச் சுற்றி வருகின் றனர்… குறும்பு செய்கின்றனர்… பஸ் பிரயாணத்திற்குக் காத்திருக்கும் சில கனவான்கள் கூட அவளைக் குறும்பாகப் பார்ப்பதில் அர்த்தமிருக் கிறது… அவள் பிச்சைக்காரி… அது மட்டுமா, சிகப்புத் தோல்… பருவ மெருகு… அழகாகத்தான் இருக்கிறாள்… அசடாகவும் இருக்கிறாள்… அல்ல. அசடு போல நடிக்கி றாள்… அவளுக்குத் தெரியும். இந்த வெள்ளை வேட்டிக் காரர்களின் உள்ளம்… ஆமாம்… அவளுக்கு வயது பதினான்குதான்! அவள் இன்னும் ‘மனுஷி’ யாகவில்லை. அதனாலென்ன ‘ஓவர் பிரிட்ஜ்’ ஒய்யாரக் கொண்டை காரிகளுக்கெல்லாம் அவளிடம் வியாபாரப் போட்டி! அவர்களைவிட இவளுக்குக் கிராக்கி அதிகம் என்பதில் அவர்களிடையே புகைச்சல்!…
‘உனக்கு எப்படித் தெரியும்?’ என்று என்னைக் கேட்கிறீர்களா?…
ஐயோ! அவர்களுக்கிடையே சண்டை வரும்பொழுது பார்க்க வேண்டுமே அந்த உண்மைகள் அம்பலமாவதை? அப்பொழுது புரியும்.
ஆனால் மீனாச்சியிடம் நடக்குமா?… ஒரு கை பார்த்து விடுவாள். போலீஸ்காரன் சலுகை கூட மீனாச்சிக்குத் தான்.
முன்பெல்லாம் ‘இதேதடா சனியன்’ என்று ஒதுங்கி நின்றவர்கள்கூட இப்பொழுது ‘எங்கே? அந்தப் பிச்சைக் காரக்குட்டியைக் காணோமே…!” என்று மனத்திற்குள் கேட்டுக்கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்தனர்.
பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள வெற்றிலைப் பாக்குக் கடையருகே அவள் நின்றவுடன் தண்ணீரை வாரி இரைக் கும் நாயர்கூட இப்பொழுது அவளுடன் குழைந்து குழைந்து பேச ஆரம்பித்து விட்டார். சிற்சில சமயங் களில் அவளுக்கு ரிக்ஷா சவாரிகூட கிடைக்கிறது! ஹோட்டல் அறை வாசம், எப்பொழுதோ சில சமயங் களில்தான். அனேகமாக பாலத்தடி ‘வியாபாரம்’… நாள டைவில் அவள் பிச்சை யெடுப்பதை நிறுத்திக் கொண் டாள்!
இப்பொழுது அவளுக்கும் ‘ஓவர் பிரிட்ஜ் ஒய்யாரக் கொண்டைக்காரிகளுக்கும் லடாய் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அவர்களில் ஒருத்தியாக அவளும் மாறி விட்டாள்.
அழகான வாயில் புடவை; மெல்லிய சில்க் துணியில் அடி வயிறும் முதுகுப் புறமும் வெளியில் பிதுங்க மார்பை இறுக்கி அணிந்த சோளி… அதெல்லாம் கூட அவளுக்கு அழகாக இருக்கிறது என்று திருப்தியடைய முடியாது… சோளியின் கழுத்துப் பட்டைக்கும், நடு மார்புக்கும் இடையே ஒரு அரச இலை அளவுக்கு இருக்கும். ‘ஓட்டை’யை மேலாக்கை நீக்கி அடிக்கடிப் பார்ப்பதில் தான் அவளுக்கு ரொம்ப திருப்தி!
அவளுக்கு இப்பொழுது வயது பதினெட்டு!
அவள் கையிலே அன்றாட அபரிமிதச் செலவுக்குத் தேவையான காசு கிடைத்தது… சமயத்தில் அவள் அதிக ‘பிகு’ செய்வதுமுண்டு.
அக்கா, தங்கச்சி என்று உறவு முறை கொண்டாடி வந்த ரிக்ஷாக்காரர்களுக்கு அவள் மிகவும் உதவியாக இருந்தாள்… அவர்களும் அவளுக்கு உதவினர்.
அந்தப் பேரழகிக்காக டீக்கடை நாயருக்கும், ‘பீட்’ நிற்கும் போலீஸ்காரர் மன்னாருக்கும் ஒரு தடவை பெரிய சண்டையே வந்துவிட்டது… டீக்கடை நாயர் கோர்ட்டுக் குச்சென்று பத்து ரூபாய் அபராதம் கட்டி வந்தார். நாய ருக்கு எதிராக மீனாட்சி சாட்சி சொன்னாள்… என்றா லும் நாயருக்கு அவள்மீது கோபம் இல்லை என்பது அன்று இரவே மீனாட்சிக்கு விளங்கி விட்டது.
ஒரு நாள்..
ஏதோ அவசர வேலையாக எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போனேன்.’என்னாப்பா என்னாப்பா” யாரோ ஒரு பெண் குரல் என்னை அழைத்தது. அதுதான் மதராஸ்காரர்களின் ‘அண்மை விளி!’
மீனாட்சி நின்றிருந்தாள். அவளைச் சுற்றி மூன்று ஸ்திரிகள் நின்றிருந்தனர்.
“புள்ளெத்தாச்சிப்பா இடுப்பு வலி வந்திடுச்சி…ஆசுபித்திரிக்குப் போவனும்; வண்டிக்கி எதினாச்சும் குடுப்பா…” என்றவாறு ஒரு நடுத்தர வயது ஸ்திரீ கெஞ்சினாள். மீனாட்சி அவர்கள் நடுவே நிறை மாசக் கர்ப்பிணியாகவே நின்றிருந்தாள்.
ஆம்; அவள் உண்மையாகவே கர்ப்பிணிதான்.
ஒரு அணாவை எடுத்துக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன்..
இப்பொழுதெல்லாம் மீனாட்சி பிச்சையெடுப்பதை அடியோடு நிறுத்தி விடவில்லை. பிச்சையும் எடுக்கிறாள்.
தானே நேரிடையாகப் பிச்சை எடுப்பதில்லை. அவள் பெற்ற அந்த மூன்று மாதச் சவத்தை ஒரு கிழவி மூலம் வாடகைக்கு விட்டு பிச்சையெடுக்கிறாள் மீனாட்சி.
“ஐயா, தாயில்லாத கொயந்தெங்க…” என்று கிழவி பஸ் ஸ்டேண்டில் யாசிப்பாள்…
ஓவர் பிரிட்ஜ் அருகே நின்று, மேனி மினுக்கி ரிக்ஷாக் கார நண்பர்களின் உதவியை நாடி இருப்பாள மீனாட்சி இரவு எட்டு மணிக்கு மேல், உலக ஆண்கள் அனைவரை யும் தன் தலைவனாக எண்ணி அவர் தம் வருகை நோக்கி உளம் நையும் ‘தமிழ் இதிகாசத் தலைவி’ யாக ‘ஓவர் பிரிட்ஜ்’… அருகே காத்துக் கிடப்பாள்.
இப்பொழுதெல்லாம் அவளுக்குக் கிராக்கி சற்றே குறைவு. ஆனால் சில நாட்களில் கிராக்கி முன்போலவே இருக்கும். என்றாலும் (இப்பொழுது அவளால் ‘பிகு பண்ண முடிவதில்லை! ‘டீ’க்கடை நாயர் அவளைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
திடீரென்று ஒருநாள் அவள் குழந்தை செத்து விட்டது.
அடடே! மீனாச்சி கூட அழுதாள்… அதன் மூலம் அவளுக்கு தினம் நான்கணா, சமயததில் ஆறணா கூட வரும்படி வந்ததே! என்னதான் இருந்தாலும் அதற்கு வயத்திலே கொஞ்சம் பசை இருந்தால்தானே பிச்சை யெடுக்கும் இடத்தில் சிணுங்கியாவது அழ முடியும்?
காலையில் குழந்தைக்கு உடம்பு அனலாகக் கொதித்தது… மத்தியானமெல்லாம் ‘வீர்… வீர்’ என்று கத்தியது. அந்த சமயத்தில் வருமானம் எட்டணா வரை யில் எட்டி விட்டது… மாலையில் அழுகை நின்றது… ஜுரம் குறைந்தது… பிறகு நெஞ்சுக் கூட்டுக்கும் மேல் வயிற்றுக்கும் இடையே ‘குடுக்’ ‘குடுக்’ கென்று குதித்துக் கொண்டிருந்த ஆவி ஓடிவிட்டது!
மீனாச்சி அழுதாள்!
மறு நாள் காலை… பிளாட்பாரத்தின் ஓரத்தில் மஞ்சள் துணியில் சுற்றி வைக்கப்பட்ட அந்த எலும்புக் கூட்டினருகே ஒரு புதிய மண்சட்டி… “சார்…தர்ம சாவு… தர்ம சாவு சார்”… என்று போவோர்… வருவோரிடம் ஓடி ஓடி அவர்கள் திருஷ்டியை அந்தச் சவத்தின் பால் திருப்பி காலணாவைக் சறக்கும் ரிக்ஷாக்காரப் பிச்சைக் காரர்கள்! சுவரருகே முகத்தை முந்தானையால் மூடிக் கொண்டு மீனாச்சி உட்கார்ந்திருக்கிறாள்…
போவோர் வருவோர் அனைவரும் ‘நமக்கென்ன’ என்று போகிறார்கள். அன்று, அவள் பாலத்தடியில் சிங் காரித்துக் கொண்டு நின்றிருந்தபோது அவர்களால் ‘நமக்கென்ன’ என்று போக முடியவில்லை. அவர்களுக்குத் தெரியுமா? வயது வந்த ஆண்கள் ஒவ்வொருவரும் அச்சவத்திற்குத் தகப்பன் என்கிற விஷயம்! எவனாவது ஒருவனுக்குப் பிறந்ததுதானே அதுவும். புத்திர பாசத்தால் அழும் ஒருவனை க் கூடக் காணோமே! சீ! என்ன மனிதர்கள்!
…மான வெட்கமில்லாமல் ‘டீக்’ கடை நாயர் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு யாருடனோ பேசுகிறான்…
தன் மனைவிக்கு எப்படிப் பிறந்தாலும் தன் குழந்தை என்று நினைக்கும் பரமாத்மாக்களும், வேறு எங்காவது பிறந்தால் தன்னுடையதேயானாலும் எவனுடையதோ என்று எண்ணிக் கொள்ளும் அளவுக்கு ஆண்கள் சுயநல மற்றவர்களாக ப மாறி விட்ட பிறகு பெண்களுக்கு வேறென்ன வேண்டும்?
மீனாச்சி மீண்டும் கர்ப்பிணி ஆனாள்!
கர்ப்பிணியாகச் சம்பாதித்தாள்! குழந்தையை வாடகைக்கு விட்டுச் சம்பாதித்தாள்!
குழந்தையின் சவத்தைக் காட்டிச் சம்பாதித்தாள்!
அது அவளுக்கு ஒரு விளையாட்டாக – ரொம்ப சாதாரணமாக ஆய்விட்டது.
அவள் குழந்தை இருந்தாலும் ஏதோ சில காசுகள்!- அவள் குழந்தை இறந்தாலும் ஏதோ சில காசுகள்!
அடிக்கடி அவளுக்குக் குழந்தை தேவையாக இருந்தது. அதற்கென்ன பஞ்சமா?
சமுதாயம் அவள் குறைபடாத அளவுக்கு சந்தான பாக்யம் அளித்தது!
ஆனால் ஒரே சமயத்தில் அவளிடம் இரண்டு குழந்தைகள் இருந்ததே இல்லை!
அவளும் எட்டு குழந்தைகள் பெற்று சம்பாதித்து, புதைத்து விட்டாள்!
அதோ பாருங்கள்…
கையிலொரு பச்சிளம் சிசுவை ஏந்திக்கொண்டு…
“ஐயா… தாயில்லாத கொயந்தைங்சு” என்ற யாசக வாசகத்துடன் போவோர் வருவோரை கெஞ்சுகிறாள் மீனாச்சி.
இப்பொழுது அவளுக்கு வயது நாற்பதுக்கு மேலா கிறது. கிழவியாகி விட்டாள். இப்பொழுதும் கூட சில சமயங்களில் அவள் அழகாக சிங்காரித்துக் கொள்கிறாள். கிழவி என்பதற்காக அவ்வளவு லகுவில் ஒரு பெண்ணை விட்டு விடுவார்களா என்ன?
இருந்தாலும் வேறு மீனாச்சிகள் இல்லாதபொழுது இவள் ஜம்பம் சாயும்!
‘மீனாச்சி’களுக்கு வயது வித்தியாசம் கிடையாது; ஆனால் ‘மீனாச்சி ராஜ்யத்தில்’ ஒரு பருவத்தில், கௌரவம் சற்று அதிகமாக இருக்கும். என்றாலும் அதன் பிறகு ஒன்றும் அது போய்விடாது. இருட்டு வயதையா காட்டுகிறது? பகல் எப்படி கழிந்தால் என்ன? ‘மீனாச்சி’ கள் என்றைக்கும் ‘ரிடையர்டு’ ஆவதில்லை.
ஒழியமாட்டார்கள். அவர்கள் சிரஞ்சீவி தன்மை பெற்று வந்தவர்கள்.
பாரத தேவியின திரு அவதாரங்கள் அல்லவா அவர்கள்? எட்டு குழந்தைகளை ஈன்றெடுத்த பாரத மாதா மீனாச்சி அல்லவா?… அவர்களை அழித்து விடுவது சாமான்யமல்லவே!
– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.