மீதி நாலு ரூபாய்…




ஒரு கையில் கையில் சாப்பாட்டுக் கூடை , மறு கையில் பயணச்சீட்டிற்கான காசு என ஓட்டமும் நடையுமாக செல்வி பேருந்து நிறுத்தம் வந்நு சேர்ந்தாள்.
பேருந்தில் எப்படியோ ஏறியாச்சு…
நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்து விட்டு ‘என்னம்மா ஒரு ரூபாய் சில்லறை இல்லையா?’
‘வேற சில்லறை இல்லீங்க ‘
‘காலையிலேயே எங்க இருந்து தான் வருவீங்களோ !! சலித்துக்கொண்டே மீதீ நாலு ரூபாயை கொடுக்காமல் சென்று விட்டார்.
கடவுளே இனி இந்த ஆள் கிட்ட காச வாங்கறதுகுள்ள, அவ்வளவு தான் …மனதில் புலம்பினாள்.
பேருந்து செல்லச் செல்ல மக்கள் ஏறுவது இறங்குவதுமாக இருந்தது. ஒவ்வொரு முறை நடத்துனர் அருகில் வரும் போதும் செல்வி அவர் முகத்தைப் பார்த்தவாரு இருந்தாள்.
அவரும் ‘ இரும்மா சில்லறை வந்தா தரமாட்டோமா?’ என்று எகத்தாளமாக பேசியபடி நகர்ந்து சென்றார்.
செல்வி கூனி குறுகிப்போனாள்.
இரண்டு முறைக்கு மேல் கேட்க கூச்சமாக இருந்தது.
வேறு வழியில்லை கேட்டு வாங்கித்தான் ஆகவேண்டும். மாசக் கடைசி
இன்னும் நான்கு நாட்களை ஓட்ட வேண்டும்.
இன்றும் அளவான சில்லறையை தான் எடுத்து வந்திருந்தாள்.
செல்விக்கு பின்னால் ஏறியவர்களுக்கு எல்லாம் சரியாக சில்லறை பாக்கியைக் கொடுத்து விட்டார்.
அடுத்த நிறுத்தத்தில் செல்வி இறங்க வேண்டும்.எழுந்து நின்றபடி நடத்துனரை பார்த்தாள். அவர் இவளை பார்த்தா மாதிரி தெரியவில்லை.
அவர் நிற்கும் இடம் நோக்கி நடந்து வந்து ‘ மீதீ நாலு ரூபாய் நீங்க தரணும்’ தயக்கத்துடன் செல்வி….
‘எங்க ஏறுனம்மா’ நடத்துனர்
‘டீக்கடை ஸ்டாப்பில ஏறுனேங்க ‘ செல்வி.
உள்ளே அழுகை முட்டிக் கொண்டு நின்றது.
‘இத்தன நேரம் என்னம்மா பண்ணீட்டு இருந்த’
‘நா கேட்டேங்க ….நீங்க தான் ‘ முடிப்பதற்குள் ‘ஆமா இதெல்லாம் நல்லா பேசு, சில்லறை மட்டும் கொண்டு வறதா என்ன’ என்று அதட்டி விட்டுகொண்டு நாலு ரூபாய் சில்லறையை கையில் திணித்தார்.
செல்வி அப்போதுதான் கவனித்தாள்.பேருந்து அவள் இறங்கும் நிறுத்தம் தாண்டி சென்று கொண்டு இருந்தது.
”நிறுத்துங்க நிறுத்துங்க என்று கத்தினாள். நடத்துனர் வேகமாக விசிலை ஊத …ஓட்டுனர் சலித்துக் கொண்டோ பேருந்தை நிறுத்த செல்வி அவசர அவசரமாக இறங்கி நடந்தாள்.
ஆபீசில் யாரும் இன்னும் வரவில்லை.. நிம்மதி பெருமூச்சு விட்டபடி சாப்பாட்டுக் கூடையை ஆணியில் மாட்டி விட்டு , கையில் இருந்த சில்லறையை பர்சில் வைக்க முற்பட்ட போது தான் தெரிந்தது, அதில் மூன்று ரூபாய் தான் இருந்தது. இதயம் கணத்துப் போனது. செல்வி ஏமாற்றத் தோடு அன்றைய நாளை ஆரம்பித்தாள்.ஒரு ரூபாய் எவ்வளவு முக்கியமானது இல்லையா?