மிஸ்ஸிங் மதர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 7, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 170 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

பரபரப்பான காலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சற்றே தொலைவில் உள்ள கடைக்கு சென்று  வந்த மருமகள் தினகரியிடம், “இரண்டு ரூபாயிக்கு தீப்பெட்டி வாங்க பத்து ரூபாயிக்கு பெட்ரோல் செலவு செய்ய வேணுமா?”-என ராமுத்தாயி கேட்டாள்.

“அவசரம் என்றால் போயித்தானே ஆக வேணும்”-என தினகரி பதிலுரைத்தாள்.

“அதற்காகதானே வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணி செய்தால் போதும் என உங்கள் நிறுவனம் சொல்கிறது,செயல்படுத்துகிறது”-என்று படிப்பறிவு இல்லாத ராமுத்தாயி சொன்ன போது தினகரி கோபித்துக் கொண்டாள்.

“தினகரி, உன் துணிகளை வாசிங் மெஷினில் துவைக்கும் போது சோப்புத் தண்ணியையும், அலசும் நீரையும் ஒரு பக்கெட்டில் பிடித்து வை என்று எத்தனை முறை சொல்கிறேன்..!”-ராமுத்தாயின் அறிவுரையை ஏற்கும் மனநிலையற்ற தினகரி “எதற்கு?”-என்று கேட்டாள்.

“அறுபத்தெட்டு வருடங்களுக்கு பின் சுத்தமாக வற்றிவிட்டதாம் வைகை. நமக்கு நிலத்தடி நீர்தான் ஆதாரம். தண்ணீர் பஞ்சம் வரும்முன் புத்திசாலிதனமா மறுசுழற்சி முறையில அந்த நீரை கழிவறையில் ஊற்ற, குளியலறையை கழுவிவிட, பால்கனியை சுத்தம் செய்ய பயன்படுத்தலாமே.என்ன குறைஞ்சு போயிடுவோம்!” – ஆலோசனை தருவது யாராக இருந்தாலும் நல்லதை ஏற்கலாமே.ராமுத்தாயின் ஆலோசனைகள் அந்த வீட்டில் தொடர்ந்து நிராகரிக்கப்படுவது அவளுக்கு வருத்தமாக இருந்தது. ராமுத்தாயின் ஒரே மகன் வள்ளுவன்.வனவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவன். ‘காற்றாலை மின் உற்பத்தி செயல்பாடுகளில் பறவைகளின் வாழ்வில் பாதிப்பு’-என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவன். இரவு கவிழும் நேரத்தில் கூடடையும் பறவைகளுக்கு சுழலும் காறாலை சிறகுகள் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது என்பதே ஆய்வின் நோக்கம். பதிமூன்று வயதிலேயே அய்யாவை(அப்பா)இழந்தவன். ராமுத்தாயின் கடுமையான உழைப்பில்தான் பட்டம்,பதவி,வரும்படிகள் எல்லாம் ஏற்றம் கண்டது. கல்லூரி காலங்களில் காதல் வளர்த்து பதவிகள் வந்தபின் கல்யாணம் செய்து கொண்டான்.

தினகரி மூன்று அண்ணன்களுக்கு ஒரே தங்கை. கொஞ்சம் செல்வ செழிப்புடன் வளர்ந்தவள். தன் அம்மாவையே வீட்டு வேலைக்கு உடன் வைத்துக் கொள்ள ஆசைபடுபவள். அதற்காகவே மாமியாரை உள்ளூர வெறுக்கிறவள். அம்மாவின் நியாயங்களுக்காக மனைவியிடம் ஒரு போதும் வக்காலத்து வாங்குபவன் இல்லை வள்ளுவன். தலையணை மந்திரங்கள் பட்டபாடுகளை மறக்கடித்துவிடுகிறது.

மனைவியின் அன்பை அம்மாவுக்கும், அம்மாவின் பாசத்தை மனைவிக்கும் புரிய வைக்கும் ஆண்களின் வீட்டில் மாமியார்-மருமகள் பிரட்சனைகள் இருக்காது.

ஒரு லட்சம் செலவு செய்து சமையலறையை நவீனமாக மாற்றி இருந்தான். அதுவரையில் அடுப்பங்கரையை அம்மா ஆண்டுவந்தாள். எந்தெந்த அறையில் என்னென்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கவே ஞாபக சக்தி வேண்டும். தினகரி வென்றாள்.ராமுத்தாயி தோற்றாள்.வேலைக்கு போய்விடுபவர்கள் மகனும்,மருமகளும். பின் ஒத்தைக்கே அந்த வீட்டில் அவள். உப்பும்-சக்கரையும் எடுக்க தடுமாறுவாள். தினம் ஒரு அறையில் மாற்றி வைத்தால் கண்டடைவது கடினம்தானே. தலைவலிக்கு ஒரு காப்பி தண்ணி கூட போட்டு குடிக்க முடியாமல் தவித்தாள் ராமுத்தாயி. இதை மகனிடம் முறையிட தயங்கினாள்.மருமகள் மவுனம் காட்டினாள்.

அன்று மிகவும் கஷ்டகாலமாக விடிந்தது ராமுத்தாயிக்கு. அவன் ஆசையோடு வளர்த்து வந்த தென்அமெரிக்கா கிளி பறந்துவிட்டது.அது சற்று விலை அதிகமாம். தங்க கூண்டாக இருந்தாலும் தங்கிப் போக இசைவதில்லை பறவைகள். பணியிலிருந்து மாலை வந்த வள்ளுவன் கேள்விப்பட்டு அந்த பகுதி முழுவதும் தேடினான். பின்பு இரவோடு இரவாக சுவரொட்டி தயார் செய்து அந்த பகுதி முழுவதும் ஒட்டும்படி செய்தான்.’காணவில்லை’ சுவரொட்டியில் ‘பின்கி’, கிளியின் வண்ணப்புகைப் படம் இருந்தது. பிடித்து தந்தால் ஐந்தாயிரம் சன்மானம் என்றும் ,அலைபேசி எண்ணும் இருந்தது. மிகவும் களைத்துப் போய் வீடுவந்து இரவு சாப்பாட்டையும் தவிர்த்த வள்ளுவனின் காதில் வெக்கையான வார்த்தைகளைஓதினாள் தினகரி.

எப்போதும் மின்விசிறிகளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள்ளேயே செல்லமாக பறக்கும் பின்கி.அது ராமுத்தாயின் தலையில் அமர்ந்து தலைமுடிகளை கொத்தி பிடுங்கும்.அய்யா செய்து போட்ட கம்மலின் கற்களை உடைத்து எடுத்துவிடும்.மனதளவில் அதை விரும்பாவிட்டாலும் சிறு பிராயத்தில் ஆலமரத்து தவறி விழும் கிளிக் குஞ்சுகளை எடுத்து வந்து ஆசையோடு வளர்க்க கற்றுத் தந்தவர்கள் ராமுத்தாயும், அய்யாவும்தான். சிறுவயதிலிருந்தே பறவைகள் மீது அதீத பற்று வள்ளுவனுக்கு இருந்தது.காலையிலிருந்து இரவு வரை கிளியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ராமுத்தாயினுடையது. பறவை பறந்து போனதற்கு காரணம் அவள் இல்லையெனினும் வள்ளுவன் முதல் முறையாக அவன் அம்மாவிடம் கடிந்து கொண்டான்.உள்ளூர மகிழ்ந்து கொண்டாள் தினகரி.

அன்று பணியிலிருந்து காலதாமதமாக இருவரும் வந்தார்கள். வீடு பூட்டி இருந்தது. எதிர் வீட்டில் சாவி இருப்பதை அறிந்து பெற்றுக் கொண்டார்கள்.வீட்டின் மேஜையில் ஒரு கடிதம் இருந்தது.

                     ‘சிருஞ்சிவி மகன் வள்ளுவா.

                      நான் உனக்காக சென்னை வந்தேன்.

                      உன் தாய்மாமன் தயவில் உன்னை வளர்த்தேன்.

                      கடுமையான பல வேலைகள் செய்து படிக்க வைத்தேன்.

                      என் கடமை முடிந்துவிட்டது. இனி நான்…

                      ஊரில் சிதிலமடைந்து கிடக்கும் நம் வீட்டை

                       சரிசெய்து அங்கேயே இருக்கப் போகிறேன்!

                       உன் அம்மா.

கடிதத்தை பிரித்து பார்த்த வள்ளுவன் முகத்தில் சிறு சோகம் இருந்தாலும் கடிதத்தை படித்த தினகரி உள்ளூர மகிழ்ந்தாள்.இதை கொண்டாட வேண்டும் என தீர்மானித்தாள்.நகரத்தில் மோஸ்தர்களின் உணவுவிடுதிக்கு அழைத்துச் சென்றாள்.விடியவிடிய பாட்டும் கூத்தும் அரங்கேற்றினாள். சோகம் அவனை தாக்காதவாரு பார்த்துக் கொண்டாள்.தினகரி தன் அம்மாவுக்கு அழைப்புவிடுத்தாள்.

முப்பது வருட பட்டண வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு சொந்த ஊரில் நிரந்தரமாக இருக்க கனத்த இதயத்துடன் பயணமானாள் ராமுத்தாயி.அவ்வப்போது கல்யாணம்,காதுகுத்து,சடங்கு என்று வந்து அன்றே சென்னை திரும்பியவள், ஊரின் மாற்றங்களை முழுமையாக அறிந்திருக்கவில்லை. பேருந்தின் சன்னல் வழியாக வரும் குளுந்த காற்று அவள் முகத்தில் பட்டு அனலாக மாறியது. முதல் முறையாக தவறான முடிவு எடுத்துவிட்டதாக உணர்ந்தாள்.இருப்பினும் செல்லுமிடம் பிறந்து,வளர்ந்து,உள்ளூரிலே வாக்கப்பட்ட ஊர் அது. அது ஒரு நல்ல விவசாய கிராமம்.கிணற்றிலும்,குளத்திலும்,ஆற்றிலும் முங்கி முக்குளித்த ஊர்.சிறுமியாக இருந்த போது அதே தெருவில் மாலையில் ‘மலையில தீப் பிடிக்குது பிள்ளைகளா ஓடி வாங்க’ – விளையாட்டு விளையாடிய ஊர். அய்யா(கணவர்) இறந்த பின் பிழைப்புக்காக சென்னை வந்தாள். தன் வயது ஒத்த உறவுக்காரர்களும்,தோழிகளும் இன்னும் இருக்கிறார்கள்தான். தேடி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

சரியாக பார்த்து அன்னஞ்சி விலக்கில் இறங்கிக் கொண்டாள். அப்போது இன்னும் விடியாத இரவாக இருந்தது. சிறிது நேர காத்திருப்புக்கு பின் முதல் சிற்றுந்து வந்து நின்றது.அதில் முதல் ஆளாக ஏறி அமர்ந்தாள்.பி.கே.பட்டி புள்ளையார் கோவில் வந்ததும் இறங்கச் சொன்னார் நடத்துனர். அந்த அதிகாலையில் ,அய்யாவுக்கு டீதண்ணி வாங்க வரும் ஞாபகம் வந்ததும் சில்லென்ற உணர்வை ஏற்படுத்தியது. தனித்து தெரிந்தது பிள்ளையார் கோயில்.நின்று சிறிது நேரம் கோயிலை பார்த்தாள்.கோயிலுக்கு பின்னால் இருந்த தென்னந்தோப்பு காணவில்லை.கோயிலுக்கு இடதுபுறம் இருந்த அகலச் சாலை சந்து போல் ஆகியிருந்தது. தர்மத் தண்ணீர் ஊற்றும் பந்தல் இல்லை.சற்று குழம்பினாலும் கள்ளர் ஸ்கூல் அவளுக்கு அடையாளத்தை தந்தது. அங்குதான் மூன்றாம் வகுப்பு வரை படித்த ஞாபகம்.கோயில் பூசாரி தாத்தாவும், பாட்டியும் இறந்த பின்பு இடங்கள் பங்கிடப்பட்டுவிட்டது. புள்ளையார் கோயில் ‘சாலை பிள்ளையா’ராகியிருந்தார். பிள்ளையாரே ரோட்டுக்கு வந்துவிட்டார் போல. கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பிள்ளையார் கோயிலின் படிக்கட்டுகளை பார்த்த போது, கடந்த காலம் கண்ணீருடன் வந்தது. இதே இடத்தில்தான் அய்யா(கணவர்) குற்றவாளியாக நிற்க வைத்து விசாரிக்கப்பட்டார். எப்போதும் இங்குதான் ஊர் பஞ்சாயத்து நடக்கும். சேர்வராயன் தோப்பின் கட்டாப்பை தாண்டிப் போய் மாங்கா திருடிய வள்ளுவன் , அவன் கூட்டாளிகள் ஓடிவிட அவன் மட்டும் சிக்கிக் கொண்டான். சேர்வராயனுக்கும், அய்யாவுக்கும் முன் பகை இருந்தது. ஊர் பஞ்சாயத்தில் அப்போது இரண்டு ரூபாய் அபராதம் போட்டார்கள்.ஊர் பெரியவர்கள் காலில் விழுந்து அபராதம் கட்டிய அய்யா, இடுப்பில் கல்லை கட்டிக் கொண்டு கெத் கெத்தென்று இருந்த சின்னக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜோசியர் சொன்னார் அடப்பு இருப்பதாக.ராமுத்தாய் பிள்ளையார் கோயிலுக்கு விளக்கு போட்டாள். பதிமூன்று வயதே ஆன சிறுவன் மார்பு வலியால் துடித்த போது இதயத்தில் அடப்பு இருந்தது.தேனி பெரிய ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சென்னையில் உள்ள மருத்துமனைக்கு சென்று இதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணமாக்கலாம் என்று சொன்னார்கள். வள்ளுவனை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள தன் அண்ணன் வீடு வந்தாள் ராமுத்தாயி. பிறகு,அண்ணன் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.இதய அறுவை சிகிச்சைக்குப்பின் பள்ளிப் படிப்பை சென்னையிலே தொடர்ந்தான் வள்ளுவன்.

அவன் அய்யா சின்னக் குளத்தின் அருகில் இருக்கும் சங்கிலி கருப்பன் கோயில் பூசாரியாக இருந்தார். கருப்பனைப் போல் போர்வாள் மீசையும்,கம்பீரமுமாக இருப்பார்.அந்தக் குளத்தில் விழுந்த எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். சங்கிலி கருப்பன் அவர் வாழ்க்கையில் விளையாடிவிட்டான் போலும்.

பிள்ளையார் கோயிலுக்கு நேர் எதிராக உள்ள தெருவின் பெயரும் பிள்ளையார் கோயில் தெருதான்.அதில்தான் ராமுத்தாயின் பூர்வீக வீடு உள்ளது. முதலில் கம்பத்தா வீட்டுக் கதவை தட்டினாள்.பின்பு, ரம்பக்காரர் வீட்டுக் கதவை தட்டினாள், முத்துக் கண்ணு வீட்டுக் கதவை தட்டினாள்.கடைசியாக கவுண்டரம்மா வீட்டுக் கதவையும் தட்டினாள்.எல்லோரிடமிருந்து ஒரே பதில்தான் வந்தது.அவர்கள் வீட்டை விற்றுவிட்டார்கள் என்று. ராமுத்தாயின் வீட்டை பார்த்தவர்கள் ‘வாளோடி’ வீடென்று யாரும் விலை கேட்க வரவில்லை.

அவள் வீட்டின் முன் இருந்த வாவராட்சி மரம் அப்படியே இருந்தது.அய்யா அதில்தான் கோழிகளை அடைய விடுவார். சிதிலமாகி கிடக்கும் வீட்டை சுற்றிப் பார்த்தாள். ஓடுகள் இல்லை. கதவுகள்,சன்னல்கள் இல்லை. தரை உடைந்து கிடந்தது. வீட்டின் பின்புறம் கரடுதட்டி மேடாகி கிடந்தது.சீலை முந்தானையால் வாயை பொத்திக் கொண்டு வாவராட்சி மரத்தடியில் வந்து அமர்ந்தாள்.நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. கண்களில் கண்ணீர் மளமளவென கொட்டியது. “யாத்தே…யப்பே…என் அய்யா!”-என்று ஒப்பாரி வைத்து அழுதாள். அங்கு போகிறவர்கள் யாரும் அதை பெரிதுபடுத்தவில்லை. எழுந்து சின்னக் குளத்திற்கு வழி கேட்டு போனாள்.அய்யா விழுந்த அதே குளத்தில் விழுந்துவிட நினைத்தாள்.குளத்தைச் சுற்றி இருந்த அரசமரங்கள் இல்லை.குளத்திற்கு மேற்கேயும் வடக்கேயும் இருந்த வயல்கள் எல்லாம் வீடுகளாகி இருந்தது.குளத்திற்கு வரும் ஓடை புறவழிச்சாலையால் மூடப்பட்டுவிட்டதால் நீர்வரத்து இல்லை. குளத்தை சுற்றி இருந்த வீடுகளில் விழும் கழிவுநீர் மட்டுமே குளத்தில் கருத்துக் கிடந்தது.காலைச் சூரியன் அதில் மின்னிக் கொண்டிருந்தான். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட குளத்தில் எப்படி விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்று குழம்பினாள்.யாரோ ஒருவர் அவளை கைத்தாங்கலாக கூட்டிவந்து வீட்டில் விட்டுச் சென்றார்கள். இரவெல்லாம் ஒப்பாரி சத்தம் கேட்டது.ஊர் முழுவதும் செய்தி பரவியது. அவள் வயது ஒத்த பெரியம்மாக்கள் அடையாளம் கண்டு கூடினார்கள். “பாதகத்தி மகளே….!”-என உடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தார்கள்.அந்த ஒப்பாரிக்கு சக்தி இருந்தது. நல்ல பலன் கிடைத்தது.ஊர் மக்கள் கூடி ராமுத்தாயின் வீட்டை சரி செய்து கொடுத்தார்கள்.ஊர் கூடி செய்த உதவி தனக்கு கிடைத்த கௌரவமாக நினைத்தாள் ராமுத்தாயி.

மனிதம் செத்துவிடவில்லை.


மிஸ்ஸிங் டாக்(நாய்),மிஸ்ஸிங் கேட்(பூனை),மிஸ்ஸிங் பிங்கி(பறவை) என்றெல்லாம் நகர தெருக்களின் சுவர்களில் சுவரொட்டி முழங்குகிறது. மிஸ்ஸிங் மதர்(தாய்) எனும் முழக்கம் மட்டும் புறந்தள்ளப்படுகிறது.

‘பறவையை பெற்றுக் கொள்ளுங்கள். தஞ்சம் என வந்தது அது. உணவு எடுக்கவில்லை. அது தன் தாயைமட்டுமே தேடுகிறது. சன்மானம் எதுவும் வேண்டாம். பறவையை பெற்றுக் கொள்ளுங்கள்’-

எனும் குறுஞ் செய்தி முள்ளாக குத்துகிறது வள்ளுவனுக்கு!

– தங்கமங்கை மாத இதழில் ஜூலை 2026ல் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *