கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் தமிழ் நேசன்
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 6,416 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம். கணவன் கொலைகாரனா? இன்று உயர்நீதிமன்றத் தீர்ப்பு’ என்ற பத்திரிகைச் செய்தி சம்பந்தப்பட்டவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது போல மற்றவர்களிடத்திலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆளே இல்லாத ஒரு மதிய வேளையில் 13ஆம் மாடியிலிருந்து விழுந்து மாண்டு போயிருந்தாள் அந்தப் பெண். அவள் தற்கொலை செய்து கொள்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று பேசிக் கொண்டார்கள் அக்கம்பக்கத்தார். போலீஸ் அதனை ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்றே வகைப்படுத்தியிருந்தது. கடந்த ஆறு மாதமாக நடந்து இன்றைக்கு ஒரு முடிவுக்கு வர இருக்கிறது அந்த வழக்கு.

‘அவன் கொல்லலையின்னு சொல்றானாம்ப்பா. அப்படீன்னா அந்தச் சம்பவ இடத்துக்கு அவன் வர வேண்டிய அவசியம் என்னன்னு கேள்வி வருதாம். அவ்ளோ நாள் பிரிஞ்சு இருந்து அவன் அன்னிக்கா அவளைப் பாக்க வரணும்?’

‘அது தற்கொலைதான்னு ருசுப்படுத்த முடியாம, சூழ்நிலையும் அவனுக்கு எதிராவுல்ல இருக்காம்? கட்டாயம் தூக்குதான்னு பேசிக்கிறாக.’

‘ஆளே ரெம்பொ மாறிட்டதாச் சொல்றாங்க. முன்ன சரியான குடிகாரனாம். இப்ப சிகரெட்டக் கூடத் தொட்றதில்லியாம். என்ன தீர்ப்பு வந்தாலும் சரிதேன். நான் அவளைக் கொல்லவில்லை. ஆனால் அதைவிட மோசமா அவளைக் கொடுமைப் படுத்தியிருக்கேன். அதுனால என்னத் தூக்குல போடுங்க, தப்பில்ல, எம் புள்ளைகளை நல்லாப் பாத்துக்குங்கன்னு சொல்றானாம்.’

ஆறுமாதக் காவல், ஆளயே மாத்திப்புடுது பாத்தியா? அஞ்சு வயசுல ஒரு பொண்ணாம், நாலு வயசுல ஒரு பையனாம். இன்னக்கிக் கோர்ட்டுக்குக் கூட்டி வர்றாகளாம் அவனுக்குக் காட்றதுக்கு!”>இப்படித்தான் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்கள் பேசிக்கொண்டார்கள் அவனைப்பற்றி.

ஆனால் அவன் என்ன மன நிலையில் இருந்தான்? அதிகாலையே அவன் விழித்திருக்க வேண்டும். எழுந்து சப்பணமிட்டு கண்களை மூடித் தியானம் செய்வது போல உட்கார்ந்திருந்தான்.

அவன் மனைவி கயல் அவன் முன்னே வருவதும், சிரிப்பதும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள் என்று சொல்வதுமாக இருந்தாள். ‘ஏன் அவசரப் பட்டாய்?’ என்கிறான். பதில் சொல்லாமல் அழுதுகொண்டே மறைந்து போகிறாள்.

அவன் ஆழ்மனது அவனைக் கயல் இரத்தமாய் உறைந்து பிரிந்த நாளுக்கு, அவள் ‘ஏன் என்னைக் கொடுமைப்படுத்துகிறாய்? என்னை கொன்னு போட்டு விடேன்’ என்று கதறிய நாட்களுக்கு, அதற்கும் முன்னே அவள் அழகில் தன்னை இழந்த நாட்களுக்கு என்று அழைத்து போய்க்கொண்டே இருந்தது.

கயல் பெயருக்கேற்ற அழகான கண்களுடன் இளமைத்துள்ளலோடு ஓடித்திரிந்த நாட்களில் அவள் அழகுக்கு அடிமையானவர்கள் பலர். ஆனால் அவளுக்குப் பிடித்தவனோ அவள் ஆபரேட்டராக வேலை பார்த்த கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த வினோதன். இருவரும் ஆசை ஆசையாய்க் காதலித்தார்கள்.

வினோதனுக்கு அவர்கள் காதலை அங்கீகரிக்கவோ, தடுக்கவோ யாரும் இல்லை. கயலுக்கு இருந்த ஒரே சொந்தமான அவளின் அக்காவும் அத்தானும் நல்லாசி வழங்க அவர்கள் திருமணம் நண்பர்கள் சிலரின் வாழ்த்துக்களோடு ஒரு நல்ல நாளில் நடந்தேறியது. சீக்கிரமே அடுத்தடுத்து ஒரு பெண்ணும், ஆணுமாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவள் அக்கா வீட்டில் பிள்ளைகளை விட்டு வேலைக்குப் போய் வந்தார்கள்.

வசந்திக்கும் கயலுக்கும் சீனப்பெருஞ்சுவரைப் போல நீண்ட பத்துவருட இடைவெளி. கயலின் பெற்றோருக்குப் பிறகு, பிள்ளையில்லாத அவள் அக்காவும் அத்தானும் அவளை வளர்த்து ஆளாக்கின பாசம்தான் கயலுக்கு அவர்கள் மேல் மதிப்பையும் மரியாதையையும் கூட்டியிருந்தது. இப்போது அவள் பிள்ளைகளையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.

வேலையிடத்துக்குப் பக்கமா ஜூரோங்கில் குடியிருந்து கொண்டு சீராக ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை சிக்கலாகிச் சின்னாபின்னமானது வினோ தனுக்கு வேலை போன பிறகுதான். போன வருசம் பொருளாதார மந்த நிலை வந்தபோது பணிநீக்கம் செய்யப்பட்ட பல நூறு தொழிலாளர்களில் அவனும் ஒருத்தன். பல வேலைகளுக்கு முயற்சி செஞ்சு ஒன்னு ரெண்டு கிடைச்ச போதும் பிடிக்கலையின்னு வீட்டிலே உட்கார்ந்து தேய்க்க ஆரம்பித்தான். கயல் பிடிச்ச வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைச்ச வேலைக்குப் போங்க ளேன்னு சொல்ல, அது அவனுக்குப் பிடிக்ககாமப் போய் இருவருக்கும் சண்டை ஆரம்பமானது இப்படித்தான்.

‘சோகத்தப் போக்கக் குடிச்சுப் பாப்பமேன்னு’ ஒருமுறை குடித்துப் பார்த்தது தப்பு இல்லை. ஆனால் அதுவே பழக்கமாகிப் போனா எந்தப் பொண்டாட்டி ஒத்துக்குவா?

அதுக்கப்புறம் குடிச்சுட்டு வந்து அடிச்சதும், அடிச்சுட்டுப் போய்க் குடிச்சதும் கூடப் பெரிசில்ல. அதற்குப் பிறகு அவன் படுத்தின பாடுதான் பெரிசு.

எந்த அழகுக்கு மயங்கினானோ அந்த அழகைக் காரணம் காட்டியே அவளைப் பொசுக்க ஆரம்பித்தான் வினோதன். சந்தேகம்கிற சாத்தான் உள்ள புகுந்து விரட்டவும், நிம்மதிய நில்லுன்னு சொன்னாலும், அது நிக்காமப் போயே போயிட்டுது. சிப்டு முடிந்து கொஞ்சம் தாமதமா வந்தாப் போதும், எங்கேடி போயிட்டு வர்றேன்னு சிகரெட்டாலே தொடையில் சுடுவதும், எவனோட போயிட்டு வர்றேன்னு வார்த்தையால சுடுவதும் வாடிக்கையாகிப் போகவும் வாழ்க்கையே வேண்டாம்னு அக்கா வீட்டுக்கு ஓடி வந்தவள்தான் கயல். அதன்பிறகு அவள் திரும்பிப் போகவேயில்லை.

‘வினோதா உன்னைப் பார்க்க வக்கீல் வந்திருக் காராம்.’ குரல் கேட்டு விழித்தான் வினோதன். எழுந்து நின்று கொண்டான்.

‘வினோதா…எப்படி இருக்கேப்பா?’

‘எனக்கென்ன குறை சார்? நான் செய்த பாவத்துக்குக் கயலைப் பறித்துக் கொண்டு பிள்ளைகளையும் பிரித்து வைத்து விட்டார் கடவுள். இத்தனைக்கும் பிறகும் நல்லாவே இருக்கேன்.’

‘காலையில் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். இனி நம் கையில் ஒன்றுமில்லை. நம்பிக்கையோடு இரு. நல்ல தீர்ப்புக் கிடைக்கும். கயலோட அக்கா வீட்டுக்கு ஏற்கனவே தகவல் சொல்லீட்டேன். வசந்தி அக்கா பிள்ளைகளை அழைச்சுகிட்டு வர்றாங்களாம்’ நம்பிக்கை ஊட்டினார் வக்கீல்.

ஒன்றும் பேசாமலிருந்தான் வினோதன். கோர்ட்டில் என்ன கேட்பார்கள், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

‘என்ன வினோதா, ஒன்றும் பேசாமலிருக்கிறாய்? தீர்ப்பை நினைத்துப் பயப்படுகிறாயா? நீ ஏதாவது கேட்க வேண்டுமா?’ என்றார்.

‘சாவைப்பற்றி பயப்படவில்லை சார். நான் கயலுக்குச் செய்த கொடுமைகளுக்கு என்னை எத்தனை முறை தூக்கில் போட்டாலும் தகும். சரி அது போகட்டும். என் கேள்விக்கு ஏதாவது விடை கிடைத்ததா? அக்கா வீட்டுக்குச் சென்று விசாரித்தீர்களா? என் கயல் ஏன் தற்கொலை செய்து கொண்டாளாம்?”

அவன் வற்புறுத்தலின் பேரில் அவரும் வசந்தி வீட்டுக்குச் சென்றார் விசாரிக்க. வசந்தியின் கணவர் ஓய்வு பெற்ற கணக்கப்பிள்ளை, அதிகம் பேசாதவர். வசந்திதான் பதில் சொன்னாள், ‘அய்யா, எங்களுக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது, நாங்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வெளியே போயிருந்தப்ப இப்படி நடந்து போச்சு. என் தங்கைக்கு ஏன் அப்படி நடக்கணும்னு வருத்தத்துல இருக்கோம். நீங்க இனிமே வரவேண்டாம். யார் மேலயும் எங்களுக்குச் சந்தேகம் இல்லை’ என்று கோர்ட் விசாரணையில் சொன்னதையே திரும்ப ஒப்பித்தார்.

கையை விரித்து உதட்டைப் பிதுக்கிய வக்கீல் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார். ஆனால் ‘கயல் ஏன் தற்கொலை செய்து கொண்டாள்?’ என்கிற கேள்வி மட்டும் விடைபெற்றுக் கொள்ளாமல் வினோதனின் நெஞ்சைக் குடைந்து கொண்டே இருந்தது.

தன்னை விட்டுப் பிரிந்துபோன கயல் தன் அக்கா வீட்டில், எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தவள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? இல்லை… எல்லோரும் சொல்கிற மாதிரி ஒருவேளை நான்தான் குடிபோதையில் அவளைத் தள்ளிவிட்டு விட்டேனா? இல்லை… இல்லவே இல்லை…. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவள் என்னென்னமோ சொன்னாளே! அழுது கொண்டு ஓடினாளே! வேண்டாம் வேண்டாம் என்று பின்னாடியே ஓடினேனே? அதற்குள் குதித்து விட்டாளே?

அதன்பிறகு அவளின் உறைந்துபோன உதிரத்தைத் தானே என்னால் பார்க்க முடிந்தது?

ஐயோ என் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார் கள்? அன்பான தாயை இழந்தார்களே? தந்தையும் இப்படிக் கொலைப் பழியோடு நிற்கிறேனே?

வினோதனைக் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லக் காவலர்கள் வந்து கதவைத் திறக்கவும் அவன் எண்ணவோட்டத்திலிருந்து விடுபடுகிறான்.

கோர்ட் வளாகத்தில், பிள்ளைகள் எங்கே என்று அவன் கண்கள் தேடுகின்றன. அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அம்மாவைக் கொன்ற பாவி என்று நினைப்பார்களா? ஐயோ நான் கொல்ல வில்லையே? நான் சொன்னால் புரிந்து கொள்வார்களா? வசந்தி அக்கா என்ன சொல்லி அழைத்து வந்திருப்பார்? இப்பவே போய்ப் பேசலாமா? இல்லை. தீர்ப்புக்குப் பிறகு அனுமதிப்பார்கள். அதுவரை காத்திருக்கலாம்.

ஆமாம் வசந்தி அக்கா எங்கே? அதோ வசந்தி அக்கா வக்கீலுடன் ஏதோ அவசரமாகப் பேசிக் கொண்டி ருக்கிறாரே? அக்கா ஏதோ பேப்பரைக் கையில் கொடுக் கிறாரே? அதைப் பார்த்ததும் அவர் முகம் மலர்கிறதே? வக்கீல் அந்தப் பேப்பரைக் கொண்டு போய் மேஜிஸ்ட்ரேட்டிடம் நீட்டுகிறாரே?

வக்கீல் தன்னிடம் வருகிறாரே? ஏதோ சொல்ல வருகிறாரே?

‘வினோதா.. உன் கேள்விக்கு விடை கிடைத்திருக் கிறது. கயல் சாவதற்கு முன் எழுதிய கடிதம் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகத்துக்குள் இருந்ததாகவும், இப்போதுதான் அதைப் பார்த்ததாகவும் வசந்தி அக்கா கொண்டு வந்தாங்க. அதைத்தான் மேஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்திருக்கிறேன்!”

‘ஆமாம் ஏன் தற்கொலை செய்து கொண்டாளாம் என் கயல்?’

‘சற்று நேரத்தில் நீயே தெரிந்து கொள்வாய்! உன் கயல் உனக்கு நல்லது செய்து விட்டுப் போயிருக்கிறாள்’ என்று வக்கீல் சொல்லிவிட்டுச் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறான் வினோதன். வக்கீல் கயலாக மாறுவது போல இருக்கிறது அவனுக்கு. உன்னைக் காப்பாற்றுகிறேன் நம் பிள்ளைகளுக்கு யாரும் இல்லை என்பதற்காக. நன்றாகப் பார்த்துக்கொள் அவர்களை; நான் போகிறேன்’ என்று அவள் சொல்வது அவன் காதுகளில் கேட்கிறது. ‘ஐயோ போகாதே, ஓடாதே நில்’ என்று துரத்திக்கொண்டே பின்னே ஓடுகிறான் வினோதன். அவன் எண்ணங்கள் மொட்டைமாடியின் விளிம்பு வரை போய் நிற்கிறது. கயல் என்ன சொன்னாள் அப்போது என்று கண்களை மூடி யோசிக்கிறான்…. யோசிக்கிறான்…. ஆம் கொஞ்சமாய் நினவுக்கு வருகிறது, ஏதோ மிருகம் என்று சொன்னாளே? ‘நீ ஏன் இங்கே வந்தாய்? போய்விடு! போய்விடு! ஆண் மிருகங் களிடமிருந்து எனக்கு விடுதலை கிடைக்கப்போகிறது! ……..ஆ….ஆ……ஐயோ…. அம்மா!’

தொம்மென்று மிகப்பெரிய சத்தம்…! இறங்கி ஓடுகிறான் வினோதன். தலை சுற்றுகிறது. கால்கள் பின்னுகின்றன. வியர்த்துக் கொட்டுகிறது. தரையில் விழுந்து கிடக்கிறாள் கயல். அவள் காதிலும் மூக்கிலும் இரத்தம். ஐயோ கயல் போயிட்டியா? போயிட்டியா? தலையில் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறான்.

அவன் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டுகிறது. கோர்ட்டில் இருக்கிறவர்கள் அவனையே வேடிக்கை பார்க்கிறார்கள்! கண்களைத் துடைத்துக் கொள்கிறான். துடைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறான். தூரத்தில் வசந்தி அக்கா சேலைத்தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதும், தூரத்தில் காவலர்கள் மத்தியில் வசந்தி அக்காவின் கணவர் நிற்பதும் மங்கலாகத் தெரிகிறது.

– தமிழ்நேசன்

– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *