மியாவ் … மியாவ்…
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 180
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்று உபவாச ஒடுக்கக் கூட்டம். காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணிவரை பாட்டு, பைபிள்-படிப்பு, மன்றாட்டு, சாட்சி கூறல் அப்படியே தொடர்ந்து அல்லேலூயாக்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள்…
யாருக்கும் தூக்கம் வராது.
பாஸ்டர் முன்னிலையில் பிரசங்கியார் சிறப்புச் செய்தியை முடிக்கும் போது செய்யும் ஜெபத்தில் அனல் மூண்டு எரியும்.
கை தட்டல்கள், உடலைக் குலுக்கல்கள், பல பாஷை பேசுதல்… இப்படி விறுவிறுப்பாயிருக்கும். உணர்ச்சி வசப்பட்டு உடல் உறுப்புகளை வருத்துவோரும் உண்டு. இவைகளினூடே தங்கள் நியாயமான பிரச்சனைகளுக்காக பாரத்தோடு அழுது மன்றாடி வேண்டல்கள் ஏறெடுத்து பரிகாரம் தேடிக் கொள்ளும் ஆத்துமாக்களையும் காண முடியும். உலக சமாதானத்திற்காகவும், வன்முறைகள், வறுமைகள் இல்லாத ஒரு புது உலகம் காணவும் ஊக்கமாக ஜெபிக்கும் உத்தமர்களும் உண்டு. ஆவிக்குரிய வரம் பெற்ற பலர் பல பாஷை பேசுவதையும்-அர்த்தம் புரியாத கூச்சலாய் இருப்பதையும் காணலாம்.
சிறப்புச் செய்திக் கொடுக்க வந்திருக்கும் பிரசங்சியார் பலபாஷை பேசுவதில் வல்லவர். அதாவது வல்லமையான ஜெபத்தினூடே அர்த்தம் இல்லாத ஓர் உளறல் குரல் வாயிலிருந்து ஒரு சீராக உருண்டு வரும். அதனை ‘அந்நியபாஷை’ என்றும் சொல்வார்கள். அந்த மொழிக்குப் பொருள் கிடையாது.
அந்நிய பாஷைபேசுவோர் அபூர்வ வரம் பெற்றவர்களாக ‘விசுவாசிகள்’ கருதுகிறார்கள். தங்களுக்கு அந்நியபாஷை வரம் வேண்டும் என்று பலர் காத்திருந்து ஜெபிப்பார்கள்.
செய்தியாளர் இடையிடையே கொடுக்கும் பிரேய்ஸ்தலாட், ஆமென், அல்லேலூயா, நன்றி போன்ற குரல்களும், ஒன்றிரண்டு வரிகளில் பாடும் பாடல்களும் மேலும் மேலும் பக்தி பரவசத்தைத் தூண்டும்.
அன்று பலர் புதிதாகப் பலபாஷை பேசியது பிரசங்கியாருக்கு பெருத்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர் அந்நியபாஷை பேசுவதில் அதிகத் தேர்ச்சி பெற்றவர்.
“மியாவ் மியாவ்”
பல பாஷை கூச்சல்களுக்கு மத்தியில் ‘மியாவ், மியாவ்’ என்ற ஒலியும் ஒங்கி ஒலித்தது.
பல பாஷையின் பரிணாம வளர்ச்சி கண்டு பிரசங்கியார் பூரித்துப் போனார்.
“மியாவ்…மியாவ்”
பலபாஷை சித்தாந்தத்தில் பிரசங்கியாருக்கும், பாஸ்டருக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
‘பிரார்த்தனையில் பொருள் இல்லாமல் அலப்பக் கூடாது, அது போலித்தனமானது’ என்பது பாஸ்டரின் கருத்து.
சபை மக்கள் சிலரின் கட்டாயத்தின் பேரில் பாஸ்டர் இந்தப் பிரசங்கியாரை அழைத்திருந்தார். எனவே உபவாசக் கூட்டத்தினுள் பூனை புகுந்து விட்டதோ என்றெண்ணிய பாஸ்டர் கூர்ந்து கவனித்தர்.
மியாவ், மியாவ் என்று உரத்த குரல் கொடுக்கும் ஓர் அம்மாவைக் கண்டு கொண்டார். அந்தம்மாவைக் கூப்பிட்டு, ‘பரிசுத்தக் குறைச்சலாக ஏன் இப்படி பூனைக் கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு அந்தம்மா ‘அது ஒரு சாட்சி பாஸ்டர்’ என்று கூறி கைகளையும், தலையையும் அதிகமாக ஆட்ட ஆரம்பித்தார்கள்.
மன்றாட்டுகள் முடிந்து சாட்சிவேளை வந்தது. பாஸ்டர் மியாவ் அம்மாவை சாட்சி சொல்லும்படி அழைத்தார்.
‘பாஸ்டர் ஐயா, எனக்குக் கூட்டத்தில் பேசிப் பழக்கமில்ல, நான் சாச்சி சொன்னதுமில்ல, நா ஒண்ணும் படியாதவா. இன்னிக்கு துண்டு மீன் குழம்பு வச்சி அவசரமா ஜெபக் கூட்டத்துக்கு வந்துட்டேன்.
‘எனக்கும் பாலபாஷை பேசனும்னு ஆசை. ஏசப்பாட்ட கேட்டேன். திடீர்னு மீன் குழம்புச் சட்டி நினைவுக்கு வந்துட்டு. அதன் பக்கத்துல பூனை ஒண்ணு நின்னுக்கிட்டிருப்பதை ஞானதிருஷ்டியினால் பார்த்துட்டேன். மீன் குழம்புச் சட்டியை உருட்டித் தின்னுட்டுப் போயிருமேன்னு பயந்துட்டேன் உடனே மியாவ் மியாவ்னு சத்தமிட்டுக் கத்திட்டேன். பலமுறை கத்தினேன் பூனை ஓடிட்டு. திரும்பத் திரும்பக் கத்தினது எனக்கு பல பாஷை போலத் தோணிட்டு, சந்தோசம் பொங்கிட்டு… கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஆமென், அல்லேலூயா என்று சொல்லி கைகளை உயர்த்தி மியாவ் மியாவ் என்றார்கள். குதூகலத்தில் குதித்து ஆடினார்கள்.
பாஸ்டர் முகம் சுளித்தார்; பிரசங்கியார் வாயில் ‘அல்லேலூயா’ வரவில்லை.
மக்கள் பலர் சிரித்தனர், இன்னும் சிலர் சபித்தனர்.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
