கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 3,668 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம்-16

மயங்கி விழுந்த பெண்மணியைப் பிச்சைக்காரல் தூக்கினான். அவள் கண் திறக்கவில்லை. நுரை கக்கிய வாயிலிருந்து மூச்சு வேகமாக, இரைச்சலோடு வந்து போய்க்கொண்டிருந்தது.

சற்றுமுன் பணக்காரனை முட்டாள் பயல் என்று கூறி ஏமாற்றிவிட்டு மார்தட்டிக் கொண்டிருந்த அதே பிச்சைக்காரன், இப்போது சிறு குழந்தைபோல் அழுதான். “தங்கச்சி! தங்கச்சி” என அவளை அழைத்தான்.

ஆனால் அப்போதும் அவள் கண் திறக்கவில்லை. அண்ணனின் அழைப்பு அவள் காதில் விழுந்ததற்கு அறிகுறியாக எந்தவிதச் சலனமும் அவள் முகத்தில் தோன்றவில்லை.

குழந்தைச்சாமி விழுந்துகிடக்கும் பெண்மணியின் அருகில் உட்கார்ந்து அவள் கையை எடுத்து, மணிக்கட்டருகில் கையை வைத்து, அவளது நாடியைப் பரிசோதித்தார்.

அந்த ஏழைப் பெண்ணின் நாடித் துடிப்பு வேகமாக அடித்துக் கொண்டது.

குழந்தைச்சாமிக்கு அது மிகுந்த கவலையைக் கொடுத்தது. பிச்சைக்காரன் குழந்தைச்சாமியைப் பார்த்து, “சாமி! என்னங்க? தங்கச்சி ஏன் பேசமாட்டேங்குது?” என்று துடிப்போடு கேட்டான்.

பதில் சொல்லாமல் சுற்று முற்றும் பார்த்தார் குழந்தைச்சாமி.

நூறு கெஜ தூரத்தில் ஒரு குதிரை வண்டி நிற்பதைப் பார்த்தார். உடனே வண்டியை நோக்கி ஓடினார்.

வண்டியை அழைத்து வந்தார். இதையெல்லாம் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன், “என்ன சாமி! என்னங்க?” என்று திகைப்போடு கேட்டான்.

குழந்தைச்சாமி, “பேச நேரமில்லை. நாடி விழுந்திட்டிருக்கு. உடனே தங்கச்சியை வண்டியிலே எடுத்துப் போடு,” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பெண்மணியின் பரட்டைத் தலையைப் பிடித்துத் தூக்கினார்.

உடனே பிச்சைக்காரன் அந்தப் பெண்ணின் கால் பக்கம் தூக்கி அவனை வண்டியில் ஏற்றினான்.

குழத்தைச்சாமி வண்டியின் முன்புறம் உட்கார்ந்து கொண்டார். பிச்சைக்காரன் வண்டியின் பின்புறம் உட்கார்ந்து கொண்டான்.

“ஒரு நல்ல டாக்டர் வீட்டுக்கு ஓட்டுப்பா. இல்லே, ஆஸ்பத்திரிக்கு ஓட்டு. வேகமா ஓட்டு,” என்று துரிதப்படுத்தினார் குழந்தைச்சாமி.

அவர் கண்களிலிருந்த ஒளியோ அல்லது அவர் குரலிலிருந்த நிர்ப்பந்தமோ, வண்டிக்காரன் சவுக்கைச் சொடுக்கிச் குதிரையை வேகமாக ஓட்டினான்.

வண்டி வேகமாக ஓட ஆரம்பித்ததும் குழந்தைச்சாமிக்குத் திடீரென்று ஒரு விஷயம் ஞாபகத்து வந்தது.

அவர் கையில் ஒரு செப்புக்காசுகூட இல்லை என்பதுதான் அது.

கடந்த சில வருடங்களாகவே அவர் சல்லிக்காசுகூட வைத்துக் கொள்ளாமல் வாழ முயன்று வந்தார்.

அதனால்தான் அவர் தன் தமையன் மகன் ராஜுவுக்கு ஒரு கடிதம்கூட எழுதவில்லை. விலாசம் தெரிந்தால் பணம் அனுப்பி வைப்பான். அவர் யாருக்கும் தெரியாமல், யாரும் உதவாத ஒரு பூஜ்யமாக வாழ முயற்சித்து வந்தார். பறவை வாழவில்லையா? மிருகங்கள் வாழவில்லையா? மனிதன் மட்டும் ஏன் சேமிப்பு, சொத்து என்ற பாதுகாப்பு நிழலில் ஒதுங்க வேண்டும்? குழந்தைச்சாமி திருவண்ணாமயை ஆசிரமத்தில் இருந்தபோது, அங்கு வந்த ஓர் அறிஞர் சொன்ன வாக்கியம் தான் அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது.

அந்த வாக்கியம் ஒரு ரிஷியின் வாக்கியம் என்று கேள்விப்பட்டதாக அவருக்கு ஞாபகம். “மறுநாள் காலை உணவுக்குத் தானியம், முதல் நாள் இரவு எவன் வீட்டில் இல்லையோ அவனேதான் உண்மைப் பிராம்மணன்,” என்பதே அந்த வாக்கியம்.

அறத்தின் உருவமாக இருக்க வேண்டியவன் அந்தணன். அவனது ஒழுக்கமும், அறமும் குன்றிவிட்ட தீபமாக ஊரில் விளங்கும் நிலையில் அவனுக்கு ஊரில் உணவு கிடைக்காமல் போகாது. பிரம்மத்தை நம்பி வாழ்பவனுக்கு அவன் நம்பும் பிரம்மம் உணவளிக்காமல் போகாது என்பதே அப்பொன் மொழியின் பொருள்.

இதே உண்மையைத்தான் ஏசுநாதர் சொன்னார், ‘நரிகளுக்கு ஒதுங்கி மறையப் பொந்துகள் உண்டு. காற்றில் பறக்கும் பறவைகளுக்கும் கூடு இருக்கின்றன. ஆனால் மனிதன் மகனுக்குத் தலை வைத்துப் படுக்க இடம் இல்லையா?’ என்ற வாக்கியமும் குழந்தைச்சாமிக்கு ஞாபகம் வரும்..

இரண்டு வருடங்களாவது ஆண்டவனை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்று தீர்மானித்தார்.

கால் நடையாகச் சுற்ற ஆரம்பித்தார், பசித்தால்கூட யாரையும் கை நீட்டிக் கேட்பதில்லை.

நடையின் களைப்பில் கால் ஓய்ந்தால் மரத்தடியில் படுத்துவிடுவார். துணி கிழிந்துவிட்டதே என்று கூச்சப்பட்டு, யாரையும் போய்த் துணி கேட்க மாட்டார். ஊர் ஊராகப் போகும் போது ஒவ்வொரு நாளும் யாராவது கேட்காத போதே தேடி வந்து உணவு கொடுப்பதையும், கிழிந்த ஆடைகளை பார்த்துத் துணி கொடுப்பதையும் கண்டார். ஒரு சிலர் பணமும் கொடுக்க வந்தனர். வாங்க மறுத்துவிட்டார்.

உயிர் வாழ ஒரு வேளை உணவு, மானத்தை மறைக்க சிறு துணி – இது போதும் என்று சங்கல்பத்தோடு இரண்டு வருஷம் வாழ்ந்து, பழனியில் வாழும் புகழ்பெற்ற ஆண்டியின் முன் தன் சங்கல்பத்தை முடிக்க வந்தவருக்கு. சங்கல்பம் முடியும் நாளில் பணம் தேவைப்படும்படியான சோதனை வந்து விட்டதே என்று வருந்தினார்.

அவருக்காக இல்லாவிட்டாலும், ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு பெண் ஜீவனுக்காக வண்டியைப் பேசியவர் அவர்தானே?

ஆகவே அவனுக்கு வாடகை கொடுக்க வேண்டியது அவர் பொறுப்புத்தானே? வைத்தியர் வீட்டுக்குச் சென்றதும் வைத்தியருக்குப் பணம், மருந்துக்குப் பணம் வேண்டும். என்ன செய்வது!

‘இரண்டு வருஷங்களாக விடாமல் காப்பாற்றிய விரதத்தை முடிக்கும் நாளில் தோற்றுவிடப் போகிறோமா?’ என்று மனம் பதைத்தார்.

விரதத்தின் கட்டுப்பாடு பெரிதா ஒரு சகஜீவனுக்குக் காட்ட வேண்டிய கருணை பெரிதா? என்ன சிக்கலான பிரசினை! ‘பழனி ஆண்டவா? திடீரென்று இந்தக் குடும்ப பாரத்தைக் கொடுத்து விட்டாயே!’ என்று வண்டிக்குள் மேல் மூச்சு வாங்கியபடி கிடக்கும் பெண்ணையும், அவரருகில் அழுதபடி இருக்கும் பிச்சைக்காரனையும் பார்த்துக்கலங்கினார்.

‘பொறுப்னப வரவழைத்துக் கொண்டோம். கடந்த இரண்டு வருஷம் யாரிடமும் கை நீட்டாமல் இருந்த நாம், இன்று யாரிடமாவது கை நீட்டித்தான் ஆகவேண்டும் போலிருக்கிறதே’ என்று நினைத்தார். அந்தப் பிச்சைக்காரனிடம் சிறிது பணமாவது இல்லாமலா இருக்கும்?

அவன் கொடுத்துக் கொள்ளட்டுமே ன்று அவர் மனம் எண்ணவில்லை.

இப்படிச் சிந்தனையில் குழம்பிக் கொண்டு இருக்கும்போதே குதிரை வண்டி- ஒரு வீட்டின் முன் நின்றது.

வண்டிக்காரன் “டாக்டர் வீடு வந்தாச்சு” என்றான். குழந்தைச்சாமி வண்டியிவிருந்து கீழே குதித்தார்.

பிச்சைக்காரனும் வண்டிக்காரணும் இருபுறமாகப் பிடித்து அந்தப் பெண்ணை உள்ளே தூக்கிச் சென்றனர்.

குழந்தைச்சாமியும் பின்தொடர்ந்தார். வீட்டின் முன்புறத்தில் உள்ள சோதனை அறையில் ஒரு பெஞ்சியில் பெண்ணைக் கிடத்தினார்கள். ஆள் நடமாட்ட சப்தம் கேட்டு டாக்டர், வீட்டின் உட்புறமிருந்து வெளியே வந்தார்.

அந்த டாக்டர் இருபத்தேழு வயது மதிக்கத்தக்க நாகரிக இளைஞராக இருந்தார். பிச்சைக்காரனையும், குழந்தைச்சாமியையும் கிழிந்த ஆடையுடன் கிடக்கும் பெண்ணையும் பார்த்ததும் டாக்டரின் முகத்தில் ஒருவித சலிப்பு தெரிந்தது.

அதைப் பார்த்ததும் குழந்தைச்சாமி, “டாக்டர் உடனே ஏதாவது செய்யுங்க, இல்வாட்டி அவள் பிழைக்க மாட்டாள்,” என்று ஒருவிதக் கம்பிரத்தோடும் உரிமையோடும் சொன்னார்.

குழந்தைச்சாமியின் குரலில் தொனித்த ஒரு கண்ணியம் அந்த டாக்டரை ஒரு வினாடி திகைக்க வைத்தது.

பிச்சைக்காரளையும் சாமியாரையும் மாறி மாறிப் பார்த்தார் டாக்டர்.

இருவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.

டாக்டரில் மனத்தில் தோன்றிய சந்தேகத்துக்கு விடையளிப்பவர்போல் குழந்தைச்சாமி, “தம்பி! நாம் எல்லாருமே ஒரே மனிதக் குடும்பம் தான். உடனே பேஷண்டைக் கவனியுங்க”, என்று சற்றுப் பொறுமை இழந்து கூறினார்.

டாக்டர் வேறு வழி இல்லாமல் பெண்ணைப் பரிசோதித்தார். உடனே ஆபத்து சிகிச்சையாக ஓர் இன்ஜக்க்ஷன் கொடுத்தார். பிறகு மயங்கிக் கிடக்கும் பெண்ணின் வாயைத் திறந்து ஏதோ திரவத்தை ஊற்றினார்.

சுவாசம் சற்று அடங்கி, சாவதானமாக நடை போட ஆரம்பித்தது.

பிச்சைக்காரன் நன்றியோடு குழந்தைச்சாமியைப் பார்த்தான். அவன் பார்வை. ‘சாமி! டாக்டர் பீஸ், மருந்துச் செலவு எல்லாத்துக்கும் உங்களையே நம்பியிருக்கிறேன்’ என்று கூறாமல் கூறுவது போல் இருந்தது.

பணத்தின் நினைவு வந்ததும் குழந்தைச்சாமியின் அடி வயிற்றை என்னமோ செய்தது.

பணம் என்பது எவ்வளவோ இன்றியாமையாத ஒன்று என்பதைக் குழந்தைச்சாமி அப்போதுதான் பூரணமாக உணர்ந்தார்.

டாக்டர், “ஆபத்து ஒன்றுமில்லை. பலமில்லாத இதயம் – அதோடு பசி யக்கம் வேறு. சத்தான ஆகாரம் கொடுக்க வேண்டும்” என்றார்.

சத்தான ஆகாரம் என்ற வார்த்தையைக் கேட்டதும் பிச்சைக்காரன் சோகமாகப் புன்னகை புரிந்தான்.

டாக்டர் அதைக் கவனியாமலே ஒரு சீட்டில் ஏதோ டானிக்குகளை வரிசையாக எழுத ஆரம்பித்தார்.

அதைப் பார்த்த குழந்தைச்சாமி, மருந்துகள் வாங்கப் பணம்; டாக்டருக்குக் கொடுக்க வேண்டிய பீஸ் தொகை – இதற்கெல்லாம் என்ன செய்வது என்று நினைக்கும்போதே, அறைக்கு வெளியே இருந்து, “சாமி, வாடகை,” என்று குரல் வந்தது. டாக்டரைப் போல் வண்டிக்காரனும் குழந்தைச்சாமியை நம்பித்தான் வந்திருக்கிறான்.

ஆனால் அவர்கள் யாருக்கும் அந்தப் பிச்சைக்காரனிடம் இருக்கும் சொற்பத் தொகைகூட, குழந்தைச்சாமியிடம் இல்லை என்பது எப்படித் தெரியும்?

தன் நிலையை நினைக்கச் சிரிப்பாகவும் துக்கமாகவும் இருந்தது குழந்தைச்சாமிக்கு, கண்களை மூடி, “முருகா! முருகா” என்று நினைப்பதைத் தவிர அவரால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.

அதே சமயத்தில், “கப்பய்யா,“ என்று கூப்பிட்டுக் கொண்டே நரைத்த தலை, நரைத்த மீசையோடு ஒருவர் அறையின் உள்ளே நுழைத்தார்.

அவர் வீட்டின் உட்புறத்திலிருந்து அறைக்குள் துழைத்தார். இடுப்பில் ஓர் வேட்டியோடு, மேலே ஒரு சிவப்புச் சாயத் துண்டு அணிந்திருந்தார்.

உள்ளே நுழைத்தவர், டாக்டர் பேஷன்டோடு இருப்பதைப் பார்த்தவுடன், “சுப்பய்யா? நீ கேஸ் பார்த்திட்டிருக்கியா?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் வீட்டின் உட்புறம் செல்லத் திரும்பினார்.

டாக்டர், “என்னப்பா உங்களுக்கு வேனும்?” என்று மரியாதையோடு கேட்டார்.

“ஒண்ணுமில்லே. குழந்தைங்க பயாஸ் கோப்புக்குப் போகணும்னு தொந்தரவு செய்யறாங்க. பரவாயில்லே, வேலையைக் கவனிச்சுட்டு வாப்பா,” என்று சொன்னவர் திடீரென்று தலையைத் தூக்கி ஜன்னலருகே நின்று கொண்டிருக்கும் குழந்தைச்சாமியைக் கவனித்தார்.

அவரது காவி ஆடை அந்தப் பெரியவரைச் சற்றுக் குழப்பியது. பெரியவர் கூர்ந்து கவனித்தார். அவரது முகத்தில் ஒருவிதத் துடிப்பு, மலர்ச்சி, குழப்பம் – எல்லாம் ஒருங்கே சேர்த்து அந்த வயதான முகத்தில் படர்ந்தது.

குழந்தைச்சாமியைப் பார்த்து, “நீங்க.. நீங்க. தானே அழகிரி?” என்று உணர்ச்சி ததும்பக் கேட்டார்.

பழனியில் ஒரு டாக்டர் வீட்டில், திடீரென்று ஒருவர் தன்னுடைய பூர்வாசிரமப் பெயரைக் கூப்பிடவும் குழந்தைச்சாமி திகைத்துப் போனார்.

ஒரு வினாடிக்கு அவர் மனத்தை மோதிக் கொண்டிருந்த பொருளாதாரப் பிரசினை மறைந்தது. பெரியவர் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அடையாளம் புரியவில்லை. “நான் அழகிரிசாமிதான். நீங்க…?” என்று சொல்லி நிறுத்தினார்.

“என்னங்க அப்படிப் பார்க்கறீங்க? நான்தான் பழனி ஆண்டிங்க. உங்களுக்கு ஞாபகம் இல்லையா? உங்களுக்கு எப்படிங்க ஞாபகம் இருக்கும்? கொடுக்கற கை மறந்துடும்.. வாங்கின கை மறக்கலாமா? அண்ணாரு இறந்த ஒரு வாரத்துக்குள்ளே துக்கம் விசாரிக்க மலையாளத்துக்கு வந்தேன். சின்னத்தம்பி ராஜுதான் இருந்திச்சு. நீங்க ஊர்லே இல்லேன்னாங்க.. எவ்வளவு வருஷமாச்சு.” என்று அடுக்கிக் கொண்டே போனார்.

குழந்தைச்சாமிக்கு மெள்ள மெள்ள ஞாபகம் வந்தது. அதிராம்பட்டணத்து விடுதியில் தங்கியிருந்து, கள்ளக்கடத்தல் விவகாரத்தில் அண்ணனைச் சம்பந்தப்படுத்தும் ருஜுக்களையெல்லாம் உடைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, தினமும் தனக்குச் சமையல் செய்துபோட்ட, தங்கள் குடும்ப சமையல்காரன் பழனி ஆண்டிதான் பேசுகிற ஆள் என்பதைப் புரிந்து கொண்டார்.

அண்ணன் செய்த குற்றத்தைத் தன் குற்றமாக மாற்றிக்கொண்ட விஷயம் ஓரளவுக்குச் சமையல்காரனுக்குத் தெரியும் என்பதை உணர்ந்த அழகிரி, தன் அண்ணனிடம் சொல்லி, பழனி ஆண்டியின் மகனது மேல்படிப்பு செலவு பூராவையும் வெங்கடபதியையே ஏற்றுக் கொள்ளச் செய்தது ஞாபகத்துக்கு வந்தது.

“சுப்பய்யா! நீ படிச்சு டாக்டர் ஆனதே இவரால்தாண்டா. நம்ம வீட்டிலே விளக்கை ஏற்றின புண்ணியவான் இவருடா. விழுந்து கும்பிடுடா.” என்று சொன்னார்.

டாக்டர் சுப்பய்யா குழப்பத்தை சமாளித்தபடி, “பங்களா வெங்கடபதியோட தம்பியா? நான் பார்த்ததே இல்லை,” என்று சொல்லிவிட்டுக் குழந்தைச்சாமியின் கால்தொட்டு வணங்கினான்.

பழனியாண்டி அறையில், பெஞ்சில் படுத்திருக்கும் பெண்ணையும் பிச்சைக்காரனையும் பார்த்துவிட்டு, “இவனை நான் பார்த்திருக்கேனே. இவன் மலைப் படியிலே உட்கார்த்திருக்கிற பிச்சைக்காரன் இல்லே? எஜமான், இவன் எப்படிங்க உங்களோட?” என்றதும் உடனே அவர் மகன் சுப்பய்யா, “அப்பா! இவர் தான் இவுங்களை இங்கே கூட்டிட்டு வந்தார்.” என்றான்.

இதையெல்லாக் கவனித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் உணர்ச்சி ததும்பப் பேச ஆரம்பித்தான். “இவர் சாதாரணா சாமி இல்லீங்க. கடவுளே தான்,” என்று சொன்னான்.

குழந்தைச்சாமி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல் டாக்டரைப் பார்த்து, “தம்பி! அந்தப் பெண்ணு உடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்டார். “இனிமேல் அவளுக்கு ஒண்ணு ஒண்ணுமில்லீங்க, அவளைத் தூக்கிட்டுப் போகலாம். இரண்டு நாளைக்கு மருந்தும், நல்ல ஆகாரமும் சாப்பிட்டால், எல்லாம் சரியாயிடும்,” என்று டாக்டர் பதில் சொன்னார்.

குழந்தைச்சாமி யோசித்தவாறே. “தம்பி! ஒரு பிச்சைக்காரன் எப்படி நல்ல ஆகாரமும், மருந்தும் வாங்கிக் கொடுக்க முடியும்? வைத்தியம் பார்த்த நீதான் அதுக்கும். ஏற்பாடு செய்யணும்,” என்று சொல்லிவிட்டு டாக்டரின் முகத்தைப் பார்த்தார்.

டாக்டர் சுப்பய்யா புரியாமல் விழித்தார். குழந்தைச்சாமியின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட பழனியாண்டி, மகனைப் பார்த்து, “என்ன சுப்பய்யா முழிக்கறே! எஜமான் சொன்னா சொன்னதுதான், மருந்துக்கும் பணத்தைக் கொடுத்து அனுப்புடா,” என்றார்.

உடனே சுப்பய்யா டிராயரைத் திறந்து இருபத்தைந்து ரூபாயை எடுத்துப் பிச்சைக்காரனிடம் கொடுத்தார். பிச்சைக்காரன் நன்றி செலுத்திவிட்டுத் தன் சகோதரியைத் தூக்கிக்கொண்டு வண்டிக்குச் சென்றான்.

குழந்தைச்சாமி வண்டியை அனுப்பி விட்டு மறுபடியும் வீட்டினுள் நுழைந்தார்.

பழனியாண்டி ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு, உட்காராமல் அருகில் நின்றார், பக்தியோடு.

குழந்தைச்சாமிக்கு ஒரு திருப்தி. அவர் எடுத்துக்கொண்ட விரதத்துக்குப் பங்கம் வராமல், பணத்தை விரலால் கூடத் தொடாமல், பிரசினை தீர்த்து விட்டது. “பழனியாண்டி! இத்தனை வருஷம் கழித்து உன் வீட்டிலே முதல் முதலில் அடி எடுத்து வைக்கிறப்பவே, உன் மகனுக்குச் செலவு வச்சிட்டேனே”, என்று சொன்னார்.

“இதென்ன எஜமான்! ஒரு செல்வா! சுப்பய்யா பட்டணத்திலே படிக்க எவ்வளவு ஆயிரம் ஆகியிருக்கு, தெரியுங்களா? அதெல்லாம் நீங்க சொல்லாட்டி உங்க அண்ணச்சி மனசாரக் கொடுத்திருப்பாரா? எஜமானுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தச் சந்தர்ப்பம் வந்திருக்கேன்னு சந்தோஷப்படறேனுங்க,” என்று பழனியாண்டி பதிலுக்குக் கூறினார்.

அதற்குக் குழந்தைச்சாமி, “பழனி ஆண்டி! நான் இப்போ யாருக்கும் எஜமான் இல்லே. நீயும் எல்லாரையும் போலே என்னை ‘சாமி’ன்னே கூப்பிடலாம்,” என்று சொன்னார்.

அன்று, மலை ஏறிப் போய்ப் பழனி ஆண்டவரைத் தரிசித்தார்.

இரண்டு வருடகாலம் பணத்தைத் தொடாமலே வாழவைத்த ஆண்டவன் கருணைக்கு நன்றி செலுத்தினார்.

அன்று இரவு பத்து மணிக்கு மேல் தான் வீடு திரும்பினர், டாக்டர் சுப்பய்யாவும் தந்தையும் சாப்பாட்டுக்குக் காத்திருந்தனர். குழந்தைச்சாமி சாப்பிடும்போது பழனியாண்டி பெருமையோடு சொன்னார், “சாமி! இன்னக்கி நானேதான் உங்களுக்குச் சமையல் செய்தேன். திருப்தியாச் சாப்பிடுங்க,” என்றார்.

குழந்தைச்சாமி டாக்டரின் முகத்தைப் பார்த்தார். அதில் தோற்றமளித்த லஜ்ஜையைக் கவனித்துவிட்டு, ”பழனியாண்டி! நீ சமையல்காரனாயிருந்தது பழைய விஷயம். இப்போ நீ ஒரு டாக்டரின் தந்தை. நீ டாக்டரின் தந்தையாகத்தான் இருக்கணும்.” என்றார்.

அதற்கு பழனியாண்டி, “பழசை மறத்துடறது நல்லதுங்களா?” என்று கேட்டார்.

குழந்தைச்சாமி, “ஆமாம், பழசை மறத்துட வேண்டியதுதான். வாழ்வே ஒரு வளர்ச்சிதானே? அது ஆன்ம வளர்ச்சியாய் இருக்கலாம். எதுவானாலும் ஒருத்தருடைய இறந்தகாலம், மற்றவர் எதிர்காலத்தில் குறுக்கிடக்கூடாது… இதை த் தெரிஞ்சுக்கணும் பழனி ஆண்டி,” என்று சொல்லிவிட்டு சுப்பய்யாவைப் பார்த்துச் சிரித்தார்.

சுப்பய்யாவுக்குக் குழந்தைச்சாமியின் சரித்திரம், தந்தை சொல்லித் தெரியும். மூத்த சகோதரனுக்காகத் தன்னையே தியாகம் செய்தவர் என்பது தெரியும். ஆனால் அவர் தோற்றமும், அவர் ஒரு பிச்சைக்காரன் சகோதரியை சிகிச்சைக்கு அழைத்து வந்த விஷயமும், அவர் மனத்தில் ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

மறுநாள் காலையிலேயே குழந்தைச்சாமி பழனி ஆண்டியிடம் விடைபெற்றுப் புறப்பட்டுவிட்டார்.

ஊருக்கு வெளியே வந்ததும் கோயமுத்தூர் போவதா, இல்லை வேறு திசை செல்வதா என்று யோசித்தபடி நின்றார்.

அப்போது பிச்சைக்காரன் அவரை. “சாமி! சாமி!” என்று கூப்பிட்டபடி ஓடிவந்தான். அவனைப் பார்த்த குழந்தைச்சாமி, “உன் தங்கச்சிக்கு எப்படியப்பா இருக்கு?'” என்று கேட்டார்.

“இப்போ எல்லாம் சரியாயிடுத்துங்க. எல்லாம் உங்க அருள்தாங்க. கொஞ்சம் என்னோடு வாங்க,” என்று சொல்லி அழைத்தான்.

மௌளமாக அவனைப் பின் தொடர்ந்தார் குழந்தைச்சாமி.

இரண்டு பர்லாங் தூரத்தில் ஓர் இடிந்த மண்டபம், அதன்மீது தென்னங்கீற்றினால் கூரை வேய்ந்திருந்தது. அதில் மூன்று பிச்சைக்காரக் குடும்பங்கள் இருந்தன. அந்த மண்டபத்தில் தான் அவன் வசிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார்.

பிச்சைக்காரன் அவரை மண்டபத்தின் தெற்கு மூலைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு ஒரு கிழிந்த சாக்கு தொங்கீற்று, சாக்கின் பின்புறம் தரையில் விரித்த கோரைப்பாயில் உட்கார்ந்து இருந்தாள் பிச்சைக்காரி. குழந்தைச்சாமியைப் பார்த்ததும் அவள் நகர்ந்து வந்து, அவர் காலில் விழுந்து கும்பிட்டாள்.

அப்போதுதான் பிச்சைக்காரியை நன்றாகக் கவனித்தார். அவளுக்கு முப்பத்தெட்டு நாற்பது வயதுக்குள்தானிருக்கும். அவள் காலின் சக்தி இழந்து நகர்ந்து வந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“சாமி, உட்காருங்க,” என்று சொல்லி ஒரு பழை பெட்டியை குழந்தைச்சாமி முன் நகர்த்தினான்.

பெட்டியின்மீது உட்கார்ந்து கொண்டார். ஒட்டி உலர்த்து போன அந்தப் பிச்சைக்காரியைப் பார்த்ததும் அவளிடம் ஏதாவது ஆறுதலுக்கு விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. “ஏம்மா! உனக்குப் பிறவியிலிருந்தே கால் ஊனமா, இல்லே. இடையிலே ஏற்பட்டதா?” என்று கேட்டார்.

“அஞ்சலை! சாமிகிட்டே உன் கதையைச் சொல்லு. நான் இதோ வந்துட்டேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினான் பிச்சைக்காரன்.

நொண்டிப் பிச்சைக்காரியோடு தனியே விடப்பட்ட குழந்தைச்சாமிக்கு என்னவோபோல் இருந்தது.

”சாமி! நான் பரம்பரைப் பிச்சைக்காரி இல்லீங்க, என் புருஷனும் அதிராம் பட்டணத்திலே வெத்திலை பாக்குக் கடை வச்சி, நல்லா சம்பாதிச்சிக்கிட்டிருந்தார்.. எல்லாம் கெட்ட சகவாசத்தாலே வந்தக் கஷ்டமுங்க. யாரோ ஒரு கோயமுத்தூர் ஆளுங்க. பெரிய பணங்காரனாம். ஒரு கறுப்புக் கார்லே வருவாருங்க, பாம்பு மாதிரி கார் முன்னாலே ஒரு ஹாரின் வச்சிருக்கும். அவரோட என் புருஷன் எங்கேயோ போவாருங்க. விடிஞ்சப்புறம்தான் திரும்பி வருவாகு”, என்று சொன்னதுமே குழந்தைச்சாமிக்கு ஒருவிதக் குழப்பம் ஏற்பட்டது.

பாம்பு போன்ற ஹார்ன் உள்ள கார், கறுப்பு கார் – இந்த இரண்டு அம்சங்களும் வெங்கடபதியின் காரை அவருக்கு ஞாபகப்படுத்தின.

அதோடு அதிராம்பட்டணம் என்ற ஊர் அவரால் மறக்க முடியுமா? “உன் புருஷன் பேர் என்னம்மா?” என்றார் சாமியார், “அவர் பேரு செவந்திலிங்கம்,” என்று சொல்லி நிறுத்தினாள். செவந்திலிங்கம் என்ற பெயரைக் கேட்டதுமே குழந்தைச்சாமிக்கு இருந்த சொற்ப சந்தேகமும் நீங்கிற்று.

ஆச்சரியத்தோடு நொண்டிப் பிச்சைக்காரி அஞ்சலையைக் கவனித்தார்.

அத்தியாயம்-17

‘செவந்திலிங்கம்’ என்ற பெயரை அஞ்சலை சொன்னதுமே, சாமியாரின் ஞாபகம் பல வருஷங்களைக் கடந்து சென்றது. அவர் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்பதும், போலீஸ் தரப்பு வக்கீல்கள், கள்ள நோட்டு, கள்ளக்கடத்தல் சாட்சிகளை மாறிமாறிக் கேள்விகள் கேட்பதும், ஒவ்வொரு குறுக்கு விசாரணையிலும் செவந்திலிங்கத்தின் மனைவியின் பெயரான அஞ்சலை தோன்றியதும் நினைவுக்கு வந்தது.

இறந்த செவந்திலிங்கத்தின் மனைவியைப் போலீஸார் வலைபோட்டுத் தேடினார்கள். ஆனால் அவள் கிடைக்கவில்லை. அவள் மட்டும் கிடைத்திருந்தால் எவ்வளவோ விஷயங்கள் தெளிவாகியிருக்கும். ஒருவேளை அஞ்சலையின் சாட்சியம் அண்ணன் வெங்கடபதியையே பாதித்திருக்கலாம். ஆனால் அவள்தான் கிடைக்கவில்லையே?

அஞ்சலை தொடர்ந்து தன்னுடைய சோகக் கதையைக் கூறிக்கொண்டே சென்றாள்.

“என் புருஷன் ஏதோ தப்பு செய்யறார்ன்னு எனக்குச் சந்தேகமுங்க. தினமும் ராத்திரி வேளையில் எங்கே போறீங்கன்னு கேட்டேன். அவர் பதில் ஒண்ணும் சொல்ல மாட்டாரு. என்னைத் திட்டுவாரு.

ஒரு நாள் ராத்திரி புருஷன் வெளியே போறப்போ, அவர் பின்னாலேயே போனேனுங்க. கடற்கரையை அடுத்த ஒரு வீட்டுக்குள்ளே நுழைஞ்சாருங்க. கொஞ்ச நேரம் பொறுத்து ஒரு தோல் பையோடு வெளியே வந்தார். திடீர்னு போலீஸ் குழல் சத்தம் கேட்டிச்சு. என் புருஷன் சமுத்திரத்தை நோக்கி ஓடினாரு. அடுத்தாப்போல குண்டு சத்தம் கேட்டது. பையோடு புருஷன் சமுத்திரக் கரையில் விழறது தான் தெரிஞ்சது. அவர் பின்னாலே போலீஸ்காரங்க ஓடறதைப் பார்த்தேன். அத்தான்னு அலறினேன். அடுத்த நிமிஷம் அந்தப் பாம்பு ஹாரன் உள்ள கறுப்புக் கார் நேரே மோத வர்ற மாதிரி இருந்திச்சு. அடுத்த வினாடி தரையிலே விழுந்தேன்.

கார் என் தொடைமேலே ஏறிச்சுங்க. எனக்கு ஞாபகமே போயிடுச்சி. ஞாபகம் வந்தப்போ நான் அந்தக் கார்லே பின் சீட்டில் படுத்திருந்தேன். கார்லே வேற யாரும் இல்லே. அந்தக் காரை ஒரு பெரிய மனுஷன் தான் ஓட்டிட்டிருந்தார். என்னை திண்டுக்கல்லிலே ஒரு வீட்டிலே கொண்டு போய் வைத்தியம் பார்த்தாரு.

ஒரு காலைச் சரி செய்ய முடியாது என்று அந்தக் காலை வெட்டிட்டாங்க. ஆறு மாசம் வரையிலும் என் புருஷன் செத்த விவரத்தையே என்னிடம் சொல்லலீங்க. அப்புறம்தான் அந்தப் பெரிய மனுஷன் நான் ஒரு விதவை என்கிறதைச் சொன்னான். ‘கவலைப் படாதே. ஆயுள் பூராவும் உன்னைச் காப்பாத்தறேன்’னு சொல்லிட்டு என்னைப் பழனியிலே கொண்டுவந்து, நடுரோடிலே விட்டுட்டுப் போயிட்டாருங்க. அந்த ஆள் பேர் தெரியலிங்க. அப்புறம் அந்த ஆளை நான் பார்க்கலே இல்லீங்க. போலீஸ் ஸ்டேஷன்லே போய் விஷயத்தைச் சொன்னேன். அதிராம்பட்டணம் வழக்கு முடிஞ்சிட் டதுன்னும், கறுப்புக் காரில் கள்ளக் கடத்தல் நடத்திய குற்றவாளி அழகிரியைத் தண்டிச்சாச்கன்னும் சொன்னாங்க. பத்திரிகையிலே வந்த குத்தவாளி படத்தையும் காட்டினாங்க.

படத்திலே இருந்தவனோட மூஞ்சியே வேறேங்க. ‘யாரோ ஒருத்தனைத் தண்டிச்சுட்டீங்க. உண்மைக் குத்தவாளி வேறே’ன்னு சொன்னேன்.

அவுங்க என்னைப் பார்த்து சிரிச்சாங்க. ‘என்னம்மா உளர்றே? குத்தவாளியே குத்தத்தை ஒத்துட்டாரு’ன்னு சொல்லி என்னை விரட்டிட்டாங்க. அப்புறம் தான் பிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன்.”

அவள் பேச்சை நிறுத்தினாள். அவள் சொன்ன அடையாளங்களிலிருந்து அவள் மீது காரை ஏற்றியவன், அவளை விசாரணை முடியும் வரையில் திண்டுக்கல்லில் பூட்டி வைத்திருந்தவன், தன்னுடைய அண்ணன் வெங்கடபதிதான் என்று புரிந்து கொண்டார். பத்திரிகையில் தன்னுடைய படத்தைப் பார்த்திருந்தும் அவளால் தன்னை இன்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்பது அவருக்கு நிம்மதியாகவே இருந்தது. கள்ளக்கடத்தலில் பிரதமக் கூட்டாளியாக இருந்த செவந்திலிங்கம் இறந்ததும், அவன் மனைவி மீது கார் ஏற்றிக் கொல்லவா நினைத்தார் வெங்கடபதி. இல்லை, அது எதேச்சையாக நேர்ந்த விபத்தா?

இவளுக்கு எவ்வளவு தெரிந்திருக்குமோ என்ற பயத்தில் வெங்கடபதி அஞ்சலையைப் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். நான் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்றதும் அவர் ஆபத்து நீங்கிற்று என்ற நம்பிக்கையில் அவளைப் பழனியில் விட்டுச் சென்றிருக்க வேண்டும், என்று புரிந்து கொண்டார். அண்ணன் இவ்வளவு இரக்கம் இல்லாத, கொடூர மனம் படைத்தவரா என்று நினைக்கவே. சாமியாருக்கு வெட்கமாயிருந்தது.

அஞ்சலை சாமியாரின் சிந்தனைப் போக்கைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல், “சாமி! அந்தப் பணக்காரன் ஊரையும், கோர்ட்டையும் ஏமாத்தியிருக்கலாம். ஆனால் கடவுளை ஏமாத்த முடியாதுங்க. என் காலை மொண்டி யாக்கிட்டுப் போன பாவியோட காலை மொண்டியாக்காம ஆண்டவன் விட மாட்டாருங்க. விடவேமாட்டார். ஏன் சாமி! நான் சொல்றது சரிதானே?” என்று சாமியாரைப் பார்த்து வினவினாள்.

என்ன சொல்வார் சாமியார்? “அஞ்சலை! வாழ்க்கையில் எல்லா நிகழ்ச்சிகளுக்குமிடையே ஒரு பின்னல் இருக்கு. கவலைப்படாதே நீ பிச்சை எடுக்காமல் வாழ நான் வழி பண்ணறேன். உன் கால்களைப் போக்கியவன் இப்போது இறந்துகூடப் போயிருக்கலாம். நீ.அவன்மீது கொண்ட வெறுப்பை நீக்கிவிடு,” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு எழுந்திருந்தார்.

”சாமி! சாமி! அதுக்குள்ளே புறப்பட்டுட்டீங்களே.” என்று கூறியபடி அஞ்சலையின் சகோதரன், உள்ளே நுழைந்தான். அவன் கையில் ஒரு மூங்கில் தடுக்கு இருந்தது. அதில் சில சுட்ட கிழங்குகள் இருந்தன. “பழம் வாங்கலாம்னுதான் போனேன். பழம் அழுகலா இருந்திச்சு. அதுதான் கிழங்கை வாங்கிட்டு வந்தேன்” என்று சொல்லிவிட்டு கிழங்குத் தட்டை நீட்டினான்.

கிழங்கைப் பார்த்ததும் சாமியார் முகத்தில் வினோதமான ஒரு புன்னகை படர்ந்தது. அவர் மனத்தில் வெங்கடபதியின் ஞாபகம் வந்தது. அதே வினாடி, தன் முன்னால் கால் இழந்து கிடக்கும் நொண்டியையும், கிழங்கையும் பார்த்தார். தன் அண்ணனால் வாழ்விழந்தவளின் குடிசையில் உணவுப் பொருள்களைத் தொடவே அவருக்கு விருப்பம் இல்லை. ‘பணம் சேகரிக்கும் வெறியில் எவ்வளவு கொடுமைகள் புரிய வேண்டியிருக்கிறது!’ என்று நினைத்தார்

கிழங்குகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிச்சைக்காரன் வருந்துவான். தன்னை யார் என்று புரிந்து கொள்ளாதவர்களிடம் தன்னைக் காட்டிக் கொள்வானேன் என்று நினைத்தார். “இப்போ எனக்குப் பசியில்லை. அந்தக் கிழங்குகளைக் காகிதத்திலே கட்டிக் கொடு. வழியிலே பசிக்கிறப்போ சாப்பிடறேன்,” என்று சொன்னார். பிச்சைக்காரன் கிழங்குகளைக் காகிதத்தில் சுருட்டிக் கொடுத்தான். சாமியார், “அவளை இனிமேல் பிச்சை எடுக்க வைக்காதேப்பா. ஒவ்வொரு மாசமும் உனக்குப் பணம் அனுப்ப வழி பண்றேன். டாக்டர் சுப்பையா வீட்டிலே போய், முதல் தேதி அன்னிக்கி பணம் வாங்கிக்க. டாக்டர் சுப்பையாவின் தந்தை பேருக்கு மணியார்டர் வரும்” என்று சொல்லி விட்டு, கிழங்குகளை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.

பிச்சைக்காரனும், அஞ்சலையும் சாமியார் முன் காலில் விழுந்து அழுதபடி நன்றி தெரிவித்தனர். அவரை வாயாரப் புகழ்ந்தனர். தன் அண்ணனைப் பற்றிய உண்மையை மறைத்து, அந்த ஏழைகளிடம் திருடனைப் போல் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என்று குழம்பிப் போயிருந்த சாமியாருக்கு, இந்தப் புகழ்ச்சி தகாத புகழ்ச்சியாகத் தோன்றியது. “நான் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். இவர்கள் என்னை ஒரு வள்ளல் என்று போற்றுகின்றனர்,” என்று நினைத்து வேதனைப்பட்டார்.

“நான் உங்களுக்கு உதவுவது விளம்பரத்துக்காக அல்ல. அது ஒரு தர்மமும் இல்லை. என் ஆத்மத் திருப்திக்காகத் தான் செய்யறேன். பாவத்தை எப்படிப் பரம ரகசியமாகச் செய்கிறோமோ அது போலத்தான் நல்லதையும் செய்ய வேண்டும் என்பதுதான் என் அசை, ஆகையினாலே நீ என்னைப் புகழ வேண்டாம். யாரோ ஒரு பாவி உன் தங்கச்சி மேலே கார் ஏற்றி, நொண்டியாக்கி விட்டான். அவன் அந்தத் தப்பைப் பயத்திலே செய்து இருக்கலாம். இல்லை, யோசிக்காமல் கண்மூடித்தனமாகச் செய்திருக்கலாம். அவனை நீயும் உன் தங்கச்சியும் மன்னித்துவிட்டால் போதும். அதுதான் நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டிய உதவி”, என்று சொல்லிவிட்டுத் தன் தோள்மேல் கிடந்த காவித் துணியைத் தலைமீது போட்டுக் கொண்டு வேகமாக நடந்தார்.

பழனியிலிருந்து கோவை செல்லும் சாலையில் இரண்டு மைல் நடந்திருப்பார். வெப்பம் தாங்கவில்லை. ஒரு புளியமரத்தடியில் உட்கார்ந்தார். கையில் இருந்த காகிதப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தார். அஞ்சலையின் சகோதரன், நன்றி உணர்ச்சி காரணமாகக் கொடுத்த கிழங்குகள் இருந்தன. பிஞ்சுப் பருவத்து ஆசை அல்லவா? சாமியார் வாயில் உமிழ் நீர் நிறைந்தது. பழுத்த பருவத்து ஞானம் அந்தக் கிழங்கை உண்ணக் கூடாது என்று சொல்லியது.

பிரசினைக்கு முடிவு காணுமுன்பே எதிரே மூன்று வயதுக் குழந்தை யொன்று வந்து நின்றது. கறுத்து, மெலிந்த அந்தக் குழந்தையின் உடலில் ஆடையில்லை. வாழைப் பட்டையைக் கோவணமாகக் கட்டி நின்ற அவன், சாமியாரையும் கிழங்கையும் பார்த்தான். பிறகு கிழங்கைத் தன் விரலால் காட்டி, தன் வாயையும் தொட்டுக் காட்டி, தனக்குச் சாப்பிட ஆசை என்பதை விளக்கினான்.

சாமியார் கிழங்குகளை நீட்டினார். குழந்தை கிழங்குகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அங்கு நின்றால் ஒருவேளை சாமியார் மறுபடியும் கிழங்குகளைப் பிடுங்கிக் கொள்வார் என்ற பயம் போலும்!

சாமியார் சிரித்தபடி எழுந்து நடக்க ஆரம்பித்தார். நடந்து கொண்டே போய்க்கொண்டிருந்த சாமியாருக்கு அன்று புரட்டாசி சனிக்கிழமை என்பது ஞாபகம் வந்தது. அவர் பிறந்ததும் ஒரு புரட்டாசி சனிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று நட்சத்திரம் என்ன என்று தெரியவில்லை. ஆகையால் அது தன் பிறந்த நாளா என்று புரியவில்லை. அவர் சிறுபையன் அழகிரியாக இருந்தபோது அவர் அண்ணன் அவர் பிறந்த நாளை எவ்வளவு ஆர்வத்தோடு கொண்டாடுவான்! பணம் சேருவதற்கு முன்பு வெங்கடபதி எப்படிக் குழந்தை உள்ளத்தோடு இருந்தான். பணம் வந்தபின் எப்படி மாறிவிட்டான்!

வெங்கடபதியை நினைத்ததும் உடனே அவருக்கு மலையாளமும். அங்கு அவர் ஸ்தாபித்த பள்ளியும், அனாதை விடுதியும் ஞாபகத்துக்கு வந்தன. உடனே பளிச்சென்று மோகினியைப் பற்றிய எண்ணம் வந்தது. மோகினி என்று நினைக்கவும், சாமியாரின் மனத்தில் சொல்ல முடியாத ஓர் இன்பம் பிறந்தது. அவளைப் பார்த்து வருஷங்கள் பல ஆகிவிட்டனவே என்று நினைத்தார். அட்ரஸ் இல்லாமல், பணம் இல்லாமல் வாழ விரும்பினார். வாழ்ந்தும் காட்டி விட்டார். ஊரை விட்டு ஓடினாலும் உடலை விட்டு ஓடமுடியாது. குடும்பத்தை விட்டு ஓடினாலும், நினைவுகள், ஞாபகங்கள் என்ற குடும்பத்தை விட்டு ஓட முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்.

‘அலை அலையாக எழும் உணர்ச்சிகள், குலை குலையாகத் தோன்றித் தொங்கும் நினைவுகள் இவைகளுக்கு முடிவே கிடையாதா? ஒன்றிலே கோடிக்கணக்கான பலவற்றைக் காண்பது எக்காலம்? பல் கோடிப் பொருளிலே ஊடுருவி நிற்கும் ஒன்றைக் காண்பது எக்காலம்?’ என்று சிந்தித்தபடி மேற்கு நோக்கி நடந்தார். மேற்கு திசையிலிருந்து சில்லென்று காற்று வீசியது. மேகங்கள் மலையாளத்தில் மழையைப் பொழிந்து விட்டு, தண்மையான வெறும் மென் காற்றாகக் கோவை ஜில்லாவை நோக்கி வீசியது. அக்காற்று களைப்பை ஆற்றி உடலின் வெப்பத்தைப் போக்க, சாமியார் அப்படியே ஒரு திட்டில் சாய்ந்தார். அவரைச் சுற்றிக் கற்கள் கிடந்தன. அவரைப்போல் அசைவில்லாமல். சற்றுத் தூரத்தில் ஒரு பசுவும் மேய்ந்து விட்டு அசை போட்டபடி படுத்துக் கிடந்தது. சாமியார் எண்ணங்களை மென்றபடி கிடந்தார். அவ்வளவுதான் வித்தியாசம்.

அதே நேரத்தில் மோகினி ஆசிரியையாய் இருக்கும் பள்ளியில் பாருக்குட்டி அம்மாள் பள்ளி பின் ஸ்தாபகரான சாமியாரின் பிறந்த நாளை நினைத்து, அவர் படத்துக்கு அலங்காரம் செய்து வைத்திருந்தாள். குழந்தைகளுக்குப் பொரியும் வெல்லமும் கொடுத்துவிட்டு, சாமியாரைப் பற்றிச் சில வார்த்தைகள் சொன்னாள். குழந்தை கௌரி இதுவரை சாமியாரைப் பார்த்தே அறியாதவள். ஆதலால், அவர் தனக்குத் தாத்தா முறை என்று தெரியவும் மிகவும் ஆச்சரியப்பட்டாள். மோகினி டீச்சரிடம் அவரைப் பற்றிப் பேசவும், மோகினி அவரைப் பற்றிப் புகழ்ந்து சொன்ன விவரங்கள் கௌரியின் மனத்தைக் கவர்ந்தன. அவள் தாயோ தந்தையோ இதுவரை படத்திலிருக்கும் சாமியாரைப் பற்றி, ஒரு முறைகூடப் பேசிக் கேட்டதில்லை.

விஜயாவுக்குச் சாமியாரிடம் பெரிய மதிப்பு ஒன்றும் கிடையாது. அதனால் அவள் பேசவில்லை. ராஜுவோ உலகத்தைத் துறந்து அட்ரஸ் இல்லாமல் எங்கோ சுற்றித் திரியும் சித்தப்பாவைப் பற்றிக் குழந்தையிடம் சொல்வதால் என்ன பயன் என்று சும்மா இருந்து விட்டான்.

குழந்தைக்குத் தன் குடும்பத்துப் பெரியவரைப் பற்றி, டீச்சர் அவ்வளவு அன்போடும் ஆர்வத்தோடும் பேசுவது, பெருமையாகவே இருந்தது. “டீச்சர்! சின்னத் தாத்தாவை உங்களுக்கு நல்லாத் தெரியுமா?” என்று கேட்டாள்.

அதற்கு மோகினி, “பல வருஷத்துக்கு முன்னாலே அவரைப் பார்த்தது. ஆனால் அவரை மறக்கவே முடியாது. நான் கடவுளை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் கடவுள் உருவம் எடுத்து வந்தார்னா கிட்டத்தட்ட உன் சின்னத் தாத்தா மாதிரிதான் இருப்பார்னு நினைக்கிறேன்” என்று சொன்னாள்.

அன்றிரவு கெளரி தன் தாயிடம் குழந்தைச் சாமியாரைப் பற்றி விசாரித்தாள் விஜயா அன்று தலைவலியால் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்ததால் குழந்தையின் கேள்விகளுக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. “அவரைப் பத்திப் பேசாதே கௌரி. அவராலே நம்ம குடும்பத்துக்கே கெட்ட பெயர். அவர் ஜெயிலுக்குப் போனவர். அவர் ஊரைவிட்டு ஒழிஞ்சுபோனதே நல்லது. சும்மா தொண தொணன்னு அவரைப் பத்திப் பேசாதே,” என்று விஜயா மகளைக் கண்டித்தாள்.

“என்னம்மா! டீச்சர் சின்ன தாத்தா நல்லவர்னு சொல்றார். அவர் கடவுள் மாதிரின்னு சொல்றார். நீ என்ன என்னவோ சொல்றியே?” என்று கௌரி மீண்டும் கேட்டாள்.

டீச்சரைப் பற்றிக் கெளரி சொன்னதும், விஜயாவுக்கு ஆத்திரம் வந்தது “உன் டீச்சருக்கு என்ன தெரியும்? அவள் ஒரு கூலிக்காரி. எதுக்கெடுத்தாலும் அந்த டீச்சரைப் பத்தியே பேசிட்டிருக்கிறே?” என்று தாய் சொல்லவும், கௌரி, “டீச்சர் மட்டுமில்லேம்மா. ஹெட்மிஸ்ட்ரஸ்கூட சின்னத் தாத்தா நல்லவர்னுதான் சொன்னாங்க. எல்லாருமே அவரை நல்லவர்னுதான் சொல்றாங்கம்மா..” என்றாள்.

விஜயாவுக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாயிற்று. “அவுங்களுக்கெல்லாம் உண்மை தெரியாது. உங்க சின்னத் தாத்தா ஒரு குலத்தைக் கெடுத்த கோடாரி! அவரைப் பத்திப் பேசாதே! பேசாதே!” என்று கத்தினாள்.

அப்போது அறையில் நுழைந்தான் ராஜு, தன்னுடைய சித்தப்பாவை விஜயா கேவலமாகப் பேசுவதைக் கேட்டதும், உரத்த குரலில், “விஜயா! பெரியவரைப் பற்றி ஏன் தவறாப் பேசறே?” என்று கேட்டான்.

“மகாப் பெரியவர்! பெரியவர்! அவர் கம்பி எண்ணினது ஊருக்கெல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே?” என்றாள் விஜயா.

ராஜு, “விஜயா! அவரைப் பத்திப் பேசாதே. பேசினால் எனக்குக் கெட்ட கோபம் வரும்,” என்று கோபத்தோடு கூறினான். ராஜு அவ்வளவு கோபமாகப் பேசி விஜயா அதுவரை பார்த்தது இல்லை. குழந்தை கெளரியும் தன் தந்தை கோபமாக இருந்ததைப் பார்ததே இல்லை. ஆச்சரியத்தோடு தந்தையைப் பார்த்தாள்.

குழந்தையின் முன்னால் கணவன் தன்னிடம் கூச்சலிடுவதைப் பார்த்த விஜயாவுக்குப் பொறுக்க முடியவில்லை. “உள்ளதைச் சொன்னால் ஏன் கோபப் படறீங்க? கொலையும், திருட்டும் நான் பிறந்த வீட்டிலே கிடையாது. அந்தப் பெருமை உங்க வீட்டுக்குத்தான் உண்டு. உங்க சித்தப்பா செய்த பாவத்தைத்தான் நான் இப்போ சுமக்கிறேன். இல்லேன்னா நல்லாயிருந்தவள் ஏன் இப்படிக் கால் இல்லாமல் கிடக்கணும்?” என்று குத்திக்காட்டினாள்.

பொறுமை இழந்த ராஜு, சூழ்நிலையை மறந்தான். கைகளை ஓங்கியபடி, “விஜயா! வாயை மூடறியா, இல்லியா?” என்று அடிக்க ஓடினான்.

தந்தையின் பயங்கரமான முக மாறுதலையும், அவரால் தன் தாய்க்கு வர இருந்த ஆபத்தையும் பார்த்து மிரண்டுபோன கௌரி, “அப்பா!” என்று அலறினாள்.

கெளரியின் அலறல் சத்தம் கேட்டு, ராஜுவின் ஓங்கிய கை நடுங்கியது. குழந்தையின் முகத்தில் தோன்றிய மருட்சியைக் கண்டு வெட்கமடைந்தான். “திடீரென்று ஒரு மிருகமாகி விட்டோமே,” என்று தன்னைத்தானே வெறுத்துக் கொண்டான்.

அந்தச் சமயத்தில் விஜயா “அடியுங்கள்! ஏன் நிறுத்திட்டீங்க? நல்லா அடியுங்கள்!” என்று கூச்சலிட்டாள்.

கௌரி அங்கு நிற்கவே விரும்பாமல், அறையை விட்டே ஓட்டம் பிடித்தாள்.

அத்தியாயம்-18

கெளரி அறையை விட்டு ஓடிய பின்பு, ராஜு குழப்பத்தோடு தன் மனைவி விஐயாவைப் பார்த்தபடி நின்றான்.

விஜயாவுக்கு விவரிக்க முடியாத அதிர்ச்சி. ‘பெட்டியிலே அடைபட்டுக் கிடந்த பாம்பு இன்று சீறுகிறது. நான் கிழித்த கோட்டைத் இருந்தவர் இன்று என்னையே அடிக்கக் கையை ஓங்கிவிட்டார். பொறுமையின் அவதாரம் இன்று பொறுமையிழந்து நிற்கிறது. நம் கணவரின் பண்பு என்ற கோட்டையிலும் சில ஓட்டைகள் இருக்கின்றன. அவரும் ஒரு மனிதர்தான்; தன் நிலை தடுமாறக்கூடிய மனிதர்தான்,’ என்பதை உணர்ந்தாள்.

இந்த உண்மையை உணர்ந்ததில் விஜயாவுக்குக் கோபம் ஏற்படவில்லை. திருப்தியே ஏற்பட்டது. “கோபப்படுவது, பொறுமை இழப்பது, இரண்டும் என்னுடைய பிரத்தியேகமான பலவீனம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அசையா மலை என்று நம்பிய என் கணவருக்கும் அந்தப் பலவீனம் இருக்கிறது.” என்று நினைத்தவளுக்கு, உண்மையிலேயே லேசாகச் சந்தோஷமே ஏற்பட்டது.

இதுவரையில் அவள் கோபப் படுவாள். அரைமணி கழித்து வருந்தி, கணவனிடம் மன்னிப்புக் கேட்பாள். ஆனால் இன்று கணவரல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? நினைக்கவே, அது விஜயாவுக்கு ஒரு புதிய அனுபவமாய்த் தோன்றியது. அவள் எதிர்பார்த்தபடியே ராஜு, “விஜயா! என்னை மன்னித்துவிடு. என்னையும் அறியாமல் நான் சுயஉணர்வு இழந்துவிட்டேன்,” என்று சொன்னான்.

சுயஉணர்விழந்த நிலையில் உள்ள ஆடவனையே பெண் இனம் விரும்புகிறது என்பதை ராஜு உணரவில்லை. பண்பில் பூரணத்துவம் உள்ளவனைப் பெண் மனம் கைகூப்பித் தொழலாம். ஆனால் காதலிக்காது. பெண் மனம் ஒரு தாய் மனம் அல்லவா? குறைபாடுகள் உள்ளவர்களிடம்தான் அது இரக்கம் காட்டும். முடிவில் அந்த இரக்கமே காதலாக மாறிவிடும். அதனால் தான் கோழைகள், சோம்பேறிகள், குடிகாரர்களுக்குக் கற்பரசிகள் மனைவிகளாய் அமைந்து வாழ முடிகிறது.

தன்னை அடிக்கக் கையை ஓங்கிய கணவனை, விஜயா இன்று புதுக் கண்களோடு நோக்கினாள். அந்தப் பார்வையில் ஒரு பயம், மரியாதை, அன்பு – மூன்றும் கலந்திருந்தன. அதைப் புரிந்து கொள்ளாத ராஜு அவளிடம் மன்னிப்புக்காகப் போராடிக் கொண்டிருந்தான். விஜயாவும் பெண்ணுக்கே இயல்யான தந்திரத்துடன், அவளுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கோபமும் வருத்தமும் அடைந்தவள் போல் மாய்மாலம் செய்தாள். ஆனால் அந்தப் பாசாங்கு நடிப்பின் நடுவே, கணவனின் அன்பை இழந்துவிடக் கூடாது என்ற முயற்சியும் இருந்தது. “நீங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை. நான் தான் உங்கள் சித்தப்பாவைப் பற்றிப் பேசி இருக்கக் கூடாது. ரத்த பாசம் விடுமா? வேணுங்கிறவங்களைப் பத்திச் சொன்னால் கோபம் வராமல் இருக்குமா என்ன? ஒரேயடியா அடிச்சிருந்தீங்கன்னா என் உயிரே போயிருக்கும். எனக்கும் எவ்வளவோ நிம்மதியா இருந்திருக்கும்,” என்று அழுதபடி சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் தன் கணவனைக் கவனித்தாள்.

ராஜு, “விஜயா! சித்தப்பா விவகாரம் எனக்குப் பெரிய குழப்பமாவே இருக்கு. இவ்வளவு சொத்திருந்தும் நம்ம வீடு இப்படி வேதனையிலேயே சூழ்ந்திருக்கக் காரணம், ஒரு வேளை சித்தப்பாவுக்குச் சேர வேண்டியதை அவருக்குக் கொடுக்காம இருக்கிறதனாலே தானோ என்னவோன்னு நினைக்கிறேன். ஆனால் சித்தப்பாவோ, சொத்தே வேண்டான்னுட்டுப் போயிட்டார். அவர் எங்கே இருக்கார்னு தெரியல்லே. திரும்பி வந்தாக்கூட, அவர் பங்கை வாங்கிக்க மாட்டார். நம்ம வீட்டிலே அவர் சாப்பிடறதுகூடக் கிடையாது விஜயா,” என்றான்.

“அவர் எதுக்கு இப்படி நாடகம் ஆடறார்னு எனக்கும்தான் புரியல்லே,” என்று விஜயா கூறினாள்.

அதற்கு ராஜு, “அவர் நாடகம் ஆடல்லே விஜயா. உண்மையாவே அவர் ஒரு சிறந்த துறவின்னுதான் தோணுது”, என்றான்.

அதை ஏற்றுக் கொள்ளாதவள்போல் விஜயா, “கள்ளக் கடத்தல், கள்ள நோட்டெல்லாம் தயார் செய்துட்டு ஜெயிலுக்குப் போனவர், வெளியே வந்தவுடனே துறவியாயிட்டார்னா பொருத்தமாயில்லியே!” என்று சொல்லி விட்டு, ராஜுவின் முகத்தைப் பார்த்தாள்.

ராஜுவுக்கு மறுபடியும் கோபம் தலை தூக்கிற்று. ஆனால் உடனே அடக்கிக் கொண்டான். “அதில்லே விஜயா? அப்பா சித்தப்பாவிடம் மரியாதையா நடந்து கொண்டவிதம், சித்தப்பாவின் பெரும்போக்கு இதையெல்லாம் பார்க்கிறப்போ, சித்தப்பா அந்த வழக்கிலே குற்றவாளியா இருந்திருந்தார்னு என்னாலே நம்ப முடியல்லே,” என்றான்.

“அவர் குற்றவாளியா இல்லாதப்போ வழக்கிலே குற்றத்தை ஒப்புக் கொள்ள அவருக்கு என்ன பைத்தியமா?” என்று விஜயா கேட்டாள்.

இந்தக் கேள்விக்கு ராஜுவால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் இதயம் சித்தப்பா நிரபராதி என்று சொல்லிற்று. ஆனால் அவன் அறிவு. ஊர் பேச்சு, சந்தர்ப்ப சாட்சியத்தைச் சிந்திக்கும்போது குழம்பியது. சற்று நிதானித்த பிறகு ராஜு, “அதுதான், எனக்கும் புரியல்லே விஜயா. ஒருவேளை ஆரம்பத்திலே சித்தப்பா ஒரு மாதிரியா இருந்து, சிறைச்சாலையிலே மாறியிருக்கலாம் அல்லவா?” என்று சொல்லி நிறுத்தினான்.

தந்தை வெங்கடபதிக்கும், சித்தப்பா அழகிரிக்கும் உள்ள ரகசியத் தொடர்பு பற்றி, ராஜுவுக்கு எதுவும் தெரியாது. உயிருக்கும் மேலாக நேசித்த ஒரே மகனிடம் வெங்கடபதி இறந்த காலத்தின் உண்மை உருவத்தைச் சொல்ல முதலில் துணியவில்லை. வெங்கடபதி இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன் வெங்கடபதியின் மனம், ‘தம்பி நிரபராதி, உத்தமன்,’ என்பதைச் சொல்லத் துடித்தது ராஜுவிடம்.

‘அழகிரிசாமி உன் சித்தப்பா அல்ல. அவன் ஒரு தெய்வம். என்னை வாழ வைப்பதற்காகவே பிறவி எடுத்த தெய்வம்,’ என்று சொல்லி, தன் மகனுடைய மனத்தில் தன் தம்பியின் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்த விரும்பினார்.

அது விஷயமாகத் தம்பி குழந்தைச்சாமியையே கேட்டார். ஆனால் குழந்தைச்சாமி “அண்ணா! உங்களுக்குப் புத்தி இருந்தால் அதைச் செய்யமாட்டீங்க. நீங்க தவறு செய்து பணத்தைச் சம்பாதிச்சீங்க. ஆனால் ராஜு, பணத்துக்காகத் தவறு செய்வது என்றால் என்னன்னுகூடத் தெரியாமல் சுத்த சத்துவமா வளர்ந்திருக்கான். இந்தச் சொத்து எப்படி வந்துச்சுன்னு அவனுக்குத் தெரிஞ்சா, அவன் உங்களை வெறுப்பான். சொத்தை வெறுப்பான், தன்னை யே வெறுப்பான். அப்புறம் என்ன ஆகும்னு சொல்ல முடியாது. நம்மைப் பற்றிய நல்ல உண்மைகள் மட்டும் தான் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டும். விகாரமான உண்மைகளை ஏன் நம் சந்ததிகளுக்குச் சொல்ல வேண்டும்? ஒரு பொய்யால் நல்லது ஏற்படும்போது, அந்தப் பொய் சத்தியத்தைவிட எவ்வளவோ மேல்,’ என்று அடித்துச் சொல்லித் தடுத்தார்.

வெங்கடபதி சில நாட்களுக்குத் தன்னுடைய உண்மைச் சரித்திரத்தைச் சொல்லும் முயற்சியை ஒத்திப் போட்டார். ஆனால் அவர் மனச்சாட்சி சாகும் முன் எப்படியாவது உண்மையை ராஜுவிடம் சொல்லிவிட வேண்டும் என்று தவித்தது. ஒரு நாள் மனத்தை திடப்படுத்திக் கொண்டு உண்மையைச் சொல்ல ராஜுவை அழைத்தார். ஆனால் வெங்கடபதி பேசு முன்பே ராஜு அவரிடம் பேசியது, அவரை அதிர்ச்சியடையச் செய்தது.

ராஜு, “அப்பா’ கஸ்தூரி ஐயா விஷயம் தெரியுமாப்பா? அவன் இத்தனை நாளும் பெரிய ஆஷாடபூதியா இருந்திருக்கான். நெத்தியிலே நாமம். கழுத்திலே துளசி மாலை. ஏகாதசி விரதம் இப்படியெல்லாம் நடிச்சிருக்கான். அவனிடம் வேலை செய்யும் குமாஸ்தா சம்சாரத்தோடு கள்ள நட்பு வச்சிருக்கான். இப்போ விஷயம் வெளியே வரவும், அந்தப் பெண் தற்கொலை பண்ணிக்கிட்டாளாம், பாவம்! இனி மேல் நாம அந்தக் கஸ்தூரியோட எந்த வியாபாரமும் வச்சுக்கக் கூடாது. நம்ம மில்களிலே அவன் சரக்கை வாங்கக் கூடாதுன்னு உத்தரவு அனுப்பிச்சிட்டேன்,’ என்று சொன்னான்.

இதைக் கேட்ட வெங் கடபதி சற்றுத் தயங்கியபடி.. ”கஸ்தூரி ஐயா சொந்த விஷயம் எப்படி வேணும்னா போகட்டும். அவன் வியாபாரத்திலே நாணயஸ்தன். பல வருஷங்களாக நமக்குப் பருத்தி சப்ளை செய்யற வியாபாரி,” என்று கூறினார்.

அதற்கு ராஜு, “பெண்ணாசை உள்ளவன் ஏன் பக்தி வேஷம் போடணும்? வெளிப்படையாச் சோரம் போறவன், திருடறவன், குடிகாரனைக்கூட மன்னிச்சுடலாம்ப்பா. ஆனா, நல்லவனைப் போல நடிக்கிற பரம சண்டாளனை மன்னிக்கவே கூடாதுப்பா, மன்னிக்கவே கூடாது,” என்றான் ஆத்திரத்தோடு.

“வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கும் ராஜு, நம்ம வீட்டிலேயே அந்த மாதிரி தவறு பண்ணுறவங்க இருந்தா?” என்று வெங்கடபதி கேட்டுவிட்டு, மகனுடைய முகத்தை அச்சத்தோடு பார்த்தார்.

ராஜு, “நீங்க சொல்றதின் அர்த்தம் தெரியுது அப்பா, சித்தப்பாவைப் பற்றித்தானே சொல்றீங்க? அவர் கள்ளக் கடத்தல் செய்தார்; உண்மை. ஆனால் அவர் மறைஞ்சு வாழல்லே, ஊருக்கு முன்னாலே நல்லவனா நடிக்கல்லே. வேஷம் போடல்லே, தன் குற்றத்தை இன்னொருத்தர் மேலே சுமத்தல்லே, குற்றத்தை ஒப்புக்கொண்டு, தண்டனை ஏத்துக்கிட்டார். தவறு செய்யறது மனித இயற்கை. ஆனால் தவறு செய்துகிட்டே உலகத்தின் முன்னாலே நல்லவனா பேரெடுக்க ஆசைப்படறதுதான் கோழைத்தனம்,” என்று உஷ்ணமாகப் பதில் சொன்னான். வெங்கடபதி அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார். ராஜு கஸ்தூரி ஐயாவை வர்ணித்த அத்தனை வாக்கியங்களும், தனக்கும் ஓரளவு பொருந்தும் என்பதை உணர்ந்த வெங்கடபதி, ராஜுவின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். ராஜுவிடம் தன் கடந்த கால வாழ்க்கையைக் கூறுவது உசிதமல்ல என்ற முடிவுக்கு வந்தார். அவர் சேகரித்த சொத்தின் அஸ்திவாரமே, பாவத்தால் ஆகியது. ஒரு கொலை, ஒரு கூட்டாளியின் மனைவி தன்னால் முடமாக்கப்பட்டுப் பிச்சை எடுக்கிறாள் என்பன போன்ற உண்மைகளை அறிந்தால், தம்பியைப்போல் மகனும் சொத்தே வேண்டாம் என்று உதறித் தள்ளிவிடுவான் என்று நினைத்துக் குழம்பினார். ஆகையால் ராஜுவிடம், அதிராம்பட்டண வழக்கின் உண்மையைச் சொல்லவில்லை.

ஆனால் ராஜு தன் தந்தையிடம், “ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னீர்களே, அது என்னப்பா?” என்று கேட்டான்.

வெங்கடபதி ஒரு வினாடி யோசித்து விட்டு, ”ஒன்றுமில்லை ராஜு. நான் இறந்த பின்பு, நீ உன் சித்தப்பாவை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும். அவர் எது கேட்டாலும் உடனே யோசிக்காமல் கொடுத்துவிடு, அவரை நீ குற்றவாளி போல் நடத்தாதே, அவரைக் காரணமில்லாமல் தண்டிக்கப்பட்ட நிரபராதியாகவே நினைக்க வேண்டும். அது மட்டுமல்ல. அழகிரி எனக்கு வெறும் தம்பியல்ல. உனக்குச் சித்தப்பா மட்டுமல்ல, இந்த வீட்டை வாழவைக்க வந்த நம் குல தெய்வம் அவன். அவன் மனம் வேதனைப்பட்டால் நம் குடும்பம் உருப்படாது,” என்று சொன்னார்.

ராஜு, தன் தந்தைக்கு அவரது தம்பியிடம் தோன்றிய அன்பைக் கண்டு தந்தையைப் பாராட்டினான். வெங்கடபதிக்கு ஒரு திருப்தி. ‘நம் கௌரவத்தை மகன் பார்வையில் இழக்காமல், தம்பியின் குற்றமற்ற தன்மையையும் விளக்கிவிட்டோம்,’ என்று நினைத்தார்.

தந்தை கூறிவிட்டு போன இந்த வார்த்தைகளின் ஞாபகம் தான் தன் சித்தப்பாவை விஜயா கேவலமாகப் பேசியதும் ராஜுவுக்கு ஏற்பட்டது. அதனால்தான் ராஜுவுக்குக் கோபமும் வந்தது. அவளை அடிக்கவும் கை ஓங்கி விட்டான். அன்புத் தந்தையின் அருள் மொழியைக் காக்கப் போய், அங்கஹீனமான தன் மனைவியை அடிக்கும் அளவுக்கு மிருகமாகிவிட்டோமே என்று வருந்தினான். ஒரு தவறைத் திருத்த நினைத்து இன்னொரு தவறைச் செய்து விட்டோமே என்று வருந்தினான். அன்றிலிருந்து சில நாட்களுக்கு ராஜு விஜயாவிடம் அதிகப் பரிவோடு நடந்து கொண்டான். எப்பொழுதும். அவள் அருகிலேயே உட்கார்ந்திருந்து அவளைக் கவனித்து வந்தான்.

இது விஜயாவுக்கும் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் குழந்தை கௌரிக்கு மட்டும், அன்று முதல் தந்தையிடம் ஒரு பயம் ஏற்பட்டது. ராஜு குழந்தையிடம் கொஞ்சிப் பேச வந்தால் கூடக் கெளரி பயந்து ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள். ராஜு வேதனை அடைந்தான். விஜயா திடீரென்று கோபப்படுவதும், உடனே கோபம் மாறி அன்பு காட்டுவதும் குழந்தைக்குப் புரியாத புதிராகத் தோன்றியது. அப்பா கோபத்தில் தாயை அடிக்கப் போவதைப் பார்த்த நாள் முதல் தந்தையும் பயப் படவேண்டிய நபர் என்று கௌரி ஒதுக்கி விட்டாள்.

அவள் அன்பு செலுத்த மிஞ்சியிருந்த தெல்லாம், மோகினி டீச்சர் ஒருத்தி தான். ஆகையால் குழந்தையின் சிறு உலகத்தில், மோகினியின் முக்கியத்துவம் மெள்ள மெள்ள, மெள்ள. தாய் தந்தையர்க்கும் மேலாக வளரத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து கொண்டு வரும் பலகாரங்களை மோகினிக்குக் கொடுக்காமல் சாப்பிட, கெளரிக்கு மனம் வராது.

அதே போல் மோகினியும், குழந்தைக்கு வீட்டிலிருந்து விதவிதமான பலகாரம் செய்துகொண்டு வருவாள். நாராயணி அம்மாள்மீது மோகினி வைத்த அன்பு ஒருவிதம். அறியாப் பருவத்தில் ஆதரவு காட்டிய தாய் என்ற நன்றி உணர்ச்சி அது. ஆனாள் கௌரியிடம் எதையும் பெற்றுக் கொள்ளாமல், எதையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டினாள். கௌரியின் முகத்தில் ஆரோக்கியம் ஒளி வீச, அவள் உடலில் பலம் வளர வளர, மோகினி, தன் அன்பால் போதனையால் குழந்தை பலமடைந்து வருகிறது என்று பெருமைப்பட்டாள். நாராயணி அம்மாளிடம் வீடு திரும்பியதும். கௌரியைப்பற்றித்தான் பேசுவாள். தோட்டத்தில் பழுத்த பழங்களைக் கௌரிக்கென்று துணியில் சுற்றி எடுத்துச் செல்வாள். இதைக் கண்ட நாராயணி அம்மாள் சிரிப்பாள்.

“என்ன மோகினி! கல்யாணம் ஆவதுக்கு முன்னாடியே உனக்கு ஒரு பெண் கிடைச்சுட்டா. அதுவும் பணக்கார வீட்டுப்பெண். ஆனால் பணக்கார வீட்டுப் பெண்ணிடம், அன்பு செலுத்தற்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். பார்த்துக்கோ,” என்று சொல்வாள்.

நாராயணியின் எச்சரிக்கையை மோகினி புரிந்து கொண்டுதான் இருந்தாள். குழந்தை கெளரி எவ்வளவோ முறை காரில் வரும்படி அழைத்தும் மோகினி காரில் ஏறியதில்லை. கௌரி ஓரிருமுறை மோகினியின் வீட்டுக்கே வருகிறேன். என்று சொன்னபோது, மோகினி, குழந்தையின் மனம் புண் படாமல் காரணம் சொல்லித் தடுத்திருக்கிறாள். கௌரி பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்படுவதற்குத் தயங்கி நிற்பாள். டீச்சருடனேயே இருந்து விடலாம் போல் இருக்கும் கௌரிக்கு.

மாதவன், “அம்மா திட்டுவாங்க. வாங்க பாப்பா. போகலாம்”. என்று வற்புறுத்தி அழைப்பான்.

கௌரி புறப்படமாட்டாள். மோகினியின் அருகிலேயே தயங்கி நிற்பாள். டீச்சர் வற்புறுத்தின பிறகுதான் வீட்டுக்குப் புறப்படுவாள். கௌரிக்கென்று புதிது புதிதாகத் தந்தை வாங்கிக் கொடுத்த கௌன்களை, டீச்சர் பார்த்து மகிழ வேண்டுமென்றும் பள்ளிக்கு அணிந்து வருவாள். மோகினியும் குழந்தையின் மனத்தில் உள்ள ஆசையைப் புரிந்துகொண்டு, ”கௌரி! இந்தக் கெளன் உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு. இந்தக் கலர் பிரமாதம்…” என்றெல்லாம் மற்றக் குழந்தைகள் இல்லாத சமயத்தில் புகழுவாள்.

கௌரி மகிழ்ந்து போய் விடுவாள். ஒரு நாள் கௌரி, “ஏன்டீச்சர்! நீங்க அடிக்கடி புடவை, ஜாக்கெட் மாத்தாமல் வர்ரீங்க? உங்ககிட்டே இதைத் தவிர வேறு புடவை இல்லியா?” என்று திடுக்கிடும்படியாகக் கேட்டாள்.

“உனக்குப் பணக்கார அப்பா இருக்கார். புதுசு புதுசா வாங்கித் தர்ரார்…”

“உங்களுக்கு அப்பா இல்லையா டீச்சர்?”

“எங்கப்பா செத்துப் போய்ட்டார் கௌரி.”

“எங்கப்பாவிடம் சொல்லி, உங்களுக்குப் புடவை, ஜாக்கெட் வாங்கித் தரட்டுமா டீச்சர்?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் மோகினிக்கு வெட்கமாக இருந்தது. என்ன பதிலைச் சொல்வது என்றும் புரியவில்லை.

“கௌரி! உங்கப்பா உனக்குத்தான் வாங்கித் தரணும். எனக்கு வாங்கித்தரக் கூடாது அது பார்த்தா நல்லாருக்காது.”

“எங்கப்பா, இந்த ஊருக்கே துணி வாங்கிக் கொடுக்கக்கூடிய அளவுக்கு, அவர் கிட்டே பணம் இருக்குன்னு மாதவன் சொன்னான் டீச்சர்.”

“இருந்தாலும், அது சரியில்லே கெளரி. எங்கிட்டே சொன்ன மாதிரி, உங்கப்பா, அம்மாக்கிட்டே சொன்னா, அவுங்க என்னைத் தப்பா நினைப்பாங்க. உன் அன்பு ஒன்றே எனக்குப் போதும் கௌரி,” என்று சொல்லிவிட்டு மோகினி கெளரியை அன்போடு அணைத்துக் கொண்டாள்.

இன்னொரு நாள் கௌரி கேள்வி கேட்டு மோகினியைத் திண்டாட வைத்துவிட்டாள். “ஏன் டீச்சர்! நான் பிறந்ததனாலே என் அம்மாவுக்குக் கால் போச்சுன்னு, அம்மா சொல்றாங்களே, அது எப்படி டீச்சர்?” என்று கேட்டாள்.

மோகினி, “நீ பிறக்கறப்போ ஏற்பட்ட பிரசவ அதிர்ச்சியிலே கால் போயிருக்கும். அதுக்கு நீ காரணம்னு சொல்ல முடியாது கௌரி,” என்றாள்.

“பிரசவம்னா என்ன டீச்சர்?” என்று கௌரி திடீரென்று கேட்டாள்.

அந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை மோகினிக்கு. யோசித்தாள், பிறகு ஒருவாறு சமாளித்து, “குழந்தை பிறக்கிறதுக்குப் பேரு பிரசவம்”, என்றாள். “குழந்தை எப்படிப் பிறக்கிறது டீச்சர்?”

கௌரியின் இந்தக் கேள்வி மோகினிக்குக் கோபத்தையே உண்டாக்கியது. “கௌரி! நீ சின்னப் பொண்ணு. இந்த மாதிரித் தேவையில்லாத கேள்வியை யெல்லாம் கேட்கக் கூடாது,” என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

“ஏன் டீச்சர் கோபிச்சுக்கறீங்க? உங்களுக்குக் கேள்விக்குப் பதில் தெரியல்லைன்னா, தெரியல்லைன்னு சொல்லுங்களேன். எனக்குத் தெரியும் டீச்சர்,” என்று சொன்னதும், மோகினி ஆச்சரியத்தோடு கௌரியைப் பார்த்தாள்.

கௌரி பெருமையோடும் கம்பீரத்துடனும், “டீச்சர்! நல்லாக் கேட்டுக்குங்க. அப்பாவுக்குக் கோபம் வந்து அம்மாவை அடிச்சுட்டா, குழந்தை பிறந்துடுமாம். எங்கப்பா பலசாலி. அம்மாவை, ஓங்கிக் காலிலே அடிச்சிருக்காங்க. அதனால் நான் பிறந்துட் டேன். ஆனால் அம்மாவுக்குத்தான் கால் போயிட்டது”, என்று கூறினாள்.

இதைக் கேட்டு மோகினிக்கு ஆத்திரம் வந்தது. “இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க?” என்று கேட்டாள்.

“மாதவன் சொன்னான் டீச்சர்,” என்று கெளரி பதில் சொன்னாள்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *