கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 15,805 
 
 

” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி வழிந்தது.

” என்னங்க வண்டியை துடைக்க ஆரம்பிச்சிட்டா அதிலேயே உட்காந்துவிடுவிங்களே…?” அந்த பிசாசை எழுப்பி குளிக்க வைங்க.

ஹாட் பேக்கை பைக்கில் மாட்டி கொண்ட தினேஷ், ” ரேவதி எட்டாயிடுச்சி.. நான் கிளம்பறேன்.. ஈவ்னிங் அம்மா வருவாங்க ஏதாவது வீட்டுக்கு வேணும்னா போன் பண்ணு..”

பூஜாவிற்கும் , தனக்கும் லஞ்ச் பேக்கை ரெடி பண்ணி, கிச்சனை துடைத்து டைம் பார்க்க மணி எட்டறை ஆகியிருந்தது.” கடவுளே இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பனுமே.. பதறியவள், இன்னமும் மெதுவாக குளித்து கொண்டிருந்த பூஜாவை சத்தம் போட்டாள்.

” கழுத எவ்வளவு நேரம் குளிப்ப.. சீக்கிரம் ரெடியாகி டேபிள்ல இருக்கறதை சாப்பிட்டு கிளம்பு…”
அரக்க பரக்க குளித்து வருவதற்குள் பூஜா கேட்டை பூட்டி சாவியை வீசிசென்றிருந்தாள். இவளும் எதையோ மென்று அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

‘குழந்தையை கூட ஒழுங்கா கவனிக்க முடியலையே….’ சாயந்திரம் அலுப்போடு வீட்டை அடைந்தாள்.

பூஜா பாட்டியோடு பேசிக்கொண்டிருந்தாள்.

“பாட்டி.. டாடியோடு உனக்கு நாலு பசங்க.. நீ அப்பாவை எப்படி கூப்பிடுவே…?

” உங்கப்பாவை நானும் , தாத்தாவும் ஆசையா ‘ ராசான்னு’ கூப்பிடுவோம்.

” சித்தப்பாவை…?”

” சின்ன துரைன்னு.. ஏன் கண்ணு இதெல்லாம் கேட்கற…?”

” நான் ஒரே பொண்ணுதானே.. பூஜான்னு அழகா பேர் வச்சிட்டு என் பேரே எனக்கு மறந்துடுச்சி …எப்ப பார்த்தாலும் கழுதை, எருமை மாடு இப்படிதான் கூப்பிடறாங்க….”

பெரிய மனுஷியாட்டம் பீல் பண்ணி பேசிய பேத்தியை பார்த்து சிரித்த விசாலாட்சி,”குட்டிம்மா பாட்டி வீட்டில இருந்தேன் டென்ஷன் இல்லாம பசங்களை வளர்க்க முடிஞ்சது. அதுக்காக உங்க அம்மாவுக்கு பாசம் இல்லன்னு நினைச்சுக்க கூடாது. உங்க அப்பாவோட செருப்பு
அறுந்து போனாக்கூட தைச்சிதான் போட்டுக்க சொல்வேன். ஆனா, இப்ப உனக்கு எவ்வளவு செருப்பு, டிரஸ் கேட்டதெல்லாம் கிடைக்குது. இதுக்கெல்லாம் காரணம் உங்கம்மாவும் வேலைக்கு போறதாலதானே..? அதுக்கு உங்கம்மா எவ்வளவு கஷ்டபடறா
தெரியுமா..? நீ சீக்கிரம் எழுந்து சின்ன சின்ன உதவி எல்லாம் செய்யலாம் இல்லையா…?”

” ஆமாம் பாட்டி !” என்றவள் ரேவதியை பார்த்ததும் ” தண்ணி குடி மம்மி…” ஓடி
வந்து டம்ளரை நீட்டினாள்.

நன்றியோடு மாமியாரை பார்த்தாள் ரேவதி.

– 16-07-2011

usha உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *