கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2025
பார்வையிட்டோர்: 186 
 
 

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்று மாலையே, அவர்களுக்குத் தந்தி கொடுத்து விட்டான். ஆனால் அக்கம் பக்கத்தில், ஒருவருக்கும் சொல்லவில்லை. ஒருவருக்கும் தெரியவில்லை. காலை ஒன்பது மணி வண்டிக்குத்தான் அவர்கள் வர முடியும். ‘யார் வந்தென்ன இப்போது-‘

நேற்று, எதிர்பார்த்த காரியமே போன்று, மனமும் நன்றாகவே இருந்தது. இரவு நன்றாகத் தூங்கினான். சூரியன் உதயமான பின்பே எழுந்தான். அவளுக்கு மிக அருகிலே, தான் படுத்திருப்பதை உணர்ந்தான். சிறிது ஆனந்தம் கொண்டான். அவள், தன் அருகில் படுத் திருப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டு, பயந்து எழுந்து வாயிலிற்குச் சென்றான். சிறிது நேரம் திண்ணையில் நின்றுகொண்டு, மேலும் கீழும் பார்த்துவிட்டு, உள் சென்றவன் ரேழியைக் கடக்காமலே, திரும்பி வாயிற் படியில் வழிமறைத்து, விதியைப் பார்த்து நின்றிருந்தான்.

அவனை எப்படியோ, தாண்டித்தான், அவன் எதிரில் அவள் நின்றாள். அங்குமிங்கும் அசைந்து நின்று தோன்றினாள். அவன் கருவிழிகள், அவளைத் தொடர்வதே போன்று, சலித்து நகர்ந்து, சிற்சில சமயம் கண்களின் மூலையில் சொறுகி மறையும். திரும்பியும் அவளை இழுப்பது போல் விழி நடுவில் பதியும். அவன் மூளையும், யோசனைகளும், உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன.

எல்லை கொள்ளா சாவதானம், சமாதானம், ஒருநிலை வரம்பிற்கு எட்டாமல் இருபுறமும், சிறிது சிறிது மிக அசைந்து, சஞ்சலப் பிரமை கொடுத்தன. அந்த நிலைமையில் சமாதானம் கொண்டவன் போன்று, சாவதானமாக, வீதியை உற்றுநோக்கி அவன் நின்றான்.

காகம் ஒன்று, எதிர்வீட்டு, முன்கீற்றுச் சார்பில் பறந்து வந்து உட்கார்ந்தது. தத்தித்தத்திப் பறந்து, மாடிக் கைப்பிடிச் சுவரின்மீது உட்கார்ந்தது. விருந்தினர் வருகையைக் கத்தி அறிவித்தது. ‘ஆமாம், ஒன்பது மணி ரயிலுக்குத்தான் அவர்கள் வருகிறார்கள்-‘ அது கத்தியது. சிறிது தூரம் பறந்து அந்தத் தென்னை மரத்து மட்டையின் மத்தியில் உட்கார்ந்தது. உடனே பறந்து மறைந்து விட்டது. மறுபடியும் எதிரில் வீதிதான்…

வடக்கத்தியான் சவுக்கைக் கட்டை வண்டியை ஓட்டிச் சென்றான். பாரவண்டியின் பளு உழலல் – சுழலும் சக்கரம், இருசுக் கட்டையில் மோதுண்டு சுழல மனமில்லாது ஓலமிட்டமும் சப்தத்தின் சலிப்பு. கொம்பு இல்லாத இரண்டு மாடுகள் முன் பூட்டப்பட்டு வண்டியை இழுத்தன. அசட்டை, அலுப்பு, தலை ஆட்டல் வழி நடப்பல்ல. கழுத்தில் மணியற்று, சலங்கையற்று, மாடுகளின் சப்தம் பளு இழுப்பின் தலை அசைப்புத் தான், இவன் கண்முன் தோன்றியது. பளுக்கொடுக்கும், அக்கட்டைகளும் பின்னால்தான் இருந்தன. ஆனால், மூக்கணையில் இரு புறமும் கால்கள் தொங்க, கையில் சாட்டை கொண்டு, குறுகிய சிறு துணி இடுப்பில் கட்டி, மாடுகளை ‘ஹை-ஹை’ என்று உதைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரனின் தோற்றத்தை நடுவில் கண்டான்.

“ஏன் இவன் தெரிகிறான். மாடுகளும், அவன் ‘வா’ வென்ற தலை அசைப்பும், பளு மிகுந்த காட்டு விறகுகளும் சுழலும் சக்கரமும் போதாதா அர்த்தம் கொள்ள இவைகள் போதாதா – என் பளுவை யார் ஓட்டுபவன்? அவனா – அவனா? எவன்?

“அவள் உள்ளே கிடக்கிறாள். படர்ந்த பிரபஞ்சத்தின் மூலையில் ஒன்றி மறைய…

“பளு இழுக்க ‘வா’வென்று தலை அசைத்து நடக்கும் மாடுகள் மசையில்லாது சலிப்புற ஊளையிட்டமும் சப்தம், சுழலால் சக்கரம் உதைய குலுங்கிடும் வண்டியே! எவ்வளவு தூரத்திலிருந்து வருவது? எவ்வளவு தூரம் எத்தனை பேருக்கு, தத்தம் மனநிலையில் உன் தத்துவத்தை உணரத் தோன்றி ஊர்ந்து வருகிறாய். மறைந்து தொலைந்து போ! உன் மறைவு, நிகழ்ச்சியைத் தெரிவித்து யோசனை கெடுக்கும் மறைவு, ஆனந்தமே.”

வீதியில் அசட்டையாக நடந்துபோன அந்த ஆடு, வண்டியினால் மறைக்கப்பட்டு அது கடந்தபின் தோற்றம் கொண்டது, அதைப் பார்த்து நின்றான்.

அவனுக்குப் பசி தோன்றவில்லை.

காய்த்துப்போன தோளில் உறைபட்டு மிருதுவாகத் துவளும், மூங்கிற் கம்பின் இரு முனைகளிலிருந்து இரண்டு மண் குடங்கள் தொங்கின. கத்திக் கத்திக் கொண் டொருவன், குடங்களிடையே, தோன்றி மறைய நடந்தான். அவன் கண் முன்பு தெரிந்தது வெற்றுக் குடம் போன் றிருந்தது. அது தொங்கிய முனைக்குச் சிறிது தூரத்திலே தான், அக்கம்பைத் தோளில் தாங்கி இருந்தான். மெதுவாக, வெகு சமீபத்திலும் பூமியில் பட்டு அமுத்தலில் அசைந்து, அக்குடங்கள் மேலும் கீழும் ஆடின. வெற்றுக் குடமாயினும் சிறிது அதிக ஆட்டத்தில் பூமியில் தட்டி அது உடைபட்டால், பின்தொங்கும் பிறிதொன்றை மேன் நோக்கிக் கவிழ்த்துப் பாழ்படுத்தும் என்பதை உணர்ந்து அதை வெகு உன்னிப்பாய் பார்த்துச் சென்றான். அதை நெருங்குவதே போன்று மிக விரை வாயும் நடந்தான். பின்னால் பின்னால், வெகுசமீபமாக தன் காலடியிலும் தட்டுப் படாது தொடர்ந்து வரும் அக்குடம் மதிக்கத்தக்கதே வெகு அருமையானதே! ஆயினும் அவன் பார்வையைக் கொள்ளமுடியவில்லை. சிறிது ஆறுதல் தானே, எதிரில் வெற்றுக்குடம் என்பதில்!-

அவனுக்குப் பசி தோன்றவில்லை. பதனிக் குடக்காரனும் குடத்திடைத் தோன்றி மறைந்துவிட்டான். “எதிரில் மறையாது அவள் ஏன் நிற்கிறாள். மறைய மாட்டாளா? எதிரில் தோன்றிய வண்ணமே மறைவு கொள்ளவில்லை! மாறித்தான் தோற்றம் கொள்ளுகிறாள்! விறகு வண்டி, ஆடு, மனிதன், மாறி மாறித்தான். ஒருவரும் பேசுவது இல்லை. ஒன்றும் சப்தம் செய்யாது? ஆனால் உணர்ச்சிகள் ஊடுருவித் தோற்றம் கொள்ளுகின்றனவே – காண்பது கனவா?

ஒரு மனிதன் தெருவில், வீட்டைக் கடந்து சென்றான். இடுப்பில் கட்டியிருந்த பட்டை ‘வார்பெல்ட் தெரியவேண்டி. பளபளப்பு நார்ப்பட்டுச் சட்டையை உள்ளிட்டு, இடுப்பில் வெளுப்புவேட்டி அணிந்திருந்தான். ‘ஸாக்ஸோடு’ போட்டிருந்த அந்த இரண்டேகால் ரூபாய் ‘பூட்ஸ்’ நன்கு வெளித் தெரியவேண்டி, கீழே தொங்கும் வேஷ்டி இரு முனைகளையும் முழங்கால் வரையிலும் தெரிய, இரு கைகளில், பிடித்துக் கொண்டு நடந்தான். அடிக்கடி பக்கங்களைப் பார்த்து, வேகமாக நடந்தான். பச்சை உருமால் ஒன்றை, இடது தோளில் கீழே நழுவி விழும் தோரணையில், அலக்ஷியமாகப் போட்டிருந்தான்.

“அவன் சிங்கப்பூரிலிருந்து வந்தவன்! இப்போது தானோ-? அவன் பளபளப்புகளும் உடனே மறைந்து தானே போகிறது. அவன் கிடக்கிறான். சீ, சீ எவ்வளவு சிரிப்பு உண்டாகிறது!”

கண்முன் கண்ணாடி அணுப் பூச்சிகள், பறந்து மேலே போகிறதே. அதோ-அதோ! தென்னை மரத்தின் தலை தானோ – மாமரம்-? சீ சீ! அந்த மொட்டை மாடி வீடுதான் நிற்கிறது. மேலே மரங்கள் அப்படித்தானோ! அந்தக் கருமையான சிறு மேகங்கள் மரங்களின் மேலே தங்கவில்லையா? அவைகளை விட்டு, நடுவில் நீல நிறத்தைப் பூசி மேலே போகிறது. எதோ எல்லாம் ஒருங்குகூடி ஒருமித்த சதி செய்கின்றன. என்னையும் கூட்டி இழுக்கின்றன. மறைகின்றன. தோன்றுகின்றன மாயையாக மாறுபட்டுத்தான் போலும்.

‘ஆமாம்-எதிரில் இருக்கிறாளே-நிற்கிறாள். ஆனால் நகருகிறாள்.பக்கத்தில் மறையவா-அவள் என் பார்வையில் நகர்ந்து மறையவா-? மாறுபடவா- இல்லை. பக்கத்தில் இல்லை. மேலும் கீழும்தான்.”

எதிரில் அவ்வீடு, எதிரில் அவ்வீட்டின் தாழ்ந்த சார்ப்பு. மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவர். சுவரின் கீழ் சாளரத் துளைகள். மேலே மரங்களின் தலைகள், இன்னும் மேலே நீலவானத்தில் சிதறிய சிறு மேகங்கள்.

எதிரில் வீதிதான்-

“பாரவண்டி-பதனிக்குடம். மறைவு காலத்தில் எதிரே அந்த நிற்கும் வீடுதான்! அவளும் மறைகிறாள்- எதிரில் பார்த்த அவளும்-நில்லு! நில்லு!! மறையாதே- சீ சீ, இல்லை-மாறுகிறாள் என மனதில் தானோ-மாறுகிறாள்!… மாறுதல்(?) …மறைவது போன்று பக்கத்தில் ஒதுங்கு கிறாளே…”

அவன் கண்கள் நேராகத்தான் நின்றன. கருவிழிகள் அவளைத் தொடர்ந்ததே போன்று கண்களின் மூலையில் மறைந்தன. அப்படியே வழி மறைத்து நின்றான். எதிர்பார்த்து நின்றான் – எவ்வளவு நேரம்? திரும்பி இழுக்க அவன் கருவிழிகள் தோன்ற…

உள்ளே அவள் கிடந்தாள். எதிரே வீதி..

இவன் தாயார் வந்தாள். இவன் தகப்பனார் வந்தார் – அவர்களும் வந்தனர். ஒன்பது மணி ரயிலில், வேறாகவே வந்தனர். தனித்தனியே தத்தம் எண்ணங்களில் மன முடைந்து மௌனமாகவே வந்து சேர்ந்தனர். இவன், கருவிழி தோன்ற, எதிர் விழிப் பார்வையில், வழி மறைத்து வாயிற்படியில் நின்றிருந்தான்.

அன்னை முன்னடைந்து, அவனைக் கட்டிக் கொண்டாள். “என் கண்ணே – உனக்கும் இப்படியா?” என்றாள். தழுவிக் கொண்டு அழுதாள்.

சொருகி மறைந்த கருவிழிகள், நடுவில் ஓடி வந்தடைந்தன. அழுகை முன் காணும், அவக்களை அசட்டுச் சிரிப்பை அவன் சிரித்தான். “எப்படி? அவள், மாறினாளா’- ‘மறைந்தாளா’ -என்பதைத்தான் வாய்விட்டுச் சிரித்தான் போலும், தாயாரும் அழுகையை நிறுத்தி விட்டாள். அவன் முகத்தைப் பார்த்தாள், பார்த்தவள் அப்படியே பார்த்து நின்றாள்.

அவர்கள், பக்கத்து வீட்டுப் புறத்திற்குச் சென்று மறைந்து கொண்டார்கள். எதிரில் தோன்ற முடியாது, தாங்க முடியாது வருந்தி, மறைந்து நின்றார்கள். இவன் தாயாரைத் தழுவி அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். படுத்துக்கிடந்த அவளைக் காட்டினான். காலால், சிறிது அவளைத் தொட்டு உதைத்து, எழுப்பச் சிரித்தான். இப்படியாக வெகு நேரம் இல்லை. அம்மா, குனிந்து, கீழே அவள் மீது விழுந்து கதறினாள்.

மறைந்த அவர்களும் வந்து, திண்ணையிலும் உள்ளிலும், உட்கார்ந்தனர். மேல் துணியைக் கையில் எடுத்து, அதன் மேல் முகத்தை மறைத்துக் கொண்டு விசனத் தோற்றத்திலேயே விளங்கினர்.

இவன் அழுதான். சொல்லிச் சொல்லி விடாது அழுதான். என்னவெல்லாமோ சொல்லி அழுதான். ஆனால் கண்டானோ இல்லையோ, மறைந்ததையோ மாறுதல் கொண்டதையோ, சொல்லாமலே அழுதான்.

அடுத்த வருஷம் தைக் கடைசி வெள்ளிக் கிழமையன்று, தாயார் சுமங்கலிப் பிரார்த்தனை செய்தாள். சிரத்தையாக பன்னிரண்டு மணிவரையில் ஈரப்புடவை யுடன், காரியம் செய்து முடித்தாள். தள்ளாத அந்த வயதிலும் முழுவதும் தானாகவே செய்து வைத்தாள்.

முதல் இலையில் பலகை போட்டு, புதுப் புடவை வைத்து பிறகு, எல்லாப் பெண்டுகளும் உட்கார்ந்தனர்.

அப்போது அம்மா கண்ணீர் விட்டுத் தேம்ப ஆரம்பித்தாள். வேகமாக அறையினுள் சென்று மறைந்துவிட்டாள். சென்ற வருஷம் ஈன்ற அந்த பசுங்கிடாரிக் கன்றைக் குனிந்து தழுவிக் கொண்டு ரொம்ப அழுது கொண்டிருந்தாள். அவள் ஈரப்புடவையும் காய்ந்து விட்டது. கன்றும் கழுத்தை வளைத்து முகத்தை அவள் முதுகிலே வைத்து சாந்தமாக நின்றது.

சுமங்கலிப் பெண்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அம்மா பந்தி விசாரிக்க உள்ளே வந்தாள்……

அவன் பட்டினத்தில், தன் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தான். எதிரே மேஜைமீது விரித்த புஸ்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தான். எதிரே நோக்கியபோது, ஜன்னல் வழியாக, எட்டி நின்ற ஒரு மரம் தெரிந்தது. அதன் தலைமேல் தங்கி நின்ற ஒரு சிறு மேகமும், மேல் சென்று மறைந்து விட்டது. ஒரு பெரு மூச்செரிந்து, குனிந்து எழுத ஆரம்பித்தான். ‘தலை எழுத்தையா மாற்றி எழுதப் போகிறேன் – தலை எழுத்தைத்தான் எழுதுகிறேன்’ என்று எழுதினான்.

எதிரே வீதி, அதை அவன் அப்போது பார்க்கவில்லை.

– மணிக்கொடி 1937

மௌனி மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *