மாரிமுத்துவும் எலுமிச்சங்காயும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 7,717 
 
 

மாரிமுத்துவின் வாய் அகல திறந்திருந்தது. அதில் நான்கு இட்லிகளை ஒரே நேரத்தில் செருகிவிடலாம்! அவனது கால்கள் நகர மறுத்தன. கண்கள் வைத்தக் கண் வாங்காமல் அந்த எலுமிச்சங்காயையே துளைபோட்டுக்கொண்டிருந்தன.

இன்று காலை வீட்டுக்கதவைத் திறந்து பார்க்கும்போது முதலில் எதிர்பட்டதே அந்த எலுமிச்சங்காய்தான். அப்பச்சை உருண்டைப்பந்து ஆடாமல் அசையாமல் மாரிமுத்துவுக்கு ஈடாக நின்று முறைத்துக்கொண்டிருந்தது.

கோமளம் மாரிமுத்துவின் முதுகில் ஓங்கி அறைந்து “தெ, தள்ளிப்பே!” என்றாள். அறை வாங்கிக்கொண்டு தள்ளி நின்றான் மாரிமுத்து. எப்போதும் கோமளத்திடம் அறை வாங்கினால் மூஞ்சை சூம்பிய போக்கனா மாதிரி வைத்துக் கொள்ளும் மாரிமுத்து இன்று அதைக்கூட மறந்திருந்தான்.

காலுரையை பாதத்திலிருந்து சிலுவாருக்கு மேல் முழங்கால் வரை இழுத்துப் போட்டு கொண்டு ரப்பர் பேண்டை காலுரையின் வாய்ப்பகுதிக்கு ஏற்றிவிட்டுக்கொண்டாள். கித்தா நீங்கியிருந்த காலுரை அடிக்கடி கீழே இறங்காமலிருக்க எல்லா எஸ்டேட் மக்களும் செய்யும் அன்றாட நடவடிக்கைதான் அது. மூக்கை உரிஞ்சும் தோரணையில் சுருக்கிக்கொண்டு மூச்சை தம் கட்டி காலில் அட்டை ஏறாமலிருக்க பைகோன் ஸ்ப்ரே அடித்துக்கொண்டிருந்தாள். ஸ்ப்ரேயின் காட்டம் போனதும் மூச்சை அவசராமக விட்டுவிட்டு அடுத்தடுத்த மூச்சை இழுத்து இழந்த மூச்சுக்கான கணக்கைச் சமன்செய்துகொண்டிருந்தாள் கோமளம்.

மாரிமுத்து இன்னமும் நகரவில்லை.

இதுவரை மாரிமுத்துவை இந்த உலகில் ஒருத்தருமே மதித்தது கிடையாது. இது மிகப்பெரிய சாதனையாக எடுத்துக் கொள்ளலாம் தான். மாரிமுத்துவுக்குத் தன் சாதனையை உணரும் புத்திதான் இல்லையே. கோமளம் மட்டும் மனைவி என்கிற பேருக்கு மரியாதை கொடுத்து முதுகில் அறைவதோடு அவ்வப்போது நிறுத்திக்கொள்வாள். மாரிமுத்துவுக்கு அந்த மரியாதை போதாதா?

இன்று காலையிலேயே அந்த மரியாதையும் போயிருந்தது. கோமளம் பக்கத்தில் கிடந்த மாரிமுத்துவின் செருப்பை எடுத்து அவன் மீது வீசியடித்தாள். பதிலுக்கு மாரிமுத்து கண்களை மட்டும் கோமளத்தின் மீது வீசினான். அடுத்த செருப்படி வேணுமா என்று அவள் கேட்பது போன்ற பிரம்மை வந்து போனது. “இந்தா கெளம்பிட்டேன். யேன் காலைய்லையே சண்டைய ஆரம்பிக்கிற?” மாரிமுத்துவின் குரலில் தொடங்கும்போது இருந்த வேகம் முடியும்போது தன்னாலேயே குறைந்துபோனது.

காலுரையை எடுத்து மாட்டிக்கொண்டு காலணியில் காலை நுழைத்துக்கொண்டான். மோட்டார் பைக் சாவியைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துத் திருகி உதைத்தான். கோமளத்திடம் உலக்கையால் அடிவாங்கினால் எப்படி உதருவானோ அந்த மாதிரி பைக் உதரித் திமிரி ஸ்டார்ட் ஆனது.

வாசலில் இருந்த எலுமிச்சங்காய்க்கு ஒரு மீட்டர் தள்ளி வண்டியை நகர்த்தி கோமளத்துக்காக நின்றுகொண்டிருந்தான். கோமளம் ஏறியதும் விருட்டென வரும் சக்தியில்லாத அந்த வண்டியை வேகத்துக்கு முறுக்க கோமளத்தின் வலதுகை மாரிமுத்துவின் மண்டையில் குட்டு விட்டு சூட்டைக் கிளப்பியது. ஆவென்றான் மாரிமுத்து. “அதான் இந்த முக்கு முக்குதுல்லே? அப்பறம் என்னா இப்பிடி போட்டு முறுக்கிக்கிட்டு இருக்க? வண்டி ஒரேடியா போச்சுன்னா அப்பறம் வாய்ல விரல வச்சிகிட்டு சூப்பவேண்டித்தான்!” கங்காணியே தேவலாம்; அவனைவிட மோசமாக ஏசிக்கொண்டிருந்தாள் கோமளம். தன்னுடைய பாரத்தையே இழுக்கக் கஷ்டப்பட்டுகொண்டிருக்கும் வண்டியில் கருணையே இல்லாமல் மாரிமுத்துவும் கோமளமும் சவாரி சென்றனர்.

வீட்டு வாசலில் இருந்த எலுமிச்சங்காய் மாரிமுத்துவின் மண்டையோட்டினுள் உருண்டு கொண்டிருந்தது. காலையில் அதைப் பார்த்துப் பத்து நிமிடத்துக்குள்ளாகவே ஏகப்பட்டச் சிக்கல்கள் மாரிமுத்துவுக்கு. சந்தேகம் வலுவானது. எவனோ செஞ்சிவச்சிட்டான்!

தீம்பார் முழுக்க எலுமிச்சங்காயைப் பற்றிய சிந்தனைதான். எப்போதுமே சம்மந்தமே இல்லாத ஒன்றை லொடலொடத்து வாங்கிக்கட்டிக்கொள்ளும் மாரிமுத்து அன்று மட்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கணக்காக யோசித்துக்கொண்டிருந்தான்.

எவன் வெச்சான்? எப்போ வெச்சான்? ஏன் வெச்சான்?

மாரிமுத்துவின் ‘வளர்ச்சி’ யாருக்கோ பிடிக்காமல் போயிருந்திருக்கலாம். அவனை வளரவிட்டால் மற்றவர்கள் பிழைப்பை நடத்தமுடியால் போய்விடுமோ என அஞ்சியிருந்திருக்கலாம். அல்லது வசியம் செய்து அவனை வைத்துத் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய நினைத்திருக்கலாம். மாரிமுத்து ஓய்வின்றி யோசித்துக்கொண்டிருந்தான்.

கோமளத்துக்கு அன்றைய காலை சுபமாக இருந்தது. கூடவே கொஞ்சம் பயம். இரண்டுக்கும் காரணம் மாரிமுத்துவின் அமைதி!

“யோவ், யேன் காலைல இருந்து கொள்ளுக்கட்ட தொண்டையில சிக்கிட்ட மாதிரி முழிச்சிக்கிட்டுருக்க?”

“ஒன்னும் இல்ல. யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”

“அதெல்லாம் மூள உள்ளவங்க பண்றதாச்சே. நீ எதுக்குப் பண்ணிகிட்டு இருக்க?” சாய்ந்தாற்போல் வளர்ந்திருந்த செம்பனை மரத்து வேரில் தலைக்கட்டுத் துண்டை விரிப்பாய் போட்டு உட்கார்ந்தபடி கேட்டாள் கோமளம். உண்மையிலேயே மாரிமுத்து யோசிக்கிறேன் என்று சொன்னதை அவள் நம்பவில்லை.

மாரிமுத்து ஒன்றும் சொல்லவில்லை. “அட, என்னாத்த யோசிச்சிட்டு இருக்க? சொல்லேன். அது என்னாதான்னு கேக்கனும்னு எனக்கு ஆர்வம் பொங்குது,” கோமளம் செம்பனை உதிரிக்கொட்டையை எடுத்து அவன் மேல் விட்டெரிந்தாள். “சொன்னா நீ ஏசுவ. விடேன்,” என்றான் மாரிமுத்து. இன்னொரு தடவை அவள் மீண்டும் கேட்டால் சொல்லலாம் என்று கொஞ்சம் பிகு காட்ட நினைத்திருந்தான். ஆனால், கோமளம் ரொம்ப நல்லதாப் போச்சு என்று வாயை மூடிக்கொண்டு கையுரையைக் கழற்றி முகத்துக்குக் காற்று வீசிக்கொண்டிருந்தாள்.

எலுமிச்சங்காயைப் பற்றிச் சொல்லச்சொல்லி அவனது வாய் நம நமத்துக் கொண்டிருந்தது. அவள் கேட்காவிட்டால் என்ன? நாம் சொல்லுவோம் என்று மாரிமுத்துவே வீட்டு வாசலில் பார்த்த எலுமிச்சங்காயைப் பற்றி சொன்னான்.

“தூ!”

மாரிமுத்துவின் முகம் சூம்பின போக்கனாவானது. தன்னுடைய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் மாரிமுத்து தவித்துக் கொண்டிருந்தான். அது எவனோ செய்வினை செய்துவைத்த எலுமிச்சங்காய் என எப்படியாவது நிரூபித்துவிடவேண்டும் என பல சத்தியங்களை போட்டுவைத்துக்கொண்டான். கேவலம் சத்தியம் இலவசமானதுதானே!

உச்சி வெயில் செம்பனைத் தோட்டத்தையே துவலவைத்திருந்தது. இரண்டு மணிக்கு மேல் யாரும் தாக்குப்பிடிக்கமாட்டார்கள். ஒரு சிலர் கிளம்ப ஆரம்பித்ததும் இவர்களும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

மோட்டார் பைக் கதறியது.

வண்டி வீட்டு வாசலை அடைந்திருந்தது. காலையில் பார்த்த எலுமிச்சங்காய் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் நகர்ந்து வீட்டில் இடது பக்கவாக்கில் நின்றிருந்தது. இடம் மாறியிருந்தாலும் மாரிமுத்துவின் மீதுள்ள அதன் சீற்றம் குறையால் அவனையே முறைத்துக்கொண்டிருந்தது.

“பாத்தியா! நான் சொல்லல? தோ இந்த எலுமிச்சங்காதான். இதுக்கு என்னா சொல்ற?” பேச்சு பேச்சாக இருந்தாலும் எலுமிச்சங்காய் மீதான முன்னெச்சரிக்கையோடு ஒரு மீட்டர் இடைவெளி விட்டுச் சுற்றி வளைத்து வாசலில் கால் வைத்தான். கோமளம் எலுமிச்சங்காயைப் பார்த்துப் புருவங்களைச் சுறுக்கினாள். அவள் ஏதோ யோசித்திருக்கக்கூடும். அந்த இடைவேளையில் மாரிமுத்து எலுமிச்சங்காய் மீதான மேலும் சில கருத்துக்களை உருவாக்கிக்கொண்டிருந்தான்.

வீட்டு முற்றத்து வாங்கில் உட்கார்ந்து காலணிகளிடமிருந்து காலை விடுவித்துக்கொண்டிருந்தாள் கோமளம். “பவுனூ! இங்க வாம்மா!” வீட்டுக்குள் குரலை மட்டும் அனுப்பினாள். பவுனு வெளியே ஓடிவந்தாள்.

“சோறு சாப்டியா?” கேள்விக்கு “ம்” பதில்.

“சாம்பார சூடு காட்னியா? கேள்விக்கு “ம்” பதில்.

“தம்பி தூங்குறானா? கேள்விக்கு “ம்” பதில்.

“வீட்டுப்பாடம் இருக்கா? கேள்விக்கு “ம்” பதில்…

எலுமிச்சங்காயைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது இப்பத்தான் சோறு சாப்டியா, தூங்கினியான்னு…. மாரிமுத்து எரிச்சலானான். “கோமளம், இதுக்கு ஒரு வழி சொல்லு. எனக்கு என்னம்மோ பாண்டியன் மேலத்தான் ரொம்ப சந்தேகமா இருக்கு. நீ என்னா சொல்றே?” கருத்து கேட்டான் மாரிமுத்து.

“இவரு பெரிய தொர! இவருக்கு செஞ்சி வேற வெக்கிறாங்களாக்கும்!” கோமளம் மாரிமுத்துவை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை; எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை. மாரிமுத்து என்ன ரகம் என்பதைக் கல்யாணமாகி மூன்று நாள்கள் கழித்துத் தெரிந்துகொண்டதுதான் இப்போது அவனோடு கொட்டிக் கொண்டிருக்கும் குப்பைக்குக் காரணம். ஒரு வேளை கல்யாணத்துக்கு முன்னமே தெரிந்திருந்தால் எவனாவது ஊமையைக் கல்யாணம் செய்திருப்பாள்.

இவள் கேட்கமாட்டாள் என்று மாரிமுத்துவுக்கு ஏற்கனவே தெரியும். இருந்தும் அப்போது இன்னொருமுறை பட்டு தெரிந்து இனி தானே காரியத்தில் இறங்கியாகவேண்டும் என்று முடிவெடுத்தான். கழற்றிய காலணியை மீண்டும் போட்டுக்கொண்டு, “பவுனூ! யாரும் இந்த எலுமிச்சங்காய தொட்டுபுடாதீங்க! தெரிதா? தம்பி எந்திரிச்சான்னா அவண்டயும் சொல்லு. கைய்யக் கிய்ய வச்சீங்க, அப்பறம் ரத்தவாந்திதான் எடுப்பீங்க! தெரிதா?” கட்டளையிட்டான். பவுனு திருதிருவென விழித்தாள். அவளது விழித்திரையில் புகையைக் கிளப்பிவிட்டு பைக்கில் பறந்தான் மாரிமுத்து.

வேகமாக கிளம்பினான்; ஆனால், எதற்காகக் கிளம்பினோம், யாரைப் பார்க்கக் கிளம்பினோம் என்ற யோசனை ஏதும் இல்லை. ரோட்டின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டு யோசித்துக்கொண்டிருந்தான். சரி, பூங்கவியைப் பார்க்கலாம்!

பைக் பூங்கவி வீட்டைத் தேடி ஓடியது. பயண நேரத்தில் பூங்கவியிடம் என்ன கேட்கலாம் என்று மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருந்தான். விவகாரம் ரொம்ப பெரியது. அதைப் பக்குவமாகக் கையாளவேண்டும். அதையும் மாரிமுத்து யோசித்துக்கொண்டுதான் இருக்கிறான்.

வண்டி பூங்கவி வீட்டு வாசலில் நின்றது. “பூங்கவீ!” பைக்கை விட்டு இறங்காமல் குரல்விட்டான். மாரிமுத்து வந்தால் சமயங்களில் பையனை விட்டு தான் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடுவதுண்டு பூங்கவி. அது மாரிமுத்துவுக்குத் தெரியும் அதனால்தான் பைக்கிலிருந்து இறங்காமலேயே கூவினான்.

பையன் வந்தான். “அப்பா வீட்ல இல்ல” என்றான்.

“டேய், இப்பத்தான் உங்கப்பா குரலு கேட்டுச்சு! நீ இல்லன்றே?”

“ஐயோ! வேலைக்குப் போய்ட்டு வந்து நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்க முடிதா பாரு?” பூங்கவி முனுமுனுத்துக்கொண்டு எழுந்தான். “எப்பப் போவான்னு தெரிலியே. கண்ணு வேற எரிச்சலா இருக்கு…” என்றான் உதடுகள் அசையாமல்; “வா மாரிமுத்து” என்றான் உதடுகள் அசைய.

“எப்படி புடிச்சேன் பாத்தியா! மாரிமுத்துவா கொக்கா! நம்மள ஏமாத்த முடியுமா?” தனக்குத் தானே அவார்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

பீடிக்கட்டிலிருந்து ஒரு பீடியை உருவிவிட்டு பையனை லைட்டர் எடுத்துவரச்சொல்லி முற்றத்தில் பிளாஸ்டிக் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டான். மாரிமுத்து மோட்டார் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவிட்டு நாற்காலியில் உட்காருவதுபோல சீட்டில் உட்கார்ந்துகொண்டான்.

“சொல்லு மாரிமுத்து…” லைட்டர் இன்னும் வந்துசேரவில்லை எனும் கடுப்பு அவன் பேசும் தொனியில் தெரிந்தது. அது மாரிமுத்துவுக்கு மட்டும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எலுமிச்சங்காய் விவகாரத்தைச் சொன்னான்.

பீடியைப் பற்றவைத்து அது முடியும் தருவாய்க்கு வந்திருந்தது. வந்த தூக்கம் மாரிமுத்துவைக் கண்டதும் ஓடிவிட்டிருந்தது. தலைவலி லேசாகக் கடுக்க மாரிமுத்துவின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“… நல்லவேளை எம்பொண்ணு அந்த எலுமிச்சங்காயத் தொட்டுருப்பா! தொட்டு ரத்தவாந்தி ஏதும் எடுத்துத் தொலைச்சான்னா? தொட்டுடாதேன்னு சொல்லிட்டு…” மாரிமுத்து முடிக்கவில்லை. ஆனால் பூங்கவியின் பீடி முடிந்திருந்தது. கங்குத்துண்டைத் தூக்கியெறிந்துவிட்டு “கடைசியா என்னா சொல்ல வரே?” என்றான்.

“அந்தப் பாண்டியனுக்கு பதிலுக்கு ஏதாவது செய்யனும் கவி!”

“என்ன செய்யனும்?”

“அதான் தெரியலயே… நீ சொல்லு”

“இந்தப் படுபாவிக்கிட்ட கைமாத்தா நூறு வெள்ளி வாங்குனதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். என் புத்திய செறுப்பால அடிக்க! கைநீட்டி வாங்குன கையில சூடு வைக்க!” பூங்கவியின் கண்கள் கண்ணீரைச் சுரக்கலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றன. “நாளைக்கு யோசிச்சுச் சொல்றேன். இப்ப நீ போ” என்றான்.

மாரிமுத்துவுக்கு இன்னமும் சமாதானமாகவில்லை. “நீ மட்டும் அந்த எலுமிச்சங்காயப் பாத்திருந்தன்னு வைய்யேன்? ஹ்ம்ம்ம்…” அந்த எலுமிச்சங்காய் மாரிமுத்துவின் மண்டையில் அபார சக்தியைப் பெற்றுக்கொண்டே போனது.

“சரி போ மாரிமுத்து. யோசிச்சு நாளைக்குத் தீம்பார்ல சொல்றேன். இப்ப நீ போ,” என்றான். இன்னொரு பீடி அவன் உதட்டிற்குப் போனது. கீழே விழுந்துவிட்ட லைட்டரை குனிந்து எடுத்து அப்படியே தானும் எழுந்து கொண்டான். மாரிமுத்து ஏதோ சொல்ல வந்தான். பூங்கவி இருமியபடி வீட்டுக்குள் நுழைந்துகொண்டான். மாரிமுத்து அங்கிருந்து கிளம்பியதும் இருமலை நிறுத்திக்கொண்டான்.

எதையாவது செய்யவேண்டும் போல் இருந்தது மாரிமுத்துவுக்கு. ஆனால் என்னத்தைச் செய்வது என்றுதான் தோன்றவில்லை. முனியன் வீட்டுக்குப் போகலாம் என யோசனை வந்தது. பின் அதை உடனடியாக கைவிட்டான். காரணம் வேரொன்றுமில்லை. அவன் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவான்.

வேறு எந்த யோசனையும் தகுந்த நேரத்தில் வந்து மாரிமுத்துவுக்குக் கைகொடுக்கத் தயாராய் இல்லை. வண்டி வேண்டாவெறுப்பாக வீட்டுக்குப் போனது.

வீட்டு வாசலில் இருந்த எலுமிச்சங்காயைக் காணவில்லை. மாரிமுத்துவின் வாய் அகலப் பிளந்தது. கண்கள் வெளியே பிதுங்கிவரத் துடித்தன. “பவுனூ! பவுனூ!” மாரிமுத்துவின் வயிற்றிலிருந்த ஜீரணமாகாதவை காற்றைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தன. பவுனு ஓடி வந்தாள். “இங்க இருந்த எலுமிச்சங்காயத் தொடாதேன்னு சொல்லிட்டுத்தானே போயிருந்தேன்! எங்க அது?” மாரிமுத்து தைரியமாக பவுனிடம் அதட்டிக் கேட்டான். அவனது அதட்டலுக்கு மரியாதை கொடுக்கக் கடவுளாகப் பார்த்து படைக்கப்பட்ட ஜீவன் பவுனுதான்.

“நான் எடுக்கல. அம்மாதான் எடுத்தாங்க.” பவுனு நெளிந்துகொண்டிருந்தாள். “அம்மாவா?” மாரிமுத்துவும் நெளிந்தான். எலுமிச்சங்காயை நினைத்து பயப்படுவதா அல்லது கோமளத்தை நினைத்து பயப்படுவதா என்று புரியாமல் உள்ளே நுழைந்தான். மாரிமுத்துவின் நிம்மதி மட்டும் வெளியே நின்றுவிட்டது.

கோமளம் சமையற்கட்டில் தட்டுமுட்டுச் சாமான்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். மாரிமுத்து நகத்தைக் கடித்துக்கொண்டு பக்கத்தில் போய் நின்றான். கையில் சவர்கார நுரையோடு இருந்த கரண்டியால் வாய்க்குச் சென்றிருந்த விரலில் பட்டென வைத்தாள். “நகத்தக் கடிக்காதன்னா… அசிங்கமா!” மாரிமுத்து அடிவாங்கிய விரல்களை உதரிக்கொண்டான்.

கொஞ்சம் பின்னால் தள்ளிப்போய் சமையற்கட்டின் எந்த மூலையில் எலுமிச்சங்காயைக் கோமளம் வைத்திருக்கிறாள் என்று தேடினான். குப்பைத் தொட்டியில் பிழிந்து போட்ட எலுமிச்சைத் தோல் மட்டும் கண்ணில் அகப்பட்டது. “எலுமிச்சக்கா!” மாரிமுத்து அலரினான்.

“அந்த எலுமிச்சங்காவ பிழிஞ்சு உனக்கு ஜூஸ் போட்டு வச்சிருக்கேன். போய் எடுத்துக் குடி” என்றாள் அவன் முகத்தைப் பார்க்காமலேயே. பார்த்தால் அவள் சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்துவிடும்.

“ஜூஸா? நானா? ஐயோ அது செய்வின செஞ்சுவச்ச எலுமிச்சக்கா. நான் குடிக்கமாட்டேன்.” மாரிமுத்து ஆச்சாபோச்சா என்று அலற ஆரம்பித்துவிட்டான். கோமளத்துக்குச் சிரிப்பு போய் கடுப்பு வர ஆரம்பித்துவிட்டது.

“தெ! காமாச்சியம்மன் வெளக்கு தேய்க்க நான் தான் நாலு எலுமிச்சக்காய் வாங்கியிருந்தேன். ஒன்னு கீழ விழுந்துருக்கு. செய்வினையாம் மண்ணாங்கட்டியாம்… போ! போய் வேற வேல வெட்டி இருந்தா பாரு. இந்தப் பக்கம் வந்த… கரண்டியடிதான்” என்றாள் கோமளம்.

“இதக் கட்டிக்கிட்டு நான் படுற இம்சை இருக்கே!” என்று இருவரும் தங்களுக்குள்ளாகவே அலுத்துக்கொண்டார்கள்.


இவர்களுடைய குடும்பமும் ஓடிக்கொண்டுதான் இருந்தது…

– மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2013ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *