மாய ரொட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 432 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலை நெருங்கியதும் தென்னரசு கதவைத் திறந்துவிட்டான். கோவிந்தம்மாள் மெல்ல வீட்டிற்குள் சென்றாள்.

தென்னரசு சாரளக் கதவுகளைத் திறந்து திரையை ஒதுக்கிவிட்டான். வீட்டிற்குள் புதிய காற்று வீசியது; வீடெங்கும் வெளிச்சம் பரவியது. கோவிந்தம்மாள் மெத்தையில் போய் அமர்ந்தாள். தென்னரசு தலைய ணையை சரித்துவைத்தான். கோவிந்தம்மாள் சாய்ந்து கொண்டாள். பக்கத்தில் கிடந்த மற்றொரு தலையணையை எடுத்து வயிற்றில் வைத்துக்கொண்டு, தென்னரசைப் பார்த்தாள். அந்த அன்புப் பார்வைபட்டு அவன் உள்ளம் பூரித்து முகம் முழுநிலாவாக மாறியது வாங்கி வைத்திருந்த நாரத்தம் பழங்களில் ஒன்றை எடுத்து உரித்துக்கொடுத்தான். கோவிந்தம்மாள் நாரத்தம் பழச்சுளையைச் சுவைத்துத் தின்றாள்.

கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்துவிட்ட செய்தி அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் பத்துப் பதினைந்து நிமி டங்களில் பரவிவிட்டது. எப்போது பார்த்தாலும் தொணதொணத்துக்கொண்டிருக்கும் எதிர்வீட்டுக்காரி வந்துவிட்டாள். அதையடுத்து வெற்றிலையைச் ‘சவக் சவக்’ என்று மென்று கொண்டிருக்கும் வெற்றுவேட்டு வெற்றிலை பாக்குக்காரியும் வந்துவிட்டாள்.

வந்தவர்கள் நலம் கேட்டனர்.

“கேட்டியா சேதிய நீ மருத்துவமனையில் இருக்கும் போது உன் மகன் தென்னரசைச் சாப்பிடக் கூப்பிட்டேன். தம்பி வரவேமாட்டேனு சொல்லிப் பிடுச்சு’ என்று சொற்களை மென்று தள்ளியது வெற்றுவேட்டு வெற்றிலை பாக்கு.

“பொண்ணுகளைப் பார்த்தா உன் மகன் தென்னரசு வெக்கம்ல படுது… நல்ல தம்பி. பெண்களே வெட்கம்- மானம்-நாணம் இல்லாமேத் திரியுற இந்தக் காலத்துல இந்தத் தம்பி இப்படி வெக்கப்படுகிறதே! நாளப் பின்னே கலியாணம் காச்சி ஆனா எப்படித்தான் கூச்சம் இல்லாமல்பேசபோகுதோ” என்றாள்தொணதொணப்பு.

”இந்த வெட்கம் அப்போது இருக்காது” என்று வெற்றிலைபாக்குக்காரி பல்லில் உத்தினி சுண்ணாம்பை வைத்துக்கொண்டு சொன்னாள்.

அவர்கள் தன் மகன் தென்னரசைப் பற்றிப்பேசும் ஒவ்வொன்றும் கோவிந்தம்மாள் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. தன் மகன் அத்துணை பதிவுசா இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள்.

அப்போது அங்கு அங்கம்மா வந்துவிட்டாள் “என்ன கோவிந்தம்மா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று பஞ்சடைந்த கண்களால் பார்த்துக் கேட்டாள்.

“அப்படித்தான் இருக்கு. இப்ப என்ன மருத்துவ மனையில் கவனிச்சா பார்க்கிறாங்க. கையில் துணியக்கட்டி காத்தடிச்சுப் பார்த்தாங்க; ரத்தத்தை எடுத்துக்கிட்டுப் போய்ப் பார்த்தாங்க. பிறகு மாத்திரையை அள்ளிக் கொடுத்துத் திங்கச் சொன்னாங்க. நல்லாச் சாப்பிட்டா எல்லாம் சரியாப் போயிடும்ணு சொன்னாங்க. என்னால் என்ன சாப்பிடவா முடிகிறது” என்றாள் கோவிந்தம்மாள். அச்சமயம் அங்கம்மாள் மனத்தில் இப்படி ஓடியது. ‘வரக்கோப்பியைக் குடிச்சிட்டுக் காசு சேர்க்கும் இவள் எங்கே நல்லா வாங்கிச் சாப்பிடப்போறா? வரக் கோப்பியைக் குடிச்சுக்குடிச்சு குடல் சுருங்கிப்போச்சே’ என்று அங்கம்மாள் நினைத்துக்கொண்டாள்.

அது தெரியாத கோவிந்தம்மாள் தொடர்ந்து சொன்னாள்;

“என் மகனுக்குக் காலாகாலத்தில் காலில் கட்டுப் போட்டுட்டா என் உடம்பு தேறிவிடும். இப்ப என்னத்தை வாங்கிச் சாப்பிட்டாலும் உடம்பு தேறாது. இவனுக்குத்தான் இன்னும் ஆறு மாதத்துக்குக் கெட்ட காலம் இருக்குனு சோதிடர் சொல்லி இருக்கிறாரே” என்று இரக்கத்தோடு சொன்னாள்.

“இனி எல்லாம் நல்லபடியா நடந்திடும். பயப்படா தீங்க. அது சரி உங்களுக்குச் செய்தி தெரியுமா?” என்று அங்கம்மாள் கேட்டாள். கோவிந்தம்மாள் விழித்தாள். பேசாமல் வாய் பார்த்துக்கொண்டிருந்த வெற்றுவேட்டு வெற்றிலைபாக்கு “இப்ப ஒரு ரொட்டி கிளம்பி இருக்கே அதைப்பத்தித்தான் சொல்லுறாங்க போலிருக்கு” என் றது. அங்கம்மாள் “அதுதான்” என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தாள்;

“அந்த அற்புத ரொட்டிய ஊரில் இருந்துதான் கொண்டுவந்திருக்காங்க. அந்த ரொட்டிய வாங்கிக்கிட்டு வந்து சீனிபோட்ட தேநீரிலோ, பச்சத் தண்ணீரி லோ போட்டு வைக்கவேண்டும். முதல் நாள் ஊற்றிய தண்ணீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படியே குடிச்சிக்கிட்டு வந்தா எல்லா நோயும் பஞ்சாய்ப் பறந்துவிடும். அதோடு மட்டுமில்லே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த ரொட்டியில் இருந்து இன்னொரு ரொட்டி வரும். அதை எடுத்துக் கேட்கிறவங்களுக்கிட்டே கொடுத்திட வேண்டியது தான் அதை வாங்கிக்கிட்டுப் போகிறவங்க வீட்டிலும் அந்த ரொட்டியில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு ரொட்டி கிளம்பிக்கிட்டே இருக்கும். நான்கூட ஒரு ரொட்டி வாங்கிக்கிட்டு வந்து வைத்திருக்கேன்” என்று அனைத்து நோய் நீக்கியான அந்த அற்புத ரொட்டியைப்பற்றி ஆர்வத்துடன் சொன்னாள்.

“அப்படியா?” என்று வியப்புடன் கேட்டாள் கோவிந்தம்மாள்.

பக்கத்திலிருந்த தொணதொணப்பு, “ஆமா, நிரம்பப் பேர் வாங்கி வச்சிருக்கிறாங்க” என்றது. “தீராத நோய் எல்லாம் தீர்த்து வைச்சிருக்கு; நான் என் கண்ணாலே பார்த்தேன்” என்றது வெற்றுவேட்டு வெற்றிலை பாக்கு. கோவிந்தம்மாள் வியப்புடன் தாடையில் கையை வைத்துக்கொண்டாள்.

“அந்த ரொட்டிய நாற்பது நாளைக்கு மேலே வீட்டில் வைத்திருக்கக் கூடாது; கடலில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும்” என்றாள் அங்கம்மாள்.

கோவிந்தம்மாளுக்கு மருத்துவர்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது. மருத்துவர் கொடுத்த மருந்தை நிறுத்திவிட்டு ரொட்டி நீரைக் குடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். பிறகு தன் எதிரே நின்றிருந்த அங்கம்மாளைப் பார்த்து, “எனக்கொரு ரொட்டி வேணுமே” என்றாள்.

“நான் வைத்திருக்கும் ரொட்டியிலிருந்து இந்த வெள்ளிக்கிழமை ஒரு ரொட்டி வரும் அதை உனக்குத் தந்துவிடுகிறேன்” என்றாள் அங்கம்மாள்.

“அப்புறம் என்ன அதான் தருகிறேனு சொல்லுறாங்களே” என்றது தொணதொணப்பு.

“சொன்னா சொன்னபடி கொடுத்துடுவாங்க” என்று புகழ்ந்தது வெற்றுவேட்டு வெற்றிலை பாக்கு. சமயத்தில் கைமாத்து கேட்கலாம் என்றுதான்.

மங்கையர் மன்றத்தில் அடிபட்ட பேச்சைச் செவி மடுத்துக்கொண்டிருந்த தென்னரசுக்குச் சிரிப்பு வந்து விட்டது. தனக்குள் சிரித்துக்கொண்டான். அதற்குக் காரணம் இதுதான்:-

“அனைத்து நோய் நீக்கியான அற்புத ரொட்டியைப் பற்றி இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சு அடிபடுகிறது. சிலர் வீட்டில் கொண்டுவந்து வைத்து உண்மையா என்று கண்டறிய முனைந்துள்ளனர். சிலர் தெய்வத் தன்மையுள்ள ரொட்டி என்று பயபக்தியோடு நீரைப் பருகி வருகின்றனர். சிலர் நோய் தீர்ந்துவிட்டதாகச் சொல்லுகின்றனர்”. இது வெள்ளிக்கிழமை வெளிவந்த செய்தித்தாள் செய்தி.

“அற்புத ரொட்டியால் நோய்தீரும் என்பது காகம் உட்கார பழம்விழுந்த கதைதான். அற்புத ரொட்டி என்று மக்கள் சொல்வது ஒருவகைக் காளான். இதைக் காளான் என்று பல்கலைக் கழக பேராசிரியர் கூறியுள்ளார்” – இது மறுவெள்ளிக்கிழமை வெளிவந்த செய்தி.

“ரசியாவில் இது நிறைய உண்டாம். நீரையருந்து வோரும் உளராம். ஆனால் அவர்கள் இதை ரொட்டி என்று சொல்வதில்லை. காளான் என்கின்றனர்”- அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை வெளிவந்த செய்தி.

“எங்ஙள்க்கு இது முன்னே அறியும். ரெண்டு கொள் ளத்துக்கு முன்னே யான் கண்டுட்டுண்டு ! இது பாசிக் காளானாநு. இந்தக் காளானைக்கொண்டு ஏழையாயிட்டு இருந்த ஒரு ஆள் பணக்காரனாகி. ஈயாள் இப்போழ் மாடிமேலே மாடிவச்சு வீடு கட்டியிருக்குந்து. இது ஒன் னும் எங்ஙள்க்கு புதுசில்லே பழைய சரக்காநு. இங்ஙே தன்னே இப்போ வந்திருக்குன்னு”- இது கோப்பிக்கடை வைத்திருக்கும் மலபார் காக்காய் சொன்ன செய்தி. அதுவும் ஒரு வெள்ளிக்கிழமைதான் சொல்லியிருந்தார். வெள்ளிக்கிழமைக்கும் ரொட்டிக்கும் ஏதோ தொடர் இருக்கும் போலிருக்கு!

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கட்டிவிட்ட கதை என்று நினைத்துத்தான் தென்னரசு சிரித்தான். அதே நேரத்தில் பேராசிரியர் மறு மருத்துவ அறிவிப்பு வரும்வரை நீரை அருந்த வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதும் அவன் நினைவுக்கு வந்தது. அந்தக் காளானின் நீரை அருந்தவேண்டாம் என்று தன் தாயிடம் சொல்ல எண்ணினான். சொன்னால் சீறிப்பாய்வாங்களே என்று நினைக்கும்போது அச்சமாக வேறு இருந்தது. “நம்பிக்கையும் உயர்ந்த மருந்துதான்” என்று எங்கோ படித்த நினைவு அவனுக்கு வருகிறது. “நம்பிக்கையோடு அருந்தியாகிலும் பார்க்கட்டும். அப்போதாகிலும் நோய் தீருகிறதா என்று பார்க்கலாம்” என்று தன் தாயிடம் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டான்.

வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. எவர் சில்வர் என்று அழைக்கப்படும் வெள்ளித்தட்டில் பயபக்தியோடு பதனமாக-பலர் புடைசூழ-அற்புத ரொட்டி கோவிந்தம் மாள் வீட்டிற்குள் குடி புகுந்தது. மிகத் தூய்மையான மேசைமீது கொலுவீற்றும் விட்டது. கோவிந்தம்மாள் ஆவலாகத் திறந்து பார்த்தாள். சிறிய தோசையளவில், தோசைக் கணத்தில், அதே பருமனில் வண்ணங்கலக் காத ‘ஆக்கரக்கா’வைப் போல இருந்தது. அதைப் பார்த்ததும் கோவிந்தம்மாள் மனம் சில்லிட்டு புதுக் குருதி பாய்வதுபோன்ற உணர்வு பெற்றாள். இது வந்த நேரமாகிலும் நல்ல நேரமாகி நம்மைப் பிடித்திருக்கும் பீடை தொலையட்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

மறுநாள் காலை. அதாவது ‘சனி’க்கிழமை.

கோவிந்தம்மாள் மருத்துவர் கொடுத்த மருந்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு வெறு வயிற்றில் ரொட்டியில் இருந்த நீரை இறுத்துக் குடித்தாள் கோவிந்தம்மாள் மனத்தைவிட அது அவள் வயிற்றுக்குள் குளுகுளு வென்று சென்றது. பிறகு சீனி கலந்த ஆறிய தேநீரை ரொட்டியில் ஊற்றி மூடிவைத்தாள்.

நாலைந்து நாட்கள் நகர்ந்தன. கோவிந்தம்மாள் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். அவள் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி உடம்பிலும் தெரிந்தது.

மறு வெள்ளிக்கிழமையும் வந்துவிட்டது. அதாவது கோவிந்தம்மாள் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க.

“ரொட்டியில் இருந்து மற்றொரு ரொட்டி வரவில்லையே, எங்களை இன்னும் கிரகம் பிடித்து ஆட்டுகிறதே. எல்லார் வீட்டிலும் ரெண்டாக கிளைத்துவந்தது என் வீட்டில் வரவில்லையே” என்று கோவிந்தம்மாள் புலம்பினாள். கடந்த ஒரு கிழமையாக இருந்த மகிழ்ச்சி நொடிப் பொழுதில் பறந்துவிட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று காரணங் கேட்டாள்.

“யாரோ உங்களுக்கு ஏவல் வைத்திருக்கிறாங்க” என்றாள் வெற்றுவேட்டு வெற்றிலைப்பாக்கு.

“இருக்கும் இருக்கும்; இல்லாவிட்டால் ரொட்டி ரெண்டாக மாறியிருக்குமே” என்றாள் தொண தொணப்பு.

“சனியன் சரியாப் பிடிச்சிருக்கு…” என்றாள் அங்கம்மாள்.

இவற்றையெல்லாம் செவிமடுத்ததும் கோவிந்தம் மாள் மனம் தளர்ந்தது; கவலை ஆட்கொண்டது. மனத்திற்குள் இடி விழுந்து கட்டியிருந்த கோட்டையைத் தகர்த்தது.

மறுநாள் காலை தெய்வப் படத்திற்கு முன் நின்று;-

“கடவுளே யாருக்கும் எத்தீங்கும் செய்யவில்லையே கடவுளே! நீ ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்? உன் சோதனைக்கு நான்தானா கிடைத்தேன் என்னை சோதிக்காதே ஐயனே” என்று சொல்லிக் கும்பிட்டாள். பிறகு திருநீறு தரித்துக்கொண்டு ரொட்டியில் உள்ள நீரை இறுத்துக்குடித்தாள்.

மூன்றாவது வெள்ளியும் வந்துவிட்டது. மூன்று வெள்ளி மாறிவிட்டது என்றாலும் ரொட்டியில் எந்த மாற்றமுமில்லை.

உறுதி தளராத கோவிந்தம்மாள் மேலும் உறுதி தளர்ந்தாள். உள்ளத்தின் தளர்வு உடலில் தெரிந்தது. மெலிந்திருந்தாள். காதை வேறு அடைத்துக் கொண்டது. அப்போது மருத்துவர் கொடுத்திருந்த மாத்திரையைப் பார்த்தாள். அற்புத ரொட்டி நீரை நிறுத்திவிட்டு மருந்தைச் சாப்பிடலாம் எனும் எண்ணம் எழுந்தது இருந்தாலும் நம்பிக்கை அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ரொட்டி நீரைக் குடித்துக்கொண்டிருக்கும் போது மருத்துவர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டால் ஏதாவது குறை வந்திடும் என்று பயந்தாள். காலை நேரக் குளிர்வேறு நடுக்கியது. மயக்கமும் அதனுடன் சேர்ந்து கொண்டது. கீழே விழுந்துவிட்டாள்.

அப்போது அங்கு தற்செயலாக வந்த வெற்று வேட்டு வெற்றிலைபாக்கும் தொணதொணப்பும் கோவிந்தம்மாளைப் பார்த்தனர். தரையெல்லாம் வாந்தி எடுத்திருந்த அற்புத ரொட்டியின் நீர் வழணை வழணையாகத் திரண்டுபோய்க் கிடந்தது. இதைப் பார்த்ததும் அவர்கள் பயந்துவிட்டனர். அவர்களுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பக்கத்து வீட்டுக்கு ஓடினர். அன்று வீட்டில் இருந்த பக்கத்து வீட்டுக்காரரை அழைத்துக்கொண்டு வந்தனர்.

அவர் வந்து பார்த்தார். அவர்க்கும் பயம் கண்டு விட்டது. இதற்குமுன் கோவிந்தம்மாளுக்குக் கொடுத்த ரொட்டியிலிருந்து மற்றொரு ரொட்டி கிளைத்து வராததையும், யாரோ ‘ஏவல்’ வைத்திருப்பதையும் கேள்விப்பட்டிருந்த அவரும் பயந்துவிட்டார். இது காற்றுச் சேட்டையேதான் எனும் முடிவுக்கும் வந்துவிட்டார்.

“ஏங்க இப்ப என்னங்க செய்கிறது?” வெற்றுவேட்டு வெற்றிலைபாக்கு கேட்டது.

“இது அதோட வேலைதான். உடனே மந்திரக்காரனிடம் கொண்டுபோக வேண்டியதுதான். வேறு வழியில்லை” என்றது தொணதொணப்பு.

பக்கத்து வீட்டுக்காரருக்கு அது சரியாகப்பட்டது. கோவிந்தம்மாளை மந்திரக்காரனிடம் அழைத்துக் கொண்டு சென்றனர்.

மந்திரக்காரர் மயக்கத்தோடு இருந்த கோவிந்தம்மாளைப் பார்த்துவிட்டு “இது காற்றுச்சேட்டையே தான்” என்றார். பிறகு மந்திர பிறகு மந்திர வினைகள் நடந்தன. அவருக்கு அன்று நல்ல அறுவடையுங்கூட.

மாலை ஐந்தரை மணியிருக்கும்.

தென்னரசு வீட்டிற்கு வந்தான். அவன் எப்போது வருவான் என்று காத்திருந்த வெற்றிலைபாக்கும்,தொண தொணப்பும் அவன் வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை விளக்கினர். அவன் விரைந்து சென்று தன் தாயைப் விரைந்து சென்று பார்த்தான். நிலைமை மோசமாக இருந்தது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அணியமானான். ஆயத்தமான அவனை எல்லாரும் தடுத்தனர்.

“பேய் பிடித்திருக்கிறவளை மருத்துவருக்கிட்டக் கொண்டுபோய் காட்டி புண்ணியமில்லை” என்றாள் வெற்றுவேட்டு.

“பேயைப்பத்தி அவங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றாள் தொணதொணப்பு.

“பிடிச்சு இருக்கிற ஏழரைநாட்டுச் சனியனைப் போக்க வழி பாரு தம்பி” என்றாள் அங்கம்மாள்.

“எதுக்கிட்ட விளையாடினாலும் எச்சிப் பேய்க்கிட்டே விளையாடக்கூடாது” என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

அவர்கள் பேச்சு தென்னரசை குழப்பியது. ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தவித்தான். பிறகு தன் தாயைப் பார்த்தான். அவள் முனகினாள் அவன் மனம் கேட்கவில்லை. உடனடியாக அழைத்துச்செல்ல வேண்டும் என்று எண்ணி மருத்துவமனைக்குக்கொண்டு சென்றான்.

மருத்துவர் கோவிந்தம்மாள் உடம்பை ஆய்வு செய்து பார்த்துவிட்டு உடனடியாக ஊசி மருந்து செலுத்திப் படுக்கையில் போட்டு விட்டார். அவளைப் படுக்கையில் போட்டுவிட்டுத் தென்னரசு காதுகளிலும் இப்படிப்போட்டார்.

“இன்னும் ஒரு மணி நேரம் சுணங்கி இருந்தால் உயிர் பிழைப்பது அரிது” என்று. தென்னரசுக்கு அப்போதுதான் அவர்கள் பேச்சைக் கேட்காமல் உடனே மருத்துவமனைக்குக் கொண்டுவந்தது நல்லதென்று பட்டது. பிறகு தன் தாயிடம் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

இரவு மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. கோவிந்தம் மாளுக்கு நினைவு திரும்பிக்கொண்டு இருந்தது. அந்த அமைதியான வேளையில் மின்விளக்கு வெளிச்சத்தில் எவர்சில்வர் தட்டு மின்னியது. அதை கோவிந்தம்மாள் கூர்ந்து நோக்கினாள். மேலே மூடியிருந்த தட்டு சிறிது ஆடத்தொடங்கியது. ஆட்டமும் கூடிக்கொண்டே வந்து ‘கடகட’ என்று ஒலி எழுப்பியதும் அவள் இதயமும் ஆட்டங்கண்டது.

கடகட என்று ஆடிய மூடி மீவானைப் (எலிக்காப்ட்டர்) போல் மேலெழுந்து பம்பரம்போல் சுற்றியது. பிறகு வீட்டிற்குள் நாலா பக்கங்களிலும் பறந்துசென்று கிணிங் கிணிங் என்று சுவரில் மோதியது. சாரளக் கதவும் தானாகத் திறந்துகொண்டது கதவு திறந்துகொண்ட தும் எவர் சில்வர் மூடி பாய்ந்து பறந்தோடி மறைந்தது. அது வெளியே சென்றதும் கோவிந்தம்மாள் விழிகள் பிதுங்க, நெஞ்சம் பதற அற்புதரொட்டி இருந்த தட்டைப் பார்த்தாள். ரொட்டியிலிருந்து புகைப்படலம் குபுகுபு என்று மேலெழுந்து சற்று நேரத்திற்குள் வீடு எங்கும் நிறைந்துவிட்டது. ரொட்டி ‘ஊ ஊ’ என்று ஒலி எழுப்பிக்கொண்டு தட்டைவிட்டு இறங்கி ஆமையைப் போல் நகர்ந்து வந்தது. கோவிந்தம்மாளிடம் வந்ததும் “நான் யார் தெரியுமா? நான்தான் கடல் பேயின் பேத்தி. கடலிலே பயணம் செய்பவர்கள் என் பாட்டி யைக் கண்டால் உடனே கப்பலை நங்கூரம் போட்டு நிறுத்தி நரபலி கொடுத்துவிட்டுத்தான் செல்வார்கள். நாங்கள் நரபலி வாங்குகிறவர்கள். அதனால்தான் நாங்கள் இருக்கும் நீர் நோயை நீக்குகிறது. நோய் ஏன் போய்விடுகிறது தெரியுமா ? உடம்பு நல்லா இருந்தால் தானே ரத்தம் நிறையக் கிடைக்கும். அதனால்தான் நோயைத் தீர்க்கிறோம். ஆனால் நாங்கள் காத்திருந்து அந்த உயிரை வாங்கிக் கொள்வதற்குள் எங்களை அதா வது நாற்பது நாட்கள் ஆகியதும் கடலில் கொண்டு போய் விட்டுவிடுகிறார்கள். அதனால் நாங்கள் காப் பாற்றிய உயிரை எங்களால் காணிக்கை ஆக்கிக்கொள்ள முடியவில்லை. இனிமேல் நாங்கள் அவ்வளவு நாள் வரைக்கும் பொறுத்திருக்க மாட்டோம். பல்கியும் பெருகமாட்டோம். நோய்களையும் நீக்க மாட்டோம். இனி எங்களுக்கு வேண்டியது உயிர்கள்தாம்” என்று சொல்லிவிட்டு பெரிய உருவமாக மாறியது. அதன் சிரிப்பொலி கேட்டு கோவிந்தம்மாள் நடுநடுங்கிப் போனாள். அவள் கழுத்தில் அது தன் கோரப் பற்களைப் பதித்து நறநறவென்று கடித்தது. கோவிந்தம்மாள் ‘அய்யோ பேய் பேய்’ என்று தொண்டைகமரக் கத்தினாள்.

தாதியர் ஓடிவந்தனர். கோவிந்தம்மாளுக்கு அப்போதுதான் தெரிந்தது கனவு என்று. மருத்துவர் மீண்டும் ஊசி மருந்து செலுத்திவிட்டுப் போய்விட்டார். நள்ளிரவு அமைதியைப்போல் கோவிந்தம்மாளும் அமைதியாகத் தூங்கினாள்.

மறுநாள்.

தென்னரசு தன் தாயை மருத்துவமனையில் போய் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தான். வந்ததும் ரொட்டியைத் தூக்கி எறியவேண்டும் எனும் எண்ணத்தில் திறந்தான். தன் தாய் கனவு கண்டதைப்போல் ஏதும் நடந்துவிடுமோ என்ற அச்சம் அவனுக்குக் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. அச்சத்தோடு திறந்தான். அவனுக்காக வியப்பு காத்திருந்தது. வெளிச்சத்தில் கொண்டுவந்து பார்த்தான். ரொட்டி இருந்த அந்த நீரில் புழுக்கள் இன்பத் தாண்டவம் புரிந்தன.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *