மாயா
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வா! வா!’ என்று அன்றைக்கு வரவேற்ற ஆழித்திரைகள் இன்று போ! போ!’ என்று அவனைத் துரத்தின. ‘மாயாவைப் பார்த்தாலல்லது இவிடம் விட்டுப் போவதில்லை’ என்று திரைகளை எதிர்த்துச் சென்றான் மோகனன்.
“:தடிமுட்டாள்! விரட்டிக் கொண்டே வருகிறேன், அசையக்கூட பணிவு இல்லை. அப்படிக்கல்லவா உன் துணிவு?” என்று குனிந்தவன் நிமிர்ந்தான். அவன் கையிலிருந்து ஒரு கருங்கல் ‘விர்’ என்று பாய்ந்தது. நல்ல காலம்! குறி தவறிவிட் டது. இல்லாவிட்டால் அந்த மண்ணாந்தையின் கதி அதோகதிதான்.
ஆந்தைமேல் மோகனனுக்கு அவ்வளவு கோபமா? அவன் மனதைத் தடவிப் பார்த்தால் விஷயம் தட்டும். மாயாவின் வீட்டை ஒட்டிய அப்பூந்தோட்டத்திலே, சாயுங்காலம் வந்ததும் வழக்கமாக அவன் எழுந்து அவனுக்குச் சாயல் காட்டும் கோயிலல்லவா அது? காதல் தோய்ந்த மதிலிலே ஆந்தை வந்திருந்தால்!
செங்கற் சுவரில்ப்பட்டு ஆந்தை வீற்றிருந்த இடத்திலிருந்து ஒரு பகுதி கீழே இடிந்து வீழ்ந்த தல்லாமல்? மோகனனுக்கு எழுந்த கோபம் அப்பறவையை யாதும் செய்யவில்லை.
மாயா அங்கு வருவாள். வந்தவள் சிவந்த தன் கரங்களால் சுவருக்கு மேலே வரம்பு கூட்டுவாள், அவ்வரம்புக்கு மேலே தங்கம் போன்ற தன் முகத்தை வைத்துக் கும்பம் காட்டுவாள். அப்போதெல்லாம் மோகனன் நினைப்பான், ‘ஆகா! அந்த மதிலிலே ஒரு பகுதி தகர்ந்து விழுந்தால் அவளுடைய எழிலில் ஒரு சிறிது கூடுதல் காண்பேனே!’ என்று. இப்போது அச்சுவர் அமிதமாகவே இடிந்து வீழ்ந்தும் தோட்டத்தில் உடைந்து கிடந்த சட்டி பானைகளையே எட்டிப்பார்க்க நேர்ந்தமையால் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
துன்பத்தை நினைப்புத் தோட்டத்திலே மேய விட்டு அமைதித் தொழுவத்திற்கு விரட்டி வரலாம் என்று வீட்டுக்கு விரைந்தான் மோகனன். வாசற் படியில் காலை வைத்ததும் நாலுகட்டினுள்ளே மனைவி நிற்கக்கண்டு “மாயா! மாயா!” என்று கூவினான்.
‘மாயா எங்கே மறைந்தாள்?’ என மயங்கி நின்ற மோகனன் கேட்ட கேள்விக்கு ”மாயா எப்படி வருவாள் மகனே? அவள்தான் மீளா உலகுக்குப் போய்விட்டாளே!” என்று அவன் தாயின் குரல் சோகத்தில் மிதந்து பதிலாக வந்தது. அதோடு இரவும் வந்தது.
அந்த இரவு முன்பு அவனுக்கு அதுபோல – அடிக்கடி ஏற்பட்டுள்ளது போல பாழும் ஓர் இரவாய் முடிந்தது. முந்திய வருஷம் இதே தேதி, இதே நேரத்திலே தன் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு உல்லாச யாத்திரை போக யத்தனித்துத் தானும் தன் மனைவி மாயாவும் ஆயத்தம் செய்து காதல் தீவிலே அவன் என்றைக்குமே இல்லாத இன்பத்தில் ஆழ்ந்திருந்தான்.
2
பொழுது புலர்ந்ததும் மோகனன் கன்னியாகுமரி கடற்கரையில் காணப்பட்டான். இப்போது அவனுடன் மனைவியுமில்லை. மற்றுமுள்ள உறவினருமில்லை. தனிமையாக அங்கே வந்த காரணம் வந்த பின்புதான் அவனுக்குத் தெரியும். முன்பு தங்கியிருந்த பங்களாவின் வராந்தாவில் போய் குந்தியிருந்தான் அவன். ‘பாழ்’ என்ற பரதேவதை அங்கே நின்றாளே ஒழிய காகம் கூட அத்திக்கு எட்டிப்பார்க்கவில்லை.
கழிந்த ஆண்டு அங்கே எவ்வளவு கலகலப்பு, மாயா எங்கே? குடும்பக் குழந்தைகளுடைய எக்களிப்பு எங்கே? மோகனனின் மனக்களிப்பு எங்கே?
கடற்பூண்டுகள் நிறைந்த அந்த மணற்குன்றில் மாயா வேடிக்கையாக மறைந்துகொள்ள, அவளைக் கண்டுபிடிக்க மோகனனுக்கு வழிகாட்டிய ஒடுங்கி நீண்ட அவளது கால்தடங்களில் ஒன்றுகூட, தன் இரண்டு கண்கள் ஒன்றில் அகப்படாதா என்று திரை வரம்பக்குத் தாழ்ந்து, மெல்லஇறுகி, நிரைத்து நிரைத்துக் கிடந்த கருமண் கலந்த அந்த மணல் பாதையில் மோகனன் நடக்கவும் நடந்தான் என்றால் அவனது அறிவுத் திறன் குன்றியதற்குப் பொறுப்பு மாயா ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
‘மாயாவைக் கண்டது யார்? அவளது காலடியைக் கண்டது யார்?’ என்பன போன்று அருகிலுள்ள தோப்புகளும், கண்கொள்ளப்படாமல் கிடந்த மணற் கூட்டங்களும், விட்டுவிட்டு நின்ற கட்டிடங்களும், அவளை எங்கோ ஒளித்து வைத்து மௌனம் சாதித்தன.
‘வா! வா!’ என்று அன்றைக்கு வரவேற்ற ஆழித் திரைகள் இன்று ‘போ! போ!’ என்று அவனைத் துரத்தின. ‘மாயாவைப் பார்த்தாலல்லது இவிடம் விட்டுப் போவதில்லை’ என்று திரைகளை எதிர்த்துச் சென்றான் மோகனன். கடலின் மேல் தொலையில் சென்று கொண்டிருந்த கப்பலில் எழும்பிய புகையைக்கண்டு ”வந்த வழியின் அழகைக் காண, சென்ற வருஷம் சென்ற நீ, இப்போது கப்பலைப் பிரிந்து வானத்தில் மாயமாகாமல் போகக்காரணம் என்ன?” என்று கேட்டான். அப்போது உக்கிரத்துடன் எழுந்த ஓர் அலை அவனை அடித்துக் கீழே தள்ளிற்று. கழிந்த வருஷம் மாயா அவனுடன் அணைந்து வந்து கொண்டிருந்ததால், இதேபோல் அவன் கீழே தள்ளப்பட்டிருந்த ஓர் விபத்தை அவள் கரங்கள் தடுத்த சம்ப வம் ஞாபகத்துக்கு வர அவனுக்குக் கண்ணீர் வந்து விட்டது. அடுத்தாற்போல் பாய்ந்த திரை அக்கண்ணீரை அடித்துக் கொண்டு போய்விட்டது.
“அடைக்கலக் கடலே! இரக்கமுள்ள மோகனனை இப்படி ஏன் வருத்தினாய்? மாயாவைக் காட்டத்தான் உனக்குமனம் இளகவில்லை! அவள் அழுதகண்ணீரைப் பார்க்க அவனுக்கு உரிமை கிடையாதா? அடித்து அவனைத் துரத்தினாய்! அதோ அந்த மாமரம் அவனுக்குக் கொடுக்கும் அடைக்கலத்தைப் பார்! துளிக்குப் பதிலாகக் கண்ணீரை அருவியாகப் பெருக்க அவனுக்கு அது அவகாசம் தருகிறதே! நேரம் நீண்டால் அந்த அருவி பிரளயமாய் உருவெடுத்து உனது மண் கரையைக் கரைத்து உனது கட்டையே அவிழ்த்து விடப் போகிறதே!”
ஊனையும், உயிரையும் உருக்கி மறைந்துபோன மாயாவுடன் உறைந்து விடலாமென மோகனன் இருக்கையில், அவனை யாரோ பின்னாலிருந்து வாரி எடுப்பதாக அவன் உணர்ந்தான்.
3
”நீ இங்கே வந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்”
“எப்படித் தெரியும்?’
“இது மாயாவோடு நீ விளையாடிக்கொண்டிருந்த இடமல்லவா?”
“ஆம் அப்பா! இருவரும் கீச்சுக்கீச்சுத் தம்பலம் விளையாடிக் கொண்டிருந்தோம். நீ அப்போது எங் களைக் கண்டிக்கவில்லையா?”
“மாயா இவ்வளவு சீக்கிரத்தில் போய்விடுவாள் என்பது தெரியுமா?” என்றுபதிலிறுத்தபோதுதான், தந்தையாகிய அவர் முதற்றடவையாகத் தன் பொ ருட்டுக் கண்ணீர் விட்டதைக் கண்டான் மோகனன். “சற்று இங்கே இருந்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.”
“மனம்போல இரு. நானும் கூட இருக்கிறேன்” என்று தான் கொண்டுவந்த கனிகளை கோபிநாதர் வற்புறுத்தி மோகனனுக்குக் கொடுத்தார். அவற்றை அவன் அருந்தி விட்டு அந்த மாமரத்தின் நிழலில் படுத்ததுதான் தெரியும்.
‘மோகனா எழுந்திரு! மோகனா எழுந்திரு!” என்ற குரல் அவன் நித்திரையை அடித்து விரட்டியது.
4
மகனுடைய விதியை நினைந்து மயங்கியிருந்த கோபிநாதர், கடற்காற்று மண்ணின் மேலே கிடந்த சிப்பிகளை மூடுவதும், மண்ணுக்குள்ளே கிடந்த சிப்பி களைத் திறப்பதுமாகத் தன் திருவிளையாடல்களைக் காட்டிக் கொண்டிருந்ததை நோக்கி இருக்கையில் வைர மோதிரம் ஒன்றை அக்காற்று வெளியே கிளப்பி சூரிய ஒளியிலே அதை ஒளிரச் செய்தது.
மோகனன் மெய்மறந்து நின்றான். உடன் தானே வீட்டுக்குப் போய் அதை எல்லோரிடத்திலும் காட் டவேண்டும் என்று கோபிநாதர் நில்லாத நிலை நின்றார்.
கழிந்த வருஷம் மாயாவின் விரலிலிருந்து அம் மோதிரம் கழன்று விழுந்தது. மோகனனும், அங்கு வந்திருந்த மற்றவரும் எங்கும் தேடினர். தேட வேண்டா இடங்களிலும் தேடினர். கண்ணுக்கு எட் டாமல்ப் போய் அம்மோதிரம் ஓர் குடியைக் கெடுத்து அக்குடியை வேற்றூருக்குத் துரத்திவிட்டது.
மாயா மணப்பெண்ணாக இருந்தபோது விவா கத்துக்கு வந்த விருந்தினரில் ஒரு தனிகரின் மனைவி மணப்பெண்ணுக்கு அழகுகூட்ட அணிவித்த மோதி ரம், விவாகம் கழிந்து இரண்டு மாசங்கள் வரை அவள் விரலில்க்கிடந்துவந்து, குமரி யாத்திரை முடிவ டைந்ததும் உரியவளிடம் ஒப்படைக்கலாமென மெத் தனப்பட்டுக் கிடந்த அம்மோதிரம், மாயாவுக்கும் அவள் பெற்றோர்க்கும் அவ்விதம் மோசம் செய்யு மென்று யாரும் நினைத்ததேயில்லை.
மாயாவின் கல்யாணத்துக்கென தனது சொத் தில் ஒரு பகுதியை விற்று அவள் தகப்பனார், மோதிரத்தின் அடக்க விலையாகிய ஐயாயிர ரூபாயையும் உரியவருக்குக் கொடுத்துத் தீர்க்க, வீட்டைத் தவிர மற்ற சம்பாத்யத்தை எண்ணி மாயா தன்னை கொந்து நொந்து நோய்வாய்ப்பட்டு முடிவில் உயிரையும் விட்டாள்.
மோகனன் மடிமீது மாயா தலையை வைத்து மரிக்கும்போது, “தங்கை லீலா இருக்கிறாள். அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவள் புகன்ற வார்த்தைகளின் பிரகாரம் லீலாவை மணந்துகொள்ள மோகனின் பெற்றோர்கள் அவனுக்கு இடையூறாய் இருந்தனர். அதனால் மாயா வளர்த்த சோகமே அதி கரித்தது. இப்போது அவற்றிற்குப் பரிகாரம் ஏற் பட்டிருப்பதை மோகனன் உணர்ந்து மனப்பூரிப் பால் மௌனம் கொண்டான்.
பொழுது சாய்ந்தது. மோகனன் அவ்வளவு நேரம்வரை தந்தையைத் தன்னுடன் இருத்தி வைத்திருந்தான்.
5
கடலுக்கு நீலக்கனிவு வர வர அதிகரித்தது. “பாவம்! அந்த மனிதர் இந்த மோதிரத்தால், அருமை யான மாயாவைத் தூக்கி யமனுக்குக் கொடுத்து விட்டு மனை வியை ஒரு கையிலும், குழந்தை லீலாவை மற்றக் கையிலும் பிடித்துக்கொண்டு திருநெல்வே விக்குப் போய்விட்டார். ஒருசமயம் பெரிய வர்த்த கராய் விளங்கி, உள்ளூரில் கெட்ட குடியாக வாழ அவர் மனம் ஒருப்படவில்லை” என்ற கோபிநாதர், “மோதிரம் கிடைக்கப் பெற்றால் சொந்த ஊருக்குத் திரும்பவந்து அவர் சந்தோஷமாக வாழ்வாரல்லவா? நீ சொல்லி வந்ததுபோல் உனக்கும் லீலாவைக் கல்யாணம் செய்து கொள்ளலாமல்லவா?” எனவும் மோகனனிடம் சொன்னார். அப்போதுதான் ஒன்பது மாதங்களுக்குப் பின் மோகனனிடம் அரும்பிய சிரிப்பைப் பார்த்தார் கோபிநாதர்.
மாலை மணி ஏழு. அப்போதுதான் இருவரும் குமரிமுனையைவிட்டு தங்கள் நாகர் சோவில் நகருக்குப் புறப்பட்டனர்.
மோகனனுடைய பிரிவைச் சகியாத அலைகடல் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் தன் திரைகளை தூது விட்டு, அவனை அழைத்துவர ஏவிக்கொண்டிருந்தது. நினைத்தது கூடாது போகவே, “அடுத்த தடவை நீ வருமளவும் உன்னைத்தேடிப் புலம்பிக் கொண்டிருப் பேன்” என்று அது பிடிவாதம் கொண்டது.
வரும் வழியில் தந்தையுடன் சர்க்கரைக் குளத்தி லிறங்கினான் மோகனன். அக்குழத்தில் முந்தி, மாயா வுடன் முகங்கழுவப்பெற்ற தண்ணீர் ஆவியாக மாறி ஆகாயத்தில் சஞ்சரித்து மீண்டும் நீராகத் திரிந்து புத்தேரிக் குளத்திலேயே போய் வீழ்ந்து கிடந்தும் பழைய தண்ணீர் அக்குளத்தில் நிலைத்திருப்பதாக எண்ணினான் மோகனன். வழி நெடுக நின்ற மரங் கள் பச்சை இலைகளையும்பழுத்த இலைகளையும்கொண்ட பூர்வ நிலையிலேயே நின்றன. கொட்டாரம் ஊரையடுத்த நெற்பயிர்கள் முன் வருஷத்தைவிட தன் வருஷத்தில் கொஞ்சமேனும் மாற்றம் பெற்றிருக்கவேணுமே! இப் படிப்பட்ட தற்கெல்லாம் மாயா விட்டகன்ற தவிசிலே லீலா கொலுவேறிக் கொண்டிருந்ததே காரணம்.
லீலாவைக் கல்யாணம் செய்தகூட அப் புத்துணர்ச்சி மோகனனை விட்டு அகன்றபாடில்லை. பின்பு ஒருநாள், முன்புபோல தன் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வரும் வழியிலே, இடையில் மருத் துவாமலையில் தங்கியபோது, வெயிலென்றும் பாராது அம்மலையின் உச்சியில், அவ்வுச்சி வேளையில் ஏறி நின்றுகொண்டு லீலாவை இடது கையில் பிடித்த வாறும் வலது கையில் புருவத்துக்கு மேலே ஆகாயத்தை மறைத்தவாறும் சஞ்சீவி பர்வதம் தெரிகிறதா? அதிலேனும் சிரஞ்சீவி மாயாத் தென்படுகி றாளா என்று அவன் நெடுநேரம் நோட்டமிட்டு நின்றான்.
– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.