மாயமான்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 16,291
அப்பாவு செட்டியார் சைக்கிளில் வந்து ‘ஜம்’ என்று இறங்கினார் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த கிராமத்து இளைஞர்கள் சைக்கிளின் பக்கம் நெருங்கி, ‘ஹேன்ட்பாரில்’ சொருகி இருந்த தினப் பத்திரிகையை உரிமையோடு எடுத்து, உலக விஷயங்களில் மூழ்க ஆரம்பித்தார்கள்.
செட்டியார், சைக்கிளை ‘ஸ்டாண்டு’ போட்டு நிறுத்திவிட்டு இந்தப் பக்கம் திரும்பினார். அவருடைய தர்மபத்தினி உலகம்மாள் தண்ணீரும் செம்புமாய் தயாராக நின்றுகொண்டிருந்தாள். செம்பைக் ையில் வாங்கி முகம் கைகால் சுத்தி செய்தார். இதற்குள் அவருடைய மகன் சிவக்கொழுந்து கடையில் இருந்து இறங்கிவந்து சைக்கிளில் உள்ள சாமா £ன்களை ஒவ்வொன்றாய் இறக்கி கடைக்குள் கொண்டு போனான். இந்தக் காரியத்துக்கு அவனுடைய தாயாரும் உதவி செய்தாள்.
செட்டியார் செம்பை வாசல்படியில் வைத்து விட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.
“இப்பத்தான் வர்ரயா? நல்ல எதிர்காத்து” என்று மகனைப் பார்த்து அன்புடன் கேட்டார் வயசாளியான நல்லசிவம் செட்டியார்.
“ஆமா…கைலாசத்தே எங்கே காணோம்?” என்று தன் சின்ன மகளைக் கேட்டார் செட்டியார்.
“பள்ளிக்கூடத்திலிருந்து இப்பதான் வந்து காப்பி சாப்பிட்டது. வெளியே எங்கேயாவது விளையாடப் போயிருக்கும்…”
“கருப்பட்டிச் சிப்பம் என்ன விலை?”
“பய இன்னிக்கி ஏழு ரூபாய் போட்டுத்தள்ளீட்டான்!” என்று சொல்லிக்கொண்டே ‘பக்கெட்’டிலிருக்கும் கச்சாத்துகளை எடுத்து வைக்க ஆரம்பித்தார். செட்டியாரின் தாயார் வடிவம்மாள் இரண்டு தம்ளர்களில் காப்பியைக் கொண்டுவந்து வைத்தார். சாப்பிட்டு முடிந்ததும், கச்சாத்துகளையும் ரூபாய் நோட்டுக்களையும் ஒழுங்குபண்ணி தன் மனைவியிடம் கொடுத்து, பெட்டியில் வைக்கச் சொல்லிவிட்டு, கடைக்கு முன்னால் ‘பேப்பர்’ படித்துக் கொண்டிருந்தவர்களிடம் வந்தார்.
“என்னைய்யா கோவில்பட்டியில் என்ன விஷேசங்கள்?” என்று அருகிலிருந்த ஒருவர் சாதாரண வழக்கமாகக் கேட்டார் செட்டியாரைப் பார்த்து.
“இன்னைக்கி என்ன அங்கே ஒரே கூட்டம், ஜே ஜேன்னு!”
“கூட்டமா…அப்படி என்னைய்யா விசேஷம்?”
“நாசமாப் போச்சு! இன்னைக்கி சுதந்திர தினமில்லே?” என்று பூரிப்போடு சொன்னார் செட்டியார்.
இதற்குள் பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் தொண்டையைக் கனைத்துவிட்டு பலமாகச் சத்தம்போட்டு ஒரு செய்தியை வாசிக்க ஆரம்பித்தார். எல்லோரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்திவிட்டு கவனமாய்க் கேட்க ஆரம்பித்தார்கள்.
“மழை இல்லியே என்று இனி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். புஞ்சைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு சர்க்கார் கிணறு தோண்ட ஒரு கிணற்றுக்கு நானூறு ரூபாய் இனாமாகக் கொடுக்கிறார்கள். புஞ்சை நிலங்களை வளமான தோட்டங்களாக்கி, உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகள் லாபம் அடையக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதுதான் செய்தியின் சாரம். இந்தச் செய்தி அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இனம் புரியாத சந்தோஷம் உண்டானது. ஆனால் அவர்களுக்கு நம்பச் சிரமமாக இருந்தது. செட்டியாரைத் தவிர ஒருவரும் நம்பவில்லை.
“இது என்னய்யா வேடிக்கையா இருக்கு, இது நெசந்தானா?”
“நெசமாவது ஒண்ணாவது எல்லாம் பேப்பர்காரன் விட்ட அவுட்டு! வெறும் டூப்பு!”
“சேச்சே, அப்படி எல்லாம் இருக்காது! இதிலே ஏதாவது கொஞ்சம் நிஜமும் இருக்கும்?”
“நீர் ஒண்ணு! உமக்கு இன்னும் பித்தம் தெளியலெ போலிருக்கே!”
“யோவ், எதையும் ‘பட்’ டெண்ணு நிதானிச்சிரப்படாது. ‘மானாங்காணியா’ பேப்பர்காரன் போடுவானா வேய்?”
“ஐயோ…என் தலையில் எழுத்தா, ஆனானப் பட்டவனுக்கெலாம் கடனே இல்லை என்னுட்டானே! இனாமாகக் கொடுக்க என்ன தெருவிலேயா கிடக்கு?” செட்டியார் பார்த்தார், “ராமசாமி அதை இப்படிக்
கொண்டா” என்று வாங்கி அதைத் தானே உரக்கப்படித்தார். என்ன இருந்தாலும் விவசாயிகளால் நம்பமுடியவில்லை. அவர்களுடைய பேதமையை நினைத்துச் செட்டியார் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
அந்தி மயங்கி எழுந்து மறையும் நேரம் ஆகிவிட்டதால், அந்தக் கோஷ்டி இது சம்பந்தமான பேச்சைப் பேசிக்கொண்டே கலைய ஆரம்பித்தது. செட்டியாரும் வீட்டுக்குள் வந்தார். வீட்டு முற்றத்தில் கிழவர்
குளித்துக்கொண்டிருந்தார். வடிவம்மாள் அவருக்கு முதுகு தேய்த்துக்கொண்டிருந்தாள்.
“தம்பி, நீயும் குளிச்சிறேன் நேரம் காணாதா” என்றார் பெரியவர்.
செட்டியார் “குளிக்கணும்” என்று சொன்னாரே தவிர மனசு அங்கு இல்லை. அவருடைய எண்ணம் எல்லாம் தன்னுடைய புஞ்சை நிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அந்தக் கிராமத்திலேயே கொஞ்சம் செளகரியமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடிய புள்ளிகளில் நம்முடைய செட்டியாரும் ஒருவர். அவருக்கு, செழிப்பான மந்தை நிலம் நாலரை ஏக்கர் உண்டு. மேலும் ஒரு சின்ன கடை ஒன்று அந்த ஊருக்குத் தகுந்தமாதிரி வைத்திருந்தார். நிலத்திலிருந்து வருகிற தானியம் சாப்பாட்டுக்கும் கடையிலிருந்து வருகிற வருமானம் குடும்பச் செலவுக்குமாக வண்டி ஒருமாதிரி ஓடிக்
கொண்டிருந்தது.
இனாமாகக் கிணறுவெட்ட சர்க்காரால் கொடுக்கும் அந்த நானூறு ரூபாயையும் வாங்கி நம்முடைய நிலத்தில் ஒரு கிணறு வெட்டி, அதை நல்ல ஒரு தோட்டமாக ஆக்கிவிட்டால் என்ன? நிறைய வருமானமும் கிடைக்கும், ஏதோ நம்முடைய குழந்தைகுட்டிகளுக்கு பிற்காலத்தில் ஒரு செளகரியம் செய்து வைத்த மாதிரியாகவும் இருக்கும், என்று நினைக்கலானார். தகப்பனார் குளித்து முடிந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தார்.
“நம்ம நிலத்தில் ஒரு கிணறு வெட்டினால், என்ன?” என்று கேட்டார் செட்டியார்.
“கிணறா, அது எதுக்கு? தோட்ட நிலம் என்றால் அதுக்கு நிறைய சிரமப்படவேணும். நமக்கு கடைகண்ணியை நிர்வகிக்கவே நேரம் சரியாக இருக்கு. தோட்டத்திலெல்லாம் சொந்த ஆள் பாடுபட்டால்தான் லாபம் உண்டு. அதோடு அதில் போட்டு எடுப்பதற்கு நிறையப் பணம் வேணும். இதுக்கெல்லாம் நாம் எங்கே போகிறது? இதையெல்லாம் உத்தேசம்பண்ணித்தான் நம்னுமுடைய பெரியவர்கள் அதை அப்படியே புஞ்சை நிலமாக வைத்திருக்கிறார்கள்!”
“பணத்தைப் பத்திக் கவலை வேண்டாம். சர்க்காரிலேருந்து கிணறு ஒன்றுக்கு நானூறு ரூபாய் இனாமாகக் கொடுக்கிறார்கள்.”
“அப்படியா? அப்படி இருந்தாலும் அந்த ரூபாய் காணாதே!”
“காணாதுதான், ஏதோ அவர்களால் கொடுக்கமுடிந்தது அவ்வளவு தான். அதையாவது இனாமாகக் கொடுக்கிறார்களே.”
“இனாமாகக் கொடுக்கவேண்டாம். கடனாகவே கொடுக்கட்டும். குறைந்தது ஒரு இரண்டாயிரமாவது கொடுக்க வேண்டும். நீண்டகாலத் தவணையில். பத்து அல்லது இருபது வருஷத்துக்குள் அதை நாம் திருப்பிக் கட்டிவிடலாம்.”
“இது என்னப்பா நீங்கள் சொல்கிறது வேடிக்கையாக இருக்கே! நம்மதேசத்தில் எத்தனை கிணறுகள் வெட்டவேண்டியது இருக்கும்? எவ்வளவு தொகை ஆகும்? அவ்வளவு தொகையும் அவர்களால் கொடுக்கமுடியுமா? இனாமாகக் கிடைக்கிற நானூறு ரூபாயை வைத்துக்கொண்டு தோண்டவேண்டியதுதான். மீதியை எப்படியாவது போட்டுச் சரிக்கட்ட வேண்டியதுதான். கண்டும் காணாததற்கு கொஞ்சம் கடன் வாங்கினால், வருகிற மகசூலில் கட்டிவிட்டால் போகிறது,”
“என்னமோப்பா உனக்குத் தைரியமாய் இருந்தால் செய். எனக்கும் இத்தனை வயதாகிறது. ஒருத்தன்கிட்டே கடன் என்று கையைக் கட்டி நின்றதில்லை. பகவான் அருளால் நமக்கு அப்படியெல்லாம் வராது.” என்று சொன்னார் பெரியவர்.
சாக்காரிடம் இருந்து ரூபாய் வாங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டது. தாலுகா ஆபீஸிற்கு செட்டியார் நடையாய் நடந்தார். கிராம அதிகாரிகளைச் “சரிக்கட்டு” வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. பணம் வருமா, வராதா என்ற சந்தேகம் பலத்தது. ஆரம்பத்திலிருந்தே கையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் வரை செலவாகி விட்டது. செட்டியாரும் அலுத்தார். கடைசியில் ஒரு நபர்மூலம் உண்மை ‘பளிச்’ சென்று தெரியவந்தது. வருத்தப்பட்டு என்ன செய்ய? செட்டியார் அதற்குப் பணிந்தார். பணிந்துதான் தாமதம். காரியங்கள் கிறுகிறென்று நடந்தது. இப்பொழுது செட்டியார், ரூபாயைத் தேடிச் செல்லவில்லை. ரூபாய் செட்டியாரைத் தேடிவந்தது! ஆனால் எண்ணிப் பார்க்கையில் அவருடைய கைக்குக் கிடைத்தது ரூபாய் முந்நூறுதான்.
கிணறு தோண்ட ஆரம்பித்த செட்டியாருக்கு ரூபாய் முந்நூறும் போன மூலை தெரியவில்லை. ‘சரி, ஒரு ஐந்நூறு கடன் வாங்க வேண்டியதுதான்’ என்று தீர்மானித்தார். ரூபாய்க்குப் பக்கத்து ஊரிலுள்ள முதலாளி அய்யவார் நாயக்கரிடம் போவது என்று முடிவுசெய்தார்.
காலையில் எழுந்து முடிக்கவேண்டிய ஜோலிகளையெல்லாம் முடித்துவிட்டு ராகுவேளையைப் போக்கி நல்லநேரம் சகுனங்கள் எல்லாம் பார்த்து ஸ்ரீமான் அய்யவார் நாயக்கருடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார் செட்டியார்.
அப்போதுதான் நாயக்கர் அவர்கள் எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு, வெள்ளை வேஷ்டியைக் கட்டிக்கொண்டால் எண்ணெய்ச் சிக்கு ஆகும் என்று ஒரு பழைய கண்டாங்கிச் சேலையை வேஷ்டிக்குப் பதிலாக உடுத்திக்கொண்டு அந்தச் சேலையின் மறுகோடியையே தலையில் கட்டி கொண்டைபோல் சுற்றிவிட்டு, நெற்றிக்கு இட்டுக் கொள்ள நாமம் குழைத்துக் கொண்டிருந்தார்.
செட்டியாரைப் பார்த்ததும், “மருமகப்பிள்ளை வாருங்க. மருமகப் பிள்ளை வாருங்க, ஏது வழி தப்பினாப்புலே இருக்கே. இப்படி உக்காருங்க” என்று உபசாரம் செய்தார் நாயக்கர்.
செட்டியார் தன்னைத் தேடி வந்த காரியம் இதுவாகத்தானிருக்கும் என்று யூகித்தும் ஒன்றும் தெரியாதது போல் இருந்தார். பேப்பர் சமாச்சாரங்களிலிருந்து ஆரம்பித்து எங்கெல்லாமோ சுற்றிக் கடைசியாக கடன் கேட்பதில் கொண்டுவந்து நிறுத்தினார் செட்டியார். நாயக்கரோ எல்லாவற்றையும் நாமம் போட்டுக் கொண்டே கேட்டுக்கொண்டே வந்தார்.
“ரூபா வேணுமா, அதுக்கென்ன தாராளமாய் வாங்கிக் கொண்டு போ. மருமகனே, உனக்கில்லாத ரூபாயா?” என்றார்.
செட்டியாருக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ரூபாய் கிடைத்தது விட்டதாக செட்டியாருக்கு எண்ணம்; நாலரை ஏக்கர் நிலம் கிடைத்துவிட்டதாக நாயக்கருக்கு எண்ணம்!
“இன்றைக்கு என்ன புதன்கிழமையா, சரி நாளைக்கு வந்து வாங்கிக்கொண்டு போ” என்றார்.
மறுநாள் நோட்டு எழுதி ‘ரெடியாக இருந்தது. ஸ்டாம்பின்மீது கையெழுத்தைப் போட்டுவிட்டு செட்டியார் நோட்டை வாசித்துப் பார்த்தும் திடுக்கிட்டார். ஐந்நூறுக்கு ஆயிரம் ரூபாயாக எழுதி இருந்தது!
“மாமா இது என்ன…இப்படி” என்று தயங்கினார் செட்டியார்
“அதுக்கென்ன மருமகனே. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்தானே. எவ்வளவு எழுதினால் என்ன?”
“வட்டியும் ஒண்ணுக்கு ஒண்ணேகால் போட்டிருக்கிறீர்களே…” நாயக்கருக்கோ சிரிப்பு வந்துவிட்டது. சத்தம் கேட்காமல் உடம்பு மாத்திரம் குலுங்கச் சிரித்தார்.
“ரூபாய் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்” என்று சொல்லி ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை இரண்டு மூன்று தரம் எண்ணி செட்டியாரிடம் கொடுத்துவிட்டு, தன் தலையைத் தடவிக்கொண்டார்,
நாயக்கர். இது அவருக்கு என்று உள்ள ஒரு பழக்கம்.
கடன் வாங்கியது வீண்போகவில்லை என்று செட்டியார் நினைத்தார். தண்ணீரைக் கிணற்றில் கண்டுகொள்வதற்கும் வாங்கிய கடன் செலவாகி முடிவதற்கும் சரியாக இருந்தது. கிணற்றுக்கு மேல் பக்கம் உட்கார்ந்து செட்டியார் யோசனையில் ஆழ்ந்தவண்ணம் இருந்தார். கடையைச் சரியாகக் கவனித்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. நேரடியான கவனம் இல்லாததால் வியாபாரம் மந்தமாகிவிட்டது; விற்பனையும் குறைந்து போய்விட்டதே, என்ற யோசனையில் பலமாக ஆழ்ந்திருந்தார்.
கற்களைச் சம்மட்டியால் அடித்து உடைக்கிற ஓசையும் கம்பியில் இடைவிடாமல் விழும் சுத்தியலின் ஒலியும் கிணற்றுக்குள் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
கிணற்றுக்குள் இருந்து, “நல்லதண்ணீர், நல்ல தண்ணீர்” என்ற குரல் கேட்டுத் திரும்பினார் செட்டியார். சப்தங்கள் எல்லாம் நின்றன.
“அடிச்சது யோகம் ! அப்படியில்லே இருக்கணும்.”
“சரியான தண்ணி. இப்படித் தண்ணி இந்தப் பக்கத்திலேயே கிடையாது!”
செட்டியார் வேகமாகக் கிணற்றுக்குள் இறங்கினார். ஒருவாய் தண்ணீர் கையினால் அள்ளிக் குடித்தார். அவருக்கு உண்டான சந்தோஷத்துக்கு அளவே இல்லை. நம்மைப் பிடித்த பீடையெல்லாம் இன்றோடு ஒழிந்தது, என்று நினைத்தார்.
ஊறிய தண்ணீர் நல்லதாக இருந்ததே தவிர, அரை ஏக்கர் மகசூல் வைக்கக் காணாது. கிணற்றில் கூலிவேலை செய்பவர்கள், “முதலாளி, தோண்டியது தோண்டிவிட்டீர்கள். இனி ஒருரெண்டு கெஜம்
தோண்டுவதற்கு யோசிக்கலாமா? கையோடு கையாகச் செய்துமுடித்துவிட்டால் தான் நல்லது. யானையை வாங்கிவிட்டு தொறட்டிக்கு யோசிப்பார்களா?” என்றார்கள்.
செட்டியார் சிரித்துக்கொண்டார். “இவர்களுக்கென்ன, சொல்கிறவர்களுக்கு. மாட்டின் புண் வேதனை காக்கைக்குத் தெரியுமா?” என்று நினைத்தார். ஆனாலும் இவ்வளவு பாடுபட்டுத் தோண்டியும் பிரயோஜனம் இல்லாமல் போகிறதே, என்று எண்ணினார்.
வீட்டிற்குச் சென்ற செட்டியார் தன் மகன் சிவக்கொழுந்தை அனுப்பி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீரை எடுத்துவரச் சொன்னார். வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் தண்ணீரைச் சாப்பிட்டு “நன்றாக இருக்கிறதே” என்று வியந்தார்கள். நல்லசிவம் செட்டியாருக்கு மாத்திரம் தண்ணீர் ருசிக்கவில்லை! இதற்குள் இந்த நல்லதண்ணீர் விஷயம் தீபோல ஊருக்குள் பரவிற்று, ஆண்கள் செட்டியாரின் யோகத்தைப்பற்றிப் பேசினார்கள். பெண்கள் தண்ணீர் எடுக்க கிணற்றின்மேல் படையெடுத்தார்கள். தண்ணீரின் அருமை அவர்களுக்கல்லவா தெரியும்?
இதை அறிந்த செட்டியார் பொங்கிப் பூரித்துப்போனார்.
செட்டியாருக்கு இப்பொழுது இரண்டு பிரச்சனைகள் எழுந்தன. புதிதாக ஒரு ஜோடி காளைகள் வாங்கவேண்டும்; கிணற்றை இன்னும் ஆழப்படுத்தவேண்டும். தகப்பனாரிடம் கலந்தார்.
“மகனே, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி செய். கடவுள் விட்டவழி” என்று கூறிவிட்டார். திரும்பவும் அய்யவார் நாயக்கர் வீட்டை நோக்கி நடந்தார் செட்டியார்.
விஷயத்தை அறிந்த நாயக்கர் மிகவும் சந்தோஷம் கொண்டார்.
“மாப்பிள்ளை, குடிதண்ணீருக்குக் கஷ்டப்படுகிற ஒரு ஊரில் ஒரு நல்லதண்ணீர் கிணறு கிடைத்ததே பெரிய தருமம் அல்லவா?”என்று பாராட்டிவிட்டு, ‘சரிதான் கமலைக்கு மாடுகளும், அதுக்கு வேண்டிய
சாமான் போக்குவரத்துக்களும் வேண்டுமென்கிறாய். கிணற்றை வேறு இன்னும் ஆழப்படுத்த வேண்டுமென்கிறாய். இகற்கெல்லாம் குறைந்தது ரூபாய் ஆயிரத்துக்குக் குறையாமல் வேண்டுமே, என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.
“மாமா, அதற்குத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள்தான் அதற்கு ஒரு வழி செய்யவேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பணிவோடு சொன்னார் செட்டியார்.
நாயக்கர், ஏதோ மனசுக்குள் தீர்மானிப்பதுபோல் பாவனை செய்து, தன்னுடைய பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு தீர்க்கமான குரலில், “இப்பொழுது இருக்கிற நிலையில் ஏக்கர் முந்நூறு ரூபாய்தான் பெறும். நாலரை ஏக்கருக்கு, நாமூணா பன்னிரண்டு, அரைசஏக்கருக்கு ஒரு நூத்தி அம்பது. ஆயிரத்தி இருநூறும் நூத்தி அம்பதும், ஆயிரத்தி முந்நூத்திஅம்பது” என்றார். செட்டியாருக்கு ‘திடுக்’ என்றது.
“என்ன மாமா இப்படிச் சொல்லுகிறீர்களே!” என்று தயங்கினார். ஆனாலும் மனசுக்குள் என்ன விலை போட்டுக் கொண்டால் நமக்கென்ன. விலைக்கா கொடுக்கப்போகிறோம், என்று நினைத்து, “என்ன செய்யவேண்டுமென்று சொல்லுகிறீர்கள்” என்றார்.
“அப்பாவு. நான் சொல்கிறதைக் கேள். பேசாமல் நிலத்தையும் கிணற்றையும் அடமானம் செய்து கொடுத்து ரூபாயை வாங்கிக் கொண்டு போ. சம்மதம் இல்லையென்றால் வேறு எங்காவது ரூபாய் கிடைத்தால் மகராஜனாக வாங்கிக்கொள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நான் கொடுத்த ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிடு” என்றார். செட்டியாரால் என்ன சொல்லமுடியும்?
“நல்லது, நீங்கள் சொன்னபடியே அடமானம் செய்து கொடுக்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார். அடமானம் செய்யப்பட்டது. பத்திரத்தில் குடும்பத்தில் உள்ள எல்லோரும் கையெழுத்துப் போட வேண்டுமென்றார் நாயக்கர். நல்லசிவம் செட்டியாரிடம் பேனாவைக் கொடுத்தார்கள். கைகள் நடுங்க கையெழுத்துப் போட்டார்.
செட்டியாரிடம் பேனாவைக் கொடுத்தார்கள். “தனக்காகவும் மைனருக்காகவும்” என்று எழுதி கையெழுத்துப் போட்டார். ரூபாய் ஆயிரம் பெற்றுக் கொண்டார். பத்திரத்தில் ரூபாய் இரண்டாயிரத்துக்கு அடமானம் என்று எழுதி இருந்தது!
கழுகுமலை சந்தையில், செட்டியார் இரண்டு செவலைக் காளைகள் பிடித்தார். விலை அறுநூறு ரூபாய். செலவு வேறு. கமலைக்கு வேண்டிய சாமான்கள், கூனை, வடம், வால் கயிறு, மண்வெட்டி முதலிய சாமான்கள் வாங்கி ஆயிற்று. இனி கூனைவால் தைக்கத் தோல் வாங்கவேண்டும். கூடவந்த விவசாயிகளோடு தோல் கடைக்குப் போனார் செட்டியார். தோலின் விலை ஐம்பது ரூபாய் என்று சொன்னான் கடைக்காரன். “என்ன, தோலின் விலை ஐம்பது ரூபாயா என்னய்யா அநியாயமாக இருக்கிறதே. ஒரு கூனைக்கு வேண்டிய தோல் ஐம்பது ரூபாய் என்றால்…”, கூடவந்த விவசாயிகள் செட்டியாரைப்பார்த்துச் சிரித்தார்கள். அதில் ஒரு வயசான விவசாயி “அட பயித்தியக்காரச் செட்டியாரே, விவசாயம் செய்கிறதென்றால் என்னவென்று நினைத்துக்கொண்டீர்? ‘விவசாயி
கணக்குப் பார்த்தால் தார்க்குச்சிதான் மிச்சம்’ என்று சொன்னவன் பயித்தியக்காரனா” என்று கேட்டார். கடேசியில் நாற்பது ரூபாய் என்று சுமாரான தோல் ஒன்று எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்தார்.
கிணற்றை ஆழப்படுத்துதல் முதல், இதர தோட்ட சம்பந்தமான எல்லா ஏற்பாடுகளுக்கும் ரூபாய் ஆயிரத்துக்கும் சரியாக இருந்தது. புதிதாக ஒரு வேலைக்காரனும் நியமிக்கப்பட்டான். அவனுக்குத் தோட்ட சம்பந்தமான எல்லா விஷயங்களும் தெரியும். சாப்பாடு போக மாதம் பத்து ரூபாய் சம்பளம் என்றும் தீர்மானம் ஆயிற்று.
தோட்டத்தில் மிளகுச் செடி நட ஏற்பாடு நடந்தது. அந்தச் சமயம் மிளகு வத்தலுக்கு ஏகப்பட்ட கிராக்கி. பொதி ஒன்றுக்கு முந்நூறு ரூபாய் விற்றது. ஒரு ஏக்கரில் சுமாராக விளைந்தாலும் ஐந்து பொதி விளையும். செட்டியார் தோட்டத்துக்கு வேண்டிய உரங்களைப் பக்கத்து ஊர்களிலெல்லாம் சென்று விலைக்கு வாங்கினார். வாடகை கொடுத்து வண்டிகளில் கொண்டுவந்து சேர்த்தார். மேற்கே ஒரு ஊரில் மிளகு நாற்று வாங்க முப்பது ரூபாய் கொடுத்து ஒரு ஆளை அனுப்பினார். இப்படியாக காரியங்கள் வெகு தடபுடலாக நடந்துகொண்டிருந்தது.
அந்த வேளையில் செட்டியாருக்கு ஒரு சமாச்சாரம் வந்தது. அது உண்மை என்றும் தெரிய வந்தது. சர்க்காரில் “இனாமாகப் பணம் வாங்கிக் கிணறு வெட்டியவர்கள் மூன்று வருஷத்துக்கு மிளகு, பருத்தி
போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடாது. உணவுப் பொருள்தான் சாகுபடி செய்யவேண்டும்”. இப்படி சர்க்கார் அதிகாரிகள் சொன்னார்கள். ‘ஆஹா மோசம் போச்சே’ என்று செட்டியார் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். இந்தப் பேரிடியிலிருந்து மீள அவருக்குப் பல நாட்கள் ஆகியது. தகப்பனார் நல்லசிவம் செட்டியாரோ படுத்த படுக்கையாகிவிட்டார்.
‘சரி’ இனி கேப்பை பயிரிடவேண்டியதுதான், என்று அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். கையிலிருந்த பணமெல்லாம் கரைந்துபோய்விட்டது. கடையில் புரண்டுகொண்டிருந்த பணத்தையும்
எடுத்துச் செலவழிக்கவேண்டியதாகிவிட்டது. கடைவியாபாரம் படுத்து விட்டது. கடை திறந்திருந்ததே தவிர சாமான்கள் ஒன்றும் இல்லை.
கேப்பைப் பயிர் ‘கன்னங்கரேர்’ என்று செழித்து வளர்ந்திருந்தது. பார்ப்பவர்கள் கண்திருஷ்டி போடாமல் இருப்பதற்காக, ஒரு மண் கலயத்தின் மீது சுண்ணாம்பு அடித்து அதன்மேல் கறுப்புப் புள்ளிகள்
குத்தித் தோட்டத்தின் நடுமையத்தில் ஒரு கம்பை ஊன்றி அந்தக் கலயத்தை அதன்மேலில் கவிழ்த்தி வைத்தார் செட்டியார்.
பயிர் பொதிவுக்கு வந்த சமயத்தில் கிணற்றில் தண்ணீர் இல்லை. மழை பெய்வதாகக் காணோம். ஊரிலுள்ள தோட்டப் பயிர்களும் மானாவாரி புஞ்சைப் பயிர்களும் வாடின; கருகின.
ஊரார் எல்லோரும் சேர்ந்து மழைக்கஞ்சி எடுத்தார்கள்; கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஊர் தேவதைகளுக்கும் வனதேவதைகளுக்கும் கிடாய் வெட்டிப் பொங்கலிட்டார்கள். விராட பர்வம் வாசித்தார்கள். தினப்பத்திரிகைகளில் போட்டிருக்கும் காலநிலையை ஊன்றிப்படித்தார்கள். சாதாரண ஜோஸியர்களிடம்கூட “மழை எப்பொழுது பெய்யும்?” என்று கேட்டார்கள். மழை பெய்வதாக இல்லை. வெள்ளைவெயில் அடித்தது. என்றாவது ஒருநாள் கருமேகங்கள் கூடி சூரியனை பலமாகப் பந்தல் போட்டு மறைக்கும். சூல்மேகங்கள் கனம் தாங்காது இப்போது பூமியில் இறங்கிவிடும் போலிருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பெருங்காற்று வந்து மேகங்களையெல்லாம் பாய் சுருட்டுவதுபோல் சுருட்டிக்கொண்டு போய்விடும். ஜனங்கள் முணுமுணுப்பார்கள். முகத்தைச் சுளித்துக்கொள்வார்கள். ஒருவரிடம் ஒருவர் மாறிமாறி ஒன்றுமில்லாமல் போய்விட்டதே இப்படி என்று கேட்டுக்கொள்வார்கள். “நாம் என்னத்தைப் பிழைக்கப் போகிறோம்” என்று சலித்துக்கொள்வார்கள். செட்டியாரின் முகத்திலிருந்து கவலை மாறி பீதி படர்ந்தது.
பயிர்கள் எல்லாம் கருகிச் சருகாக மாறின. விவசாயிகள் வெறும் தாளை அறுவடை செய்தார்கள். கால்நடைக்கு கொஞ்சம் தீவனம் கிடைத்துவிட்டது; மனிதனுக்கு என்ன செய்வது?
கிணறுகளில் குடிதண்ணீர் இல்லை. வாளிக்கு உழக்கு தண்ணீர் வந்தது. வயது முதிர்ந்த கிழவர்கள் தாதுவருஷப் பஞ்சத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
***
துட்டு இருப்பவர்கள் மொச்சக்கொட்டை வாங்கிச் சாப்பிட்டார்கள். கையில் துட்டு இல்லாதவர்கள் காடுகளில் முளைத்துள்ள சாணைக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து வேகவைத்துத் தின்றார்கள். செட்டியார் எப்போதோ கடையை இழுத்து மூடிவிட்டார். வீட்டிலிருந்த பெண்கள் நகையை அடகு வைத்து ரேஷன் நெல் வாங்கிக் குத்தி சமைத்துச் சாப்பிட்டார்கள். வாழ்க்கை கசந்து வீட்டில் ஒருவர்க்கொருவர் மனப்பூசல், சண்டை. நல்லசிவம் செட்டியார் “ஐயோ எனக்கு சாவு வராதா. பகவானே என்னைக் கொண்டு போய்விடேன் !” என்று வாய்திறந்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் சாவு அவருக்கு வரவில்லை. வடிவம்மாளுக்கு வந்தது. தலையில் ஓங்கி அறைந்துகொண்டார் நல்லசிவம் செட்டியார். அப்பாவு செட்டியார் கீழேவிழுந்து புரண்டார். “அய்யோ” என்று கல்தூணில் முட்டினார். பக்கத்திலிருந்தவர்கள் செட்டியாரைப் பிடித்துக்கொண்டார்கள். ஆசுவாசப்படுத்தினார்கள். “அம்மா, எங்களையெல்லாம் இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டாயே” என்று கூக்குரலிட்டார்.
“அப்பாவு என்ன இது? நீ ஆண்பிள்ளை இப்படி மனசை விடலாமா, அடக்கிக்கொள்” என்று பக்கத்திலிருந்தவர்கள் தேறுதல் சொன்னார்கள். இப்படி அவர்கள் சொல்லவும் அவருடைய துக்கம் முன்னைவிடப் பலமடங்கு அதிகமாக பீறிட்டு வெளிவந்தது. கைகளால் முகத்தை மூடிக்கொண்டு உடம்பு குலுங்க கேவிக்கேவி அழுதார்.
வடிவம்மாளை செட்டியாரின் தோட்டத்திலேயே அடக்கம் செய்தார்கள். அமரக்கிரியைகள் எல்லாம் முடிந்த சிலநாட்கள் கழித்து செட்டியாரை வரச்சொல்லி ஆள் அனுப்பினார் நாயக்கர். செட்டியார் போனார். தாயார் இறந்த விஷயங்களையெல்லாம் துக்கம் விசரித்துவிட்டு “ஏதோ ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டீர்கள் ரூபாயில் கொஞ்சமாவது கொடுக்கமுடியவில்லை என்றாலும் இந்த வருஷ வட்டியாவது கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார். செட்டியார் ஒன்றும் பேசவில்லை.
“நல்லது, மாமா உங்களுக்கு நான் வட்டி கொடுத்துவிடுகிறேன்” என்று மட்டும் சொன்னார். நேராக வீட்டுக்குவந்து தன்னு-ட்ய குழந்தை கைலாசத்தின் நகைகளை விற்று மூன்றாவது மனுஷனுக்குத் தெரியாமல் வட்டியைக் கட்டிவிட்டார்.
ஊரிலிருந்து ஏழை விவசாயிகள் எல்லாம் தஞ்சாவூர் என்றும் ஆந்திரதேசம் என்றும் பஞ்சம் பிழைக்கச் சென்றார்கள்.
இந்த நிலைமை ஒரு வருஷம் பூராவும் நீடித்தது. அடுத்த வருஷமாவது பஞ்சம் தெளியும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த ஜனங்களுடைய துரதிருஷ்டம் அடுத்த வருஷமும் அப்படியேதான் இருந்தது.
ஆடுமாடுகளை விற்றார்கள். பண்ட பாத்திரங்களை விற்றார்கள். தங்களிடம் உள்ள எதெயெல்லாம் விற்று ஜவிக்கமுடியுமோ அதையெல்லாம் விற்றார்கள்.
செட்டியாரால் மறுவருஷம் வட்டி கட்ட முடியவில்லை. நாயக்கர் ஆள்மேல் ஆள் அனுப்பி நெருக்கினார். என்ன செய்வார்கள. பாவம்! வீட்டையும் நிலத்தையும் தவிரஅவர்களிடம் என்ன இருக்கிறது? இரண்டையுமே நாயக்கருக்குத் தாரை வார்த்துவிட்டார்கள்.
நாயக்கர் தயாள குணமுள்ளவர்; அவர்கள் பஞ்சம் பிழைக்கச் செல்வதற்கு நூறு ரூபாயும் கொடுத்தார்! செட்டியார் குடும்பத்தோடு புறப்பட்டார்; தான் பிறந்து வளர்ந்த அந்தக் கிராமத்தைவிட்டு, தவழ்ந்து விளையாடிய அந்த மண்ணைவிட்டுப் புறப்பட்டார்.
அவருடைய தோட்டத்தின் வழியாகத்தான் பாதை. தன்னுடைய நிலத்தின்மேல் கால் பட்டதும் செட்டியாருக்கு உடம்பு புல்லரித்தது.
கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. தாயாரை அடக்கம் செய்த இடத்துக்கு வந்ததும் அப்படியே தரையில் மரம் போல் சாய்ந்தார். சாய்ந்து அந்த மண்ணின்மேல் புரண்டார். பெண்களும் குழந்தைகளும் ‘குய்யோ முறையோ’ என்றழுதார்கள். நல்லசிவம் செட்டியார் சமைந்த கல்லாக நின்றார்.
சிறிதுநேரம் கழித்து மகனைத் தாக்கி நிறுத்தினார் பெரியவர். எல்லோருடய அழுகையும் நின்றுவிட்டது. ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள்.
ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனையும் தாண்டி வடக்கே போய்க்கொண்டிருந்தது. பசுமலையும் தாண்டி மதுரையை நெருங்கிவிட்டது. தூரத்தில் வரும்போதே கிழவர் கோபுரங்களைக் கண்டுகொண்டார். தலைக்குமேல் இரண்டு கைகளையும் வைத்துக் கண்களை மூடிக்கொண்டார்.
செட்டியாரின் குடும்பத்தைத் தவிர அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் எல்லோரும் மதுரையில் இறங்கிவிட்டார்கள். செட்டியார் பிளாட்பாரத்திலுள்ள கடைகளில் குழந்தைகள் தின்பதற்கு பலகாரம்
வாங்கினார். அதோடு அன்றைய தினப் பத்திரிகை ஒன்றும் வாங்கினார். செட்டியார் எப்பொழுதும் பத்திரிகை வாசிப்பதில்லை. ஆனால் வாங்கத் தவறமாட்டார். இந்த நிலையிலும் பழக்கம் என்பது அவரை விட்டுப் போய்விட வில்லை.
வாங்கிய பலகாரங்களை எல்லோரும் சாப்பிட்டார்கள். பத்திரிகை மட்டும் அப்படியே பெஞ்சில் கிடந்தது. சோழவந்தான் ஸ்டேஷனில் நாலைந்து பேர்கள் ஏறி செட்டியாரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள். ரெயில் புறப்பட்டது. வந்தவர்களில் ஒருவர் செட்டியாரின் பக்கத்தில் கிடந்த பத்திரிகையை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார். திடீரென்று தன்
சகாக்களை நோக்கி ஒரு செய்தியை பலமாக வாசித்தார். எல்லோருமே அதைக் கேட்டார்கள்.
“கிணறு வெட்ட சர்க்காரால் இனாமாக ரூபாய் வழங்கப்படும் திட்டத்தை, விவசாயிகளின் நன்மையை உத்தேசித்து நீடித்திருக்கிறார்கள், இந்த வருஷம் கிணறு ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் இனாமாகக் கிடைக்கும். விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்கி தேச சுபிட்சத்துக்குப் பாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
செய்தியைக் கேட்ட மற்றவர்கள் சந்தோஷப்பட்டார்கள். செட்டியாரின் ரோமங்கள் குத்திட்டு நின்றன. கண்கள் கோவைப்பழம் போல் ஜிவ் என்று சிவந்தன. வேகமாகப் பாய்ந்து பத்திரிகையை ‘டபக்’ என்று பிடுங்கி சுக்குநூறாகக் கிழித்தார். எல்லோரும் திகைத்தார்கள். என்ன காரணம் என்று ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை! நல்லசிவம் செட்டியார் மாத்திரம் ஒரு கோணல் புன்னகை செய்தார்.
– சரஸ்வதி, நவம்பர் 1958