மாயப் பிச்சைப் பாத்திரம்
அரண்மனைக்கு வெளியே அமைச்சருடன் நின்றிருந்த பேரரசர், தெருவில் ஒரு பிச்சைக்காரத் துறவி செல்வதைப் பார்த்தார். துறவி இவர்களைப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அதை கவனித்த அமைச்சர், “பார்த்தீர்களா பேரரசே! அந்தப் பிச்சைக்காரத் துறவிக்கு என்ன ஒரு திமிர்! நீங்கள் இங்கே நின்றிருப்பதைப் பார்த்தும் கூட, கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கிறார். சாதாரணப் பிச்சைக்காரர்களாக இருந்தால் இந் நேரம் உங்களிடம் ஓடோடி வந்து வணங்கி, யாசகம் கேட்டிருப்பார்கள். பேரரசரிடம் பிச்சை கேட்க முடிவது எவ்வளவு பெரிய வாய்ப்பு! பொன்னும் பொருளும் ஏராளமாகக் கிடைக்குமே! அவர்களது வாழ்க்கை முழுதுக்கும் போதுமான செல்வம் கூட கிடைக்கலாம். அதன் மூலம் அவர்களது வாழ்க்கையே மாறிவிடும் என எண்ணி வருவார்கள். ஆனால், இவர் துறவியாக இருப்பதால் கண்டுகொள்ளாமல் போகிறார். பிச்சை கேட்காவிட்டாலும் பரவாயில்லை; நிற்பது பேரரசர் ஆயிற்றே,… அவருக்கு மரியாதை செலுத்திவிட்டுப் போகலாமே என்கிற எண்ணம் கூட இல்லை, பாருங்களேன்! துறவிகள் என்றாலே இப்படித்தான், திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள். என்னவோ, இந்த உலகமே அவர்களுக்கு அடிமை என்கிற மாதிரி நினைப்பு. சில துறவிகள், தங்களைக் கடவுளுக்கு இணையாகவே எண்ணிக்கொள்வார்கள். இன்னும் சில துறவிகளுக்கோ, தாங்கள் கடவுளை விடப் பெரியவர்கள் என்கிற நினைப்பு கூட உண்டு. இவரும் அப்படிப்பட்டவராகத்தான் இருப்பார்” என்றார்.
அமைச்சர் அறிவாளிதான். ஆனால், பொறாமை பிடித்தவர். மற்றவர்கள் மீது கோள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசுவதன் மூலம் தன்னை உயர்ந்த அறிவாளியாகக் காட்டிக்கொள்ள முற்படுவார். இது போன்ற கீழ்மையான குணங்கள் பலவும் அவரிடம் இருப்பது பேரரசருக்குத் தெரியும். எனவே, அவர் அமைச்சர் சொன்ன எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
“துறவிகளுக்கு சாதாரண மக்களும் ஒன்றுதான்; மன்னர்களும், பேரரசர்களும் ஒன்றுதான். அவர்கள் காசு பணத்தை வைத்தோ, பதவிகளை வைத்தோ யாரையும் மதிப்பிட மாட்டார்கள். அவர்களை மிரட்டிப் பணிய வைக்கவும் எவராலும் இயலாது. தோல்வி காணாதவரும், பாதி உலகையே வென்றவருமான மகா சக்ரவர்த்தி அலெக்ஸாந்தரே, இந்து சந்நியாசி தண்டாமிஸிடம் இவ் விஷயத்தில் தோல்வியுறவில்லையா? நம் சந்நியாசிகள் கடவுள்களையும், பிற ஞானிகளையும் மட்டுமே வணங்குவார்கள். நம்மைப்
போன்ற சாமான்ய மனிதர்களை வணங்க மாட்டார்கள். நாம்தான் அவர்களைத் தேடிச் சென்று மரியாதை செலுத்த வேண்டுமே தவிர, அவர்கள் நம்மைத் தேடி வரவேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு, பேரரசர் விரைந்து சென்று அந்த யாசகத் துறவியை வணங்கினார்.
துறவியும் அவருக்கு ஆசி வழங்கினார்.
அதன் பிறகு பேரரசர் அவரிடம், “தங்களுக்கு ஏதேனும் காணிக்கை செலுத்த விரும்புகிறேன். தங்களுக்கு என்ன விருப்பமோ அதைக் கேளுங்கள்; தருகிறேன்” என்றார்.
யாசகத் துறவி சிரித்தார். “துறவிக்கு என்ன விருப்பங்கள் இருக்கும்? விருப்பங்களையும், ஆசைகளையும் துறந்தால்தானே துறவியாக முடியும்!”
“அது சரிதான். இருந்தாலும் தங்களின் தேவைக்கு ஏற்ப ஏதேனும் விருப்பங்கள் இருக்கலாம் அல்லவா?”
“எனக்கு எந்த விருப்பங்களும் இல்லை. ஆனால் எனது பிச்சைப் பாத்திரத்திற்கு ஒரு ஆசை இருக்கிறது. அது நிறையும்படியாக எவரேனும் பிச்சையிட மாட்டார்களா என்பதுதான் அதன் ஆசை. உங்களால் அந்த ஆசையை நிறைவேற்ற இயலுமாயின் செய்யுங்கள்” என்று தனது பிச்சைப் பாத்திரத்தை நீட்டினார் துறவி.
“அடப் பாவமே! இந்தப் பாத்திரம் நிரம்புமளவு கூட உங்களுக்கு யாரும் இதுவரை பிச்சை இடவில்லையா? அவ்வளவு கருமிகளாகவா இருக்கிறார்கள் மக்கள்!? சரி,… நான் இந்தப் பாத்திரம் நிறையும் அளவுக்கு பொற் காசுகளையே அளிக்கிறேன்” என்றார் பேரரசர்.
“அது உங்களால் இயலுமா என ஒரு முறைக்கு இரு முறை நன்கு சிந்தித்துவிட்டு, பிறகு அதைச் செய்ய முயன்றால் போதும்” என எச்சரித்தார் துறவி.
“நான் இந்த நாட்டின் பேரரசன். உங்களுடைய பிச்சைப் பாத்திரத்தை ஆயிரம் முறை நிரப்பும் அளவுக்கு என்னிடம் பொன்னும், நவ ரத்தினங்களும் இருக்கின்றன” என்று சொல்லிவிட்டு, பணியாட்களை அழைத்து, கஜானாவில் இருந்து ஒரு படி* தங்கக் காசுகளைக் கொண்டு வரும்படி பணித்தார்.
அவ்வாறே அவர்களும் சென்று, ஒரு படி காசுகளை எடுத்து வந்தனர். அவர்கள் அதை பிச்சைப் பாத்திரத்தில் போடப் போட, பாத்திரத்துக்குள் அதன் அளவு குறைந்துகொண்டே வந்தது. படிக் காசுகள் முழுவதையும் போட்டும் பாத்திரம் நிறையவில்லை.
இது என்ன மாயம் என பேரரசர், அமைச்சர், பணியாட்கள் அனைவரும் வியந்தனர்.
மீண்டும் கஜானாவிலிருந்து ஒரு பக்கா* தங்கக் காசுகளைக் கொண்டு வருமாறு பணித்தார் பேரரசர். பணியாட்கள் ஒரு பக்கா தங்கக் காசுசளைக் கொண்டு வந்து போட்டனர். அப்போதும் அந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பவில்லை.
அடுத்ததாக ஒரு வள்ளம்* தங்கக் காசுகள் கொண்டுவரப்பட்டது. அதுவும் பிச்சைப் பாத்திரத்தை நிறைக்கவில்லை.
பிறகு ஒரு பறை* தங்கக் காசுகளை தோளில் சுமந்து வந்து கொட்டினர். பிச்சைப் பாத்திரத்தில் அதுவும் கால் பாகத்துக்கே இருந்தது.
“பேரரசே! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. இவன் கபட சந்நியாசி! மேலும், இவன் ஒரு துர் மந்திரவாதி என்றும் தோன்றுகிறது. இவன் அரண்மனை கஜானா முழுவதையும் காலி ஆக்கி விடுவான். இதோடு நிறுத்தி விடலாம்” என பேரரசரின் காதில் அமைச்சர் முணுமுணுத்தார்.
“இல்லை! நான் அவருக்கு வாக்களித்துவிட்டேன். கொடுத்த வாக்கிலிருந்து பின் வாங்க இயலாது. எனவே, இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ, அனைத்தையும் கொண்டு வாருங்கள்” என்றார் பேரரசர்.
தங்க – வெள்ளிக் காசுகள் மற்றும் நகைகள்; வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம், மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், நீலம் ஆகிய நவ ரத்தினங்கள் அனைத்தும் மூட்டை மூட்டையாக முதுகுகளில் சுமந்து வந்து கொட்டப்பட்டன.
கஜானா முழுவதும் காலியாகியும் அந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பவே இல்லை
பேரரசர் வேறு வழியில்லாமல் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
“இனி உங்களுக்குப் பிச்சை இடுவதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை” என்று கூறிவிட்டு, “தாங்கள் யார்? மந்திரவாதியா?” என்று கேட்டார்.
“நான் ஒரு முனிவன். மக்களிடம் யாசகம் வாங்கி உண்டு, ஊர் ஊராகத் திரிந்து, மக்களுக்கு போதனைகள் செய்யும் பரதேசி” என்றார் பிச்சைக்காரத் துறவி.
“இது மிகப் பெரும் மாயப் பாத்திரமாக இருக்கிறதே! இவ்வளவு சிறியதாக இருக்கிற இந்தப் பாத்திரம், அரண்மனை கஜானாவையே விழுங்கிய பின்னும் இன்னும் நிறையவில்லையே! அது எப்படி? அது உங்களின் மாயமா அல்லது மந்திர சக்தியா?”
“இது அதிசயப் பொருளோ, மாய – மந்திரத்தால் செய்யப்பட்டதோ அல்ல. மனிதரின் மனதால் செய்யப்பட்ட பாத்திரம் இது” என்றார் முனிவர்.
அடிக்குறிப்பு:
*படி – சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு.
*பக்கா – இரண்டு படி அளவுள்ள கொள்ளளவு.
*வள்ளம் – நான்கு படி அளவுள்ள கொள்ளளவு.
*பறை – நான்கு வள்ளம் அளவுள்ள கொள்ளளவு.