மாஜிஸ்டிரேட்டுக்குத் தண்டனை




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு, தலைமாட்டில் மாட்டப்பட்டிருக்கும் வெங்கடே சப் பெருமாளைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் போதே முந்தின இரவு மீனாட்சி சொன்னதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன, மாஜிஸ்டிரேட் ராமனாதனுக்கு. இடது கைப் பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் மெல்ல மீசையை நெருடிவிட்டுக் கொண்டார். முன்னொரு காலத்தில் புசுபுசுவென்றிருந்த அது எவ்வளவு காற்றோட்ட மாகி விட்டது என்ற எண்ணம் ஏற்பட்டதும், மீசையின் கீழே ஒரு புன்னகை பிறந்தது. மடிவரையில் மூடியிருந்த கட்டம் போட்ட நீலக் கைத்தறிப் போர்வையை முற்றுமாக விலக் கிக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கினார். ஜன்னலுக்கு வெளியில் தொலைவில் செங்கல்பட்டு.
மணிக்கூண்டு தெரிந்தது.
மூன்று காரியங்கள் முக்கியமாக இன்று செய்தாக வேண்டும் என்பது மீனாட்சியின் விருப்பம்.
ஷாப் கனகலிங்கத்தைப் பார்த்து, “நீங்கள் இந்த ஊரில் ஏழு ஷாப்புகளுக்குச் சொந்தமான பெரும் பணக்காரர்தான். மறுக்கவில்லை. என் பெண் சுமதி நிறத்தில் மட்டுதான். படிப்பிலும் பிரில்லியண்ட் இல்லைதான். அதையும் மறுக் கவில்லை. இருந்தாலும், அதற்காகச் சீர்வரிசைகள் விஷயத்தில் இவ்வளவு கெடுபிடி பண்ணக் கூடாது. நான் ஒரு பெரிய மனிதன் இல்லையா? என் குடும் பத்தில் சம்பந்தம் செய்து கொள்வது பெருமையான விஷ யம் என்று நீங்களும் நினைக்க வேண்டும்” என்று சொல்லி, இந்தத் தைக்குள் கல்யாணத்தை வைத்துக் கொள்ளும் படி முடிவு பண்ண வேண்டும்.
பாலாஜி பாங்க்கின் செகரட்டரி சிவதாணு இன்ஸ்பெக் ஷனுக்காக வந்து டிராவலர்ஸ் பங்களாவில் தங்கி இருக்கிறார். ”இதோ, பார், சிவா. பள்ளிக்கூடத்தில் ரேஸி லும் லாங்ஜம்ப் ஹைஜம்ப்பிலும் என்னைத் தோற்கடித்துக் கோப்பைகளும் மெடல்களும் வாங்கிக்கொண்டு போன மாதிரியே, இப்போதும் என்னை முந்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே போகிறாய் நீ. மிகவும் சந் தோஷம். இந்த முப்பது வருடப் பழக்கத்தில் இப்போது தான் முதல் தடவையாக உன்னிடம் உதவி கேட்டு வந்தி ருக்கிறேன். இவன்தான் என் பிள்ளை குமார். அடித்துப் பிடித்துப் பி.ஏ. பாஸ் பண்ணி விட்டான். பெரிய பாங்க்கு களில்தான் டெஸ்ட், இன்ட்டர்வ்யூ என்றெல்லாம் முட்டுக் கட்டை. உன்னுடைய பாங்க் சின்னது. நீ இஷ்டப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அநியாயமாய் ஊரைச் சுற்றிக் கொண்டு கெட்டுப் போகிறான் பையன். எப்படியாவது வேலை போட்டுக்கொடு” என்று கேட்க வேண்டும்.
சாயந்தரம் ஹவுஸ் மார்ட்கேஜ் சொஸைடியின் தலை வர் அப்துல் ரஷீதை ‘பத்மஸ்ரீ’க்காகப் பாராட்டுத் தெரிவிக் கிற ‘சாக்கில் சந்தித்து, ”அங்கே இங்கே இருந் ததையெல்லாம் சுரண்டி, முக்கால் கிரவுண்டு மனை வாங்கி விட்டேன். நீங்கள் கடன் சாங்ஷன் பண்ணினால்தான் ஒரு கூரை போட்டுக்கொள்ள முடியும். லீகல் அட்வைஸர் இன் னும் ஓகே பண்ணவில்லை என்று ஆறு மாசமாய் என் விண்ணப்பத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறீர்களே, நியா யமா? நான் அப்படித் தப்புத் தண்டாவான டாகுமெண்ட் களை உங்களிடம் தள்ளி விட்டு விடுவேனா?” என்று சொல்ல வேண்டும்.
மூன்றும் ரொம்பச் சாதாரணமான வேலைகள்தான், அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்தால். ஆனால் அவர் ஜில்லா மாஜிஸ்டிரேட். யாரிடமும் உதவியை எதிர்பார்த்து நிற்க முடியாது; நிற்கக் கூடாது. மீனாட்சிக்கு அது தெரிய வில்லையே?
கட்டிலின் மறு ஓரத்தில் தலையணையை அணைத்துக் கொண்டு படுத்திருக்கும் மனைவியைப் பாசத்துடன் பார்த் துக் கொண்டார் ராமனாதன். வழக்கம் போலவே, கீழே விழுந்து விடுகிற மாதிரி அவள் ஒட்டில் படுத்திருப்பது தெரிந்தது. வழக்கம்போலவே “மீனா, இன்னும் கொஞ்சம் நகர்ந்து கொள். விழுந்து விடப் போகிறாய்” என்று கனிவு டன் கூறி, அவள் இடுப்பைப் பிடித்து நகர்த்தியும் விட்டார்.
பிரஷில் பற்பசையைப் பிதுக்கிக் கொண்டு பாத்ரூமுக் குச் செல்லும் போது, ஹாலில் டீபாயின்மீது பிரிக்கப்படா மலே கிடக்கும் புத்தம் புது ஆங்கில தினசரி கண்ணில் பட் டது. எப்போதும் அவர்தான் அதை முதலில் பார்க்க வேண் டும். வேறொருவர் பார்த்து, புது மடிப்புக் கலைந்திருந்தால் அந்தப் பேப்பரைத் தொடவே அவருக்குப் பிடிப்பதில்லை. குளியல், டிபன் எல்லாம் முடித்துக்கொண்டு எட்டரை மணிக்கு அவர் வருகிற வரையில், ஸ்போர்ட்ஸ் பக்கத்தைப் படிக்க வேண்டிய துடிப்போடு குமார் அவருக்கு எத்தனை அர்ச்சனை மனத்துக்குள் நடத்திக் கொண்டிருப்பான் என்பது அவருக்குத் தெரியும். பாவம், இன்று ஒரு நாளாவது அவனுக்கு ஆறுதல் கொடுக்கலாமே என்று, பிரஷை பல்லி டுக்கில் கவ்வியவாறே பேப்பரைப் பக்கம் பக்கமாகப் புரட்டினார்.
ஆறாம் பக்கத்தைப் பார்த்த போது, அவர் புருவங்கள் சுருங்கின. தலைப்பு எழுத்துக்களைப் படிக்கும் வரையில் அவருக்குக் கண்ணாடி தேவையிருக்கவில்லை. இப்போது செய்தியையும் படிக்க வேண்டியிருந்தது. அவசரமாகக் கூட் டிலிருந்து மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டார். படித்தார்.
அவருடைய உள்ளம் கனத்தது. அப்பா பார்த்துவிட்டார் என்பது குமாருக்குத் தெரிகிற மாதிரி பேப்பரைக் கலைத் தாற்போல் வைக்க எண்ணியிருந்தவர், அதை மறந்து வெகு நிதானமாக, மெதுவாகத் திரும்ப மடித்தார். சிந்தனையுடன் மடிப்பின் ஓரங்களை மீண்டும் மீண்டும் நீவி விட்டார்.
தெருவில் கறிகாய் வண்டிக்காரன், “பாகற்காய்! பாகற் காய்!” என்று கூவிக்கொண்டே சென்றான். எஜமானருக்குக் காப்பி கலக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்காகச் சமை யற்காரி வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனாள். மின்சார விசிறியின் இறக்கையில் உட்கார்ந்திருந்த குருவி கீச்கீச்சென்று கூவித் தன் துணையை அழைத்தது.
ராமனாதன் தலையைக் குனிந்து பிடரியை அழுத்தித் தேய்த்துக்கொண்டு, லேசாகாத இதயத்துடன் பாத்ரூமுக்குப் போனார். யந்திரம்போல் பல் விளக்கினார். டீபாய் மீது கொணர்ந்து வைக்கப்பட்ட காப்பியை, அது ஏற்கெனவே சற்று ஆறித்தான் இருக்கிறது என்பதை உணராதவராக, மாற்றி மாற்றி ஆற்றிக் கொண்டிருந்தார்.
குமார் வந்து, ”குட்மார்னிங் அப்பா” என்று கூறிவிட்டு, பேப்பரை எடுத்துக் கொண்டு போனான். அவன் வேண்டு மானால் ஸ்போர்ட்ஸ் பக்கத்தைத் தவிர வேறு பக்கத்தைப் பார்க்கமாட்டான். ஆனால் அவன் தங்கை சுமதி அப்படி யில்லை. எல்லா நியூஸ்களையும் விடாமல் படித்து விடுவாள். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆங் கிலத்தில் அவள் ரொம்பக் குறைவாக மார்க் வாங்கியிருந் தபோது, “வேறொன்றும் பண்ண வேண்டாம் நீ. தினம் ஒழுங்காய் இங்கிலீஷ் பேப்பர் படித்துக்கொண்டு வா. இங் கிலீஷ் தன்னைப்போல் வரும்’ என்று அவர் அறிவுரை கூறியதை இன்றளவும் எழுத்துப் பிசகாமல் கடைப்பிடித்து வருகிற குழந்தை, இன்றும் அப்படியே படிக்கப் போகிறாள்.
அந்தச் செய்தி அவள் கண்ணில் படாமல் போகாது. ‘என்னப்பா இது?” என்று நம்மிடம் உடனே ஓடி வரு வாளா? அல்லது தாயிடம் சென்று, ”இதைப் பாரம்மா’ என்று கிசுகிசுப்பாளா?…
இதெல்லாம் வீணான கவலைகள் என்று ராமனாதனின் அறிவு இன்னொரு புறம் எடுத்துக் கூறியது. குழந்தைகளுக்கு இந்தச் செய்தியின் முக்கியத்துவம் – கடுமை – தெரியாது. ஓர் அப்பீலில் உயர்நீதிமன்ற ஜட்ஜ் இரண்டு வார்த்தை எழுதிவிட்டதால் என்ன பெரிய ஆபத்து வந்து விட்டது அப்பாவுக்கு என்று அலட்சியமாக நினைப்பார்கள். சுமதி வேண்டுமானால் ஒருவேளை அம்மாவிடம் போய்ச் சொல்லக்கூடும். பேப்பரையும் காட்டக்கூடும்.
மீனாட்சி அதைப்பற்றி விவாதிப்பாளா? ‘கிடக்கிறார்கள் விடுங்கள்’ என்று ஆறுதல் சொல்லுவாளா? அல்லது வெறும் பார்வையாலேயே குற்றம் சாட்டுவாளா? அல்லது நாம் சொல்லும் விளக்கத்தைக் கேட்டுப் பரிதாபம் கொள்வாளா?
தினசரி வழக்கப்படி அன்றைக்கும் மீனாட்சி கணவ னுக்குப் பிறகுதான் விழித்துக் கொண்டாள். கட்டிலில் சிறிது உட்பக்கமாகப் படுத்திருப்பதை உணர்ந்ததும், அவர்தான் அன்றும் தன்னை நகர்த்தி விட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டாள். இருபத்தைந்து வருட தாம்பத்திய வாழ்க்கை யில் மிகச் சகஜமாகியிருக்க வேண்டிய அந்த அன்பு, இன் றைக்கும் அவளுக்குப் புதுமையாயிருந்தது. முதல் தடவை அவர் தன்னை அணைத்து, அனுதாபத்துடன் தலையைக் கோதிக் கொடுத்ததை இப்போது எண்ணினாலும் அவளுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.
பல் விளக்கியபின் தேங்காய்ப் பூத் துவாலையில் முகத்தை அழுத்தியபடி நடு அறையை எட்டிப் பார்த்து, “சுமதி! எழுந்திரம்மா! குமார்! பேப்பர் படித்தது போதும். இன்ஸ்டிட்யூட்டுக்கு நேரமாகிறது” என்று குரல் கொடுத்து விட்டு ஹாலுக்கு வந்தவள் இன்னும் கூடக் கணவர் காப்பியை ஆற்றியபடியே இருப்பதைக் கவனித்தாள். என்ன தான் அப்படிச் சிந்தனையோ!
இன்னும் தனக்குக் காப்பி வராத காரணம் என்ன என்று யோசித்தவளாகச் சமையலறைக்குச் சென்றவளுக்கு ஒரு திகைப்பு காத்திருந்தது.
அப்போதுதான் மார்க்கெட்டுக்குப் போய்வந்திருந்த ராஜு, “சமாசாரம் தெரியுமா?” என்று சமையற்கார அம்மாளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
”என்ன சமாசாரம்?” என்றாள் சமையற்காரி. வம்பு என்றால் லட்டு அவளுக்கு.
”வக்கீல் சோமசுந்தரத்தோட டிரைவர் வந்திருந்தான் மார்க்கெட்டுக்கு. நம்ம எசமானரைப்பத்தி என்னவோ பேப்பரிலே வந்திருக்குதாம்.”
“அப்படியா! என்ன வந்திருக்குது? நீ ஒரு பேப்பர் வாங் கிட்டு வர்றதுக்கென்ன?”
“தமிழ்ப் பேப்பரிலே வந்திருந்தா வாங்கிட்டு வந்திருக்கமாட்டேனா? இங்கிலீஷ் பேப்பரிலே வந்திருக்குதாம். வக்கீல் அவர் சம்சாரத்துக்கிட்டே சொல்லிட்டிருந்தாராம்.”
குறுக்கே புகுந்து என்ன விஷயம் என்று கேட்க மனம் பதைத்தாலும், கணவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை அவர் மூலமாகவே தெரிந்துகொள்ளாமல் வேலைக்காரன் மூலம் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ள அவளுக்குக் கசப்பாயிருந்தது. ராஜுவும் சமையற்கார அம்மாளும் கவனிக்காதவண்ணம் திரும்பிச் சென்றாள்.
இப்போது ராமநாதன் ஹாலில் இல்லை. அதையொட்டிய அலுவலக அறையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.
அவரை நெருங்கினாற்போல் உட்கார்ந்துகொண்டு, “காலையிலிருந்தே கவனிக்கிறேன். ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறீர்கள். என்னிடம்கூடச் சொல்ல முடியாத கஷ்டமா?” என்றவள், குழந்தைகள் ஒருவேளை வரக்கூடும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டவளாகச் சற்று விலகிக்கொண்டாள்.
அவர் பேப்பரை எடுத்துக்காட்டினார்.
மீனாட்சி மேலோடு ஒருமுறைதான் பார்த்தாள். “என்ன இது? ஏதோ மெட்றாஸ் ஹைகோர்ட் வழக்கைப்பற்றிப் போட்டிருக்கிறது…”
”வழக்கில்லை. அப்பீல்” என்று திருத்தினார் ராமனாதன். ”கீழ்க் கோர்ட்டில் நான் கொடுத்த தீர்ப்பை மாற்றியிருக்கிறார்கள்.”
“அப்படியா?” பேப்பரை எடுத்து நன்றாகப் படித்தாள் மீனாட்சி. சில நிமிடங்கள் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. பிறகு அவளே, “ஏன் அப்படி ஜட்ஜ்மெண்ட் கொடுத்தீர்கள்!” என்றாள்.
”இது…” அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினார் ராமனாதன். ‘இது ‘அவன்’ சம்பந்தப்பட்டது.”
“எவனைச் சொல்கிறேன் என்று உனக்குத் தெரிகிறதோ?” என்று மாஜிஸ்டிரேட் கேட்டார். “எட்டு மாதங்களுக்கு முன்னால் ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன். ஒருநாள் சாயந்தரம் உன்னிடம் சொன்னேனே…
“நினைவிருக்கிறது” என்றாள் மீனாட்சி. “அன்றைக்கு வெள்ளிக் கிழமை. சாயந்தரமாய் எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தேன். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்ட பிறகுதான் சீயக்காய்ப் பொடி இல்லையென்று தெரிந்தது. ராஜுவை உடனே கடைக்கு ஓடும்படி சொல் லிக் கொண்டிருந்தபோது நீங்கள் கோர்ட்டிலிருந்து வந்தீர்கள்…
எப்படிப்பட்ட சம்பவமானாலும் தங்களுக்குச் சொந்தமாக நிகழ்ந்த ஒன்றோடு முடிச்சுப் போட்டுக் கொண்டால் தான் பெண்களுக்கு ஞாபகம் வருகிறது என்று எண்ணிக் கொண்டார் ராமனாதன். அல்லது ஒரு வேளை அதைப்பற்றிப் பேசப் பிடிக்காமல் இப்படிப் பேச்சைத் திருப்புகிறாளோ? “சீயக்காய் தீர்ந்ததுதான் ஞாபகம் இருக்கிறது உனக்கு. நான் சொன்னது…?”
”நன்றாய்” என்று சொல்லி விட்டு, பேப்பரைப் புரட்டலானாள் மீனாட்சி. கணவர் அன்று சொன்னது இன்றைக்கும் அவள் நினைவில் பளிச்சென்று இருந்தது. ‘மாயவரத்தில், இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னால் உன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினானே ஒரு திருடன், அவன் இன்னும் திருந்தவில்லை மீனா. அதே தொழில்தான். திரும்பத் திரும்பச் சிறைதான். ஒரு பஸ்ஸை வழிமறித்து, மக்களைக் கத்தியைக் காட்டி பயமுறுத்தி, நகைகளும், ரொக்கமுமாகப் பறித்துக் கொண்டு போனதற்காகப் பிடிபட்டிருக்கிறான் லேட்டஸ்டாய். இன்றைக்கு என் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்’ என்று அவர் சொன்னதை அவள் மறக்கவில்லை.
அன்றைக்கு எப்படி அதைப் பற்றிப் பேசப் பிடிக்கவில்லையோ, அதேபோல் இன்றைக்கும் பிடிக்கவில்லை.
ஆனால் மாயவரத்தில் காவேரிக் கரையை ஒட்டினாற் போலிருந்த அந்தப் பெரிய வீட்டை அவளால் எப்படி மறக்க முடியும்? வாசலில் வேப்ப மரத்து நிழலில் படுத்து அசைபோட்டுக் கண்களை மூடி மூடித் திறக்கும் வெள்ளைக் காளைகளை அவளால் எப்படி நினைவு கொள்ளாமல் இருக்க முடியும்? மாடுகளை அவிழ்த்த பின், ஏர்க்காலைப் பூமியில் சாய்த்து, அண்ணாந்தாற் போல் கிடத்தப்பட்டிருக் கும் அந்த வில்வண்டி அதன் பூ வேலை செய்த படி அதை எம்பிப் பிடித்துக் கொண்டு தொங்கியவண்ணம் ஊஞ் சலாடுகையில், அம்மா அவளை, ‘ஐயையோ! வண்டி கவிழப்போகிறதடி, எமனே!’ என்று எச்சரித்தது நெல் மூட்டைகளை எண்ணிக்கொண்டிருந்த அப்பா, ‘சும்மா இரு! இந்த வயதில் ஓடியாடி விளையாடாமல் உன் வயதிலா விளையாடுவாள்?’ என்று அம்மாவுக்குப் போட்ட அதட்டல் இவைகளையெல்லாம் எப்படி அவளால் மறக்க முடியும்? பின்புறத் தோட்டத்தில் காவேரித் தண்ணீரைத் தொட் டுக் கொண்டு தழையத் தழைய வளர்ந்திருக்கும் வாதா மரங்கள் – நடுநடுவே முளைத்திருக்கும் காட்டாமணிச் செடியின் கிளைகளை ஒடித்து, சொட்டுச் சொட்டாக வரும் பாலைப் பூவரச இலையில் வெகு பத்திரமாக வாங்கி, வைக்கோல் குழாயைக் கொண்டு ஊதிப் பறக்கவிட்ட வண்ண வண்ண நீர்க் – குமிழ்கள் – உதட்டில் பட்ட வைக் கோலின் சொர சொரப்பு – எல்லாம் நினைக்க நினைக்க இனிப்பான ஞாபகங்கள்தான்.
ஒன்றே ஒன்றைத் தவிர.
அன்றைக்குப் பகல் பூரா மழை பெய்து சாயந்தரமாய் நின்றிருந்தது. அம்மாவும், அப்பாவும் சீர்காழியில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தார்கள், இரவு எந்நேரமானாலும் திரும்பி வந்து விடுவதாக. எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்த ஒரே பெண்ணான மீனாட்சி வீட்டில் தனியே இருந்தாள். இரவு பத்து மணி சுமாருக்கு, மழை காரணமாக மின்சாரக் கோளாறு ஏற்பட்டு, விளக்குகள் நின்றுவிட்டன. இருட்டில் துழாவிக் கொண்டு சென்று, பீரோவிலிருந்து டார்ச் விளக்கை எடுத்து வந்து வைத்துக் கொண்டாள். அதற் குள் விளக்கு வந்துவிட்டது. நோட்டைப் பிரித்துப் பத்து வரி எழுதுவதற்குள் விளக்கு மறுபடி நின்றுவிட்டது.
அலுப்புடன் கொஞ்ச நேரம் கட்டிலில் படுத்துக் கொண்டாள். விளக்கு வரும் வழியாய்த் தெரியவில்லை. இரண்டு கட்டு அந்தக் கட்டிடம். பின் கட்டின் மாடியறையில் தனியே படுத்திருக்கிறோமே என்ற பயம் அவளுக்குச் சிறிதும் தோன்றவில்லை. முன்கட்டு வெராந்தாவில் வண்டிக்காரனும் வேலைக்காரனுமான பெரியசாமி படுத்திருந்தான். அவனை எழுப்பி வில்வண்டியின் பெரிய அரிக்கன் விளக்கை ஏற்றித் தரச் சொல்லலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்…
கொல்லைப்புறத் தோட்டத்தில் தொப்பென்று சத்தம் துல்லியமாய்க் கேட்டது. காவேரிக் கரை பக்கத்திலிருந்து, தோட்டத்துச் சுவரில் யாரோ தாண்டிக் குதிக்கிறார்கள் என்று அவள் ஊகித்துக் கொண்டாள். ஜன்னல் வழியே பார்த்த போது, கும்மிருட்டைத் தவிர வேறு எதுவும் தெரிய வில்லை.”யாரப்பா அங்கே? பெரியசாமி! கொல்லையிலே என்ன சத்தம் பார்!” என்று உரக்கக் குரல் கொடுத்தாள்.
மறுநிமிடம் தடதடவென்று மாடிப்படியில் ஏறிவருபவன் பெரியசாமி என்றுதான் அவள் நினைத்தாள். கட்டிலில் ஒரே தள்ளாகத் தள்ளி, அவள் வாயில் துணியடைக்க ஒரு முரட்டுக் கரம் முயன்றபோதுதான், திருடனிடம் வசமாகச் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்தாள். ‘பெரி!… பெ!…மி…!’ என்று அவள் கையை மீறிக்கொண்டு அவன் வாயிலிருந்து கூச்சல் திணறித் திணறி வெளிப்பட்டது. அவள் கால்கள் மட்டுமே சுதந்திரமாக இருந்ததால் அவனை உதைத்துத் தள்ளிப் போராடினாள். பாவாடையும் தாவணி யும் கட்டிலில் மாட்டிக் கொண்டு கிழிந்ததால் வெட்கமும் ஆங்காரமும் அவளுள் சீறிக் கொண்டு எழுந்தன. அவன் அவள் சங்கிலியை இழுத்தான்.
கழுத்தைக் கீறிக்கொண்டு அது அறுந்தது. அதற்குள் எங்கெங்கோ ஆட்கள் வரும் அரவம் கேட்டதால் அவன் கட்டிலை விட்டுக் குதித்து, மாடிக் கைப்படிச் சுவரைத் தாண்டி, தோட்டத்துக் கதவையும் திறந்து கொண்டு வந்த வழியே ஓடினான். பெரியசாமி அப்போதுதான் விழித்துக் கொண்டானோ? லாந்தரைத் தூக்கிக் கொண்டு துரத்தினான். அவன் மட்டுமல்ல.
நாலுநாள் முன்பு எதிர் வீட்டுக்கு வந்திருந்த அந்த இளைஞனும் மீனாட்சியை, ‘என்ன? என்ன விஷயம்?’ என்று கேட்டுவிட்டு அவள் பதிலை எதிர்பாராமலேயே நடந்ததை ஊகித்துக் கொண்டு பெரியசாமியின் பின்னால் ஓடினான். காயங்களும் சிராய்ப்புமாக அவன் திரும்பி வந்து, “ராஸ்கல்! தப்பி ஓடிவிட்டான்!” என்று மூச்சு இரைக்கச் சொன்னபடி அவளுடைய சங்கிலியைத் திருப்பிக் கொடுப்பதற்கும், அப்பாவும் அம்மாவும் ஊரிலிருந்து திரும்பி வருவதற்கும் சரியாயிருந்தது. அதே சமயம் பளீரென்று விளக்குகளும் எரிந்தன.
“அடியே மீனா! என்னடி ஆச்சு உனக்கு?” என்று ஓடி வந்து தாய் கட்டிக் கொண்ட போதுதான் தன் அலங்கோலமான நிலைமையை உணர்ந்தாள் மீனாட்சி. தான் கிட்டத் தட்ட இருபது நிமிட நேரம் திருடனுடன் போராடி யிருக்கிறோம் என்பதையும் உணர்ந்தாள். அப்பா அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவித்தார். அவன் சட்டக் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவன் என்றும், படிக்க வைத்து வளர்த்து வரும் மாமாவின் வீட்டுக்கு விடுமுறைக்காக வந்திருக்கிறான் என்றும் அப்போது தெரிந்து கொண்டாள் மீனாட்சி.
அடுத்த பத்து நாட்களுக்குத் தானொரு ஹீரோயினாகி விட்டது அவளுக்குப் புரிந்தது. தெருவில் எல்லோரும் அவளைக் கொட்டக் கொட்டப் பார்த்தார்கள். வேலைக்காரர்கள் அதிகப்படி மரியாதையுடன் விலகி நின்றார்கள். பள்ளிக்கூ டத்தில் தோழிகள் அவளுடைய தோளையும் கழுத்தையும் தடவித் தடவி, “இந்தக் காயம் அப்போது ஏற்பட்டதா?” என்று விசாரித்தார்கள்.
மீனாட்சி பெருமையில் திளைத்துக் கொண்டிருந்தாள். அந்த எதிர்வீட்டு வாலிபன் வாசலில் வந்து நிற்கும் போதெல்லாம் அவளையும் அறியாமல் உதட்டில் புன்னகை பூக்கும்.
நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்த சமயம் அது. அன்று சிவன் கோவிலுக்குப் போயிருந்தவள் கதாகாலட்சேபம் நடப்பதைக் கண்டு பெண்கள் வரிசையில் ஓரத்தில் உட் கார்ந்து கொண்டாள். பிறகுதான் கவனித்தாள், தனக்குப் பக்கத்திலேயே ஆண்கள் வரிசையில் அவனும் உட்கார்ந்திருப்பதை. அர்ச்சனை செய்த தட்டை மடியில் வைத்துக் கொண்டு வெகு உன்னிப்பாகக் காலட்சேபத்தைக் கேட்பவன் போல் இருந்தாலும், திருட்டுத்தனமாக அவன் தன்னைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பது அவள் உள்மனத்துக்குப் புரிந்துவிட்டது. புரிந்த மறுகணமே தன் உடம்பில் பரவசம் சிலிர்த்தோடி, முகத்தில் சிவந்து வெளிப்படுவதையும் உணர்ந்தாள்.
மடியிலிருந்த தட்டிலிருந்து ஒரு வாழைப்பழத்தை வெகு ரகசியமாக மெல்ல மெல்ல உரித்தன அவன் விரல்கள். இத்தனை கூட்டத்தின் நடுவே அதை எப்படி அவன் வாயில் போட்டுக் கொள்ளப் போகிறான் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கவனித்தவாறு இருந்தாள் மீனாட்சி. தூக்கிவாரிப் போட்டது மறு வினாடி. உரித்த பழத்தை அவ ளிடம் வெகு ரகசியமாக நகர்த்திக் கொண்டிருந்தான் அவன்! அந்தக் கைகள் தன்னை நோக்கி அங்குலம் அங்குலமாக நகர்ந்து வந்தபோது அவள் நெஞ்சு என்னமாய் அடித்துக் கொண்டது! கடைசியில் அதை அவனது பிசு பிசுப்பான விரல்களிலிருந்து தன் விரல்கள் பற்றிக் கொண்ட போது ஏற்பட்ட அந்த முதல் ஸ்பரிசம் எத்தனை இரவுகளும் பகல்களும் திரும்பத் திரும்ப அவள் நினைவில் தோன்றி ஆனந்தம் உண்டாக்கியிருக்கிறது!
அவனுடன் என்ன பேசுவது, எங்கே பேசுவது, எப்ப டிப் பேசுவது என்பதெல்லாம் புரியாமல் ஒரு வாரத்தைக் கழித்தாள். பிறகு ஒரு நாள், இரவு ஏழு மணி சுமாருக்கு ஆஞ்சனேயர் கோவிலில் விளக்குக்கு எண்ணெய் ஊற்றிவிட் டுத் திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை வாசலில் அவனும் ஒரு கிராமத்தானும் பேசிக் கொண்டு நிற்பதைக் கண்டாள். அவன் ரொம்ப ஆத்திரத்து டன், “இன்னொரு தரம் அந்த மாதிரிப் பேசினாயோ, பல்லை உடைத்து விடுவேன்! ராஸ்கல்!” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
அந்தக் கிராமத்தான் தன் வீட்டுக்கு அடிக்கடி நெல் வண்டி ஓட்டி வருபவன் என்று தெரிந்தது மீனாட்சிக்கு. இருவருமே அவளைக் கவனிக்கவில்லை. கிராமத்தான் சொல்லிக் கொண்டிருந்தான். “இதோ பார், தம்பி! உன்னைப் பார்த்து அது ஈன்னு இளிக்கிறதாலே இப்படி ஆத்திரப்படாதே! ஆனால் ஊரெல்லாம் என்ன பேசிக்குது தெரியுமா? ‘அரை மணி நேரம் கட்டிப் புரண்ட திருடன் சும்மா சங்கிலியைப் பறிச்சிக்கிட்டதோட நின்னிருப்பானா? அந்தப் பெண்ணோட மானத்தையும் சேர்த்துத்தான் கொண்டுகிட்டுப் போயிருப்பான்’னு…”
“டேய்!” என்று அவன் கழுத்தை நெறித்துப் பிடித்து உலுக்கினான் அவன். “பேசுகிறவர்கள் கண்ணாலே பார்த்தார்களா?”
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் புயலில் பறக்கும் துரும்பு போலத் தள்ளாடிக் கொண்டு வீட்டை அடைந்தாள் மீனாட்சி. திருடன் வந்த தினத்திலிருந்து தன்னை எல்லாரும் பார்க்கிற பார்வைக்கு அதுவா அர்த்தம்! இளக்காரமாக அவர்கள் பார்ப்பதையா வியந்து பாராட்டுவதாக எண்ணினோம்! அதே சமயம், தன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, தனக்காகப் பரிந்து பேசும் அந்த இளைஞனிடம் அவளுக்கு நன்றி சுரந்தது..
“மீனாட்சி…” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள் அம்மா. ”நாளைக்கு உனக்கு ஸ்கூல் லீவுதானேம்மா?”
“ஆமாம்மா… ஏன்?…”
“ஒன்றுமில்லை மீனாட்சி… உன்னை நாளைக்கு ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துப் போகலாம் என்கிறார் அப்பா. எனக்கும் நல்லதென்று தோன்றுகிறது…”
“எதற்கு அம்மா?”
“சும்மாதான்… வந்து… ஒன்றுமில்லை…”
மீனாட்சிக்குப் புரிந்தது.
ஊரார் பேசட்டும். சொந்த அம்மாவுக்குக் கூடவா அந்தச் சந்தேகம்? அவள் இதயம் வெடித்துவிடும்போல் இருந்தது.
மாடியறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அன்று பூரா சாப்பிடவில்லை. யாருடனும் பேவில்லை.
அழுது அழுது சிவந்த கண்களுடன் மாடி ஜன்னல் வழியே எதிர்வீட்டைப் பார்த்தபோது அந்த இளைஞன் ஒரு வண்டிக்காரனிடம், “பதினொன்று ஐம்பதுக்கு மெயில், நீ பத்தரைக்கெல்லாம் வண்டி கொண்டு வந்து விடு” என்று சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. பிறகு தலை நிமிர்த்தி அவளையும் பார்த்தான்.
அவன் நாளை ஊருக்குப் போகிறான்! இந்த ஊரில் அவள் மீது பிரியம் வைத்திருக்கிற அவளுடைய தூய்மையில் நம்பிக்கை வைத்திருக்கிற – ஒரே ஆத்மாவும் நாளை போய் விடுகிறது!
மீனாட்சியினால் பொறுக்க முடியவில்லை. ஐந்து நிமி டம் – ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். ரொம்ப அவசியமான இரண்டொரு துணிமணிகளைச் சுருட்டி மூட்டை கட்டிக் கொண்டாள்.
மறுநாள் இரவு, மாயவரம் ஸ்டேஷனில் மெயிலுக்காக அவன் காத்திருந்தபோது பக்கத்தில் அவள் நின்றிருந்தாள்.
”மீனாட்சி! என்ன… எங்கே புறப்பட்டு வந்தாய்?” என்று முதலில் பதைத்துப் போனான் அவன். அந்தப் பதைப்பின் நடுவே ஓர் அந்தரங்கமான உவகையும் பரவியிருப்பதை உணர்ந்து கொண்டாள் அவள்.
“சந்தேகப்படுகிறவர்களுடன் இருந்துகொண்டு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதைக் காட்டிலும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவருடன் பட்டினியைப் பகிர்ந்து கொள்வது மேல் என்று தீர்மானத்தோடு வந்து விட்டேன்.”
அவன் சட்டம் படித்த பட்டதாரி. மைனர் பெண்ணைக் கடத்திச் செல்லும் குற்றத்துக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் என்பது வாக்கியம் வாக்கியமாக அவன் மனக் கண்ணில் தோன்றியது. இருந்தாலும், அந்தப் பதினொன்றரை மணி இரவு வேளையில், குளிரும் வெளிச்சமும் கலந்து உறவாடிய ஜங்ஷன் பிளாட்பாரத்தில், குறுக்கும் நெடுக்கும் மக்கள் நடமாடிக் கொண்டிருந்த பரபரப்பான சூழ்நிலையில், அவளை நிராகரித்துத் திருப்பியனுப்ப அவனுக்குத் துணிவு வரவில்லை. மற்றவர்களுக்கு அவள் செய்கை சிறுபிள்ளைத்தனமான ரோஷம் என்று தோன்றக் கூடும். ஆனால் தன்மீது அவள் கொண்டுவிட்ட மட்டற்ற காதலுக்கு அந்த ரோஷத்தை அவள் ஒரு சாக்காக்கிக் கொண்டிருக்கிறாளோ என்று அவனுக்கு எண்ணம் உதித்தது. அந்த எண்ணம் தோன்றியதும் அவளைக் கைவிடக் கூடாதென்ற உறுதி இன்னும் வலுப்பட்டது.
அன்றைய போட்மெயில் அந்த இருவரையும் சுமந்து கொண்டுதான் சென்னையை நோக்கிப் புறப்பட்டது.
அவன் பயந்தபடி ஒரு சிறு புயல் வீசத்தான் செய்தது. ஆனால் மீனாட்சியின் வீட்டார் தங்கள் அவமானத்தை இன்னும் பகிரங்கமாக்கிக் கொள்ள விரும்பவில்லை. எளிமையாக, துரிதமாக, ஒரு கல்யாணத்தைப்பண்ணி முடித்து விட்டு விடைபெற்றுக் கொண்டு விட்டார்கள்.
மீனாட்சி அதற்குப் பிறகும் தன் பெற்றோரிடம் கொண்டிருந்த கசப்பை மாற்றிக்கொள்ளவில்லை. ராமனாதன் ஒரு மயிலாப்பூர் வக்கீலின் கீழே ஜூனியராகச் சேர்ந்தான். பிறகு தனியே தொழில் நடத்தினான். சட்டத்தில் விதித்துள்ளபடி மூன்று வருடம் பிராக்டிஸ் நடத்திய பிறகு மாஜிஸ்டிரேட் வேலைக்கு ஹைகோர்ட்டில் விண்ணப்பித்துக் கொண்டான். பதவி கிடைத்தது. அந்தஸ்து ஏற்பட்டது. குடும்பம் வளர்ந்தது.
ஆனால் இந்த இருபத்தைந்து வருட காலத்தில் ஒருமுறையேனும் மீனாட்சி தன் ஊருக்குப் போகவும் இல்லை. அப்பா அம்மாவைச் சந்திக்கவும் இல்லை. பாம்பு, சட்டையை உரிக்கிற மாதிரி, நினைத்தாலே கசப்பு ஏற்படுத்தும் அந்தப் பகுதியைத் தன் வாழ்க்கையிலிருந்து ஒரே உதறலாக உதறிவிட்டாள். நாலு ஆண்டுகளுக்கு முன்பு அம்மா இறந்தபோது கூட அவள் மாயவரத்தை எட்டிப் பார்க்க வில்லை.
“யாரென்று நினைவு வருகிறதா மீனாட்சி?” என்று அவள் சிந்தனையைக் கலைத்தார் ராமனாதன்.
“வந்தது”. பேப்பரைக் கையிலெடுத்து மீண்டுமொரு முறை செய்தியை வாசித்தாள். ஹைகோர்ட் நீதிபதி கூறியிருந்தார்.
“…பஸ்ஸை வழிமறித்ததும், பிரயாணிகளைக் கத்தியைக் காட்டிப் பயமுறுத்தியதும் சந்தேகமற நிரூபணமாகியிருக் கின்றன. ஏழாண்டுக் கடுங்காவல் கொடுக்கக் கூடிய கடுமையான குற்றங்கள் இவை. இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை தர மாஜிஸ்டிரேட்டுக்கு அதிகாரம் இல்லை என்பது உண்மைதான். அப்படியானால் செஷன்ஸுக்காவது கமிட் செய்திருக்க வேண்டும். எப்படி மூன்றே மாதத் தண்டனை போதுமென்று இந்த மாஜிஸ்டிரேட் நினைத்தார்? ஆச்சரியமாயிருக்கிறது. நீதியின் கரம் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பதைப் போலீசாராவது உணர்ந்து, அப்பீல் கொண்டு வந்ததைப் பாராட்டுகிறேன்.”
தினசரியை மடித்து வைத்தாள். அவளுக்குக்கூட ஆச்சரி யமாய்த்தான் இருக்கிறது. அவள் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தியவன் அதற்குப் பிறகும் தொடர்ந்து குற்றங்கள் செய்து கொண்டிருந்தவன், அவனி டம் எதற்காக இரக்கம் காட்டினார்? ஏன் அவ்வளவு குறை வான தண்டனையுடன் விட்டு விட்டார்? அவர் முகத்தைப் பார்த்தாள். மேலும் மேலும் பதவி உயர வேண்டிய முக்கி யமான கட்டத்தில், ஏன் இப்படி தவறு செய்தார்? அவளுக் கும் விளங்கவில்லை.
மாஜிஸ்டிரேட் மௌனமாகவே இருந்தார் பல நிமிடங்களுக்கு.
“சொல்லுங்கள், ஏன் அந்தத் திருடனுக்குக் குறைவான தண்டனை கொடுத்து, ஹைகோர்ட்டில் இப்படிக் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொண்டீர்கள்?” என்று மீண்டும் தூண்டினாள் மீனாட்சி.
ராமனாதன் அவளுடைய டையை அணைத்தவாறு புன்னகை புரிந்தார்.
”மீனா, அவன் எனக்கு எப்படிப்பட்ட நிம்மதி வழங்கி னான் என்று உனக்குத் தெரியாது. அவனுக்கு என்னை அறியாமலே நன்றி தெரிவித்திருக்கிறேன். அது உலகத்தாருக்குப் புரியாது.”
“நிம்மதியா? அவனாலா?”
சமையற்கார அம்மாள் தலையை நீட்டி, ‘உருளைக் கிழங்கைக் கறி செய்யட்டுமா, பொடிமாஸ் செய்யட்டு மாம்மா?’ என்று கேட்டாள். மகன் குமார், “அம்மா! நான் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போகிறேன்!” என்ற அறிவிப்புடன் சைக்கிளில் மணியடிக்கும் சத்தம் கேட்டது. மகள் சுமதி டிரான்ஸிஸ்டரை மார்பின் மீது சாத்திக் கொண்டு ஹாலில் சோபாவில் படுத்துக் கொண்டாள்.
ஆனால் மீனாட்சி இதொன்றையும் கவனிக்கவில்லை. கணவனின் முகத்தையே திகைப்புடன் பார்த்தவாறு இருந்தாள்.
வழக்கு ஆரம்பமாகும் முதல் தினம்.
கோர்ட் ஹாலுக்குள் மாஜிஸ்டிரேட் ராமனாதன் நுழைந் ததுமே சலசலப்பு மறைந்து நிசப்தம் நிலவியது. மேஜை மீதிருந்த காகிதங்களைச் சரிசெய்து வைத்துக் கொண்ட பின் தினசரி வழக்கப்படி பாக்குப் பொட்டலத்தைப் பிரித்துப் பாக்கை வாயில் போட்டுக் கொண்டு குப்பைக் கூடைக்குள் போட்டார். அவர் ரெடி என்பதற்கு அதுதான் சமிக்ஞை.
அவர் தலை நிமிர்ந்த போது கூண்டிலே குற்றவாளி நின்றிருந்தான்.
எங்கேயோ இவனைப் பார்த்திருக்கிறோமே, எங்கே என்று யோசித்தார் மாஜிஸ்டிரேட். தினம் டஜன் கணக்கான குற்றவாளிகளைச் சந்திக்கிறோம். யாரையென்று நினைவு கொள்ள முடியும்?
இல்லை. இவனிடம் என்னவோ ஒரு ஸ்பெஷல் தன்மை இருக்கிறது. இல்லாவிடில் இப்படி நமக்கு உறுத்தல் ஏற்படாது…
என்ன முயன்றும் அவருக்குக் கோர்ட் நடவடிக்கைகளில் புத்தி செல்லவில்லை. அடுத்து நடைபெற வேண்டிய பல வழக்குகளுக்கு பி.ஓ. ஆர்டர் போட்டு அவரிடம் நீட்டினார் பெஞ்ச் கிளார்க். கனவில் போடுவது போல் அவைக ளில் கையெழுத்துப் போட்டுத் திரும்பக் கொடுத்தார். ஸ்டெ னோகிராபர் தன் டைப்ரைட்டரைத் தூக்கிக்கொண்டு வந்து உட்காருவது எங்கோ மெல்லிய படுதாவுக்குப் பின்னே நடக் கிற மாதிரி தோன்றியது. உணர்ச்சியற்றவராக, மேஜை மீதி ருந்த காகிதங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஃபஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட், பஸ் டிரைவர் கொடுத்த ஒரி ஜினல் கம்ப்ளெயின்ட், சாட்சிகளின் பெயரும் விலாசங்க ளும் கொண்ட ஜாபிதா, 162 ஸ்டேட்மெண்ட் முதலியன ஒழுங்காக இருந்தன. செங்கல்பட்டிலிருந்து இருபத்தெட்டா வது கிலோ மீட்டரில், கிழக்கு மேற்கான சாலையில், ஒரு பாழ்மண்டபத்துக்குப் பக்கத்தில், எதிரும் புதிருமான இரட் டைப் புளியமரத்தின் அடியில் பஸ் வழிமறிக்கப்பட்ட இடம் விரிவான பிளானில் தரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, வூண்ட்ஸ் ரிப்போர்ட், கத்திக் காயம் பட்டுக் கொண்ட மூன்று பிரயாணிகளின் மெடிகல் சர்டிபிகேட்…
எல்லாம் ஒழுங்காக இருக்கின்றனவா என்பதைக் கவ னிப்பதில் ஈடுபட்டுவிட்டதால் அவனை மறந்தே போயி ருந்தார் கொஞ்ச நேரத்துக்கு. மறுபடி அவனைப் பார்த்த தும் மறுபடி அந்தக் குழப்பம் வந்தது.
சட்டென்று ராமனாதனுக்கு ஞாபகம் வந்து விட்டது அவன் யார் என்று.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், தெரு விளக்கின் குறை வெளிச்சத்தில் சில வினாடிகள் தான் போராடினார் என்றாலும், அந்தத் தடித்த உதடுகளும் கன்னத்தில் முசுக்கட்டைப் பூச்சி போல் விழுந்திருந்த தழும்பும் அவருக்கு மறக்கவில்லை.
‘அவனா!…’
“எசமான், என்னை அபாண்டமாப் பிடிச்சு இந்தக் கேசிலே மாட்ட வைச்சிருக்காங்க! நீங்கதான்…” என்று எதிரி கத்த ஆரம்பித்தான் தன் கூண்டிலிருந்து.
“சைலன்ஸ்!” என்று ஆர்டர்லி அதட்ட, அவனுடைய வக்கீலே “நீ சும்மா இரப்பா” என்று அவனை அடக்கினார்.
குறைந்தபட்சம் ஒரு டஜன் தடவையாவது சிறைக்குச் சென்று வந்திருப்பவர்கள்தான் இப்படி முதல்நாளே புலம்புவது வழக்கம் என்பது மாஜிஸ்டிரேட்டுக்கு அனுபவ பூர்வமாகத் தெரியுமாகையால், அந்தக் கூவலைக் கேட்கும் ஒவ் வொரு முறையும் அவர் புன்னகை புரிவது வழக்கம். ஆனால் இந்த முறை ராமனாதன் அதுவும் செய்யவில்லை. தன் எண்ணங்களில் தானே மூழ்கிக் கிடந்தார். இன்ட்டர்ப் ரெட்டர் அவரருகே வந்து நின்று கொண்டு “கோர்ட்டிலே எல்லாப் பேப்பர்களுக்கும் நகல் கொடுப்பார்கள். வாங்கிக் கொண்டு போய்ப் படித்து வைத்துக் கொள். அல்லது வக் கீலய்யாவைப் படித்துக் காட்டச்சொல். நாளைக்குக் கேள்வி கள் கேட்பார்கள். ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும் தெரிகிறதா?” என்று ஒவ்வொரு கேசிலும் எதிரிக்குச் சொல்ல வேண்டிய கடமைப்படி இன்றைக்கும் கூறினார்.
எதிரியின் வக்கீல் தமது நன்றியை முணுமுணுத்து விட்டு, கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். கோர்ட் கலைந்தது. எல்லாரும் எழுந்து கொண்டார்கள்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் மாஜிஸ்டிரேட். கிட்டத்தட்ட ஐம்பது வயதைத் தாண்டிய இந்த நிலையிலும் எத்தனை கட்டுமஸ்தாக, வாட்ட சாட்டமாக இருக்கிறான்!
‘வந்த திருடன் சும்மா போயிருப்பானா?’ என்று பல வருடங்களுக்கு முன்பு எல்லாரும் பேசிய பேச்சு இப்போது தன்னுள் ஒலிப்பதை உணர்ந்தார்.
அன்று மாலை கோர்ட்டிலிருந்து திரும்பியதும், “மீனாட்சி, இன்று ஒரு கேஸ்…” என்று அவளிடம் விஷயத்தைக் கூறியதும்…
“ஓகோ” என்று மட்டுமே சொல்லிவிட்டு, ஏதோ அவசர வேலை நினைவு வந்தவள் போல் அகன்று விட்டாள் மீனாட்சி. ஏன் அதைப் பற்றிப் பேச அவள் விரும்பவில்லை?
எல்லாரிடமும் சாமர்த்தியமாக மறைத்து வந்திருக்கும் உண்மையை நம்மிடம் ஒப்புக்கொள்ளும்படி ஆகி விடப் போகிறதே என்று பயப்படுகிறாளா? அந்த அனுபவத்தின் கசப்புத் தன் முகத்தில் பிரதிபலித்து இவர் பார்த்து விடும்படி நேரிட்டு விடுமோ என்று அஞ்சுகிறாளா?
நாமா இப்படி நினைத்தோம்? ராமனாதன் வெட்கினார் தனக்குள். இந்த மட்டமான, அசிங்கமான எண்ணம் எப்படித் திடுதிப்பென்று மனத்தில் உதித்தது?
திடுதிப்பென்று அல்ல. ரொம்ப நாளாக – ஆரம்பக் காலந்தொட்டு – அந்த எண்ணம் மறைந்து இருக்கிறது என்றும் நடுநடுவே தலைதூக்கித் தன் சொரூபத்தைக் காட்டாமல் இருக்கவில்லை என்றும் அவர் உணர்ந்தார்.
முதன் முதல் அவருடைய சீனியர் அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தபோது, இருபது ரூபாயில் ஒரு கவரிங் செயின் வாங்கி வந்து மீனாட்சியின் கழுத்தில் பிரியமாக அணிவித்ததும், சங்கிலியை அறுத்ததால் ஏற்பட்ட தழும்பு தன் கண்ணில் பட்டுச் சங்கடம் ஏற்படுத்தியதும் ஞாபகம் வந்தன. ஊரெல்லாம் மீனாட்சியைப் பற்றி அபவாதம் பேசியபோது ஏற்படாத சந்தேகம் பிறகு அவருக்கு ஏற்பட்டது. ‘நீங்கள்தான் தஞ்சம்’ என்று அவள் ஓடி வந்து அடைக்கலம் புகுந்ததால், அந்த அபவாதம் உண்மையாக இருக்காது என்று பெருந்தன்மையாக விட்டு விட்டோமோ எனத் தமக்குள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார். அதன் பிறகு, பல சந்தர்ப்பங்களில் அந்தச் சந்தேகம் பிறப்பதும் மறைவதுமாகத் தான் இருந்து வந்திருக்கிறது.
அந்தச் சந்தேகத்துக்குக் காரணமானவன் இப்போது நேருக்கு நேரே நின்றுகொண்டு அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்!
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. எதிரிக் கூண்டிலே அவன் வந்து நிற்கின்ற போதெல்லாம், தான் குற்றவாளி போலவும் அவன் தண்டனை கொடுக்கப் போகிற நீதிபதி போலவும் ராமனாதன் கூசிக் குறுகிக் கொண்டிருந்தார்.
எக்ஸாமினேஷன் இன் சீஃப் நடந்தது. அதைத் தொடர்ந்து குறுக்கு விசாரணைகள் நடைபெற்றன. இடை இடையே ரீ-எக்ஸாமினேஷன் இடம் பெற்றது. சாட்சிகள் வந்தார்கள் பேசினார்கள். கூண்டிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.
மணிக்கு மணி, தினத்துக்குத் தினம் நரக வேதனை யான சேற்றில் ஆழ ஆழப் புதைந்து கொண்டிருந்தார் மாஜிஸ்டிரேட். ஓரோர் சமயம், முழங்கைகளை மேஜைமீது ஊன்றிக்கொண்டு, விரல்களைப் பிணைத்துக் கூடாரம் கட் டிக் கொண்டு, அவற்றின் கீழாக எதிரியை ரகசியமாக நோக் கும்போது அவன் ஒரு மர்மமான முறையில் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்ற பிரமை ஏற்பட்டு இன்னும் திடுக்கிட்டார்.
அவனையே கேட்டு விடலாமா என்றுகூட எண்ணினார். ‘எதிரியிடம் நான் தனியே பேச வேண்டும்’ என்று இன்ஸ் பெக்டரிடம் சொன்னால் போதும் – அவர் சிறிது ஆச்சரியப் படக் கூடுமே தவிர, இந்தக் குறிப்பிட்ட வழக்கைப் பற்றி ஏதோ கேட்கப் போகிறார் போலும் என்றுதான் நினைத்துக் கொள்வார்.ஆனால் நம் சந்தேகத்தை அவனிடம் வாய் விட்டுக் கேட்பது எவ்வளவு பெரும் அவமானம்! அப்படியே கேட்டாலும், ‘சே, சே! அன்று எதுவும் நடக்கவில்லை’ என்று அவன் சொன்னால் உடனே நமக்குச் சமாதானம் ஏற் பட்டுவிடப் போகிறதா? அல்லது, வேண்டுமென்றே அவன், ‘ஆமாம். அன்று அவளை நான் கெடுத்துவிட்டுத் தான் போனேன்’ என்று சொன்னால் என்ன செய்வது?
தினம் தினம் மாலையில் வீடு திரும்பி, மீனாட்சி செய் யும் சாதாரணமான தினப்படி பணிவிடைகளை ஏற்றுக் கொண்டபோது முள்வேலியின் மீது அழுந்த உரசிக் கொண் டிருப்பது போல் ரணத்தினால் எரிந்தது உடம்பு. இந்தத் தோள்களை அவன் அழுத்தியிருப்பான். இந்தக் கைகளை அவன் பின்னியிருப்பான், இந்த முகத்தில் முத்தாடியிருப் பான் இப்படி அடுக்கடுக்காக அவர்மனம் அருவருக் கத்தக்க கற்பனைகளை விரித்துக் கொண்டே சென்றது.
இன்னும் இரண்டு நாள் சென்றிருந்தால் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால் தெய்வாதீனமாக ஒரு திடீர்த் திருப்பம் நிகழ்ந்தது வழக்கில்.
எதிரியின் கட்சி வாதித்தது – இவனுக்கும் அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸின் டிரைவருக்கும் ஒரு பெண் விஷயமா கத் தனிப்பட்ட விரோதம். டிரைவரின் முன்னாள் காதலியொருத்தி இப்போது தன்னுடன் இருப்பதாகவும், அவன் அவளைத் திரும்பக் கூப்பிட்டதற்கு அவள் மறுத்துவிட்டதாகவும், அந்த விரோதம் காரணமாகவே இந் தப் பஸ் வழிப்பறி சம்பவத்தை ஜோடனை செய்து தன்னை வழக்கில் சிக்க வைத்திருப்பதாயும், கண்டக்டர் பிரயாணிகள் எல்லாரும் இதற்கு உடந்தை என்றும் அவன் கூறியிருந்தான். தன் தரப்பில் ஒரு பெண்ணை அழைத்து வந்து அதற்கேற்றபடி சாட்சியமும் சொல்ல வைத்திருந்தான்.
அரசாங்க வக்கீலும், விசாரணைகள் செய்து வழக்கைத் தாக்கல் செய்திருந்த இன்ஸ்பெக்டரும் அசகாய சூரர்கள். எதிரியின் ஆரம்ப காலச் சரித்திரத்தை ஆராய்ந்து வைத்துக் கொண்டு, கமுக்கமாய்க் காத்திருந்தார்கள்.
சமயம் வந்ததும் வெகுமிடுக்காக அரசாங்க வக்கீல் எழுந்து கொண்டு எதிரியை மடக்கினார்.
”ஏனப்பா, இவள் உனக்கு எத்தனை வருடமாகக் காதலி?”
“அஞ்சாறு வருசமாங்க.”
“அதற்கு முன்னாலே.”
“உண்மையை ஒப்புக்க என்னங்க வெட்கம் எசமான்? இவளுக்கு முன்னாலே வேறே ஒரு கழுதை என்னோடு இருந்திச்சு. என்னை விட்டுவிட்டு ஒரு சாயபுவோடு ஓடிட்டுது.”
“அதாவது உனக்குப் பல காதலிகள் இருந்திருக்கிறார்கள் என்கிறாய்?”
“ரொம்ப இல்லீங்க, கொஞ்சம் உண்டுங்க.”
”யாருக்காவது குழந்தை பிறந்திருக்கிறதா?”
“ஒருத்திக்குப் பிறந்தது. செத்துப் போச்சுங்க.”
“அடப் பாவமே… அதிருக்கட்டும், உனக்கு இருபது வயதாயிருந்தபோது அதாவது முதல் முதல் வழிப்பறி திருட்டு வேலைகளில் நீ புகுந்த போது – எந்த ஊரில் இருந்தாய்? நினைவிருக்கிறதா?”
“அப்ஜெக்ஷன், மை லார்டு” என்றார் எதிரியின் வக்கீல்.
”இது இப்போதைய வழக்குக்கு மிக முக்கியம்” என்றார் அரசாங்க வக்கீல்.
“கேள்வியை வேறு விதமாக அமைத்துக் கேளுங்களேன்” என்றார் மாஜிஸ்டிரேட்.
“சரி, உன் இருபதாவது வயதில் நீ எங்கேயப்பா இருந்தாய்? ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லு.”
“தஞ்சாவூரில்”
“ஒருநாள், அரசியல் ஊர்வலம் என்ற பெயரில், நீயும் சில குண்டர்களும் சேர்ந்து கலவரங்கள் ஏற்படுத்தியதுண்டா?”
“இல்லீங்க… அது அரசியல் ஊர்வலம்தாங்க.”
“பொய் பேசாதே. எல்லாம் போலீஸ் ரெக்கார்டில் இருக்கிறது.மானம்பூச்சாவடியில் ஒரு ஜெனரல் ஷாப்பிற்குள் நீ பூட்டை உடைத்துப் புகுந்து, பொருள்களைத் களவாடிக் கொண்டிருந்தபோது போலீஸ் உன்னைக் கையும் களவுமாகப் பிடித்ததுண்டா?”
எதிரி தலை குனிந்தவாறு இருந்தான். ”உண்டு இல்லைன்னு சொல்லப்பா” என்று பெஞ்ச் கிளார்க் மாஜிஸ்டிரேட்டின் சார்பாக ஓர் அதட்டல் போட்டார்.
“ஆமாங்க” என்றான் அவன்.
“நீ தப்பியோடப் பார்த்த போது, ஒரு போலீஸ்காரர் லாட்டியினால் உன் பிட்டத்தில் அடித்தாரா?”
“ஆமாங்க.”
“படக்கூடாத இடத்திலே அடிபட்டு, நீ ஆஸ்பத்திரியிலே அட்மிட்டாகி ஆபரேஷன் நடந்ததா?”
”ஆமாங்க.”
“இப்போது நான் கேட்கப் போகிற கேள்விக்கு நீ கூச்சப் படாமல் பதில் சொல்ல வேண்டும். உனக்குச் செய்த ஆபரேஷனால் நீ உயிர் பிழைத்தாயே தவிர, ஆண்மையின் சின்னமே பறிபோய் விட்டது. உண்மையா இல்லையா?”
என்ன இது? மாஜிஸ்டிதிரேட் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, கேள்வியை இன்னொரு முறை சொல்லும்படி அரசாங்க வக்கீலைக் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டார்.
எதிரி மென்று விழுங்கிக் கொண்டு, “வந்து… ஆமாங்க…” என்றான்.
“ஆகவே, உன் இருபதாவது வயதுக்குப் பிறகு – அதாவது கடந்த முப்பத்தாறு வருடமாக உனக்கு எந்தப் பெண்ணுடனும் சகவாசம் கிடையாது. சகவாசம் வைத்துக் கொள்ள முடியாது. எந்தப் பெண்ணையும் நீ ஆசைப்படவோ, பலாத்காரப்படுத்தவோ, சேரவோ உனக்குச் சக்தி கிடையாது. உன் உடற்கூறு அப்படி ஆகிவிட்டது. சரியா இல்லையா?”
“சரிதாங்க.”
“தட்ஸால் யுவர் ஆனர்” என்று சொல்லிவிட்டு அரசாங்க வக்கீல் தன் இருக்கையில் அமர்ந்த அந்தக் கணத்தில், மாஜிஸ்டிரேட் ராமனாதனின் கண்களில் குபுக்கென்று நீர் கொப்புளித்துக் கொண்டு வந்தது.
அவர் சொல்லி முடித்தார். மீனாட்சி குனிந்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தாள். நீண்ட பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவர் கூறினார்.
”தண்ணீருக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தவனை வெளியே இழுத்துப் போட்ட மாதிரி அன்று அந்தத் திருடன் எனக்குப் பேருபகாரம் செய்து விட்டான் மீனாட்சி. என் மனசிலிருந்த பெரிய சுமையை அந்த ஒரே தகவலின் மூலம் அவன் அகற்றி விட்டான். அவன்பால் எனக்கு வெள்ளமாய் நன்றி சுரந்தது. அவனை விடுதலையே செய்திருப்பேன். ஆனால் வழிப்பறிக் குற்றம் நன்றாய் ருசுவாகி இருந்தது. ஆகவே மூன்று மாதக் கடுங்காவல் விதிப்பதோடு நிறுத்திக் கொண்டேன். அதற்குமேல் அவனைத் தண்டிக்க எனக்கு எப்படி மனம் வரும் மீனாட்சி? நீயே சொல்.”
மீனாட்சி, மெதுவே அந்தப் பேப்பரைச் கையில் எடுத்து மீண்டும் மீண்டும் அந்த வரிகளின் மீதே கண்களை ஓட்டினாள்.
மாஜிஸ்டிரேட் தொடர்ந்தார்.
“இப்படி ஹைகோர்ட்டில் என்மீது ஸ்ட்ரிக்சர் பாஸ் பண்ணி விட்டார்களே என்று சற்றுமுன் கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருந்தது. ஆனால் எனக்கு அவன் தந்த ஆறுதல் மன நிம்மதி இருக்கிறதே அதைப் பார்க்கையில் அதற்காக எந்த விலையும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லையா மீனா?”
மீனாட்சி பதில் சொல்லவில்லை.
அன்று இரவு வெகு நேரம் வரை தன் டயரியை எழுதிக் கொண்டிருந்தார் மாஜிஸ்டிரேட்.
திரும்பிப் பார்த்தபோது, கட்டிலின் விளிம்பில் மீனாட்சி படுத்திருப்பது தெரிந்தது. புன்சிரிப்புடன், ”மீனா! நகர்ந்துகொள். விழப்போகிறாய்” என்று அவளை இடுப்பில் கை கொடுத்து நகர்த்திவிடப் போனார்.
”நானே நகர்ந்து கொள்கிறேன். நீங்கள் தொட வேண் டாம்” என்று கூறிக் கட்டிலின் உட்பக்கமாக நகர்ந்து கொண்டாள் மீனாட்சி.
“மீனா!” திடுக்கிட்டார் மாஜிஸ்டிரேட்.
அவள் கண்களில் நீர் தளும்பிக்கொண்டிருந்தது. ”அன்றைக்கு என்மீது என் அம்மாவும் அப்பாவும் கொஞ்ச காலத்துக்கு ஒரு ரகசியமான சந்தேகம் கொண்டிருந்தார்கள். அதைப் பொறுக்க மாட்டாமல், அவர்களைத் துறந்து உங்கள் பின்னால் வந்தேன். அதே சந்தேகத்தை இருபத்தைந்து வருஷ காலமாக உங்கள் மனத்தில் வைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களே, நான் யாரைத் துறப்பது, எவர் பின்னால் செல்வது? உங்களை முற்ற முழுக்க நம்பி, உங்களிடம் பரி பூரணமாக என்னை ஒப்படைத்து வந்திருக்கும் இத்தனை காலமும், என்னைச் சந்தேகக் கண்ணுடனே நீங்கள் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!”…
”மீனா! இது… சந்தேகமில்லை… ஒரு உறுத்தல்…அதுவும் சரியாகிவிட்டது…”
“உங்களுக்குச் சரியாகிவிட்டது. ஆனால் எனக்கு? தெய்வமே! இருபத்தைந்து வருடத்துக்கு முன்னால் இருந்த ரோஷமும், வேகமும் இப்போது எனக்கு இருந்திருக்கக் கூடாதா? இருந்திருந்தால் ஒரு ஸ்பூன் விஷத்தில் என் வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிடுவேனே? இல்லையே ! இல்லையே!”
விம்மி விம்மி மீனாட்சி அழுதபோது, ஹைகோர்ட்டில் கண்டனத்தைக் காட்டிலும் பெரியதான தண்டனைமை இந்தப் படுக்கையறையில் பெற்று விட்டோமே என் மாஜிஸ்டிரேட்டின் மனமும் அழுதது.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.