கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2025
பார்வையிட்டோர்: 2,417 
 
 

(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் ஒன்று

அடுக்கப்பட்டிருந்த சுருட்டுப் பெட்டிகளைத் தாண்டி. வந்த மூட்டைப் பூச்சிகள் அவனது இரத்தத்தை உருசித் துச் சுவைக்கலாயின. ஜும்மா பள்ளிவாசலில் ருந்து ஒலித்து வந்த அதிகாலை பாங்கு சுருதிலயத்துடன் அவனது செவிகளிலே கர்ண கடூரமாய் விழுந்தன. 

சின்னத்தம்பி கண்ணைத் திறந்து பார்த்தான். கடைக் குள் ஒரே இருள். பக்கத்தே படுத்திருந்த ரணசிங்காவின் அழுக்கேறிய தலையணையில் இருந்து வந்த தேங்காய் எண் ணெய் நெடி அவனது நாசியைத் துளைபோட்டது. கோடா போட்டுப் பெட்டியில் அடைபட்ட சுருட்டு நெடி அதனை விட மோசமாயிருந்தது. மெல்ல எழுந்து சுருட்டுப் பெட் டிகளின் இடைகளிற் குதியைப் பொருத்திக் கீழே இறங்கினான். 

எங்கே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க விடா மற் தடுத்த இருளைக் கிழித்தது அவன் கிழித்த தீக்குச்சி. குப்பி விளக்கைத் தேடி தீக்குச்சி அணையும் முன்னால் விளக்கை ஏற்றிவிட்டு கைகளை உயர்த்தி நெட்டி முறித்துப் பெரியதாகக் கொட்டாவி விட்டான், அவனது கொட் டாவியைக் கேட்ட கணக்குப்பிள்ளை மயில்வாகனம் கல்லா மேசையில் அருண்டு புரண்டு படுத்தான். 

சின்னத்தம்பி குப்பிவிளக்கை எடுத்துச் சென்று தன்னு டைய றங்குப்பெட்டியைத் திறந்தான். றங்குப்பெட்டி யின் மூடி கிறீச்சிட்டது. அம் மூடியின் உட்புறத்தில் அவனுக்குப் பொடிஹாமி தந்த ஒரு கிழவரின் படம் ஒட் டப்பட்டிருந்தது. கொஞ்சநேரமாக அவன் அந்தப் படத் தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். 

பின்னர் இளஞ்சிகப்புப் பற்பொடி அடைக்கப்பட்டி ருந்த அந்த மைப்போத்தலை எடுத்துப் பற்பொடியைக் கைகளிலே கொட்டிக் கொண்டான் றங்கை அடித்து மூடி விட்டுக் கடையின் பின்புறவாசலினால் வெளித்தெருவோரம் வந்தான். 

நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிக் காட்டின. இன்றைய தினம் பனிக்குளிர் சற்றே குறைந்த போதி லும் எங்கும் வெள்ளை வெளேரெனப் பனியினது ஆட்சி தான் துலங்கியது. கொடுப்புள் கைவிரலைத் திணித்துப் பல்லைத் தீட்டிக் கொண்டே நடைபோட்டான். எதிரே வேகமாக ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது.வெள்ளை வேட்டியைக் கண்டும் சரக் சரக்கென எழுந்து தேயும் செருப்பின் லயத்தைக் கேட்டும் படுத்திருந்த குட்டை நாயொன்று குரைத்துத் தீர்த்தது. 

“எட, கந்தசாமியே! என்ன விசேஷம்?” 

“ஓம் சின்னத்தம்பி! நான் யாழ்ப்பாணம் போறன் வீட்டிலை இருந்து வரச்சொல்லி ராத்திரித் தந்தி வந்தது. 

“ஆருக்கேன் சுகமில்லையா?” 

“சீ. அப்பிடியொண்டும் இராது.” 

“பின்னை நீ என்னெண்டு நினைக்கிறாய்?” 

“ஊரிலை இருந்து வந்தவையள் என்னட்டை ரகசிய மாகச் சொன்னவையள் எனக் குப் பொம்பிளை பாக்கிற தெண்டு அதாய்த் தான் இருக்கும்.” 

“அடி சக்கை” 

“அதான் இப்ப கண்டிக்குப் போய் அங்கையிருந்து குருநாகல் பஸ்ஸைப் பிடிச்சு காலமை யாழ்தேவியிலை போகப்போறன். சரி வரட்டே! 

“சரி வரேக்கை கலியாணவீட்டு முறுக்குகளை கொண்டர மறந்திடாதை” 

சிரித்துக் கொண்டே விடைபெற்றான் கந்தசாமி. சின் னத்தம்பியைப் போன்ற கடைச் சிப்பந்தி. கம்பளையிலுள்ள கடைச் சிப்பந்திகளை எல்லாம் அடியிலிருந்து நுனிவரையில் சின்னத்தம்பிக்குந் தெரியும். 

கம்பளைக்குப் பதினெட்டாவது வயதில் வந்து தொடர்ந்து இருபது வருடங்களாக அங்கேயே இருப்பவன். தீபாவளி, பொங்கல், சடங்கு வீடுகள் இப்படி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் முதலாளியார் தரும் விடுதலையில் யாழ்ப் பாணத்திலுள்ள தன்னுடைய வீட்டிற்குப் போய் விட்டு வருவான். 

நேரே இலவத்துறைக்குப்போய் இக்பாலை எழுப்பி மகா வலி கங்கையில் ஒரு தோய்ச்சல் போட்டுவிட்டு ஐந்தரை மணிக்கு முன்னர் திரும்பிட எண்ணிய வண்ணம் நடந்தான். அழுக்குப் படிந்த சாரமும் கிழிந்துபோய்விட்ட சேட்டும் அந்த அதிகாலைக் கூதலைப் போக்கிட உதவவில்லை. 

பற்பொடி தீர்ந்தது. இக்பாலின் வீடும் வந்தது. 

சாக்குத் தட்டிக்கு வெளியே நின்றவாறு இக்பாலுக்குக் குரல் கொடுத்தான். சற்றுத் தூரத்தில் ஒளிர்ந்து கொண் டிருந்த தெருவிளக்கு அவனது சிவந்த கண்களை கூசச் செய்தது. 

சாக்குத் தட்டியை விலக்கிக் கொண்டு வந்தவள் இக் பாலின் தங்கை பாத்திமா. மேக முகிலிடை நிலவென சீலைத் தலைப்பின் முக்காட்டிடை தெரிந்தது அவளது முகம். அவள் ஓர் இளம் விதவை. இருபத்து மூன்றாம் வயதிலேயே கைம் மைக் கோலம். இரண்டே இரண்டு ஆண்டுகள் தான் சலீமின் மனைவியாக அவளால் வாழமுடிந்தது. எஸ்டேட் லொறிச் சாரதியான சலீம் றம்பொடைப் பள்ளத்தாக் கிலே வீழ்ந்து பிணமாகிப் போனவன். அடையாளச் சின்ன மாக ஒரு குழந்தை கூடவாவது பிறக்கவில்லை. பாத்திமா வின் இளமை தன்னும் இன்னமும் மறையவில்லை. 

“அஸ்ஸலாமு அலேய்க்கும்” 

சின்னத்தம்பியை வரவேற்றாள். சின்னத்தம்பிக்கு இந் தச் சம்பிரதாயங்கள் பிடிக்காத போதும். 

“வாலேய்க்கும் ஸலாம்” 

“நாணா இப்பத்தான் எழும்பிச்சுது. தொழுகை செய் யிது இருங்கோ வந்திடும்.” 

பாத்திமா சாக்குத்திரையுள் மறைந்தாள். 

“பிஸ்மில்லாஹ் ஈர் ரஹ்மான் ஈர் ரஹீம்”

அரபு எழுத்துப் பொறிக்கப்பட்ட பிறேம் ஒன்று வாசலில் தொங்கிக் கொண்டிருந்தது. 

உளுத்துப்போன சுவரின் பூச்சுக் கழன்ற இடங்களின் ஊடாகச் செங்கட்டிகள் தலையைக் காட்டின. இக்பால் தோளிலே பழுப்பு நிறச் சால்வையைப் போட்ட வண்ணம் வெளியே வந்தான். குந்தியிருந்த சின்னத்தம்பி எழுந்து மெளனமாக அவனைப் பின் தொடர்ந்தான். 

இக்பாலிற்கு இருபத்தாறு வயது இருக்கும். மிக நோஞ் சலான உருவம். சின்னத்தம்பி தொழில் புரிகின்ற அதே கடையில்தான் தொழில் செய்பவன். ஆயினும் சின்னத் தம்பியின் வேதனம் ஐம்பது ரூபாய். இக்பாலின் வேதனம் அறுபத்தைந்து ரூபாய். இக்பால் தன்னுடைய உணவு விட யத்தை வீட்டோடு வைத்துக் கொள்ளுபவன். ஆதலாலே தான் இந்த வித்தியாசம். 

ரணசிங்கா இதுபற்றி ஒருநாள் கேலியாகவே சொன்னான். 

“நாய்க்குச் சாப்பாடு போடுவது போல நாங்கள் செத் துப் போகாமல் இருந்து முதலாளிக்கு மாத்திரம் ஊறுவ தற்காகத்தான் மாசாமாசம் பதினைஞ்சு ரூபாய்ச் சாப்பாடு” 

வெள்ளம்போல மகாவலிகங்கை ஓடிக்கொண்டிருந்தது: கௌபீனத்துடன் இருவருமாய் இறங்கித் தோய்ந்தார்கள்.

“சே! தபால் வேலை நிறுத்தத்தால எவ்வளவு பேருக்கு எவ்வளவு கஷ்டம்” 

இக்பால் சொன்னான். 

“ஒவ்வொரு வேலை நிறுத்தங்களும்தான் வர்க்க முரண் பாடுகளை வளர்த்து உழைப்பாளிகளை ஐக்கியப்படுத்தி வலு வாக்கும்.” 

சின்னத்தம்பி சொன்னான். 

“கண்டறியாத கதை கதையாதே! இந்த உலகத்தைப் படைச்ச அல்லாஹ்ஹில கூட நம்பிக்கையில்லாத கொம்யூ னிஸ்டுகள் வேலை நிறுத்தம் எண்ணு முரட்டுப் பிடிவாதம் பிடிச்சு நாட்டை எல்லாங் குட்டிச் சுவராக்கிப் பிடுவாங் கள்” 

“ஒவ்வொருநாளுங் கஷ்டப்படறவனாய் இருந்து கூட உனக்கு உன்னைப்போல இருக்கிறவங்களின்ரை கஷ்டங்கள் தெரியவில்லையே” 

“உனக்கு மட்டும் தெரியுதோ?” 

“எனக்கு நல்லவழி சத்தியவழி தான் நல்லாய்த் தெரியும்.. 

“எதடா நல்ல வழி? இப்ப இங்கையுள்ள எல்லாரும் சுதந்திரமானவையள் தானே” 

சின்னத்தம்பி பெரிதாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பினிலே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன. தண் ணீரை அள்ளி வாயிலே விட்டுக் கொப்பளித்தான். சற்றே ஆழமான பகுதியை நோக்கி எதிர்நீச்சலடித்து முன்னேறி னான் சின்னத்தம்பி. இக்பால் கரையில் நின்று கொண்டே குளிக்கலானான். பழக்கமில்லாதவர்கள் அந்த விடிகாலை வேளையிலே குளித்தால் ஜலதோஷம் நிட்சயம். 

இக்பால் சாகிறாக் கொலிஜ்ஜிலே எச்.எஸ்.ஸி. வரையில் படித்தவன். படித்தபின்னர் மூன்றரை வருடங்களாக வேலை தேடும் படலத்திலேயே போக்கினான். வாரந்தவறா மல் வர்த்தக மானியில் வெளியாகும் வேலை விண்ணப்பங் களை எழுதித் தள்ளினான். ‘இன்ஃபுளுவன்ஸு’ பண்ணிக் கூடப் பார்த்தான். கொழும்பிலே பெரிய கைகளையெல்லாம் தெரிந்த தன்னுடைய மசீனாவோடு கூடபோய் நின்று முயற் சித்தான். பலன் எல்லாம் பூஜ்ஜியம். அவனுடைய உம்மா வும் வாப்பாவும் அவனுக்குச் சுயபிரக்ஞையை உண்டாக்கித் திட்டித் தீர்த்தனர். அதன் பின்னரே சொக்ஸ்சும் சப் பாத்தும் அவன் ஆசையுடன் போட்டுப் பார்த்த லோங்ஸு களும் கழற்றப்பட்டன. சாரத்தை மாட்டினான். தவிர்க்க முடியாத நிலைமையை அவன் உணர்ந்ததன் பின்பே அவன் தனலட்சுமி ஸ்ரோர்ஸின் சிப்பந்தியாகினான். இத்தனைக்கும் அவனுடைய வாப்பா ஒரு ரயில்வே போட்டர். 

இரவு பத்தரை மணிக்கு ஜனதா ரீறூம்களிலேயிருந்து தேசீய கீதம் பாடிடும் வேளைகளில்தான் அவன் வீட்டிற்குப் போவான். காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து தொழுகை செய்வான். பின்னர் வழமையாய் சின்னத்தம்பி யோடு சேர்ந்து குளிப்பான். மத்தியானம் ஒரு தடவை யும் பின்னேரம் ஒரு தடவையும் வீடுபோய் உணவு உண்டு மீளுவான். இருப்பினும் இக்பாலிடம் அசைத்திட முடியாத இறைபக்தி இருந்தது. இது கண்ட கடை முதலாளியார் அவனுக்கு இரண்டு மணிநேர வெள்ளிக்கிழமை லீவு தந் தார். அவனுடைய இந்த வாய்ப்பைப் பார்த்து ரணசிங்கா மயில்வாகனம், தேவராசா, சின்னத்தம்பி. யாவரும் வாயூ றினர். தேவராசாவிற்குத் தானும் கதிரேசன் கோவிலுக் குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ஊர் சுற்றி வர மிக ஆசை. 

இக்பாலின் மனோநிலை மிக விசித்திரமானது. கடை யிலுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து சினிமா பார்க்கப் போனால் அவனுக்குக் கலரியிலே இருக்கக் கூட மனம் வரு வதில்லை. அவன் சொல்லுவான். 

“படம் பார்க்க வந்தால் முதல் வகுப்பிலே போயி ருந்து பார்க்கணும். இல்லாட்டிப் போனா படம் பார்க்காம இருக்கணும்.'” 

அதற்குச் சற்றே உயர்வான கணக்கப்பிள்ளை அந்தஸ்துள்ள மயில்வாகனம் சொல்லுவான்: 

“ஒரு படத்திற்கு முதல் வகுப்பிலை ரிக்கற் எடுக்கிற காசுக்கு நாலு படம் கலரியிலை பார்க்கலாமே” 

”சே! நீ ஒரு நப்பி. நாலு படம் கலரியிலை இருந்து பார்க்கிறதை விட ஒரு படம் முதல் வகுப்பில இருந்து பார்க்கிறது தான் நல்லது.” 

எல்லோரும் அவனுடைய பதில் கேட்டுச் சிரிப்பார்கள். உடனே இக்பாலின் முகம் கோபத்தால் வெளிறும். 

இக்பாலின் வாப்பா தன்னுடைய பொருளாதாரத்தை யும் மீறி இக்பால் எஸ். எஸ். ஸி. சித்தியடைந்தமைக்கு வாங்கித் தந்த ஸீக்கோ கடியாரம் இன்னமும் பளபளப் புக் குன்றாமல் மினுங்கும். பசு தனது கன்றுக் குட்டியை நாக்கால் நக்கி மிருதுவாக்குதல்போல் அவனும் தன்னுடைய நாக்கால் நக்கிக் கைக்குட்டையால் மிருதுவாக்கிக் கொள்ளு வான். அவன் சம்பளம் முழுவதையுமே மாதந் தவறாமல் உம்மா கையிலே கொண்டுபோய்க் கொடுப்பான். அப்படிக் கொடுப்பதிலேஅவன் பெருமிதமும் அடைந்தான். 

குளித்துக் கொண்டிருந்த சின்னத்தம்பியைக் கூதல் ஆக்கிரமித்தது. எழுந்து சென்று நதிக்கரையில் வைத்திருந்த சட்டையால் மேனியைத் துடைத்துவிட்டு அதே சட்டையை ஆற்றிலே நனைத்து முறுக்கிப் பிழிந்தான். இக் பாலும் புறப்பட்டான். 

“சரியான குளிர்!” 

“வீட்ல உம்மா கோப்பி வைச்சிருக்கும். வாயேன் குடிச்சிட்டுப் போகலாம். 

“கடையிலை பெடியன் போனாப் பிறகு நான்தான் இப்ப சமையல். பாத்தியா எங்களின்ரை கஷ்டங்களை” 

“மொதலாளி வேறை சமையல்காரப் பெடியனை ஏன் இன்னும் பிடிக்கவில்லை?” 

“பிடிச்சா அவனுக்குச் சம்பளம் குடுக்கவேணும் தானே. சும்மாவே. அந்தக் காசு முதலாளின்ரை பெட்டிக்குள்ளை போறதுக்குத் தானே முதலாளிக்கு விருப்பங் கூடவாயிருக் கும். 

“சை. அவர் நல்ல மனுஸன். எங்கினையாச்சும் பெடி. யன் தேடிக் கொண்டு தான் இருப்பார். கிடைச்சால் பிடிப் பார்தானே.’ 

“உதெல்லாம் கம்மா ஒரு காட்டு. அவருக்கு எங்க ளின்ரை வயித்தை விடத் தன்ரை காசுதான் பெரிசு” 

“அப்பிடிக் காசுதான் பெரிசு எண்டால் போனமுறை முத்துமாரியம்மன் கோவிலுக்கு தன்ரை செலவிலை யாப் பாணச் சப்பறம் மோளம் எல்லாம் பிடிச்சுவிட்டு திருவிழா செய்வாரே” 

‘கொள்ளையடிக்கிற காசிலை ஒரு சிறு பங்கைக் கடவு ளின்ரை பேரலை தருமம் எண்டு செய்கினம். அதாலை எந்தப் பயனும் இல்லை. அது தருமமுமில்லைத்தான்” 

“உனக்கு எதுவும் அரசியல் தான். உதுவில்லாம பேச உனக்குத் தெரியாதே” 

“அரசியல் தான் எல்லாத்திற்கும் கொமான்டரடா” 

“அரசியல் தான் போக்கிரிகளின்ரையும் காவாலிகளின் ரையும் புகலிடமாம் நீ உதைப் புரட்டிச் சொல்லுகிறாய்” 

“புரட்சி வரும் வரைக்கும் அது உண்மைதான்” 

“அது வந்தால் ஏதோ வெட்டி விழுத்திப் போடுவாங் களோ? இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை மாதிரித்தான்” 

இக்பாலின் வீடும் வந்தது. சாக்குத் தட்டியை விலக்கிக் கொண்டு நுழைந்தான். 

மீண்டு வந்த போது இரண்டு கிளாசுள் கன்னங்கரே லென்ற கோப்பி நிறைந்த கையனாய் வந்தான். இருவரும் உறிஞ்சிக் குடித்தார்கள். சின்னத்தம்பியின் வாயில் சூடேறி யதும் உடலில் புதுத் தெம்பு பரிணமித்தது. 

“நீ எப்ப இனி யாப்பாணம் போவாய் தம்பி?” 

இக்பாலின் உம்மா கேட்டுக் கொண்டே வந்தாள். இக் பாலின் உடம்பு அமைப்பு அப்படியே அவளிடமும் இருந்தது தலைமயிர் அரைப் பங்கிற்கு மேலாக வெண்மைபட நரைத்து வெளிறி விட்டது. வதனத்தில் இலேசான சுருக்கம் கண் டிருந்தது. பாத்திமாவின் கண்களைப் போலவே அவளது கண்களிலேயும் கவர்ச்சிக் கொடி. 

”ஏன் கேக்கிறீயள்?”

கேட்ட பின்னரே மூளித்தனமான கேள்வியைக் கேட்டு விட்டதை உணர்ந்தான் சின்னத்தம்பி. 

“உம்மாக்கு யாப்பாண மாம்பழம், முருங்கக்காய் எண்ணா உயிர். அதுதான் கேக்கிறா” 

இக்பால் தகவல் தந்தான். 

“அதில்லை தம்பி உனக்கு முப்பதெட்டு வயசாச்சி. இன் னுங் கலியாணங் கட்டாமல் இப்படியே இருக்கிறாய். அங்க யாராயின் சொந்தக்காறங்கள பார்த்து முடிக்கிறது நல்லது. நெடுகப் பிரமச்சாரியாய் இருந்தா சீவியத்தில் வெறுப்புத் தான் வரும்.” 

“எல்லாப் பொம்பிளையளும் டாக்குத்தர் இஞ்சினிய ரத்தான் கலியாணம் முடிக்க விரும்புவினம். என்னை போலத் தரித்திரங்களை முடிக்க ஆர் விரும்பினம்? அப்பிடி முடிச்சா லும் ஐம்பது ரூபாய் சம்பளத்திலை எப்பிடிச் சீவிக்கிறது? என்ன கொஞ்ச நாள் செண்டாப் பிறகு உங்களைக்கட்டி சொத்துச் சுகத்தைக் கண்டன் எண்டு விளக்கு மாத்தாலை அடிப்பாள்.” 

“யாஅல்லாஹ்” என்ற பெருமூச்சுடன் தொடர்ந்தாள்;  இப்படிக் கஸ்டங்கள் மனிச சீவியத்ல இருக்கிறது தானே. அதுக்குப் பயந்து ஒதுங்கலாமே. வாழ்க்கை எண்டா அதில ஒரு பிடிப்பு வேணும் மவனே 

“எனக்கு அப்பிடி ஒரு பிடிப்பு இருக்கு 

“என்ன?” – அவளது வதனத்திவே ஒரு வியப்புக் கொக்கி. யாராயினும் வடிவான பொம்பிளையாய்ப் பாத்து வளைச்சி வைச்சிருக்கீயா? இந்தக் கம்பளையில எங்கை இருந் தாலும் சொல்லு. நான் எந்தப்பாடு பட்டெண்ணாலுங் கட்டி வைக்றன்.” 

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எத்தனையோ வாழ் வுப் புளிப்பு அனுபவங்களுக்குள்ளான தன்னிடம் அவள் காட்டிய தாய்மைக் கனிவு அவனைச்சிலிர்க்க வைத்தது. 

“எனக்கு பொம்பிளைப் பிடிப்புப் போய்ப் பல வருஷ மாச்சு.” 

“அப்பிடி யெண்டா?” 

“இந்த நாத்தல் உலகத்தை மாத்த வேணும் எண்ட பிடிப்புத் தான் எனக்கு இருக்கிற ஒரேயொரு பிடிப்பு 

“உனக்கு எதுக்கு மவனே ஊரார் வேலை நியும் உன்ரை தொழிலும் இருக்கெண்ணு பேசாமே இருக்கிறத விட்டுப் போட்டு வம்புகள மாட்டிக்கொண்டா ஒரே பளாய் தான்.” 

“அதை நான் விடமாட்டன்’ 

“இப்புடித் தான் நம்மோட மருமவன் பெடியனை எல் லாருக்கும் எதிராய்ப் போான் எண்ணு சொல்லி பில்லி செஞ்ஞாங்கள். குலைப்பன் காச்சல் வந்தமாதிரி அவன் குள றிக் குளறி மௌத்தாயிட்டான்” 

சின்னத்தம்பியின் இதழ் ஒரத்தில் மென்நகை. 

இக்பாலிடமும் உம்மாவிடமும் விடை பெற்றுக் கொண்டே நடந்தான். 

பூதம்போல் வியாபித்திருந்த அம்பகமுவா மலைச்சாரலின் கீழ்த் திசையில் செக்கச்செவேலென்ற சிகப்பு, சூரியனின் வருகைக்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தது. 

தெருவிளக்குகளை அணைத்த வண்ணம் வந்து கொண் டிருந்தான் ஆரியதாஸா. 

“ஆரியதாஸா, கோஹோமத?” 

“தவம இஸ்ஸரவாகே” 

“நிக்கவறட்டியாக்கு நீ போயிட்டு வந்ததாய் கேள்விப் பட்டன். வீட்டிலை எல்லாருஞ் சுகம்தானே.” 

சின்னத்தம்பி சிங்களத்திலேயே கேட்டான். 

“எல்லாரும் சுகம்தான். அங்கை இப்பஏழெட்டு மாச மாய்த் துப்புரவாய் மழையில்லையாம். நிலத்தைக் கிண்டிப் பிரயோசனமே இல்லையாம். அதாலை எல்லாரும் கிண்டுறதை விட்டுப் போட்டு ரவுண் பக்கமாய்ச் சின்னச் சின்னக் கடை யள்தான் போட்டிருக்கினம். அதுக்குக்கூடக் காசில்லாமை பல கொயிகம் ஆக்கள் சும்மா இருக்கினம்”

“திண்டாற மனிசர் எல்லாரும் ஒண்டு சேர்ந்தால் ஏது திண்டாட்டம். ஒவ்வொருவரும் தங்கடை தனிப்பட்டகவலை யளைத் தீர்க்கத்தான் பாக்கினம்.” 

“நாங்கள் அதை அனுபவிக்க மாட்டாது போனாலும் எங்கடை சந்ததியினர் எதிர் காலத்திலை கஷ்டம் இல்லாமல் சுதந்திரமாய் வாழத்தான் போகினம்.” 

திட்டவட்டமான உறுதியோடு சொல்லிவிட்டு நீட்டுத் தண்டை எடுத்துக் கையிலேந்தி நடைபயின்றான் ஆரியதாஸர். 

அத்தியாயம் இரண்டு

யூனிவேசிற்றி நூலகத்தில் இருப்பதற்கே அரியரத்தினத் திற்குச் சலிப்பாயிருக்கும். “லெக்சருக்குக் கட்'” போட்டு விட்டு கண்டிக்கு வந்து பிரிட்டிஷ் இன்ஃபோமேஸன் சென் டரில் இருந்தான். அப்போதும் சலிப்பாய்த்தான் இருந்தது எழுந்து வெளியே வந்தான். இதமான காலை வெயிலில் நிற்கவே குளுமையாகத் தான் இருந்தது. 

எதிரே தெரிந்த மாக்கெற்றில் எறும்புக் கூட்டம் போல் மக்கள் போவதும் வருவதுமாக இயங்குவது நின்று வேடிக்கை பார்க்க உகந்தது. பஸ் ஸ்ராண்டில் பயணிகள் முண்டிய டித்துக் கொண்டு ஏறுவதும் வந்துநின்ற பஸ்ஸுகளிலிருந்து லொட லொட என்று ஒலியெழுப்பி இறங்குவதுமாக இருந் தனர். பஸ் ஸ்ராண்டின் கோடியில் அமைந்த மலஜலக் கூடடத்திலிருந்து நுகரவியலாத துர்நாற்றம் வீசிக் கொண்டி ருந்தது. அந்தத் துர்நாற்றத்தை சகிக்கவியலாத ஒருவெள் ளைக்காரத் தம்பதிகள் கைக்குட்டைகளால் மூக்கை மூடிக் கொண்டே தங்களுக்குள் துர்நாற்றம் பற்றி கரிச்சுக் கொட்டினார்கள். 

“யப்போவ்! இதென்ன பெரிசாருக்கு?”

“அதண்டா பெரிய உருளோசு! “

“உருளோசுவா?” 

“ஆமாடா” 

“நான் தொரை பங்களாவிலே உருளோஸ் பார்த்தனே. அது இம்புட்டுப் பெரிசா இல்லையே” 

“அது சின்ன உருளோஸ்டா” 

காற்று வாக்கிலே, பட்டணம் பார்க்க வந்த தோட்டக் கார அப்பன் – மகன் உரையாடல் அரியரத்தினத்தின் செவி களில் வலோற்காரமாய் நுழைந்தது. 

மில்க் போர்ட்டுக்குள்ளே போய்ஒரு பைந்துபால் வாங்கிக் குடித்தான். அந்தப் பாலின் சுவையைக் காட்டிலும் கௌண் டரிலே இருந்த பெண்தான் அவனுக்கு இனிப்பாயிருந்தாள். ஸ்றோவால் அந்தப் போத்தலைக்காலி பண்ணுவதற்கு முன்னால் உறிஞ்சும் வேகத்துடன் அவளை விழுங்கி விடுவதுபோல் ஐந் தாறு தடவைகள் பார்த்து விட்டான். 

காலார போகம்பரைக் குளம் வரை நடந்துவர எண்ணிக் கொண்டே தெருவைக் கடந்தான். வங்கி வாசலிலே சின்னத் தம்பி வந்து கொண்டிருந்தான். 

கலைந்த கிராப்பு. 

கசங்கிய சேட்டு. 

தூய வேட்டி. 

வெற்றுக் கால்கள். 

“ஓ சின்னத்தம்பி! கண்டு காகாலம் ” 

“உன்னைத் தான் நான் கனநாளாய்க் காணேல்லை முந்தியெல்லாம் பிறீபோயாவிலை அந்தப் பக்கம் வாறனீ. இப்பஏன் வாறேல்லை.” 

“என்ன செய்யிறது வீட்டு விசயங்களாலை எனக்குப் பெருங்கவலை. படிக்கக்கூட மனம் வருகுதில்லை” 

“அப்பிடி உனக்கென்ன கவலை? பாத்தால் ராசா மாதிரி இருக்கிறாய். இன்னும் சேவ் எடுக்கத் தொடங்கேல்லை அதுக்குள்ளை கவலையே” 

“சும்மா பகிடி பண்ணாதை” 

“அதுசரி நீ இப்ப எங்கை போகிறாய்” 

“ஒருடமுமில்லை. வாவன் உப்பிடிப் போய் நிண்டு கதைச்சுப் போட்டுப் போவம். நானும் உன்னோடை பஸ்ஸிலை வாறன்” 

“பெரதேனியா ஆக்களை ஏத்தான்களே” 

“அதெல்லாம் ஏத்துவங்கள்” 

இருவரும் போகம்பரைக் குள நடைபாதையில் ஏறினார் கள். குயீன்ஸ் ஹோற்றல் வாசலிலே வந்துநின்ற இம்பா லாவில் இருந்துஇரு சீமான்கள் இறங்கி உள்ளே நுழைந்தனர். ஓரத்தில் புத்தம்புதிய ஜகுவார் நின்று கொண்டிருந்தது. 

“நீ ஏன் இப்ப பாங்குக்கு வந்தனீ?” 

“முதலாளியார் ஏதோ குறஸ் செக்குத்தந்து டிப்பொளிற் பண்ணச் சொன்னவர்.” 

”எட! உன்னிலை நல்ல நம்பிக்கைதான்”
 
“சீ அப்பிடியில்லை. கணக்குப்பிள்ளை மயில்வாகனத்தைத்தான் விற்றவர். இண்டைக்கு அவனுக்கேதோ கனத்த இன்கம்டாக்சுக்குக் கணக்குக் காட்ட வேணுமாம். அதாலைதான் என்னை அனுப்பினவர்.” 

“அப்ப நீ இரண்டாம் கணக்குப்பிள்ளை.” 

“உதுகளை விட்டுட்டு நீ என்ன பெருங்கவலை எண்டனி? கொப்பர் கோச்சி எல்லாம் சுகம் தானே?” 

“நீ என்ரை பெரியம்மாவின்ரை மோன் எண்டிருக்கி றாய். அந்தப் பக்கம் வரேக்கை ஒருக்கால் எண்டாலும் என் நாயளே இருக்கிறியளோ செத்துப் போனியளோ எண்டு எட்டிப் பார்த்தனியே பிறகேன் எங்கடை கதையை?” 

சின்னத்தம்பி பதிலின்றி நடந்தான். 

தலதா மாளிகையைக் கடந்து தேக்குமர நிழலில் போட் டிருந்த சிமென்ற் பெஞ்சிலே இருவரும் அமர்ந்தார்கள். நகரச் சந்தடிகளிலிருந்து விடுபட்டு ஓரளவு அமைதியே அவ்விடத் தைச் சூழ்ந்திருந்தது. 

“லெக்சரர் அங்கை வந்துஏதோ விழல்கள் எல்லாம் அலம்பிறார் எண்டு வெளிக்கிட்டு இங்கை வந்தால் இங்கை அதைவிடத் தலையிடியாய்க் கிடக்குடா” 

“சரி இப்பவாவது உன்ரை வீட்டு விசயத்தை அவிழன்” 

அதையேன் கேட்பான்: அத்தான் ஆட்கள் இப்ப எங்களைக் கோட்டுக்கு இழுக்கினம். 

இப்ப உன்ரை கொத்தான் எங்கை வேலை? முந்தியப் போலை இப்பவும் அன்டாசபுரத்திலை பி.டபிள்யூ. டியிலை தானே 

ஒமோம். அவருக்குத் தானே நாங்கள் குடியிருக்கிற வீட்டைச் சீதனமாய்க் கொடுத்தது. அவர் அக்காவையும் பிள்ளையளையும் தன்னோடை அன்டாசபுரத்திலை கூட்டிக் கெண்டே வைச்சிருக்கிறார்? ” 

“அதுக்கு என்ன?” 

“அதுதான் தனக்கு உருத்தான வீட்டிலிருந்து தனக்கு ஒண்டும் சுவறேல்லையெண்டு எங்கடை வீட்டுக்குத் தனக்கு வாடகை கட்டச் சொல்லிக் கேட்டிருக்கிறார். அதுவும் பிறாக் கிருகியரைக் கொண்டு மாசாமாசம் அறுபது ரூபாயாம் வாடகை. கட்டாமலிருந்தால் வழக்குப் போடுவராம்.” 

“கொப்பர் மாசத்திலை எவளவுக்குச் சுத்திறவர்” 

“என்ன சின்னத்தம்பி நீயே இப்படிக் கேட்கிறாய் அவ ராலை இப்ப எண்பது ரூபாய்க்கு மேலை சுத்தேலாது. வயதும் போட்டுது பாவம் அந்தக் காசிலை அதுகள் சீவியம் விடுகிறதே எவ்வளவோ கஷ்டம். எனக்குத்தான் முக்கால் வாசியையும் அனுப்புறவை. என்னைப் படிப்பிக்கிறதுக்காகத் தோட்டக் காணி வித்தினம். நகையளை அடைவு வைச்சிட்டினம். இன் னொரு தங்கச்சியும் இருக்கிறாள். அவளுக்குச் சீதணம் ஒரு வெள்ளைச் சல்லியும் இல்லை. என்னெண்டு அவளைக்கரை சேர்க்கிறது? இதுகள் எல்லாம் அத்தானுக்குத் தெரியாதோ? எனக்குவாற ஆத்திரத்திலை அத்தானைப் போய்க் கொலை செய்யவேணும் போலை கிடக்குது. அவ்வளவு கரிசினை இல் லாப் பிறப்புகள் இருந்துதான் என்னபலன்?” 

“வழக்கு எப்பவாம்?” 

“வழக்கு கண்டறியாத வழக்கு. நீதியும் நியாயமுமில் லாமை நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கடன் பட்டுக் சுட்டின வீட்டை அவருக்குச் சீதணம் கொடுத்தவுடனை வாடகை கேட்கிறது சரியே? நாங்கள் வேறைவீடு கட்டி வைச்சிருக்கிறமே இவையள் வாடகை கேட்டவுடனை எழும்ப? ஏலுமெண்டாப் பண்ணிப் பாக்கட்டும். கோட்டிலை அப்புடி பென்ன நீதிநியாயம் இல்லையெண்டு நினைச்சினமாக்கும் ” 

“நிச்சயமாய் உன்ரை கொத்தான் பக்கம்தான் வழக்குத் தீர்படும் ” 

“விசர்க் கதைகதையாதை. கோடு எண்டால் சட்டம் படிச்ச நீதிபதிதான் இருப்பார்,” 

“உந்தச் சட்டங்களும் நீதிபதியளும் கோடுகளும் தனிச் சொத்தைப் பாதுகாக்கத் தானிருக்கே ஒழிய பொதுநீதிக்கும் நேர்மைக்கும் அவையள் மினக்கெட்டு இருக்கேல்லை. 

“அப்ப அத்தானின்ரை பக்கம்தான் சட்டம் எண்டு சொல்லுறியா?” 

“வேறை” 

“ஏன்ரா அப்ப இப்புடிக் கொத்த அநியாயச் சட்டங் களை இயற்றினவங்கள்?” 

“தங்கடை தங்கடை சொத்தெல்லாததையும் சொத் தில்லாதவனிட்டை இருந்து காக்கத் தான் “

“இதை மாற்றேலாதா?” 

“ஏன் மாற்றேலாது?” 

“அப்ப ஏன் வைச்சிருக்கிறாங்கள், மாற்றுறது நல்லம் தானே” 

“முதலாளித்துவம் சாகும் வரையில் இந்த மாற்றம் இல்லை.'” 

“எங்களைப் போலைச் சொத்தில்லாதவை இப்புடி நெடு கக் கஷ்டப்படவேணுமே” 

“சொத்தில்லாத ஏழையள் ஒண்டாய்த் திரண்டா இண்டைக்கே முதலாளித்துவத்தைச் சாக்காட்டி கஷ்டத்தை வெண்டெடுக்கலாம்” 

“நீ அரசியலுக்குப் போட்டாய். நான் அத்தான்ரை கரைச்சலுக்கு ஒரு தீர்வை கேக்கிறன்” 

“இதுதான் ஒரே வழி” 

அரியரத்தினத்தின் மனம் சமாதானப்படவில்லை. சொந் தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண்பதற்கே மனம் அங்கலாய்த்தது. 

“நேரம் போகுது. முதலாளியார் அங்கைதேடப் போறார். செக்குத் தந்து விட்டபடியால் என்னவேன் எல்லாம் அவர் நினைக்கிறதுக்கு முந்திப் போகவேணும். பஸ்ஸுக்கும் கணக் காய்த்தான் காசு தந்துவிட்டவர். காலமை கொன்கிரீடுப் புட்டுத் திண்டது. மினக்கெட்டால் இங்கை சாப்பிடவும் ஏலாது.” 

சின்னத்தம்பி சொல்லிக்கொண்டே எழுந்தான். 

“ஏழையளும் பணக்காரரும் ஆரும் பாலிமென்ருக்குப் போசுலாம் தானே. சட்டம் இயற்றலாம் தானே. சனங் களுக்கு நல்லது செய்யத் தானே சட்டம் போடுவினம். இப்ப எல்லோருஞ் சோஷலிசத்தை ஆதரிக்கினம் எல்லே? நீ ஏன் இதை எதிர்க்கிறாய்?” 

“பிள்ளையையும் கிள்ளிப் போட்டுத் தொட்டிலையும் ஆட்டுறதுதான் முதலாளிமாற்றை பாலிமென்ருச் சோசலிசம்” 

சின்னத் தம்பியுடன் விவாதிக்கத் தொடங்கினால் எல்லை யில்லாத வியாபகத்துள் இறக்கி விடும் போலிருந்தது. அரிய ரத்தினம் பேசவில்லை. அவனுடைய நெஞ்சில் சின்னத்தம்பி சொன்ன அனைத்தும் தர்க்கம் போட்டன. அவன் சொல் வதில் மாமூலான உண்மைகள் இருப்பது போலப்பட்டா லும் உள்ளம் ஏற்கமறுத்து தன் மாயபந்தத் தன்மையை வெளிக் காட்டிற்று. 

ஒளிராத நியோ பல்பில் – ஆங்கிலத்தில் – பொறிக் சுப்பட்டிருந்த ஓட்டல் போட் அரியரத்தினத்தின் சிந்த னைக்கு முற்றுப்புள்ளி போட்டது. 

“வா டீ குடிப்பம்” 

“நான் உதுகளுக்குள்ளை போறேல்லை” 

“நீ போகாட்டி எனக்காகவாயினும் வாவன்” 

இருவரும் உள்ளே நுழைந்தனர். அரியரத்தினம் ஓடர் ாடுத்தான். சேர்வர் ‘டீ தெக்காய்’ என்று கத்திக் கொண்டே போனான். 

அரியரத்தினம் அரசியலை மீண்டும் பேசினான். 

“ஜனநாயக ஆட்சி முறையள் கூடாதெண்டு சொல்லு றாயே? சர்வாதிகாரம் வந்தால் நாங்கள் வாய் இருந்தும் ஊமையள் தானே” 

“ஜனநாயகம் எண்டால் மக்கள் தங்களைத் தாங்கள் ஆளுறது. இங்கை ஏழுவீதமான முதலாளிமார் தொண்ணூற்றி மூண்டு வீதமான பட்டாளியளை ஆளினம். இது சர்வாதிகாரம் ஒழிய ஜனநாயகமில்லை.” 

“ஏன் இலக்சனிலை ஒன்பது பத்துக் கட்சியள் போட்டி யிடும். நல்ல கொள்கையுள்ள கட்சியை இந்த முறையளாலை தேர்ந்தெடுக்கலாம் தானே. அதுவும் ஆக ஐஞ்சு வரிஷம். அதுக்குப் பின்னாலை அந்தக் கட்சி கூடாதெண் டால் வேறை கட்சியா தெரியலாம் தானே. எலெக்ற் பண் ணிற சக்தி மனிசரிட்டைத் தானே. காசு குடுத்து வோட் கேட்கிறது கூடச் சட்டப்படி குற்றமெல்லே” 

“எலக்சனிலை போட்டி போடுற எல்லாக் கட்சியளும் ஒரே மாவிலை செய்த இடியப்பம், பிட்டு, மோதகம், கொழுக்கட்டை………” 

“இதெல்லாம் இங்கேயில்லை தொரை. தோசைக்கடேல் தான் இருக்கும்” 

சப்பளையர் பசிடி விட்டுக் கொண்டே எழுபத்துநாலு சதத்திற்கு பில் தந்தான் இரு மிடறு ரீயும், ஒரு கடி சுட் லெட்டும் ஒரு றாத்தல் சீனியின் விலைக்கு சமனாகும் விநோ தத்தை சின்னத்தம்பியின் சிந்தனை எடைபோட்டது. 

“அடிப்படையிலை எல்லாக் கட்சியளும் இந்த முதலா ளித்து சமூக அமைப்பைப் பேணுது, அரியரத்தினம்” 

”ஏன் எஸ். எல். எப். பி. யெல்லாம் நஷனலஸ் பண் ணிச்சுது தானே” 

“கண் துடைப்பு நஷனலைஸேஸன் தான் அது. இப் புடிக் கொத்த காரியங்களாலை எங்களைக் கிளர்ந்தெழப் பண் ணாமல் எங்களையும் எங்கடை ஆவேசத்தையும் மழுங்கடிக் கச் செய்யினம். உது வாயாது. புரட்சி வராமல் போகாது. 

“நசிந்த அடிமையளுக்கு எல்லாமாய் ஏப்பிரகாம்லிங்கன் பாடுபட்டவர் தானே. அவர் கொம்யூனிஸ்டே?” 

“மார்க்ஸ் கண்டுபிடிச்சது கொம்யூனிஸம். அவர் அதுக்கு முந்தினவர். அவற்றை தத்துவங்களைச் சொல்லிக் கொண்டுதானே இண்டைக்கு அமரிக்காவிலை நீகிரோக்களை அடிமைகளாய் வைச்சிருக்கிறாங்கள்” 

“மகாத்மா காந்தியெல்லாம் தனக்குத்தானே தோட்டி வேலை செய்தார். ஏழையைப் போலை சீவிச்சார். சத்தியம் அஹிம்சை போதிச்சார். அவரைப் பின்தொடர்ந்தால் என்ன?” 

“அவரைப் பின்தொடருகிறம் எண்டு மேடை மேடை யாய்க் கத்துறவங்களால் தானே பிஹாரில் பட்டினிச் சாவு கள் கூடுதெண்டு உனக்கு எங்கை தெரியப்போகுது?”

“அதுக்கென்ன செய்யுறது. குறைபாடுகள் எங்கினையும் இருக்குந்தானே. எல்லாத்தையும் சரியாய்ச் செய்யேலுமே ங்கை சர்வாதிகாரம் வந்துதெண்டால் எலக்சன் இல்லை. பாலிமென்ற் இல்லை. பேப்பர் இல்லை. கடை இல்லை. கோயில் இல்லை. ஒண்டுமே இல்லை. தாங்கள் ஊமையள், குருடர்கள், செவிடர்கள் மாதிரி கண்டுங் காணாமல். பார்த் தும் பேசாமல் கேட்காமல் வாயை மூடிக்கொண்டே இருக்கவேணும். அவையள் செய்யிறதெல்லாம் சரி. பிழை யெண்டு சொன்னால் உடனை கொலை” 

“பிறீ போயாவிலை கம்பளைக்கு வா. உனக்கு நல்ல புஸ்தகங்கள் தாறன். அதுகளை வாசிச்செண்டாலும் உன்ரை மூளைக்கு வேலை கொடுத்துப் பார்” 

‘“நீயென்ன சொம்யூனிஸ்ட் புத்தகந் தானே தருவாய். அதுகளை வாசிற்றிக்கிள்ளை வைச்சு வாசிச்சா பெடியங்கள் நீயென்ன சோடியம் குறூப்போ பொற்றாஸியங் குறூப்போ எண்டு கேட்டு அவமானப் படுத்துவாங்கள்” 

“என்ன?”

“பின்னையென்ன? கொம்யூனிஸம் பேசிறவை எல்லாரும் அந்த ஆக்கள் தானே. எங்கடை வெள்ளாளர் ஆரேன் உதைப்பற்றிப் பேசுறவையளே” 

“நீ சொல்லுற குறூப் விசியம் எனக்கு விளங்கலேலை” 

”ஓஹோஹே. சோடியம் எண்டால் கொமிஸ்டிரியிலை என்.ஏ.எண்டு சிம்பள் பொற்றாளியம் எண்டால் கே. எண்டு சிம்பள். என். ஏ. கே. எண்டால் நளமாக்கள். எண்டால் கோவியர்” 

குமுறிய சின்னத்தம்பியின் நினைவலைகள் பால்யப் பள் ளிப் பருவத்தை நோக்கி விரிந்தது. 

அப்போது சின்னத்தம்பிக்கு பதின்மூன்றே வயதுதான். எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனு டைய நெருங்கிய நண்பர்களுள் வேலனும் ஒருவன். மிக வும் சாது. எவருடனும் அதிகமாய்ப் பேசமாட்டான். வகுப்பில் கடைசி பெஞ்கிலே தான் இருப்பான். முன்னே இருக்கின்ற பெஞ்சுகளில் இருந்து நன்றாக படிக்கவேண் டும் என்று அவனுக்கு உள்ளூர ஆசை தான். ஆனாலும் யாராயினும் அவனைத் தங்களுடன் சேர்த்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மெரிக்கோரவுண்டில் இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கி ஆட்டம் போட்டிடும் கடைசி பெஞ்சிலே தான் சின்னத்தம்பியும் வேலனும் இருப் பார்கள். வகுப்பு மொனிற்றர் தங்கராசா ஊரிலேயுள்ள பெரிய பணக்காரர், பீடிக் கொம்பனி முதலாளியாரின் மகன். அவனது தந்தை ஒரு சமாதான நீதவான் கூட வர்ண வர்ணக் கதைப் புத்தகங்கள் கொண்டு வருவான். வேலன் அவற்றைப் பார்க்க வேண்டுமெனத் துடியாய்த் துடிப்பான். ஆனால் தங்கராசா தன்னுடைய வட்டத்தின ருக்குத் தான் காட்டுவான். 

அன்றைய றில் பாட வகுப்பிற்கு எல்லோரும் வெளியே விளையாடப் போய் விட்டார்கள். அந்த விளையாட்டிலும் வேலனைச் சேர்க்க மாட்டார்கள். தனியே இருந்தவேலன் திருட்டுத்தனமாக தங்கராசாவின் அழகான சூற்கேஸைத் திறந்து அந்த வர்ணப் படங்களை எடுத்துப் பார்த்தான். நேரம் போவது தெரியாமல் வர்ணப் படங்ககளின் வர்ணக் கவர்ச்சிகளிலிருந்து விடுபடமுடியாமல் ஊறித் திளைத்துப் பிரமித்தான். கையில் இருந்த அழுக் கெல்லாம் அந்த அமெரிக்கன் எம்பையர் கட்டிடத்திலும், வெஸ்ற் – மினிஸ்ரரிலும், ரோக்கியோ கடை வீதிகளிலும் படிந்ததை அவன் பொருட்படுத்தவில்லை. வகுப்பு மாணவர் கள் திரும்பினார்கள். வேலனைக் கண்டவுடன் அவனுடைய திருட்டுதனத்தை உணர்ந்தவுடன் அவர்களுக்கு ஆவேசம் பீறிட்டது. 

தங்கராசா அவனுடைய சேர்ட்டின் கொலரைப் பிடித்து அவனைத் தூக்கி உந்தித் தள்ளினான். உடையாரின் மகன் விக்கினராசா உடனே அவனுடைய முதுகுப் புறத்தில் குத்தி னான். அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் அவனை முகத்தி லும் உடம்பிலுமாகக் குத்தினார்கள். சால்களால் உதைத் தார்கள். குனிந்து; கூனிக் குறுகிப்போன வேலனுக்கு அழக் கூடநா எழவில்லை. வலியும் பொறுக்க முடியவில்லை. அந்தக் கட்டத்தில் நுழைந்த சின்னத்தம்பி தன்னந் தனியனாய் நின்று அனைவருக்கும் பதிலடி கொடுத்து வகுப்பறையை விட்டே விரட்டினான். 

பள்ளிக்கூடம் முடிந்து போகும்போது வேலன் கேட்டான். 

”ஏன் நீ வெள்ளாம் பெடியளோடை கொழுவினனி? என்னோடை நீ ஏன் சேர்றாய். நீயும் வெள்ளாமாள் தானே. என்னோடை சேர்ந்தால் உன்னைக் கோயிலுக்கை கூட விடாங்கள்.” 

“விடாட்டி அவையள் வைச்சுக் கும்பிடட்டன்.”

“நீ அவங்களுக்கு என் அடிச்சனி?” 

“அடிச்சால் என்ன கரைஞ்சு போவாங்களே” 

“அவங்கள் இக்கனம் தேப்பன்மாரை எல்லாம் கூட்டிக் கொண்டு வரப் போருங்கள்” 

“அவையளுக்கு என்ன கொம்பே” 

“நளப் பெடியளுக்கு அடிச்சால் ஒரு தொந்தரவும் வராது. வெள்ளாம் பெடியளுக்கு அடிச்சால் பொலிசு கூட வரும்” 

”நீ ஏன் உன்னை நளப்பெடியன் எண்டு நினைக்கிறாய். எல்லாரையும் போலை உனக்கும் ரண்டு கண், ரண்டு கை, ரண்டு கால், ஒரு வாய் தானே’ 

“ஆரிப்ப அதை இல்லை எண்டது” 

“பின்னை என்ன கதை கதைக்கிறாய்” 

“இல்லையடா. தங்கராசான்ரை தேப்பன் எல்லா ஆக் களுக்குந் தேள்வை. அவற்றை மோனோடை முண்டினால் பேந்து பிழைக்கேலாது” 

“நீ பயப்பிடாதை. உன்ரை மேலிலை ஆர் எண்டாலும் கை வைச்சினமெண்டால் என்னட்டைச் சொல்லு. தங்க ராசாவோ தொங்கராசாவோ அவனை வெட்டிப் புதைச்சுப் போட்டுத் தான்வேறை வேலை.” 

நினைவுகள் நீர்க் குமிழிகளாயின. 

சின்னத்தம்பியும் அரியரத்தினமும் கம்பளை பஸ்ஸிலே ஏறினார்கள். கொண்டக்டரிடம் அரியரத்தினம் பெரதே னியா ரிக்கற் கேட்டான். கடுகதி பஸ்ஸானாதால் ரிக்கற் மறுக்கப்படவே — 

“எப்படி நான் அப்பவே சொன்னனான் பெரதேனியா ஆட்களை ஏத்தான்கள் எண்டு” 

“காரியமில்லை. நான் கடுகண்ணாவையிலை ஏறுறன். போட்டு வரட்டே” 

“சரி. பேந்து சந்திப்பம்”

அரியரத்தினம் இறங்கினான்.

பஸ் புறப்பட்டது. 

அத்தியாயம் மூன்று

புகைமூட்டம் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத் தது. மழையிலே நனைந்து நைந்துபோயிருந்த விறகு கட் டைகளோ எரிய மறுத்தன. தேகம் பூராவும் வியர்த்துக் கொட்டியது. சின்னத்தம்பி அறுக்குளா மீன் துண்டுகளைச் சின்னஞ் சின்னதாக வெட்டிக் கொண்டிருந்தான். 

லீக்ஸ் கறிக் குழம்புக்குள்ளே உப்பு போட்டானா இல் லையா என்று தெரியாமல் கையைச் சட்டியுள் வைத்துச் சுவைத்தான். உப்புப் போட்ட மாதிரியும் இருந்தது. உப் புப் போடாத மாதிரியும் இருந்தது. ஆக இரண்டே கறி களுள் உப்புக் கூடிய கறி லீக்ஸானால் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள், உப்பைப் பின்னர் போடலாம் என்று எண் ணிக் கொண்டான். மீனைக் கழுவி எடுத்து அந்த நெளிவு சுளிவு கண்ட பித்தளை பேசினுள் போட்டு விட்டுக் கை கழுவினான். 

ரணசிங்கா ஒளித்து வைத்திருந்த பீடிக்கட்டு தலையை வெளியே காட்டிற்று. இக்பாலினுடைய இரசம் இற்றுப் போன கண்ணாடியும் பற்கள் முறிந்து தலையின் அழுக்குப் படிந்திருந்த சீப்பும் அங்குள்ள சாப்பாட்டு மேசையான சன்லைற்றுப் பெட்டியின் மேலே கிடந்தது. சின்னத்தம்பி அவற்றை எடுத்துக் கீழே வைத்தான். கடையின் ஒதுக்குப் புறமாய் அமைந்திருந்த அந்தச் சிறிய அறையினை தும்புத் துடைப்பனால் கூட்டிச் சுத்தமும் செய்தான். கடையில் ஜனசந்தடி குறைந்தது. தேவராசா அன்றைய பேப்பரை மடித்து வைத்துவிட்டு வெளியே போய்வர எத்தனித்தான். 

முதலாளி கடைக்கண்ணால் நோட்டம் விட்டபடி, * எங்கை தொரை வெளிக்கிடுறியள்?” 

“கக்கூசுக்கு” 

“ஓயாமல் கக்கூசு தான் உனக்கு கதி” 

கணக்குப்பிள்ளை மயில்வாகனம் எதோ பெரிய நகைச் சுவையைக் கேட்டவன் போலச் சிரித்தான். 

“ஓயாமல் கக்கூசுக்குப் போனால் கடையிலை வேலை செய்யாமலிருந்தால் இனிச் சம்பளத்தைக் குறைக்கத்தான் வேணும் போலை கிடக்குது” 

தேவராசாவின் மலவாசலுக்கு சம்பளக் குறைவு பற்றிக் கவலையுண்டாகவில்லை. தேவராசா பொல்கும்பரையை நோக்கி மிக அவசரம் அவசரமாக நடந்தான். முதலாளி யின் தத்துவம் அப்போது அவனுக்குத் துரும்பாய்ப் போய் விட்டது. 

“சின்னத்தம்பியை முன்னுக்கு வந்து நிற்கச் சொல்லு”

சின்னத்தம்பி சாரத் தலைப்பினால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்தான். முதலாளியுடைய மேசைக் குப் பக்கத்தில் மின்விசிறி சூரன் தலையைப் போலப் பக்க வாட்டிற்கு மாறிமாறி ஆடிக் கொண்டிருந்தது. 

பிளாஸ்கிலிருந்து வெள்ளி டம்ப்ளருள் ஊற்றிப் பாலின் ஆவி பறக்கப் பறக்க முதலாளியார் சுவைத்துக் கொண்டிருந்தார். இரும்புப் பெட்டிக்கு மேலே தெரிந்த இலக்குமி படத்திலே சாம்பிராணிக் குச்சிகள் செருகப்பட்டிந்தன. இலக்குமியின் உள்ளங்கையிலிருந்து பொற்காசுகள் முடி. பின்றி வீழ்ந்த வண்ணமிருந்தன. கொவ்வைச் செவ்வாய்க் குமிண் சிரிப்பும் குனித்த புருவமும் பனித்த சடையும் இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் இரம்யமாய்த் தோற்றமளித்தது. 

“கக்கூசுக்குக் கூடப் போகாமல் மலசலத்தை அடக்கிக் கொண்டு நிண்டு வேலை செய்யவேணும் போலை கிடக்குது” சின்னத்தம்பி இக்பாலிற்கும் ரணசிங்காவிற்கும் சொல் வது போல் முதலாளியாருக்குக் குத்திக் கூறினான். 

“பொல்கும்பறைலே கிடக்குது கக்கூசு. அங்கை போட்டு வர முக்கால் மணித்தியாலம் எடுக்கும்.” 

“ஏன் இங்கையே ஒரு கக்கூசு கட்டினால் என்ன?” 

“என்னட்டை ஏது காசு உதுகளுக்கெல்லாம் சில வழிக்க.” 

“அம்மன் கோயிலுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து எட்டுக் கூட்டம் மேளமும் லொறி லொறியாய் முத்துச் சப்பறமும் பிடிக்கக் காசு கிடக்குதாம்” 

“அது சாமிக்கு” 

“இது மனிசருக்கு” 

“சுவாமியும் மனிசரும் ஒண்டே. உனக்கு இப்ப வர வர வாய் முந்திக்கொண்டு வருகுது. முந்தி இங்கை வரேக்கை எவ்வளவு அடக்க ஒடுக்கமாய் நிண்டனி. இப்ப என்னடா எண்டா, வள்வள். சொள் சொள். இப்பிடிப் போனால் சீட்டுக் கிழிக்கத் தான் போறன்’ 

“உந்தக் கதை நரி காகத்தை ஏமாத்தின கதை. காலம் மலையேறிப் போட்டுது. இப்ப காரணமில்லாமல் சீட்டுக் கிழிக்கேலாது” 

“என்னடா பெரிய சட்டம் படிச்சவன் மாதிரி அதட்டுறாய்”  

“சட்டம் எல்லாம் உங்கடை ஆக்கள்ன்ரை கையுக்கை தானே” 

ஆரம்பத்திலிருந்தே இக்பாலும் ரணசிங்காவும் சின்னத் தம்பிக்கு சமிக்ஞை மூலம் நிறுத்தும்படி வேண்டினார்கள். 

சின்னத்தம்பி அவற்றை பொருட்படுத்தவில்லை. 

“பாவம் பாவம் எண்டு விட்டால் பிள்ளை தலைக்கு மேலையெல்லே ஏறுறார்.” 

முதலாளியார் மயில்வாகனத்திற்குச் சொன்னார். 

கடைக்குள் மேலும் சில வாடிக்கையாளர் வரவே பேச்சு நின்றது. 

“மொணவத ஓணே” 

“குளுக்கோஸ் பட்டியக் தெண்ட” 

கண்ணாடி அலுமாரியைத் திறந்து நீலவர்ணப் பெட்டியை எடுத்தான். பெட்டியின் ஓரத்திலே குழுஉக்குறி தெரிந்தது. னர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. 

“றூப்பியல் தூணக் தெண்ட” 

காசு பரிமாறப்பட்டது. 

கடையிலேயுள்ள சகல சாமான்களிலேயும் கறுப்புடை கொண்டு வெளியாட்களுக்குப் புரியாத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைச் சிப்பந்திகளுக்கு அந்த எழுத்துக்கள் குறிக்கும் விலை தண்ணீர் பட்ட பாடம்: த என்றால் ஒன்று. ன என்றால் இரண்டு. ல என்றால் மூன்று. க் என்றால் நான்கு. சு. என்றால் ஐந்து. மி என் றால் ஆறு. ஸ் என்றால் ஏழு. டோ என்றால் எட்டு. என்றால் ஒன்பது. நா என்றால் சைபர். இதுவே தனலக்சுமி ஸ்டோர்ஸ் மர்மக் குறியீடுகள். இந்தக் குறியீடு கட் டுப்பாடு விலை. ஆனால் ஐந்து ரூபாவிற்குள் பொருளானால் ஐந்து சதம் கூட்டியும் பத்து ரூபாவிற்குள் பொருளானால் பத்து சதம் கூட்டியும் ஆளின் தோற்றத்துக்கமைய விற் றல் வேண்டும் என்ற தந்திரோபாயம் அங்கு கடைபிடிக் கப்பட்டது. 

அடுத்து வந்தவர் சீனி கேட்டார். 

“சும்மா இருக்கிற நேரத்தில் என்ன சொறியிறனியள்? சீனி எண்டு கேட்டவுடனை எடுத்துக் கொடுக்க கூடியதாய் கட்டி வைச்சால் என்ன?” 

சின்னத்தம்பி சீனி கட்டும்போது முதலாளியார் தொண தொணத்தார். 

”இன்னுங் கொஞ்சத்தாலை அரிசி லொறி வரும். சின் னத்தம்பி இறக்க ஆயுத்தமாய் நில்” 

“ஏத்துற இறக்குற வேலைக்குச் சம்பளங் கூட்டித் தந் தால் தான் செய்யலாம்’* 

“நீ நீ முற்பிறப்பிலை தவஞ் செய்த படியாலைதான் நீ சொல்லுறதையெல்லாம் கேட்டுக் கொண்டும் உனக்கொண் டும் செய்யாமல் இருக்கிறன். தயவு செய்து வாய் காட்டாதை” 

“என்னாலை மூட்டையள் தூக்கேலாது” 

“ஏன் சதை கரைஞ்சு போமே” 

“நீங்கள் மூட்டையள் தூக்கினால் சதை கரைஞ்சு போம் எண்டுதானே எங்களைக்கொண்டு தூக்கு விக்கிறியள்.” 

முதலாளியார் விறைத்துப் பார்த்தார். 

“ரணசிங்கா நீ நல்ல பெடியன் எல்லேஅரிசி மூட்டையை இறக்கு; சரியே” 

அவன் மௌனமாய் நின்றது சம்மதத்திற்கு அடையா ளமானது. ராஜா பீடிக் கட்டொன்றைப் பரோபகார சிந் தையோடு வீசினார். அவனுக்குப் பொறுக்க மனம் வராத போதும் கைகள் பொறுக்கிய பீடிகளை பையுள் போடாமல் இருக்க அவனால் முடியவில்லை. சின்னத்தம்பியை பீடிகளால் அத்தனை எளிதாய் மயக்கிட முடியாது என்பது முதலாளி யாருக்கு நன்றாகத் தெரியும். 

“இக்பால்! உனக்கும் ரணசிங்காவிற்கும் இண்டைக்குப் படம் பாக்கிறதுக்கு காசு தெல்லாம் கூடநாட நிண்டு மூட்டையை பிடிச்சு விடுறியா?” 

“சரி முதலாளி” 

மறுவார்த்தையின்றி இக்பால் ஒத்துக்கொண்டான். 

“முதலாளியோடை ஒத்துப் போனாக்கா எவ்வளவு நன் மையெண்ணு பாத்துக்க. எதித்து நின்னாக்கா ஒரு பயனுமில்லை” 

இக்பால் வெகு இரகசியமாக சின்னத்தம்பியின் காதுக் குள்கிசு கிசுத்தான். 

“அவர்போடுற எலும்புத் துண்டுக்கு நாவூற்ற மடையன் நானில்லை” 

“நாங்கள் எல்லாம் மடையர் நீதான் பெரிய புத்திசாலி”

முதலாளியாருடன் முரண்பாடு கொண்டு கடையை விட்டு விலகிய இம்மானுவேல், பொன்னுச்சாமி, ஜெய சிங்கா ஆகியோரின் நினைவுகள் அவன் நெஞ்சத்திரையில் சலனப்படலமாய் ஓடிற்று. அவர்களது வார்த்தைகள் காதிலே சில்வண்டாய் ரீங்காரித்தது. 

“இம்மானுவேல் டே இம்மானுவேல்”

“எனக்குக் காது கேக்குது” 

“ஆ அப்பிடியே” 

“ஏன் கூப்பிட்டனியள்?” 

“நீ கசிப்புக் குடிக்கிறதாய்க் கேள்விப்பட்டன் உண்மை தானே?” 

”ஓ!” 

“கடையிலை இருக்கிறதெண்டால் நல்ல மரியாதையாய் பிழங்க வேணும். கசிப்புக் குடிக்கிறது கூடாது.” 

“நீங்கள் வட் ஸிக்ஸ்டிநைனை குடிக்கிறதை விடுற தெண்டால் நானும் கசிப்புக் குடிக்கிறதை விட்டுவிடுறன்” 

“எனக்கு டொக்டர் ஆப்டீன் தான் குடிக்க வேணும் எண்டு சொன்னவர்” 

“எங்களுக்கு டொக்டர் ஆப்டீனிட்டை காட்டக் கூடக் காசில்லை” 

“சண்டித்தனம் விடுறது வேறையிடத்திலை. கசிப்புக் குடிக்காதை எண்டால் குடிக்காதை அவ்வளவுதான்” 

“நீங்கள் எல்லாம் எழுவத்தைஞ்சு ரூபா பெறுமதியான போத்தல் குடிக்கிறியள். நாங்கள் எல்லாம் எழுவத்தைஞ்சு சதம் பெறுமதியானதைக் குடிக்கிறம்.” 

“அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்?”

“என்னாலை கசிப்புக் குடிக்காமலுக்கு இருக்கேலாது”

“பியர் விஸ்கியைப் போலையே கசிப்பும்.’ 

கசிப்புத்தான் எங்கடை பியர் விஸ்கி.” 

*பெரிய ஆக்களின்ரை விசயம் உனக்குத் தேள்வை யில்லை. உன்ரை வாயிலை இனிக் கசிப்பு மணத்துதெண்டா கட்டாயமாய்க் கடையை விட்டு விலக்கிப் போடுவன்,'” 

“ஏலுமெண்டாப் பண்ணிப் பாருங்கோ” 

“என்னடா ராத்துறாய்” 

“நீங்கள் மட்டும் எதையும் குடிச்சுப்போட்டு கடைக்கே வரலாமெண்டா நாங்கள் மட்டும் ஏன் குடிக்கக் கூடாது. நாங்களும் உங்களைப் போலை மனிசர்தானே” 

“வேலைக்காற நாயே என்ரை உப்பைத் திண்டு போட்டுக் கதைக்கிற கதை” 

“நான் ஒண்டும் உங்களின்ரை நாயள் இல்லை. நாங் கள் செய்யிற வேலையை உறிஞ்சி உறிஞ்சிப் போட்டு உப் புப் போடுறியள். நாங்கள் செத்துக்கித்துப் போகாமல் நெடுக உழைக்கிறதுக்குத் தான் நெடுக உப்புப் போடுறி யள். உந்த உப்புத்தான் எங்கடை இரத்தத்தை கரைக்குது” 

“கரையாரப் புத்தி விட்டுப் போகாது” 

ஆவேசம் கொண்ட காளியம்மனோ இம்மானுவேலோ என்று இனம் பிரிக்க முடியாதபடி முதலாளியார் மீது பாய்ந் தான். 

“ஆரடா கரையான். வேசமோனே” 

அக்கம்பக்கத்துக் கடைச் சிப்பந்திகள் ஓடிவந்து இம் மானுவேலை இறுகப் பிடித்தார்கள். இம்மானுவேலின் உணர்ச்சி பீறிட்டுக் கொப்பளித்தது. 

அதன் பின்னர் இம்மானுவேல் தனது ஊரில் மீன்பிடி தொழில் செய்வதாகச் செய்திகள் சின்னத்தம்பிக்கு எட்டியது. 

”பொன்னுச்சாமி! உன்ரை பெட்டிக்குள்ளை ஐஞ்சாறு முட்டைக் கோதுகள் கண்டனான். ஏன்ரா தறதறவெண்டு முழிக்கிறாய். களவெடுத்தனியோ இல்லையோ.” 

“நாலைஞ்சு நாளாய்த் தடிமன் மொதலாளி” 

“கேட்ட கேள்விக்குப் பதில்” 

“எடுத்தேனுங்க” 

“ஓ! துரை களவையும் எடுத்துப்போட்டு எவ்வளவு இறாங்கியாய் எடுத்தன் எண்டும் சொல்றார். தோட்டக் காட்டுக் கழிசறையளை எல்லாம் கடையிலை வைச்சிருந்தா இதுக்குமேலை என்னைக் கூடக் களவு எடுத்துப் போடுவியளடா” 

“தடுமலுக்கு முட்டைக் கோப்பி போட்டுக் குடிச்சா போயிடும் எண்ணு சொல்றாங்க. அதினாலே தான்” 

தலையைச் சொரிந்தான் பொன்னுச்சாமி. 

“அதாலை களவு எடுக்கலாம் எண்டு சொல்லுவாய் போலை கிடக்குது. முட்டை வேணும் எண்டா உன்ரை கணக்கிலை காசைப்போட்டு எடுக்கிறது தானே. அதை விட் டுப்போட்டு களவு எடுக்கிறது சரி எண்டா உன்னை நான் என்ன செய்யிறது.” 

“அப்புறம் வீட்டுக்குச் சம்பளமனுப்பணும்” 

“எர்றா சக்கை. பாலும் வேணும் மீசையும் வேணும்” 

“அவனவன் தனிச்சொத்து சேக்கத் தொடங்கினதால தான் களவு வந்துது. என்னிட்டை இருக்கிற சொத்தை இழுக்கிறதுக்கு விரும்பாமே தனிச்சொத்து சேக்கிறதாலே தான் களவுபோனதும் அழுவுறன். சொத்தை அபகரிச்ச வன் தான் தனிச்சொத்துச் சேத்திட்ட படியால சிரிக்கிறான்” 

“இந்த இலட்சணத்தோடை கொம்யூனிசமும் பேசுறியோ” 

“ஒட்டிய வயித்தில இருந்துதான் கொம்யூனிசம் வரும். உங்களைப் போலப் பெரிய மனுஷங்களுக்கும் அதுக்கும் எட்டாப் பொருத்தமுங்க.” 

“விடுகாஸ் விடுறியோ’ 

“இல்லைங்க, உள்ளதைத்தான் சொன்னேங்க” 

“களவெடுக்கிறவங்களையும் கொம்யூனிசம் பேசுறவங் களையும் கடையிலை வைச்சிருக்கேலாது. காடையங்களுக்கு கடையிலை இடமில்லை. பாம்புக்குப் பால் வைக்க நான் முட்டாளில்லை.” 

பொன்னுச்சாமி சின்னத்தம்பியிடமிருந்து பிரியும் போது அவர்கள் கண்கள் துளிர்த்துப் போயின. 

ஜயசிங்கா அண்மையில் கடையை விட்டு விலகிய ஒரு வன். சின்னத்தம்பி வந்த சில வருடங்களுள் அவனும் வேலைக்கு வந்தவனே. கட்டுமஸ்தான உடம்பு. சின்னத் தம்பியை விட நாலைந்து ஆண்டுகள் வயதில் இளமையான வன். 

“நீ நெடுக நெடுக இக்பாலின்ரை வீட்டை ஏன் போறனீ? அவன்ரை தங்கச்சியாரை லைன் பண்றியோ?” முதலாளியார் கேட்டார். 

“ஓம் மொதலாளி.” 

ஜயசிங்காவின் பதில் கேட்டு முதலாளியார் அதிர்ந்து போனார். 

“பாத்திமாவை நாங் கல்யாணம் முடிக்கப் போறேங்”

ஜயசிங்கா தொடர்ந்தான். 

“சிக். கேடு கெட்ட பிறப்புக்கள், 

“என்ன மொதலாளி? இப்புடி சொல்றது. சீதணங் ஒண்டும் நாங் கேட்கல்லே. சும்மாதான் கட்டிறது. அதுகள் பாவந்தானே. நாங் எல்லாரும் ஏழை மனுஷங்கள் தானே.” 

“ஏழை எண்டால் கொஞ்சம் தான் பணமுமில்லை. பண மில்லாட்டிப் புத்தியுமில்லையே. நீ என்ன சாதி? அவள் என்ன சாதி? நீ எண்டா எட்டியாந் தோட்டேலே பிறந்து வளர்ந்த சிங்களவன். அவள் எண்டா சோனகத்தி, இது எப்பிடிப் பொருந்தும்?” 

“எல்லாம் மனசு தாங்க” 

“உந்த விளையாட் டெல்லாம் கடையில நிக்கிறவைய ளுக்கு ஒத்துவரா, கழிஈறை அலுவல்கள்.” 

சின்னத்தம்பி அப்போது இடைநுழைந்து கூறினான்: 

“பெரிய பெரிய கிழட்டுப் பணக்காறர் எல்லாரும் இரண்டு மூண்டு பெண்சாதிமாரை முடிச்சிருக்கினம் ஒரு சாதத்திற்கும் வழியில்லாத நாங்க எண்டபடியா முப்பத் தைஞ்சு வயசுக்கு மேலை முடிக்கிறதுக்குக் கூடஏலாது” 

“அவங்களிட்டை காசு கிடக்குது” 

“எங்களிட்டை மனசு இருக்குது” 

“அவங்கள் எத்தினை பெண்சா திகளையும் முடிச்சுக் கொண்டு நடத்தேலும். உங்களாலை உப்பிடிச் செய்யக் காசேது” 

“அப்பஇது வெறும் காசு விளையாட்டுத் தான் ஒழிய வேறை ஒண்டும் இல்லை” 

“ஓ! காசில்லாட்டி எங்களை நாயள் தான் இழுத்துக் கொண்டு போகும்.” 

”அப்பாடி! இது ஒண்டெண் டாலும் உங்களுக்குத் தெரியுதே. அதுவே போதும்” 

“உதை விட்டுட்டு; ஜயசிங்கா! நீ ஏதேன் வேறை வேலைக்குப் போறதுதான் நல்லம். கடையெண்டா இங்கை நெடுக ஒண்டிரண்டு சனங்கள் வரும் போகும். இங்கை இ புடிக் கொத்த காரியம் நடந்து தெண்டால் அதுஎல்லாக் களுந் தெரியும். பேந்து எனக்குத் தான் பெருத்த அவமானம் முகத்தை வெளியிலை காட்டவும் ஏலாது. இன்ன கடையிலை நிண்ட சிங்களப் பொடியன் அதே கடையிலை நிண்ட சோன கன்ரை தங்கைச்சியோடை இப்புடிச் செய்து போட்டான் எண்டு எங்கும் கதை பரவும்.” 

மொதலாளி, எனக்கு வேறை வேலை செய்யத் தெரியாது. 

“அதுக்கென்னை என்ன செய்யச் சொல்றாய்? கடை போடன்.” 

“மொதல் போட சல்லி.” 

“பாவமாயும் கிடக்குது. ஒருஇருநூறு ரூபாய் தாறன். கையெழுத்துப் போட்டுட்டு வாங்கிக் கொண்டுபோ அங்கி னேக்கை கடைபோடு, மாசாமாசம் என்ரை கடனைகொஞ்சம் கொஞ்சமாய் அடை.” 

“இருநூறு றுவா மிச்சங் குறைச்சல்.” 

“சரி பின்னை ஒருஐந்நூறு ரூபாய் தாறனே” 

எப்படியோ தந்திரமாகப் பேசி ஜயசிங்காவை கடையை விட்டு விலக்கியாயிற்று. சின்னத்தம்பியின் தடை முயற்சிகள் தோல்வி கண்டது. 

இக்பாலிற்கு ஜபசிங்கா பாத்திமாவும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றார்கள் என்றவிடயமே மிகப்புதிதாய் இருந்தது. தனக்குத் தெரியாமல் இந்தஉலகிலே ஏதோவெல்லாம் நடை பெறுவதற்காக மிகவும் ஆத்திரங் கொண்டான். 

பத்மாவின் நடத்தை மிகஇழிவாகப் போகுமென்று அவன் கனவுகள் கண்டதில்லை. 

அன்றிரவு- 

“உன்னைப் பத்தியும் ஜயசிங்காவைப் பத்தியும் வெளியில் என்ன பேசுறாங்கன்னு உனக்குத் தெரியுமா?” 

”தெரியும்!’* 

அவளுடைய மிடுக்கான வாய்த் துடுக்கைக் கேட்டவுடன் அவள் வயது வந்தவள், மணமானவள், என்பதைக் கூடப் பொருட்படுத்தாது பளீரென அவள் கன்னத்திலே அறைந்தான். 

“இஸ்லாமிய தர்மத்திற்கு எதிராப் போறவங்களுக்கு நிச்சயம் அல்லாஹின்ரை தண்டனை கிடைக்கும் நெனைக்கவே அறுவறுப்பாயிக்கு. சலீமை நீ உத்தமப் புருஷனாய்க் கொள் ளாத பாவம் உன்னைச் சொம்ம விடாதுடி!” 

– தொடரும்…

– மழைக்குறி, முதற் பதிப்பு: ஜனவரி 1975, ஆர்.எஸ். அச்சகம், யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *