கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 6,747 
 
 

(1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

மறுநாள் காலை பாலாஜி எழுந்திருப்பதற்கு முன்ன தாகவே அவனை ஜமீன்தாரின் பங்களாவிற்கு அழைத்துப் போக அட்வக்கேட் சச்சிதானந்தர் வந்து கதவைத் தட்டி னார். அவருடைய பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் விஜய வர்பனின் பங்களாவிற்கு பாலாஜி புறப்பட்டான். அம் மாமண்டபத்தினருகில் அகண்ட காவிரியாற்றின் கரை யிலே அழகாக நிர்மாணித்திருந்த அந்த பங்களாவுக்கு பாலாஜி வந்து சேர்ந்தபொழுது அங்கு இன்னொரு அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. 

பங்களாவையடைந்ததும் அறை அறையாக பாலாஜி யைச் சச்சிதானந்தர் அழைத்துப் போய்க் காட்டினார். விஜயவர்மனின் சொந்த அறையை அடைந்தபொழுது முனிசாமி ஓடோடி வந்து மேஜை மீது போட்டிருந்த விரிப்பை நீக்கி அடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து பாலாஜியிடம் கொடுத்தான். 

தன்னுடைய பெயருக்கு உறையில் விலாசமிட்டிருப் பதை பாலாஜி பார்த்ததும் “இந்தக் கடிதம் உனக்கு எப் படிக் கிடைத்தது?” என்று முனிசாமியிடம் கேட்டான். 

”நேற்று சாயங்காலம் ஜமீன்தார் இந்தக் கடிதத்தை எழுதி இங்கே வைத்தார். மறுநாள் நீங்கள் பங்களாவுக்கு வந்தால் உங்களிடம் இக்கடிதத்தை எடுத்துக் கொடுக்கும் படி எஜமான் சொன்னார். அப்படியானால் நீங்கள் வெளி யூர் போகிறீர்களா என்று நான் கேட்டேன். ஆமாம் என்று அவர் தலையை ஆட்டினார். எஜமான் உயிரைப் போக்கிக் கொள்ளவே இப்படியெல்லாம் திட்டமிட்டுச் செய்கிறார். என்பது அப்பொழுதே எனக்குத் தெரியாமல் போயிற்று என்றான் முனிசாமி. 

“விஜயவர்மன் ஒவ்வொரு சிறு காரியத்தையும் திட்ட மிட்டுச் செய்திருக்கிறார் போலிருக்கிறது. நமக்குத் தான் அவருடைய விபரீத எண்ணங்களைப்பற்றி ஒன்றுமே தெரி யாமற் போய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கடிதத்தைப் பாலாஜி பிரித்துப் படித்தான். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது:- 

அன்புள்ள பாலாஜி! 

இந்தக் கடிதத்தை நீ வாசிக்கும் பொழுது நான் வேறு உலகத்துக்குப் போய் இருப்பேன். என் அருமை நண்பர் சச்சிதானந்தர் உன்னை என் பங்களாவிற்கு அழைத்து வந்து குடியேற்றியிருப்பார். 

கல்கத்தா சௌரங்கி சதுக்கத்தில் என் மைத்துனி ராதையின் பாதுகாப்பில் ஜோதிவர்மன் வளர்ந்து வருகி றான். சச்சிதானந்தரிடம் சொல்லி உடனே ஜோதிவர்மனைத் தருவித்து கண்ணும் கருத்துமாக அவனை வளர்த்து வருவாயென்று நம்புகிறேன். 

சிறு குழந்தையை ஒரு பெண்துணையில்லாமல் நீ வளர்ப்பது கஷ்டமென்பது எனக்குத் தெரியும், ராதையை நீ மணந்துகொண்டால் எனக்கு மிகவும் திருப்தியாயிருக் கும். காலஞ்சென்ற என் அருமை மனைவிக்கும் இதுவே திருப்தியாய் இருக்குமென்பதை நான் அறிவேன். ஜோதி வர்மனுக்கும் இதுவே நல்லது. 

ராதை நல்ல பண்புகள் உள்ள பெண். அக்காளை உரித்து வைத்த மாதிரி இருப்பாள். வேறு பெண்ணிடம் உனக்கு நாட்டமில்லா மலிருக்குமானால் நீ ராதையை மணந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்னுடைய இந்தக் கடைசி ஆசையை முடிந்தால் நிறை வேற்றிவை. உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும். 

விஜயன் 

இந்தக் கடிதத்தை பாலாஜி மனதிற்குள்ளேயே படித்துவிட்டு அட்வகேட்டிடம் அதைக் கொடுத்தான். சச்சிதானந்தரும் அதை வாசித்த பின் வி ஜயவர்மன் சொல்லுவதைப் போல உனக்கு வேறு பெண்ணிடம் நாட்டமில்லாமலிருந்தால்… என்று சொல்லிவிட்டுச் சற்றுத் தயங்கினார். 

“வேறு பெண்ணென்ன, கல்யாணத்தைப் பற்றிய சிந்தனையே எனக்கு இந்த வினாடி வரையில் இல்லை. உங்க ளிடம் பொய் சொல்லுவானேன் ஐயா! என்னை மணந்து கொள்ள உலகத்தில் எந்தப் பெண்ணும் தயாராயிருப்பா ளென்ற எண்ணமே எனக்கு இருந்ததில்லை” என்றான் பாலாஜி 

அவன் இப்படிச் சொல்லியதன் பொருளை விளங்கிக் கொண்ட அட்வகேட் லேசாக சிரித்துக்கொண்டே, “நீ அவலட்சணமாகயிருப்பதாக எண்ணிக் கொண்டு இப்படி சொல்லுகிறாய். உன்னை விடப் பயங்கரமான தோற்றமுடையவர்கள் இன்னும் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள்” என்றார். 
 
“விஜயவர்மனுக்கு எது திருப்தியோ அப்படிச் செய்ய நான் தயங்கமாட்டேன் ஐயா. ஆனால்.. ” என்று இழுத்தான் பாலாஜி. 

“ஆனால் என்ற பேச்செல்லாம் வேண்டாம். மற்றது என் பொறுப்பு!” 

இரண்டு தினங்களுக்குப் பிறகு பாலாஜிக்கு கல்கத்தாவிலிருந்து ஒரு தந்தி வந்தது. அதில், 

“எல்லாம் சரி. ராதை சம்மதித்துவிட்டாள். ராதையையும் ஜோதிவர் மனையும் அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை விமானத்தில் வருகிறேன்.” 

-சச்சிதானந்தன் 

என்று எழுதியிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட பலஅதிர்ச்சி களினாலும் எதிர்பாராத மாற்றங்களினாலும் ஆச்சரியப் படும் சக்தியையே பாலாஜி இழந்து போயிருந்தான். ஓட்டு வீட்டில் ஒட்டிக்கொண்டிருந்த தன்னை விதி ஏதோ ஒரு விசித்திரமான புதிய பாதையில் மின்னல் வேகத்துடன் இழுத்துக்கொண்டு போவதாக அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் ஒரே ஒரு எண்ணம் மாத்திரம் அவன் மனதில் உறுதியாக ஏற்பட்டிருந்தது. ‘விஜயவர்மனின் நல்ல எண்ணங்களுக்கு அவர் விருப்பத்தைப் போலவே எல்லாம் நடக்கும்’ என்பதை அவன் உறுதியாக நம்பி னான். 

ஏந்திப் பிழைத்தவனுக்கு திடீர் ஐசுவரியம்! பாழடைந்த வீட்டில் வசித்தவனுக்கு ஒரு பங்களா! கண்டவர் ஏளனம் செய்யும் குரூபிக்கு ஒரு கல்யாணம்! விதியின் இந்தத் திருவிளையாடல்களெல்லாம் மனித சக்திக்கு மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டவைகளாகவே அவனுக்கு தோன்றின. விதி விட்டபடி நடப்பதைத் தவிர வேறுவழி யில்லையென்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான். 

சச்சிதானந்தர் சொல்லியபடியே வெள்ளிக்கிழமைமாலை ராதையையும் ஜோதிவர்மனையும் அழைத்துக்கொண்டு காரில் வந்திறங்கினார். அவர்கள் வரும்போது பாலாஜி பாவம், உள்ளே பதுங்கிக் கொண்டிருந்தான். ஏற்கனவே சங்கோஷப் பிராணியான அவனுக்கு தன்னுடைய முகத்தை ராதைக்குக் காட்ட வெட்கமாக இருந்திருக்க வேண்டும். ஒரு ஜமீன்தார் போலொத்த அந்தஸ்திலிருப்பவனைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாக எண்ணி ஆனந்தத்தோடு வரக்கூடிய பெண் தன்னுடைய முகத்தைத் பார்த்ததும் அரண்டுகொண்டு ஓடிப்போய் விடுவாளோ என்று அவன் அஞ்சினான். ஆகையால் அவன் சொல்லி வைத்திருந்தபடி சச்சிதானந்தர், ராதை, ஜோதி வர்மன் ஆகியவர்களை முனிசாமியும் ஒரு வேலைக்காரக் கிழவியும் தான் பங்களா வாசலில் எதிர்கொண்டு வரவேற்றார்கள். 

பிறகு சச்சிதானந்தர் பாலாஜியைப் பார்த்து “மணப் பெண்கள் தான் இப்படி வெட்கப்பட்டு ஒளிந்து கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மாப்பிள்ளை பெண்ணுக்குப் பயந்து ஒளித்துக்கொள்வதை இப்பொழுது தான் பார்க்கிறேன் பாலாஜி” என்று கிண்டல் செய்தார். 

“ஏற்கனவே நொந்து போயிருக்கும் என் மனதைத் தயவுசெய்து மேலும் நோக அடிக்காதீர்கள் ஐயா. இந்தக் கல்யாணத்தில் எனக்கு இஷ்டமில்லை. தயவு செய்து ராதையை கல்கத்தாவுக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்றான் பாலாஜி. 

”கல்கத்தாவுக்குத் திருப்பியனுப்புவதா? நீ என்ன சொல்லுகிறாய் பாலாஜி? இவ்வளவு தூரம் அழைத்து வந்த பெண்ணைத் திருப்பியனுப்ப வேண்டுமென்றா சொல்லுகிறாய்” என்றார் சச்சிதானந்தர் ஒன்றும் புரியாமல். 

ஆமாம் என்று வாயினால் சொல்லாமல் சமிக்ஞை செய்தார் பாலாஜி. 

அதைக்கேட்டு அட்வகேட் சச்சிதானந்தர் திகைத்துப் போனார். எவ்வளவோ முக்கியமான வேலைகளை யெல்லாம் விட்டு கல்கத்தாவுக்குப் போய்வந்த அவருக்கு பாலாஜியின் மீது கோபம் கோபமாக வந்தது. 

“நன்றாக யோசித்துத்தான் சொல்லுகிறாயா பாலாஜி. கல்யாணமாகாத ஒரு கன்னிப்பெண் உன்னை நம்பிக் கொண்டு இவ்வளவு தூரம் பறந்து வந்திருக்கிறாள். அவள் மனதை ஒடித்து சொந்த ஊருக்குத் திருப்பியனுப்புவது தர்மமாகுமா? திரும்பிப் போனால் அவளுடைய உற்றார் உறவினர்கள் தான் என்ன நினைப்பார்கள்? எதற்காக அவளுக்கு வீண் அபவாதங்களைக் கட்டிவைக்கவேண்டும்? இது உனக்கே நன்றாயிருக்கிறதா பாலாஜி? நீ செய்யும், ஒவ்வொரு காரியத்தையும் உன்னை அன்போடு ஆதரித்து இந்த நிலைமையில் கொண்டு வந்து வைத்திருக்கும் விஜயவர்மன் சூக்கும சரீரத்தோடு பார்த்துக் கொண்டு தான் இருப்பான். இந்த எண்ணம் உனக்கு இருந்தால் பொறுப்பில்லாமல் இப்படி நீ பேசவும் நடக்கவும் மாட்டாய்!” 

சச்சிதானந்தர் இதைச் சொல்லுகையில் எவ்வளவு மனக்கசப்போடு அவர் பேசுகிறாரென்பது அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலித்தது. 

பாலாஜி ஒன்றுமே பேசாமல் மௌனமாயிருந்தான். அப்பொழுது பக்கத்து அறையில் யாரோ விசித்து விசித்து அழுவதைப் போன்ற சப்தம் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. 

”யார்? அந்தப் பெண் அடுத்த அறையிலா இருக்கிறாள்? நாம் பேசுவதையெல்லாம் அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாளா?” என்று ஹீனஸ்வரத்தில் கேட்டான் பாலாஜி. 

“ஆமாம்!’ அவளுக்கும் உண்மை தெரியத்தானே வேண்டும்! அவளை மோசம்செய்வது நீ. நான் அல்ல என்பது அவளுக்குத் தெரியவேண்டாமா?” என்றார் துக்கம் தோய்ந்த தொனியில் சச்சிதானந்தர், 

பாலாஜி சொன்னான்:- 

”ஐயா! நான் சொல்லுவதைக் கொஞ்சம் பொறுமையோடு கேளுங்கள். காரிலிருந்து நீங்களெல்லோரும் இறங்குவதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். பூத்துக் குலுங்கும் புதுமலர் போலிருக்கும் ராதையைப் பார்த்த நிமிடம் முதல் என் மனம் மாறிப் போய்விட்டது ஐயா! கண்ணுக்கு அவ்வளவு கவர்ச்சியாயிருக்கும் பெண்களுக்கு நான் தகுதியான கணவனில்லை. பாவம் அவள் மனதில் என்னென்ன ஆசைகள் இருக்கின்றதோ யார் கண்டார்கள்? தன்னைப் போல இல்லாவிட்டாலும் தனக்கு வரும் கணவன் குரூபியாகவேனும் இல்லாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணம் ராதைக்கு மாத்திரமல்ல ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பது இயற்கை. என்னைப் பார்த்தாலே அவள் பயந்துகொண்டு கல்கத்தாவையும் தாண்டி வட துருவத்திற்கே ஓடிப்போய்விடுவாள். அவளுடைய எழிலையும் இளமையையும் இந்த குரூபிக்குப் பலியாக்க நினைக்காதீர்கள். இதைவிடப் பெரிய பாவம் உங்களுக்கு வேறு ஒன்றுமில்லை!!” என்றான் பாலாஜி. இந்த வார்த்தைகள் அவனுடைய இதயத்தின் அடிவாரத்திலிருந்து வருவதற்கு அடையாளமாக அவன் குரல் கனத்திருந்தது. 

இதைக் கேட்டதும் “அப்பாடா” இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்? என்று சச்சிதானந்தர் சொல்லி விட்டுச் சிரித்தார். பிறகு ” இதோ இந்தப் படத்தைப் பார்!” என்று சொல்லி ஒரு போட்டோவை அவர் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பாலாஜியிடம் கொடுத்தார். 

அதைப் பார்த்துவிட்டு “இது படம் அல்லவா?” உங்களிடம் எப்படி வந்தது?” என்று பாலாஜி ஆச்சரியத்தோடு வினவினான். 

“மரண விசாரணையின் பொழுது பத்திரிகைக்காரர்கள் எடுத்த படம். ஜமீனின் புதிய நிர்வாகியென்று உன் படத்தைச் சில பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அதில் ஒரு நகலைக் கொண்டு போய் ராதைக்குக் காட்டினேன். விஜயவர்மனின் ஆத்ம திருப்தியை உத்தேசித்தும் ஜோதி வர்மனை வளர்க்கும் பொறுப்பை நீ ஏற்றுக் கொண்டிருப் பதை முன்னிட்டும் மனப்பூர்வமாக உன்னை மணந்து கொள்ள விரும்பியே ராதை என்னோடு கூட வந்திருக்கிறாள். உண்மையைச் சொல்லப்போனால் விஜயவர்மனின் கடைசிக் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதில் நம்மைப் போலவே அவளுக்கு ஊக்கமிருக்கிறது பாலாஜி. நான் நடத்திவைக்கப் போவது கட்டாயக் கல்யாணமில்லை, கடமையில் கருத்துடைய ஒரு விசித்திரமான ஜோடிகளின் கல்யாணம்! இப்பொழுது என்ன சொல்லுகிறாய்?” என்று அவர் கேட்டார். 

“போட்டோவிலிருக்கும் மன்மதனைப் பார்த்துவிட்டு ராதை சம்மதித்திருந்தால் அதை ஒரு பெரிய பாக்கியமாகவும் காலஞ்சென்ற விஜயவர்மனின் ஆசியாகவும் நான் கருதுகிறேன். தயவுசெய்து அதிக ஆடம்பரமில்லாமல் எளிய முறையில் கல்யாணம் நடக்க நீங்களே ஏற்பாடு செய்யுங்கள்!” என்று பாலாஜி சொல்லியபொழுது ஜோதி வர்மன் பரக்கப்பரக்க விழித்துக் கொண்டு அங்கே வந்தான். அவனைத் தூக்கிக் கொண்டு போக ராதையும் அவன் பின்னால் மெதுவாக வந்தாள். 

ஜோதிவர்மன் சச்சிதானந்தரின் கால்களைக் கட்டிக் கொண்டு “நீங்கள் ஏன் சண்டை போடறீங்க மாமா சண்டை எனக்கு பிடிக்காது!” என்றான் மழலைக் குரலில். 

”சண்டையா? நாங்கள் சண்டை போடுகிறோமென்று உனக்கு யார் சொன்னது?” என்று சச்சிதானந்தர் கேட்டார் “அம்மா சொன்னாவே” என்று கூறிக்கொண்டு திரும்பினான் ஜோதிவர்மன். 

எக்கச்சக்கமாக குழந்தை தன்னைக் காட்டிக்கொடுத்து விடவே ராதை என்ன சொல்வதென்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டு ஒரு ஓரமாக நின்றாள். 

“குழந்தையிடம் போய் இப்படியெல்லாம் சொல்லலாமா ராதை” என்று கூறிய சச்சிதானந்தர் ஜோதிவர்மனை அன்போடு அணைத்துகொண்டு “அம்மா வேடிக்கைக்குச் சொல்லியிருக்கிறாடா கண்ணு! இந்த மாமா ரொம்ப நல்ல மாமா! சண்டையே போடமாட்டார்! உன்னோடு எப்பவும் விளையாடிக் கொண்டேயிருப்பார்!” என்றார் குழந்தையிடம். 

ஜோதிவர்மன் வரபோகிறான் என்று ஆசையோடு வாங்கி வைத்திருந்த ஒரு பீஸ்கோத்துப் பெட்டியைப் பாலாஜி எடுத்துத் திறந்து குழந்தையிடம் நீட்டவும் அதை சின்னஞ்சிறு கைகளினால் வாங்கிக்கொண்ட ஜோதிவர்மன், “ஆமாம் மாமா! இந்த மாமா நல்ல மாமா!” என்று சொல்லிக்கொண்டே பாலாஜியின் அருகில் வந்தான். குழந்தையை ஆவலுடன் தூக்கிக் கொண்ட பாலாஜி, “இந்தக் குழந்தையைப்போலவே எல்லோருடைய உள்ளமும் இருந்துவிட்டால் உலகம் எவ்வளவு சந்தோஷம் நிறைந்ததாயிருக்கும்!” என்றான். 

“உலகத்தைப்பற்றி எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாதப்பா! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்: இந்தக் குழந்தையின் மனம் எப்படியோ அப்படித்தான் அவனை வளர்த்துவரும் ராதையின் மனமும்” என்றார். பிறகு ஜோதிவர்மனைத் தடவிக் கொடுத்து “ஜோதி! நீயே இந்த மாமாவுக்குச் சொல்லு! உன் அம்மா நல்லவளா? பொல்லாதவளா?” என்றார். 

“எங்கம்மா மாதிரி நல்லவா வேறு யாருமே கிடையாதே! நீங்களெல்லோரும்கூட எங்க அம்மாவுக்கு அப்புறம்தான்!'” என்றான் ஜோதிவர்மன். 

ராதை வெட்கத்துடன் அந்த இடத்தைவிட்டு ஓடிப் போய்விட்டாள். சொற்ப நேரம் அவள் அவ்வறையிலிருந்த பொழுது மிகமிக பவ்வியமாகவும் அடக்கமாகவும் நடந்துகொண்டதோடு பாலாஜியிடம் வெறுப்போ அதிருப்தியோ இருப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. ராதை போனதைப் பார்த்தவுடன் ஜோதிவர்மன் “அம்மா!” என்று அழைத்துக்கொண்டு அவள் பின்னால் ஓடினான். 

“ராதையிடம் குழந்தை எவ்வளவு பற்றுதல் வைத்திருக்கிறது பார்த்தீர்களா? அந்தக் குழந்தையை உத்தேசித்தாவது ராதை இங்கேயே இருக்கவேண்டும். ராதையிடமிருந்து பிரிந்தால் குழந்தை ஏங்கிப் போய்விடுவான்!” என்றார் சச்சிதானந்தர். 

”சரி அய்யா! உங்கள் இஷ்டம் போலவும் ராதையின் இஷ்டம் போலவும் செய்யுங்கள். ஆனால் ராதையிடம் மாத்திரம் ஒன்று சொல்லி வையுங்கள். அவளுடைய இஷ்டத்தை அனுசரித்து கல்யாணம் நடக்கிறதே தவிர வலுக்கட்டாயத்தின் பேரிலல்லவென்பதை ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாக் அவளிடம் சொல்லுங்கள்!” என்றான் பாலாஜி. 

சுருக்கமாகவும் யாரையும் அழைக்காமலும் கல்யாணத்தை நடத்தி முடித்துவிட பாலாஜி விரும்பிய பொழுதிலும் விஷயம் எப்படியோ பரவிப் பாலாஜியின் நண்பர்களெல்லாம் கல்யாணத்துக்கு வந்துவிட்டார்கள். அவனை கேலி செய்து அழவைத்த சக மாணவர்கள் இரண்டு மூன்று தினங்கள் வரை பங்களாவிலேயே முகாம் போட்டு பாலாஜியை வாயாரப் புகழ்ந்துவிட்டு போனார்கள். இப்படியாகப் பாலாஜியின் புதிய வாழ்க்கை அம்மா மண்டபம் பங்களாளில் ஆரம்பமாயிற்று. பாலாஜியும் ராதையும் ஜோதிவர்மனைக் கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டு மென்ற ஒரே இலட்சியம் கொண்டிருந்தபடியினால் அவர்களுடைய மணவாழ்க்கை இன்பமாகக் கழிந்ததென்றே கூறவேண்டும். ஜோதிவர்மனைத் திருச்சியில் செயின்ட் ஜோசப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். ஜோதிவர்மன் நல்ல புத்திசாலியா யிருந்தபடியினால் ஒவ்வொரு வகுப்பிலும் முதலாவதாகத் தேறிக்கொண்டு வந்தான். பதினைந்தாவது வயதிலேயே அவன் பள்ளிக்கூடப் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரியில் சேர்ந்தான். 

விஜயவர்மன் மரணத் தறுவாயில் எழுதிவிட்டு போன கடிதத்தின் பிரகாரம் ஜோதிவர்மனை வடமொழி, சரித்திரம், பூகோளம், தத்துவம் ஆகிய பாடங்களில் பாண்டித்தியம் பெறக்கூடிய முறையில் கல்லூரியில் சேர்த்தான் பாலாஜி. இருபது வயது முடிவதற்குள் ஜோதிவர்மன் பி.ஏ. ஆனர்ஸ் பரீட்சையில் சித்தி பெற்று மேலும் ஐந்து வருட சரித்திர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்து டாக்டர் பட்டத்தையும் பெற்றான். ஜோதிவர்மனுக்கு வயது 25 பூர்த்தியாகியது. அவனுடைய தகப்பனார் விஜயவர்மனுக்குப் பாலாஜி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கத் தருணமும் வந்தது. 

அத்தியாயம்-5 

ஜோதிவர்மனுக்கு வயது ஏறஏற அவனுடைய தகப்பனாரையும் தாயாரையும் பற்றி எந்த அளவிற்குத் தெரியலாமோ அந்த அளவிற்கு அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டு வந்தான் பாலாஜி. 

பாலாஜியும் ராதையும் தன்னுடைய சொந்தத் தாய் தந்தையல்லவென்று ஜோதி உணர்ந்த பொழுதிலும் பெற்றவர்களைக் காட்டிலும் பன்மடங்கு பிரியத்துடனும் பரிவுடனும் வளர்த்து வந்தவர்களிடம் அவன் பக்தியும் விசுவாசமும் வைத்திருந்தான். ராதையை எப்பொழுதும் போல அம்மா என்று அன்பாக அவன் அழைத்தான். பாலாஜியையோ ஆரம்பத்தில் மாமா என்றும் கொஞ்சநாள் அப்பா என்றும் அழைத்துவிட்டு கடைசியில் பெரியப்பா என்று அழைக்கவாரம்பித்தான். 

ஜோதிவர்மனைக் கல்லூரியில் சேர்த்த பொழுது “வடமொழியிலும் சரித்திரம், பூகோளம் ஆகியவற்றிலும் விசேஷ ஊக்கம் காட்ட வேண்டும் ஜோதி! இது உன் அப்பாவின் விருப்பம்” என்றான் பாலாஜி. 

“அப்பாவுக்கு வடமொழியிலும் சரித்திர, பூகோள பாடங்களிலும் ஏன் இத்தனை அக்கறை?” என்று ஜோதிவர் மன் கேட்ட பொழுது அவனுக்கு என்ன பதில் சொல்வ தென்று பாலாஜிக்குத் தெரியவில்லை. 

“நீ வடமொழியை நன்கு பயின்று கொண்டு தேவ தேவியென்ற ஒரு கற்பனை ராணியை வேட்டையாட செம்பவளத் தீவுக்குப் போக வேண்டுமாம்! 2500 ஆண்டுகளாக உங்கள் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகச் செய்து கொண்டுவரும் ஒரு பயித்தியக்காரத்தனமான சபதத்தை நிறைவேற்றி வைக்க வேண்டுமாம், மரணத்தறுவாயில் உன் தகப்பனார் வெளியிட்ட கடைசிக் கோரிக்கை அப்பா இது!” என்று சொல்லிவிட பாலாஜி வாயெடுத்தான். குடும்பத்தின் அந்தரங்கமான பல விஷயங்கள் அடங்கியிருப்பதாகச் சொல்லி விஜயவர்மன் கொடுத்து விட்டுப் போன ஒரு பெட்டியை ஜோதிவர்மனுக்குத் திறந்து காட்டிவிடுவேனோ என்றுகூடப் பாலாஜிக்கு எண்ணம் தோன்றியது. 

காலஞ்சென்றவர் விதித்த கெடுவிற்கு முன்னால் ஜோதிவர்மனுக்குத் தேவதேவியைப் பற்றியோ அல்லது குடும்ப ரகசியங்களைப் பற்றியோ ஏதும் தெரியக் கூடாதென்று தீர்மானித்து தனது ஆவலைச் சிரமத்துடன் பாலாஜி அடக்கிக் கொண்டான். 

ஜோதி தனது இருபத்தைந்தாவது பிறந்த நாளன்று காலை எழுந்த பொழுது இரவு முழுவதும் செய்த அலங்காரத்தில் பங்களா ஒரு புதிய சோபையுடன் விளங்குவதை யும் ஏராளமான விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க தட புடலான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்து விட்டு “இதெல்லாம் என்ன பெரியப்பா? நம்ம வீட்டில் இன்று என்ன விசேஷம்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான். 

காலஞ்சென்ற கருணாமூர்த்தியான விஜயவர்மனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி ஜோதிவர்மனை ஆளாக்கிவிட்டோமென்ற பெருமிதத்தில் இருந்த பாலாஜி “இன்று உன்னுடைய பிறந்த தினம் ஜோதி! அதற்குத் தான் இந்த ஏற்பாடெல்லாம்!” என்றான். 

“என் பிறந்த தினத்திற்காகவா இந்த ஆடம்பரங் களெல்லாம்! வருடா வருடம் பிறந்த தினம் வந்து கொண்டு தானிருக்கிறது. இவ்வருடம் மாத்திரம் அதைக் கொண்டாடுவானேன்?” என்று ஜோதிவர்மன் கேட்டுக் கொண்டிருக்கையில் அட்வகேட் சச்சிதானந்தமும் அங்கு வந்து சேர்ந்தார். 

“நான் சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்த சச்சிதானந்தர், “உன் தகப்பனார் மரணத்தறுவாயில் பாலாஜியிடம் உன்னை ஒப்புவித்துவிட்டுப் போன பொழுது உன்னுடைய வருங்காலம் எப்படி இருக்க வேண்டுமென்று திட்டமிட்டுச் சொல்லிவிட்டுப் போனார். 25 வயது வரையில் உன்னை அன்பாகவும் தலைசிறந்த அறிவாளியாகவும் வளர்த்து ஜமீன் சொத்துக்களைப் பத்திரமாக உன்னிடம் ஒப்படைப்பதாக விஜயவர்மனுக்குப் பாலாஜி வாக்களித்தான். அந்த வாக்குறுதியை ஒரு இம்மியளவுகூடப் பிசகாமல் நிறைவேற்றிய பாலாஜி இன்று ஜமீன் பொறுப்புகளை உன்னிடம் ஒப்படைக்கத் தீர்மானித்திருக்கிறான். நீ ஜமீன்தாராகும் வைபவத்தைக் கொண்டாடவே இந்த ஏற்பாடுகளெல்லாம்!” என்றார். 

ஜோதிவர்மன் ஒருகணம் பேசாமல் நின்றான். 

அந்தச் சமயம் அங்கு வந்த ராதை ஜோதியைப் பார்த்துவிட்டு “குழந்தை ஏன் ஒரு மாதிரியிருக்கிறான்?” என்று கேட்டாள் பாலாஜியைப் பார்த்து. 

“ஒன்றுமில்லை ராதை! குழந்தைக்கு ஒரு மங்களமான செய்தியை அறிவித்தார் அட்வகேட் அவ்வளவுதான்”. 

அப்பொழுது குறுக்கிட்ட அட்வகேட் “ஜோதி! பாலாஜியின் வாழ்க்கை எப்படி ஆரம்பித்ததென்பது உனக்குத் தெரியாது. அவனுக்கு ராதையைக் கல்யாணம் செய்து வைக்கவும் அவனை இந்தப் பங்களாவில் கொண்டு வந்து வைக்கவும் நான் பட்ட பாடு என் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும். விஜயவர்மன் விரும்பியதைப் போல உன்னை மகாமேதையாக்க வேண்டுமென்ற ஒரே இலட்சியத்துக்காக வாழ்ந்து வருபவர்கள் பாலாஜியும் ராதையும். வாழ்க்கையில் அவர்களுக்கு வேறு இலட்சியமே கிடையாது. அப்பா! உன் தகப்பனார் ஒப்படைத்த பொறுப்பை பாலாஜி சிறப்பாக நிறை வேற்றிவிட்டான். அதில் அவன் பெருமையடைய நியாயமிருக்கிறது. இந்த சுபநேரத்தில் உன் தகப்பனார் உயிருடனில்லாவிட்டாலும் விண்ணுலகத்தில் பரம் திருப்தியடைந்து கொண்டிருப்பார்!” என்றார் சச்சிதானந்தர். 

இவ்வளவையும் ஆடாமல் அசையாமல் பொறுமை யோடு கேட்டுக்கொண்டிருந்த ஜோதிவர்மன் பாலாஜியைப் பார்த்து “பெரியப்பா! இந்தக் கொண்டாட்டங்களை யெல்லாம் நீங்களே நடத்துங்கள். எனக்கு இதில் சம்பந்தமில்லை. நான் டில்லிக்குப் போகிறேன். இதோ போய்க் கொண்டேயிருக்கிறேன். இந்தக் கொண்டாட்டங்களும் எனக்குத் தேவையில்லை. ஜமீனும் எனக்குத்தேவையில்லை!” என்று சொல்லிவிட்டு மளமளவென்று தன்னுடைய அறைக்கு அவன் விரைந்து போய்விட்டான். 

“இந்த ஏற்பாடுகளைப் பற்றிக் குழந்தைக்கு இரண்டு நாள் முன்னதாகவே சொல்லியிருந்தால் கடைசி நேரத்தில் இப்படித் தடங்கல் ஏற்பட்டிருக்காது. தனக்குத் தெரியாமல் என்னவெல்லாமோ நடக்கிறதேயென்று அவன் வருத்தப்படுகிறான் போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டு ஜோதியைச் சமாதானப்படுத்த அவன் அறைக்கு ராதை போகவும் பாலாஜியும் சச்சிதானந்தரும் அவள் பின்னால் போனார்கள். 

ராதையைக் கண்டதும் ஜோதிவர்மன் கண்களில் கண்ணீர்ததும்ப “இதற்கெல்லாம் நீயும் உடந்தையாகத் தானே இருக்கிறாய் அம்மா! ஜமீன் பொறுப்புகளை என் தலையில் கட்டிவிட்டு நிம்மதியாக இருக்க எவ்வளவு நாட்களாக நீங்கள் திட்டம் வகுக்கிறீர்கள்?” என்றான். 

“ஜமீனுக்கு உரியவன் நீதானே ஜோதி! உன் அப்பா சொல்லிவிட்டுப் போனபடி செய்வது பெரியப்பாவின் கடமையில்லையா? வயதடைந்த பிள்ளையான உனக்கு இது தெரியாதா? பொறுப்பை உன் தலையில் கட்டிவிட்டுப் பெரியப்பா எங்காவது ஓடிவிடப்போகிறாரா? இல்லையே! உன்னோடு தானே நாங்களும் இருக்கப் போகிறோம்” என்றாள் ஆதரவாக ராதை. 

“எப்பொழுதும் போல பெரியப்பாவே ஜமீன் நிர்வாகங்களைக் கவனித்து வந்தாலென்ன வென்று நான் கேட்கிறேன்” என்றான் ஜோதி. 

“நீ பிரியப்பட்டால் நிர்வாகத்தை எப்பொழுதும் போல பாலாஜியே கவனித்து வருவான். அதற்கும் சட்டபூர்வமான வாரிசு உரிமையை இன்று நீ ஏற்றுக் கொள்வதற்கும் சம்பந்தமில்லை. ஜோதி! இன்று முதல் ஜமீன் சார்பாக எதையும் நீ செய்தால் தான் செல்லும். பாலாஜி செய்தால் செல்லாது. உன்னுடைய நிர்வாக அதிகாரங்களை மனம் உவந்து பாலாஜிக்கு நீ கொடுப்பது வேறு விஷயம்” என்றார் சச்சிதானந்தர். 

இவர்கள் இப்படி வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கையில் பாலாஜியின் மனதில் ஒரு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது. தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனைப் போல அவன் சொன்னான்:- 

“இதோ பார் ஜோதி! உன் தகப்பனார் என்னைக் கடவுள் போலிருந்து ஆதரித்தார். அவருடைய மரணத் தறுவாயில் அவருக்கு அளித்த வாக்குறுதியை எப்படியும் நான் நிறைவேற்றியாக வேண்டும். உன்னை அருமை பெருமையாக அன்போடு வளர்த்து வந்த என்னிடம் உனக்குப் பிரியம் இருக்குமானால் இன்று ஒரே ஒரு நாளைக்கு என் பேச்சை நீ கேட்க வேண்டும். நீ விரும்புவதைப் போல நானும் ராதையும் உன்னோடு தொடர்ந்து. இருக்க வேண்டுமானால் இன்று எல்லாம் எங்கள் விருப்பத்தின்படி நடக்க விட்டு விட வேண்டும். இன்னொரு விஷயம் சொல்லுகிறேன். உனக்கு மட்டுமில்லை, சச்சிதானந்தருக்கும் ராதைக்கும் கூடத்தான் சொல்லுகிறேன். சென்ற இருபது ஆண்டுகளாக, அதாவது விஜயவர்மன் அகால மரணமடைந்த தினத்திலிருந்து ஒரு அதிமுக்கியமான விஷயத்தை யாருக்கும் தெரியாமல் பரமரகசியமாக நான் பாதுகாத்து வருகிறேன். சட்டப்படி உன்னை ஜமீந்தாராக்கிய பிறகுதான் அதை உனக்கு வெளியிட வேண்டுமென்பது விஜயவர்மனின் கடைசிக் கோரிக்கை! தயவுசெய்து என் பேச்சைத் தட்டாதே ஜோதி!” என்றான். 

“இருபது வருடங்களாகப் பாதுகாத்து வரும் அந்தப் பரம ரகசியம் என்னவோ?” என்றான் ஜோதி. 

“அதைப் பற்றி இப்பொழுது சொல்லக்கூடாது. இவ்வளவு சுலபமாகச்சொல்லி முடித்துவிடக் கூடிய விஷயமும் இல்லை. விழா முடிந்தபிறகு அதைப் பற்றிப் பேசுவோம்” என்றான் பாலாஜி! 

“இப்பொழுது நான் என்ன செய்ய வேன்டுமென்கிறீர்கள் பெரியப்பா?” என்றான் ஜோதி. 

“இன்று நடக்கும் விழாவில் உற்சாகமாக நீ கலந்து கொள்ள வேண்டும். உன் வளர்ப்புத் தாயையும் என்னையும் திருப்திப்படுத்துவதற்காகவேனும் இன்று ஒரு நாள் எங்கள் இஷ்டப்படி நீநடக்க வேண்டும்!” என்றான் பாலாஜி.

“உங்கள் திருப்திக்காக நான் எதுவும் செய்யத் தயாராயிருக்கிறேன் பெரியப்பா!” என்று ஜோதி சொல்லவும் “நம்ம ஜோதியின் சமர்த்து யாருக்கு வரும்” என்று ஜோதிவர்மனைத் தடவிக் கொடுத்துப் பெருமிதத்துடன் கூறினாள் ராதை. 

அன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமானுக்கும் மலைக்கோட்டைப் பிள்ளையாருக்கும் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஜோதிவர்மனைப் பாலாஜியும் ராதையும் ஆலயங்களுக்கு அழைத்துப் போய்விட்டு வந்தார்கள். விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த நண்பர்கள், உயர்தர அரசாங்க அதிகாரிகள், நகரப்பிரமுகர்கள் முதலான எல்லோருடனும் ஜோதிவர்மன் கலகலப்பாகப் பேசிப் பழகினான். மாலையில் நடந்த சங்கீதக் கச்சேரிக்கு திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய இரு ஊர் ஜனங்களும் அப்படியே திரண்டு வந்திருந்தார்கள். விழா முடிந்து விருந்தினர் மணிக்கு களெல்லாம் திரும்புவதற்குள் இரவு ஒன்பது மேலாகிவிட்டது. 

அன்றிரவு சாப்பாட்டுக்குப் பின்னர் ஜோதிவர்மன், சச்சிதானந்தர், ராதை, வீட்டு வேலையாள் முனிசாமி ஆகிய நால்வரையும் பாலாஜி தன்னுடைய அறைக்கு அழைத்துக் கொண்டு வந்து உட்காரச் சொல்லிவிட்டு, ஜோதிவர்மனைப் பார்த்து “ஜோதி! உன் குடும்பத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை, பயங்கரமான ஒரு பரம ரகசியத்தை, இப்பொ ழுது உனக்குச் சொல்லப் போகிறேன் அதற்கு இரண்டு பிரத்தியட்ச சாட்சிகள் இருக்க வேண்டுமென்பதற்காகவே சச்சிதானந்தரையும் முனிசாமியையும் இங்கு இருக்கச் செய்திருக்கிறேன்” என்றான். 

பிறகு இரும்பு அலுமாரியைத் திறந்து அதன் அடியில் கோணிச் சாக்குகளினால் மூடித்தைத்து பத்திரப்படுத்தியிருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியைப் பாலாஜி வெளியே எடுத்து மேஜையின் மீது வைத்தான். கோணிச் சாக்கைக் கிழித்தவுடன் மிகமிகப் பழையான துருப்பிடித்த ஒரு இரும்புப் பெட்டி அவர்களுக்குக் காட்சி கொடுத்தது. 

பாலாஜி சொன்னான்:- 

“இந்தப் பெட்டியைத் திறப்பதின் முன்னால் விஜய வர்மன் காலமாவதற்கு முதல் என்னை வந்து சந்தித்ததையும் இந்தப் பெட்டியை என்னிடம் ஒப்படைத்து விட்டுக் கூறியதையும் சுருக்கமாக நான் தெரிவிக்க வேண்டும்.” 

“அன்றிரவு விஜயவர்மன் சுய நினைவுடன் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. நஞ்சு குடித்ததினாலோ அல்லது அளவுக்கு மீறிய துயரத்தினாலோ அவருக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று அப்பொழுது நான் நினைத்தேன். ஏனெனில் அன்றிரவு வர்மன் சொல்லிய விவரங்கள் அசாத்தியமானவைகளாகவும் அமானுஷ்யமானவைகளாகவும் இருந்தன!” என்றான். 

“விஜயவர்மன் காலமாகிய தினத்தன்று காலை நான் உங்களிடம் வந்து விசாரித்தபொழுது விஷேசமாக விஜயவர்மன் ஏதும் சொல்லவில்லையென்று ஒரேயடியாகச் சாதித்தீர்களே!” என்று குறுக்கிட்டார் சச்சிதானந்தர். 

“ஆம், அது உண்மைதான்! நான் அப்படிச் சாதித்தது இரண்டு காரணங்களுக்காக. முதலாவதாக விஜயவர்மன் சொல்லிவிட்டுப் போனதை நான் நம்பவேயில்லை. ஜன்னி கண்டு அவர் பிதற்றுவதாக அப்பொழுது நினைத்தேன். இப்பொழுதும் அந்த அபிப்பிராயத்தை நான் மாற்றிக் கொள்ளவில்லை. இரண்டாவதாக அந்த நம்ப முடியாத விசித்திரமான தகவல்களை விஜயவர்மன் விதித்துவிட்டுப்போன தவணைக்கு முன்னால் வெளியிட எனக்கு அமைதியுமில்லை!” என்றான் பாலாஜி. 

“விஷயத்தைச் சொல்லுங்கள் பெரியப்பா! இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது? திறவுங்கள் பார்க்கலாம்!” என்று அவசரப்படுத்தினான் ஜோதிவர்மன். 

“நீ அவசரப்படுவதைப் போல அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிடக் கூடிய விஷயமில்லையப்பா இது! இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிம்பிஸாரன் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக வந்த ஒரு வரலாற்றை ஐந்து நிமிஷத்தில் சொல்லி முடித்து விட முடியுமா? வடமொழியிலும் சரித்திர பாடத்திலும் நீ விசேஷ தேர்ச்சி பெற வேண்டுமென்று உன் தகப்பனார் விரும்பிய காரணத்தையும் இதோ நீ தெரிந்து கொள்ளப்போகிறாய். அவர் என்னிடம் சொல்லி விட்டுப் போனதைக் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அவற்றை நம்புவதும் நம்பாததும் உன் பொறுப்பு!” 

இவ்வாறு ஆரம்பித்த பாலாஜி, விஜயவர்மன் காலமாவதற்கு முதல் நாள் இரவு கடுமையான நோயுடன் மலைக்கோட்டைக்கு வந்து தன்னைப்பார்த்ததையும் தன்னிடம் உருக்கமாகச் சொல்லிய வரலாறுகளையும் எடுத்துரைத்தான். ஜயகேசரி, விஜயகேசரி, சந்திரிகா, தேவதேவி ஆகியவர்களைப் பற்றியெல்லாம் விஜயவர்மன் உணர்ச்சியோடு பேசியதை ஒன்றும் விடாமல் ஞாபகப்படுத்திச் சொன்னான். 

பாலாஜி மேலும் சொன்னான்:- 

செம்பவளத் தீவின் ராணியான மலைக்கன்னி என்ற தேவதேவி விஜயகேசரியைக் குரூரமாகப் படுகொலை செய்து இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அப்படியிருந்தும் அவள் இளமை மாறாத சிரஞ்சீவியா யிருப்பதாக உன் தந்தை நினைத்திருக்கிறார்.அதை நான் கொஞ்சமும் நம்பவில்லையென்பதை அவருடைய முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டேன். ஆயினும் இந்தப் பெட்டியையும் உன்னிடம் ஒப்படைப்பதாக அவருக்கு நான் வாக்குக் கொடுத்தேன். இதோ உன் தகப்பனார் கொடுத்து விட்டுப்போன பெட்டி இருக்கிறது. அதன் சரவிகளும் இதோ இருக்கின்றன. பெட்டியைத் திறந்து பார்த்து விட்டு உனக்கு எப்படிச் செய்வது உசிதமாகத் தோன்றுகிறதோ அப்படிச் செய்யலாம்!” 

பாலாஜி சொல்லியதையெல்லாம் ஜோதிவர்மன் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். குறுக்கே அவன் ஒரு கேள்வியும் கேட்கவில்லை. தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களையும் அவன் வெளியிடவில்லை. சச்சிதானந்தர் மாத்திரம் இடையிடையே ஏதேதோ கேட்டார். கடைசியில், “கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதையை விஜயவர்மனின் தகப்பனார் சொல்லியதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயகேசரியின் வரலாறும் தேவதேவி சிரஞ்சீவியாக இருப்பதும் மெய்யா பொய்யா? என்பது எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இந்தக் கதை விஜயவர்மன் குடும்பத்தின் வம்ச பரம்பரையாக வந்ததென்பதைச் சந்தேகப்பட வேண்டியதேயில்லை!” என்றார் அவர். 

இதைக் கேட்ட பிறகும்கூட ஜோதிவர்மனின் மளனம் கலையவில்லை. பாலாஜி கொடுத்த இரண்டு சாவிகளில் ஒன்று இரும்புச் சாவியாகவும் மற்றொன்று வெள்ளிச்சாவியாகவும் இருப்பதைக் கவனித்துக்கொண்டு இரும்புச் சாவியைப் போட்டு அவன் பெட்டியைத் திறக்க முயற்சித்தான். பலவருடங்களாகத் துருப்பிடித்துப் போயிருந்த பூட்டைச் சுலபமாகத் திறக்க முடியவில்லை. பூட்டுக்குள் எண்ணெயை ஊற்றி சைத்ரோபசாரங்களெல்லாம் செய்து பெட்டியைத் திறந்தவுடன் மேலே ‘ஓம்’ என்று வடமொழி எழுத்தில் எழுதிய ஒரு பட்டுத் துணி தென்பட்டது. பல நூற்றாண்டுகளாக அந்த பட்டுத் துணி பெட்டிக்குள் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு அடையாளமாக அதன் நூல் இழைகள் பிரிந்து தொட்டால் நொருங்கி விடும் நிலைமையை அடைந்திருந்தது. மெதுவாக அதை எடுத்துக் கீழே வைத்தவுடன் பெட்டிக் குள்ளிருந்து ஒரு மாதிரியான நெடி குப்பென்று கிளம்பி மூக்கைத் துளைத்தது. அந்த வாடையும் உள்ளே இருக்கும் பொருள்களின் பழமையைக் கணித்துவதாக இருந்தன. ஜோதிவர்மன் முகத்தைச் சற்று திருப்பி வைத்துக் கொண்டு பெட்டிக்குள் கையை விட்டு ஏட்டுச் சுவடிக் கட்டுகள் மூன்றை வெளியே எடுத்து வைத்தான். அம் மூன்று சுவடிக் கட்டுகள் மட்டும் கயிற்றினால் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஒரே ஒரு கட்டை மாத்திரம் ஜோதிவர்மன் பிரித்தான். அதில் சுமார் 60 பனை ஒலைச்சுவடிகள் இருந்தன. ஒவ்வொரு சுவடியிலும் எழுத்தாணியைக் கொண்டு வடமொழியில் நெருக்கி நெருக்கி எழுதி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது மூன்றாவது சுவடிக்கட்டுகளில் கிரந்தம், நாகரம், உருது, வங்காளி, இந்துஸ்தானி, தமிழ், மலையாளம், கன்னடம் முதலான பல பாஷைகளிலும் எழுதி ஒவ்வொன்றின் அடியிலும் அதே பாஷையில் ஒப்பமிட்டுத் தேதியும் போடப் பட்டிருந்தது. அந்தச் சுவடிகளையும் அவற்றி லிருந்த எழுத்தையும் சுவடிகள் இருந்த நிலைமையையும் பார்த்தவர்கள் அவை பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்க வேண்டுமென்பதையும் பற்பல காலங்களில் பலரால் அவை எழுதிவைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் சிறிதும் சந்தேகிக்க முடியாமலிருந்தது. சற்று அஜாக்கிரதையாக அழுத்திப்பிடித்தால் சுவடிகள் பொடிப் பொடியாக நொருங்கிவிடும் போலிருந்தன். 

சுவடிகளில் என்ன எழுதியிருக்கிறதென்பதைப் படிக்க முயற்சிப்பதற்கு முன்னதாகவே அவை இருந்த நிலைமையைப் பார்த்ததும் விஜயவர்மனைப் பித்துக்குளி யென்று நினைத்த பாலாஜி உட்பட எல்லோருக்கும் அவர்களை அறியாமலே ஒரு பயபக்தியும் பரபரப்பும் உண்டாகியது. 

தேவதேவியைப் பற்றிய வரலாறு மெய்யோ அல்லது பொய்யோ எப்படியிருந்த பொழுதிலும் அந்த வரலாறு விஜயவர்மனின் கற்பனையில் உதித்ததல்லவென்பதை பாலாஜி இப்பொழுது நிச்சயமாக நம்ப வேண்டியிருந்தது. சச்சிதானந்தர் சொல்லியதைப்போல இந்த அதிசய வம்சத்தில் வரலாறு விஜயவர்மனின் வம்சத்தில் பரம்பரையாக வந்த வரலாறாகியிருக்க வேண்டுமென்பதற்கு ஏட்டுச் சுவடிகளில் பல காலங்களிலே பலரால் எழுதி வைத்து ஒப்பமிட்டிருந்த விவரங்கள் அசைக்க முடியாத ஆதாரங்களாயிருந்தன. 

தன்னுடைய திகைப்பை மறைத்துக்கொள்ளத் தெரியாமல் “எவ்வளவு பழமையான சுவடிகள் அவற்றிலே எவ்வளவு பழமையான எழுத்துக்கள்! ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது!” என்றான் பாலாஜி. 

இதைக் கேட்ட பிறகுகூட ஜோதிவர்மன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. கை, கால்கள் தானாகவே இயங்கும் ஒரு நூதனமான இயந்திரத்தைப் போல அவன் மௌனமாகத் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். 

இரும்புப் பெட்டியில் கைவிட்டுத்துளாவிய ஜோதிவர்மன் அதற்குள்ளேயிருந்து பட்டுத்துணியில் சுற்றி வைத்திருந்த பாரமான ஒருபொருளை எடுத்துக் கீழே வைத்தான். துணியை நீக்கிப்பார்த்தவுடன் அது பிரமாதமா வேலைப்பாடுகள் அமைந்த ஒரு வெள்ளைப்பெட்டகமாயிருந்தது. பெட்டகத்தின் மேல்பக்கத்தில் ஒரு கொடிய நாகசர்ப்பம் படம் விரித்தாடுவதைப்போல வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. நாகபாம்பின் தலையில் சாவி நுழையும் படியான ஒரு சிறு துவாரமிருந்தது. விஜயவர்மன் கொடுத்து விட்டுப்போன இரண்டு சாவிகளில் ஒன்றான வெள்ளிச்சாவி இந்தப் பெட்டகத்தின் சாவிதானென்பதை இப்பொழுதுதான் அவர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இரும்புப் பெட்டியைப் போல இந்த வெள்ளிப் பெட்டியையும் ஜோதிவர்மன் மிகுந்த பிரயாசையுடனேயே திறக்க வேண்டியிருந்தது. பெட்டியைத் திறந்து மேல் மூடியை நகர்த்தி வைத்தவுடன் அதற்குள் இன்னொரு சிறிய வெள்ளிப் பெட்டி இருந்தது. அந்தப் பெட்டிக்குப் பூட்டு ஏதுமில்லை. மேல் பக்கத்தைத் தொட்டுத் தூக்கியவுடன் அது திறந்து கொண்டு விட்டது. பெட்டிக்குள் பெட்டியை வைத்து அவ்வளவு பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொருள் என்னவென்பதைப் பாலாஜியும் சச்சிதானந்தரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கையில் ஜோதிவர்மன் சமீபத்தில் எழுதியதைப் போன்ற ஒரு கடிதத்தை வெளியே எடுத்தான். அதன் உறையில் “என் அன்புள்ள குழந்தை ஜோதிவர்மனுக்கு” என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் அந்தக் கடிதம் விஜயவர்மனால் எழுதிவைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். 

கடிதத்தைக் கீழே வைத்துவிட்டுப் பெட்டிக்குள் துளாவிப்பார்த்த ஜோதிவர்மன் பெட்டியின் அடியிலிருந்து ஒரு மோதிரத்தையும் ஒரு தங்கச் சங்கிலியையும் வெளியே எடுத்து வைத்தான். மோதிரத்தின் முகப்பிலும் தங்கச் சங்கிலியின் முகப்பிலும் சர்ப்பம் போன்ற ஒரு சித்திரம் அழகாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மோதிரத்திலிருந்த சர்ப்பத்தின் இரண்டு கண்களிலும் பிரகாசமான இரண்டு கரு நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சர்ப்பத்தின் வால்பக்கத்தில் தேவதேவி என்ற எழுத்துக்கள் வடமொழியில் மிகச் சிறிதாக, கூர்ந்து கவனித்தாலொழியத் தெரிய முடியாதபடி பொறிக்கப்பட்டிருந்தன. மோதிரத்தை விடச் சங்கிலியின் முகப்பில் தான் வேலைப்பாடுகள் அதிகமிருந்தன வென்று கூற வேண்டும். ஏனெனில் முகப்பு முழுவதிலும் மிக மிக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. முகப்பின் பின்பக்கத்தில் வடமொழி எழுத்திலே தேவதேவி என்ற பெயர் ஒரு மூலையில் தென்பட்டது. இதைக் கொண்டு அந்த மோதிரமும் சங்கிலியும் செம்பவளத் தீவின் ராணி தேவதேவிக்குச் சொந்தமானவைகளாயிருக்க வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியதாயிருந்தது. 

“தேவதேவியைப்பற்றி வி ஜயவர்மனின் தகப்பனார் சொல்லிய பொழுது வம்ச பரம்பரையாக வந்த ஒரு கட்டுக்கதையையே அவரும் சொல்லுகிறாரென்று நினைத்தேன். இப்பொழுது தான் தேவதேவி என்ற ஒரு ராணி இருந்தது உண்மையாகத்தானிருக்க வேண்டுமென்பது தெரிகிறது!'” என்றார் சச்சிதானந்தர். 

“செம்பவளத் தீவில் தேவதேவி அரசு செலுத்தியதும் அவள் விஜயகேசரியைக் கபடமாகக் கொலை செய்ததும் உண்மையாகவேயிருக்கலாம். ஆனால்…” என்று பாலாஜி இழுக்கவும் “ஆனால் விஜயவர்மன் நினைத்ததைப் போலவே அவள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாயிருப்பது அசாத்தியம் என்கிறார்! அப்படித்தானே! இந்த ஒரு விஷயத்தில் நம்மிடையில் அபிப்பிராய வேற்றுமையேயில்லை!” என்றார் சச்சிதானந்தர். 

அவ்விருவரும் இப்படி அபிப்பிராயம் பரிமாறிக் கொண்டிருக்கையில் அவர்கள் அந்த அறையிலிருப்பதையே மறந்து ஜோதிவர்மன் வெள்ளிப்பெட்டியிலும் இரும்புப் பெட்டியிலும் இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று துளாவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே ராதையும் முனிசாமியும் மெளனமாக வர்மனையும் பெட்டிகளையுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

பெட்டிகளில் வேறு ஒன்றுமில்லை யென்பது தெரிந்த பின் பெட்டிகளை நகர்த்தி வைத்தான், ஜோதிவர்மன். ஒரு பெருமூச்சுடன் வெள்ளிப்பெட்டியில் தன் பெயரிட்டு தனது தகப்பனார் எழுதி வைத்திருந்த கடிதத்தைப் பிரித்தான். தட்டினால் பொலபொல வென்று கீழே உதிர்ந்து விழும் போலிருந்த முத்துமுத்தான எழுத்தில் ஜோதிவர் மனுக்கு விஜயவர்மன் இரண்டு பக்கங்கள் எழுதி வைத்திருந்தான். அதைப்பார்த்த பிறகு தான் ஜோதியின் மௌனம் கலைந்தது. 

“பெரியப்பா! நீங்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்! உங்களைப் போல நான் எவ்விதமான அவசர முடிவுக்கும் வர விரும்பவில்லை. ஆகையால் தான் இவ்வளவு நேரமும் மௌனம் சாதித்தேன். உங்களிடம் அப்பா சொல்லிவிட்டுப் போன வரலாறு மெய்யா அல்லது பொய்யா என்பதைத் தீர்மானிப்பதன் முன்னால் அப்பா விட்டுச் சென்றிருக்கும் ஆதாரங்களை நாம் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். வம்ச பரம்பரையாக வந்த இந்த ஆதாரங்களை நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னர் நாம் ஒரு முடிவுக்கு வருவது தான் புத்திசாலித்தனமானது. என் அப்பாவின் முகம் கூட இப்பொழுது எனக்கு ஞாபகத்திலில்லை. பெற்ற குழந்தைக்கு அவர் பொய்யையும் புனை சுருட்டையும் பிதுர் ராஜித சொத்துக்களாக வைக்கும் அவ்வளவு பெரிய கயவன் என்று அவரை நான் மதிக்கத் தயாராயில்லை. முதலில் அவர் கையினால் எழுதி வைத்திருக்கும் இக்கடிதத்தைப் படிக்கிறேன். எல்லோரும் கேளுங்கள்!'” என்று சொல்லிவிட்டு விஜயவர்மன் எழுதிவைத்தி ருந்த கடிதத்தை ஜோதிவர்மன் மற்றவர்களும் கேட்கும் படி உரக்கப்படித்தான். 

அத்தியாயம் – 6 

விஜயவர்மன் தனது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தான்:- 

“குழந்தாய் ஜோதிவர்மா, நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நான் உன் அருகில் இருக்க மாட்டேன். நான் காலமாகி சுமார் இருபது வருடங்களுக்கு மேலிருக்கும். மரணமானவர்கள் மறு ஜன்மம் எடுக்கும் வரையில் ஆவியுலகில் சஞ்சரிப்பார்களென்று சொல்லுகிறார்கள். இது உண்மையாயிருந்து எனக்கு மறு ஜன்மமும் ஏற்படாமலிருந்தால் இந்தச்சந்தர்ப்பத்தில் உனக்குத் தெரியாமல் உன் பக்கத்திலேயே நானும் இருப்பேன். 

“சின்னஞ்சிறுவயதில் உன்னை வேறொருவர் பொறுப்பில் விட்டுப்போகிறேன். பாலாஜி உன்னை அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கிவிடுவாரென்பது எனக்குத் தெரியும். ஆயினும் உனக்கு நான் செய்ய வேண்டிய கடமையை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டுப் போவதற்கு என்னை மன்னித்துவிடு. 

“உன் தாய் ரேவதியிடம் நான் என் உயிரையே வைத்திருந்தேன். அவள் காலமாகிய பிறகு உயிர்வாழ எனக்கு இஷ்டமில்லை. வாழ்க்கை கசந்துபோய்விட்டது. ரேவதியின் அகால மரணத்துக்கு நான் தான் ஜவாப்தாரி யென்ற ஒரு எண்ணம் சிறிது சிறிதாக என் நெஞ்சத்தை அரித்துக் கொண்டே வருகிறது. அவளுக்குப்பிறகு உலகமே எனக்குச் சூன்யமாகிவிட்டது. அவள் இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு நானும் போகிறேன். 

“இந்தக் கடிதத்தைப் படிப்பதன் முன்னால் நமது வம்சத்தில் 2500 ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்து வரும் ஒரு அதிபயங்கரமான ரகசியத்தை ஓரளவு நீ தெரிந்து கொண்டிருப்பாய். அதைப்பற்றி பாலாஜியும் நான் சொல்லிய அளவிற்கு உன்னிடம் சொல்லியிருப்பான். என்னுடைய 25வது வயதில்தான் இந்த ரகசியங்கள் எனக்கும் தெரிந்தன. 

“உன்னைப் போலவே நானும் சிறுவயதில் தாய், தந்தையர்களை இழந்து துர்ப்பாக்கியசாலி யாகிவிட்டேன். பாலாஜியைப் போன்ற ஒரு நண்பர்தான் என்னையும் வளர்த்து ஆளாக்கிவிட்டார். இன்று என் வாக்குறுதியைப் பாலாஜி நிறைவேற்றுவதைப் போல அன்று என்னுடைய 25வது வயதில் என்னை வளர்த்த மனிதர் இந்த இரும்புப் பெட்டியை என்னிடம் ஒப்படைத்து தேவதேவியைப்பழி வாங்கவேண்டும் என்று எனது தகப்பனார் சொல்லிவிட்டுப் போனதைக்கூறினார். பெட்டியிலிருந்த சுவடிகளையெல்லாம் நான் ஒரு தடவைக்குப் பல தடவை நிதானமாகப் படித்துப் பார்த்தேன். வாதத்துக்கும், விஞ்ஞானத்துக்கும் இக்கதை பொருத்தமாயிருக்குமா என்பதைப்பற்றி நாட்கணக்கில் சிந்தித்துப் பார்த்தேன். உயிர்நூல் வல்லுநர்களுடனும் வேதாந்திகளுடனும் விஷயத்தைச் சொல்லாமல் மரணத்தை வென்று சிரஞ்சீவியாயிருப்பது சாத்தியமா என்பதைப் பற்றிக் கடுமையாக விவாதித்துப் பார்த்தேன். இவை எனக்கு ஒரே ஒரு முடிவைத்தான் காட்டின. 

“பிறந்தவன் இறந்தே தீரவேண்டும். இயற்கையின் இந்த நியதியை மாற்ற யாராலும் முடியாது” என்பதையே என்னுடைய சிந்தனையும் ஆராய்ச்சிகளும் வாதப்பிரதிவாதங்களும் எனக்கு அறிவுறுத்துவதாயிருந்தன. அதேசமயம் சகல ஜீவராசிகளுக்கும் ஜன்மஸ்தான மாயிருக்கும் பூமி சாசுவதமாயிருக்கும் பொழுது சிரஞ்சீவித் தன்மையை அளிக்கும் சக்தியும் அந்தப் பூமியிடம் ஏன் இருக்கப்படாது? நமக்குத் தெரியாதவைகளை யெல்லாம் இல்லையென்று சொல்லிவிடுவது விவேகயாகுமா? என்ற ஒரு எண்ணம் இடையிடையே என்னைக்குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தது. 

“புராண இதிகாச காலங்களில் எனது கவனம் போயிற்று. புராணகாலத்திய புஷ்பகவிமானத்தை அமானுஷ்யமான கட்டுக்கதையென்று ஏளனம் செய்தவர்கள் எவ்வளவு பேர்? என் நினைவுக்குத் தெரிந்து ஆகாயத்தில் பறப்பது அசாத்தியமென்று எண்ணிய காலமும் ஒன்றுண்டு. ஒரு சமயத்தில் ஒரு காரியம் அமானுஷ்யமாகத் தோன்றினால் எப்பொழுதுமே அந்தக் காரியம் அசாத்தியமாயிருந்துவிடவேண்டியதில்லை.  இவ்வுலகம் தோன்றிய கல்பகோடி ஆண்டுகளுக்கிடையில் எவ்வளவோ நாடுகளும் நகரங்களும் கலாசாரங்களும் தோன்றி மறைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றிய இக்கால மனிதனின் அறிவு அற்பத்திலும் அற்பம். 

‘”இவ்வாறு நான் சிந்தனையிட்டபொழுது தேவதேவி சிரஞ்சீவியாயிருப்பது ஏன் சாத்தியமாயிருக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. மார்க்கண்டேயன், விபீஷணன், ஆஞ்சனேயர் முதலான சிலர் என்றும் சிரஞ்சீவியா யிருக்கும் தன்மை பெற்றிருந்ததாகப்படித்த கதைகளும் என் ஞாபகத்துக்கு வந்தன. இக்கதை உண்மையாயிருக்கு மானால் மார்க்கண்டேயன் முதலானோர் ஏன் இன்று நம்மிடையில்லையென்று நீ கேட்கலாம். இவர்கள் இன்று இல்லாதது ஒன்றே அவர்களைப் பற்றிய வரலாறுகள் கட்டுக் கதை என்பதற்குப் போதிய அத்தாட்சியல்லவா என்றும் நீ வினவலாம். இது வேறு விஷயம். சிரஞ்சீவியாயிருப்பது சாத்திமென்ற அபிப்பிராயம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் கூட மக்களிடமிருந்து வந்ததையே இது முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறது. உலகில் சர்வமும் நித்தியம் அநித்தியமென்று எதுவுமே கிடையாது. நித்தியமானவை உருமாறும் போது, தன்மை மாறும்பொழுது அதைப் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் சக்தியற்ற மனிதன் அவற்றை அநித்தியமாகக் கருதுகிறான். உருமாற்றங்கள் சில ஆண்டுகளில் ஏற்படலாம். சில நூற்றாண்டுகளுக்குப்பிறகும் ஏற்படலாம். இந்த உலகிலுள்ள பொருட்கள் மட்டுமல்ல இந்த உலகமே உருமாறும் தன்மையுடையதுதான். 

“குழந்தாய்! நீ நன்றாகச் சரித்திர, பூகோள ஆராய்ச்சிகள் செய்யவேண்டுமென்று பாலாஜியிடம் நான் சொல்லியிருந்தேன். நீ அவ்விதம் செய்திருந்தால் லமூரியாக்கண்டத்தைப் பற்றி அறிந்திருப்பாய். ஒரு காலத்தில் இமயம் சமுத்திரத்துக்கு அடியிலிருந்ததையும் லமூரியாக் கண்டத்தைக் கடல் கொண்டு போனவுடன் இமயம் மேலே கிளம்பியதையும் பற்றி ஆராய்ச்சி நூல்களில் நீ படித்திருப்பாய். காவிரிப் பூம்பட்டினமும் முதல்சங்கம் புராதன மதுரையம்பதியும் அவற்றுடன் லட்சக்கணக்கான பழைய ஏட்டுச்சுவடிகளும் கடலுக்கு அர்ப்பணமானதையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். உலகில் இடைவிடாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களையே, இயற்கையன்னையின் திருவிளையாடல்களையே இவைகளெல்லாம் குறிக்கின்றன. இவ்வளவும் நான் சொல்லுவது எதற்காக என்றால் நமக்குத் தெரியாதவற்றை, நாம் அறியாதவற்றை, நமது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவற்றைப் பொய், கட்டுக் கதை என்று சொல்லி ஒதுக்கிவிடுவது விவேகமில்லை. இவ்வித அலட்சிய மனப்பான்மை அறிவு வளர்ச்சியைத் தடை செய்யுமே தவிர, அதிகரிக்க உதவாது. அமானுஷ்யமாகத் தோன்றும் விஷயங்களை நாம் அப்படியே நம்ப வேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவற்றை ஆராய் ந்து அறியும் வரையில் நம்பவும் வேண்டாம். அபத்த மென்று கேலி செய்து உதறிவிடவும் வேண்டாம். மனிதன் பகுத்தறிவுள்ள பிராணி. அவன் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. சந்திரனையும் செவ்வாயையும் எட்டிப் பிடித்து அவற்றிலே குடியேற முயற்சிக்கிறது மனித அறிவு. சந்திரனும் செவ்வாயும் எட்டிப்பிடிக்குமளவுக்கும் கிட்ட வந்துவிட்டால், அதாவது அவற்றை அடைந்து ஆட்சி நடத்தும் வாய்ப்புக் கிட்டி விடுமேயானால், மனித அறிவு அத்துடன் திருப்தியடைந்துவிடுமா? அதுதான் இல்லை. சந்திரனுக்கு அப்பால் உள்ள இன்னொரு விண்ணுலகிலே கொடிகட்டிப் பறக்க விட முயற்சிப்பான் மனிதன். எல்லை இல்லையின்றி ஒரு வரம்பு இன்றி அரிய பெரிய புதிய ஆராய்ச்சிகளினால் மனிதனின் ஞானம் பெருகிக் கொண்டே யிருக்கும் இக்காலத்தில் எதையும் தீர ஆராயாமல் அலட்சியப் புத்தியுடன் ஒதுக்கித் தள்ளி விடக்கூடாது என்பதை உனக்கு உணர்த்தவே இவற்றையெல்லாம் சொல்லுகிறேன். 

இம்மாதிரியான பரந்த மனோபாவந்தான் 25 நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தேவதேவி இளமை மாறாமல் உயிருடனிருக் கிறாளென்பதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியது. அவளை எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதை இனிச் சொல்லுகிறேன். கவனமாகப்படி. 

“என்னுடைய 25 வது வயதில் இந்த இரும்புப்பெட்டியைத் திறந்து பல நூற்றாண்டுகளாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஓலைச்சுவடிகளையும் தேவதேவியின் கணையாழி ஸ்வர்ணஹாரம் ஆகியவைகளையும் எடுத்துப் பார்த்தேன். சுவடிகளைப் படித்ததிலிருந்து எனக்கு ஓரளவு இந்த விவகாரத்தில் நம்பிக்கை யேற்பட்டது. ஆயினும் வட மொழியிலும் விளங்காத வேறு பாஷைகளிலும் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் பூராவையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் என்னைத் தூண்டியது. 

“கல்கத்தா சர்வகலாசாலையின் பன்மொழிப் புலவரான நண்பர் ஒருவரிடம் சுவடிகளைக் காண்பித்து பூர்வீக விருத்தாந்தத்தைத் தெளிவாக முதலில் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன். பானர்ஜி என்ற அந்த நண்பர் தென்னாட்டுக்கு வரும் பொழுதெல்லாம் என் பங்களாவில்தான் தங்குவார். பூதத்துவத்திலும் பூகோளத்திலும் சரித்திரத்திலும் அவருக்கு நல்ல பாண்டித்தியமுண்டு ஆகையால் சுவடிகளைப் பாரபட்சமின்றி வாசித்து எனக்கு யோசனைகளும் கூற அவரை விடப் பொருத்தமானவர் வேறு எவருமிருக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை. 

“மறுவாரமே நான் சுவடிகளுடன் கல்கத்தாவுக்குச் சென்று பானர்ஜியைச் சந்தித்தேன். அவரிடம் நம் குடும்பத்தின் பூர்வோத்திரங்களைச் சுருக்கமாகச் சொல்லி விட்டுச் சுவடிகளில் பல பாஷைகளிலும் எழுதப் பட்டிருப்பதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். நான் நினைத்ததைப் போல சுவடிகளை அவ்வளவு சுலபமாகப் படித்து மொழி பெயர்க்கக் கூடியதா யில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவைகளாதலால் இலக்கிய இலக்கணங்களும் எழுத்துக்களின் வடிவங்களும் கூட காலத்துக்குக் காலம் மாறிப்போயிருந்தன. சில வடிகளில் தென்பட்ட தேதிகளைக் கிறிஸ்து சகாப்தத்துக்கு மாற்றிக் கணக்கிடுவதற்கு மட்டுமே நாட்கணக்கிலாயிற்று. 

“இதற்கிடையில் கல்கத்தாவிலிருந்த ஒரு தென்னிந்திய தமிழ்க் குடும்பத்தின் சிநேகம் எனக்கு ஏற்பட்டது. சுந்தரேசன் என்ற ஒரு தஞ்சாவூர்க்காரர் ஒரு கம்பெனியில் உத்தியோகம் பார்த்து வந்தார். தென்னிந்தியர் என்ற முறையில் மட்டுமல்லாது தமிழர்களென்ற முறையில் எங்கள் நட்பு அந்நியோன்னியமாக வளர்ந்தது. எளிய நிலைமையிலிருந்த சுந்தரேசனுக்கு இரண்டு பெண்கள். அவ்விருவரில் ஒருவளான ரேவதிதான் உன்னுடைய தாயார். இளையவளுடைய பெயர் ராதை.அவ்விருவரும் ஒரே அச்சில் வார்த்தெடுத்த தங்கப்பதுமைகளைப் போலிருப்பார்கள். சுபாவத்தில் அவர்களைப் போன்ற பண்பும் வெள்ளை உள்ளமும் படைத்த பெண்களை உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. 

“தன்னுடைய வருமானம் சாப்பாட்டுக்கே இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தபடியினால் வளர்ந்த இரு பெண்களுக்கும் எப்படிக் கல்யாணம் செய்து வைப்பதென்ற வேதனை சுந்தரேசன் மனதை அரித்துக்கொண்டு வந்தது. இதை மறைமுகமாக இரண்டொரு தடவை அவர் என்னிடம் தெரிவித்த பொழுது அந்தப் பெண்களுக்கு நிறையச் செலவு செய்து நல்ல இடத்தில் நான் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று அவருக்குத் தைரியம் சொன்னேன். அடிக்கடி அவர்களுடைய வீட்டுக்கு நான் போய் வந்ததில் ரேவதியின் குணமும் போக்கும் எனக்குப் பிடித்துப் போயிற்று. அவளை நானே மணஞ் செய்து கொண்டேன். 

“நான் கல்கத்தாவுக்கு வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் பானர்ஜி ஏட்டுச் சுவடிகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பூராவும் படித்துப் பார்த்த பிறகு எப்படியும் செம்பவளத் தீவிற்குப் போய்ப் பார்த்து விட வேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. இரவு பகலாக இதைப்ப ற்றியே நானும் ரேவதியும் விவாதித்தோம். யாரோ எந்தக் காலத்திலோ எழுதி வைத்திருக்கும் கட்டுக்கதையை நம்பிக்கொண்டு செம்பவளத் தீவிற்குப் போவது முட்டாள்தனமென்று ரேவதி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். சுந்தரேசனும் ராதையும் அவளோடு சேர்ந்து கொண்டு விவாதித்தார்கள். ஆயினும் என் எண்ணம் மட்டும் மாறவில்லை. 

சுந்தரேசன் ராஜினாமாச் செய்யச்சொல்லி வீட்டிலேயே இருக்கச் சொன்னேன். குடும்பச் செலவுக்கு தேவையானபொழுதெல்லாம் பணம் கிடைக்க அட்வகேட்டுக்கு எழுதி ஏற்பாடு செய்தேன். நான் செம்பவளத் தீவுக்குப் போய் வந்த பிறகு ரேவதியை திருச்சிக்கு அழைத்து வருவதென்றும் அதுவரையில் அவள் தகப்பனாருடன் கல்கத்தாவிலேயே இருப்பதென்றும் ஏற்பாடு. நீ உன் தாயின் வயிற்றில் ஏழு மாதச் சிசுவாயிருக்கையில் செம்பவளத் தீவுக்கு நான் பிரயாணமானேன். குழந்தை பிறந்து அதன் முகத்தைப் பார்த்த பிறகாவது நான் போக வேண்டுமென்று ரேவதி எவ்வளவோ மன்றாடினாள். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் வேறு விதமாயிருந்தது. ஏட்டுச் சுவடிகளில் எழுதியிருந்தவை உண்மையா பொய்யா என்பதைக் கண்டறிய வேண்டுமென்ற ஆவல் என்னிடம் ஒரு வெறியாக மாறியிருந்தது. இந்த வெறி தான் குழந்தாய், உன் தாய்க்கு எமனாக வந்து சேர்ந்தது. செம்பவளத் தீவுக்குப் போன பிறகு ரேவதியை நான் மறுபடி பார்க்கவேயில்லை. இரு வருடங்களுக்குப் பின் நான் திரும்பிய பொழுது நீ பிறந்த ஒன்பது மாதங்களுக்குப் பின் அவள் இறந்துவிட்டதாயும் கேள்விப்பட்டு நான் அலறித் துடித்தேன். அன்ன ஆகாரமில்லாமல் ஒரு மாதம் பித்துப்பிடித்து அலைந்தேன். என்ன செய்து என்ன? மாண்டவள் மீண்டும் வரப்போகிறாளா? அவளைக் கொலை செய்தது நான்தான் என்ற எண்ணம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து சாகடித்துக் கொண்டு வந்தது. அதன் பிறகு என் மனம் ஒரு நிலையில் இல்லை. வாழ்வில் அடியோடு பற்றுதல் இல்லாமல் போய் விட்டது. உன் முகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் “என் தாயைப் படுகொலை செய்த மகா பாவி!” என்று நீ என்னைச் சபிப்பது போலிருந்தது. ஆகவே உன்னை ராதையின் பொறுப்பிலேயே வளரவிட்டு நான் திருச்சிக்குத் திரும்பி விட்டேன். இதுதான் உன் தாயைப்பற்றிய வரலாறு. தேவதேவியைப் பற்றி நான் அதிகமாக எழுத வேண்டியதில்லை. ஏட்டுச் சுவடிகளின் மொழிபெயர்ப்பிலிருந்து பூரண விருத்தாந்தங்களையும் நீ தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். சுவடிகள் வர்ணிப்பதைப் போன்ற அடையாளங்கள் உடைய செம்பவளத் தீவு இன்னும் இருக்கிறது. நானே நேரில் அங்கு சென்றேன். இரண்டு மாத காலம் செம்பவளத் தீவிலிருந்தேன். தேவதேவி இருப்பதாகச் சொல்லப்படும். மலைப்பிரதேசத்துக்குப் போக எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் குகை மனிதர்கள் கூட்டம் ஒன்றிடம் அகப்பட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து உயிர் தப்பி வந்தால் போதுமென்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. அந்தக் கூட்டத்தாரிடம் சிறையிலிருந்த பொழுது தேவதேவியைப் பற்றிக் கதை கதையாகக் கேள்விப்பட்டேன். ஆயிரம் ஆண்டுகளாகத் தேவதேவி அத்தீவில் அரசு செலுத்திவருவதாயும் அவள் அமானுஷ்யமான சக்திகள் வாய்ந்தவளென்றும், சாகா வரம் பெற்றவளென்றும் சொன்னார்கள். வருடத்துக்கு ஒரு தடவை மலைமாளிகைக்கு வெளியே நடக்கும் தர்பாரில் அவள் தனது பிரஜைகளுக்குக் காட்சி கொடுப்பாளாம். கபடமறியாத அந்த ஜன்மங்கள் சொல்லிய விருத்தாந்தங்ளிலிருந்து ஏட்டுச் சுவடிகளில் எழுதிவைத்திருக்கும் தேவதேவியைப் பற்றிய விவரங்கள் முற்றிலும் உண்மையே என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். 

“இன்னொரு தடவை செம்பவளத் தீவுக்குப் போக வேண்டுமென்ற ஆசையை ரேவதியின் மறைவு நிராசை யாக்கிவிட்டது. குழந்தாய், நமது வம்சத்தின் ஆதிபிதாவான விஜயகேசரியின் படுகொலைக்கு வஞ்சம் தீர்க்கும் துணிவு உனக்கு இருந்தால் அந்தக் காரியத்தில் இறங்கு. இல்லையென்றால் இரும்புப் பெட்டியை முன் போலவே மறுபடியும் பத்திரமாகப் பூட்டி உன் அடுத்த சந்ததியினரிடம் ஒப்படைத்துவிடு. இன்றைக்கு இல்லா விடினும் என்றைக்காவது ஒரு நாள் தேவதேவியிடம் வஞ்சம் தீர்க்கும் ஒரு வீரன் நமது சந்ததியில் தோன்றாமலிருக்கப் போவதில்லை! 

நான் வருகிறேன். உனக்கு சர்வமங்களங்களும் உண்டாகட்டும். 

-விஜயவர்மன்.

பெட்டியின் அடியில் வளையம் ஒன்று தட்டுப்பட்டது. அதைப் பலமாக மேலே இழுத்தபொழுது பெட்டியின் அடியில் ஒரு ரகசிய அறை திறந்து கொண்டது. அந்த அறைக்குள்ளிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை பாலாஜி வெளியே எடுத்து ஜோதிவர்மனிடம் கொடுத்தான். 

கல்கத்தா சர்வகலாசாலைப் பேராசிரியர் பானர்ஜி ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து மொழிபெயர்த்து எழுதிய விபரங்கள் என்று அந்த நோட்டுப் புத்தகத்தின் தலைப்பில் விஜயவர்மன் எழுதி ஒப்பமிட்டிருந்தான். 

“நல்லவேளையாக ஏட்டுச் சுவடிகளைப் படித்து மூளையைக் குழப்பிக்கொள்ளவேண்டிய அவசியமில்லாமல் பானர்ஜி எழுதிவைத்த விபரங்களே கிடைத்துவிட்டன. இதை வாசித்தால் போதும். ஏட்டுச்சுவடிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்றார் அட்வகேட் சச்சிதானந்தர். 

– தொடரும்…

– 1957ம் வருட ம்,மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மலைக்கன்னி என்ற தலைப்பில் இக்கதை வீரகேசரி நாளிதழில் பிரசுரமாயிற்று. ‘SHE’ என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியது. வீரகேசரியில் பிரசுரமாகிய கதை ஓட்டத்தைப் பாதியாமலும் சுவை குன்றாமலும் சிறிது சுருக்கி மாற்றி எழுதியிருக்கிறேன்.

– மலைக்கன்னி, முதற் பதிப்பு: ஜூலை 1980, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *