மலினங்கள்
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சதாவொரு நெருடலில் உழன்று அவஸ்திக்கும் இலக்கிய மனசிற்கு ய்வென்பது கிடையாது. கூர்மையான அவதானமும் தூரநோக்கும் ஒருங்கிணைந்திருப்பதாலோ என்னவோ எப்போதுமே ஒரு தாகம் தணியாத படிக்கு உள்ளுக்குள் உலவிக் கொண்டேதான் இருக்கும். அன்றும் அப்படிதான் இயல்பு மீறி பயணிக்கும் நடைமுறை அத்துமீறல்கள் மீதும் இனவெறியின் உயர்ச்சிகள் மீதும் வெறுப்புக் கொண்டு கிடந்தவனுக்கு காக்கைகள் இட்ட பெருங் கூச்சல் உள்ளுக்குள் ஏதேதோ பதியமிட அச்சமும் பீதியும் கலந்த ஒரு விதமான பதற்றத்தோடு வெளியே வந்தான் சிவராம்.
அந்த வட்டாரத்தின் காக்கைகள் முழுதும் திரண்டு வந்து அலறி துடிக்கும் அளவிற்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அவனால் யூகிக்க முடிந்தாலும் சட்டென ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை என்பது உண்மையே. என்னதான் காலத்தை உதறித் தள்ளி பயணித்தாலும் ஏதோவொரு கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் சூழ்நிலைக் கைதியாய்தான் வாழ வேண்டியிருக்கிறது என்பதை எண்ணி நொந்து கொண்டதோடு வட்டமடித்துக் கரையும் காகங்களின் நிலைகண்டு உறைந்து எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ தெரியாது.
உண்மையில் காகங்களின் மீது சில காரணங்களுக்காக அதிக பிரி யம் கொண்டிருப்பவன்தான் சிவராம். ஒரு படைப்பாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியில் எல்லோரையும் ஒரே கோணத்தில் வைத்து சமநிலை பாராட்டுவதும் உள்ளடங்கும் என்பதை இயல்பாகவே உணர்ந்திருந்ததாலோ என்னவோ அவனால் காகங்களின் மீதும் பிரியம் கொள்ள முடிகிறது போலும் உலக நடைமுறையில் காகங்களின் மீது கருணை காட்டுவோர் தொகை சொற்பமாகத்தான் இருக்கிறது. கருமையின் அழகில் இன்புற்ற மஹாகவி ஜனனித்த உலகில்தான் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ள முடியாதபடிக்கு உலகம் கொடுமையானதாக மாறியிருக்கிறது என்ற வேதனை யும் விம்மலும் தான் சிவராமை விபரீத கற்பனைகளில் வீழ்த்தி வேடிக்கை பார்க்கிறது. கசப்பான உண்மைகள் எல்லாம் உள்ளத்தை சுட்டு அரிக்கும் வரை இப்படித்தான் பறவைகள் காட்டும் சமிக்ஞைகளுக்கெல்லாம் உயிரை கரங்களில் ஏந்தி ஊசலாட வேண்டியிருக்கும் என்ற சலிப்புடன் காக்கைகள் மையமிடும் இடத்தை நோக்கி நகர முயன்றவனை “ஏன்டா சிவராம் அந்தப் பக்கம் எங்க போற நமக்கென்ன இது புதுசா எல்லாம் வழமை போலத்தான். நீ போய் ஏன் சிக்கலில் மாட்டிக் கொள்ளனுமா? என்றதும் “என்னம்மா என்னதான் நடந்திருக்குனு பார்க்க வேணாமா” என்று காக்கைகள் கத்தி கரையும் இடத்தை அண்மித்த சிவராமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மலினப் பட்டுப் போன உயிர்களின் பெறுமதியை நாம் உணர்ந்திருக்கி றோமா என்று நமக்கு நாமே வினா எழுப்பிக் கொள்ள வேண்டிய தேவைப் பாட்டினை உணர்த்திப் போவதற்காகவே அமைத்துக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்ப மாகப்பட்டது சிவராமிற்கு. ஈனக் கொலைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் இடை நடுவே சாதாரணமாய் உலவித் திரியும் மனித கூட்டங்களுக்கு பாடம் புகட்டுவதாய் எங்கோ அடிப்பட்டு குருதியில் தோய்ந்து தலைதுண்டிக்கப்பட்டு மரணித்துக் கிடக்கும் ஒரு காக்கையின் மறைவுக்கான இரங்கல் கூட்டம்தான் இத்தனை ஆர்ப்பரிப்புகளுக்கும் காரணம் என்பதை அறிந்ததும் மனசு அதிகமாய் வலிக்கத் தொடங்கியது.
இதொன்றும் நம் சமூகத்தின் பார்வையில் இருந்து காக்கைகள் மாறுபட்டு இருக்கிறது என்பதற்கான வலி கிடையாது. இன்னுமே அழுகிப் புழுத்த பிணங்களை வட்டமடிக்கும் அற்ப பிறப்புகளாய்தான் காக்கைகள் கணிக்கப்படுகின்றன என்ற வலிதான் சிவராமை அதிகமாய் படுத்தியது.
காக்கைகளின் ஒவ்வொரு அசைவும் ஏதோவொரு பாடத்தை கற்று தருவதாய் உணரும் சிவராம் தன் இனத்தின் அழிவுக்காய் எந்த பிரயத்தனமும் கொள்ளாத மனிதர்கள் எங்கே காக்கைகள் எங்கே என்று குழம்பியவாறே வீடு நோக்கி பயணிக்கிறான்.
மனித சமூகத்தில் இருந்து பறவைகள் உலகம் எவ்வளவு மாறுபட்டிருக்கிறது என்ற உண்மை உள்ளுக்குள் பல்வேறு குடைச்சல்களை உள்திணிக்க சிந்தனை கால் தழைத்து நடக்கத் தொடங்குகிறது. பகுத்தறிவாலும் மேன்பட்ட சிந்தனையாலும் மனிதர்கள் மேலானவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பிதற்றலில் அர்த்தப்பாடு இருக்கிறதா என்ற சிந்தனைக்குள் விழுந்த சிவராமின் நிலை மதுவில் விழுந்த புழுவின் நிலையை விட கொடுமையான தாகத்தான் இருந்தது. நாளுக்குநாள் தலைகள் கொய்து குவிக்கப்படும் மனித மலினங்களுக்காக கைகோர்த்து குரல் கொடுக்க தயாரில்லாத ஜந்துகளுக்கு மத்தியில் இந்தக் காக்கைகள் உயர்வாகத்தான் இருக்கிறது என்ற சிந்தனையோடு அறைக்குள் வந்து கட்டிலில் சாய்கிறான் சிவராம்.
இயற்கையின் அழகு நுகர்ச்சியில் பெரிதும் ஈடுபாடு காட்டுவதாலோ என்னவோ அறை முழுவதும் கலை இரசனையின் வெளிப்பாடாய் மிக நேர்த்தி யாய் அமைந்திருந்தது. அர்த்தமற்ற மனித தேடல்களுக்கு மத்தியில் இருந்து மாறுபட்டு மனசுடன் தொடர்புபட்டிருக்கும் சந்தோஷத்தின் சகவாசங்களுக்காய் தெரிவு செய்த படங்களுடன் அறை மேலும் மிளிர்ச்சி பெற்றிருந்தது. பொதுவாக காதல் பறவைகளின் சல்லாபங்களில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களில் இருந்து மாறுபடும் சிவராம் ஒற்றுமையின் சின்னமான காக்கைகள் மீது நாட்டம் கொண்டிருப்பதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
தன்னுடைய ஏராளமான இலக்கிய படைப்புகளில் காக்கைகளின் பங்களிப்புகள் அதிகமாகவே இருந்திருக்கிறது. இதுவும் கூட இவ்வாறாக காகங்களின் மீதான பிரிய மனோபாவத்தை சிவராமினுள் பதியமிட்டுப் போயிருக்கலாம்.
அசதியும் மனச்சோர்வும் மிகைப்படும்போது மனம் அமைதியடையத் துடிக்கும் இது நியதி. அதே நிலைதான் சிவராமிற்கும் அசதியில் அப்படியே கண்ணயர்ந்து கொள்கிறான். யுத்த தேசத்தில் இருந்து தொலைதூரம் பயணிக்க துடிக்கும் மனசின் அவாவிற்கு ஆறுதல் அளிப்பதாய் எல்லா ரணங்களையும் மறந்து எல்லை கடந்து பறக்கும் மனசு தற்காலிகமாய் அந்த அவஸ்தைகளில் இருந்து விடுபட்டு கிடந்தது உண்மை. மாற்றுலகம் ஒன்றை தரிசிக்கும் பூரிப்பில் விழிகள் எட்டும் தூரம் வரை பார்வை வீசி குதூகலிக்கும் சுயத்துடன் காக்கை இறக்கைகளின் கதகதப்பில் மெய்மறந்து பறக்கிறான் சிவராம். எந்த விதமான அச்சமும் பீதியும் இல்லாமல் சந்தோஷத்துடன் பறவைகளோடு பறக்கும் சிவராம் மனித சிநேகத்தில் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் படுகுழிகளைப் போல பறவைகளின் சிநேகத்தில் எதையும் சந்திக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் அவற்றை பின் தொடர்ந்தான்.
சில நிமிட சிறகடிப்புகளுக்குப் பின் மனித வீச்சம் முட்டி நாசி நரம்பறுக்கும் அதே பிணவாடை அவனை பழைய உலகிற்குள் தள்ளி குதூகலிக்க மனசிற்குள் மெதுவாய் பயம் கவிழ்கிறது. எங்கே காக்கைகள் தன்னை தனிமைப் படுத்தி விட்டு பிணங்களை நோக்கி சிறகடித்து விடுமோ என்று. ஆனால் இது எதையுமே பொருட்படுத்தாமல் பறக்கும் காக்கைகளின் நடத்தை மாற்றம் சிவராமை மேலும் சிந்திக்கத் தூண்டியது.
கொஞ்சம் பிற்பட்ட காலமானாலும் சரி தற்போதும் சரி அநேகமாக தமிழ் சினிமாக்களில் பிணங்களை அடையாளப்படுத்துவதற்கு காக்கைகளின் வட்ட மடிப்புகளைதான் குறியீடுகளாய் பயன்படுத்துகிறார்கள். இந்த நடைமுறைக்குள் ஊறி உன்னதம் கண்டதாலோ என்னவோ அவனுள் காக்கைகளின் வட்டமடிப்புகள் விபரீத சிந்தனைகளை உள் திணித்து போகிறதோ தெரியவில்லை.
அழுகிப் புழுத்த பிணங்களைத் தாண்டி சிறகு நீள்கிறது. காக்கைகளின் எதிர்பார்ப்புகள் இவைகள் அல்ல என்பதை தவிர அந்தக் கணப்பொழுதில் சிவராமால் வேறு எதையும் உணர முடியவில்லை. அப்போது சம்பாஷித்துக் கொள்ளும் காக்கைகளின் எண்ணப் பகிர்வுகள் சிவராமினுள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியது.
“ஏதோ கோடு போட்டு வாழ்வதாகவும் பகுத்தறிவின் உன்னதம் நுகர்வதாலும் மேம்பட்டவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் மனித மக்குகளின் அறியாமைகள் எல்லை தாண்டி பயணித்துக் கொண்டிக்கும் கொடுமை என்றுதான் தொலையுமோ” என ஒன்று சலிப்புக் கொட்ட மற்றொன்று “மாற்றம்! மனித மனங்களில் என்று வாய் விட்டு நகைக்க மிரண்டு போய் செவிகளை கூர்மையாக்கிக் கொள்கிறான் சிவராம். “வக்கிரத்தின் மறுபெயர் என்னவென்று கேட்டால் இம்மி நிமிடம் தாமதிக்காமல் சட்டென பதில் பகர்வோன் மனிதன்தான் என்று இனத்துக்குள்ளேயே கொன்று குவிக்கும் கொடுமை வேறு எந்த இனத்துக்குள்ளேனும் இதுவரை தரிசித்திருந்தால் சொல் என் வாதத்தில் இருந்து வாபஸ் பெற்று விடுகிறேன்” என்று ஆதங்கப்படும் இன்னொரு காக்கையின் அமில வார்த்தைகள் சிவராமின் உணர்வையும் எண்ணத்தையும் காயப்படுத்திப் போனாலும் அந்த வார்த்தைகளில் உறைந்திருக்கும் ஆத்மார்த்தத்தினை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருந்தான்.
காக்கைகளின் சம்பாஷணைகள் தொடர்கின்றன “எப்படி இவர்களால் இயல்பாய் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது தட்டிக் கேட்கப் படாத வரை மலினப்படுத்தப்படுவோம் எனும் சாதாரண தத்துவத்தினை உணர முடியாத இவர்கள் எப்படி தங்களை பகுத்தறிவின் சின்னம் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்?” என்ற அர்த்த புஷ்டியான வினாவிற்கு பதில் பகர தயாராகிறது மற்றொரு காகம்.
“மனிதர்களின் நடைமுறை பிறழ்விற்கு மரபியல் நஞ்சூட்டல்களும் காரணங்களாக இருக்கின்றன. தன்னையும் தன் சுற்றத்தையும் பாதிக்காத எந்த விடயத்தைப் பற்றியும் சிந்திக்கும் உணர்வு ஆரம்பம் முதலே இல்லாமல் இருந்தது கூட மனித பூசல்களுக்கு காரணமாக இருக்கலாம். தொடக்கம் சரியாக அமையாத போது முடிவை நல்ல விதமாக எதிர்பார்க்க முடியாது தானே” என்றதும் மற்றையது “மனிதர்களின் எதிர்பார்ப்புகள்தான் என்ன…? அல்லது அவர்கள் எட்டத் துடிக்கும் தூரம்தான் என்ன….? என்பதுதான் இது வரைக்குமே புரியவில்லை. சுயாதீனமாய் சுற்றித் திரியும் நம்மை பார்த்தேனும் திருந்த முயலாத ஜென்மங்களுக்கு எப்படித்தான் புரியவைப்பது” என்று ஆதங்கப்படும் துணைக்கு ஆறுதல் மொழிவதாய் “உயிர்கள் மலினப்பட்டுப் போன யுத்த தேசத்தில் இருந்து பூக்கும் மலர்களும் கூட பிணவாடை தரிக்கும் கொடுமை இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடரப் போகிறதோ’ எனத் தொடர்ந்து செல்லும் யாத்திரையில் மௌனியாகி சிறகுகளின் கதகதப்பில் குளிர் காய்ந்தபடி நீண்ட வெளியின் தூரதரிசனத்தோடு பயணிக்கிறான் சிவராம்.
ஒன்றின் மீதான அவதானம் கூர்மையடையும் போது நம்மை அறி யாமலே அது குறித்த அசைவுகளை உற்று நோக்க ஆரம்பிக்கிறோம். அப்படித் தான் சிவராமும் சாதாரணமாக தொடங்கப்பட்ட காக்கைகள் மீதான அவதானம் இப்போது தீவிரப் போக்கு காட்டியிருப்பது உண்மை. எல்லாவற்றிற்கும் நாட்டின் நடைமுறைக் கோணல்கள்தான் காரணம் என்பதை உணராமல் இல்லை. இவற்றிற்கெல்லாம் நமது பங்களிப்பு என்னவென்று சிந்திக்கும் போதுதான் மனம் இரணப்பட்டுக் கொள்கிறது.
இவை எல்லாவற்றையும் விட இந்தக் கொடுமைகளின் மூலங்களோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற வேதனை வேறு அவனை அல்லல் படுத்தியது. நீளும் பயணத்தின் எதிர்பார்ப்பினை அவனால் யூகிக்க முடிய வில்லை. ஆனால் முடிவு ஒரு பாடத்தைக் கற்றுத் தரும் என்பதில் உறுதியாய் இருந்தான் சிவராம்.
அண்டத்தின் நிசப்தத்தில் மனசின் ரணங்கள் கலைந்து தொடரும் யாத்திரையில் அலறித் துடித்து தஞ்சம் தேடித் திரியும் காக்கைகளின் பரபரப்புகள் பல்வேறு குழப்பங்களை பதியமிட திக்குத் தெரியாமல் எல்லாப் பக்கங்களில் இருந்தும் எழுப்பப்படும் மரண ஓலம் உண்மையை உணர்த்திப் போனது. ஆமாம் மனித மலினங்களை குறி வைத்து எங்கோ ஒரு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது என்ற கசப்பான உண்மை தொடரும் நிழலாய் இன்னுமே மாறாத படிக்கு இருப்பது புரிந்து போனது. மனிதங்களைக் காவு கொள்ளும் அதே மரண ஒலி செவிகளை செவிடாக்கி நிசப்தம் காணவும் அண்டம் அதிர்ந்து நிசப்திக்கவும் குறியீடு விளங்கி மனசு வலிக்கிறது சிவராமிற்கு.
கரைந்து கரைந்து சுற்றங்களைத் தேடித்திரியும் காகங்களின் ஆர்ப்பரிப்புகளுக்கு மத்தியில் அண்டம் புகை முட்டி நிறம் பூத்துக் கிடந்தது. சல்லாபித்துக் கிடந்த சில ஜோடிகள் இரை தேடித் திரிந்த பல தாய்ப் பறவைகள் உழைக்கப் பிறந்த சில காக்கைகள் என்று எல்லாம் சென்னி சிதறுண்டு குருதியில் தோய்ந்து கிடக்க தன்சுற்றத்தின் இழப்புகளுக்காய் என்னைத் தனிமைப்படுத்தி விட்டு போன காக்கைகளின் நிலைக்காக மனசு வலிக்கிறது. பதற்றமும் பீதியும் எப்போதாவது நுகரப்படுமானால் இரத்த ஓட்டம் அதிகரித்து உடல் நிலையில் சடுதியாய் ஒரு மாற்றத்தை உணரலாம். எல்லாம் வழமையாகிப் போன நிலையில் அப்படியான சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாதுதானே. மீண்டும் ஆசுவாசப்பட்டுக் கொள்ளும் மனசுடன் எல்லாவற்றையும் அவதானிக்கத் தொடங்குகிறான் சிவராம்.
உண்மையை தரிசிப்பவன்தான் உன்னதமான படைப்புக்களை விளைவிக்கிறான் என்பது போல கவிஞன் மனசும் எதையாவது உள்ளுக்குள் இட்டு அசைப்பதும் கூட தவிர்க்கமுடியாமல்தான் போகிறது. எல்லாக் கொடுமைகளினதும் நுகர்வுக்குப் பின்னர் இப்போது ஞானம் பெற்ற திருப்தியுடன் சமூகத்தை எதிர் கொள்கிறான் சிவராம். விகாரப்பட்டுக் கிடக்கும் மனித நடத்தைகளில் மாற்றம் என்பது சாத்தியமில்லை. ஒன்றை வீழ்த்தி இன்னொன்று வாழத் துடிக்கும் கொடுமையான உலகமதில் வாழ்வதற்கு பிரத்தியேகமாய் பயிற்சி எடுக்க வேண்டிய தேவைப்பாட்டினை உணர்ந்த திருப்தியுடன் கனவில் இருந்து மீள்கிறான் சிவராம். அங்கேயும் மனசு காகங்களுக்காய் துயரத்தில் ஆழத்தான் செய்கிறது. மனித ஈனங்களில் உழன்று சதா நெருடலில் விழும் பரிதாபப்பட்ட பறவைகளுக்காய் மனம் வலிக்கத்தான் செய்கிறது.
மீண்டும் அதே காக்கைகளின் ஆர்ப்பரிப்புகள் தொடர்கின்றன. அங்கே “பாழாப் போன இந்த சனியனுங்க ஏன்தான் இப்பிடி கத்தி கரையிதுகளோ” என்று சலிப்புக் கொட்டும் தாயின் பிதற்றல் அவனுள் எரிச்சலை மூட்ட மீண்டும் போர்வைக்குள் ஒளிந்து மௌனியாகி சிந்தனைக்குள் தொலைகிறான் சிவராம். அந்த சிந்தனை ஏனையோரில் இருந்து அவனை வேறுபடுத்திக் கூட காட்டலாம்.
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)
– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.
– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.
சிவனு மனோஹரன்
மலையகத்தில் ஹட்டனைச் சேர்ந்த சிவனுமனோகரன் 1978ல் பிறந்தவர். ஆசிரியராகத் தொழில் புரியும் இவர் தற்போது பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி கலைமாணி கற்கை மாணவராக உள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். 2005 விபவி படைப்பிலக்கியப் போட்டியில் பரிசு, 2005 ஞானம் நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு, வீரகேசரி பவளவிழாச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு, லண்டன் புதினம் நடாத்திய உலக சிறுகதைப் போட்டியில் பரிசு, லண்டன் சுடரொளி நடத்திய இரண்டாவது உலகக் கவிதைப் போட்டியில் பிராந்திய மட்டத்தில் மூன்றாம் பரிசு, கல்லோயா இளைஞர் கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.