மலரும் சுமைதானடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் தினபூமி
இணைய வெளியீடு: November 10, 2026
முதற்பதிப்பு: 2003
பார்வைகள்: 269 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“கொஞ்சம் உள்ளே வாப்பா” என்று அம்மா உள் வாசலிலிருந்து கூப்பிட்டபோது, தயக்கத்துடன் எழுந்து, “ஒரு நிமிஷம் வந்து விடுகிறேன்” என்று வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விட்டு அம்மா புனிதாவிடம் வந்தான் சேகர். 

“என்னம்மா?” 

“அதிகமாக ஒரு ஜோடி வளையலும் ஒரு ஸ்கூட்டரும் தானே கேட்கிறார்கள். கொடுத்து விடலாம்.” 

“அம்மா. ஏற்கனவே கடன் வாங்கித்தான் நானும் இந்துஜாவும் படித்தோம். அந்தக் கடன் தீர வேண்டும். நீங்கள் விரும்பினால்.” இழுத்தான் சேகர்.

“இல்லேப்பா. இது கொஞ்சம் நல்ல வரன் மாதிரி இருக்கிறது. மாப்பிள்ளையும் வாட்டசாட்டமாக இருக்கிறார். பார் ஜன்னல் வழியாக இந்து அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

அவளாகவே வந்து இந்த வரனை கொஞ்சம் அதிகம் செலவானாலும் முடித்து விடுங்கள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறாள். 

இந்து எவ்வளவு பெரிய அழுத்தக்காரி என்று. உனக்குத் தெரியும். அவளாகவே வாய் திறந்து இந்த வரனே போதும் என்று சொல்லியிருக்கிறாள். பரவாயில்லை. நான் என் அம்மாவின் சொத்தை விற்று பணமாக்கி விடுகிறேன். சரி என்று சொல்லி விடு” என்றாள் புனிதா. 

“அம்மா. நான் ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் உங்களுக்கு ஒரு பெண் கவிதா இருக்கிறாள். அவளுக்கும் இவ்வளவு செய்ய வேண்டியதிருக்கும்” என்றான் சேகர். 

“கடவுள் விட்ட வழி, அப்போது பார்த்துக் கொள்ளலாம். எப்போது நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று போய்க் கேள்” 

“சரி அம்மா” என்று கூடத்திற்கு வந்து மணமகன் வீட்டாரோடு பேச ஆரம்பித்தான். 

மாப்பிள்ளை வீட்டார் போனதும், தொலைபேசி அழைக்க, கவிதா எடுத்துப் பேசி விட்டு “அண்ணா உங்களுக்குத்தான் போன். யாரே உங்கள் அலுவலகத்திலிருந்து பேசுகிறார்கள்” என்றாள். 

தொலைபேசியை எடுத்துப் பேசினான் சேகர், “யார் பேசறது?” என்று. 

“உங்கள் மனைவி” என்றது எதிர் முனை. 

“ஏய்… ஜீவா,என்ன விஷயம்?”

“உங்கள் தங்கை சொன்னாள். இந்துஜாவிற்கு திருமணம் நிச்சயம் பண்ணி விட்டீர்களாமே. இனி நம் திருமணம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே”  

“சரி, சரி. நான் நேரம் பார்த்து அம்மாவிடம் பேசுகிறேன்” 

“நான் எப்போதோ அப்பாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி விட்டேன். நீ ஆண்பிள்ளை சேகர்”, 

“ஜீவா நாம் ஏற்கனவே திருமண மான தம்பதியாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” 

“ஆனால் ஒரு சில சடங்குகள், முறைகள் நம் சமுதாயத்திற்கே என்று இருப்பதையும் சமுதாயத்திற்காக நாம் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறதே” 

“சரி… சரி… நான் சீக்கிரம் அம்மாவிடம் பேசுகிறேன்” 

“இந்த இனிப்பான நிகழ்ச்சிக்காக நாளைக்கு லட்டு வாங்கி விடுங்கள்” என்றாள் ஜீவா. 

“லட்டென்ன மிட்டாய்க் கடையையே விலைக்கு வாங்கி விடுகிறேன்” என்றான். 


“மறு நாள் காலையின் அவசரமாய் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது “அம்மா கவிதா இன்றைக்கு ஸ்கூலுக்குப் போகவில்லையா?” என்று கேட்டான் சேகர். 

“அது விஷயமாகத்தானப்பா உன்னிடம் பேச வந்தேன்” புனிதா. 

தலையை சீவிக் கொண்டே, “என்ன விஷயம் அம்மா” என்றான். 

“அவள் பெரிய மனுசியாகியிருக்கிறாள். போற வழியிலே மாமிக்குத் தகவல் சொல்லி விட்டுப் போய் விடு. மத்தியானம் விடுப்பு சொல்லி விட்டு வந்து விடு. கொஞ்சம் செய்ய வேண்டியவைகளை யெல்லாம் செய்து விடலாம்” என்றாள் புனிதா.

உள்ளுக்குள்ளே கொஞ்சம் அதிர்ந்து போனவன், “என்னம்மா கவிதா பெரியவளானது எவ்வளவு பெரிய விஷயம். ரொம்பச் சாதாரணமாகச் சொல்கிறாய்!” என்றான் கண்களைத் துடைத்துக் கொண்டு. 

“ம்..ம்.. எதிர்பார்த்த விஷயம் தானே. மத்தியானம் வந்து விடு” என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு அம்மா மற்ற வேலைகளில் மூழ்கினாள். 


சேகர் அலுவலகத்திற்கு வந்ததும் “எங்கேப்பா ஸ்வீட்?” என்று ஓடி வந்தாள் ஜீவா. 

ஒன்றும் சொல்லாமல் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து நீட்டினான் சேகர். 

“என்னாச்சு சேகர். ஒரு மாதிரி முகம். வாடிப் போயிருக்கு. உப்பு பிஸ்கட் தருகிறீர்கள் என்ன விஷயம்?” ஜீவா பதறிப் போய் கேட்டாள். 

“கவிதா பெரிய பெண்ணாகியிருக்கிறாள்” என்று சொல்லி விட்டு “காத்திருக்க வேண்டியது தான் ஜீவா” என இருக்கையில் அமர்ந்தான். 

ஜீவா ஸ்தம்பித்துப் போய் நின்றாள். 

– 7-12-2003, தினபூமி – ஞாயிறுபூமி.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *