பாதை தவறிய பயணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 10, 2026
முதற்பதிப்பு: 2001
பார்வைகள்: 35 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலத்துக்கு அடியில் வேர்விட்டிருந்த கணைக்கால்கள் மீது இருபத்தைந்து மாடிக் கட்டடம் ஒய்யாரமாக வளர்ந்து கொண்டிருந்தது.

அந்தக் கட்டடத்தை ஒட்டி இரை தேடும் பறவைகளின் கூடு! இரண்டடுக்குத் தற்காலிக மரப்பலகை வீடு. அதாவது தொழிலாளர்களின் மாளிகை. பல நாடுகளில் இருந்து கூலி வேலை செய்ய வந்திருந்த தொழிலாளர்கள் ஒரே இனமாகச் சேர்ந்து குடியிருந்தனர்.

ஈராண்டு ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்திருந்த நல்லதம்பியும் அந்தப் பலகைவீட்டில்தான் குடியிருந்தான்.

அன்று நல்லதம்பிக்கு ‘ஓவர்டைம்’ வேலை.

இரவு பத்து மணிக்குத்தான் வேலை முடிந்தது. இருபத்தைந்தாவது மாடியிலிருந்து தற்காலிக மின்தூக்கிவழி இறங்கினான்.

பசி வயிற்றைக் கிள்ளியது. வியர்த்துக் கொட்டிய வியர்வை உலர்ந்து விட்டிருந்ததால் உடம்பும் ‘கச கச’ வென்றிருந்தது. குளித்துவிட்டு அடுக்களைக்குச் சென்றான். மொச்சக்கொட்டையும், கொடுவாய்க் கருவாடும் போட்டு ஆ ஆக்கியிருந்த கறி கமகமவென்று மூக்கைத் துளைத்தது. ஆனால் ஆறிவிட்டிருந்தது. சோறு கறியைச் சுட வைக்க நினைத்தான்.

தூக்கமும் பசியும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு வந்ததால் சோறு கறியைச் சுட வைக்க முடியவில்லை.

சூடு ஏறியிருந்த வயிற்றுக்குச் சூடுகாட்டாமலே அள்ளிப் போட்டுக் கொண்டான்.

ஒரு மூலையில் தன்னைப் பார்க்க வந்திருந்த மைத்துனன் மாணிக்கம் படுத்திருப்பதைப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு, சுற்றி வைத்திருந்த கோரைப் பாயை எடுத்து விரித்தான். அழுக்கேறி எண்ணெய்க் கக்கல் படிந்திருந்த தலையணையைத் தட்டிப்போட்டுக் கொண்டு படுத்தான்.

ஆனால் அவன் மனம் ஒரு நிலைப்படவில்லை. மைத்துனன் மாணிக்கத்தையே அது வட்டமிட்டு வந்தது. ஊரிலுள்ள அன்புத் தாய், ஆசை மனைவி, பிள்ளைகுட்டிகளின் சிரித்த முகம். நொடிப் பொழுது கண்முன் நின்றது. மீண்டும் மைத்துனன் நினைவுதான்.

கண்ணைக் கொண்டுபோய் செருகியதால் அவன் சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். ‘கொர்கொர்’ என்று குறட்டை ஒலி கேட்டது.

கொரியத் தொழிலாளர்களின் குறட்டை ஒலிக்கும், தமிழ் நாட்டுத் தொழிலாளர்களின் குறட்டை ஒலிக்கும் வேறுபாடு தெரியவில்லை.

இரவு மணி இரண்டு.

அந்த நேரத்தில் “டொக் டொக்” என்று கதவு தட்டும் ஒலியும், நாதாங்கியின் ‘கொடக் கொடக்’ ஒலியும் கேட்டது.

“ம்…. யாரு….?” என்று தூக்கத்தில் நல்லதம்பி கேட்டான்.

இடைவெளிவிட்டு மீண்டும் கதவை வலுவாகத் தட்டும் ஒலி.

இமைகள் வலுக்கட்டாயமாக விரிய, சிவந்த கண்கள் பாதி தெரிய, உதடுகள் நெளிந்தன:

“யாரது?” என்றவாறு எரிச்சலோடு எழுந்து சென்று நல்லதம்பி கதவைத் திறந்தான். உடம்பு வலி போன இடம் தெரியவில்லை.

எதிரே நிற்பவர்களைப் பார்த்ததும் தூக்கமும் அசதியும் பறந்தன, சுறுசுறுப்பு தானாக வந்துவிட்டது.

அரைகுறையாக விழிகளை மூடிக்கொண்டிருந்த இமைகளும் அகல விரிந்தன.

வந்திருந்த போலீசாருக்கு உள்ளே செல்ல வழிவிட்டு விலகி நின்றான். போலீஸ் என்றதும் எல்லாரும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தனர்.

சிலரின் உடம்பு ஆட்டம் கண்டது.

உள்ளே வந்த போலீசுக்காரர்களுள் ஒருவர் நல்லதம்பியைப் பார்த்து, “பாஸ்போர்ட் எங்கே?” என்றார்.

நல்லதம்பி பறந்தான். பலகைச்சுவரில் அடிக்கப்பட்டிருந்த ஆணியில் கால்சட்டை தொங்கியது. பைக்குள் கையைவிட்டுத் தட்டுப்பட்ட திறவுகோலை எடுத்தான். பெட்டியைத் திறந்து பாஸ்போர்ட்டை எடுத்துக் கொடுத்தான்.

அனைவர் பார்வையும் போலீஸார் மீது இருந்தது.

ஆனால், அதே நேரத்தில், வீட்டு மூலையில் படுத்திருந்த ஓர் உருவம் மட்டும் பின்பக்கக் கதவை அரவம் செய்யாமல் திறந்து கொண்டு நழுவியது.

போலீசுக்குக் கடுக்காய் கொடுத்த உருவம் வேறு யாருமில்லை. நல்லதம்பியின் மைத்துனர் மாணிக்கமேதான்.

மாணிக்கம் நெஞ்சம் படபடத்தது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. சாலையைக் கடந்து வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி ஐந்தடியில் நடந்தான்.

ஜாலான் புசார்சாலையை குறுக்கே கடந்து சென்று வீராசாமி சாலைக்குள் புகுந்து சிராங்கூன் சாலையை அடைந்தபோதுதான் அவனுக்குப் போன உயிரே திரும்பி வந்தது.

மணியும் இரண்டரை ஆகிவிட்டது.

அவன் தங்கியிருக்கும் வீட்டை நெருங்கினான். வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அச்சம் ஆட்கொண்டது. நடையும் தளர்ந்தது.

மெல்ல நடந்தான்.

வீட்டுக்கு எதிர்ப் பக்கம் உள்ள ஐந்தடியில் நின்று தான் குடியிருக்கும் வீட்டை நோட்டமிட்டான். ஆள் நடமாட்டம் தெரிந்தது.

பொடி நடையாகச் சென்றான். அவன் பயந்தபடி அங்கு போலீஸ் இல்லை.

அவனைக் கண்டதும், “எங்கே அண்ணே போயிருந்தீங்க? மைத்துனர் வீட்டுக்கா…?” என்று ஒருவர் கேட்டார்.

“இன்னிக்கு மாட்டிக்கொள்ள இருந்தீங்க. நீங்க கும்பிடும் சாமி நல்லசாமி. தப்பிச்சிட்டீங்க” என்றார் மற்றொருவர்.

“நீ போனது நல்லதாகப் போச்சுப்பா. இல்லேனா உன்னையும் போலீசுக்காரவங்க இழுத்துகிட்டுப் போயிருப்பாங்க” என்றார் முதியவர் ஒருவர்.

“இங்கேயும் போலீசு வந்துடுச்சா?” என்றான்.

“வந்திடுச்சாவா?… வந்து… வயிரமுத்து, சின்னையா, உங்க ஊர் பெருமாள் எல்லாரையும் மாமியார் வீட்டுக்கு விருந்து கொடுக்க அழைச்சுக்கிட்டுப் போயிருக்காங்க” என்றார் அவர்.

“எங்க மச்சான் வேலை செய்யுற இடத்துக்கும் வந்திட்டாங்க. முன்னெச்சரிக்கையோடு ஒரு மூலையில் படுத்திருந்த நான் யாருக்கும் தெரியாமல் வந்துட்டேன்” என்றான்.

அன்று இரவு முழுதும் இதே பேச்சாக இருந்தது.

கிழக்கு வெளுத்தது. சாப்பாட்டுக் கடை களைகட்டியது. ஈராண்டு ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்திருந்தவர்கள் கூடியிருந்தனர். மாணிக்கத்தைப்போல் வந்திருந்த சிலரும் ஆளோடு ஆளாகக் கலந்திருந்தனர்.

“இட்டிலி நாலு”

“வெங்காயத் தோசை ஒண்ணு”

“வடை ரெண்டு”

“காப்பி ஒண்ணு”

சூடு பறந்தது.

பரிமாறுபவர் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தார். மதியச் சாட்டுக்காகக் கட்டிய சோற்றுப் பொட்டலம் சிலர் கைகளில் கைக்குழந்தையாக மாறிவிட்டன! கையில் ஏந்தியபடி கம்போங் கப்போரை அடைந்தனர்.

சிலர் தேவ ஆலய வாசலை அடைந்ததும் நின்றனர், சிலர் வாசல் நிலைப் படிக்கட்டில் விதியை நொந்துகொண்டு அமர்ந்தனர்.

மற்றுஞ்சிலர் திடலிலும், ஐந்தடியிலும் சிறுசிறு கூட்டமாக நின்றனர். அனைவர் பார்வையும் சாலையை மொய்த்தது. ‘அதோ வருது” என்று ஒருவர் விரைந்தார்.

அவரைத் தொடர்ந்து நான் முந்தி நீ முந்தி என்று ஓடி “டட்சன் வேனில்” திமுதிமுவென்று ஏறினர்.

சுமை ஏறியதும் ஸ்ப்ரீங் அமுங்கி வேன் கீழே இறங்கியது.

வேனின் முன் இருக்கையில் இருந்தவர் கதவைத் திறந்து கொண்டு இறங்கினார். அவர் கண்கள் இளங்காளையர்களின் கட்டுடலை வட்டமிட்டன. வாட்டசாட்டமானவர்களை மனத்திற்குள்ளேயே கணக்குப் போட்டுக் கொண்டு, “எனக்கு ஆறு பேர் போதும். மற்றவர்கள் கீழே இறங்குங்க” என்று மெலிந்திருந்தோரின் கைகளைப் பற்றி இழுத்து இறங்கச் செய்தார்.

“கஞ்சப்பயல், நம்மைத் தொத்தல்ன்னு நினைச்சுக்கிட்டான் போலிருக்கு… கடுகு சிறுத்திருந்தாலும் காரம் போகுமா? ம்…” என்று முணுமுணுத்துக் கொண்டு வேனைவிட்டுக் கீழே இறங்கினர்.

அவர்கள் இறங்கியதும் அடுத்த வண்டி வந்தது.

விரைந்தனர்; ஏறினர்; ஏறியவர்களுள் சிலர் இறக்கிவிடப்பட்டனர்.

அடுத்தடுத்து வண்டிகள் வந்தன. அங்குமிங்குமாகப் பட்டாம் பூச்சியைப் போல் விரைந்தனர், அங்குமிங்குமாகப் பலர் வண்டிகளில் தொற்றிக் கொண்டனர்.

மாணிக்கமும் ஒரு வேனில் ஒட்டிக்கொண்டான். “இன்னிக்கும் ஆண்டவன் படியுளந்துவிட்டான்” என்று எண்ணிக் கொண்டான்.

அன்று அவனுக்கு இருபத்தைந்து வெள்ளி சம்பளம் உறுதியாகி விட்டது. மதியச் சாப்பாடும் குத்தகைக்காரர் அவர் செலவில் வாங்கிக் கொடுத்து விடுவார்.

வண்டி ஜூரோங்கிற்குச் சென்றது. அங்குதான் வேலை. குழி வெட்டி மின்கம்பிவடம் பதிக்க வேண்டும்.

வேலை தொடங்கியது. மண்வாரி எந்திரங்களும் இயங்கின; தொழிலாளர்களுந்தான்! மாணிக்கமும், அவனுடன் சென்றவர்களும் கேள்விக் குறியைப் போல் குனிந்து குழி வெட்டினர், எஃகு எந்திரத்துடன் மனித இயந்திரங்கள் போட்டி போட்டனர்.

அதே நேரத்தில் நல்லதம்பியும் இருபத்தைந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு மாணிக்கத்தின் நினைவுதான்.

பெரிய பெரிய எஃகுக் கம்பிகளைத் தோளில் சுமந்து செல்வதும் சில சமயம் சிறுசிறு கம்பிகளைக் கொண்டு பெரும் எஃகுக் கம்பிகளை இணைத்துக் கட்டுவதுமாக இருந்தான். தலைக்கு மேல் அந்தரத்தில் “கிரேன்” இராட்டின வட்டம் போட்டுக் கொண்டு இருந்தது. அதில் பிணைத்திருந்த கம்பிக்கட்டு ஊஞ்சலாட்டம் போட்டது. ஆனால் அவன் அதை உணரவில்லை. எண்ணம் ஓரிடத்தில் இருந்தாலும் வேலை ஒடிக்கொண்டுதான் இருந்தது. கம்பிகளை இணைத்துக் கட்டியதும் கம்பிகளுக்க இடையில் படிந்திருந்த தூசிதுப்பட்டையைக் காற்றழுத்தியால் போக்கினான். கொக்கைப்போல் ஒற்றைக் காலைத் தூக்கிக் கழுத்தை நீட்டி கொண்டிருந்த குழாயிலிருந்து காரைக் கலவை கொட்டியது. வெயில் சுட்டெரித்தது. கண்காணி கண்ணில் எண்ணெயை ஊற்றிக் கொண்டும் நின்றார்.

“ஆடுமாட்டைப்போல் கேவலமாகப் போயிட்டோமே” என்று நினைக்கும்போது நல்லதம்பி மனம் இறுகிக் கொண்டிருந்தது.

“அன்னிக்கே சொன்னேன் கேட்டானா? இன்றைக்குத் திருடனைப் போல் ஒளிந்து திரியுறான். வெறுங்கையோட எப்படி ஊருக்குப் போறது? என்னைப் போல் எத்தனையோ பேர் இப்படித் தானே வேலை செய்யுறாங்க என்கிறான். இவனுக்கு எவ்வளவு சொல்லியும் ஏறமாட்டேங்கிறதே. இவ்வளவு துணிச்சல் எப்படி வந்ததுன்னும் தெரியலே” என்று நல்லதம்பி மனம் அசைபோட்டுக் கொண்டு இருந்தது.

“கிரேன்” கப்பிக் கட்டை “கடகட” வென்று சுற்ற, எஃகுக் கம்பிக் கயிற்றில் தொங்கிய கொக்கி கீழே இறங்கியது.

கீழே கிடக்கும் கம்பியைத் தூக்குவதற்காக அது இறங்கவில்லை! மாந்த எந்திரங்களின் வயிற்றிற்கு “எரிபொருள்” வார்ப்பதற்காக இறங்கியது.

கீழே நின்றவர் குளிர்நீர், தேநீர், கோப்பி, ரொட்டி, கேக்குகள் உள்ள சிறுசிறு நெகிழிப் பைகளைக் கொக்கியில் மாட்டி விட்டதும் கொக்கி மேலே சென்றது.

“இப்போது நாம் மேலே இருந்தாலும் நம் பசியை நமக்குக் கீழே உள்ளவர்கள்தான் போக்க வேண்டும். அது இப்போது அவர்கள் கையில்தான் இருக்கிறது!” என்றார் பக்கத்தில் நின்றவர்.

“ஆமா” என்றான் நல்லதம்பி.

“ஆனால் வாழ்க்கையின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் வாழ்வு மேல் மட்டத்தில் உள்ளோர் கையில் இருக்கே அது ஏன்?” என்று அவர் சிரித்தார்.

“இதுதான் உலகம்” என்றபடி நல்லதம்பி தலையில் இருந்த தலைக்கவசத்தை எடுத்தான். வெப்பம் வெளியேறியது. குளிர்நீர் வந்ததும் வாங்கிப் பருகினர். வயிறு குளிர்ந்தது. வியர்வை சிந்தியவர்களைப் பார்த்து அவர்களுக்காக மேகம் இரக்கப்பட்டது! சிறிது நேரம் நிழலும் குளிர்ந்த காற்றும் அவர்களின் களைப்பைப் போக்கின.

வேலை முடிந்ததும் தன் மைத்துனன் மாணிக்கத்தைப் பார்க்கக் கிளம்பினான்.

மைத்துனன் தங்கி இருக்கும் வீட்டை அடைந்தபோது வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தோர் நல்லதம்பியை வரவேற்றனர்.

“வாங்கண்ணே. உங்க இடத்துல வேலையெல்லாம் எப்படியண்ணே இருக்கு?”

“கடினமாகத்தான் இருக்கு” என்றான் நல்லதம்பி.

“உங்க மைத்துனர் ரொம்பக் கெட்டிக்காரர். சுளுவான ஆள் அண்ணே” என்றார் இன்னொருவர்.

“இந்தக் காலத்தில் நெளிவுசுளிவு இல்லேன்னா இந்த உலகத்துல பிழைக்க முடியாது அண்ணே” என்றார் மற்றொருவர்.

“இதையெல்லாம் கெட்டிக்காரத் தனம்ன்னு எப்படிச் சொல்ல முடியும்?” என்றான் நல்லதம்பி.

“இந்தக் காலத்துல எங்கண்ணே நேர்மை இருக்கு? குட்டியைத் தூக்கி ஆட்டிலும், ஆட்டைத் தூக்கிக் குட்டியிலும் போடுகிறவனுக்குத்தானே அண்ணே காலமா இருக்கு. அப்படி இல்லேன்னா கப்பல் ஓடாதண்ணே! தரை தட்டிடும்….!” என்றார் அவர்.

அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் உணர்ச்சியோடு, “ஏனண்ணே நேர்மை நேர்மைன்னு சொல்லுறீங்களே, நமக்கிட்டே முப்பதாயிரம் நாற்பதாயிரும்ன்னு வாங்கிக்கிட்டு இங்கே வேலைக்கு அழைச்சுக்கிட்டு வந்தாங்களே அதுல என்னண்ணே நேர்மை இருக்கு? பணம் வாங்கியதுக்கு ஏதோ வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறவனும் இருக்கிறான். சிலர் வெளிநாட்டுல வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லி ஆயிரக்கணக்கில் வாங்கி இரண்டு மூன்று மாதத்தில் இரண்டு மூன்று லட்சத்தை ஏப்பம் விட்டுட்டுத் தலைமறைவாகி விட்டான்களே அதுல என்னண்ணே நேர்மை இருக்கு….? இன்னும் சில வஞ்சகப் பேர்வழிகள் பணத்தையும் வாங்கிக்கிட்டு முன்பின் தெரியாத ஊரில் கொண்டு போய் ஈவுவிரக்கம் இல்லாமல் விட்டுட்டு அம்போன்னு போயிடுறான்களே… அதுல என்னண்ணே நேர்மை இருக்கு? பெண்டாட்டி பிள்ளைகளோட தாலியையும் சங்கிலியையும் நிலம்பலத்தையும் வித்து ஆயிரக் கணக்கில் அள்ளிக் கொடுத்தவர்களை ஓட்டாண்டி ஆக்கிட்டு… எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போயிடுறான்களே அது நேர்மையா அண்ணே? எத்தனைபேர் ஏமாற்றப் பட்டிருக்கிறாங்க தெரியுமா அண்ணே? எத்தனையோ பேர் உழக்கூட நிலம் இல்லாமல் தவிக்கிறாங்களே அண்ணே?!” என்றார்.

“அது வேறே இது வேறே. ஊர் பார்க்க வந்துட்டு விசாவின் காலக்கெடு முடிந்ததும் திரும்பிப்போகாமல் இருக்கிறது தப்பு. ஏதோ வந்தோம் ஊரைப் பார்த்தோம்ன்னு திரும்பிப் போறதுதான் நல்லது. கையில் இருக்கிற காசுக்குச் சென்னையில் விலை போகிற பொருட்களை வாங்கிக்கிட்டுப் போய் வித்துட்டுப் போக்குவரத்துச் செலவை தன்னக்கட்டிக்கிடலாம். அதை விட்டுட்டு ஒரே அடியாய் மாதக் கணக்கில் திருட்டுத்தனமாத் திரியுறது சரியில்லை” என்றான் நல்லதம்பி.

அவன் பார்வை வாசலில்இருந்தது.

வாசல் பக்கம் வந்த பெரியவர் ஒருவர் நின்று “புளிச்” என்று வெற்றிலை எச்சிலைச் சாக்கடையில் துப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தார். அவரைத் தொடர்ந்து காளையர் நாலைந்து பேர் களைத்துப்போய் வந்தனர். உடம்பிலும் உடையிலும் செம்மண்!

உள்ளே வந்த பெரியவர் நல்லதம்பியைப் பார்த்ததும் “நீங்க இங்கேதான் இருக்கிறீங்களா? நல்லதாப் போச்சு” என்றார். ஏதோ காரணம் இருக்கு என்று எண்ணிய நல்லதம்பி, என்ன?” என்றான்.

“நாங்க வேலை செய்த இடத்தில் திடுதிப்புன்னு போலீசுக் காரங்க வந்து பாஸ்போர்ட் இருக்கா என்று கேட்டுட்டுச் சோதனை செஞ்சாங்க. பாஸ்போர்ட் கையில் இல்லாதவங்களையும் விசா இல்லாதவங்களையும் கைது செய்து அழைத்துக் கொண்டு போயிட்டாங்க.நம்ம மாணிக்கமும் போயிருக்கான்” என்றார்.

நல்லதம்பி முகத்தில் கருமேகம் திரண்டது.

‘இந்தக் காலத்தில் நேர்மையாக வாழ முடியாது, குட்டியைத் தூக்கி ஆட்டிலேயும், ஆட்டைத் தூக்கிக் குட்டியிலேயும் போடுறவனுக்குத்தான் இது காலம்’ என்ற சொல்லியவர்களை வெறித்துப்பார்த்தவாறு,

“பார்த்தீங்களா, இப்ப என்ன நடந்திருக்குதுன்னு? திருட்டுத்தனம் ரொம்ப நாளைக்கு எடுபடாது” என்றான்.

“இப்போ என்ன ஆயிடுச்சு? இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சதுதானே. விசா முடிஞ்சு இங்கிருந்த ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து வெள்ளி மேனி தண்டப் பணம் கட்டச் சொல்லுவாங்க. அப்படியே கட்டினாலும் இருபத்தைந்து வெள்ளி சம்பளத்தில் ஐந்து வெள்ளி போக இருபது வெள்ளி மிச்சந்தானே. இதுவரை இவன் எடுத்திருக்கும் சம்பளத்தைக் கணக்குப் போட்டுப்பார்த்தால் செலவு போக ஊர் ரூபாய்க்கு மூவாயிரம் தேறுமே! ஒன்பதாயிரம் பத்தாயிரம்ன்னு கட்டிட்டு வந்த நமக்கு, ஊர்ல வாங்கியிருக்கும் கடனைக் கட்டிட்டு மிச்சம் எவ்வளவுன்னு கணக்குப் போட்டுப் பார்த்தால் என்னதேறும்…?” என்றவாறு ஒருவர் நல்லதம்பியைப் பார்த்தார்.

நல்லதம்பி வாய் திறக்கவில்லை. நேர்மை செத்துவிட்டதே என்று மறுபேச்சுப் பேசவில்லை.

இரண்டு மூன்று நாள் ஓடியது.

துறைமுகத்தில் வ உ சி. சிதம்பரம் கப்பல்தான் நின்றது. கப்பலில் ஒரு பக்கம் சரக்கை ஏற்றிக் கொண்டிருந்தனர். பயணியர் மற்றொரு வழியாகக் கப்பலில் ஏறிக்கொண்டிருந்தனர்.

நல்லதம்பி முகம் வாடியிருந்தது.’மைத்துனர் மாணிக்கத்தைப் போலீசு பிடித்துவிட்டதே! மானம் போயிடுச்சே!’ என்று கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டே நின்றான்.

போலீஸ் பாதுகாப்போடு வந்த மாணிக்கமும் அவனைப் பார்த்தான்.

“ஏன் அத்தான் கவலைப் படுறீங்க? நான் இந்தக் கப்பலில் ஊருக்குப் போய் எல்லாரையும் பார்த்துட்டு, இன்னொரு பாஸ்போர்ட்டு எடுத்துக்கிட்டுத் திரும்பி வந்திடுறேன். கவலைப்படாதீங்க” என்றவாறு கையசைத்துவிட்டுச் சிதம்பரம் கப்பலுக்குள் மிடுக்காகச் சென்றான். இந்திய விடுதலைக்காக செக்கிழுத்த வ உ சிதம்பரம் பிள்ளையின் பெயர் அக்கப்பலுக்குச் சூட்டப்பட்டிருந்தது.

நல்லதம்பி அப்போதும் வாய் திறக்கவில்லை. மறுசொல் சொல்லவில்லை. கண்கள் மட்டும் கலங்கின. கப்பலில் எழுதியிருந்த வ உ சிதம்பரம் என்ற எழுத்துக்களைப் பார்த்தான். சிதம்பரம் சிரித்தார்.

– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

சிங்கை மா.இளங்கண்ணன்2 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *