மலரவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2024
பார்வையிட்டோர்: 476 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொழிலாளிகளை வாட்டி வதைத்து அவர்களது உழைப்புக்கு மதிப்புத் தராமல் உன்மத்தம் கொண்டலையும் முதலாளிகளையும் அவனுக்குப் பிடிப்பதில்லை. கடமை உணர்ச்சியற்று வெறும் உரிமைக் கிளர்ச்சிகளால் மட்டுமே உந்தப்பட்டுத் தொல்லை கொடுக்கும் தொழிலாளிகளைபும் அவன் விரும்புவதில்லை. 

அப்படிப்பட்ட ஒரு நேர்மையான தொழிலாளிதான் ஆதவன். புகழ் பெற்ற ‘அவிட்டம் ஸ்டுடியோ’ வில் ஆதவன் ஒரு லைட்பாய் தான்! இருட்டில் பகலையும் பகலில் இருட்டையும் உண்டாக்கிக் காட்டும் திரையுலகத்தின் விநோத ஒளி விளக்குகளை இயக்குகின்ற பல தொழிலாளிகளில் அவனும் ஒருவன். 

ஸ்டுடியோவில் படமெடுக்கும் அரங்கத்தின் மேலேயுள்ள பரண்மீது அமர்ந்தவாறே அவன் எத்தனையோ கோட்டை கொத்தளங்களில், அழகிய அரண்மனைகளின் அந்தப்-புரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறான். குடிசைகளின் குமுறலைக் கேட்டிருக்கிறான். கரையான் புற்று முதல் கைலையங்கரி வரையில் அவன் போடுகிற விளக்கின் ஒளியால் எழில் பெற்று ‘கேமரா’ வுக்குள் புகுந்து பார்ப்பவர் கண்களைக் கவர்ந்திருக்கின்றன. 

முதல்நாள் மாளிகைத் தாழ்வாரத்தில் மன்னவன் பெற்ற பெண்ணும் அவளை மணந்திட்ட அரசகுமாரனும் உடலோடு உடல் உராய்ந்தவாறு உல்லாச கீதம் பாடிக் கொண்டிருப்பார்கள். ‘அமுத நிலவே! ஆடும் ஓவியமே!’ எனக் காதலன் வர்ணித்துக் காதலியின் முகத்தைத் தன் கரத்தால் தடவிக் கொண்டிருப்பான். கதாநாயகியின் முகத்தை நிலவைப்போல் ஆக்க வேண்டிய பணிக்கு அந்த லைட்பாய் இயக்குகிற விளக்கு மிகமிக இன்றியமையாதது. 

மறுநாள் அந்த இடத்தில் அரண்மனைத் தாழ்வாரம் இருக்காது. அதற்குப் பதிலாக முற்றும் துறந்த முனிபுங்கவரின் ஆஸ்ரமம் இருக்கும். பாதி திறந்த ஆடையுடன் ரிஷிபத்தினி காட்சி தருவாள். ‘அன்பே! இன்பமே! என்ற சிற்றின்பச் சொற்களுக்குப் பதிலாக ‘சுவாமி! பிராணநாயகீ!’ என்ற பேரின்பச் சொற்கள் பெருக்கெடுத்தோடும். 

ஆஸ்ரமம் இருந்த இடத்தில் அடுத்த நாள் திருடர் குகை காட்சி தரும். அதே இடம் மறுநாள் போலீஸ் ஸ்டேஷனாக விளங்கும். 

இப்படிக் கோட்டைகள் குடிசைகளாக மாறினாலும், மாளிகைத் தாழ்வாரங்கள் மயான பூமிகளாக உருவெடுத்தாலும் ஆதவன் உட்கார்ந்து வேலை பார்க்கும் அந்த ஸ்டுடியோ பரணைப் பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமில்லை. அதே பரண்தான்! அதே விளக்குதான்! 

அதே வேலைதான்! மணிக்கணக்கில் நாட்கணக்கில் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன ஒரே மாதிரியான அலுவல் வார்த்தைகள் தான்! 

‘ஏ, அந்தக் கோடாவை நகர்த்து!’

‘பேபியைக் கொஞ்சம் சாப்ட்பண்ணு!’ 

‘பதினைந்தை இடது பக்கம் தள்ளு!’ ‘பெரிய லைட்டைக் கட் பண்ணு!’ 

‘ஜூனியர் போடாதே!’ 

‘அந்த சீனியரில் ஒரு நெட்வையி!’ 

‘நடிகர் முகத்திலே ஸ்ட்ராங்பண்ணுப்பா!’

‘ரெடி! ஆல் லைட்ஸ்!’ 

கேமராமேன் இடுகின்ற இந்த வழக்கமான உத்திரவு களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலே உள்ளவர்களில் அவனும் ஒருவன். அந்த ஒரே வேலையைச் செய்து அலுத்து விட்ட தொழிலாளிகள் சலித்துக் கொள்வதை அவன் கவனிக்காமல் இல்லை. பரணில் உட்கார்ந்து கொண்டே பணியில் அக்கரை செலுத்தாமல் சோம்பேறித்தனமாக நடந்துகொள்ளும் ந ண்பர்களை அவன் பார்த்து வருத்தப்படாமலும் இல்லை. தன்னைப் போலவே பல தொழிலாளத் தோழர் கடமையுணர்வோடு அலுவல் புரிவதை நோக்கி அவன் மகிழ்ச்சியடையாமலும் இல்லை. உயரமான அந்தப் பரணில் இருந்தவாறே அவன் யார் யார் முகத்தையோ விளக்குப் போட்டு நன்கு பார்த்திருக்கிறான். யார் யாரையோ தன் கையிலுள்ள ஒளி விளக்கின் மூலம் சிங்காரம் செய்திருக்கிறான். எத்தனையோ வசீகர முகங்களைப் பயங்கரமாகச் சித்தரித்துக் காட்டக் கூடிய சக்தி, அவன் ஆளுகையின் கீழிருந்த அந்த விளக்குக்கு இருந்தது. அவன் காணாத நடிக நட்சத்திரங்கள் இல்லை. பார்க்காத டைரக்டர்கள், கதாசிரியர்கள் இல்லை. அவன் சந்தித்த கேமரா மேன்கள் பலவிதம். 

ஒருவர், எல்லா விளக்குகளையும் ஏக காலத்தில் கொளுத்தச் செய்து ஒரு நொடியில் படப்பிடிப்புக்கு ‘ரெடி சார்!’ என முழக்குவார். இன்னொருவர் ஒவ்வொரு விளக்கின் தாடையையும் பிடித்து அவைகளைத் தாஜா செய்து விட்டு – சிலவற்றின் குரல்வளையைப் பிடித்து உயிரை அணைத்துவிட்டு – அந்த விளக்குகளின் விழிகளுக்கும் நடிகர்களின் விழிகளுக்கும் வலி ஏற்படுகிறவரையில் கொடுமைப் படுத்தி ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை ‘ஆல் ரைட்! ரெடி!’ என்று கூறி விட்டு அப்போதும் ஏதோ மயிரிழையில் குறை கண்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பார். படத்தின் கதைக்கான கட்டத்தில் நடிகர்கள் தயாரானதும் கேமராமேன் அபிப்பிராயப்படி ஒரு விளக்கைப் போட்டுவிட்டு மறு உத்திரவு வரும்வரையில் மௌனமாகப் பரண்மீது அமர்ந்திருக்கும் அவனுக்கு எத்தனையோ சிந்தனைகள். 

‘இந்த அவிட்டம் ஸ்டுடியோ முதலாளி, இந்தக் காலத்தில் இப்படி ஒரு படம் எடுக்கிறாரே ; உலகம் முழுவதும் பகுத்தறிவு ஒளி பரவி யிருக்கும் இந்த வேளையில் ‘பஜனாமிர்தகானம்’ என்ற பழமைப் பாசி பிடித்த கந்தல் கதையை யாராவது படமாக்குவார்களா?’ என்று! அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்வான். ஐம்பதும் நூறும் சம்பளம் வாங்குகிற தன்னைப் போன்ற தொழிலாளிகள், வேலை நேரத்துக்குக் குறிப்பிட்ட காலத்தில் வந்து குறிப்பிட்ட காலத்தில் வெளியேறுவதையும், ஐம்பதாயிரம் அறுபதாயிரம் என்று சம்பளம் வாங்குகிற ஒரு சில நடிகர்கள் ஏழு மணிப் படப்பிடிப்புக்கு வரவேண்டுமென்றால் இந்திய சர்க்காரின் ரயில்களைப்போல இரு நூறு முன்னூறு நிமிடங்கள் தாமதமாக வருவதையும் எண்ணிப் பார்த்துப் பெருமூச்சுவிடுவான். அவர்களிடமுள்ள திறமைக்கு – கலைக்கு அந்தத் திறமையையும் கலையையும் வைத்துத்தான் படம் எடுப்பவர் சம்பாதிக்கிறார் என்ற நிலைக்கு அவர்கள் பெறுகிற ஊதியங்கூட அவனுக்கு அநியாயமாகத் தோன்றவில்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறிப் பணமும் பெற்றுக்கொண்டு தங்கள் வீடுகளில் ஒரு கடிகாரம், காலண்டர்கூட வாங்கி வைக்காமல் வாழ்க்கை நடத்துகிறார்களேயென்று நினைக்கும்போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. படமெடுக்கும் முதலாளிகளின் மீது அவனுக்கு அனுதாப உணர்ச்சியும் தோன்றியது. 

பெரிய நடிகர் இன்னும் செட்டுக்கு வந்து சேராததால் சின்ன நடிகர் ஒருவரை வைத்து அவருக்குள்ள காட்சியைப் படம் பிடிக்கலாம் என்று டைரக்டர் தீர்மானித்து, அந்த நடிகர்மீது என்னென்ன விளக்குகள் போட வேண்டுமென்று கேமராமேன் சொல்லும்போது அவனுக்கு அந்த விளக்கு ஒளியை நடிகர் மீது வீசவே மனம் வராது. உள்ளம் உடைந்து உதட்டைப் பிதுக்கியவாறு உட்கார்ந்திருக்கும் பட முதலாளியின் முகத்தில் அந்த வெளிச்சத்தைப் பாய்ச்சி அழகு பார்க்கலாமா என்று தோன்றும். 

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு முன்பு கேமரா முதலிய கருவிகளுக்குத் தேங்காய் உடைத்துப் பூ வைத்துக் குங்குமம் இட்டு, பூஜை நடத்துகிற நிகழ்ச்சியைப் பார்த்து அவன் உள்ளுக்குள்ளே சிரிப்பான். எவனோ ஒரு மேல்நாட்டு ‘முட்டாள்’ கண்டுபிடித்த விஞ்ஞான சாதனைகளுக்கு நமது நாட்டு ‘அறிவாளி’ பூப்போட்டுப் பூஜையாவது செய்கிறானேயென்று முணுமுணுத்துக் கொள்வான்.ஸ் 

அந்தப் புதுமை எண்ணங் கொண்ட வாலிபன் அவிட்டம் ஸ்டுடியோவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அவன் அங்கு வரும் போது ‘லைட்பாய்’ வேலைக்கு வந்தவனல்ல. நடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அவன் அங்கு வந்தான். அவனும் அவனது வயோதிகத் தாயாரும் கிராமத்தில் வாழமுடியாமல் கஷ்டப்பட்ட போது பலரும் சொன்னார்கள், ‘பயல் சிகப்பாய் அழகாயிருக்கிறான், பட்டிணத்துக்குப் போனால் சினிமாவில் நடிக்கிற வேலை கிடைக்கும்’ என்று! 

அதை நம்பி அந்தக் கிழவி தன் மகனுடன் பட்டிணத்துக்குப் புறப்பட்டு வந்தாள். வந்தபிறகு அலையாய் அலைந்தார்கள், பட்டினி கிடந்தார்கள், பாதையோரங்களில் சுருண்டு கிடந்தார்கள். எந்தப்பட முதலாளியின் கண்ணிலும் அந்த பால்ய நடிகன் படவில்லை. எப்படி யெப்படியோ கஷ்டப்பட்டு ஸ்டுடியோ வாயில்களில் தவமிருந்து, கடைசியில் ‘லைட்பாய்’ உத்தியோகத்தில் சேர்ந்தான் ஆதவன். அதன் பிறகு அவனுக்கு நடிகனாக வேண்டுமென்ற ஆசை மறைந்து விட்டது. காரணம், ஸ்டுடியோவுக்குள்ளே துணை நடிகர்கள் கூட்டம் அனுபவிக்கிற சுகத்தை அவன் நேரில் பார்த்துப் பார்த்துத் தனக்கு நடிகர் வேலையே வேண்டாமென்று தாயின்மேல் ஆணையிட்டு உறுதியெடுத்துக் கொண்டுவிட்டான். 

பதினெட்டாவது வயதில் பட்டிணத்துக்கு வந்தவன் பாடுபடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு தன் வயிற்றைக் கழுவிக் கொள்வதை மட்டும் பெரிதாகக் கருதாமல், தன் அருமைத் தாயாரின் சுக வாழ்வுக்காக நாள்தோறும் உலகத்தில் போராடிக்கொண்டிருந்தான். அவனுக்கு வயதும் இருபத்து மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. தான் பட்டினி கிடந்தாவது தாயின் குடல் கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் ஆதவனுக்குள்ள அக்கறை எல்லாப் பிள்ளைகளுக்கும் அமையுமென்று கூறிவிட முடியாது. 

இனாமாக ஒரு வாழைப் பழம் கிடைத்தால்கூட அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ‘அம்மா! இன்று ஒரு சீப்பு வாழைப் பழம் கிடைத்தது. நான் எல்லாவற்றையும் தின்று விட்டு உனக்கு ஒன்றே ஒன்று கொண்டு வந்தேன். இந்தா, சாப்பிடு!” என்று தாயிடம் கொடுப்பான். 

“அதையேண்டா கண்ணு கொண்டு வந்தாய்? அதையும் சாப்பிடு!” என்று தாய் அன்பு பொழியும்; இருவரிடையே கண்ணீர் வழியும். இது நாள்தவறாது அந்த வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி! மகனுக்குத் தெரியாமல் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி அந்தக் கிழவி இரு நூறு ரூபாய் வரையில் மிச்சப்படுத்தி அடுக்குப் பானைக்குள் மூட்டை கட்டிப் போட்டிருந்தாள். 

ஒருநாள் தாயார் மகனைக் கூப்பிட்டு, “தம்பீ! உனக்கும் வயதாகிவிட்டது. நானும் போய்ச் சேரவேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டேன். என் கண் இருக்கும்போதே உன் கையால் ஒருத்திக்குத் தாலி கட்டிப் பார்க்க வேண்டுமென்று துடிக்குதடா நெஞ்சம்.” என்று தன் தணியாத ஆசையைத் தழுதழுத்த குரலில் வெளியிட்டாள். 

ஆதவன், தலையை நாணிக் கோணியவாறு திருப்பிக் கொண்டான். 

திருமணமென்றதும் எந்தப் பிள்ளைக்குத்தான் வெட்கம் வராது? எல்லாருமே “ஆகா! திருமணமா? இதோ, நான் தயார்!” என்று போர்ப்பரணி பாடிவிடுவார்களா என்ன? முதலில் “அதெல்லாம் வேண்டாம்!” என்று பிகு பண்ணுவார்கள். பிறகு “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கோபித்துக் காட்டுவார்கள். பிறகு வீட்டார் ஒரு மாதம் கல்யாணப் பேச்சே எடுக்காமலிருந்தால், “என்ன; இவர்கள் ருசி காட்டிவிட்டுப் பேசாமல் அவர்கள் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களே…….” என்று மனதுக்குள் பொறுமிக் கொண்டிருப்பார்கள். 

வெட்கத்தை அதிக நேரம் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கவோ – அல்லது பிகு செய்துகொண்டு முறுக்கிக் கொண்டு ஓடவோ ஆதவனைச் சுற்றி யாருமில்லை. மாமனோ, மச்சானோ, அண்ணனோ, தம்பியோ யாருமில்லை. ஒரே ஒரு தருநிழல், – அது அவன் தாயின் அன்பு நிழல். அதுவும் எந்த நேரத்தில் பட்டுப் போய்விடுமோ என்ற நிலையில் உள்ள மரத்தின் நிழல். ஒரு நாள் வெட்கம் – அடுத்த நாள் துக்கம் மறுநாள் சிந்தனையென்ற அளவுக்குத் தாயார் கிளப்பிய திருமணப் பேச்சு வளர்ச்சி யடைந்தது. 

இப்போதெல்லாம் ஆதவன், ஸ்டுடியோவில் பரண்மீது அமர்ந்திருந்தாலும், குடிசையில் மல்லாந்து படுத்துக் கொண்டு கூரையின் ஓட்டைகளை எண்ணிக் கொண்டிருந்தாலும் வேறு நினைவுகள் அவனைக் குடைவதில்லை. தாயார் தோற்றுவித்த திருமணப் பேச்சின் வசீகரத் தோற்றமே அவன் வாலிப உள்ளத்தைத் தொட்டுத் தடவி அவனை இன்பப் பஞ்சணையில் கிடத்தி அழகு பார்த்தது. 

எத்தனையோ கனவுகள்…. அவன் நினைவு கடந்த காலத்தை நோக்கி – வேகமாக வழுக்கிக் கொண்டு சென்றது…

அவன் கிராமத்திலிருந்து பட்டிணத்துக்குப் புறப்படும் போது அவன் விட்டுப் பிரிந்த ஆனந்தி அவன் மனக்கண் எதிரே வந்து நின்றாள். அப்போது அவளுக்குப் பதினோரு வயது, கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஆதவனும் ஆனந்தியும் யாராலும் பிரிக்க முடியாத ஜோடி ! படிக்கும்போதும் விளையாடும்போதும் அவர்கள் இணைந்தே நின்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் சொந்தக்காரவீட்டுப் பிள்ளைகள் அல்ல. தூரத்து உறவு என்று இரு வீட்டாரும் சுற்றிவளைத்து முடிச்சுப்போட முயற்சியெடுத்துப் பார்க்கலாமே தவிர, வேறு எந்தப் பிணைப்பும் இரு குடும்பத்துக்கும் இல்லை. ஆதவனும் ஆனந்தியும் சேர்ந்து விளையாடுவது, படிப்பது, நடமாடுவது அந்தத் தெருவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனந்தியொன்றும் வசதி படைத்த வீட்டுப் பெண் இல்லை. அவளும் ஏழைக்குடும்பத்துச் சிறுமிதான். அந்த இளம் உள்ளங்கள் எந்தவிதக் களங்கமுமின்றி அன்பால் கட்டுப்பட்டு ஓடியாடியதைப் பொறாமை இருதயங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 

கலகம் ஆரம்பமாயிற்று. ஆனந்தியும் ஆதவனும் ஒரு நாள் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனந்தியின் தகப்பனார் பிரவேசித்தார். அவள் முதுகில் நாலு கொடுத்தார். பரபரவென வீட்டுக்கு இழுத்துச் சென்றார். போகும் போது அவர் ஆதவனை பார்த்து முறைத்த முறைப்பு அவனை அப்படியே கதிகலங்க வைத்து விட்டது. 

அதற்குப் பிறகு அவன் அவளைப் பார்க்க முயற்சியெடுத்துக் கொள்ளவில்லை. பள்ளிக்கூடத்தில் இருவரும் சந்திப்பார்கள். ஆனால் பேசுவது கிடையாது. கண்கள் பேச முயல்வதற்குள் கண்ணீர் வந்து முட்டுக்கட்டை போட்டுவிடும். 

இப்படி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிந்தன. திடீரென ஆனந்தி பள்ளிக்கூடம் வருவதும் தடைப்பட்டது. காரணம் அறிய ஆதவன் துடித்தான். “அவள் பருவமடைந்து விட்டாள். அதனால் பெற்றோர் பள்ளிக்கூடத்தை நிறுத்திவிட்டார்கள்!” என்று தெருவிலே பேசிக்கொண்டது அவன் காதிலே விழுந்தது. அந்தச் செய்திகேட்டு அவன் உள்ளத்தில் இனமறியாத ஒரு பூரிப்பு எழுந்தது. ஏன் என்றே அவனுக்குப் புரிய வில்லை. அரும்பாயிருந்த கொடி மலர்ந்து காட்சி தருகிறதாம்; அவன் கேள்விப்படுகிறான். அவளோடு ஆடி யோடும்போது, படிக்கும் போது, பட்டம் விடும்போது ஏற்பட்டிராத ஒருவிதப் புது இன்ப நினைவு இப்போது அவனுக்கு எப்படி ஏற்பட்டது ? அவனுக்கே விளங்க வில்லை. பள்ளித் தோழி – விளையாட்டு ஜோடி – இப்போது அவள் வாழ்க்கை ஜோடியாவதற்குத் தயாராகும் பருவம் துவங்கி விட்டது. ஆம் ; மலர ஆரம்பித்து விட்டாள். 

குடிசையிலமர்ந்து பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த ஆதவனின் கண்களில் புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி, அவன் ஸ்டுடியோவில் போடும் ஆயிரம் விளக்கு ஒளிகளையும் மிஞ்சக் கூடியது. கிராமத்தில் மலர்ந்திருக்கும் கொடியைக் கொண்டுவந்து பட்டிணத்தில் தன் குடிசைக்குள் படரவிட வேண்டுமென்ற ஆசை யெழுந்தது. அம்மாவிடம் தன்கருத்தை வெளியிட்டான். தாயும் சந்தோஷத்துடன் சம்மதம் தந்தாள். ஓடினான் கிராமத்தை நோக்கி. அந்தச் சிற்றூரே அவனுக்குப் பாலைவனமாகத் தோன்றியது. திடீரென வீசிய சூறாவளியில் எல்லா வீடுகளும் அழிந்து போய்விட்டன என்று அவனிடத்தில் யாரோ கூறுவதுபோல் இருந்தது. ஆனால் கிராமம் அப்படியேதான் இருந்தது. எதுவும் அழிய வில்லை. எல்லா வீடுகளும் முன்பு இருந்த இடத்தில்தான் இருந்தன. ஆனால் அவனுக்கு எல்லாமே பாழாகத்தான் தோற்றமளித்தன. காரணம்; அவன் தேடிச் சென்ற ஆனந்தி அங்கே இல்லை! அந்த வீட்டார் ஊரை விட்டுக் கிளம்பி ஒரு வருடமாகிறது என்ற செய்திதான் அவன் காதில் எட்டியது. என்ன ஆனார்கள், எங்கே போனார்கள் – எதுவுமே தெரியவில்லை அவனுக்கு! 

நாடித் துடிப்புகள் அனைத்தும் அடங்கியவனாய் பட்டிணத்துக்குத் திரும்பினான். மகனின் மனத்தை அமைதிப்படுத்தும் வேலையில் தாய் ஈடுபட்டாள். திருமண ஏற்பாடுகளை ஒத்தி வைத்து விட்டு முதலில் அவனைத் தேற்றுவதில் பெருங்கவலை யெடுத்துக் கொண்டாள் அந்த ஏழைத் தாய். 

அன்று, அவிட்டம் ஸ்டுடியோ புது எழிலுடன் விளங்கியது. ஸ்டுடியோ முதலாளி புதிய படம் ஒன்றுக்குப் பூஜை போடுகிறார் என்பதே அந்த எழிலுக்குக் காரணம். 

சினிமாத் துறைப் பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதிய “மலர்ந்தது” என்ற கதையைப் படமாக்கத் திட்டமிட்டு அதற்கான துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். புதிய நடிகர் ஒருவரும், புதிய நடிகை ஒருத்தியும் அந்தப்படத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்று பத்திரிகைகள் விளம்பரப்படுத்தின. 

“மலர்ந்தது” கதையின் முக்கிய காட்சி யொன்றை முதல் நாளே படமாக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பிட்டபடி பூஜைகள் முடிவுற்று, படமெடுக்கும் இடத்துக்கு அனைவரும் வந்து குழுமினார்கள். ஆதவனும் தன்னுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்து, கிராமத்தில் சிந்தனையை மேயவிட்டவனாக அலுவலைக் கவனித்துக் கொண்டிருந்தான். 

புதிய நடிகர் அரங்கத்திற்குள் நுழைந்தார். ஆள் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் நல்ல எதிர் காலத்துக்கு உரியவராகவும் அந்த நடிகர் காட்சி தந்தார். 

ஆதவனுக்கு அருகேயிருந்த இன்னொரு லைட்பாய் “அண்ணே! இன்னைக்கு புது நடிகர் மட்டுமல்ல; புது நடிகையும் வரப் போகிறாள்!” என்று உற்சாகத்துடன் கூறினான். 

அவன் வாய் மூடுவதற்குள் அந்த நடிகையும் வந்துவிட்டாள் அரங்கத்திற்குள்ளே! அவள் பெயர் ஆஷா! 

அவளைக் கண்டதும் ஆதவனுக்குக் கண் இருட்டியது. உடல் வெடவெடவென ஆடியது. வந்தவள் அந்த ஸ்டுடியோவுக்குப் புது நடிகை – அவனுக்குப் பழைய ஆனந்திதான்! மூச்சு நின்றுவிடும்போல் இருந்தது. “ஒரு வேளை தன் ஆனந்தியைப் போல் உருவம் படைத்தவளா?” என்ற சந்தேகம் ஒரு கணம் எழுந்து உள்ளத்துக்குள் கூவியது. 

அதற்குள் அந்தக் கதாநாயகன் பேச ஆரம்பித்தான். ஆம்; காதல் வசனம்! 

“என்னுயிரே! அன்புத் தங்கமே! நிறைவேற முடியுமா என்று பலரும் சந்தேகித்த நமது காதல் நிறைவேறிவிட்டது! இன்று நமக்குப் புது வாழ்வு மலர்ந்தது!” 

அந்த வசனத்தை அவன் சொல்லி முடித்து ஒத்திகை பார்த்ததும் “டேக்” எடுப்பதற்கு டைரக்டர் தயாரானார். 

மேலே, ஆதவனிடம், அவன் சகத் தொழிலாளி பேசினான்: “அண்ணே! இந்த நடிகை ஆஷா – எங்கேயோ கிராமத்திலே கிடந்தவளாம். இந்தப் புது நடிகன் அவளைக் கல்யாணமும் செய்துகிட்டு நடிப்பதற்கும் அழைச்சிகிட்டு வந்துட்டான். ஆஷாவாம் ஆஷா! அழகான பேரு ஆனந்தின்னு இருந்துச்சாம்; அதை மாத்திட்டாரு நம்ம படமுதலாளி!” என்று அவன் கூறியதுதான் தாமதம்; ஆதவன் போட்ட கூச்சல் அங்கிருந்த எல்லோரையும் நடுங்கச் செய்தது. 

மறுகணம்…

“ஐயோ!” என்ற கதறலைத் தொடர்ந்து, நாற்பதடி உயரப் பரணிலிருந்து ஆதவன் கீழே விழுந்தான். 

காதல் காட்சிக்குத் தங்களைத் தயார் செய்துகொண்டிருந்த அந்த நடிகத் தம்பதிகள் அலறி ஓடினார்கள். கடமையில் கவனம் செலுத்தியவர்கள் என்ன வென்று காரணம் கேட்கவில்லை; செம்மண் பூசப்பட்டிருந்த அந்த அரங்கத்துத் தரையுடன் போட்டியிட்டுப் பெருகிய இரத்தவெள்ளம் நடந்ததைத் தானாகவே அறிவித்துவிட்டது! 

குலைந்துபோன அந்த உடல் கடைசி முறையாக நெளிந்த போது, அவனது நசுங்கிய உதடுகள் “ஆன….தி” என்று முணுமுணுத்தன. மற்றவர் செவிகளுக்கு விழாத அந்தக் குரல் காற்றோடு கலந்துவிட்டது! 

ஆஷாவும் அவனருகே சென்று பார்த்தாள். அவளால் பாவம் அவனை அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. தலை முழுசாக இருந்தால்தானே அவன் யாரென்று அவளுக்குத் தெரியும் ? 

துவக்க நாளிலேயே அபசகுனம் ஏற்பட்டது எனக் கூறி “மலர்ந்தது” படத்தை நிறுத்தி விட்டார், அவிட்டம் ஸ்டுடியோ முதலாளி. 

மறுநாள்…

செய்திப் பத்திரிகையைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்த திரையுலகப் புதுநடிகை ஆஷாவின் காதலன், “ஆஷா! நேற்று இறந்துபோன லைட்பாயைப்பற்றி பேப்பரில் செய்தி வந்திருக்கிறதே; படித்தாயா?” என்று கேட்டான். 

“இல்லையே! நாம் நடிக்கப் போகிற புதிய படத்தின் விளம்பரத்தை மட்டும்தான் பார்த்தேன்!” என்றாள் ஆஷா! 

“அவன் பெயர் ஆதவனாம்!” 

“யாராக இருந்தால் என்ன? நம்முடைய படம் ஒன்றுக்கு அஸ்தமனம்தான் ஏற்பட்டது! சனியன்…. சாவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை; முதல் ‘காண்ட்ராக்’டையே கெடுத்துத் தொலைத்துவிட்டானே!” 

ஆஷாவின் இந்தக் கண்டனக் குரல் ஓயுமுன்பே வாசலில் ஏதோ சப்தம் கேட்டது. எழுந்து சென்று பார்த்தார்கள் இருவரும். ஆதவன் இறுதி யாத்திரை ன் 

யாத்திரை செய்து கொண்டிருந்தான். அதற்குப் பின்னணியாக அவனைப் பெற்றவளின் சோகப் புலம்பல் எழும்பிக் கொண்டிருந்தது! 

ஆமாம்; திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைச் செலவிட்டு ஆதவனின் இறுதிச் சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறாள், அந்த ஏழைக்கிழவி.

– 16 கதையினிலே, முதற் பதிப்பு: டிசம்பர் 1995, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *