மலம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 893
அம்மனை வழிபட அம்மா அழைத்தாள். செவ்வாய் தோறும் ஒன்பது வாரங்கள் விளக்கேற்றினால் அம்மன் அருள் பாலிப்பாள். கல்லூரி முடிந்து ஒரு வருடங்கள் ஓடிவிட்டது. அவன் கடைக்குட்டி. அவனுக்கு முன் பிறந்தவர்கள் இரண்டு அக்காக்கள். சென்னையில் கிடைத்த வேலைகளை மறுதலித்துவிட்டவன், இப்போது கடுமையான முயற்சிக்குப் பின் மீண்டும் சென்னை புறப்பட தயாரானான். கணவனை இழந்தவள் அத்தனை தூரம் அவனை அனுப்ப அம்மாவுக்கு மனமில்லை. அக்காக்கள் அம்மாவுக்கு தைரியம் கொடுத்தார்கள். வேறுவேறு ஊர்களில் வாழ்க்கைப்பட்டு போனவர்கள் அவர்கள். அவனுக்கு ஒர் அச்சம் இருந்தது. அம்மாவின் தனிமை பற்றி.
“சார், தாம்பரம் வந்தால் சொல்லுங்க”-வழிநடத்துனரிடம் ஞாகப்படுத்திக் கொண்டான். புறவழிச் சாலையின் உணவு விடுதியில் நின்று பின் வேகமெடுத்தது பேருந்து. அதிகாலை தூக்கம் அழுந்த சற்று நேரம் தூங்கிப் போனான். பேருந்து தாம்பரத்தை தாண்டியதும் திடுக்கென விழித்துக் கொண்டான். சென்னைப் பட்டணத்தின் துர் நாற்றம்தான் அவனை எழுப்பிவிட்டது. தினசரி சென்னைக்கு அதிகம் பேர் வருவது போல் குப்பைகளும் வந்து விழுகிறது. எடுக்க எடுக்க குறைவதில்லை. ஒரு நாள் முழுவதும் குழந்தையை கவனிக்கவில்லையானால் அது பீயும் மூத்திரமுமாக ஆகிவிடுவது போல், சிங்காரச் சென்னையும் அப்படித்தான். ராஜ பாட்டைகளின் வீதியும் துர் நாற்றத்தில் வீசுகிறது.
வடபழனி வந்ததும் இறங்கிக் கொண்டான். அவன் வேலையில் சேரப் போகும் நிறுவனம் அங்குதான் உள்ளது. ஒரு ஆட்டோகாரரிடம் முகவரி பற்றி விசாரித்த போது, தானே சென்று விட்டுவிடுவதாகவும் வெறும் ஐம்பது ரூபாய் தந்தால் போதும் என்று சொன்னவுடன் ஏறிக் கொண்டான். ஆட்டோ நேராக கோயம்பேடு செல்லும் திசையில் சென்று மேம்பாலத்தை கடந்தவுடன் ஒரு ‘யூ’ திருப்பம் திரும்பி மீண்டும் வந்த திசைக்கே சென்று மேம்பாலத்தின் அதி நீளத்தை கடந்தவுடன் வலது புறமாக திரும்பி கே.கே.நகருக்குள் புகுந்து வடபழனி வந்து அவன் நிறுவனத்தின் முன் வந்து நின்றது. குழம்பிப் போனான். நடந்து வந்திருந்தால் ஒரு தெருவை தாண்டினால் போதும் அங்குதான் அவனுடைய நிறுவனம். என்ன செய்வது ஆட்டோகாரரும் பிழைக்க வேண்டுமே. இப்படி ஒரு ஏமாற்று வேலை நடந்தது என்று பின்புதான் அறிந்து கொண்டான். அந்த நிறுவனத்தில் அவனுக்கு பணி ஊர் ஊராக சென்று வரும் விற்பனை பிரதிநிதி வேலைதான். அவனுக்கு ஒரு வாகனமும் தங்கிக் கொள்ள அலுவலகத்தின் மேல் மாடியில் அறையும் கொடுத்திருந்தார்கள். மூன்று நேர உணவும் தெருக் கடைகளில் எடுத்துக் கொண்டான். தன் முதல் மாத சம்பளத்திற்குப் பின் தனிவீடு எடுத்துவிடுவது என்ற நோக்கில் கே.கே.நகர் சாலைகளை சல்லடை போட்டு தேடினான். கிடைத்தது. முனுசாமி சாலையில் ஒரு பத்துக்கு பத்து அளவு கொண்ட வீடு. ஆனால், அது மூன்றாவது மாடியில் உள்ள சீட்டு போட்ட வீடுதான். காற்றுக்கு குறையில்லை. கதவை மூடினால் தானாகவே திறந்துவிடும். தாழ்பாள் போட்டாலும் கதவை யாரோ தட்டுவது போல் சப்தம் வரும். ஒரு வேளை ஊர் ஆலமரத்து சங்கிலி கருப்பும் தன்னுடன் வந்துவிட்டதோ வேலை தேடி…! பின்புதான் தெரிந்து கொண்டான் இது காற்றின் வேலையென்று.
எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர்தான் அந்த வீட்டின் சொந்தக்காரர். மிகவும் கண்டிப்பானவர்.’நடைபாதை நடப்பதற்கே’-எனும் அறிவிப்பு பலகை சாலைகளில் வைக்கப்பட்டு உள்ளன. என்னதான் பெரிய வீடாக இருந்தாலும் வாகனத்தை மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில்தான் விடவேண்டும். அந்த வீட்டு பால்கனியில்தான் ‘போன்சாய்’-மரங்கள் வளர்த்துக் கொண்டார்கள். அது என்ன ‘போன்சாய்’. நன்றாக வளர வேண்டிய மரத்தின் கிளைகளை வெட்டி, அடி பெருக்க மாற்றுத் திறனாளியாக மாற்றிவிடும் கலைதான் அது.
கே.கே.நகர் என்பதால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லைதான். இரண்டு நாளுக்கு ஒரு முறை மாநகராட்சி குழாயில் தண்ணீர் வருகிறது. நிலத்தடி நீரும் மேல் தொட்டியில் நிரம்பிவிடுகிறது. ஆனாலும் ஒரு காலத்தில் அரிசிக்கும், தங்கத்திற்கும் கட்டுப்பாடு இருந்தது போல் தண்ணீர் சிக்கனம் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை செய்வார் வீட்டிற்கு சொந்தக்காரர். அரசு சொல்லும் கட்டணத்தைவிட அதிக கட்டணம் தந்துதான் மின்சாரம் பயன்படுத்த வேண்டும்.
கிராமத்தின் நிதானங்களையும் மென்மையையும் பழகியிருந்தவனுக்கு நகரத்தின் அவசரமும் கடினமும் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. பரபரப்பான சாலையில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கிராமத்தின் ஆற்று மணல்கள் கால்கள் பட்டு சீரழிகிறது.
அந்த குடியிருப்பில் கீழ் தளத்தில் தாத்தாவும் பாட்டியும் பத்து வருடங்களாக வாடகைதாரர்களாக இருக்கிறார்கள். அவன் பணியிலிருந்து தாமதித்து வரும் போதெல்லாம் பாட்டி இரவுணவாக தோசை வார்த்து தருவாள். தபால் மாஸ்டராக பணி செய்து ஓய்வு பெற்ற தாத்தாவுக்கு உடல் நலம் குன்றி மருத்துவ மனையிலே உயிர் பிரிந்ததும் அவர் பூத உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார் வீட்டுக்காரர். அக்கம்பக்கம் உள்ளவர்கள் கூட சாவு வீடு என்ற பிரக்ஞை இல்லாமல் அவரவர் பணியை செய்ய வழக்கம் போல் போய்விடுகிறார்கள். பட்டணத்திலே யார் வேண்டுமானாலும் வந்து பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், அதன் குரூரத்தை சகித்துக் கொள்ள மனம் பழகிக் கொள்ள வேண்டும்.
ஐப்பசியில் நல்ல மழைக் காலத்தில் வந்தவன் ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. வெயிலும் வறட்சியும் வெளுத்து வாங்குகிறது. தெருக் கடைகளில் உண்பது ஒருநாள் போல் ஒரு நாள் இராது. மூன்று நாட்கள் அவன் அறையிலே தங்கிவிட்டான். வேலைக்கு செல்லவில்லை. அதற்கு யார் அப்படி பெயர் வைத்தார்களோ தெரியவில்லை-‘லூஸ்மோசன்’. அந்த மூன்று நாட்களில் குடிக்க நீரும், கழுவ நீரும் வழக்கத்தைவிட அதிகமாகவே தேவைப்பட்டது. தினசரி தண்ணீரின் பயன்பாட்டை அளவிடும் ஓனர், ஒரு குற்றவாளியை கண்டு பிடித்துவிட்டது போல் அவன் வாசல் முன் வந்து இரைந்தார். அவன் உடல் நலத்தைப் பற்றி சிறிதும் விசாரிக்காமல் உடனே வீட்டை காலி செய்துவிடும்படி உத்தரவு போட்டார். ஏற்கனவே உடல் அளவில் துவண்டு போய் இருந்த அவனுக்கு மனதும் நொறுங்கிப் போனது. ‘என்ன ஊர் இது பட்டணத்தைவிட கிராமமே மேல்’-என்று நொந்து கொண்டான்.
அம்மாவிடமிருந்து அழைப்பு எதுவும் இல்லை. அவன் அழைத்தாலும் அவள் கைபேசியில் சில்லரை இல்லை. ஊருக்கு செல்வது என்ற முடிவுடன் மறுநாள் மாலை தனது பைகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்காரர் கதவை தட்டினான். புரிந்து கொண்டார். வாடகையை கழித்துவிட்டு மீதியை தந்துவிடும்படி கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அடுத்து வரும் நபரிடம் வாங்கி உனக்கு அனுப்புகிறேன் முகவரி தந்து செல் என்று சொன்னதும் அவனுக்கு பாதி உயிர் போய்விட்டது. ‘ஊரே தேவலாம். சென்னை ரொம்ப மோசம்’-என்று மருகிக் கொண்டே அவரிடம் விடை பெற்றான்.
மறுநாள் காலை அவன் ஊரை கடக்கும் முன் பேருந்துகள் எல்லாம் இரு பக்கமும் நின்றிருந்தது. போராட்டக்காரர்கள் சப்தமாக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸைவிட்டு இறங்கி நடந்தான். சிறிது தூர நடை பயணத்திற்கு பிறகு அவன் தெருவுக்கு பிரியும் முடுக்கில் இருந்த ஊர் பொது மேல் நிலை நீர் தேக்க தொட்டி முழுவதுமாக உடைத்துப் போடப்பட்டிருந்தது. அது மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படிதான் நடந்தது என்று தெரிந்து கொண்ட பின்தான் பதறினான். அவன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அக்காவிடம், “அம்மாவுக்கு என்ன ஆச்சு!?”-என்று கேட்டான். “அம்மாவுக்கு மட்டும்மா. ஊரில் இருக்கிற எல்லோருக்கும வாந்தி பேதி…ஹாஸ்பிடலுல இருக்காக!”-என்றாள்.
“ஏன்?”- என்று கேட்ட தம்பியிடம்,
“அத எப்படி என் வாயால சொல்ல..!”-என்றாள் அக்கா.
வேலையின் நிமித்தமாக பட்டணத்தின் பரபரப்பில் மூழ்கி இருந்தவனுக்கு தினசரி செய்திகள் அவனை பாதித்திருக்கவில்லை. குடிநீரில் மலமா? தன் கிராமத்திலா!
“கிராமத்தைவிட பட்டணமே மேல்”-என்று அனிச்சையாக வந்துவிட்ட வார்த்தை எனினும் மனம் நோகி சொல்லும் போது துக்கம் தொண்டையை அடைத்தது!
– ஜுலை 2023, கல்வெட்டு பேசுகிறது இதழில் பிரசுரமானது.