மற்றவர்களின் ஞானம் உங்களுக்கு ஒளி தராது!
புத்தர் ஒரு கிராமத்திற்கு வந்து தங்கியிருந்தார். கிராமத்து மக்கள் அவரது உபதேசங்களைக் கேட்பதோடு, தங்களது பிரச்சனைகளைக் கூறி தீர்வு காண்பதும் வழக்கம். அதில் ஒரு சிலர் குழுவாக வந்து அவரிடம் கூறிய பிரச்சனை, வழக்கத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தது.

அவர்கள் பார்வை தெரியாத தமது நண்பரைப் பற்றிக் கூறினர். அந்த நபர் அவர்களிடம் ஒளி என்பது கிடையாது என வாதிட்டுக்கொண்டிருந்தார்.
“ஒளி என நீங்கள் சொல்வது வெறும் கற்பனை. அது உண்மை அல்ல. அது உண்மையாக இருந்தால், நீங்கள் அதை எனக்கு நிரூபணம் செய்யுங்கள். நான் அதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்துகொள்ள விரும்புகிறேன். அப்படி ஒளியை என்னால் தொட்டு உணர முடியுமானால்தான், ஒளி என்கிற ஒன்று இருப்பதை நான் ஒத்துக் கொள்வேன்” என அவர் சொன்னார்.
“ஒளியைத் தொட்டு உணர முடியாது. அதைக் கண்ணால் பார்த்துத்தான் உணர்ந்துகொள்ள முடியும்!” என்று மற்றவர்கள் சொல்வதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை.
தனக்கு பார்வை இல்லாவிட்டாலும், பார்வை உள்ள மற்றவர்கள் சொல்வதை அவர் நம்புவதற்குத் தயாராக இல்லை. எதையும் தன்னுடைய அனுபவத்தின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
“ஒளியைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? அதற்கு ஏதேனும் ஒலி இருக்கும் அல்லவா! அப்படி இருந்தால் அதை ஒலிக்கச் செய்யுங்கள். அதன் மூலம் ஒளி இருக்கிறது என்பதை நான் அறிந்துகொள்வேன். அல்லது, ஒளிக்கு ஏதேனும் வாசனை இருந்தால், அதை நுகர்ந்து, ஒளி இருப்பதை உணர்ந்து கொள்வேன். அல்லது, ஒளிக்கு ஏதேனும் சுவை இருக்குமானால் அதைக் கொடுங்கள்; சுவைத்துப் பார்த்து ஒளி இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அவர் வாதிட்டார்.
அவரது வாதங்களுக்கு பதில் சொல்லக் கூடிய விதமாக அந்த கிராமத்திலோ, சுற்று வட்டாரத்திலோ எவரும் இல்லை. எனவேதான் ஞானியான புத்தரிடம் அவர்கள் இந்தப் பிரச்சனையைக் கொண்டுவரப்பட்டிருந்தது.
“நீங்கள்தான் அவருக்கு ஒளி இருப்பதைப் புரிய வைக்க வேண்டும்!” என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
புத்தர் மறுத்தார். “இல்லை, நான் அந்த நபருடன் வாதிட மாட்டேன். வாதத்தின் மூலம் ஒளி இருப்பதை நிரூபிக்க இயலாது. அவருக்கு நீங்கள் செய்யவேண்டியது சிகிச்சைதானே தவிர, வாதமல்ல. எனவே, நீங்கள் அவரை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவருக்குப் பார்வை கிடைக்குமானால் அப்போது ஒளி இருப்பதை உணர்ந்துகொள்வார்.”
வந்திருந்த நபர்களும் திரும்பிச் சென்று, அவ்வாறே அந்த நபரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சையால் அவருக்குப் பார்வை கிடைத்தது. அதன் பிறகு அவர் ஒளி இருப்பதை உணர்ந்துகொண்டார.
அவர் தனது நண்பர்களோடு புத்தரிடம் வந்து வணங்கி, “எனக்குப் பார்வை கிடைக்க நீங்கள்தான் காரணம். முன்பு நான் வாதிட்டது மாபெரும் தவறு” என்று கூறி, மன்னிப்புக் கேட்டார்.
புத்தர் அருள் நிறைந்த பார்வையை அவர் மீது செலுத்தி, இன்முகத்தோடு சொன்னார்: “உனது அந்த வாதம் தவறானது என்றாலும், நீ அவர்களிடம் வாதிட்டதன் மூலமாகவே உனக்கு நன்மை விளைந்திருக்கிறது. மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக, ஒளி இருப்பதை நீ நம்பி இருந்தால், காரியம் அதோடு முடிந்திருக்கும். உனக்கு பார்வை கிடைத்திருக்காது. மற்றவர்கள் சொல்வதை நம்பாமல், அதை உனது சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நீ விரும்பியதால்தான், இப்போது உனக்குப் பார்வை கிடைத்திருக்கிறது.”
இதை மிக ஆழ்ந்து புரிந்து, உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக, வெற்று நம்பிக்கை கூடாது; அனுபவபூர்வமான அறிதலும், உணர்தலுமே தேவை என்பதை இக் கதை வலியுறுத்துகிறது. மகான்களும், ஞானிகளும் சொன்னதாகவே இருந்தாலும் ஏன், எப்படி, எதற்கு என்கிற கேள்விகளை எழுப்பி, விடை அறிய வேண்டும். எப்பேர்ப்பட்ட ஞான நூல்களாக இருந்தாலும், உங்களின் வேதங்களாகவே இருந்தாலும், அதில் சொல்லப்படுவது சரியா – தவறா, உண்மையா – கட்டுக்கதையா என்கிற ஆராய்ச்சியும் தேவை.
மற்றவர்களின் ஞானத்தால் யாருக்கும் ஞானம் கிடைப்பது இல்லை. எத்தனை ஞான நூல்களைக் கற்றாலும் சரி; மகா ஞானிகள் பலரிடம் சீடராக இருந்து கற்றுக்கொண்டாலும் சரி; ஒருவருக்கு சுயமான தேடலும், அனுபவமும் இல்லாவிட்டால், ஞானம் அடைய வாய்க்காது. எனவேதான், மெய்ஞான மார்க்கங்கள் யாவும் ஞானத் தேடலில் ஒருவரின் சுய அனுபவத்தை வலியுறுத்துகின்றன.
ஞான நூல்களும், வேதங்களும், குருநாதர்களும் வழிகாட்டியாக இருக்க முடியுமே தவிர, யாருக்கும் ஞானத்தை வழங்கவோ, மடைமாற்றிவிடவோ இயலாது. அது ஒவ்வொருவரின் சுய தேடலிலும், முயற்சியிலும், அனுபவத்திலுமே அடையப்படக் கூடியது.