மயான நகரம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,156
மாநகரம் முழுவதும் மயான அமைதி நிலவியது.
கடைத் தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. சந்தை கூடுமிடங்களை வெற்றிடம் நிரப்பியிருந்தது. ஊரில் மக்கள் நடமாட்டம் மிக மிகக் குறைவாக இருந்தது. மிக அரிதாக வெளியில் தலைகாட்டிய ஒரு சிலரும் தலை கவிழ்ந்தபடியே நடந்து சென்றார்கள். வாகனங்கள் ஓடவில்லை. ஓடிய வாகனங்களும் ஓசை எழுப்பவில்லை. ஓட்டிச் செல்லவோ விரட்டி அடிக்கவோ ஆளில்லாத கால்நடைகள் சாவகாசமாக மேய்ந்துகொண்டிருந்தன. கோவில்களில் மணியோசை கேட்கவில்லை. மாநகரின் வித்வான்கள் அனைவரும் காலையிலும் மாலையிலும் தத்தமது இல்லங்களுக்கு அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றிவைத்து ராம ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள். அழும் குழந்தைகள் அதட்ட ஆளில்லாததால் விரைவில் அழுகையை முடித்துக்கொண்டன. அரசுப் பணிகளும் தனியார் பணிகளும் ஸ்தம்பித்துப் போய் ஒரு வாரம் ஆகிறது. துக்கம் தாளாமல் யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் எனக் கோரும் அரண்மனையின் அறிவிப்புகள் நாற்சந்திகளில் எழுதப்பட்டிருந்தன. அந்த அறிவிப்புக்குச் செவிசாய்க்காமல் தினமும் தற்கொலை செய்துகொண்டு மடியும் விசுவாசிகளின் பெயர் முதலான விவரங்களும் அவர்களது குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் பற்றிய தகவல்களும் பக்கத்திலேயே எழுதப்பட்டு வந்தன. பள்ளிக்கூடங்களும் மதுபானக் கூடங்களும் மூடப்பட்டுவிட்டன. இரங்கல் செய்திகளைத் தாங்கிய மடல்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. மாநகரின் அனைத்து வீடுகளின் வாசல்களிலும் மோட்ச தீபமும் ஊதுவத்தியும் ஏற்றப்பட்டிருந்தன. ஊர் முழுவதும் ஊதுவத்தி வாசனை நிரம்பியிருந்தது. ஊதுவத்திகளும் மோட்ச தீபங்களும் அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை மக்களே ஏற்றுக்கொண்டார்கள். அணையும் வீடுகளின் கதவைத் தட்டி நினைவுபடுத்தும் பணியை அரசுப் பணியாளர்கள் செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருந்தார்கள். துக்கம், மாநகரம் முழுவதும் பிசிரற்ற ஒழுங்குடன் அனுஷ்டிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
இன்று எட்டாம் நாள். அடுத்த எட்டாம் நாளில் யாவும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம். துக்கம் கழிக்கும் சடங்கு முடிந்த பிறகு, சுவர்க்கம் செல்லும் இளவரசனைப் பற்றிய நினைவுகளிலிருந்து விடுபட்டுத் தத்தமது வேலைகளை மக்கள் கவனிக்கத் தொடங்கிவிடலாம்.
சக்தி என அழைக்கப்படும் மகாராணியின் அருமந்த புத்திரனின் மரணம் தந்த துயரத்தின் நிழல் குடிமக்கள் அனைவரது வீடுகளிலும் படர்ந்திருந்தது. அரசு ஆணைகளும் சக்தி உருவாக்கி நிலைபெற வைத்திருந்த சம்பிரதாயங்களும் குடிமக்களின் குருதி நாளங்களில் செலுத்தியிருந்த உணர்வுகள் இதைச் சாத்தியமாக்கியிருந்தன. 27 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்புரத்தில் இருந்த ஒரு பேரழகி பட்டத்து ராணியாக முடிசூட்டிக்கொண்ட அரிய நிகழ்வினைப் பற்றி வியந்து பாடாத புலவன் ராஜ்ஜியத்தின் தலைநகராம் இந்த மாநகரில் இல்லை. பட்டத்து யானைமீது ஏறி நகர்வலம் வந்த அந்தப் பேரழகியைப் பார்த்துப் பெருமூச்சு விடாத ஆண்களோ பொறாமைப்படாத பெண்களோ அந்த மாநகரில் இல்லை. கண்களைக் கூசவைக்கும் அந்த அழகு அனைவரையும் வென்றது. எப்படி இவள் அரசியானாள் என்ற கேள்வி அந்த வசீகரத்தில் மறைந்தது. மறையாத சில கேள்விகளை அவளது கிரீடமும் செங்கோலும் வழியனுப்பிவைத்தன. பட்டத்து இளவரசர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிய நம்பகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அழகும் அதிகாரமும் இவ்வளவு இசைவுடன் பொருந்திப்போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த இசைவின் வலிமை மலைகளை விடவும் பெரியது. கடல்களை விடவும் ஆவேசமானது. பூக்களைவிடவும் மென்மையானது. எதிரிகள் நண்பர்களானார்கள். நண்பர்கள் விசுவாசிகளானார்கள். விசுவாசிகள் அடிமைகளானார்கள். அடிமைகளாக மறுத்த விசுவாசிகள் நண்பர்களானார்கள். விசுவாசிகளாக மாறத் தவறிய நண்பர்கள் பகைவர்களானார்கள். அரசியின் பகைவர்கள் மக்களின் பகைவர்களானார்கள். பகைவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிப் போதிய தகவல்கள் இல்லை.
ஆட்சி ஏறிய அடுத்த நொடியிலிருந்து அந்தப் பேரழகியின் மொழியே ஆட்சி மொழியாயிற்று. கல்விக் கூடங்களில் அம்மொழி கற்றுக்கொடுக்கப்பட்டது. விரைவில் கற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றவர்களையும் விரைவில் கற்றுக்கொள்ளத் தூண்டின. கற்றுக்கொள்ளாதவர்களின் நிலையைப் பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை. சலுகைகள் பெற்றவர்கள் மேலதிகச் சலுகைகளை நோக்கி விரையும் விவேகத்தை ஸ்வீகரித்துக் கொண்டிருந்தார்கள். நண்பர்களாக இருப்பதன் அனுகூலங்களை அனுபவித்தவர்கள் அதை இழப்பது பற்றி யோசிக்க இயலாதவர்களானார்கள். இந்த அனுகூலங்களின் பிரதிகூலங்களை எடுத்துச் சொல்ல முயன்ற சில கவிஞர்களின் மொழி அவர்களுக்குப் புரியாமல்போயிற்று.
n
இளவரசன் எப்படி வந்தான் என்று யாருக்கும் தெரியாது. சக்திக்குத் திருமணம் ஆனதாக அரசாங்க மடல்கள் எதுவும் எப்போதும் தெரிவித்ததில்லை. இருபத்தேழு ஆண்டுகள் கழிந்தும் அரசியின் வசீகரம் குறையவில்லை. வயதாக ஆக அழகும் கூடிக்கொண்டேபோகும் விதத்தைப் புலவர்கள் இருபத்தியேழு விதமான பாக்களில் விளக்கினார்கள். முழு நிலவையொத்த அவரது வதனத்தைப் பற்றி எழுதவே ஓர் ஆயுள் போதாது என்ற நிலை இருக்க, அழகுணர்ச்சி வரம்பு மீறி அவரது கொங்கைகளை வர்ணித்து எழுதிய ஒரு கவிஞனை மக்கள் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டதாக அரசாங்க மடல் ஒன்று தெரிவித்தது.
ராணிக்கு நாற்பத்தியேழு வயதானபோது பதினெட்டு வயதில் ஒரு மகன் பிறந்தான். அவனது வருகையை தேசம், குறிப்பாகத் தலைநகரம், ஓராண்டுக் காலம் வரையிலும் கொண்டாடியது. அரசியின் நகர உலாக்கள் அதிகரித்தன. உலாக்களிலும் அரச மடல்களிலும் பொது இடங்களிலும் இளவரசரின் படங்களும் சக்தியின் திருவுருவப் படங்களுக்குக் கீழ் வீற்றிருந்தன. மாநகரின் சுவர்களையும் கோவில் கோபுரங்களையும் அலங்கரித்த இந்தப் படங்கள் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பெற்றன. இளவரசரைப் புகழும் பாடல்கள் நகரமெங்கும் ஒலிக்க ஆரம்பித்தன. மக்கள் தங்களது வருங்கால மன்னர் மீது விசுவாசம் கொள்ளத் தொடங்கினர்.
இளவரசரின் பிறந்த நாள் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்பட்டது. தன் வீட்டுச் சுவரில் இளவரசரின் திருவுருவைப் பதித்துவைத்த ஏழைச் சோதிடர் ஒருவரைத் தலைமை அமைச்சர் அரண்மனைக்கு அழைத்துப் பாராட்டியதை அரசாங்க மடல் ஒன்று தெரிவித்தது. விரைவில் வீடுகள் தோறும் அரசிளங் குமரனின் திருவுருவச் சித்திரங்கள் அலங்கரித்தன. இளவரசரின் பெயரால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இளவரசர் வெற்றி கொண்ட நாடுகளின் பட்டியல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. அரசு ஊழியர்கள் இடப்புற மார்பில் சக்தியின் திருவுருவையும் வலப்புற மார்பில் இளவரசரின் திருவுருவையும் பறித்துக்கொண்டார்கள்.
n
அழகும் அதிகாரமும் இணைந்த வசீகரம் தனது நீண்ட கரங்களை மாநகரம் முழுவதிலும் பரப்பி அணைத்துக்கொண்டது. அந்தக் கரங்களின் விரல்களில் விஷம் தோய்ந்த கொடுவாள்களும் அமுதம் தோய்ந்த பூவிதழ்களும் நிரம்பியிருந்தன. எதைத் தேர்ந்துகொள்வது என்பது அவரவர் விருப்பத்துக்கு விடப்பட்டது. இவை இரண்டையும் தவிர வேறு வழியில்லை என்று ஆகிவிட்ட பிறகு எதைத் தேர்வது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படவில்லை. ராணியின் விருப்பமே மாநகரின் நடைமுறையாக மாறியது. அரசியின் மனம், வாக்கு, சிந்தனை ஆகியவற்றை மக்கள் பிரதிபலித்தார்கள். கோவில்களிலும் பஜனை மடங்களிலும் இவையே பாடப்பெற்றன. நாற்சந்திகள், முச்சந்திகளில் அரசியின் திருவுருவம் பொறிக்கப்பட்டது. திருவிழாக்களில் உற்சவ மூர்த்தியின் அலங்காரம் அரசியின் அழகிய தோற்றத்தை ஒத்ததாக விளங்கியது. சக்தியின் சிந்தனை பொதுமைப்படுத்தப்பட்ட பிறகு கேள்விகள் நின்று போயின.
தமது விருப்பங்களின்படி நடந்துகொள்ளத் தலைப்பட்டவர்களுக்குக் கிரகங்களும் ஒத்துழைக்கவில்லை. திடீர் திடீரென்று அவர்கள் வீடுகளில் பாறாங்கற்கள் விழுந்தன. அவர்கள் வயல்கள் தீப்பிடித்து எரிந்தன. நடந்து செல்லும்போது மரக்கிளைகள் ஒடிந்து அவர்கள் தலைகள்மீது விழுந்தன. அவர்கள் குளிக்கச் செல்லும்போது முதலைகள் இழுத்துச் சென்றன. தலைநகரின் ஜனன நேரத்தைத் துல்லியமாகக் கணித்த பட்டத்து ஜோசியர் அரசியின் ஜாதகமும் தலைநகரின் ஜாதகமும் பொருந்திப்போன அதிசயத்தை விளக்கி ஒரு விருத்தம் பாடினார். நாட்டின் தேசிய கீதமாக மாறிய அந்த விருத்தம் இந்த ஜாதகத்தோடு முரண்படும் அபாக்கியசாலிகளின் துர்மரணங்கள் பற்றியும் கோடிகாட்டியது. முரண்படும் ஆத்மாக்கள் குறையத் தொடங்கின.
சக்தியின் ராஜ்ஜியம் தனது எல்லையை விரிவுபடுத்தியபடி இருந்தது. விசுவாசம் மிகுந்த மக்கள் கூட்டமும் போர்ப்படைகளும் மாநகரை அண்டை நாட்டவர்களின் தாக்குதல்களிலிருந்து காத்துவந்தன. அக்கம்பக்கத்தில் இருந்த சிறிய ராஜ்ஜியங்கள் பலத்தினாலும் பேரத்தினாலும் பணியவைக்கப்பட்டன. முரண்டுபிடித்த சிற்றரசர்கள் சக்தி தரிசனத்திற்குப் பிறகு மனம் மாறினார்கள். பெரிய ராஜ்ஜியங்களின் மன்னர்கள் சக்தி ராஜ்ஜியத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டார்கள். அழைப்பை ஏற்றுவந்த மன்னர்கள் சக்தி தேசத்தின் நண்பர்களாகத் திரும்பினார்கள். தொடர்ந்து அவர்களை நண்பர்களாக வைத்திருக்கும் வழிகளைச் சக்தியும் ராஜ குருவும் திட்டமிட்டு நிறைவேற்றினார்கள்.
யவன தேசத்திலிருந்தும் இதர தேசங்களிலிருந்தும் வந்த வாணிகக் கப்பல்கள் துறைமுகத்தை நெருங்கும் முன்னரே பெரும்படையெனத் திரண்ட கடற் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டன. பீதியில் மூழ்கிய பரதேச வியாபாரிகளுக்குக் கடலில் பாகாப்பு அளிக்கும் பொறுப்பைச் சக்தி ராஜ்ஜியம் ஏற்றுக்கொண்ட பிறகு கடற்கொள்ளையர்களின் அபாயம் குறைந்தது. பாகாப்புக்கான வெகுமதிக் கட்டணம் சக்தி ராஜ்ஜியத்தின் கஜானாவை நிரப்பியது. சக்தியின் ஆணைப்படி பிற தேசத்திலிருந்து அழகிகள் விலைக்கு வாங்கப்பட்டு அந்தப்புரத்தில் சேர்க்கப்பட்டார்கள். பெரும் ராஜ்ஜியங்களைக் கட்டி ஆண்டுகொண்டிருந்த சக்கரவர்த்திகளுடன் நட்பு மலரச் செய்யும் பாலமாக இவர்கள் பயன்பட்டதாக அரண்மனையில் வதந்திகள் உலவின. சக்தி ராஜ்ஜியத்தின் விஸ்தரிப்புப் பற்றி அரசவைக் கவிஞரின் சக்தி காவியம் விரிவாகப் பேசுகிறது. மாபெரும் பேரரசுகளில் அந்தந்த அரசுகளுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கான ஊக்கம் சக்தியின் கஜானாவிலிருந்தும் அந்தப்புரங்களிலிருந்தும் கிடைத்துவந்ததைச் சில கவிஞர்கள் பூடகமான கவிமொழியில் பாடியிருக்கிறார்கள்.
n
இளவரசருக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. எல்லாத் தேசத்து மன்னர்களுக்கும் சக்தியின் திருமுகம் அனுப்பப்பட்டது. அந்தந்த நாட்டு இளவரசிகளை அழைத்துக்கொண்டு மன்னர்கள் இம்மாநகரத்திற்கு வருகை புரிய வேண்டும். அன்னையின் வழி காட்டுதலின் பேரில் தனயன் தனக்குப் பிடித்த பெண்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார் என்றது அந்தத் திருமுகம்.
ராணியின் அழகையும் ராஜகுமாரனின் தேஜஸையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அரசர்கள் தத்தமது புதல்விகளை அழைத்துக்கொண்டு சக்தி தேசம் நோக்கிப் புறப்பட்டார்கள். ஐம்பத்தியாறு தேசத்து அரசர்களும் புறப்பட்ட அந்த முகூர்த்த நாளில்தான் யாரும் எதிர் பாராத விதமாக இளவரசர் மரணமடைந்தார். இரவு தூங்கியவர் காலையில் எழுந்திருக்கவில்லை. மதியத்திற்கு மேல் அவரைப் பரிசோதித்த அரண்மனை வைத்தியர்கள் சக்தியின் கால்களில் விழுந்து குமுறி அழுதார்கள்.
அடுத்த நாள் காலைவரையிலும் ராணியின் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது என்பதைக் கேள்விப்பட்ட மக்களின் கண்களும் குளமாயின. 15 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகாராணி 15 நாள் சடங்குகளையும் செய்வதற்கு வசதியாக அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரண்மனை மாடங்களில் மோட்ச தீபங்களும் அறைகளில் ஊதுவத்திகளும் ஏற்றப்பட்டன. அரண்மனையில் பணிபுரியும் தாதியரும் வேலையாட்களும் காவலர்களும் தினமும் மாலையில் கோட்டையில் உள்ள கோவிலில் கூடி இரண்டு மணிநேரம் அழுதுகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் சிந்தும் கண்ணீரின் அளவைப் பொறுத்து மறுநாள் வரிசைகள் உருவாக்கப்பட்டன. குறைவாகக் கண்ணீர் சிந்திக் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டவர்கள் வரிசைகளில் முன்னேறப் பெரும்பாடுபட்டனர். கண்ணீர் அஞ்சலியில் கலந்துகொள்ளப் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. மக்கள், விரைவில் அரசுப் பணியாளர்களை முறியடித்து வரிசைகளில் முந்திக்கொண்டிருந்தார்கள். மாநகரக் கோவில்களில் ராமஜெயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நகரம் முழுவதும் ஊதுவத்தி வாசனை மிதந்துகொண்டிருந்தது.
பதினைந்து நாள்களும் சக்தி பேசவில்லை. அவரது கண்ணசைவும் விரல் அசைவுகளும் உத்தரவுகளாய் மாறிக்கொண்டிருந்தன. சடங்குகள் மவுனமாய் நடந்தன. புரோகிதர்களின் உடல்மொழிகளும் மந்திர உச்சாடனங்களும் அற்புதமான ஒரு நாடகம் போலக் காட்சியளித்தன. ராணி மிகுந்த சிரத்தையுடன் சடங்குகளைச் செய்துவந்தார். இதுகாறும் பெண்களை முன்னிட்டுச் சடங்குகள் செய்திராத புரோகிதர்கள் சக்தியின் விஷயத்தில் தமது சாத்திரப் பிடிப்பை இயல்பாகத் தளர்த்திக்கொண்டனர். பெண்கள் சடங்குகள் செய்ய அனுமதிக்கும் சுலோகங்களைக்கூடச் சில புரோகிதர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.
அந்தப் பதினைந்து நாள்களும் சக்தி தேசமெங்கும் அமைதி நிலவியது. அழுகுரல்களைத் தவிர மற்ற ஓசைகளைக் கேட்பது அரிதாகிவிட்டது. மக்கள் நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டார்கள். பேச்சைக் குறைத்துக்கொண்டார்கள். ஊரெங்கும் ஊதுவத்தி வாசனை நிரம்பியிருந்தது. வீட்டு வாசல்கள் கோலங்களைத் துறந்தன. கோவில்களில் மணியோசை கேட்கவில்லை. துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நாற்சந்திகளிலும் முச்சந்திகளிலும் ஒட்டப்பட்டது. தற்கொலைகளைத் தவிர்ப்பீர் என்னும் கோரிக்கையும் அருகில் காணப்பட்டது.
இளவரசரின் ஜாதகத்தைக் கணித்தவரும் சுயம்வரத்திற்கு நாள் குறித்தவருமான ஆஸ்தான ஜோசியரின் வீடு இளவரசர் மரணமடைந்த சில மணிநேரங்களில் எரிந்து சாம்பலானது குறித்தும் ஜோதிடர், குடும்பத்துடன் ஜோதியில் கலந்தது பற்றியும் யாரும் அலட்டிக்கொண்டதாகத் தகவல்கள் இல்லை. தனது தொழிலில் நேர்ந்துவிட்ட களங்கத்தைப் போக்க அவர் அக்கினி தேவனிடம் தஞ்சம் அடைந்தார் என்ற பொருள்படும் கவிதை ஒன்றை அரசவைக் கவிஞர் பின்னாளில் இயற்றினார்.
n
இளவரசர் இறந்த பதினாறாம் நாள். அரண்மனைக்கு முன்னால் மாபெரும் பந்தல் போடப்பட்டிருந்தது. முப்பதினாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்குப் பெரிய மைதானத்தின் மேல் பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலின் ஒரு ஓரத்தில் ராட்சஸப் பாத்திரங்களில் சமையல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. தலைநகரில் யார் வீட்டிலும் அடுப்புப் பற்றவைக்கப்படவில்லை. அனைத்து வீடுகளிலும் எரிய வேண்டிய நெருப்பும் ஒன்றாகச் சேர்ந்து எரிவதுபோல் பந்தலின் சமையலறையில் நெருப்பு ஊழித் தீபோல எரிந்துகொண்டிருந்தது. தீப்பிழம்புகள் ஆளுயரத்திற்குச் சீறிக்கொண்டிருந்தன. நூறு சதுர அடிவரையிலும் அனல் பரவியிருந்தது. கட்டடம் கட்டுவதற்காக எழுப்பப்படும் சாரம் போன்றதொரு கட்டுமானத்தின் மீதேறிச் சமையல்காரர்கள் பாத்திரங்களைக் கிளறிக்கொண்டிருந்தார்கள். அனைவரும் கவசங்களும் முகமூடிகளும் அணிந்திருந்தார்கள்.
பந்தலின் நடு நாயகமாக யக்ஞ குண்டம் நிறுவப்பட்டிருந்தது. பொதுமக்களும் அரசுப் பணியாளர்களும் பந்தலின் கீழ் யாக குண்டத்தினின்றும் 100 அடிகள் தொலைவில் ஆயிரம் வரிசைகளில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள். 100 அடி தூரத்தில் அரசர்க்கரசியைத் தரிசிக்கும் பேறு பெறுவதற்காகக் கூட்டம் முண்டியடித்தபோது கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்களுக்குக் கடைபிடிக்கப்பட்ட அளவுகோலே இங்கும் கடைபிடிக்கப்பட்டது. குறைவான கண்ணீரைச் சிந்திய துர்ப்பாக்கியசாலிகள் பிராதான வரிசைகளிலிருந்து சற்றுத் தள்ளிப் பத்து வரிசைகளில் அமர்த்தப்பட்டார்கள். அந்த வரிசையின்படியே உணவு வழங்குவது என்று ராஜ குருவும் தலைமை அமைச்சரும் முடிவுசெய்தார்கள்.
சடங்குகள் முடிந்ததும் அன்னதானம். அன்னதானத்திற்கு முன்பு சடங்குகள் செய்துவைத்த பிராமணர்களுக்குச் சாப்பாடு போடப்பட்டுத் தட்சிணை வழங்கப்பட்டது. இளவரசரின் குலம், கோத்திரம், பூர்வீகம் என எதையும் கேட்காமல் அரசியின் கண்ணசைவை அடியொற்றி மவுனச் சடங்குகளைச் செய்து முடித்த குருமார்கள் சாப்பிட்டு முடித்து தட்சிணை வாங்கிக்கொண்டார்கள். சக்தியின் அருகே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளை இதுவரை யாரும் பார்த்ததில்லை. பேரரசி செய்யும் சடங்குகளில் அவளும் மவுனமாகப் பங்கேற்றுக்கொண்டிருந்தாள். பேரரசி போன்று கண்ணைப் பறிக்கும் அழகு இல்லை என்றாலும் பார்த்தவர்களை மறுபடியும் பார்க்க வைக்கும் தீட்சண்யமான முகம். உடல் மொழியும் பாவனைகளும் சக்தியை நினைவுபடுத்தினாலும் இருவரது முகத் தோற்றங்களிலும் பெரிய ஒற்றுமை எதையும் காண முடியவில்லை.
இன்னும் ஓராண்டுக் காலம்வரையிலும் இந்த நாட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு இளவரசரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை அமைச்சர் வெளியிட்டார். அமைச்சரின் கூற்றை ஒரே குரலில் உரக்கக் கூறுமாறு தலைமைத் தளபதி 50 அடிமைகளைப் பணித்தார். பசியோடு காத்திருந்த குடிமக்கள் அந்த விருப்பத்தை ஆமோதித்தார்கள். புரோகிதர்களுக்குத் தட்சிணை கொடுக்கும் கடமையை அந்தச் சிறுமியே நிறைவேற்றினாள். கடைசி பிராமணருக்குத் தட்சிணை கொடுத்து முடித்ததும் சக்தியின் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியது. அதைக் கண்ட அமைச்சர்கள் முகங்களிலும் புன்னகைகள் மலர்ந்தன. புரோகிதர்களும் ஒரு கணம் பணியை மறந்து புன்னகை பூத்தனர்.
சக்தியின் புன்னகையைக் கண்ட சில குடிமக்களும் புன்னகை புரிந்தார்கள். சக்தியின் புன்னகை சிரிப்பாக மாறியது. அமைச்சர்களும் சிரித்தார்கள். புரோகிதர்கள் தொடர்ந்தார்கள். மக்களும் சிரித்தார்கள். ராணி பெரிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் ஓசை பதினைந்து நாள் துக்கத்தைக் கிழித்துக்கொண்டு வெளியை ஊடுருவியது. அதைக் கேட்ட அமைச்சர்களும் புரோகிதர்களும் பொதுமக்களும் வாய்விட்டுச் சிரித்தார்கள். சிரிப்பொலியில் பந்தல் குலுங்கியது. பூமி அதிர்ந்தது. திசைகள் தடுமாறின. அரசர்க்கரசி சிரித்துக்கொண்டே இருந்தார். அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பசியை மறந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ராஜ குருவைப் பார்த்து அரசி தலையசைத்தார். அவர் தலைமைத் தளபதியை அழைத்து அவர் காதில் ஏதோ சொன்னார். தலைமைத் தளபதி மேடை ஏறி உரத்த குரலில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். படை வீரர்கள் அதைக் கேட்டு ஆரவாரம் செய்தார்கள். அரசுப் பணியாளர்கள் இளவரசி வாழ்க என்றார்கள். மக்களும் இளவரசி வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.
சிரித்தபடியே எழுந்து நின்ற சக்தியின் பார்வை வரிசைகளில் அமர்ந்திருந்த மக்களை நோக்கித் திரும்பியது. தனியாக அமர்த்தப்பட்டிருந்த பத்து வரிசைகளில் அவர் பார்வை நிலைத்தது. விழியசைவின் குறிப்புணர்ந்த அமைச்சர் ஓடிவந்து ராணியின் காதருகே கிசுகிசுத்தார். வனப்பின் உருவமாய் நின்றிருந்த சக்தியின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. தளபதியின் உடல் விரைத்தது. ராணியின் பார்வை உணவுப் பாத்திரங்கள் பக்கம் திரும்பியது. தலைமைப் பரிசாரகர் ஓடி வந்தார். அமைச்சர் அவரிடம் ஏதோ உத்தரவு பிறப்பித்தார். பட்டுத் துணியின் மேல் ஒரு வெள்ளித் தட்டில் லட்டு ஒன்றை வைத்து அரசியின் காலடியில் வைத்துவிட்டு நகர்ந்தார் பரிசாரகர். ராணி அந்த லட்டின் ஒரு பகுதியை மட்டும் விண்டு எடுத்துச் சுவைத்தார். இளவரசியின் வாயில் ஒரு துண்டு லட்டை ஊட்டினார். பிறகு இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.
பேரரசியும் இளவரசியும் கிளம்பிச் சென்று அரை நாழிகை ஆன பிறகு பந்தலில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. அமைச்சர் பெருமக்களும் தளகர்த்தர்களும் அரசுப் பணியாளர்களும் இறுக்கம் தளர்ந்து நின்றார்கள். பந்தி தொடங்கியது. உட்கார்ந்திருந்த வரிசைப்படியே உணவு பரிமாறப்பட்டது. பரிமாறும்போது அரசுப் பணியாளர்கள் மத்தியில் சலசலப்பு அதிகரித்தது.
திடீரென்று தளர்ந்த இறுக்கம் வழக்கத்துக்கு மாறான பேச்சுகளுக்கு மடை திறந்துவிட்டது. அரசு ஊழியர்கள் கலகலவென்று பேசிக்கொள்வதைப் பார்த்த மக்களும் கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார்கள். யாரோ எதையோ சொல்ல, யாரோ எதற்கோ சிரித்தார்கள். நேரம் செல்லச் செல்ல உற்சாகம் கூடிக்கொண்டேவந்தது. வயிறு புடைக்கச் சாப்பிட்ட சிலர் தங்களை அறியாமல் நடனம் ஆடத் தொடங்கினார்கள். குதிரைப் படை வீரன் ஒருவன் சக்தி காவியத்திலிருந்து ஒரு பாடலைப் பாடினான். அவனைத் தொடர்ந்து இதர வீரர்களும் பாடினார்கள். அரசுப் பணியாளர்களும் சேர்ந்துகொண்டார்கள். அமைச்சர்களின் அதரங்களும் தம்மையறியாமல் அசையத் தொடங்கின. கூட்டமும் பாடத் தொடங்கியது. சுருதி பேதங்களுடன் பாடல் ஒலிகள் அந்த மண்டபத்தை நிரப்பத் தொடங்கின. பாடல் தொடங்கியதும் ஆட்டம் வேகம் கண்டது. ஆட்டமும் பாட்டும் சேர்ந்து அந்த இடம் ஒரு திருவிழாபோலத் தோற்றம் அளித்தது. பல நாள்களாகக் கேளிக்கைகள் அற்றிருந்த குழந்தைகள் அடைந்த குதூகலத்திற்கு அளவே இல்லாமல் போயிற்று. பெண்களும் பொது இடத்தில் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்தைக் காட்டி ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது படைத் தலைவர்களில் ஒருவர் ‘இளவரசி வாழ்க’ எனக் கோஷம் எழுப்பினார். அவருக்கு அருகில் நின்றிருந்த சிலர் அதைத் திருப்பிச் சொன்னார்கள். அந்தக் கோஷம் கூட்டம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்துக் கூட்டம் முழுவதும் ‘இளவரசி வாழ்க’ எனக் கோஷம் எழுப்ப ஆரம்பித்தது. ‘மகாராணி வாழ்க’ என்றும் ‘இளவரசி வாழ்க’ என்றும் கோஷங்கள் மாறி மாறி எழுந்துகொண்டிருந்தன. சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் எச்சில் கைகளை அந்தரத்தில் வீசி கோஷம் எழுப்பினார்கள். தலைமை அமைச்சரும் தலைமைத் தளபதியும் ராஜ குருவும் அரங்கின் மூலையில் நின்றபடி இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.