மன்னிப்பு




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சாயங்காலம் அப்பா பூஜையில் இருக்கிறார். மேல் முண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, மார்மேல் கைகட்டி, நான் எதிரில் உட்கார்ந்திருக்கிறேன்.
அம்மா ஒரு ஓரமாய் நின்று கொண்டிருக்கிறாள். வெளியே அந்தி கரைந்து இருளுடன் குழைகிறது. தாழ்வாரத்தில் மெட்டி சப்தம் கேட்கிறது.

நீ சட்டென அறையுள் தோன்றுகிறாய். வந்து அம்மா பக்கத்தில் நிற்கிறாய்.
குத்துவிளக்குகளில் ஆடும் வெளிச்சத்தில், உன் பட்டுப் புடவையில் கருப்பும், நீலமும் விட்டு விட்டு மின்னுகின்றன. உன் முகத்தின் வெண்மை ஜ்வலிக்கிறது. முழுதும் கமழ்கிறது. என் உன் ப்ரஸன்னம் அறை நெஞ்சில் சுடர் ஆடுகின்றது. மன்னி, நீ அம்பாள் மாதிரியிருக்கிறாய்.
உன் கண்கள் அப்பாவை நோக்குகின்றன. அவைகளில் பயமில்லை. சஞ்சலமில்லை.
“என்னை மன்னித்துவிடுங்கள்,”
நீ அப்பாவை நமஸ்கரிக்கிறாய்; உன் தலை குனிகையில், அழுந்த வாரிப் பின்னிய உன் கூந்தல் பளபளக்கிறது. சொருகிய கத்தி போல், கொண்டையிலிருந்து ஒரு தாழம்பூ மடல் சீறி எழுகிறது.
அப்பா உத்தரணியில் தீர்த்தத்தை ஏந்திக் காத்திருக் கிறார். ஆனால் நீ வாங்கவில்லை, கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்கிறாய்.
நீ வாங்கமாட்டாய், நீ வந்தக் காரியத்தின் முடிவு தெரிந்துகொள்ளாது. நீ கேட்பது மன்னிப்பு. ஆயின் உணர்வது வேறு.
உங்களிருவரின் மனோபாவங்களும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் அதிர்ச்சியில் என் நெஞ்சு ‘கிண்’ணென்கிறது. மன்னி, எனக்குப் பயமாயிருக்கிறது. மன்னி, தீர்த்தம் வாங்கிக்கொள். உனக்கு அப்பாவைத் தெரியாது. அப்பா தயை புரியுங்கள்…
அப்பா புன்னகை புரிகிறார். “நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?”
“எங்களை மன்னியுங்கள்!”
உத்தரணியில் தீர்த்தம் விளிம்பு கட்டி அசைவற்று நிற்கிறது. அப்பாவுக்கு வயதானாலும் கை நடுக்கம் இல்லை. எனக்குத்தான் உடலே உதறுகிறது. கைகளை மார்போடு இறுக அழுத்திக்கொள்கிறேன். மன்னி, நீ தீர்த்தம் வாங்கிக்கொள்ள வேண்டும். இது எனக்குக்கன முக்கியமாகிவிட்டது. மன்னி வாங்கிக்கொள். அப்பா. முன்னியை தீர்த்தம் வாங்கிக்கொள்ளும்படிப் பண்ணு, அம்மா உன்னைத் தியானம் பண்ணுகிறேன்-
“நீ ஏன் இதில் சம்பந்தப்பட்டுக் கொள்கிறாய்? இதற்கு நீ பொறுப்பு இல்லை. உன்மேல் எனக்கு எந்த விதமான கிலேசமும் கிடையாது”.
“அவரை மன்னியுங்கள். எனக்காக அவரை மன்னியுங்கள்.”
“மன்னீ, மன்னீ, உன்னையே நமஸ்கரிக்கிறேன், என் மேல் கிருபை கூர்ந்து எனக்காகவேனும் தீர்த்தம் வாங்கிக் கொள்ள மாட்டாயா?
நீ வாங்கமாட்டாய். ஆசியிலாத தீர்த்தத்தை வாங்கும் உத்தேசம் உனக்கு இல்லை.
அப்பா உங்களைத் தியானம் பண்ணுகிறேன். காலில் விழுந்து கேட்கிறேன். மன்னியுங்கள், உங்கள் மன்னிப்பில் குளிர்ந்து, உங்கள் ஆசியைப் பெற்ற தீர்த்தம் அளியுங்கள்.
ஆனால் அப்பா நீ சிரிக்கிறாய். உன் உடல் சிரிப்பில் குலுங்குகிறது.
உத்தரணியில் ஜலம் குலுங்குகிறது, ஆனால் ஒரு சொட்டுக்கூட சிந்தவில்லை.
உன் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்குகிறது.
நீ தொண்டையை கனைத்துக்கொள்கிறாய்.
“அ-ஹெம்-உன் பேர் என்ன?”
அப்பா உனக்கு முகம் மறக்காது; சொல் மறக்காது.
ஆனால் பெயர் மறந்து போகும் அல்லவா?
“த்ரிபுர ஸுந்தரி”.
எனக்கு மயிர் கூச்செரிகிறது, என்னையுமறியாமல்.
என் பார்வை பூஜை பக்கம் திரும்புகிறது. அங்கு விக்ரஹம் இருக்கிறது.
ஆ! நீ ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். யார் யாருக்கு வாரிசு வந்தாலும் உண்மையின் ரீதியில், அதில் பிரயோஜனம் இல்லை. அர்த்தமுமில்லை. ஏனெனில் அவரவர்காரியங்கள் அவரவருடையது. அவரவர் காரியங் களுக்கு அவரவர் பொறுப்பு. இல்லை காரியங்கூட முக்கிய மில்லை. அவன் உன்னை அழைத்தது தவறில்லை. நீ போனதும் தவறில்லை. இரண்டும் முக்கியம்கூட இல்லை. ஆனால் அப்புறம் உள்ளிருந்து வந்த குப்பைக்கூளம் எச்சில் எல்லாம் வார்த்தை என்று கொட்டினதுதான் தவறு. நாக்கைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளவேண்டும். அது வாக்கின் பீடம்”
“அவரை மன்னியுங்கள்.”
“ஸுந்தரி நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை”
அப்பா நீ மன்னியைப் புரிந்துகொள். நீ அவளைக் கூட புரிந்துகொள்ள வேண்டாம். அவள் வந்திருக்கும் காரியத்தைப் புரிந்துகொள். அண்ணாவுக்காக மன்னி வந்திருக்கிறாள். நீ மன்னித்து விடு.
அம்மா எப்பவோ மன்னித்துவிட்டாள். எனக்குத் தெரியும்; அம்மா நீ மன்னித்துவிட்டையோன்னோ? “மன்னிப்பு என்பதே கிடையாது. மன்னிப்பு என்பது ஒரு புளுகு. அவரவர் காரியம் அவரவருடையதே என்றான பிறகு, யார் யாரை எதற்கு மன்னிக்கிறது? வாக்குப் பேசுகிறது.
அப்பா !
அப்பா !!
அப்பா !!!
வாக்கு நடந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது இப்போது இல்லாவிட்டாலும் உனக்கு ஒரு நாள் புரியாமல் போகாது.எப்பவும், உள்ளிருப்பதுதான் வெளியே வரும். பின்னால் காரியமாய் நேரப்போவது தான் முன்னால் வாக்காய் வரும். யார் தடுத்தாலும், நான் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்ட தாலும் சொன்னது இல்லையென்று ஆகிவிடாது. சொன்னதுதான். வாக்கையோ, வாக்கின் பலிதத் தையோ தடுக்க நீ யார், நான் யார்? இதைப் புரிந்து கொண்டுவிட்டால் யாருக்கும் யார் மேலும் கோபம் வரக்காரணம் இல்லை. நியாயம் இல்லை. எனக்கு அவன்மேல் கோபம் இல்லை.
‘லெக்சர்’ அடிக்க இந்தச் ‘சான்ஸீ’க்கு எத்தனை நாள்’ அப்பா காத்திருந்தாய்? மற்றவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ என்று உனக்கு அக்கரையுண்டோ?
“அப்போது தப்பென்று நேர்ந்து விட்டால் அதற்கு மன்னிப்பு என்பதே கிடையாதா?”
“என்ன ஸூந்தரி, நான் இவ்வளவு விளக்கியும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறாயே! இதற்கு மன்னிப்பு கிடையாது. இது விதிக்கப்பட்டது.”
“எது விதிக்கப்பட்டது?”
நீ மன்னியை ஆழ்ந்து நோக்குகிறாய். வார்த்தைகள் அளந்து வருகின்றன.
“நீ வந்து இந்தக் குடும்பம் இரண்டாக வேண்டும் என்று.”
தீர்த்தத்தைத் தரைமேல் ஊற்றுகிறாய் எனக்கு முதுகு சில்லென்கிறது. மன்னி பேசவில்லை. சட்டெனத் திரும்பி வெளியே சென்றாள். எனக்குப் பொறுக்கவில்லை. நானும் எழுந்து வெளியே வந்தேன்.
ஆனால் உன்னைத் தொடர எனக்குத் தைரியமில்லை. நீ போவதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். இந்தத் தாழ்வாரம் இவ்வளவு நீளமா? இதுவரை எனக்குத் தெரிய வில்லையே! பாதியில் உன் நடை தளர்ந்து சோர்கிறது. சுவரின்மேல் சாய்ந்து முகத்தைக் கைகளில் புதைத்துக் கொள்கிறாய். உன் தோள்கள் குலுங்குகின்றன.
நான் மெதுவாய் வந்து உன் எதிரில் நிற்கிறேன்.
இருளில் உன் முகம் சரியாய்த் தெரியவில்லை.
நீ வீட்டுக்கு வந்ததிலிருந்து இதுவரை உன்னுடன் நான் ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆனால், இப்படி ஊமையாய் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்கையில், உன்னோடு பங்கிட்டுக்கொள்ள ஆயிரம் இதய முகடுகள் எழுகின்றன. ஆனால் அவைகளுக்கு வேகம் தவிர உரு இல்லை. ஏது செய்வேன்? என்னென்று பங்கிட்டுக் கொள்வேன்?
திடீரென எனக்கு அடி வயிற்றிலிருந்து குமட்டல் எழுந்தது.வாயைப் பொத்திக்கொண்டு கொல்லைப்புறம் ஓடினேன். “குபுக்……குபுக்…… குபுக்……” வயிற்றின் சுருட்டலில் அடி வயிற்றை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, குதிரை லாடமாய் வளைந்து மடிந்தேன்.
அப்பா உன்னைக் கரிக்கிறேன்.
அண்ணா உன்னைக் கரிக்கிறேன்.
அம்மா, உன்னைக் கரிக்கிறேன்.
என்னையே கரிக்கிறேன்.
உலகமே கரிக்கிறது.
குபுக் குபுக் குபுக்….
கண்கள் இருள்கின்றன. நான் உருகரைந்து இரவோடு கலக்கிறேன்.
கப்பு, கிளை, இலை எல்லாம் கழித்த நடுத்தண்டு. போல், நடு முதுகின் எலும்புத் தண்டுகள். பிரக்ஞையின் ஓட்டம் மாத்திரம் தெரிகிறது.
அப்பா; நீ கடாத் தலையன்.
உன் சிப்பந்திகள் உனக்குச்சூட்டியிருக்கும் இந்தப் பெயர் காதில் அடிபட்ட பிறகுதான் நானும் கவனித்தேன். அப்பா உனக்கு எவ்வளவு பெரிய தலை! Zoo-வில் சிங்கம் கரடி விளையாட, கூண்டில் கிடக்கும் இரும்புக் குண்டு போலல்லவா இருக்கிறது!
அப்பா நீ இரும்புத் தலைவன்.
நாயனக்காரனுக்குப் புடைப்பதுபோல்
ஆலையின் புகை போக்குக் குழாய்போல்
உன் நெஞ்சுக் கனத்தைத் தாங்குவதற்
கென்றே உனக்கு இவ்வளவு பெரிய கழுத்தா? அப்பா உன் நெஞ்சுக்குள் நீ என்னென்னவெல்லாம் புதைத்து வைத்திருக்கிறாய்? கொஞ்ச நாழியாவே, உன்னை நினைக் கையில் “நீ” என்றுதான் வருகிறது.
மன்னிப்பு புளுகு ஆயின்,மரியாதையும் புளுகுதானே! வெளிவேஷம் தானே! மருந்துக் கலப்பில் பாதிக்குமேல் ஜலம். மரியாதையின் கலவையில் பாதிக்குமேல் பயம்.
உன்னெதிரில் உனக்காக வேஷம் போடவேண்டும். உன்னை நிறுத்தி வைத்து அம்பலப் படுத்தும் நெஞ்ச- ரங்கில்கூட எதற்கு இந்த வேஷம்? இங்கே, எனக்கே உன்னை நிறுக்கையில், மரியாதையின் சின்னமான அடை மொழியில்கூட தராசு முள் ஏன் தடுமாறனும்?
அப்பா, உன்னை, உன் ‘நீ’ வரையில் உரித்து, நீ துவளுவதைப் பார்க்கவேணும்.
அப்பா, நீ ஒரு பெரிய ‘ஹம்பக்’ வேஷதாரி. நீயே ஒரு புளுகு. எங்கும் வாக்குத்தான் பேசுகிறது; வாக்குத்தான் நடக்கிறது. தடுக்க நீ யார்? நான் யார்? என்று ஒட்டாமல் பேசிவிடலாம். ஆனால், உனக்கு உன் பதவி உன் ஆட்டம் தான் முக்கியம். நீ சொன்னால் சொன்னதுதான். சொன்னபடி நடந்தாக வேண்டும். உன் வாக்கு பலிதமாக வேண்டும். அதானே? உன் வாக்குக்கு யார் பலியானாலும் அக்கறையில்லை. அதானே?
எட்டு கண்ணின்
விட்டெரியல்
உன்
ஸ்வயாகாரத்தின்
ஸதாகார ஸர்வாதிகாரம்
நீ
நெருப்பென்றால் வேகணும். அதானே?
நீயே வாக்காகிவிடப் பார்க்கிறாய்.
வாக்கைச் செலுத்தியும் உனக்குப் பழக்கம்.
“உனக்கு ஆறுமாதம் சிறை”.
“உனக்கு மூணு மாதம் காவல்”.
“உனக்கு நூறு ரூபாய் அபராதம்”
உனக்குத் தீர்ப்புகள் விதிக்கத்தான் தெரியும். மன்னிப்பைப் பற்றி என்ன தெரியும்?
அப்பா, முழுக்க முடியாவிட்டாலும், உன்னைக் கொஞ்சமாவது என்னால் புரிந்து கொள்ள முடியும். நான் அசடு இல்லை. எப்படியும் உன் வித்துதானே! புரிந்த வரையில் புரிந்து கொண்டதுதானே!
“பென்ஷன் வாங்கியும் உன் உத்யோக முறை உன்னை விட்டுப் போகவில்லை. நீ விடவும் மாட்டாய். அதனால்தான் வீட்டிலும் ‘கோர்ட்டு’ நடத்துகிறாய். அங்கு உன் பதவியின் சின்னம் கறுப்பு அங்கி. இங்கு பூஜை எனும் வேஷம் பூண்கிறாய்.
அடேயப்பா, என்ன ஆடம்பரம், என்ன படாடோபம்! அம்பாள் தன்னை வளர்க்க உன்னை வெள்ளி விமானம் கேட்டாளா? உட்கார்ந்தால் தலை உயரத்துக்கு இரு பக்கங்களிலும் வெள்ளிக் குத்து விளக்குகள் கேட்டாளா? வெள்ளியில் அபிஷேகப் பாத்திரங்கள், சாமான்கள் யானைத் தலை பெரிது ஆராதனை வெள்ளிக் கிண்டி, தேங்கிய அகிற் புகை,பழனி விபூதி மணம், சாமரம், அமர்க்களம் தமுக்கடி.
உனக்கு சௌகரியங்கள் இருக்கின்றன. காக்ஷி நடத்து கிறாய். இல்லாதவன் என்ன செய்வான்? அவனுக்குத்தான் உன்னைவிடக் கடவுள் வேண்டியதிருக்கிறது.
ஆனால் நீ அம்பாளை வணங்கவில்லை.
நீ வழிபடும் தெய்வம் அதிகாரம்.
சூரபத்மம். ராவேணசுவரம்.
ஆண்டவன் தலையில் கை வைக்கணும்.
உன் பூஜையில் இந்தத் தோரணைதான் எனக்குத் தெரிகிறது. நீ பூஜை மணியை ஆட்டுகையில், சேவகனை வரவழைக்க மேஜையின் மேல் Bell அடிப்பது போல் இருக்கிறது.
நீ பூஜை செய்கையில் அம்பாள் உன்னெதிரில் சாக்ஷிக் கூண்டில் நிற்கிறாள். அவள் மேல் நீ சுண்டும் குங்குமமும் மலர்களும் சாக்ஷியத்தைப் பிய்த்தெறியும் கேள்விகள் போல் விழுகின்றன. நீ அவளைப் பயமுறுத்துகிறாய்.
என்னை யாரென்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்? யாருடைய சிபாரிகமில்லாமல், என் சொந்த முயற்சி யிலேயே உழைத்து முன்னுக்கு வந்தவன். வாகீசுவர சர்மா! ஞாபகமிருக்கட்டும். இன்னுமா வரவில்லை? என்ன தைரியம்? என்கிற மாதிரி இருக்கிறது.
உனக்கு இரங்கியோ பயந்தோ அவள் தோன்றினாலும் உன் கோபத்தில், அவளையே நீ கையைப் பிடித்து இழுப்பாய்.
உனக்கு ஸித்திகள் கிட்டினால், அவைகளை உபயோகப்படுத்தாமல் உன்னால் இருக்க முடியாது. சோறு, தண்ணீர் இல்லாமல், உயிர்கூட பிரிந்து இருப் பாய். ஆனால் உன் அதிகாரம் பிரிந்து உன்னால் ஒரு க்ஷனம்கூட இருக்க முடியாது. இதோ ஒரு நிமிஷத்துக்குள் உன் கோர்ட்டை நடத்தி விட்டாயே!
அப்பா உன்னைக் கரிக்கிறேன். நீ செத்துப் போனால்- நல்லவேளை எப்பவுமே நீ இருந்து கொண்டேயிருக்க முடியாதே – எல்லோருடனும் சேர்ந்து நானும் வேஷம் போடுவேன், விக்கி விக்கி விக்கி அழுவேன். ஏன் நிஜமாய்க் கூட அழலாம்; ஆனால் “உஹு-புஹு”- என் தேம்பல் களுக்கிடையில் “உஸ்”-நீண்ட பெருமூச்சு இப்பவே எனக்குக் கேட்கிறது, உன் நினைவு -உன்னைக் கண்டு பயத்தின் சுமையிறங்கிய அசதி ஸுகம் தலையே காற்றில் பறப்பது போல். லேசாய், குளு குளுக்கிறது.
அப்பாடா!
என்மேல் கவிந்த இருள்கள் விலக ஆரம்பிக்கின்றன. வயிற்றின் சங்கடம் அடங்குகிறது. மயக்கத்திலிருந்து நினைவின் விடிவிற்கு மீள்கிறேன்.
“பாப்பா! பாப்பா!! எங்கேடா போயிட்டே, சாப்பிட வாயேண்டா?’ எங்கிருந்தோ அம்மா கத்துகிறாள்.
நான் வாயை மூடிக்கொண்டிருக்கிறேன். பதில் சொல்ல வேண்டுமென்றுகூடத் தோன்றவில்லை.
தோட்டத்தில் போட்டிருக்கும் கல் பெஞ்சில் படுத் திருக்கிறேன். ஜலத்தில் நனைந்தாற்போல் காற்று குளு மையாய் மூச்சு விடுகிறது. தென்னங்கன்றின் மட்டை தலைமேல் இடிக்கிறது. அம்மா தன் கையாலேயே அமைத்த பந்தலில் அவரையோடு படர்ந்த புடலையின் காய்கள் பாம்புகள்போல் இருளில் தொங்குகின்றன. முழுக்க முழுக்க ஜலம். சத்தா மண்ணா ஒண்ணு கிடை யாது. ஏன்தான் இதையும் ஒரு குறி என்று அம்மா பயி ராக்குகிறாளோ, பண்ணிப் போடுகிறாளோ?
அப்பா!
என் மனமாற உங்களைத் திட்டி, நான் அறிந்தும் அறியாமலும் சேர்ந்து என்னுள் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் ஓய்ந்தபின், குளத்தில் குளிக்கையில் குத்தும் மீன்கள் போல், நெஞ்சடியில் ஏதோ நமு நமுவென்று பிடுங்குகிறது.
உங்களைப் புதுமுறையில் பார்க்கிறேன்.
என் வசைமாரியில், என் கண்ணழுக்குத்தான் கரைந்ததோ!
அல்லது உங்களைக் குளிப்பாட்டித்தான் காண்கிறோனோ, அறியேன்.
நீங்கள்
வேஷங்களுக்கு எப்போது திரும்பினேள்?
“நீயும் வேஷம்.”
“நீங்களும் வேஷம் என்றாலும்”
வேஷங்கள் இலாது முடியாது.
எல்லாமே வேஷங்கள் தாம் என்று இப்போதுதான் அறிகிறேன்.
அப்பா, நீங்கள் ராஜா.
”நீ”யில் மாறுவேடத்தில் ராஜா.
“நீங்களி”ல் சபையில் ராஜா”.
எப்படியும் நீங்கள் ராஜாத்தான்.
நான் திட்டினதால் நீங்கள் குறைந்துவிட வில்லை.
உங்களை நான் குறைக்க முடியாது.
கம்பீரம் வளர்ந்துதான் இருக்கிறீர்கள்.
அதிகாரம் உங்கள் லக்ஷணம்.
நீங்கள் நெருப்பாயிருக்கையில் எரிக்கத்தான் எரிப்பீர்கள்.
தொட்டவன் சுட்டுக்கொண்டால், தொட்டவன் முட்டாள். நெருப்பின் தப்பா?
உங்கள் நெருப்புத் தன்மையைத் தவறாய் நான் அதிகார மோகமெனக் கொண்டேன்.
என் ஆத்திரத்தில், உங்கள் பூஜையை ஆடம்பரம் எனப் படித்தேன்.
பிறர் மெச்சக் செய்வதுதானே ஆடம்பரம், படாடோபம்!
பிறர் பற்றி எதிலும் உங்களுக்கு அக்கறையில்லை என்று எனக்குத் தெரியும்.
சில விஷயங்களில் நாங்களோ உங்களுக்குப் பிறர்தாம்.
யார் முதுகைச் சொரிந்தும் நீங்கள் முன்னுக்கு வரவில்லை.
நெருப்பாய் எரிந்தே அகலிலிருந்து அகண்டமாகி யிருக்கிறீகள்.
உங்களுக்குத் தூண்டுகோல் நீங்களே. அதற்குக்கூட நீங்கள் பிறரை நம்பியில்லை.
எல்லாமே உங்களுடையதே.
என் இடுப்பைச் சுற்றிய வேட்டி, அதன் கிழிசவை ஒட்டித் தைக்கும் ஊசியும் நூலும் கூட.
இப்போது மாத்திரம் அல்ல.
என் பாதங்களை நானே பூமியில் ஊன்றி எனக்கு இறக்கை முளைக்கும் வேளை வந்த பிறகும் அப்பவும் என் முயற்சியும் அதன் பலன்களும், உங்களால்தான்.
முதலில் நீங்கள் இலாது நானே ஏது?
நீங்கள்,
அம்பாளை வழிபடுகிறீர்களோ
அதிகாரத்தை வழிபடுகிறீர்களோ
யாரை வழிபட்டால் எனக்கென்ன ? யாரும்
யாரையோ ? எதையோ
குறித்து வழிபட்டு
அவரவர்க்கு
அவரவர் வழி.
மற்றவை அனைத்தும் நல்லதோ பொல்லாததோ எனதல்லாதன எல்லாமே அயல் வீட்டு வம்புதான்.
அண்ணா எங்கேயாவது போய் வந்து அங்கே இப்படி இருந்தது இங்கே அப்படியிருந்தது என்று அளந்தால் நீங்கள் கடிவீர்கள்; “நீ சாப்பிடப் போனாயா? எச்சிற் கலையை எண்ணப்போனாயா?’
எனக்கு இப்போது புரிகிறது. மௌனமே ஒரு வழி நீங்கள் அதிகம் பேசுவதில்லை.
விளக்கம் கூட ஒரு வம்புதான்.
வழிக்கும் ஒரு வழியென உங்கள் வழிபாட்டில், குங்கு மம், மலர்கள். உட்கார்ந்தால் தலை உயரத்துக்கு இருபக்கங்களிலும் வெள்ளி விளக்குகள், அபிஷேகப் பாத்திரங்கள் ஆராதனைச் சாமான்கள், யானை தலை பெரிது வெள்ளி கிண்டி, அகிற்புகை, சாமரம். குற்ற மென நான் ஏன் கொள்ள வேண்டும்?
இல்லாதவனுக்கு முடியாதது இருப்பவனுக்கு முடிந்தால் தவறா?
எல்லோராலும் எல்லாமே முடியுமா!
முடிந்தவரை முடித்தது முடிந்தது.
உன் தன்மையில் மௌனத்தைத் தேடி, வெளித் தோற்றத்தில் அழகை வழிபடல் ஆகாதா?
இப்படி எனக்கு இதற்குமுன் தோன்றாதன எல்லாம் எனக்குப் பழக்கமில்லாத அவைகளின் பாஷையிலேயே தோன்றுகின்றன. ஏன்?
நான் உங்கள் வித்து என்றா?
அப்பா சில சமயங்களில் விளக்கெதிரியில் மணிக் கணக்கில் அமர்ந்திருக்கிறீர்கள்.
உங்கள் நோக்கின் வசப்பட்டு சுடர் அசைவற்று நிற்கிறது.
உங்கள் நோக்கின் உக்கிரமம் படிப்படியாகத் தணித்து பஞ்சு மேகம்போல் பரவி, பிசுபிசுத்து மிருதுவாகிறது. அப்போது உங்கள் உள்நோக்கில் எதைக் காண்கிறீர் கள்? அப்பா,சுடரில் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?
நீங்கள் அம்பாளைத் தேடவில்லை?
ஒரு முறையேனும் நீங்கள் நமஸ்கரித்து நான் பார்த்த தில்லை.
அவளையும் நீங்கள் ஒரு சாஷியாய்த்தான் தேடுகிறீர்கள்.
எதற்குச் சாக்ஷியாய்த் தேடுகிறீர்கள்?
அது எது?
தினம் காலையில் கண் விழித்ததும், நேரே பூஜைய றைக்குச் சென்று கதவை மூடிக்கொள்கிறீர்கள். அரைமணி நேரம் கழித்துத்தான் வெளியே வருகிறீர்கள்.
அப்புறம்தான் காலைக் கடன்களே.
ஏன்?
உங்களைக் கேட்கப் பயமாயிருக்கிறது.
அப்புறம் பூஜையறை திறந்தே தானிருக்கிறது.
அந்த வேளை மாத்திரம் ஏன்?
நாங்கள் கூட எங்களுக்குள் கேலி பண்ணுவோம். “கண் புளிச்சை எடுக்கவில்லை. பல் ஊத்தைப் போக வில்லை நேற்று மலத்தைப் பத்திரமாக வயிற்றில்கட்டிக் கொண்டு மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டிக் கிடக்கு? இந்த அழகை ஒருத்தரும் பார்க்கக் கூடாதாம். இதற்குக் கதவை வேறே சாத்திண்டும். உத்யோகமோ ஊர்க்கெல் லாம் நியாயம் தீர்க்கற உத்யோகம். ஆனால் இவாளுக்கு அகச்சுவடி நியாயத்தைத் தீர்த்து வைக்கறவா யாரு?”
அம்மா எரிச்சலுடன் மொண மொணப்பாள்.
ஆனால் உங்களுக்குத்தான் யார் அபிப்பிராயமும் எந்த விஷயத்திலும்தான் அக்கறை கிடையாதே!
அப்பா, நீங்கள் கடாத் தலையர்.
அப்பா, நீங்கள் இரும்புத் தலையர் அப்பா, உங்களை என்னென்னவோ ஏசி விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள்.
ஆனால் மன்னிப்பு என்பதே இல்லை என்று விட்டீர்களே. பின் என்னதான் உண்டு?
அவரவர் சக்திக்கேற்றபடி அறிந்து கொள்ள முடிந் ததை அறிவதுதான் உண்டா?
அப்படியானால் அப்பா, முன்னைவிட இப்போது உங்களை இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டதாய் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
அப்பா, நான் அப்படி நினைத்துக் கொள்ளலாமோ? அது தான் உண்டோ?
அப்பா, உங்களைச் சிந்தித்ததால், உங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாய்ப் புரிந்து கொண்டேன்.
நிந்தனையும் ஒரு வழிபாடுதானா, அப்பா?
அதுவும் ஒரு வேஷம் தானா?
அடி வயிற்றின் கொதிப்பிலிருந்து என் நிபந்தனை வந்ததென்று நினைத்தால் அதற்குமேல் மடியில், இன்னொன்று, இன்னும் புரியாதது…
நீங்கள் நீயாயிருந்தாலும் சரி. நீங்களாயிருந்தாலும் சரி – உங்களுடைய உண்மையான தன்மைதான் என்ன?
யோசனை செய்து செய்து தலை கிறு கிறுக்கிறது.
மறுபடியும் கண் இருட்டுகிறது.
இருட்டுக்குள் இருட்டு.
வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. குரல் களும் சப்தங்களும் குழம்புகின்றன. வண்டி புறப்படு கிறது. சப்தம் வேகமெடுத்து வளைந்து ஓய்ந்து தூரத்தில் மறைகின்றது.
அண்ணாவும் மன்னியும் போயாச்சு.
எழுந்திருக்க வேண்டுமென்றாலும் முடியவில்லை
ஏதோ கனம் அழுத்துகிறது.
– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.