மனை ஆட்சி




(1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாடக பாத்திரங்கள்

தாமோதர சாஸ்திரி – திருச்சிராப்பள்ளிக் கல்லூரியில் தலைமை உபாத்தியாயர்.
பார்வதி – அவருடைய மனைவி.
சகுந்தலா – அவரது கைம்பெண்ணான குமாரத்தி.
மிஸ் மோஹர் வாலா – ஒரு பார்சி மாது, சில்ப மெழுதுவதில் தேர்ச்சி பெற்றவள்; சாஸ்திரியாருடைய சிநேகிதி.
கணபதி – சாஸ்திரியார் வீட்டு சமையற்காரன்.
அம்மாயி – அவருடைய வீட்டு வேலைக் காரி, மதம்மாறின கிறுஸ்துவப்பெண்.
குண்டுராயர் – சாஸ்திரியாருக்கு மிகவு அத்யந்த சிநேகிதராகப் பாவிக்கும், ஒரு அவதூறு பேசும் மனிதர்.
மணி – ஒரு ஹோட்டல் வேலையாள்.
ஒரு அங்க நாடகம்
முதல் காட்சி
இடம் – திருச்சிராப்பள்ளியில் உயர்தர உபாத்தியாயர் தாமோதர சாஸ்திரியார் வீட்டில் ஒரு பெரிய அறை.
காலம் – சாயங்காலம்.
அறைக்கு மூன்று வாயில்கள் இருக்கின்றன. ஒன்று பின்பக்கமாகவும், மற்ற இரண்டும் இரண்டுபுறத் திலும்; அறையில் சில படங்கள் இருக்கின்றன, சில முடிந்ததும் சில அறைகுறையாகவும்; படங்களுக்கு வர்ணம் தீட்டும் சாமான்கள் முதலியன ஆங்காங்கு கிடக்கின்றன.
பார்வதியும் சகுந்தலாவும் நாற்காலிகளின்மீது உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
பா. சரியும் – தப்பும்! நீ ரொம்ப தெரிந்தவள்! நீ பேசுவ தெல்லாம் எனக்கு வேடிக்கையா யிருக்கிறதடி. அந் தக் காலமெல்லாம் அப்பொழுதே மலையேறிப் போய் விட்டது. தற்காலம் உன் காரியம் ஆகிறதற்கு என்ன உபயோகமாயிருக்கிறதோ அதுதான் சரி, அதற்கு எது எடஞ்சலாயிருக்கிறதோ அது தப்பு.
ச. அம்மா! இதென்ன விபரீதம்!
பா. ஆமாம், நான் சொல்வதெல்லாம் உனக்கு விபரீதம், உன் தகப்பனார் செய்வதெல்லாம் நிரம்பசரி, அப்பட்டம் நியாயம்!
ச. நான் அப்படிச் சொல்ல வில்லையே அம்மா.
பா. உன் மனதிலிருக்கிறது எனக்குத் தெரியாதா என்ன? உங்கப்பா பெண் ஆச்சுதே நீ! – என் பெண் அல்ல, என் வயிற்றில் பிறந்த கோடாலிக் காம்பாச்சே!
ச. இனி நான் ஒன்றும் பேசவில்லையம்மா; நான் வாயைத் திறக்கவில்லை. நான் பேசினால்தானே இந்த சண்டை யெல்லாம்?
பா. வாயை மூடிக்கொண்டிருக்கிற பெண்ணை மாத்திரம் எப்பொழுதும் நம்பக்கூடாது, அவள் வயிற்றுக்குள்ளே எப்பொழுதும் புகைந்து கொண்டெ யிருக்கும் நெருப்பு!
ச. எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிற பெண் பிள்ளையோ?
பா. அதோ! அதோ! – மறுபடியும் பார்!
அம்மாயி வருகிறாள்.
என்ன சமாச்சாரம் அம்மாயி?
அ. அஞ்சரெமணி ஆவதம்மா, ஐயர் வீட்டுக்குவர்ர நேரமாச்சி.
பா. அந்த தடிக்கழுதை கனபதி எங்கே? பரமானந்த பவன் ஓட்டலுக்கு அனுப்பினேனே, அவன் இன்னும் திரும்பி வரவில்லையா?
அ. அவன் ஏன் சீக்கிரம் வர்ரான்? அங்கே யிருக்கிற பலஹாரங்களை யெல்லாம் அவன் ருசி பார்த்தாக வேணுமா?
பா. உடனே வெளியே போய் அவன் திரும்பி வருகிறானா பார். கதவண்டை நின்று எசமான் திரும்பி வந்தால் எங்களுக்குச் சொல்.
அ. எசமானும் கணபதியும் ரெண்டு பேரும் ஒண்ணா வந்தா?
பா. இராது- அப்படி வரமாட்டார்கள், கணபதி அப்படிப் பட்ட மடக்கழுதையல்ல.
அ. அம்மாதான் சொன்னைங்களே கொஞ்ச முன்னெ அவன் தடிக்கழுதெ இண்ணு. நான் என்ன செய்யரது?
பா. போ – போய் வெளியே இருந்துகொண்டு எங்களுக்குத் தெரிவி.
அ. அப்படியே ஆவட்டும் அம்மா. (போகிறாள்)
ச. அம்மா, இதெல்லாம் எங்கேபோய் முடியப் போகிறதோ?
பா. எங்கே முடியப்போகிறதா?– ஏன்? இந்த வீட்டை யாளும் அரசியாக்கப் போகிறதென்னை!
ச. அப்புறம் அப்பாகதி? அவர் என்ன ஆவார்?
பா. என்ன ஆவாரா? நன்றாக ஒழுங்காவார் சந்தேகமில் லாமல் புத்திசாலியாகி நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளுவார்.
ச. உங்களிஷ்டப்படி தன்னை ஆள விடுவாரோ?
பா. ஏன் கூடாது பெண்ணே? ஆயிரக்கணக்கான அக முடையார்கள் (ஆம்படையான்கள்) தங்களைவிட புத்திசாலிகளான பெண்சாதிகள் தங்களை ஆளும்படி விடவில்லையா?
ச. அம்மா, இது எனக்கு நன்றாய் அர்த்த மாகவில்லை. இப்படி ஆடவர்கள் தங்கள் பெண்சாதிகளை ஆளவிடு வது, அவர்களது புத்திசாலித் தனத்தினாலா, அல்லது இப்படி ஆளப்படுவதினால் அவர்கள் புத்திசாலி களாகிறார்களா? அவர்களுடைய புத்திசாலித்தனம் இதற்கு காரணமா, அல்லது இதன் பலனா அம்மா?
பா. ஆம் – உனக்குத் தெரிந்தால்தானே!- இது காரணமும் பலனும் இரண்டும்! – என்ன அதனப்பிரசங்கித் தனம்!
ச. இதுதான் உங்கள் வீட்டை நீங்கள் ஆளுகிற விதமோ அம்மா?
பா. சந்தேகமென்ன? வேறென்ன? இதற்காகத்தான் ஒவ்வொரு நாட்டாரும் தங்கள் நாட்டை தாங்களே ஆளப்பார்க்கிறார்கள்.-நான் என் வீட்டை ஆளப் பார்க்கிறேன்!
ச. அப்படி ஆளும்போது நீங்கள் வெளியே போய் சம்பாதித்துக் கொண்டு வரவேண்டுமோ? அப்பொழுது அப்பா என்ன செய்யவேண்டும்?
பா. ஹா! ஹா! ஒன்றும் தெரியாத முட்டாள் பெண்ணே! இது தெரியாதா உனக்கு? நான் ஏன் வெளியே போய் சம்பாதிக்க வேண்டும்? அவர் வழக்கம் போல் கஷ்டப் பட்டு வேலைசெய்து சம்பாதித்துக் கொண்டு வருவார். அவர் சம்பளம் வந்ததும் மாசம் முதல் தேதியில் அந்த பணத்தை குரியாக மரியாதையாக – ஒரு காசும் குறையாமல் என்னிடம் ஒப்பித்து விடுவார். இதோ பார், இதுதான் மனையாட்சி என்று பெயர் மனைவி மனையில் ஆளுகிறது; மனைவி என்று அதற்காகத் தான் பெயரிட்டார்கள் எனக்கு. ஆகவே என் மனையை நான் ஆளுகிறேன். பணத்தை யெல்லாம் வாங்கிக்கொண்டு, வைத்துக்கொண்டு செலவழிப்பேன். நிரம்ப புத்திசாலித்தனமாய்!
ச. அதற்கென்ன சந்தேகம் – நிரம்ப புத்திசாலித்தனமாய்! ஆனால் பாவம்! அப்பா கதி என்ன ஆவது?
பா. ஏன்? அவருக்கென்ன ? இப்பொழுது ஆளக்கற்றவர் அப்பொழுது ஆளப்படுவதற்குக் கற்றுக்கொள்வார். மனையாட்சி என்றால் எல்லாம் தலைகீழாக மாறவேண் டாமா! இப்பொழுது, நான் எதாவது ஒரு அழகிய பொம்மை வாங்கவேண்டு மென்றிருந்தால், உன் தகப் பனாரை அதற்காக ஐந்து ரூபாயைக் கேட்கிறேன். அவர் முகத்தைச் சுளித்து, தன்கையில் பணமில்லை யென்று கூச்சல்போட்டு, கொடுக்க முடியாதென்று மறுத்து விடுகிறார். அப்பொழுதோ, என் கையில் எல்லாப்பணமும் வந்தபிறகு, அவர்தன் கிளப் (Club) பின் மாத சந்தாவுக்காக மூன்று ரூபாயை என்னிடம் வந்து கெஞ்சிக் கேட்பார், அப்பொழுது நான் முகத்தைச் சுளித்து, கிளப்புக்காக வீண் சிலவு செய்வதற்கு, என்னிடம் பணமில்லையென்று, நான் கத்தி, கொடுக்க முடியாதென்று மறுத்து விடுவேன். இந்த யோசனை எப்படி தோன்றுகிறது உனக்கு?
ச. நிரம்ப அழகான யோசனை! -அம்மா! – நிரம்ப அழகு! – அம்மா, அழகான யோசனைகளைப்பற்றி பேசும்போது அழகான ரவை இழைத்த ஆபரணங் களின் ஞாபகம் வருகிறதெனக்கு. அப்பொழுது நீங்கள் ஒவ்வொரு மாசமும் ஒரு புதிய நகை பண்ணிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
பா. ஒன்றல்ல, எனக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை. இப்பொழுதென்ன வென்றால் நாம் அதற்காககெஞ்சி உதை வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ச. ஆமாம், நீங்கள் இவ்வாறு, எவ்வளவு லங்கணம் போட்டாலும், அப்பா பிடிவாதமாயிருந்து, விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஸ்திரமாயிருந்தாலோ?
பா. அவரால் அப்படியிருக்க முடியாது. அவர் அப்படிச் செய்யவும் மாட்டார். அவரை எனக்குத் தெரியாதா என்ன? ஆடவர்களெல்லாம் கோழை மனதுடை யோர்கள் தானே. நாம் பட்டினியால் சாகப்போகி றோமென்று பாசாங்கு செய்தால், அவர் எல்லாம் குரியாக வழிக்கு வந்து விடுவார்.
ச. ஒருவேளை அவர், நீங்கள் உண்மையில் பட்டினியாக வில்லை பாசாங்கு செய்கிறீர்களென்று கண்டு பிடித்து விட்டாலோ?
பா. யார் சொல்கிறது நாம் பட்டினியா யில்லையென்று? நாம் இந்த மூன்று நாட்களாகப் பட்டினியா யில்லையா? வீட்டில் ஏதாவது சமைத்து சாப்பிட்டோமா?
ச. அது என்னவோ வாஸ்தவம்தான்? தினம், ஒருடஜன் டம்ளர் காப்பி கொகோ, கொஞ்சம் நாஸ்தாக்கள், மூன்று நான்கு மத்யான போஜனம், ராத்திரியில் ஒன்றிரண்டு விருந்து சாப்பாடு, அவ்வளவுதான்! இம்மாதிரி பட்டினியாயிருப்பது எவ்வளவு கஷ்டம்!
பா. இதோ பார் பெண்ணே! இந்த குடும்பத்திற்கு அவமானம் கொண்டுவர, ஏனோ இதில் பெண்ணாய்ப் பிறந்தாய்? உன் தகப்பனாரிடம் என்னைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறாயென்று, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த மாதிரியான கெட்ட எண்ணங் களுக்காகத்தான் ஸ்வாமி உன்னை இளவயதிலேயே விதவை யாக்கினார் – என்ன வாகிலும் செய்யப் போகிறாய் பத்திரம்!
ச. அம்மா, நான் விதவையாய்ப் போனதைப் பற்றி, எந்நேரமும் நினைத்துக்கொண்டு, அதைப்பற்றி என்னை ஏசுவது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது! ஆயினும் – அம்மா – இதை நான் ஒருவருக்கும் வெளியிடுவதில்லை. உங்களைக் காட்டிக் கொடுப்ப தில்லை, என்று உமக்கு நான் பிரமாணம் செய்து கொடுக்க வில்லையா? ஏன் அப்படி பிரமாணம் செய்து கொடுத்தோமென்று எனக்கு வருத்தமாகத்தா னிருக்கிறது – ஆயினும்-
பா. பிரமாணம் செய்தது வருத்தமாகவா இருக்கிறது! நினைத்தேன்! துரதிர்ஷ்டம் பிடித்த மூதேவி! ஏனோ என் வயிற்றில் பிறந்தாய் நீ?
ச. ஏன் அப்படி பிறந்தேன் நான்? – எனக்கே தெரியவில்லை.
அம்மாயி வருகிறாள்.
அ. அம்மா அம்மா! கணபதி சாப்பாடு கொண்டு வந்திருக்கரான், அடுப்பண்டை போயிருக்கிறான்.
பா. சகுந்தலா, எழுந்திரு சீக்கிரம்! நாம் மறுபடியும் பட்டினியிருக்க ஆரம்பிக்குமுன், உள்ளே போய் ஒரு வாயாவது சாப்பிடுவோம்.
அ. நம்ப எஜமான் வண்டியெ போலெ ஒரு வண்டி வர்ரத்தே பாத்தேம்மா.
பா. என்ன! எசமான வந்தூட்டாரா?
அ. இல்லை அம்மா,நான் என்னா சொன்னேண்ணா,வண்டி மாத்திரம் நம்ப எசமான் வண்டியெப் போலயே இருந்துது. ஆனா கோச்மான் மாத்திரம் வேரே ஒரத்தன்; அது வேறே யாருதோ வண்டி.
பா. அப்பா! நல்லவேளே! பெண்ணெ, வா சீக்கிரம் போவோம். அம்மாயி, வெளியேபோய் காத்துக் கொண்டிருந்து, எசமான் வருவதைப் பார்த்தவுடன் எங்களுக்கு தெரிவி.
அ. அம்மா, இந்த ரெண்டு நாளா எனக்கு சாப்பாட்டுக்கு ஒண்ணுமில்லே அம்மா-எம் புருஷனுக்கு இன்னம் சம்பளம் வரலெ, வூட்லெ தம்மந்தூண்டு அரிசுகூட கெடயாது.
பா. என்ன வேண்டும் உனக்கு?
அ. அம்மா இஷ்டப்பட்டுக் கொடுக்கிறது.
பா. (பையைத்திறந்து, ஐந்து ரூபாய் அவளிடம் கொடுத்து) இதை இப்போதைக்கு வைத்துக்கொள்; அப்புறம் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்து நீ வேண்டியதை யெல்லாம் கொடுக்கிறேன்.
அ. அம்மா தயவு.
பா. அதிருக்கட்டும் அம்மாயி, உன் புருஷன் தன் சம்பளத்தையெல்லாம் உன்னிடம் கொடுக்கிறானா, அல்லது தினம் செலவுக்காக அவனிடம் நீ கெஞ்ச வேண்டி யிருக்கிறதா?
அ. ஹாம்! அவன் சம்பளத்தெ அவன் கிட்டவெ வைச்சிக்க அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்குதா? மாசம் வர்ர பதினைஞ்சி ரூபாயையும் அப்படியெ என் கையிலெ வைச்சுடணும், அப்பறம் அதிலெயிடுத்து, ஒரு ரூபா அவன் சொந்த செலவுக்கு நானு கொடுப்பேன். (போகிறாள்)
பா. பார்த்தாயடி சகுந்தலா! நம்முடைய சொந்த வேலைக்காரி அம்மாயியைவிட நான் தாழ்ந்த ஸ்திதியிலே இருக்கும்படி முடிந்தது!
ச. அம்மா, அவர்கள் வகுப்பில் பெண்சாதிதான் புருஷனை கொஞ்சம் ஆளுகிற வழக்கம்.
பா. கொஞ்சம் பொறுத்துப் பார்! உன் தகப்பனாரை முற்றிலும் ஆள்கிறேனோ இல்லையோ என்று
கணபதி வருகிறான்.
க. நேரமாகிறது. நீக்கள் உடனே உள்ளே வராவிட்டால், நீங்கள் ரொம்ப வாஸ்தவமா பட்டினியிருக்க வேண்டியது தான். (போகும்போது பார்வதி பாதி எழுதப் பட்ட ஒரு படம் வைத்திருந்த முக்கோணப் பலகையை கீழே தள்ளி, அதிலிருந்த படத்தைக் கிழித்து விடுகிறாள்)
ச. அம்மா! என்ன காரியம் செய்தீர்கள்! அப்பா வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த அந்த பார்சி பெண்பிள்ளையின் படத்தைக் கிழித்து விட்டீர்களே!
பா. அப்படியா செய்தேன்? ஆனால் மிகவும் சந்தோஷம்! அது ஸ்வாமியின் வேலை என் வேலையல்ல! அதை அங்கேயே அப்படியே விட்டுவிட்டு வந்துவிடு. பயந்து நடுங்கவேண்டிய காலமெல்லாம் போகவே போச்சுது!
அம்மாடு மறுபடி வருகிறாள்.
அ. அம்மா ! அம்மா! எசமான் வர்ராரு ! (எல்லோரும் பயந்து போகிறார்கள்)
காட்சி முடிகிறது.
இரண்டாம் காட்சி
இடம் – அதே அறை.
காலம் – உடனே.
தாமோதர சாஸ்திரி வருகிறார்.
தா. (சுற்றிப்பார்த்து கீழேவிழுந்து கிடக்கும் முக்கோணப் பலகையையும் கிழிந்த படத்தையும் கவனித்து) ஹும்! இவ்வளவுக்கு வந்து விட்டதா? இது யார் வேலை? – கணபதி! – கணபதி! – எல்லோரும் தூங்குகிறார்கள் போலிருக்கிறது. (பெருங்கவலையுடன் அங்கிருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்கிறார்; பிறகு அந்தப் படத்தை மறுபடியும் பார்த்து திடீரென்று எழுந்திருந்து, முக்கோணப் பலகையை சரியாக நிமிர்த்தி, அதில் படத்தை முன்போல் வைத்து, எப்படி கிழிந்திருக்கிறது எவ்வளவு கிழிந்திருக்கிறது, என்பதைப் பரிசோதித்துப் பார்க்கிறார்) என்ன ஆச்சரியம்! இது அகஸ்மாத்தாய் நடந்திருக்குமா? அல்லது வேண்டுமென்று யோசனை செய்து செய்யப்பட்டதோ? அகஸ்மாத்தாய் நேரிட்டதானால், முகம் எங்கு சித்திரிக்கப்பட்டிருந்ததோ, சரியாக அந்த இடத்தில் வேண்டு மென்று கெட்ட எண்ணத்துடன் கிழிக்கப்பட்டது போல் கிழிக்கப்பட்டிருக்குமா ? உம்!- சரி?- (மறுபடியும் சாய்வு நாற்காலியில் விழுகிறார். சற்று பொறுத்து எழுந்திருந்து, தன் மேல் சட்டையையும் தலைக்குட்டையையும் எறிந்துவிட்டு, கவலையுடன் சற்று உலாவி, மறுபடியும் நாற்காலியில் சாய்கிறார்.)
தா. இவ்வுலகத்தில் உயர்ந்ததும் தாழ்ந்ததும், நல்லதும் பொல்லதும், அழகும் அவலட்சணமும், சதாகாலம் இப்படி போராடுவானேன்? மனிதனுடைய மனக் கண்ணை மறைத்திருக்கும் இந்தத் திரையை நீக்கி தெய் வம் இப்படி விதித்ததின் காரணத்தை அறிய விரும்பு கிறேன்! – கணபதி!- கணபதி!
பட்டினியால் களைத்து உயிர் போதும் நிலையில் இருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு கணபதி வருகிறான்.
தா. நான் உன்னைக் கூப்பிட்டது உனக்குக் கேட்கவில்லையா? நான் என்ன நூறுதரம் கத்த வேண்டுமா?
க. (மிகுந்த பலஹீனமான மெல்லியகுரலுடன்) நானு கேட்டேன் – எசமான். ஆனாலும், நானு பதில் சொல்ல முடியலெ, சீக்கிரம் வரவும் முடியலெ. நேத்து மொதல் ஒண்ணும் சாப்பிடலெ. நானு எப்படி வேலை செய்வது? எப்படி நடப்பது?
தா. நீ கூட அந்த கோஷ்டியைச் சேர்ந்து விட்டாயா? நிச்சயமாய் நான் உன்னையும் கலியாணம் செய்து கொள்ள வில்லையே! என்னடாப்பா இந்த விளையாட்டு?
க. நான் என்ன செய்வது எசமான்? எனக்கு மாத்திரம் கொஞ்சம் சமையல் செய்து கொள்கிறேன் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்கள் அவர்கள். என் கையில் இருந்த பணத்தை யெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, நான் ஏதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவதையும் தடுத்து விட்டார்கள். நேற்று பகல் ஏதோ சாக்கு சொல்லி, மூணாவது வீட்லே போய் கேட்க, அவர்கள் ஏதோ இம்மாத்துண்டு கொடுத்ததை சாப்பிட்டேன். அதன் பிறகு ஒரு துளி பருக்கை கூடகிட்ட வில்லை. குழாய் ஜலத்தை குடித்துக் கொண்டு நான் எத்தனை நாள் உயிருடனிருக்கக் கூடும்?
தா. (காலை உதைத்துக் கொண்டு) கட்டாயமாய்! – கட்டாயமாய்! இதற்கு ஒரு முடிவு இருக்கவேண்டும்! இன்றைக்கெல்லாம் அவர்கள் ஒன்றுமே சாப்பிட வில்லையென்றா சொல்ல வருகிறாய் என்னிடம்?
க. இல்லவே இல்லைங்க! குழாயிலிருந்து ஒரு துளி தண்ணிகூட அவுங்க குடிக்கலெ!
தா. அவர்கள் எப்பொழுதும் இப்படியே நடக்கப்போகிறார்க ளென்று சொல்கிறாயா?
க. எசமானுக்குத் தெரியும் எல்லாம் ஒரு சமயம் அதிக காலமிருக்க முடியாது – இண்ணைக்கி ராத்திரிக்கே எல்லாம் தீர்ந்து போயிடுமிண்ணு நினைக்கிறேன்.
தா. என்ன- என்ன! அவர்கள் இன்றிரவு — எல்லாம் இறந்துபோய் விடுவார்களென்று சொல்கிறாயா?
க. எசமான், ஒரு நிமிஷம்கூட இங்கே இருக்க எனக்கு இஷ்ட மில்லெ- எனக்கு பயமாயிருக்குது பதினைஞ்சி வர்ஷம் எசமானிடத்திலே துரோகம் பண்ணாமெ வேலெ பார்த்து வந்தேன் — அத்தொட்டு, எசமான்கிட்ட சொல்லிட்டு உத்தரவு பெத்துகாமெ போவ எனக்கு இஷ்டமில்லெ – எனக்கு போவ உத்தரவு கொடுங்க – நானு எங்கேயாவது போயி பிச்செ எடுத்து பொழைச்சிகிறேன்.
தா. இதோ பார் – கணபதி – இது சரியா? இது நியாயமா? சரியாக இந்த சமயத்தில் நீயும் என்னைக் கைவிட்டுப் போகலாமா?
க. எம்பொஞ்சாதி புள்ளைங்கல்லாம் நாட்டுப்பொறத்துலெ இருக்கும்போது நானு இங்கே செத்து போரது சரியா? நியாயமா?
தா. நீ சாகமாட்டாய், அந்த மாதிரி ஒன்றும் நடக்காது. இந்தா இந்த பணத்தெ எடுத்துக்கொண்டு, ஹோட்டலுக்குப் போய் நன்றாக சாப்பிட்டு விட்டு, திரும்பி வரும் போது எனக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டு வா.
க. ஐயையோ! – அந்த பணத்தெ நானு தொடமாட்டேன்! உள்ளே இருக்கிறவங்களுக்கு இது தெரிஞ்சா எங்கதி என்னமாகுமோ எனக்குத் தெரியாது. – இந்த நிமிஷமே நானு செத்து பூடவேண்டி வந்தாலும் வரும். (உள்ளே கிளு கிளு என்று அடக்கப்பட்ட சிரிப்பு சப்தம் கேட்கிறது)
தா. யார் அங்கே சிரிப்பது?
க. சிரிப்பா? யார் சிரிப்பாங்க? அவுங்க இரும்பராப் போலெ இருக்குது.
தா. சரி!- நான் என்ன செய்வதென்று எனக்கு வாஸ்தவமாய்த் தெரியவில்லை – எல்லாம் ஒரே குழப்பமா யிருக்கிறது என் மனதில்.
மிஸ் மோஹர் வருகிறாள்.
தா. சரி, கணபதி, நீ போகலாம் உள்ளே இப்பொழுது – அப்புறம் உன்னை பார்க்கிறேன்.
க. அது வரையில் – நான் உயிரோடிருந்தா! (மிகுந்த கஷ்டத்துடன் நடப்பதுபோல் பாசாங்கு செய்கிறான்; அவர். பார்வைக்கு அப்பால் போனவுடன், திரும்பி நங்கு காட்டிவிட்டு, கேலி பண்ணிக் கொண்டு போகிறான்)
மோ. க்ஷேமம் தானே சாஸ்திரியார்?- நான் வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள். ஏதோ மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறாற் போலிருக்கிறதே, என்ன காரணம்? என்ன சமாசாரம்?
தா. நாளை காலைதான் வர முடியும், என்று நீ சொன்ன போது, இப்பொழுது நீ வருவாய் என்று நான் எதிர் பார்த்தேன், என்று நான் எப்படி சொல்லக் கூடும்? முடிவாக என்ன தீர்மானம் செய்தாய்? – என்ன செய்தாய்?
மோ. நேற்றுகாலை உங்களைப் பார்த்தபோது, அந்த வேலை எனக்கு வேண்டாம் என்று ஏறக்குறைய தீர்மானிக்கும் படிச் செய்தீர்கள் நீங்கள் — மாசம் ஐந்நூறு ரூபாய் சம்பளம், குடிக்கூலியில்லாத ஜாகை, இவைகளை யெல்லாம் வேண்டாம் என்று வெறுப்பது சுலபமான காரியமாக இல்லா விட்டாலும்! – என் சகோதரனுக்கு, அந்த கெயிக்வார் என்றால் கடுவிஷம் போல் கொஞ்சமும் ஆகாது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. நான் அந்த வேலையை ஒப்புக் கொள்வது தன்மனதிற்கு கொஞ்சமேனும் சம்மதமில்லையென்று கூறினான். அந்த வார்த்தை என்னை தீர்மானிக்கச் செய்தது. நான் வேணடாம் என்று எழுதி விட்டேன் – உடனே,
தா. மிகவும் சந்தோஷம் எனக்கு!
மோ. நான் சொல்வதை முற்றிலும் கேட்டால், அப்படி உமக்கிராதென்று நினைக்கிறேன். இன்று காலை எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது – அதைப் பார்த்த பிறகு எல்லா விஷயங்களும் – வேறு மாதிரியாகத் தோற்றத் தலைப்பட்டன.
தா. கெய்க்வார் இன்னும் அதிக சம்பளம் முதலியன கொடுப்பதாக எழுதினாரோ? உன்னை அங்கே வர, ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக?
மோ. இன்னும் அப்படி எழுதவில்லை – அப்படிப் பட்ட பெரிய காரியத்தைச் செய்வதற்கு இன்னும் அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லை போலும்-
தா. ஆனால் – பிறகு என்ன?
மோ. சாஸ்திரியார், கொஞ்சம் தயவு செய்து பொறுங்கள். நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன்.- நான் உங்களை மறுபடியும் பார்க்கக்கூடுமோ என்றே சந்தேகப் பட்டேன் – நான் அதைப்பற்றி கவலை யுடன் எல்லாம் யோசித்துப் பார்த்தேன் — பிறகு –
தா. எதைப்பற்றி இதெல்லாம்?
மோ. கடைசியாக, எல்லா விஷயங்களையும் உம்மிடம் கூறி, நீங்களே எனக்காக முடிவு பண்ணுங்கள் என்று கேட்க வேண்டுமென்னும் தீர்மானத்திற்கு வந்தேன் நீங்கள் நன்றாய்க் கற்றறிந்த சாஸ்திரியார் — அன் றியும் உலக அனுபவம் அதிகமாக உடையவர்-
தா. ஆம் – ஆம் – அப்படித்தான் நானும் எண்ண வேண் டும் போலும்.-ஆயினும் – வாஸ்தவமாய் என்னிடம் என்ன சொல்ல வந்தாய்?- இந்த பீடிகை யெல்லாம் எதற்காக?
மோ. அவசரப்படாதீர்கள் சாஸ்திரியார். உங்களிடம் எல்லா வற்றையும் தெரிவித்து, நீங்களே முடிவாகத் தீர்மானம் செய்ய வேண்டுமென்று கேட்க வேண்டு மென்னும் உறுதியுடன் வந்திருக்கிறேன்.- உம் – இக் கடிதத்தைப் பாருங்கள்.- நீங்களே இதைப் படித்துக் கொள்ளுங்கள்! – இன்று காலை எனக்கிது கிடைத்தது – இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை எழுதியது யார் என்று எண்ணுகிறீர்கள்?
தா. (அக்கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். அப்படிச் செய்யும்போது அவர் முகம் மாறுகிறது; கதவுகளின் பக்கங்களி லிருந்தும், ஸ்கிரின்கள் பின்னாலிருந்தும், முகங்கள் மறைவாக எட்டிப் பார்க்கின்றன) என்ன அவதூறு! என்ன தூஷணம்!- உலகம் இக் கதிக்கும் வருமா? – உலகில் ஒப்புயர்வில்லா உத்தமி! கற்பிற்கரசி!- ஏன்? இது கையெழுத்தில்லாத – கடிதம்.-
மோ. அப்படித்தான்; அதனால்தான் அதன் விஷமம்! கையெழுத்து போடாத கடிதம் யாருடையதாக வேண்டினு மிருக்கலாம்- ஆனால் அது எல்லோருடைய தாகவு மாகிறது!
தா. அப்படியல்லவேயல்ல, கையெழுத்து போடாத கடிதம் இன்னாருடையது என்று நாம் சொல்ல முடியாது, ஆகவே ஒருவரும் எழுதவில்லை என்றபடியாம்.
மோ. அக்காகிதத்தை எழுதியது அல்லது எழுதி வைத்தது யாரோ – அனாமத் பேர்வழி யன்று – யாராக இருக்க வேண்டும் என்று உங்களால் அனுமானிக்க முடியாதா?
தா. முடியாது- இது ஒன்றும் புரியவில்லை எனக்கு – இந்த உலகனைத்திலும் எனக்கு விரோதிகள் ஒருவருமேயில்லை.
மோ. ஒரு இடத்தில் – ஒரு இடத்தில் தவிர-அது எங்கே சொல்லுங்கள்?
தா. எங்குமில்லை.
மோ. உங்கள் சொந்த வீட்டிலோ?
தா. அப்படி இருக்கக்கூடும் என்பது– என் மனதிற் படவில்லை.
மோ. ஆம் ஆகாசத்திலிருக்கும் நட்சத்திரங்களைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, தங்கள் அருகிலிருப்பதைக் காணக் கண்ணில்லை.
தா. அப்படி-யிருக்கக் கூடுமா?
மோ. வேறென்ன இருக்கக்கூடும்?
தா . தெரிகிறது!
மோ. என்ன?
தா. அநேக விஷயங்கள் இப்பொழுது எனக்கு ஸ்பஷ்டமாகிறது.
மோ. எப்படி? நீங்கள் எனக்கு தெரிவிக்க மாட்டீர்களா?
தா. சரி – உன்னிடம் நான் ஏன் சொல்லக்கூடாது? நீ ஒருத்திதான் எனக்கு உண்மையான சிநேகிதியா யிருந்திருக்கிறாய் – கடந்த மூன்று நாட்களாக இந்த வீட்டில் ஒரு ஹர்த்தால் ஏற்பட்டிருக்கிறது.
மோ. வீட்டில் ஒரு ஹர்த்தாலா? உமது அபிப்பிராயம் என்ன?
தா. வீட்டில் சமையலே கிடையாது — எல்லோரும் பட்டினி யிருக்கிறார்கள். இந்த மூன்று நாட்களாக என்மனைவி யும் பெண்ணும் ஒரு பருக்கையும் புசிக்கவில்லை.
மோ. எப்படி!- ஏன்? என்ன காரணத்தால்?
தா. உம்– இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வந்தது; கடைசிகாரணம் மூவாயிரம் ரூபாய்க்கு, என் மனைவிக்கு ஒரு ரவை அட்டிகை நான் வாங்கிக் கொடுக்க மறுத்ததாம்.
மோ. நீங்கள் ஏன் வாங்கிக் கொடுக்கவில்லை?
தா. அந்த பணத்திற்கு நான் எங்கே போவது? – நான் என்ன கோடீஸ்வரனா?
மோ. ஆயினும், இது எனக்கு அர்த்தமாக வில்லை. – இதற்காக அவர்கள் பட்டினி யிருப்பானேன்?
தா. இது மௌனமாய் எதிர்ப்பது – அல்லது ஒத்து உழையாமை இதற்கு, ஏதாவது உனக்கிஷ்டமான பெயரை வைத்துக் கொள்.
மோ. ஓ! தெரிகிறது! அதுவா சமாசாரம்?- உம்!- சரி, சாஸ்திரிகளே, உங்களை நான் ஒரு கேள்வி கேட்கலாமோ? நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது – நிச்சயமாய்! – நீங்கள் ஒன்றும் மறைக்காமல் எனக்கு பதில் சொல்ல வேண்டும். – சரி இந்த ஹர்த்தால் ஆரம்பமாகு முன், உங்கள் மனைவி உங்களிடம் என்னைப் பற்றி ஏதாவது பேசினார்களா?
தா. உம் – எனக்கு ஞாபகமில்லை – அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் அந்த வைர அட்டிகையால் விளைந்ததென்று உறுதியாக நம்புகிறேன்.
மோ. இருக்கலாம், சாஸ்திரியாராகிய நீங்கள் கூறுவது சரியாயிருக்கலாம். ஏனென்றால் சாஸ்திரிகளெல்லாம் மிகுந்த புத்திசாலிகள்; அவர்கள் சொல்வது எப்பொமுதும் சரியாகத்தா னிருக்கும் – ஆயினும் நான் கேட்ட கேள்வி, என்னைப் பற்றி உம்மிடம் ஏதாவது பேசினார்களா, என்பது தான் – ஞாபகப் படுத்திப் பாருங்கள்.
தா. ஆம் – பேசினாள், என்று நினைக்கிறேன் – உன்னோடு கூட படங்கள் எழுதி பணத்தை செலவழிப்பதாகவும், இன்னும் இப்படிப்பட்ட பல விஷயங்களைப் பற்றியும்.
மோ. இப்படிப்பட்ட – பல விஷயங்கள்!- சரிதான் – நான் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம் அவ்வளவுதான். இப்பொழுது, சாஸ்திரியார், நான் உத்திரவு பெற்றுக் கொள்ளுகிறேன். நான் நாளை தினம் சென்னைக்குப் போகிறேன்; ஒரு வேளை அங்கிருந்து பரோடாவுக்குப் போனாலும் போவேன் – யாருக்குத் தெரியும்? நாமிருவரும் மறுபடியும் சந்திப்போமோ என்னவோ? – யார் நினைத்திருப்பார்கள்? இப்படி-
தா. மிஸ் மோஹர்!-
மோ. என்ன?
தா. இது உண்மைதானா?
மோ. இதுதான் உலகம்!
தா. ஐயோ ! அப்படி யிருக்கக்கூடாது!
மோ. எல்லாப் பொருள்களிலும் அழகையும் நன்மையையும் காண்கின்ற ரசிகரான சாஸ்திரியாருக்கு, இப்படி யிருக்கக்கூடாது, ஒருவேளை-
தா. சாஸ்திரங்கற்ற ரசிகனை – சாம்பலாக்கு!
மோ. (திடீரென்று, கிழிந்து கிடக்கின்ற படத்தைக கண்ணுற்று) அதிருக்கட்டும் – இது செய்தது யார்?
தா. உண்மையில் எனக்குத் தெரியாது – நான் இங்கு வந்தவுடன் இப்படி இருப்பதைக் கண்டேன்.
மோ. இது கெட்ட சகுனமாம், என்று நினைக்கிறேன். இப்படி இருக்க வேண்டியதுதான் சரியோ, என்னவோ?
தா. ஈசனே! ஈசனே! தயவுசெய்து இப்படி பேசாதே.
குண்டு ராவ் வருகிறார்.
கு. ஏனப்பா தாமு! உன்னைப்பார்த்து ஒரு யுகமாச்சுதே – ஓ ! மிஸ் மோஹர்! வா அம்மா? – க்ஷேஷமந்தானே? – நான் இச்சமயம் வந்திருக்கலாகாது – தப்பிதம் –
மோ. வாருங்கள் – மிஸ்டர் குண்டுராவ்! எல்லாம் மிகவும் க்ஷேமந்தானே?
கு. நிரம்ப ! நிரம்ப!- கேட்டதற்காக வந்தனம்.
தா. உட்காருங்கள் குண்டுராவ். ஏதாவது வேலையாக வந்தீர்களா?
கு. எனக்கென்ன வேலை யிருக்கிறது? அகஸ்மாத்தாய் நான் இந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கும் போது, இங்கே உள்ளே நுழைந்து, உங்கள் மனைவியும் பெண்ணும் எப்படியிருக்கிறார்கள் என்று, கேட்டு விட்டுப் போகலாமென்று என் மனதில் பட்டது.
தா. என்ன?- அவர்களுக்கென்ன?
கு. இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன், அவர்கள் மிகவும் காயலா யிருப்பதாக.– டாக்டரும் கைவிட்டு விட்டாராம் – அவர்கள் கடைசி காலம் – என்ன கேடு கெட்ட உலகம் இது!-
மோ. என்ன கேடுகெட்ட உலகம் இது!
கு. அவர்களுக்கு ஒன்றுமே யில்லையா? – எனக்கு மிகவும் சந்தோஷம்:
தா. அப்படியல்ல – அவர்கள் வயிற்றில் ஏதோ கோளாறு இருக்கிறதென நினைக்கிறேன்.
மோ. வயிற்றிலா – கோளாறு- என்று கூறினீர்கள்?
கு. உலகத்திலுள்ள எல்லோருடைய வயிற்றிலும் கோளாறு இருக்கிறதென்பது நிச்சயம்.
மோ. அது எனக்குத் தெரியாது, நான் வயிற்றுக் கோளாறுகளைப் பற்றி கற்றறிந்த வயித்தியனல்ல. ஆயினும் வயிறுகளைத் தவிர்த்து, தர அவயவங்களிலும் கோளாறுகள் ஏற்படக்கூடுமென்று நினைக்கிறேன். – சரி- சாஸ்திரியார் நான் விடை பெற்றுக்கொள்கிறேன். – நான் புறப்படவேண்டும் நிச்சயமாய்.
தா. குண்டுராவ், உங்களுக்குத் தெரியுமா? மிஸ் மோஹர் நம்மையெல்லாம் விட்டுப்போவதாகச் சொல்கிறார்கள். – திருச்சூழியையே விட்டுப் போகிறார்களாம்.
கு. இராது! – அது அசாத்தியம்! இரண்டு மூன்று தினங்களாக, ஏதோ அப்படி ஒரு வதந்தி கேள்விப்பட்டேன் – ஆயினும், அதை நான் நம்பவேயில்லை.
மோ. குண்டுராவ், நீங்கள் கூட நம்பாத வதந்திகள் இந்த உலகத்தில் ஏதாவது இருக்கிறதோ?
கு. ஆம் – இருக்கின்றன- வதந்திகளிலும் வதந்திகள் இல்லையா? இந்த வதந்திகளெல்லாம் இல்லாவிட்டால் இவ்வுலகம் எப்படி உயிர் வாழ்வது?
மோ. ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்!- இந்த உலக வாழ்க்கைக்கு வதந்தி சட்னியைப் போலவாம்; அது இல்லாவிடில் சமூக வாழ்க்கையே சாரமற்றதாம்.
கு. ஆமாம் மிகவும் உண்மைதான், எனக்கு சட்னி என்றால் மிகவும் பிரியம்.
தா. (மிஸ் மோஹரிடம்) சரி – நீ போவதன்முன் நான் உன்னை மறுபடியும் பார்க்கக்கூடுமா?
கு. அது கூடவே கூடாது – என்ன அப்பா தாமு,இந்த அம்மாளை திருச்சூழியைவிட்டு அவ்வளவு சுலபமாகப் போக விடுகிறாயே? திருச்சூழியில் இந்த அம்மாள் தான், இந்திய சமூகத்திற்கும், ஆங்கில சமூகத்திற்கும் உயிர்நிலை போன்றவர்கள்; ஸ்திரீகளில் இவர்களிலும் மிஞ்சிய கற்றறிந்தவர்கள் இல்லையே.
மோ. இந்த உபன்யாசத்தின் முடிவில் நான் விடைபெற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி.
கு. அது ஒருகாலும் கூடாது – நான் நாளைக்கே இதை ஆட்சேபிப்பதற்காக, மைதானத்தில் ஒரு பெருங் கூட்டம் கூட்டி-
மோ. அது மிகவும் சிறப்பான ஓர் யோசனை! – இதற்குள்ளாக நான் போய் விடுகிறேன்.
தா. நீ கடைசியாகத் தீர்மானிப்பதன் முன், இன்னொரு முறை யோசித்துப் பார்த்தல் நலமெனத் தோன்று கிறதெனக்கு.
கு. உங்களுக்கிடையில் நான் வருவது நியாய மல்லவினி. நான் போய் வருகிறேன்.
மோ. வேண்டாம், நான் இதோ உடனே போய் விடுகிறேன்.
தா. ஏதாவது புதிதாய்த் தீர்மானிப்பதன்முன், மூன்றிரவு அதைப்பற்றி யோசித்துக் கழிக்கவேண்டு மென்கிறார்களே?
மோ. அதற்குள்ளாக அந்த தீர்மான மெல்லாம் கரைந்து மாயமாய்ப் போய்விட! இது சாஸ்திர ரசிகர்களுடைய தர்ம சாஸ்திரம் போலும் – சரி- நான் வருகிறேன். நான் எப்படி தீர்மானிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.- வருகிறேன்.
தா. போய் வா. (மிஸ் மோஹர்வாலா போகிறாள்)
கு. திருச்சூழியைவிட்டு வாஸ்தவமாய்ப் போகிறார்களா? அதை நான் நம்பவில்லை தாமு.
தா. அது சரிதான்; குண்டுராவ்தான், தான் பார்க்கும் எதையும் நம்புவதில்லையே, பார்க்காதவற்றைத்தான் அவர் நம்புகிற வழக்கம்.
கு. என்னப்பா தாமு? இதுதானோ, உன் ஆயுள் பரியந்த சிநேகிதரைப்பற்றி உன் மதிப்பு!
தா. உங்களைப்பற்றிய மதிப்பல்ல இது. உலக முழுவதும் கோடானு கோடி குண்டுராயர்கள் குடிகொண்டிருக்கிறார்களே.
கு. இப்பொழுது நீங்கள் ஏதோ சஞ்சல புத்தியில் இருக்கிறீர்கள், நான் புறப்படுகிறேன்.
தா.வாஸ்தவம் – போய் வாருங்கள்! (குண்டுராவ் போகு முன் கடைசியாக ஒரு முறை சாஸ்திரியாரை ஏற நோக்கிவிட்டுப் போகிறார்; தாமோதர சாஸ்திரி கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்து யோசித்து விட்டு, பிறகு திடீரென்று சாய்வு நாற்காலியின் மீது சாய்கிறார்)
(காட்சி முடிகிறது.)
மூன்றாம் காட்சி
இடம் – சாஸ்திரியார் வீட்டின் கூடம்
காட்சி – ஆரம்ப மாகும்பொழுது பார்வதியும் சகுந்தலாவும் ஏதோ தங்களுக்குள் கேலிபண்ணிக் கொண்டிருந்தது போல் காணப்படுகின்றனர்.
பா. (உற்றுக் கேட்டு) அதோ ! உன் தகப்பனார் வருகிறார்! – படுத்துக்கொள்.
ச. ஆமாம் அம்மா ஆயினும் நான் அப்பாவுடன் பேசக் கூடாதா?
பா. கூடாது! – வாயை மூடு !- அதோ! (இருவரும் படுத்துக் கொண்டு போர்வைகளைப் போர்த்திக் கொள்கின்றனர்)
தாமோதர சரஸ்திரி மெல்ல வருகிறார்.
(சாஸ்திரியார் அருகில் வரும்போது அவர்கள் மிருந்த பாதை அனுபவிப்பதுபோல் பெருமூச்சு விடுகின்றனர்)
தா. ஹும்!–இது எப்பொழுது முடியப் போகிறது?
பா. முடிவா? சீக்கிரமே முடிந்துவிடும் பயப்படாதீர்கள். இன்றிரவு கழியும் வரையில் நாங்கள் பிழைத்திருக்க எங்களுக்குச் சக்தியில்லை என்று நினைக்கிறேன்.- நமக்கு சக்தி யிருக்கிறதா சகுந்தலா?
ச. அது ஸ்வாமிக்குத்தான் தெரியும் அம்மா.
தா. சகுந்தலா, துர் அதிர்ஷ்டம் வாய்ந்த பெண்ணே, நீயும் உன் தாயாருடன் கலந்து கொண்டாயா இதில் உன் முழுமனதுடன்?
ச. நான் என்ன செய்தேன் அப்பா?
தா. எங்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு, நீங்கள் ஆளப் பார்க்காதீர்கள் தயவு செய்து, இது அரசாட்சி யல்ல – மனையாட்சி: தாயாரையும் மகளையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது – முடியுமா சகு?
ச. எப்பொழுதும் – பிரிக்க – முடியாதம்மா.
தா. சரி- சாகவேண்டுமென்று விருப்பமிருந்தால், இந்த மாதிரியாகப் படிப்படியாகப் பாதைப்பட்டு சாகும் மார்க்கத்தை ஏன் கோரினீர்கள்? இதை அறிய இச்சைப்படுகிறேன்.
பா. இதைத்தவிர நாங்கள் வேறு என்ன செய்திருக்கக் கூடும்?
தா. பழயகாலத்தில் ஸ்திரீகள் குளங் குட்டைகளின் மீது ஆசைப்பட்டிருந்தார்கள்.
பா. ஓ! தெரிகிறது எனக்கு! இன்று இரவுகூட நாங்கள் உயிர் பிழைத்திருப்பது உங்களுக்கு இஷ்டமில்லை. அவ்வளவு அவசரமா யிருக்கிறது உங்களுக்கு! சகுந்தலா, இவர் சுகமாய் வாழ்வதற்குத் தடங்கலாக, நாம் ஏன் குறுக்கே இருக்க வேண்டும்? எழுந்திரு, வா என்னுடன் – ஏதாவது கிணற்றில் போய் விழுந்து விடுவோம். பிறகு அவர், அவருடைய அத்யந்த சிநேகிதர்கள் – ஆண் – பெண்களுடன் – கவலையின்றி, சந்தோஷமாய் வாழட்டும். (பார்வதி எழுந்திருப்பது போல் பாசாங்கு செய்து, படுக்கையில் மல்லாக்காக விழுகிறாள்)
ச. அம்மா, இது பிரயோசனப்படாது.
பா. குழந்தை, நீ சொல்வது சரிதான். அன்றியும் இங்கிருந்து கிணறு வரையில் நடந்துபோய் அதில் குதிக்க, இப்பொழுது யாருக்கு பலமிருக்கிறது ? – உங்களுக்கு விருப்பமானால், எங்களிருவரையும் தூக்கிக்கொண்டு போய் அதில் போட்டு விடுங்கள்! அப்பொழுதாவது நீங்கள் மிகவும் சந்தோஷமா யிருப்பீர்கள்.
தா. உம் – இன்றைக்கெல்லாம் நீங்கள் இருவரும் ஒன்றும் சாப்பிட வில்லையா!
பா. குழந்தை, நாம் கடைசியில் எப்பொழுது சாப்பிட்டோம்?
ச. ஸ்வாமிக்குத்தான் தெரியும் அம்மா.
தர். இந்த சாகசமெல்லாம் எதற்காக? நீங்கள் வேண்டுவதென்ன?
பா. எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்! சக்கு, நமக்கு ஏதாவது வேண்டியிருக்கிறதா?
ச. வேண்டியது ஒன்றுமே இல்லை அம்மா.
தா. சரி, நாளைக்கு உனக்கு அந்த ரவை அட்டிகையை வாங்கித் தருகிறேன், எழுந்திருந்து ஏதாவது சாப்பிடுங்கள். நாளை காலை என் வீட்டில் இரண்டு பிரேதங்கள் விழுந்திருக்க வேண்டாம் :- உலகெல்லாம் என்னைப் பழிக்க வேண்டாம்.
பா. (கொஞ்சம் எழுந்திருந்து) உங்கள் ரவை அட்டிகை யாருக்கு வேண்டும் இனிமேல்?
தா. நிரம்ப சரி ! இப்படி நீங்கள் எல்லாம் ஒரே பிடிவாத மாயிருந்தால், நான் என்ன செய்யக்கூடும்? மடையர்களை அறிந்து கொள்வதற்கு அவர்கள் பிடிவாதம் தான் முக்கிய அறிகுறியாகும். நான் போய் அந்த ரவை அட்டிகை வேண்டாமென்று சொல்லி விடுகிறேன்.
பா. அடம் பிடித்தல்தான் உத்தமர்களான ஆடவர்களுக்கும் பெண்மணிகளுக்கும் அலங்காரம்.
தா. சும்மா அடம்பிடிக்க இஷ்டமா அல்லது அழகிய அட்டிகையை அணிய இஷ்டமா, என்று சீக்கிரம் உன் மனதில் தீர்மானம் செய். – சீக்கிரம்!
பா. ஆண் மக்களுக்கெல்லாம், எப்பொழுதும், எல்லாம் அதிக அவசரம்தான் – தற்கால நாகரீகத்தைப்போல்!
தா. நீ பார், நாங்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது, நாங்கள் படுத்துக்கொண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்க முடியாது. – கடைசியில் தூக்கிக் கொண்டு போகிறார்களே அந்த காலம் வரும் வரையில். இப்பொழுது நான் சொல்வதைக் கேள், நான் மூன்று எண்ணுவதற்குள் நீ எழுந்திருக்கா விட்டால், அந்த ரவை அட்டிகை எப்பொழுதும் நம்முடைய வீட்டை எட்டிப் பார்க்காது; நீ இப்படியே பட்டினியிருந்து செத்துக் கொண்டே யிருக்கலாம் எப்பொழுதும் என் வரையில் – ஒன்று – இரண்டு –
பா. (பெருமூச்சு விட்டுக்கொண்டு, மிகுந்த கஷ்டத்துடன் எழுந்திருப்பதுபோல் மெல்ல எழுந்து) இந்த ஆடவர்கள் தான் என்ன கொடுமையான பிடிவாதக்காரர்களா யிருக்கிறார்கள்!
தா. அதெலலாம் பழய காலத்தில்! தற்காலம், கொடுமையான பிடிவாதக்காரர் களாயிருப்பது உங்களுடைய முறையாகும். – எழுந்து ஏதாவது சாப்பிடுகிறாயா?
பா. வயிறு எரியும்போது சாப்பாடு வேண்டியிருக்குமோ யாருக்காவது ?
தா. ஏன்? இன்னும் எதற்காக வயிற்றெரிச்சல்?
பா. ஒரு மனுஷியாகவும், மனைவியாகவும் நடத்தாமல், என்னை என்னை – உங்கள் வேலைக்காரியைப் போல் – நடத்துகிறீர்களே! – அதற்காக – (தேம்பி அழுகிறாள்)
தா. உன்னை யார் அப்படி அடிமையாக பாவிப்பது?
பா. யாரா? கலியாண காலத்தில் ஓமாக்னியின் முன்பாக என்னைத் தன் ராணியாகப் பாவிப்பதாகச் சத்தியஞ் செய்து கொடுத்தவர்!
தா. அது சரிதான் – நீ ராணியாயிருக்க முடியுமா, நான் ராஜாவாக இல்லா விட்டால்?
பா. கணவர்கள் எல்லாம் எப்போதும் ராஜாக்கள் தான் – குரூரமான கொடுங்கோல் அரசர்கள்!
தா. ஆமாம் என்றால்! நீ கூறுவது மிகவும் உண்மையெனத் தோன்றுகிறது 1918-ம் ஆண்டில் முடிந்த பெரிய யுத்தத்திற்குப் பிறகு, ஜெர்மனி அரசர் இருந்த ஸ்திதியில்தான் நான் இருப்பதாக நினைக்க ஆரம்பிக்கிறேன்.- துரதிர்ஷ்டம் பிடித்த ராஜா! இன்னும் என்ன என் ராணியே?
பா. ஹும்!- நல்ல ராணிதான் ! ஒரு பைசாவுக்குக்கூட பிச்சை யெடுக்க வேண்டியவள்!
தா. அரை காசுக்கா ஆசைப்பட்டாய்? நீரவை அட்டிகைக்காக ஆசைப்பட்டாயென்று எண்ணினேனே!
பா. இன்றைக்கு அட்டிகைக்கு வேண்ட வேண்டும் நாளைக்கு கை வளையலுக்கு வேண்ட வேண்டும்! எப்பொழுதும் பிச்சை யெடுப்பதுதானே என் கதி! நான் ஒரு மனைவியாகப் பாவிக்கப் படுகிறேனா? எதிர் அகத்து (ஆத்து) லட்சுமி தன் புருஷன், அவன் சம்பளம் அவ்வளவையும், மாசம் முதல் தேதி, தன் கையில் கொடுத்து விடுவதாகச் சொல்கிறாளே-
தா. கொடுத்துவிட்டு மாசத்தில் மற்ற நாட்களெல்லாம் அவளிடம் பிச்சை கேட்கிறானோ?
பா. புருஷர்களைப்போல் பெண்சாதிமார்கள் அவ்வளவு அநியாயக்காரிகள் அல்ல :- நீ என்ன சொல்கிறாய் சகுந்தலா?
ச. நான் எப்பொழுதும் மனைவியாக வாழ்ந்த தில்லையே அம்மா, ஆகவே எனக்குத் தெரியாது. ஆயினும் விதவைகளாகிய நாங்கள் எப்பொழுதும் மிகவும் நியாயமாக நடந்து கொள்கிறோம் என்பது நிச்சயம் – உங்களுக்கு அப்படித் தோற்றவில்லையா அம்மா?
பா. அம்மட்டும், விதவைகள் தங்கள் புருஷர்களிடம் பிச்சை கேட்க வேண்டிய நிமித்தியமில்லை.
தா. அவசரப்படாதே பார்வதி ! உனக்கும் காலக்கிரமத்தில் அப்பதவி கிடைக்கலாம் பார்.
பா. விதவையாகி யார் உயிர்வாழ விரும்புவார்கள்?
தா. அதோ தோ! அழ ஆரம்பிக்காதே!- எழுந்திருந்து ஏதாவது சாப்பிடப் போ.
பா. மாட்டேன்! நான் எழுந்திருக்க மாட்டேன்; இப்படியே பட்டினிகிடந்து சாகப்போகிறேன் – இவ்விடத்திலேயே! – நீங்கள் இனிமேலாவது என்னை ஒரு அடிமையாகவும் பிச்சைக்காரியாகவும் பாவிக்காது, உமது மனைவியாகப் பாவிப்பதாக வாக்குக் கொடுக்கா விட்டால்.
தா. உன்னை மனைவியாகப் பாவிப்பதென்றால் – அதாவது மாசம் முதல்தேதி என் சம்பளம் முழுவதையும் உன்னிடம் ஒப்புவித்து விடவேண்டு மென்கிறாய்?
பா. ஏன் அப்படிச் செய்யக்கூடாது? எனக்கு, அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, உடன்பிறந்தார் யாராவது இருக்கிறார்களா என்ன, அப்பணத்தை யெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துவிட?
தா. அவர்கள் இல்லைதான்! டாக்கர் ஆர் அண்டு சன்ஸ் – கொட்டடியா முதலியவர்கள் எத்தனை பெயர் இருக்கிறார்கள்!
பா. அப்படித்தான் செலவழித்தால் என்ன கெட்டுப் போகிறது? நகையாகப் பண்ணிப் போட்டால் பணம் எப்பொழுதும் செலவழிந்து போகாது, பாழாய்ப் போகாது! பாங்கியி லிருப்பதை விட க்ஷேமமாயிருக்கும். வர வர அவைகளின் விலை இரண்டு பங்கு, மூன்று பங்கு, நான்கு பங்கு, உயர்ந்து கொண்டே போகாதா?
தா. உன்னை இந்த க்ஷணமே கவர்ன்மென்டார் கஜானா மந்திரி யாக்கிவிட வேண்டுமென்று எண்ணுகிறேன் ! கவர்னர் அவர்களுக்கு இந்த யோசனை ஏன் தோன்ற வில்லை யென்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
பா. (மறுபடியும் படுத்துக்கொண்டு) இந்தக் குறும்புக ளெல்லாம் போதும்! பேதைகளாகிய எங்களுக்கும் ஒரு காலம் வரும்!- கொஞ்சம் பொறுங்கள்!
தா. இப்பொழுதே உங்களுக்கும் காலம் வந்திருக்கிறதே! – பார்வதி – நீ நீதானே இப்பொழுது ஜெயித்து வருகிறாய்!- எழுந்திரு.
பா. இல்லை – நான் மாட்டேன்!
தா. நீ கேட்பதை யெல்லாம், ஏறக்குறைய, கொடுப்பதாக, நான் வாக்குக் கொடுத்தால் கூடவா?
பா. ஏறக்குறைய ! – என்றால் அதற்கர்த்த மென்ன?
தா. ஏன் சம்பளத்தில் மாசம் மாசம், உனக்கு நான் பாதி கொடுப்பதாக எண்ணிக்கொள்ளேன்.
பா. நீங்கள் வேண்டுமென்றால் எதையாவது எண்ணிக் கொள்ளுங்கள். நான் அம்மாதிரியாக ஒன்றையும் எண்ணிக்கொள்ள மாட்டேன். உங்கள் சம்பளத்தில் பாதி எனக்குக் கொடுத்தால் – மற்ற பாதி எங்கே போகிறது?
தா. அதை நான் என் செலவுக்காக வைத்துக் கொள்கிறேன்.
பா. உங்கள் செலவுக்காக! போதும்! இந்த மனையை ஆளுவதென்றால் ஒருவர் ஆள வேண்டுமேயொழிய இரண்டு பெயர் ஆளமுடியாது!
தா. நிச்சயமாய் – இது என்ன மடத்தனம்!
மணி வருகிறான்.
தா. யார் அது?
ம. பரமானந்தபவன் ஹோட்டலிலிருந்து வந்திருக்கிறேன், எங்கள் எசமான் கோபால்ராவ் என்னை அனுப்பினார்.
(பார்வதியும் சகுந்தலாவும் அசட்டு முகத்துடன் கலவரப்பட ஆரம்பிக்கிறார்கள்)
தா. எதற்காக?
ம. புரொபசர் (Professor) தாமோதர சாஸ்திரியார் இந்த வீட்டில் குடியிருக்கிறாராமே?
தா. இருக்கிறார் – ஒரு விதத்தில், அவரிடம் உனக்கென்ன அலுவல்?
ம. அவர் எங்களுக்கு பதினெட்டு ரூபாய் எட்டணா பாக்கி கொடுக்க வேணும், அதை வாங்கி வர எனக்கு உத்தர வாயிருக்கிறது.
(பார்வதியும் சகுந்தலாவும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்)
தா. என்ன அறிவின்மை! நான் உங்கள் ஹோட்டலுக்கு வந்ததுமில்லை, அங்கு ஒன்றும் சாப்பிட்டது மில்லையே.
ம. இங்கே கணபதி என்கிற ஆள் ஒருவன் இல்லையா? சமயற்காரன்?
தா. ஆம், இருக்கிறான், அவனைப் பற்றி என்ன?
ம. சாஸ்திரியாரின் பெயரைச்சொல்லி அவன் வாங்கிக் கொண்டு போனான்.
தா. என்ன வாங்கிக்கொண்டு வந்தான்? எப்பொழுது? ?
ம. சாப்பாடும் – பலஹாரமும் – இரண்டு நாளைக்கு முன்பாக நாலறை ரூபாய்க்கு – நேற்று ஐந்து ரூபாய் எட்டணாவுக்கு – இன்றைக்கு ஏழரை ரூபாய்க்கு.
(பார்வதியும் சகுந்தலாவும் பின்புறமாக, அவனைப் போய்விடும்படி அதிகமாகச் சைகை செய்கிறார்கள்)
தா. என்ன இதெல்லாம்!- கணபதி!- கணபதி! – எங்கே கணபதி?- எங்கே போனான் அவன்?
பா. அவன் இங்குதான் இருந்தான்-
தா. கணபதி!- கணபதி!
அம்மாயி வருகிறாள்.
அ. எசமான், கொஞ்ச நாழிக்குமின்னே, கணபதி கையிலெ ஒரு மூட்டையெ எடுத்துகினு, போவும்போது பாத்தென்; நானு கேட்டதுக்கு அவன் வேலையெ உட்டுட்டுப் போறதாவ சொன்னான்.
தா. (கோபத்துடன்) என்ன இதெல்லாம்?
பா. எனக்கென்ன தெரியும்?
தா. நீ அவனை சாப்பாடும் பட்சணங்களும் வாங்கிவரும்படி அனுப்பினாயா?
ம. ஆமாம், கணபதி– வீட்டிலேயிருக்கும் பொம்மனாட்டிகளுக்கு என்று சொன்னான்.
தா. ஓ! அப்படியா சமாசாரம்!- தெரிகிறது எனக்கு!
பா. இல்லை! அவ்வளவும் பொய்! அவனை நான் கடனாக வாங்கி வரும்படிச் சொல்லவேயில்லை! – நானவனுக்கு பணம் கொடுத்தனுப்பினேன்.
ச. அம்மா!
தா. ஓ! தெரிகிறது! இப்படித்தான் பட்டினியிருந்தீர்களோ! ஐயோ பாவம்! பார்வதி, சகுந்தலா! சாப்பாடும் – பலஹாரமும்! (பில்லை வாங்கிப் பார்த்து) நாலரை ரூபாய் செவ்வாய்கிழமை — ஐந்தரை ரூபாய் புதன்கிழமை – இன்றைக்கு ஏழரை ரூபாய்!
பா. (நிமிர்ந்து எழுந்திருந்து) ஆமாம், நாங்கள் சாப்பிட்டோம்! சாப்பிடாமல் பட்டினி கிடந்தோமென்று பார்த்தீர்களா? நாங்கள் என்ன அப்படிப்பட்ட புத்தியில்லாதவர்களா என்ன?
தா. அப்பொழுது, நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிராத கால மெல்லாம், பட்டினி யிருந்தீர்கள்!- என்று நினைக்கிறேன்.
பா. சந்தேகமென்ன? யாரை வேண்டு மென்றாலும் கேட்டுப் பாருங்கள்! ஒவ்வொரு நாளும், இருபத்து நான்கு மணியில், இருபத்தோரு மணி ஒன்றும் புசிக்கவேயில்லை. பட்டினிதான் கிடந்தோம்,- சில சமயங்களில் இன்னும் அதிக நேரம்!
தா.ஐயோ பாவம்! என் கண்மணிகளே! எப்படி சகித்தீர்கள் இந்த கஷ்டத்தை? – அடே பையா, கணபதி பணத்துடன் ஓடிப் போய் விட்டதாகக் கேள்விப்படு கிறேன். உனக்கு அந்தப்பணம் தேவையா யிருந்தால் அவன் பின்னால் ஓடிப்போய்ப் பார்; அவன் இன்னும் அதிக தூரம் போயிருக்க மாட்டான்- நான் என்னவோ ஒரு பைசாவாவது கொடுப்பேன் என்று எதிர் பார்க்க வேண்டாம் நீ.
ம. எனக்கென்ன வந்தது? நான் போய் என் எசமானிடம் சொல்லி விடுகிறேன். அவர் அந்த பணத்தைப் பெறுவதற்கு என்ன பாடாவது படட்டும், அல்லது போலீஸ்காரனை, பாடுபடச் செய்யட்டும். (போகிறான்)
தா. இப்பொழுது- துரைசானிகளே! சமயற்காரன் என்னவோ, உங்களுக்கு உபயோகப்பட மாட்டான் – டும்கி கொடுத்து விட்டுப் போய்விட்டான்! உங்களுக் கென்னவோ, சமயல் செய்யத் தெரியாது – தெரிந்தாலும் நீங்கள் செய்ய மாட்டீர்கள் – நிச்சயமாய்! சாமர்த்தியமாகப் பொய்களைச்சொல்லி உங்களுக்கு சமைத்த சாப்பாடு வாங்கிக் கொண்டு வர ஒருவருமில்லை. என்ன கஷ்டகாலம் பாருங்கள் உங்களுக்கு! – உங்கள் கதியைப் பற்றி நான் வருத்தப்படுகிறேன். ஆயினும், இந்த மூன்றுநாட்களாக அவ்வளவு பலஹாரத்தையும் சாப்பாட்டையும் சாப்பிட்டபிறகு, கொஞ்ச காலம் உண்மையில் பட்டினி யிருந்தால், உங்கள் உடம்பிற்கு நல்லதுதான், என்று நினைக்கிறேன். நாடக மென்னமோ இப்படி முடிந்து விட்டது இப்பொழுது, அதன் பரதவாக்கியத்தைப்பற்றி நன்றாய் ஆலோசித்துப் பார்க்க, உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.- நான் வருகிறேன் – நான் வருகிறேன்.
(போகிறார்)
(பார்வதியும் சகுந்தலாவும், அம்மாயியும், மிகுந்த கவலையுடன் விழிக்கிறார்கள். திரை மெல்ல இறங்குகிறது.)
(நாடகம் முற்றிற்று)
– மனை ஆட்சி, ஸ்ரீமான் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய “தாமுவின் மனதை சமசார வழிக்குக் கொண்டு வந்தது” என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பு.
– நாடகப் பேராசிரியர் ராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார், பி.எ., பி.எல், அவர்களால் இயற்றப்பட்டது, முதற் பதிப்பு 1946, இரத்தின விலாஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.