மனைவி என்பவள்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 2,348 
 
 

ராகவனுக்கு  மனைவி ரம்யாவுடன் இனி குடும்பம் நடத்தவே முடியாது என்கிற மனநிலை மேலோங்கியதும் தனது வக்கீலிடம் சென்று விவாக ரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டான். தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பதால் நிம்மதியாக உறங்கவே முடியாமல் உடல் நிலை பாதித்து, அலுவலகத்திலும் சரியாக வேலை செய்ய இயலாமல் போய் விட்டது என்பது தான் முதல் குற்றச்சாட்டாக பதிவு செய்திருந்தான்.

தாய் வீட்டிற்கு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பள்ளி விடுமுறைக்கு சென்றிருந்த ரம்யா விவாகரத்து நோட்டீஸை வாங்கியவுடன் மயங்கிச்சரிந்தாள்.

உறவினர்கள், நண்பர்கள் எடுத்துச்சொல்லியும் மிகவும் பிடிவாதமாக பிரிவதிலேயே குறியாக இருந்தான். “எனக்கு பணம், காசு, பதவி, சொத்து எதுவும் தேவையில்லை. நிம்மதிதான் வேணும். அது ரம்யாகிட்ட இம்மியளவும் கிடைக்கலை. இனிமேலும் கிடைக்காது. அதனால் நான் உயிரோடு வாழ ஆசைப்படுகிறேன்” எனக்கூறி கேட்டவர்கள் வாயை அடைத்து விட்டான்.

வேறு வழியில்லாமல் சுமூகமாக பேசி பிரிவதென ரம்யாவும் விருப்பமில்லாவிட்டாலும் விதி என சம்மதிக்க, குழந்தைகள் ரம்யாவிடம் இருப்பதெனவும், பள்ளி மற்றும் இதர செலவுகளுக்கு வாடகை வரும் ஐந்து வீடுகளின் வாடகையை வாங்கிக் கொள்வதெனவும், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஞாயிறன்று ஒரு நாள் மட்டும் குழந்தைகள் விரும்பினால் ராகவன் அழைத்துச்செல்லலாம் எனவும், பொது இடத்தில் குழந்தைகளைக்கூட்டி வந்து காலையில் விட்டுச்சென்று, மாலையில் அதே இடத்தில் வந்து ரம்யாவின் தந்தை கூட்டிச்செல்வதாகவும் பேசி முடிக்கப்பட்ட ஒப்பந்தப்படி இருவரும் கையெழுத்திட்டு பிரிந்த போது ரம்யா கதறி அழுதாள். 

“நாம்பேசறது தான் தப்புன்னா என்ற நாக்க வேணும்னா அறுத்துக்கறேன். சின்ன வயசுல இருந்து அதிகமா பேசுவேன். வாயாடின்னு தான் சொல்லுவாங்களே தவுத்து வாழ்க்கைக்கே ஆகாதவளாயிட்டனே..‌. ஒன்னி சொந்த பந்தத்துக்கு என்ன பதில் சொல்லுவேன்? தனி ஒருத்தியா கொழைந்தைகளை எப்படி காப்பாத்தி கரை சேத்துவேன்?” என அழுததைக்கண்ட உறவுகள் ராகவனைத்திட்டிச்சென்றனர்.

“ஊட்டுப்பொம்பள பேசாம இருக்கோணும்னு நெனைச்சிருந்தீங்கன்னா ஒரு ஊமப்பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாமே….? ரம்யா புடிவாதமா இருப்பாளே தவுத்து புடிக்காத தப்பப்பண்ணறவ கெடையாது. உங்கள நம்பி எம்பட பொண்ணக்குடுத்து இப்படிப்பண்ணிப்போட்டீங்களே மாப்பளே….?” என ரம்யாவின் தாயும் கண்ணீர் வடித்தபடி கூறியது பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.

வருடம் ஒன்று கடந்திருந்தது. வீட்டில் தனியாக பேச்சுத்துணைக்கு யாருமின்றி தவித்தான். ஊரிலிருந்து நகரத்து வீட்டிற்கு வந்த பெற்றோரால் தொடர்ந்து இருக்க முடியவில்லை.

“இத பாரு ராகவா…. இந்த டவுன் வாழ்க்க பறக்கற குருவிய அடைச்சு வெச்ச மாதர இருக்குதப்பா. காத்தால எந்திரிச்சு வேலைக்கு போற மனுசங்களுக்கு வேணும்னா இங்க வாழ ஒத்துப்போகும். கிராமத்துல, தோட்டங்காட்டுக்குள்ள சுத்தீட்டு திரிஞ்ச எங்களுக்கு கூண்டு வாழ்க்க ஆகாது. தப்பா நெனைச்சுக்காத. மறுபடியும் ரம்யாவக்கூப்புட்டு வந்து வாழப்பாரு. இல்லேன்னா மனசுக்கு புடிச்ச மாதர ஒரு பொண்ணத்தேடு. ஒரு தாயா நானும் என்ற மனசுல பட்டத சொல்லிப்போட்டேன் ஆமா” என கூறியவாறு தோசையை சுட்டு மகன் ராகவனின் தட்டிலில் போட்டவாறு கவலை தோய்ந்த முகத்துடன் கண்களில் கண்ணீர் ததும்ப பேசினாள் ராகவனின் தாய் பூங்கோதை.

அன்றிரவு தூக்கம் தொலைத்து யோசித்தான். அலுவலகத்தில் நண்பன் கேசவனுடன் ஆலோசித்தான். “உனக்கு சம்மதம்னா நம்ம கேசியர் மாலதி கூட பேசிப்பார்க்கிறேன். அவளுக்கு நீ உன் மனைவிய டைவர்ஸ் பண்ணினது முதல் உன்னப்பத்தின கவலை அதிகமாயிடுச்சு. ‘ராகவன் தனியா எப்படி வாழப்போறார்? மனுசன் ரொம்ப நல்லவரா வேற இருக்காரே…?’னு அடிக்கடி புலம்பிகிட்டே இருக்காள்” என்றான்.

‘நம்மைப்பத்தி கவலைப்படுவதற்கு கூட ஒரு ஜீவன் இருக்குதா….? அப்படின்னா கல்யாணம் பண்ணிக்க விரும்பினா சம்மதம்னு சொல்லிட வேண்டியது தான். நமக்கும் சரியா சமைக்க வர மாட்டேங்குது. பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாம தனிமைல வாழவே முடியாது’ என ராகவனின் மனம் கூற “பேசிப்பாரு. அவங்களுக்கு ஓகே னா எனக்கும் ஓகே தான்” என்றான்.

அன்றிரவு பத்து மணிக்கு மாலதி அலைபேசியில் அழைக்க, எடுத்துப்பேசினான். முதலில் அலுவலக விசயம், பின் மனைவி ரம்யாவைப்பற்றி பேசிய ராகவன் அவளது நற்செயல்களையும் புகழ்ந்து பேசினான்.

“ரம்யா சூப்பரா சமைப்பா. அவளோட முக லட்சணத்துக்காகவே நான் சம வசதியில்லாத இடம்னு யோசிக்காம, வரதட்சணையே வாங்காம கல்யாணம் பண்ணிகிட்டேன். அவ வேலைக்கு போனா கஷ்டப்படறதுனால அழகு குறைஞ்சிடும்னும், ஆரோக்யம் பாதிச்சிடும்னும் வீட்லயே இருக்க வெச்சுட்டேன். அவ ஐஸ்வர்யா ராய் ஜாடைல இருந்ததுனால ‘ஐசு’ ன்னு தான் கூப்பிடுவேன். அவளும் நான் கூப்பிடறதுக்கு ஏத்தாப்ல என்னை உருகியுருகி காதலிச்சா. ஒரு குழந்தை பிறந்ததுக்கப்புறம் தென்றலா இருந்த அவ புயலா மாறிட்டா. ரெண்டாவது குழந்தைக்கப்புறம் பத்ரகாளியாவே மாறிட்டா. முதல்ல ஒரு நாள் ராத்திரி அலுவலகத்துல வேலையிருந்தா வரலேன்னா கூட கண்டுக்காதவ போகப்போக ஒரு மணி நேரம் லேட்டானாலும் சந்தேகப்பட்டு கத்த ஆரம்பிச்சுட்டா…சொல்லப்போனா உங்கூட சேத்து வெச்சுக்கூட பேச ஆரம்பிச்சுட்டா. அதான்….” என மௌனமானான்.

“நீ பேசறதுல ஒரு விசயம் எனக்கு நல்லா புரியுது ராகவன். எப்பவுமே வேலைக்கு போற பெண்களை விட வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்கிற பெண்களுக்கு. சந்தேகம், ஆக்ரோசம், கவலை, பயம் அதிகமாகவே வரும். ஏன்னா தனக்கானது தன்னை விட்டுப்போயிட்டா தனியா எப்படி வாழப்போறோம்ங்கிற மன பயத்தோட, பண பயமும் அதுக்கு காரணம். சந்தேகப்பட்டு பேசறவங்கள தப்பானவங்கன்னு நெனைக்கிறது தான் ரொம்பத்தப்பு. அது பயத்தின் வெளிப்பாடு. அப்படிப்பட்டவங்ககிட்டிருந்து அளவில்லாத நேசமும் வெளிப்படும். வேசம்போட்டு நடிக்கத்தெரியாம மனசுல பட்டத எதுவானாலும் வெளிப்படையா பேசிடுவாங்க. உசுரக்கூட கொடுக்க தயங்க மாட்டாங்க. ஆனா நீங்க அவங்க உசுர எடுக்கறாங்கன்னு தப்பா புரிஞ்சிட்டீங்க. அதே சமயம் அவங்களோட சமையல், அழகு ன்னு நீங்க பாராட்டினதைப்பார்க்கிறப்ப அவங்க மேல இருக்கிற காதலை நீங்க சுத்தமா விடலைன்னு புரியுது…”

“அப்படியெல்லாம் கிடையாது. சும்மா பேச்சுக்கு சொன்னேன்…”

“மூச்சுக்கு ஒரு முறை அவங்க பேரை யூஸ் பண்ணறீங்க. அவங்க உங்க மனசிலிருந்து முழுமையா போகாம வேற ஒரு பொண்ணோட உங்களால குடும்பம் நடத்த முடியாது. இவ்வளவு நேரம் பேசினதுல உங்க மனசுல என்ன இருக்குன்னு முழுசா புரிஞ்சிட்டேன். குழந்தைகளோட எதிர்காலத்தப்பத்தி ரொம்பவே கற்பனை பண்ணி வெச்சிருக்கீங்க. அதை சீக்கிரமா அழிக்க முடியாது. உங்களை ரெண்டாவதா நானே கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்குன்னு சில எதிபார்ப்பு இருக்கு. அது கிடைக்கலேன்னா நானும் ரம்யாவா மாற மாட்டேன்னு சொல்ல முடியாது. நமக்குள்ளே எல்லாமே கலந்துதான் இருக்கு. சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொன்னும் வெளிப்படும். நான் கத்திப்பேசமாட்டேன்னு சொல்ல முடியாது. நீங்க எப்படி நடந்துக்கறீங்களோ அதைப்பொறுத்து. மாலதிக்கு ரம்யாவே பரவாயில்லைன்னு கூட உங்களுக்கு  தோணலாம். ஆனா திடீர்னு கல்யாணமாயிட்டா கழட்டி விட முடியாது. ஜீவனாம்சம்னு சொத்துல பங்கும் தரவேண்டி வரும். அக்கரைக்கு இக்கரை பச்சையாத்தான் தெரியும். இன்னொரு விசயம் தெரியுமா? என்னோட டைவர்ஸே உங்களோட என் கணவர் இணைச்சு சந்தேகப்பட்டு பேசினதாலதான் நடந்துச்சு.  நல்லா யோசிங்க. உங்களுக்கு ரம்யாதான் சரின்னு எனக்கு படுது” எனக்கூறிய மாலதியுடன் மேலும் பேச வார்த்தையின்றி ராகவன் மௌனமாக, அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த முறை குழந்தைகளை எப்போதும் போல் ராகவனிடம் அனுப்பி வைக்க பொது இடமான கடற்கரைக்கு தந்தையுடன் அனுப்பி வைப்பதற்கு பதிலாக ரம்யாவே அழைத்து வந்தது கண்டு ஆச்சர்யப்பட்டான். உடல் மெலிந்து போயிருந்தாள். ராகவன் அவளிடம் முகம் காட்டாமல் குழந்தைகள் இருவரையும் ஹோட்டலுக்குள் அழைத்துச்சென்றான். கைகழுவி விட்டு இருக்கைக்கு வந்த போது தன் இருக்கையருகே அமர்ந்திருந்த ரம்யாவைக்கண்டு அதிர்ச்சியடைந்தான்.

தாம் அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமோ…? என குற்ற உணர்வு மேலோங்க, பக்கத்தில் அமர்ந்தவன் உணர்ச்சிவசப்பட்டு அவளது கையை இறுகப்பற்றினான். அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ராகவனை காதலோடு நேருக்கு நேராகப்பார்த்தாள். உடனே ஆர்டரை கேன்சல் செய்தவன் குழந்தைகளோடு ரம்யாவையும் காரில் அமரச்செய்து தன் வீட்டிற்கு சென்றான்.

தன்னுடன் இன்று ரம்யாவும் வந்திருப்பதால் குழந்தைகள் வீட்டில் குதூலகமானதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தான். மனைவி ரம்யா துடைப்பமெடுத்து வீட்டைப்பெருக்கி விட்டு பூஜையறையில் விளக்கேற்றியவள், ராகவனுக்கு தனது கையால் திருநீறு நெற்றியில் வைத்து விட்டு தனக்கு அவனது கையால் குங்குமம் வைத்து விட ஜாடையால் சொன்னதும் வாங்கி வைத்தான். அரை மணி நேரத்தில் உணவை தயாரித்தவள் பறிமாறினாள். குழந்தைகளுடன் உண்டு பசியாறியவன் ரம்யா சாப்பிடாமல் இருப்பதால் தனது தட்டிலிருந்து மீதமிருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட எத்தனித்த போது அவள் வாயைத்திறக்க மிகவும் சிரமப்பட்டாள். சிறிதளவில் வாயைத்திறந்த போது அவளது நாக்கில் சூடு வைக்கப்பட்ட புண்ணில் ரத்தம் கசிவதைக்கண்டு பதறினான், கதறினான், துடி துடித்துப்போனான்.

‘தான் அதிகமாகப்பேசியதால் தானே வாழ்வே பறிபோனது’ எனும் வேதனையால் தன் மீதே தனக்கு வந்த ஆத்திரத்தால் இரும்புக்கம்பியை அடுப்பில் காய்ச்சி நாக்கில் தான் இன்று சூடு வைத்துக்கொண்டதால்  தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக்கண்டு பதறியதை வைத்து தன் மீது கணவன் ராகவன் வைத்திருக்கும் அளவற்ற காதலை முதலாக வெளிப்படுத்தியதைப்பார்த்த போது  நாக்கின் புண்ணால் உடலிலும் ஏற்பட்ட வலி வேதனையைக்கொடுத்தாலும் உள்ளத்தின் பரவசத்தை முழுமையாக உணர்ந்தாள் ரம்யா.  

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *