மனிதன்
(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனித வாழ்வின் உயிர்த் துடிப்பை அப்படியே பிரத் தியட்ச மாகப் பிரதிபலித்துக் காட்டுகின்ற பொரளைச் சந்தி யிற்தான் அந்தச் சாப்பாட்டுக் கடை இருந்தது. புகையிரதமேறிப் பெரும் பொருள் தேடச் சென்ற யாழ்ப்பாணத்தார்களை நம்பி, இன்னொரு யாழ்ப்பாண வாசியால் தொடங்கப்பட்ட தான் அந்தக்கடை. மதியவேளையில் அதற்குள் நுழைவதே பிரம்ம பிரயத்தனந்தான்.
மேற்படிப்பை நாடிக் கொழும்பு சென்ற எனக்கு, அங்கே உற்றார் யாருமில்லை. எனவே, கல்லூரியருகில் அறை எடுத்து வாழவேண்டி நேர்ந்த போது வயிற்றுப் பாட்டுக்கு இந்தக் கடையைத்தான் என் நண்ப ஒழுங்கு பண்ணி விட்டான்.
இந்த ஓராண்டு காலமாக, இவர்கள் போடுகிற சாப்பாட்டை நம்பித்தான் என் உயிர் ஓடுகிறது. சத்தோ ருசியோ இல்லாத – ஆனால் அசுத்தமும் செலவும் நிரம்பிய – இந்த உணவை கடையின் சப்ளையர்கள் யந்திரகதியிற் பரிமாறும் போது, ‘கடனே’ என்று விழுங்கி வைப்பேன்.
அங்கேயுள்ள ஊழியர்களின் – முதலாளியுட்பட முகத்தில் மலர்ச்சியைப் பார்த்த நாட்கள் ரொம்பக் குறைவு. எப்போதுமே முகத்தைக் கடுகடுப்பாகவும், ‘ஸீரியஸ்’ ஸாகவும் வைத்திருப்பதை அவர்கள் ஒரு கலையாகத் தான் பயின்றார்களோ என்னமோ. ஒவ்வொருத்தனும் காசு தந்து தானே சாப்பிடுகிறா என்ற உணர்வே இருப்பதில்லை அவர்களுக்கு. ஏதோ ‘தண்டச்சோறு’ போடுவதாக எண்ணம். இப்படிப்பட்டவர்களின் இடையே தான் கந்தையாண்ணை வந்து சேர்ந்தார்.
கந்தையாண்ணை, முதலாளிக்கு உறவினராம். மிகவும் அமைதியான போக்கு, வந்த புதிதில் ‘இதென்னடா இந்த மனுசன் ‘உம்பாண்டி’ யாயிருக்கு?’ என்று நானும் என நண்பனும் பேசிக் கொண்டோம். ஆனால் நாளாக நாளாகத் தான் அவரை எங்களுக்குப் புரியத் தொடங்கியது மற்றவர்களைப் போலல்லாது எது கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் அன்போடு ஆறுதலாக பரிமாறுவார். அவர் முகம் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கும். ஆள் ஓரளவுக்கு சங்கோஜிதான்.
நாளடைவில் கந்தையாண்ணைக்கும் எனக்குமிடையில் ஒரு பாச இணைப்பு உருவாகியது. தம்பி, தம்பி என்ற அவரின் குரலில் அன்பு இழையோடுவதை என்னாற் புரிந்து கொள்ள முடிந்தது. வெள்ளைச் சட்டையும் சண்டிக்கட்டு கட்டிய வேட்டியுமாய், நெற்றியிற் சந்தணப் பொட்டோடு சுறுசுறுப்பாய்த் திரியும் அந்தக் குள்ள உருவத்தைத் தான் கடையில் நுழைந்ததும் என் கண்கள் தேடும்.
கந்தையாண்ணை எல்லோருக்குந் ‘தாசானுதாச’ யிருந்தார். அவரில்லாமற் கடையே நடக்காதோ என்று நினைக்கத் தோன்றுகிற அளவிற்கு ‘கந்தையா, கந்தையா’ என்ற குரல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவரது அடக்கத்தையும் பொறுமையையும் அங்குள்ள மற்றவர்கள் தவறாகவே பாவிக்கிறார்கள் என்பது என் எண்ணம். எந்தக் கஷ்டமான வேலையாயிருந்தாலும், நைஸாகக் கந்தையரின் தலையிலே சுமத்தி விடுவார்கள். கந்தையாண்ணையும், புரிந்தோ புரியாமலோ எல்லாவற்றையுஞ் செய்து கொண்டு தான் வந்தார்.
ஒரு நாள் சாப்பிட்டு விட்டு இலையை வீசப் பின்புறஞ் சென்ற சமயம் ‘தடால்’ என்ற சப்தம் அடுப்பினருகிற் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினேன். கறி வைக்கிற பாத்திரம் உண்டோடிக் கொண்டிருந்தது. அதனெதிரே ஒரு சப்ளையர் திகைத்துப் போய் நின்று கொன்டிருந்தான். எப்போதுமே விறைப்பாகத் திரிகிற இளவட்டம். அவன் வேலையிற் சேர்ந்து ஒரு வாரமிருக்கும். இப்போது பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.
நான் இலையைப் போட்டுவிட்டு கை கழுவியதன் பின் வாசற்புறம் சென்றேன். முதலாளி முன்னிலையில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. ‘வியாபார வேளை’யில், முதலாளி ஆத்திரந் தாங்காமல் கத்திக் கொண்டிருந்தார்.
‘என்ன கந்தையா இது? கொஞ்சந்தன்னு கவனமில்லாம… ஐந்தாறு ரூபா கறியை கொட்டிப்போட்டு நிக்கிறாய்?” கந்தையாண்ணை, குனிந்து போசாமல் நின்று கொண்டிருந்தார். நான் திகைத்தேன். உண்மையிலேயே கறியைக் கொட்டியவன், சற்றுத்தூரத்தில் முழித்தபடி நின்று கொண்டிருந்தான். “போ போ இவதல்லாஞ் சம்பளத்திலை கழிச்சாத்தான் சரி” கடையைத் தாண்டிக் கொண்டிருந்த என் காதில் முதலாளியின் உறுமல் கேட்டது.
அடுத்த தடவை, நான் கந்தையாண்ணையை ஆறுதலாக சந்தித்த சமயம், “என்னண்ணை, ஆர் கறியைக் கொட்டினது?” என்று கேட்டேன். அவர் சிரித்தார்.
“ஒருத்தருக்கும் சொல்லாதையுங்கோ… அவன்தான் தம்பி கொட்டினது. ஆனா வந்து ஒரு கிழமைக்குள்ளே இப்படிச் செய்தா னெண்டு அறிஞ்சா, முதலாளி கலைச்சுப் போடுவர்… பாவமெல்லே?” எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
‘சரிதான்…’ என்றபடி எழுந்தேன்.
இந்த மாதிரி, எத்தனையோ நிகழ்ச்கசிள் கந்தையாண்ணையை ‘விடுபேய’னாக மற்றவர்கள் கணிக்குமளவிற்கு நிலைமை இருந்தது. அவர் முகத்தில் கோபக்களையையோ, அன்றி வெறுப்பின் அறிகுறியையோ நான் ஒரு நாளுங் கண்டதில்லை. ஏன் அந்த முப்பதைந்து வயதிற்குரிய விறுக்காத்தனங் கூட அவரிடமில்லை. தனக்கே உரித்தான அந்தப் புன்னகையுடன் எல்லாவற்றையுஞ் சமாளித்து வந்தார்.
ஒருநாள் இரவு நா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கந்தையாண்ணை சொன்னார் “தம்பி நாளைக்கு நம்மடை சம்சாரமும் பிள்ளையளும் வருகினம்”.
“என்ன சங்கதி” என்றேன்.
கதிராம யாத்திரை இஞ்சவந்தாப் பிறகு, நான் கூட்டிக்கொண்டு போறன்.
“ஓகோ அப்ப அவயளை நாளைக்குப் பாப்பம்” என்றவாறு எழுந்தேன்.
அவர் ‘ஓஓ’ என்றவாறு புன்னகைத்தார்.
அடுத்தநாள். விடுமுறை, வகுப்பில்லாத காரணத்தால் நான் களுத்துறைக்கு போய்விட்டேன். சாப்பாட்டுக்கடைக்கும் போகவில்லை.
மூன்றாம் நாட் காலைதான், அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கந்தையாண்ணையை வெளியே காணவில்லை. ஒருவேளை வீட்டுக்காரருட கதிர்காமம் போயிருக்கக் கூடுமென நினைத்தேன்.
பின்புறம் கைகழுவிக் கொண்டிருந்த போது கந்தையாண்ணையின் குரல், உரத்து ஒலித்தது. நான் வியந்தேன். இடையிடையே, யாரையோ அதட்டுகிற ஒலியும், ‘டேய் டேய்’ என்கிற சப்தமுங் கேட்டேன். கந்தையாண்ணையா இப்படிச் சத்தம் போடுகிறார்? என்னால் நம்பமுடியயில்லை.
நான் திகைத்து நின்ற அதே நேரத்தில், தன்னுடைய அறையினின்றுங் கந்தையாண்ணை வெளி வந்தார். என்னைக் கண்டதும் “எட தம்பியே?… என்ன நேற்று முழுக்கக் காணேல்லை?” என்றார். விஷயத்தைச் சொல்லிவிட்டு அருகே போய், “என்னண்ணை? என்ன சங்கதி…?” என்று கேட்டேன்.
“அதுதான் தம்பி சொல்லப் போற” என்றவர் திரும்பிப் அறைக்குள் ஓடினார். திரும்பி வரும்போது, அவர் கைப்பிடியில் ஏழெட்டு வயதுச் சிறுவன் ஒருவன் திணறிக் கொண்டிருந்தான். அவன் கண்களில், நீர் குரல் விம்மிக் கொண்டிருந்தது. என் கண்ணில் கேள்விக் குறியைக் கவனித்த அவர், ‘இதான் தம்பி என்ர புத்திரபாக்கியம், பாரும் ஆளை” என்றார்.
நான் பையனைப் பார்த்தேன். துறு துறுப்பானவன் என்பது தெரித்தது. கத்தையாண்ணை நெருங்கி வந்து சொன்னார். “இவன் செய்த வேலையைப் பார் தம்பி அவங்கள் இடியப்பம் போட்டுக் கடகத்துக்குள்ளை வைக்க இவர் போய் எடுத்து வாட்டுகிறார். ஆரண் கண்டா என்ன சொல்லுவாங்கள்? அதிலை கை வைக்கலாமே? மகன் தவறு செய்துவிட்டானென்று திருத்த முயலும் பாவனை எனக்கும் சரிதானென்று பட்டது. மேலும் கீழும் தலையை ஆட் டினேன்.
அப்படி நான் தலையை ஆட்டியது, அவருக்கு தெம்பு அளித்ததோ என்னமோ, “இனிமேல் இப்படிச் செய்வியோடா?” என்றபடி முதுகில் ஓங்கி ஒன்று வைத்தார். அவன் வீரிட்டான்.
பையனின் ஓலத்தைக் கேட்டு அறையினுள்ளிருந் ஒரு பெண் எட்டிப்பார்த்தாள். முப்பது வயதுள்ள அவளைப் பார்த்தாலே ‘அசல் யாழ்ப்பாணம்’ என்று தெரிந்தது. இவள்தான் கந்தையாண்னையுடைய சமுசாரமாயிருக்கு மென நினைத்தேன்.
“எனப்பா..? அவனைப்போட்டு ஏனிப்பிடி அடிச்சுக் கொல்லுகிறாய்? அதுக்கென்ன, சின்னஞ்சிறிசுகள் தெரியாத் தனமாகக் கை வைக்கிறேல்லையே?…” அந்தப் பெண் தாங்க முடியாது கேட்டுவிட்டாள் போலும்.
கந்தையாண்ணை திரும்பினார். கண்களில் அனல் பறந்தது ”பார் ஆளை வளர்த்த லட்சணத்திலை பேசவந்திட்டா போணை. போ, அங்காலை ..?” அவர் கத்தினார்.
“அவனை விடப்பா…” தாய் மீண்டும் கூறினாள்.
“இஞ்சார் நீயிப்ப போறியோ இல்லையோ? இந்தக் கழுதைப் பயலை இப்படியே விட்டாக் கை நீண்டுபோம். பிறகு என்ன செய்வாய்? அததது அந்தந்த நேரத்திலை கண்டிக்க வேணும்” தகப்பன் தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே போனார்.
எனக்கு நேரமாகிவிட்டது. நகர்ந்தேன். “அண்ணை நான் வாறன். நேரமாச்சுது?”
“ஓந் தம்பி… நீர் போட்டு வாரும்” என்றவர் மீண்டும் மனைவியையும் பையனையும் பார்த்து அறிவுறுத்தத் தொடங்கினார். நல்லவேளை வேறொருவரும் அங்கில்லை. நான் கடைவாசலைத் தாண்டும்போ அவருடைய குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது எனக்கு. கந்தையாண்ணை என்னதான சப்ளைய ராகவிருக்கலாம், எல்லாருக்கும் ‘பேய’னாக இருக்கலாம், ஆனால், அவர் ஒரு குடும்பத் தலைவன். தன் குடும்பத்தவரை வழி நடத்திக் காக்க வேண்டிய பொறுப்பு நிறைந்தவர். எல்லாருடைய அதிகாரத்துக்கும் அவர் அடங்கி வாழலாம். ஆனால் அவருடைய அதிகாரத்திற்கும் அடங்குகிற – அடங்க வேண்டிய – ஜீவன்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் தான்.
நேரமாகி விட்டது, நான் நடந்தேன்.
– கதம்பம், மே 1967.
– பார்வை (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: சித்திரை 1970, யாழ் இலக்கிய நண்பர் கழகம், தெல்லிப்பளை.