மனம் குளிருதடி




யாழினியின் அலைபேசி பைக்குள் அதிர்ந்தது. அதிர்வலைகள் வெளியேறி மேசையையும் கொஞ்சம் அதிரச் செய்தது.
கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தாள். எடுக்காமல் எதிரிலிருந்தவரிடம் பேசிக்கண்டிருந்தாள். மீண்டும் அதிர்ந்தது. அதில் கவனம் செலுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தாள் அது நிற்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அதிர்ந்து. எதிரில் இருந்த அவருக்குப் பதட்டம் கூடியது.
‘மிஸ். யாழினி முதல்ல அதை எடுங்க. தொடர்ந்து யாரோ கூப்பிடுறாங்கன்னா எமர்ஜன்ஸியா இருக்கும்’.
எடுத்தாள்.
விடுதியிலிருந்து மீனா.
குரலில் ஒரு அவசரம். பதட்டம்.
‘நந்தினி சூசைட் அடெம்ப்ட்பா. விஜயா ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கோம்’.
‘அய்யோ இப்ப எப்படி இருக்கா?’
‘நினனவு தப்பிடுச்சி. ஐஸியுகுள்ள கூட்டிட்டு போயிருக்காங்க’.
அவள் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் புரிந்துகொண்ட அந்த கிளையன்ட்
‘நாம அப்புறமா பார்க்கலாம். நீங்க கிளம்புங்க’ என்றார்.
‘சாரி சார். அய் வில் கேட்சப் வித் யூ லேட்டர். நீங்கக் கேட்ட டீடைல்ஸ் எல்லாம் என்னோட கொலிக் மதன் உங்களுக்கு ஷேர் பண்ணுவாரு’.
‘ஓகே மிஸ் யாழினி’.
ஒலாவுக்கு முயற்சித்தாள். அதற்குள் அருகே ஆட்டோ ஒன்று வர அதில் ஏறிக் கொண்டாள்
அவ காலையில வேலைக்கு போகலேன்னு சொல்லும்போதே நான் யோசியிச்சிருக்கனும்.
ஆட்டோவில் போகும் போது காலையில் நடந்த உரையாடலை நினைத்துப் பார்த்தான்.
‘என்ன ஆச்சு நந்தினி. ஏதாவது மெசேஜ் வந்ததா பிரசாத் கிட்ட இருந்து?’
‘இல்லப்பா?’
‘நீ அனுப்புன மெசேஜ் என்னாச்சு?’
‘ஒரேயொரு டிக் காட்டுது. இன்னும் போய் சேரல போல இருக்கு யாழ்’.
‘வாட்ஸ் அப்ல பிரசாத்தோட ப்ரொஃபைல் ஃபோட்டோ இருக்கா பாரு ?’
‘இல்லையே’.
‘அவன் எப்பவும் வச்சிருப்பான் இல்ல’.
“ஆமாம். ஆனால் கொஞ்ச நாளா காணோம்’.
‘ஓ. தட் மீன்ஸ் அவன் உன்னை பிளாக் பண்ணி இருக்கான்னு அர்த்தம்’.
‘ஒ’.
‘என்ன ஆச்சு அவனுக்கு. எப்ப கடைசியா பேசின?’
‘அக்டோபர் 10.’
‘அப்போ இன்னைக்கு 12 நாள் ஆச்சு’.
‘ம்.’
‘ஏதாவது சண்டை போட்டீங்களா?’
‘அப்படி எல்லாம் ஒன்னும் போடல’.
‘பின்ன?’
‘கொஞ்ச நாளாகவே அவன் கிட்ட ஏதோ வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சுது’.
‘ரெண்டு வருஷம் பழகி இருப்பீங்களா?’
‘ரெண்டு வருஷமா தெரியும். ஆனா ஒரு வருஷமா தான் நெருங்கிப் பழகினோம்’.
‘ம்’.
‘ஏன் இப்படி பண்றான்னு எனக்கு புரியல’.
‘நீ அவன் கூட வெளியே எங்கேயாவது ட்ராவல் பண்ணிருக்கியா ?’
முதலில் மௌனமாக இருந்தவள் பிறகு மெதுவாக,
‘ஒரு தடவ. இசிஆர் ல ஒரு ரிசார்ட்.’
‘ம். அப்புறம்?’
‘ஒரு தடவ வீட்ல யாரும் இல்லைனனு சொல்லிக் கூப்பிட்டான்’.
‘ம். சரி கொஞ்சம் பொறுமையா யோசிப்போம் நந்தினி. உனக்கு என்ன வேலை இன்னைக்கு?’
‘எனக்கு என்ன. எப்பவும் போல பத்து மணிக்கெல்லாம் பேங்க்ல இருக்கனணும். இப்ப இன்ஸ்பெக்சன் நடக்கறதுனால அரை மணி நேரம் முன்னாலேயே போகணும். ஏன் கேக்குற?’
‘எனக்கு இன்னிக்கு ஃபுல்லா வெளியில கிளைன்ட் மீட்டிங் தான். ஃப்ரீயா இருந்தா சாயந்தரம் நம்ப எங்கேயாவது போய் பேசலாம்னு தான்’.
‘எங்க?’
‘பீச்சுக்கு’.
‘ஒகே. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?’
‘என்ன வேணும் சொல்லு’.
‘என் மேனேஜருக்கு போன் பண்ணி நான் இன்னிக்கு லீவுன்னு சொல்லிடறியா?’
‘ஏன் என்னடி ஆச்சு?’
‘நத்திங் பா. அ யம் அப்செட்’.
‘நம்பர் கொடு. நான் கார்ல ஏறிட்டு பேசறேன். ஒலா வந்துடுச்சு’.
யாழினி கிளம்பி விட்டாள். நந்தினியின் மேலாளருக்கு ஃபோன் பண்ணினாள்..
ஆட்டோ கோடம்பாக்கம் பாலத்தைக் கடந்து வடபழனியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல என் எஸ் கே சாலையில் டிராபிக்.
நான் அப்படியே விட்டுட்டு கிளம்பனதுது தப்பு. அவ அப்செட்ன்னு சொன்னத நான் கொஞ்சம் லைட்டா எடுத்துக்கிட்டேனோ.
தன்னையே நொந்து கொண்டாள் யாழினி.
கொஞ்சநாள் தான் பழக்கம். ஆனாலும் நந்தினியுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழகிவிட்டாள். எவ்வளவு சீக்கிரமாக நாட்கள் ஓடி விட்டன. இப்போதுதான் அந்த விடுதிக்கு வந்தது போல இருந்தது.
ஆறு மாதத்திற்கு முன்பு. ஏப்ரல் மாதம். விடியும்போதே வெப்பத்தோடு விடிந்த காலை.
யாழினி அன்னை மணியம்மையார் பெண்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தாள். வடபழனி கங்கை அம்மன் கோவில் வீதியில் விஸ்தாரமாக அமைந்திருக்கும் விடுதி. நகரத்தில் காலை நேரப் பரபரப்பு பற்றிக் கொள்வதற்குள் அந்த ஆட்டோ வந்து நின்றது. யாழினி இறங்குகிறாள். வெள்ளை கலர் டாப்சும் அதே நிறத்தில் பாட்டமும். சற்றும் பொருந்தாத வெளிர் பச்சை நிறத்தில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள்.
வரவேற்பறைக்குள் நுழைந்தாள்.
‘மேடம் மேடம்’ என்று குரல் எழுப்பினாள்.
ஒரு பெண்மணி கையில் துடைப்பத்துடன் வந்து,
‘யார் வேணும் ?’
‘மேடம் இல்லீங்களா?’
‘அட்மிஷனா?’
‘ம்’ என்றாள்
‘உட்காருங்க. மேடம் இப்ப வருவாங்க’.
சோஃபாவில் உட்கார்ந்தால் தன்னுடைய வெள்ளை உடை அழுக்கு ஆகி விடுமோ என்ற அச்சத்தில்
‘பரவாயில்லை’.
சிறிது நேரத்தில் அந்த மேடம் வந்தார்.
.
‘யாழினியா?’
‘ஆமாங்க. கல்பனா மேடம்?
‘ஆமா நான் தான். வா’ என்று சொல்லிவிட்டு நீண்ட தாழ்வாரத்தில் நடக்க ஆரம்பித்தார்.
தனது அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து,
‘உட்கார்’ என்றார்.
அறை சுத்தமாக இருந்தது பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுவரில் வலது பக்கத்தில் எழில் ததும்ப இயற்கைக் காட்சி தொங்கிக் கொண்டிருந்தது இன்னொரு புறத்தில் இவருடைய விதவிதமான படங்கள். கூட அவரது ஜாடையில் பெண். அம்மாவாக இருக்கும்.
‘இங்க விதிமுறைகள் ரொம்ப கண்டிப்பானவை. உங்க வீட்டில அனுபவிச்சத எல்லாம் எதிர்பார்க்க முடியாது. இந்த தாளில இருக்கிறத படிச்சு பாரு. கவனமா நடந்துக்க”.
‘தனியறை?’
‘தனி அறைக்கு இப்ப வாய்ப்பில்லை’.
‘தங்கம் இவங்கள முதல் மாடியில் நந்தினியோட அறைக்கு கூட்டிட்டு போ’.
நல்லவேளையாகத் தங்கத்தின் கைகளில் இப்போது விளக்குமாறு இல்லை
நந்தினி மிரளவைக்கும் பொலிவோடு இருந்தார்.
‘வாருங்கள் வாருங்கள்…. உங்கள் வரவு நல்வரவாகட்டும்’.
“என்ன வரும்போதே கிண்டல் பலமா இருக்கு’
“அச்சச்சோ அப்படியெல்லாம் இல்ல. மகிழ்ச்சியோடுதான் சொன்னேன்’.
அன்பாய் கட்டிக்கொண்டாள். டியோர் பெர்ஃப்யூம் மயக்கியது.
‘போய் குளிச்சிட்டு சீக்கிரம் வாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடப் போகலாம்’.
‘ஐ அம் யாழினி’.
‘நந்தினி. பாங்க் ஆப் இந்தியா கோடம்பாக்கம் பிராஞ்ச்ல வேலை செய்கிறேன்’.
‘தேனாம்பேட்டையில் லாஜிக் மென்பொருள் கம்பெனியில மார்க்கெட்டிங் ஹெட் ‘.
உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள். முதல் நாளே யாழினிக்கு மிகவும் பிடித்த பொங்கல்.
‘நீ என்ன தனி ரூம் வேணும்னனு கேட்டு இருக்கியா?’
‘தனியா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா மேடம் இப்போதைக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்க’.
‘சிங்கிள் ஆக்குபன்ஸி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா போகப்போக உனக்குத் தெரியும். தனியா இருக்குறத விட கூட ஒரு கம்பானியன் இருக்கிறது நல்லதுன்னு’.
‘சரிங்க’.
‘சரின்னே சொல்லலாம். மரியாதை எல்லாம் வேண்டாம்’.
‘எங்க ஊர்ல பேசி அப்படியே பழக்கமாயிடுச்சு’.
‘கோயம்புத்தூரா?’
ம்..
அறைக்குத் திரும்பியவுடன் தன் படுக்கையில் வீழ்ந்தாள் யாழினி.
‘என்னாச்சு வேலைக்குப் போல?’
‘இல்வ. ஸ்டமக் பெயின்’. .
‘வந்த அன்னைக்கே வா?’
‘ம். நல்லவேளை. நேத்து ஆரம்பிச்சு இருந்தா டிராவல்ல கஷ்டப்பட்டு இருப்பேன். வலி தாங்க முடியலப்பா’.
‘பொண்ணுங்கன்னா அனுபவித்துத் தானே ஆகணும்’.
‘என்ன அநியாயம் இது. எதை எதையோ கண்டு பிடிக்கிற அறிவியலு இத ஒட்டு மொத்தமா நிறுத்தத்துக்கு ஏதாவது வழி கண்டுபிடிக்கனும்’.
‘ஆம்பளைங்களுக்கு வந்திருந்தா எப்பவோ கண்டுபிடிச்சு இருப்பாங்க. சரி நல்லா ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன். நாப்கின் வேணும்னா மேல் ஷெல்ஃப்ல இருக்கு எடுத்துக்கோ’.
‘என்கிட்டே இருக்கு. தாங்ஸ்’.
வந்த முதல் நாளிலேயே இருவரும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கினார்கள். நந்தினிக்கு 32 வயது இன்னும் திருமணமாகவில்லை. இருந்தாலும் 25 வயது என்று சொல்லக்கூடிய பொலிவான தோற்றம்.
கட்டுப்பாடுகளுக்கு பெயர் போன விடுதி. இருந்தாலும் பெண்கள் அவர்களுக்கு உள்ள அனுமதிக்கப்பட்ட அளவில் சுதந்திரமாகப் பேசிக் கொள்வதற்கும் உற்சாகமாய் பழகிக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்தது.
மாலை நேரத்தில் அனைவரும் மொட்டை மாடிக்கு வந்து விடுவார்கள். தோழிகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பேசுவதும் கும்மாளம் அடிப்பதும் வழக்கம்.
வந்த முதல் நாளே யாழினிக்கு எல்லோரையும் பிடித்துவிட்டது. காரணம் யாரும் அவளை புதியவளாகவே கருதவில்லை. ஏதோ சிறிய வயது முதல் நட்பாய் இருப்பது போலப் பழகியது தான்.
ஒருத்தி கேட்டாள் ‘என்ன தனி ரூம் கேட்டீங்களாமே?’
“இங்க எல்லாரும் எப்படி பழகுவீங்கன்னு தெரியாது அதனால்தான் கேட்டேன்’.
‘இங்கே யாருமே தனி ரூம்ல தங்க மாட்டாங்களா?’ யாழினி கேட்டாள்
‘ஷீலா மட்டும் தனி ரூம்ல இருக்காங்க’. என்றாள் ஒருத்தி
‘நீ வேணா போறியா?’ கண் சிமிட்டினாள் இன்னொருத்தி.
கொல்லென்று உற்சாக சிரிப்பு.
போனில் மூழ்கியிருந்த நந்தினி தலையை தூக்கி
‘வாய மூடுங்கடி’ அதட்டினாள்.
யாழினி விழித்தாள்.
‘ஏன் என்னாச்சு?’
‘அவங்க கூட ஆண்கள் வேணும்னா பயமில்லாமல் படுத்துக்கலாம்’.
மீண்டும் சிரிப்பு.
இந்த முறை நந்தினி கடும் கோபமாக
‘ஸ்டுப்பிட். . அந்த டாப்பிக்க நிறுத்துங்க’.
அவள் குரல் உயர்ந்தவுடன் அனைவரும் அமைதியானர்.
இரவு அறையில் நந்தினியிடம் கேட்டாள்.
‘ஏன் அவ்வளவு கோபப்பட்டீங்க? ஷீலாவுக்கு என்ன பிரச்சினை?’
போன்ல இருந்து தலையைத் தூக்கி…’அவங்க லெஸ்பியன் பா’.
‘ஓ மை குட்னஸ்…. இது தப்பில்லையா?’
‘இதுல என்ன தப்பு ? உடல் ரீதியா அவங்க டிஎன்ஏல குறை. ஆண்கள் மேல ஈர்ப்பு ஏற்படுவதற்குப் பதிலாகப் பெண்கள் மேலே அவ்வளவுதான்’.
“ம்’.. சரி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீயே நந்தினி?’
‘கேளு யாழ்’.
‘ஏன் எப்ப பார்த்தாலும் போன்ல இருக்க?’
‘இல்லையே’. உதடுகளை கோணலாக இழுத்தாள்.
‘பாய்பிரெண்ட்க்கு மெஸேஜா?’
‘அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே’.
‘கமான் நந்தினி. பொய் சொல்லாத. பொய் சொல்றவங்க கண்ணு பாத்து நேரா பேச மாட்டாங்க. அப்புறம் வாய் ஒரு பக்கம் இழுத்துடே பேசுவாங்க’.
‘இது என்ன புதுசா இருக்கு யாழ்?’ ஜாக்கிரதையாக உதடுகளைச் சுழிக்காமலும் யாழினியின் கண்களை நேராகவும் பார்த்துப் பேசினாள்.
‘இது உடல் மொழியில் ரொம்ப அடிப்படையான விஷயம். சரி என்னோட ஃபிரண்டோட இதயத்தை திருடன அந்த திருடன் யார்?’
வந்த முதல் நாளே பல யுகங்களாய் நட்பு தொடர்வது போலத் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டனர்.
‘பிரசாத்’.
‘வாவ். இன்ட்ரஸ்டிங்’.
‘சரி என் கத இருக்கட்டும்’. வாட் அபவுட் யூ?
‘நான் இன்னிக்குதானே இந்த தலைநகரில் கால் வச்சிருக்கேன். எனக்கான ராஜகுமாரன் இந்த நகரத்தில் எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கனும். சரி விஷயத்துக்கு வா, யார் அந்த பிரசாத்?”
‘ஆடிட்டர் கிட்ட வேலை பார்த்துட்டு இருக்கார். ஒரு வழியா சிஏ இந்த வருஷம் முடிச்சிட்டார்’.
‘அப்போ உன்னோட சின்னவனா?’
‘ஆமா’.
‘அட அப்படி போடு அருவாள. சோ ஆடிட்டர்-பாங்க்கர்…. சரியா கணக்கு டேலி பண்ணிகிட்டீங்க’.
‘ஆமாண்டயா. ஹி ஹிஸ் கிரேட்’. வெட்கம் ததும்பச் சொன்னாள்
ஹி இஸ் எ பாஸ்டர்ட். இன்றைக்கு அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்க அவன் காரணமாக இருந்திருக்கிறான்.
ஆட்டோ விஜயா மருத்துவமனை வாசலில் நின்றது. காசு கொடுத்துவிட்டு சில்லறை கூட வாங்காமல் அவசர சிகிச்சை பிரிவிற்கு ஓடினான்.
மீனா மற்றும் கூட இரண்டு பேரும், தவிர கல்பனா மேடமும் இருந்தார்கள். எல்லோர் முகத்திலும் கவலை ரேகை ஓடியது
யாழினியைப் பார்த்தவுடன் கல்பனா
‘என்னமா இது இப்படி பண்ணிட்டா?’
‘எனக்குக் கொஞ்சம்கூட க்ளூ இல்ல மேடம். டாக்டர் என்னங்க சொல்றாங்க ?’
‘சரியான நேரத்தில் வந்ததால ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஸ்டமக் வாஷ் கொடுத்திருக்காங்க’.
‘பணம் ஏதாவது கட்டனுங்களா மேடம்?’
‘நான் கட்டிடேன்மா. எனக்குக் கொஞ்சம் அர்ஜென்ட்டா வேலை ஒன்னு இருக்குது. நீங்க மூணு பேரும் பாத்துக்கஙக. எதுவா இருந்தாலும் உடனே கூப்பிடுங்க’.
‘சரிங்க மேடம்’.
‘அப்புறம் முக்கியமான விஷயம். இது ஆக்சிடன்ட் மாதிரி சொல்லி இருக்கோம் அதனால பார்த்துக்கோ. போலீஸ் கேஸ் வேண்டாம்னு பேசியிருக்கேன். அது விஷயமாதான் முக்கியமான ஒருத்தரா பார்க்க போறேன். அதனால யாராவது ஏதாவது கேட்டா உளறி வைக்காதீங்க’.
‘சரிங்க மேடம்’.
யாழினி, மீனா மற்ற இருவருடன் போய் நின்று கொண்டாள். தலைப் பாரமாக இருந்தது. பக்கத்திலேயே ஒரு காபி கடை இருந்தது.
‘வாங்க காஃபி சாப்டலாம்’.
நான்கு பேரும் காஃபி குடித்தார்கள். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. எல்லோரிடமும் ஒரு அதிர்ச்சி தெரிந்தது. நந்தினிக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற கவலையும் இருந்தது.
பிற்பகல் இரண்டு மணிக்கு வாக்கில் நந்தினி இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள். மாலை தனியறைக்கு மாற்றினார்கள்.
யாழினியைப் பார்த்தவுடன் முதலில் அழத் தொடங்கியவன் சிறிது நேரத்திற்குள் சுதாரித்துக் கொண்டு,
‘சாரிடா முட்டாள்தனமா நடந்துகிட்டேன்’.
யாழினி கண்கள் குளமாக அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு,
‘விடுப்பா கவலைப்படாதே’.
‘நீங்க எல்லாம் என் கூட இருக்கும்போது எனக்கு என்ன கவலை?’
‘ரிலாக்ஸ். கூல்’.
‘மீனா ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டோம்னு மேடத்திற்கு போன் பண்ணி சொல்லிடேன் ப்ளீஸ்’.
‘ஓகே யாழ்’.
‘மேடம் ரொம்ப பதறி போயிட்டாங்க’.
‘தேவையில்லாம ஆவங்களுக்குச் சிரமம் கொடுத்துட்டேன்’.
‘சரி விடு. திரும்ப அதையே பேச வேண்டாம் கூல்’.
மறுநாள் விடுதிக்குத் திரும்பி விட்டாள். உடலில் கொஞ்சம் அசதி இருந்தது.
‘ஏன்யா நான் கிளம்பும் போது நல்லா தான பேசிட்டு இருந்த எப்படி திடீர்னு இது மாதிரி?’
நந்தினி பதில் ஒன்றும் சொல்லவில்லை. யாழினியை பார்த்தாள். உணர்ச்சிகள் அற்ற பார்வை. இதுக்கு என்ன அர்த்தம் என்று தடுமாறினான்.
‘என் ஃபோன் எங்க?’ யாழினி தன் கைப்பையைத் திறந்து எடுத்துக் கொடுத்தாள்.
போனை அன்லாக் பண்ணி வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் எடுத்து காட்டினாள். பதிவிடப்படாத எண்ணிலிருந்து
வந்திருந்த திருமண அழைப்பிதழ்.
பிரசாத்க்கு நவம்பர் 5 ஆம் தேதி கல்யாணம்.
‘அட பாவி’. அதிர்ந்தாள் யாழினி.
‘இதைப் பார்த்த உடனே தாண்டி எனக்கு மனசு உடைஞ்சு போச்சு. யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறது பத்தி கூட எனக்கு கவலையில்லைடி. ரெண்டு தடவ உடலுறவு வெச்சுக்கிட்டதகூட நான் இயல்பாகதான் எடுத்துக்கறேன். ஆனா இதுக்காகத்தான் இவ்வளவு நாளா நாடகம் போட்டு என்னை நம்ப வச்சு கழுத்தறுத்தான் பாரு அத தாண்டி எனக்குத் தாங்க முடியல. ஹி இஸ் எ சீட்.’
பணியாளர் தங்கம் கதவைத் திறந்து,
‘மேடம் நீங்க முழிச்சுகிட்டு இருக்கீங்களான்னு பார்த்துட்டு வர சொன்னாங்க. அவங்க உங்கள வந்து பார்க்க போறாங்களாம்’
‘நான் வேண லந்து மேடத்த பாக்கட்டுமா?’
‘அய்யோ வேண்டாம்மா. நீங்க இருங்க. மேடம் வருவாங்க’.
யாழ் அதற்குள் அவசரமாக ரூமை சரி செய்தாள். இங்கும் அங்கும் கிடந்த துணியெல்லாம் எடுத்து பெட்டிக்குள் போட்டாள். படுக்கை விரிப்புகளைச் சரிசெய்து தலையணைகளை ஒழுங்காய் அமைத்தாள். இரண்டு நிமிடங்களில் அந்த அறை தலைகீழாக மாறி பொலிவுடன். காட்சியளித்தது.
கல்பனா உள்ளே வந்தார். காட்டன் சாரி அழகை தூக்கலாகக் காட்டியது. வெள்ளை நிற புடவையில் ஆங்காங்கே பொன் நிறத்தில் சிறிய பூக்கள். சிகப்பு நிறத்தில் சிக்கெனப் பிடிக்கும் ஜாக்கெட்.. ஷாம்பு போட்டு பளபளப்பாக மின்னும் கூந்தலைப் பின்னல் இடாமல் தழைய தொங்கவிட்டடிருந்தார். அதிலும் ஒரு நேர்த்தி இருந்தது.
அழகும் கம்பீரமும் கொண்ட ஆளுமை யாழினியையும் நந்தினியையும் ஒரு கணம் தடுமாற வைத்தது.
மெல்லிய புன்னகையோடு நந்தினியின் அருகே வந்து கைகளைப் பற்றினார்.
‘ரொம்ப சாரி மேடம் தேவையில்லாம உங்களுக்கு நான் சிரமம் கொடுத்துட்டேன். நம்ம விடுதிக்கும் களங்கம் ஏற்படுத்தப் பார்த்தேன்’. சொல்லிக் கொண்டிருக்கும் போது கண்களில் கண்ணீர். நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.
‘பரவால்லைம்மா. எல்லாம் நல்லபடியாகவே நடந்துருச்சு. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா உங்க வீட்டுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?’
‘ம்’
‘நமக்கு வாழ்க்கை என்கிறது மாபெரும் பரிசு. ஒரேயொரு முறைதான் கிடைக்கிற பொன்னான வாய்ப்பு. நம்ம வாழ்க்கையை நாமதான் வடிவமைச்சுக்கனும். மற்றவருடைய செயல்களுக்கு நாம் பலியாகிடக் கூடாது’.
‘ம்’.
கல்பனா, நந்தினியை மட்டுமல்லாமல் யாழினியையும் பார்த்துப் பேசினார்.
‘நீங்க எல்லாம் முதல் தலைமுறையில படிச்சிட்டு சாதிக்கனும்னு இந்த நகரத்துக்கு வந்து இருக்கீங்க. உங்கள் குறிக்கோளிலிருந்து விலகிடாதிங்க’.
நந்தினி ஏதோ சொல்ல முற்பட
‘எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணா. நீ ஒரு வீகெண்ட் ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு ஈசிஆர் போனதும் எனக்குத் தெரியும். அது உன்னோட பர்சனல். நான் என்ன சொல்ல முடியும்? நான் தப்புன்னு சொல்ல வரல. சரி, தப்பு அப்படிங்கறது எல்லாம் அவங்க அவங்க மனச பொறுத்திருக்கு. தயவுசஞ்சு அதுக்காக இப்படிப்பட்ட முடிவு எல்லாம் எடுத்துடாதமா’.
‘இல்ல மேடம். இப்ப நான் முன்னேய விட ரொம்ப தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கேன்’.
‘வெரி குட். டேக் கேர்’.
‘மேடம் ஹாஸ்பிட்டல்ல நீங்க கட்டன பணத்தை யாழினி கிட்ட குடுத்து விடறன் மேடம்’.
‘இட்ஸ் ஓகே’.
‘கல்பனா மேடம் சொன்னது போல தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காம அடுத்து என்னன்னு யோசிக்கிற வழிய பார்ப்போம். இவன் இல்லைன்னா என்ன 100 பேர் இருக்காங்க’.
‘ம்’.
‘நந்து என்ன வாய்திறந்து பேச மாட்டேங்குற? பயமா இருக்குடி’.
‘ச்சீ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஏதோ முட்டாள்தனமா செஞ்சேன். நான் எதுக்குடி சாகணும்?’
‘அப்படி போடு அருவாள’.
‘என்ன ஏமாத்தன அந்த ராஸ்கலுக்கு வலிக்கிற மாதிரி ஏதாவது செய்யணும்’.
‘ஒய் என்ன சொல்ல வர?’
‘ஆமாம் யாழ். அய் மஸ்ட் பனிஷ் ஹிம்’.
‘சினிமா வில்லன் மாதிரி பேசுற. போய் வேற வேலையை பாரு. ஏதாவது பண்ணி கிண்னி தொலைச்சுடாதே. காலம் முழுக்க ஜெயில்ல இருக்க வேண்டியதாகிடும்’.
‘அட சீ லூசு. வலின்னா ஃபிசிக்கலா இல்லை. மனசு வலிக்கனும். பயப்படனும். துடிக்கணும்’.
‘என்னமோ பண்ணு. சரி நட.
போய் ஏதாவது சாப்பிடலாம்’.
‘நான் வரல நீ போய்ட்டு வா’.
‘அடியே உன்ன திரும்ப தனியா விட்டுட்டு போவேன்னு நினைக்காதே. ஒழுங்கு மரியாதையா கிளம்புு’.
சிரித்துக்கொண்டே இருவரும் உணவு கூடத்திற்குச் சென்றனர்.
சரியாகத் திட்டமிட வேண்டும் கொஞ்சம் கூட பிசிறு இருக்கக் கூடாது. வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பிதழை மீண்டும் பார்த்தாள். மணப்பெண் பெயர் காயத்ரி. யாரடி நீ? எதை நம்பி இந்த அயோக்கியனை கட்டிக்க சம்மதிச்ச?
மாலை அனைவரும் மொட்டை மாடிக்குச் செல்வதற்கு முன்னால் பிரசாத்துக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
தங்கள் திருமண அழைப்பிதழ் வரப்பெற்றேன். வாழ்த்து. ஈசிஆரில் ஃபளெமிங்கோ ரிசார்ட்டில் நாம் எடுத்துக் கொண்ட சில அந்தரங்கமான படங்கள் என்னிடம் உள்ளன. அனுப்பி வைக்கட்டுமா? உங்களுக்கு அல்ல. காயத்ரி அவர்களுக்கு. தாங்கள் எத்தகைய ரொமான்டிக்கான ஆள் என்பதை வருங்கால மனைவி காயத்ரி தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
செய்தி போய்ச் சேர்ந்தது என உறுதி செய்து கொண்டுவுடன் ஃபோனை முழுவதுமாக அணைத்து விட்டு மாடிக்குச் சென்று விட்டாள்.
முதல் நாள் ஒரு பரபரப்பான அதிர்ச்சியான சம்பவம் நடந்தது என்பதைச் சுத்தமாக மறந்துவிட்டு எல்லோரும் வழக்கம் போல சிரித்து கும்மாளமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சகஜமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும் நந்தினியின் மனசுக்குள் திட்டம் தயாராகி விட்டது. தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டாள்.
இரவு உணவு முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியவுடன் அலைபேசியை முடுக்கி விட்டாள்.
பிரசாத்திடம் இருந்து நிறைய அழைப்புகள் வந்திருப்பதாகக் குறுஞ்செய்தி வழியாகப் பதிவாகி இருந்தது. மெலிதாக சிரித்து விட்டு மீண்டும் அணைத்து விட்டுப் படுக்கச் சென்றாள்.
மறுநாள் வங்கிக்குச் சென்றவுடன் அவளுக்கு உடம்பு சரி இல்லை ஒரு நாள் மருத்துவமனையிலிருந்தாள் என்கிற அளவிற்கு மட்டும் தான் தெரியும். அக்கறையோடு விசாரித்தார்கள்.
கவுண்டருக்கு அந்தப் பக்கமாக நின்று கொண்டிருந்தான். பிரசாத்.
நிமிர்ந்து சிரமத்துடன் செயற்கையாக ஒரு புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு அவனை அழைத்தாள்.
நடந்து வரும்போது ஒரு பதட்டம் தெரிந்தது.
‘உட்காரு.’
உட்கார்ந்துகொண்டே, ‘
‘லெட் மீ எக்ஸ்பிளைன். எனக்கே தெரியாம எல்லாமே ரொம்ப வேகமா நடந்துடுச்சு. நான் முடியாது என்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன். எங்க அப்பா அம்மா ரெண்டுபேருமே நான் ஒத்துக்கொள்ளலேனா சூசைட் பண்ணிக்குவேன்னு மிரட்டினாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல’.
‘ஒ அப்படிங்களா?’ கோபம் ஜிவ்வுனு ஏறினாலும் அடக்கிக் கொண்டாள்.
கமான் நந்தினி. கூல். காரியம்தான் முக்கியம்.
‘ப்ளீஸ் என் வாழ்க்கையை கெடுத்துடாதே’.
‘அப்ப நீ என் வாழ்க்கையை சீரழிச்சியே, அதுக்கு?’
‘நந்தினி லெட்ஸ் மேக் எ டீல். உனக்கு என்ன வேணும்?’
‘வாவ். ஆடிட்டர் ரொம்ப பிரில்லியண்ட்’.
‘சொல்லு என்ன வேணும்?’
இப்ப முடியாது. சாயந்தரம் காஃபே டேல சொல்றேன்.
‘எனக்கு சாயந்தரம் கொஞ்சம் கஷ்டம்’.
‘பாத்துக்கோ. மொத்தமா கஷ்டமாக்கிக்காம இருக்கிறது உன் கையில தான் இருக்கு’.
புன்னகையோடு அதே நேரத்தில் கண்களில் ஒரு மிரட்டலோடு சொன்னாள்.
மென்மையான கனிவான நந்தினியா இது? நம்பவே முடியவில்லை மிரட்சியோடு பார்த்தான்.
‘இப்ப புறப்படு’ என்று சொல்வது போலத் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி அவனைத் துரத்தினாள்.
ஆனால் அன்று மாலை நந்தினி செல்லவில்லை. போனை ஆஃப் பண்ணி வைத்து இருந்தாள். மறுநாள் காலையிலேயே வங்கிக்கு வந்து விட்டான். வாசலில் நின்று கொண்டிருந்தான்.
‘ஒ.நீயா. நேத்து கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் இன்னிக்கி மீட் பண்ணலாம்’.
‘இப்ப பேச முடியுமா?’
‘சான்சே இல்லை. சாயந்திரம் பார்க்கலாம்’ உள்ளே போய் விட்டாள்.
மாலை காபி கடையில் அவன் காத்திருந்தான்.
‘சொல்லு பிரசாத். எவ்வளவு தர போற.?’
‘எனக்கு தெரியல. நான் உன்கிட்ட இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சு இருந்தா நான் உன்கூட பழகி இருக்கவே மாட்டேன்’.
‘அட இத பார்ரா… நான் பேச வேண்டிய டயலாக்க நீ பேசற.’
‘சரி. எவ்வளவு வேணும்னு சொல்லு.?’
‘கல்யாணம் எங்க ? ஸ்ரீ வாரீயா? மண்டபத்துக்கே 20; லட்ச ரூபாய் ஆகிடும் இல்ல. சாப்பாடு செலவு எல்லாம் இன்னொரு 30 லட்சமாகுமா?’
அவன் அரண்டு போய் பார்த்தான்.
‘ஈஸியா 50 லட்ச ரூபா இல்லாம கல்யாணம் நடக்காது. எனிவே நீங்களா செலவு பண்ண போறீங்க. எவனோ இளிச்சவாயான் தன் பொன்னுக்காகச் செலவு பண்ண போறான். தன்னோடு ஒரே மகள உன்ன மாதிரி ஒரு ஃபிளர்ட்க்கு கட்டி கொடுக்கிறோம்னு தெரிஞ்சா உன் வருங்கால மாமனார் எப்படி ஃபீல் பண்ணுவாரு. நினைச்சி பாக்கவே ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்குட அதே மாதிரி நீ எனக்கு அனுப்பிச்ச கிளுகிளுப்பு மெசேஜ்கள் உன்னுடைய வருங்கால மனைவிக்கு என்னவிதமான உணர்வலைகள் எழுப்பும்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு’
அவன் முகம் வெளிறியது. கிளாஸில் தண்ணீர் எடுத்துப் பருகினாள் கை நடுங்கியது.
வெயிட்டர் என்ன வேண்டும் என்று கேட்டார்.
அவள் தனக்கு கேப்புச்சினோ காஃபி ரெகுலர் என்றாள்.
அவன் எதுவும் வேண்டாம் என்றான்.
‘கமான் பிரசாத். ஹவ் சம்திங்’.
இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்.
அவள் என்ன அதிர்ச்சியான தொகை சொல்லப் போகிறாள் என்ற கவலையில் அவனுக்கு எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை.
’50 லட்ச ரூபா வருங்கால மாமானார் உனக்குச் செலவு பண்ணி கல்யாணம் பண்ண போறரு. நீ என்ன பண்ணற. அதுல ஒரு 10% கொடு. போதும்’.
‘ஓ மை குடனஸ். அஞ்சு இலட்சம். .திஸ் இஸ் டூ மச். வெறும் 25 ஆயிரம் ரூபாய்க்கு உன்னைவிட அழகான பெண்கள் எனக்கு கிடைச்சிருப்பாங்க’.
‘ஆனா என்ன மாதிரி ஒரு விர்ஜின் கிடைச்சிருக்க மாட்டா இல்ல’.
‘நோ… நான் இந்த டீலுக்கு ஒத்துக்க முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு’.
‘ஓகே. அதுதான் உன் முடிவுன்னா நான் என்ன பண்ண முடியும்?’
‘நீ ஒரு பொம்பளையே இல்லடி. யு ஆர் எ பிட்ச்’.
‘இங்க பாரு… இந்த மாதிரி வார்த்தையெல்லாம் சொன்னீனா அதுக்கும் சேர்த்து பில் போட வேண்டிவரும்.’
‘சீ நீ ஒரு பொம்பளையா? ஒன் மொகத்துல முழிச்சாலே பாவம்டி’.
‘அப்படியா? உன்ன பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குன்னு சொல்வியே…. அதெல்லாம் டூப்பா?’
அய்யோ எனக்கு தலையே வலிக்கிற மாதிரி இருக்கு. பிராணனை போய்டும் போல இருக்கு.
‘ஒரு காஃபி சாப்பிடு. சரியாயிடும்’.
‘சரி சொல்லு’.
வெயிட்டரை அழைத்து
‘லேட்டே ரெகுலர் ஒன்னு கொடுங்க’.
‘அதானே உன் டேஸ்ட். இல்ல அதையும் மாத்திட்டியா?’
கேட்டு விட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.
‘ப்ளீஸ்… தப்பு பண்ணிட்டேன். உன் கால்ல விழறன். ப்ளீஸ்’.
அவன் முகத்தை எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையோடு பார்த்தாள். என்ன ஒரு கேடு கெட்ட பிறவி. கால்ல விழறேன்னு சொல்றான். ரெண்டு நாளைக்கு முன்னால நான் செத்து இருப்பேன். சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்துட்டேன். வேணும்னா காலையும் பிடிப்பான். இல்லைனா கழுத்தை நெறிச்சி கொல்லுவான்.
வெயிட்டர் கொண்டு வந்து வைத்த பில்லை பே பண்ணினாள்.
‘ஆல் ரைட். பணம் கொடுக்கிறதா இருந்தா நாளைக்கு காலையில 9 மணிக்கெல்லாம் வடபழனி சரவண பவனுக்கு வந்துடு. பை த பை எனக்கு காஷ் வேண்டாம். செக் கொண்டு வந்துடு. பேரு எழுதாம பிளாங்கா கொண்டு வா. ம். அப்புறம் வாட்ஸ்அப் செக் பண்ணு. நாாம நெருக்கமா இருக்க ஒரு ஃபோட்டோ அனுப்பி இருக்கேன். இது ஒரு சின்ன சாம்பிள்தான்’.
ரிசார்ட்டுக்கு வெளியே கடற்கரையைப் பார்த்தமாதிரி அவள் நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவன் பின்பக்கமாக வந்து அவளைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி எடுத்த செல்ஃபி ஒன்று அவனுக்கு அனுப்பி இருந்தாள்.
அந்த படத்தைப் பார்த்தவுடன் அவனுக்கு உலகமே இருண்டு விட்டது. கடை வாசலிலேயே விழுந்திருப்பான். நல்லவேளையாக அங்கிருந்த ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டான்.
அவள் ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டாள்.
‘ஒய் வேட்?: கேட்டாள் யாழினி.
‘பிரசாத்த பார்த்தேன்’.
என்ன விஷயம் என்று புருவங்களை வில்லாக்கிக் கேட்டாள்.
‘கொன்னுட்டேன்’.
‘பாடிய எப்படி டிஸ்போஸ் பண்ண?’
‘ஆஹா. உண்மைதான். டெட்பாடி மாதிரிதான் ஆகிட்டான்’.
‘அப்படி என்ன சொன்ன?’
‘அஞ்சு லட்ச ரூபா குடு. இல்லனா நாம சேர்ந்து எடுத்துக்கிட்டப் போட்டோ, நீ அனுப்பின மெசேஜ் எல்லாம் உன்னோட வருங்கால மாமனார், மாமியார், மனைவி எல்லாருக்கும் போய்ச் சேரும் என்று சொன்னேன்’.
‘ஒய். திஸ் இஸ் டூ மச்’.
‘அஞ்சு இலட்சம் அதிகம்னு சொல்றியா?’
‘இல்ல நந்து. நீ பணம் வாங்கிட்டா அவன் கூட பழகனதுக்கு அர்த்தமே
வேற மாதிரி ஆகிவிடும்’.
‘என்ன ஆகிவிடும்?’
‘நீ புரிஞ்சுக்கிட்டு தான் கேக்குறியா இல்ல புரியாமதான் கேக்குறியா?’
‘தப்பு செஞ்சா கோர்ட்ல ஃபைன் கட்ட சொல்றது இல்லை அதுமதிரி தான் இது’.
‘உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியாதும்மா சரி. சரி. அப்படி ஏதாவது கொடுத்தா எனக்கும் கொஞ்சம் வெட்டு’.
‘ஆஹா. தாராளமா’.
‘நாம சாப்பிட்டுட்டு மாடிக்கு போலாமா?’
‘இளவரசி யாழினியின் கட்டளை நந்தினியின் சித்தம்’.
இரவு 10 மணி வாக்கில் அவளுக்கு மெஸேஜ் வந்தது.
நாளை காலை 8.30 மணிக்கு வடபழனி சரவணபவனில் சந்திப்போம்.
யாழினியிடம் பகிர்ந்து கொண்டாள்.
‘ஜாக்கிரதைபா. உன்ன ஏதாவது பண்ணிட் போறான்’.
‘அதான் பண்ண வேண்டியதெல்லாம் பண்ணிட்டானே. இனிமேல் புதுசா என்ன பண்ண போறேன்?’
‘அடச்சீ. ஏதாவது அடிதடின்னு சொல்ல வந்தேன்’.
‘அதெல்லாம் பண்ண மாட்டான். தொடை நடுங்கி’.
காலை நேரம். சரவணபவன் களை கட்டியது. கோயில் கல்யாண கூட்டம் என நிரம்பி வழிந்தது. இடம் கிடைக்க நேரம் ஆகும். நின்று கொண்டிருந்தான்.
‘செக் எடுத்து வந்தியா?’
காட்டினான். அவனுடைய பர்சனல் செக்.
‘அடா பார்ரா. பர்சனல் அக்கவுண்ட்ல இவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சா இன்னும் கூடவே கேட்டு இருக்கலாம் போல இருக்கு’.
‘சீ. வேசி. முதல்ல அதெல்லாம் டெலிட் பண்ணு’.
‘அவசரப்படாதே. இப்ப நா ஒரு இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போகப்போறேன்’.
ஒலா அழைத்தாள்.
கார் வந்தவுடன்,
‘உன் வண்டி இங்கேயே இருக்கட்டும் நீ ஏறு’.
தயங்கினான்.
‘சீக்கிரம் ஏறு’. கண்டிப்புடன் கூறினாள்.
ஏறிக் கொண்டான்.
‘எங்கே போகிறோம்?’
அவள் பதில் சொல்லவில்லை.
காரில் இருந்த மேப்பில் கலைஞர் கருணாநிதி நகரில் ஏதோ ஒரு இடத்தை காட்டியது.
அந்த பெண்கள் காப்பகத்திற்குள் கார் நுழைந்தது.
‘இந்த இடம் தெரியுமா உனக்கு?’
‘ம்.தெரியாது’.
‘என்ன இடமா இருக்கும்னு யூகிக்க முடியுதா?’
‘டெஸ்ட்டிடியூட் ஹோம்’.
‘இங்க யாரெல்லாம் இருப்பாங்க?’
‘அனாதைங்க’.
‘முட்டாள். கணவனை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள் இனி வாழ்க்கையே இல்லை என்று நினைப்பவர்கள், முக்கியமாக உன்ன மாதிரி ஆட்களால் கைவிடப்பட்ட பெண்கள், இப்படி எத்தனையோ பேருக்கு இது புகலிடம்’.
காப்பகத்தின் தலைவி ரோசலின் மலர்ந்த முகத்தோடு வரவேற்றார்.
‘சொல்லுங்க நான் என்ன உதவி செய்யனும் உங்களுக்கு?’
‘இவர் என்னுடைய இனிய நண்பர் பிரசாத். இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். இந்த காப்பகத்திற்கு ஒரு சின்ன நன்கொடை கொடுக்க விரும்புகிறார்’.
‘செக்க எடு பிரசாத். மேடம் என்ன பெயரில செக் எழுதணும்?’
திரும்ப நடந்து வரும்போது
‘அந்த படங்கள் தயவு செஞ்சு டெலிட் பண்ணிடு’.
‘முடியாது’.
‘திஸ் இஸ் டூ மச்’.
‘ஆஹா’.
‘நீ என்னை பிளாக் மெயில் பண்ணற. நந்தினி’.
‘அது எப்படி, நீ எனக்குச் செஞ்ச துரோகத்துக்கு, யாருக்கு தெரியும் என்னை மாதிரி எத்தனை பேருக்கு பண்ணி இருக்கியோ, அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுட முடியுமா?. இது பிளாக்மெயில் இல்ல. தண்டனை’.
‘அப்ப என்னடி பண்ணப் போற என்ன?’
‘இந்த வாடி போடின்ன நடக்கிறதே வேற. மரியாதை கொடுத்து மரியாதை’.
‘என்ன ஏன் இப்படி டார்ச்சர் பண்ற?’
‘இப்ப நீ கொடுத்த பணம் உன் கல்யாணம் பிரச்சினை இல்லாமல் நடக்கறதுக்கு. நீ செஞ்ச காரியத்துக்கு இது போதாது. ஒவ்வொரு வருஷமும் கல்யாண நாள் அன்னைக்கு நீ பொண்டாட்டியோட இங்க வர. வந்து ஒரு அமௌன்ட் நன்கொடையா கொடுக்கற. எவ்வளவுன்னு நான் சொல்லுவேன்’.
‘அதெல்லாம் நடக்காது’.
‘எப்பவாது இந்த ஒப்பந்தத்தை மீறினால் படங்கள் எல்லாம் உன் வைஃப்க்கு போகும்.. ஜாக்கிரதை’.
காரில் அவள் மட்டும் ஏறிக் கொண்டு போய்விட்டாள்..
அவன் திகைத்துப் போய் நிற்க அந்த கார் காப்பகத்தை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தது.