மனமெல்லாம் மத்தாப்பு




மனமெல்லாம் மத்தாப்புவீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டு வரும் ஏழு வயதுச் செல்லமகள் குட்டி. மேல் சட்டையின் உள்பையில் இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் தாள்களாக மடக்கி வைக்கப்பட்டிருந்த பணம் இரு நூறு ரூபாய். வியாபாரத்தில் நொந்து போயிருந்த முதலாளியிடம் அவ்வளவுதான் பிராண்ட முடிந்தது.
தீபாவளிக்கு மனைவி போட்டிருந்த பட்ஜெட்டில் இது ஒரு கடுகு. முந்தின இரவில் மனைவி போட்ட சண்டை மனத்தைக் கசக்கியது.இந்த துரும்பை வைத்து இந்த தீபாவளியைக் கடப்பது எப்படி? அதை விட இந்த பஜார் தெருவை பணம் செலவளிக்காமல் கடப்பது எப்படி என்ற பிரச்சனை பூதாகரமாக நின்றது. காரணம் பட்டாசு வாங்கக் கேட்டு அடம் பிடிப்பாளோ என்ற குறுகுறுப்பு. மெதுவாக ஓரக்கண்ணால் குட்டிப்பெண்ணைப் பார்த்தான். குட்டி தெருவின் இரண்டுபக்கங்களிலும் பரப்பி வைக்கப்பட்டிருந்த பட்டாசுக்கடைகளை மலர்ந்த முகத்துடன் துருதுருவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது கற்பனையில் ஏதோ நினைத்துக்கொண்டு தலையையும் ஆட்டிக் கொண்டது. குட்டியின் ஒவ்வொரு தலையாட்டலும் அவனது ரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொண்டிருந்தது.அண்ணாந்து பார்க்கும் விலையில் பட்டாசு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வாளோ?
பேச்சில்லாமல் தெருவைக் கடந்து விட்டார்கள். திரும்ப நேரமில்லாத தூரம் வந்ததும் தாள முடியாமல் ,”பட்டாசு வாங்கலாம்னுதான்….,” என்று சமாதானம் ஆரம்பித்தான். ” வேணாம்பா, அப்புறம் அம்மாவுக்குப் பணம் பத்தாது. தம்பிக்கு வேடிக்கை காட்ட கொஞ்சம் பொட்டுக்கேப்பு மட்டும் வாங்குங்கப்பா “, என்றாள் குட்டி. அவனுக்கு மனசு பொறுக்கவில்லை. “ஒரு துப்பாக்கியும் சேர்த்து வாங்கிர்ரம்மா,” என்றான்.
” வேண்டாம்பா, போன வருசத் துப்பாக்கியையே பத்தரமா தொடைச்சி வச்சிருக்கேம்பா,” என்றாள். அவனின் மனமெல்லாம் குட்டி மத்தாப்பாக, கலங்கரை விளக்காக, ஒளிர்ந்தாள்.
– மார்ச் 2010